உங்களை வருத்திக் கொள்ளாதீர்கள்....மூன்றாம் பகுதி

மே 15 - 2013 - பெங்களூர் - இந்தியா



கே: குருதேவ், என்னை யாராவது அவமரியாதை செய்யும் போது  நான் அன்போடு அதை அப்படியே ஏற்றுக் கொள்கின்றேன், எதிர்த்து பதிலுக்கு எதுவும் செய்வதில்லை. இப்படி செய்வதன் மூலம் நான் ஒரு வகையில் அநீதியை ஊக்கப்படுத்துகின்றேனா?  

குருதேவ்: ஆம். நீங்கள் ஒரு போதும் அநீதியை ஆதரிக்கக் கூடாது. நீங்கள் ஒருமுறை அல்லது இரண்டு முறை மன்னிக்கலாம். ஆனால் அவர்கள் மீண்டும் இவ்வாறு செய்தால், நீங்கள் அவர்களுக்கு ஏதிராக எழுந்து நிற்க வேண்டும். அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு தெரிவித்து அவர்களை சரியான வழியில் செலுத்த வேண்டும், இதனை செய்யும்போது உங்களுக்கு துன்பம் தருகின்றது என்பதற்காக செய்யாமல் மன மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும். ஒரு தவறினை செய்பவர்கள் தன்னை தானே துன்புறுத்திக் கொள்கின்றனர். மற்றவர்களை அல்ல. அவர்கள் புரிந்து கொள்வதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். 

குழந்தைகள் குறும்புத்தனம் செய்யும் போது தாய் அவர்களை ஓரிரு முறை அடிக்கின்றாள் .  ஏன்?  குழந்தை அவளை தாக்கிவிட்டது என்றோ அல்லது அவமரியாதை செய்து விட்டது என்பதாலா? இல்லை. குழந்தையின் நடவடிக்கை தீங்கு விளைவிக்கக் கூடும் என்பதனாலேயே தாய் திட்டித் திருத்துகின்றாள். உதாரணத்திற்கு, ஒரு குழந்தை தன் தாயின் மடியில் உட்கார்ந்து கொண்டு தன கால்களால் உதைக்கும் போது தாய் அதற்காக கோபம் கொள்ளாமல் சில நேரங்களில் மகிழ்ச்சியடைகின்றாள். ஆனால் கத்தியில் விளையாடுவது போன்ற தவறான செயல்களை செய்யும் போதோ அல்லது செய்ய வேண்டுமென்று வற்புறுத்தும் போதோ குழந்தையை அடிக்கின்றாள். குழந்தை தனக்கு தீங்கு எதுவும் செய்து கொண்டு விடக்கூடாது என்பதற்காக குழந்தையை கண்டிக்கின்றாள். இவ்வாறு புரிந்து கொண்டு நடக்க வேண்டும்.

கே: குருதேவ், இறைவனிடம் சரணடைந்த ஒருவர் எந்த தவறும் செய்ய முடியாது என்று சொல்லி இருக்கின்றீர்கள். ராமாயணத்தில் இலