ஏன் நீங்கள் இறுக்கம் தளர்ந்து இருக்கக் கூடாது?

7 மே 2013, பெங்களூரு, இந்தியா







கே: தயவு செய்து சரணாகதி பற்றி பேச முடியுமா?

குருதேவ்: நீங்கள் சரண் செய்ய வேண்டிய எதுவும் ஏற்கனவே இறைவனுடையது அல்லவா? ஆனால், உங்களுடையது என்று நீங்கள் நினைக்கும் எதையும் ‘விட்டு விடுங்கள்’ என்றே நான் சொல்வேன்! எதையாவது நீங்கள் இறுகப் பற்றிக் கொண்டிருந்தால்,‘தளர்வாகுங்கள்!’ தளர்வதே சரணாகதி; வேறு எதுவும் இல்லை. உங்கள் மனதை ஏதாவது உறுத்திக் கொண்டிருந்தால், அந்தக் கவலையை சரண் செய்வதே சரணாகதி. இது ஆகுதி போலத்தான். (ஆகுதி என்பது யாகத் தீயில் பிரார்த்தனையுடன் போடப்படும் பொருட்கள்).எனவே உங்களை என்ன உறுத்திக் கொண்டிருந்தாலும் அல்லது உங்களிடம் கவலை இருந்தாலும் அதை ஆகுதியாகக் கருதி இறைவனிடம் அளித்து விடுங்கள்.

எதை உங்களால் சமாளிக்க முடியவில்லையோ, எது உங்களுக்கு பாரமாக இருக்கிறதோ; எதை சுமப்பதால் நீங்கள் சோர்வடைகிறீர்களோ, அதை அப்படியே போட்டுவிட்டுச் சென்றால் போதும். சரணாகதி என்பதின் பொருள் இதுதான். இல்லையென்றால் சரணாகதிக்கு என்ன இருக்கிறது? உங்கள் உடம்பு இறைவனுடையது. உங்கள் மனம் கூட இறைவனுடையதுதான். எல்லாம் இறைவனுடையது. ஆனால், இது உங்களுடையது என்று நினைக்கிறீர்கள். எனவே, எல்லாம் போகட்டும், இறுக்கம் தளந்து புன்னகை செய்தால் போதும்.

புத்த சமயத்தில், ‘புத்தம் சரணம் கச்சாமி’, என்பார்கள். அதன் பொருள் உங்களால் சுமக்க முடியாத சுமையை புத்தரிடம் அளித்து விடுங்கள் என்பதே. அல்லது குருவிடம் சமர்ப்பணம் செய்யுங்கள், அல்லது இறைவனிடம் சமர்ப்பணம் செய்யுங்கள், அல்லது உங்களுக்கு நெருக்கமான யாரிடமாவது சமர்ப்பணம் செய்யுங்கள். உங்களைச் சேர்ந்தவர்கள் யாரோ ஒருவர் இருக்கிறார், அவர் உங்களுக்கு அன்பானவர், நீங்கள் அவருக்கு அன்பானவர் என்று நீங்கள் உணரவே இது.உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்; ஒரு குழந்தை தன் அம்மா வீட்டில் இருக்கிறாள் என்றால் வசதியாய் உணர்கிறது. அந்தக் குழந்தை இங்கும் அங்கும் ஓடி விளையாடுகிறது. ஆனால்,அந்த குழந்தையால் தன் அம்மாவைப் பார்க்க முடியவில்லை, அவர்கள் எங்கோ சென்றிருக்கிறார்கள் என்றால், தன் தாயைத் தேடி அழ ஆரம்பிக்கிறது. இந்தக் கால குழந்தைகள் அம்மா அருகில் இல்லையென்றால் நிஜத்தில் மகிழ்ச்சியடையவே செய்கின்றன! (சிரிப்பு) ஏனென்றால், அப்போது தான் குறும்புகள் செய்யலாம். ஆனால், இது குழந்தை சற்று வளர்ந்த பின்னே நடப்பது. சிறு குழந்தைகள் எப்போதும் தன் அம்மா அருகே இருக்கிறார்களா என்று பார்த்தபடியே இருக்கும். ஒரு கண் தன் அம்மா மீது வைத்தபடியே இருக்கும். இது ஏனென்றால், ‘எனக்காக ஒருவர் உண்டு, அவர் இருக்கிறார்’ என்று தெரிந்தால் அந்தக் குழந்தை வசதியாய் உணர்கிறது.

இப்போதெல்லாம், குழந்தைகளை தொலைகாட்சி முன் அமரவைத்து விடுகிறார்கள் (அந்த குழந்தையின் கவனத்தை திசை திருப்பி, தனக்கு தொல்லை கொடுக்காமல் இருப்பதற்காக). இது மிகக் கேடானது. குழந்தைகள் தொலைகாட்சி பார்ப்பது அவர்களின் மூளைக்கு அதிக வேலை கொடுத்து சுமக்க வைக்கிறது. பெற்றோர்கள் அடிக்கடி கார்டூன் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் குழந்தைகளுக்காக போட்டு விடுகிறார்கள். இது ஏன் நல்லதல்ல என்றால், ஏகப்பட்ட பதிவுகள் குழந்தையின் மனதில் ஏறி அவர்களை மிக மந்தமாக்குகிறது. நிறைய குழந்தைகளால் எண்ணக் கூட முடியவில்லை, சில குழந்தைகள் கவனக் குறைபாட்டினால் பாதிக்கப்படுகின்றன. இன்று அமெரிக்காவில் இது பொதுவாகக் காணப் படுகிறது.
.
கே: பிராணா என்றால் என்ன? அது மூச்சைவிட சூட்சுமமானது என்று மட்டும்தான் எனக்குத் தெரியும். அறிவியலில் ஏதேனும் கண்டுபிடித்திருக்கிறார்களா? அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்த நம் வாழ்வின் வேறு பரிமாணங்கள் உள்ளதா?

குருதேவ்: ஆம். ஒரு நரம்பியல் நிபுணரால் எழுதப்பட்ட சொர்கத்தின் ஆதாரம் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். அவர் கோமா நிலைக்குச் சென்றபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதியிருக்கிறார். அவர் ஏறக்குறைய மருத்துவ நிலை இறப்புக்குச் சென்றபோது அவர் ‘உடம்புக்கு வெளியே’ அனுபவங்கள் கிடைத்தது. அவர் தன் அனுபவங்களாகக் கூறியது நாம் கூறிவருவதற்கு மிகச் சரியாக பொருந்துகிறது. அவருக்கு இந்திய ஆன்மீகத்தைப் பற்றி  தெரிந்திருக்கவில்லை என்றாலும் தான் ஒரு மிகப் பெரிய ஒளியைப் பார்த்ததாகவும் அதன் பெயர் ‘ஓம்’ என்றும் கூறியிருக்கிறார்! மேலும் அது அவ்வளவு அமைதியாகவும் அன்பாகவும் இருந்தது என்று கூறுகிறார். கீதையில், ‘ஊர்த்வ - மூலம் அதாஹ் - சக்ஹம்’, என்று கூறியிருப்பதை மிகச் சரியாக விவரிக்கிறார். உங்களுடைய மூலம் இறைவன் என்பதை குறிக்கும் ‘வேர்கள் மேலேயும் கிளைகள் கீழேயும் இருக்கிறது’; மெய்யுணர்வு தான் உங்களுடைய வேர். வேர்களுக்குச் சென்று,  அதைத் தாண்டி இருண்ட வெளிக்குச் சென்று, பின்னர் அதையும் தாண்டி ஹிரண்யகர்பத்துக்குச் (இந்திய தத்துவ ஞானத்தின் படி, இது பிரபஞ்ச உருவாக்கத்தின் ஆதாரம், அல்லது ‘வெளிப்படும் அண்ட வெளி’) சென்ற அனுபவத்தைப் பெற்றார். இதை தான் உபநிஷத்துகள் ‘பொன் முட்டை’; மின்னும் கரு என்று கூறுகிறது.

கிட்டத்தட்ட இறக்கும் நிலைக்குச் சென்றவர்கள் எல்லோரும், நம் நாட்டில் பல ஆயிரம் வருடங்களாக கூறப்பட்டு வரும் இந்த அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். இது அவ்வளவு சுவாரசியமாக உள்ளது! மேலும், இந்த நூலாசிரியர் ஒரு நாத்திகர்; அவர் எந்த ஒரு மதத்தையோ நம்பிக்கையையோ பெற்றிருக்கவில்லை. அவர் ஒரு தீவர அறிவியலாளர், அந்தப் புத்தகத்தில் அவர் தான் கண்ட அந்த மற்ற உலகம் எவ்வாறு நாம் காணும் இந்த உலகை விட உண்மையாக இருந்தது என்று கூறுகிறார்.

இதைத் தான் நம்முடைய எல்லா தர்ஷனங்களிலும் கேட்டிருக்கிறோம். (பாரம்பரியமாக இந்தியத் தத்துவம், ஆறு வித எண்ணங்களாக அல்லது ஆறு தர்ஷனங்களாக பிரிந்திருக்கிறது. இவை அனைத்தும் வேதத்தை ஆகச் சிறந்த தெரிவிக்கப்பட்ட நூலாகக் கொண்டிருக்கிறது)
நமது உணர்வுப் புலன்கள் மூலமாக கிடைக்கும் அறிவு, நம் புத்தியின் மூலமாக நமக்குக் கிடைக்கும் அறிவை விட தாழ்மையானது. சூரியன் மறைவதையும் உதிப்பதையும் பார்க்கிறோம், ஆனால் நம் புத்திக்கு சூரியன் மறைவதும் இல்லை எழுவதும் இல்லை என்று தெரியும். ஆனால், நம் புத்திக்கு மீறிய அறிவு; உள்ளுணர்வால் கிடைக்கும் அறிவு, தூய மெய்யுணர்விலிருந்து கிடைக்கும் அறிவு, புத்தியின் மூலம் கிடைக்கும் அறிவைவிட மேன்மையானது. புத்தியினால் வரும் அறிவை சரி என்றோ தவறு என்றோ நிரூபிக்க முடியும், ஆனால் புத்தியின் கணக்கை தாண்டிய ஒரு கண்டுபிடிப்பு ஏதோ வித்தியாசமான ஒன்று.

கே: அன்பு குருதேவ், உங்களுடைய ஒரு அறிவுத் தாளில், குரு என்பவர் ஒரு மனிதரல்ல ஒரு இருப்பு என்று கூறியிருக்கிறீர்கள். எப்படி என் குருவை மனிதராய் அல்லாமல் ஒரு இருப்பாய் பார்ப்பது?

குருதேவ்: மனிதர்கள், என்னவாக இருக்கிறார்கள், உடம்பா அல்லது மனமா? அவர்கள் உடம்பு என்றால், ஆத்மா சென்றபின் உடம்பை ஏன் யாரும் பார்த்துக் கொள்ளவில்லை. ஆத்மாவைத் தான் நாம் மதிக்கிறோம். ஆத்மாவை உடம்பிலிருந்து வேறாகப் பார்க்க முயலுங்கள்.

கே: சூக்ஷும அகங்காரம் என்பது என்ன, மற்றும் அதை ஒருவர் எப்படி வெல்வது?

குருதேவ்: ‘எனக்கு அகங்காரமே இல்லை’ என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும் போது இருப்பது தான் சூக்ஷும அகங்காரம். ‘நான்தான் இருப்பதிலேயே மிகவும் யதார்த்தமானவன் மற்றும் பணிவானவன்’ என்ற உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால் அது தான் சூக்ஷும அகங்காரம். உங்களிடம் ஏதோ கொஞ்சம் அகங்காரம் இருந்தால், கவலை வேண்டாம், அதை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள் போதும்.அது இருந்தால் இருக்கட்டும். பரவாயில்லை. ஏன் அதை தொலைத்துக் கட்ட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? அகங்காரத்தை தொலைக்க வேண்டும் என்று முயன்றால், அதுவே உங்களுக்கு மற்றொரு பெரிய பிரச்சினையாய் இருக்கும். ஏனென்றால், ‘பார், நான் என் அகங்காரத்தை ஒழித்துவிட்டேன்!’ பின்னர் அதுதான் சூக்ஷும அகங்காரம். அகங்காரத்தை ஒழிப்பதன் மூலம் அதை வெல்ல முடியாது. இயல்பாய் இருந்தாலே போதும். உங்களின் இயல்பான இருப்பில் அகங்காரம் கரைந்துவிடும்.

கே: குருதேவ், சரணாகதி அடைந்தவரிடம் சங்கல்பம் எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்கள்? இது எப்படி முடியும்? உங்களைத் தவிர எங்களுக்கு எதுவும் வேண்டாம். பின் எதற்கு சங்கல்பம் எடுத்துக் கொள்ளவதெல்லாம்?

குருதேவ்: நாம் யாரையும் சங்கல்பம் எடுத்துக் கொள்ளச் சொல்லி கட்டாயப் படுத்துவதிவில்லை. சிறிய விஷயங்களுக்காக சங்கல்பம் எடுத்துக் கொள்ளச் சொல்லி நீங்கள் கேட்டுக்கொள்ளப் படவில்லை. உங்கள் சிறு சிறு ஆசைகள் அபிலாஷைகள் எப்படியும் நிறைவேறுகிறது அல்லவா? எல்லாம் எப்படியும் நடந்துதான் ஆகிறது. எனவே, காரியங்கள் நடக்கிறது என்பதால், சிறு சிறு ஆசைகளுக்குப் பதில் ஏதாவது பெரிதாக ஆசைப்படுங்கள். இந்த நாட்டிற்காக, உலக மேன்மைக்காக எண்ணுங்கள். இது தான் அது.

பொதுவாக உங்களுக்காக சிறு விஷயங்களுக்குத் தான் நீங்கள் ஆசைபடுகிறீர்கள். பெரிதான விஷயத்திற்கு, எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய ஒன்றிற்கு, நீங்கள் சங்கல்பம் எடுத்துக் கொண்டாக வேண்டும். இதுதான் சனாதன தர்மத்தில் (இந்து மதத்திற்கு இப்படி ஒரு மறுபெயர் தொன்மையான காலத்திலிருந்து உண்டு) சொல்லப்பட்டிருக்கிறது,‘தன்மே மனஹ் ஷிவா சங்கல்ப மஸ்து’, அப்படி என்றால் என் மனதில் எல்லோருக்கும் நன்மை தரக்கூடிய சங்கல்பம் எப்போதும் இருக்கட்டும்.

கே: குருதேவ், நீங்கள், ‘சஹஜ் மிலே அபிலாஷி’ என்று அடிக்கடி கூறுகிறீர்கள். (அதன் பொருள்: இயல்பாய் இருப்பதன் மூலம், ஒருவர் கடினப்படாமல் எளிதாக இறைவனை அடையலாம்) இயல்பாய் இருப்பதோடு விசாலமான பார்வையும் வேண்டும். வாழ்கை பற்றிய பார்வையை எப்படி விசாலமாக்குவது?

குருதேவ்: அதிகம் தெரிந்துகொள்ள நீங்கள் ஆவலாய் இருக்கிறீர்கள்,அதுவே போதுமானது.

கே: குருதேவ், காதலில் இருவரின் எண்ணங்களும் ஒன்றாய் இருக்க வேண்டுமா? கருத்துக்களில் வித்தியாசம் கொண்ட இருவர் காதலிக்க முடியாதா?

குருதேவ்: பாருங்கள், நீங்கள் உங்கள் மனதில் ஏதோ வைத்துக்கொண்டு கேட்கிறீர்கள். இதற்கு உங்களுக்கு பதில் கொடுத்தால், அந்த பதிலை நீங்கள் வேறு விதமாக உபயோகப்படுத்துவீர்கள். இந்த வலையில் நான் விழப் போவதில்லை. நீங்கள் புத்திசாலி என்றால், நானும் தான் புத்திசாலி தான். உங்களிடம் ஒரு நிகழ்வைக் கூறுகிறேன்.

ஒருமுறை நான் பாரிஸ் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனையை கடந்து கொண்டிருந்தேன். அப்போது என்னை வழியனுப்ப 200-300வந்திருந்தனர். அப்போது, ஒரு பெண்மணி வந்தார்கள்; வயது அறுபதுகளின் இறுதியிலிருக்கும். அவர்கள் என்னிடம் வந்து தன் விரலிலிருக்கும் மோதிரத்தைக் காட்டி, ‘இது தேவையா?’ என்றார்கள். நான் அந்த மோதிரத்தையும் அதிலுள்ள கல்லையும் பார்த்துவிட்டு, ‘இல்லை, இது தேவையில்லை’ என்றேன். பிறகு நான் நியூயார்க் சென்று விட்டேன். இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பெண்மணியின் கணவர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘குருதேவ், நீங்கள் என் மனைவியிடம் என்னை விவாகரத்து செய்யச் சொல்லி கூறினீர்களா?’ என்றார். நான்.’இல்லை’ என்று பதிலளித்தேன்.

அந்த மனிதருக்கு சுமார் எழுபது வயதிருக்கும், அவர்கள் இருவரும் சுமார் நாற்பது வருடங்களாக மண வாழ்கை வாழ்ந்துவருகிறார்கள். இருவருமே பக்தர்கள். அவர் சொன்னார், ‘குருதேவ், நீங்கள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் என் மனைவி எனக்கு விவாகரத்து விண்ணப்பம் அனுப்பியிருக்கிறாள், ஏனென்றால் நீங்கள் திருமணம் தேவையில்லை என்று சொன்னீர்களாம்.’பிறகு நான் சொன்னேன், ‘நான் உன் மனைவியிடம் பேசுகிறேன்’. அவர் கூறினார், ’குருதேவ், நான் உங்களிடம் என் திருமண மோதிரத்தைக் காட்டி, ‘இது அவசியமா?’ என்றேன், நீங்கள், ‘இல்லை’ என்றீர்கள்.’

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு,நான் கூட புத்திசாலியாகி, என்ன சொல்கிறேன் என்பதில் எச்சரிக்கையாய் இருக்கிறேன். நான் உங்கள் கேள்விக்கு, பதிலும் சொல்லப் போவதில்லை, இல்லையென்றால் உங்கள் மனம் எல்லா விதமான விஷயங்களையும் நினைத்துக் கொண்டிருக்கும். அந்தக் கதையில் நடந்ததைப் போல, அந்தப் பெண்மணி தன் கணவனை விவாகரத்துச் செய்ய எண்ணினார், ஆனால் என்னிடம் அனுமதி வேண்டி தன் மோதிரத்தைக் காட்டி கேட்டார். இப்போதெல்லாம் மக்கள் பல வித கற்களை அணிந்து கொள்கிறார்கள். நான் சொல்கிறேன், நீங்கள் அப்படியெல்லாம் கற்கள் போன்றவற்றை எல்லாம் அதிகம் நம்ப வேண்டியதில்லை. அந்தக் கல்லையும் விட மிக வலிமையானது உங்கள் மெய்யுணர்வு. கற்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். நீங்கள் எந்தக் கல்லையும் விட அதிக வலிமையானவர்.

கேள்வி: குருதேவ், நீங்கள் என் தகுதிக்கு மேலேயே எனக்கு அளித்துள்ளீர்கள். உங்களுக்காக நான் செய்வதெல்லாம் ஒன்றுமில்லை என்றே எண்ணுகிறேன். நீங்கள் என்னிடம் ஏதாவது கேட்டு வாங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.


குருதேவ்: ஆம், நீங்கள் மகிழ்ச்சியாய் இருந்து எல்லோரையும் மகிழ்வுறச் செய்யுங்கள். இந்த உலகில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது. ஞானத்தை பரப்புங்கள், புன்னகையை பரப்புங்கள் மற்றும் மகிழ்ச்சியைப் பரப்புங்கள். இந்த ஞானம் அவ்வளவு அழகானது அவ்வளவு பொருத்தமானது. இந்த ஞானம் அதிகம் பேரைச் சென்றடையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.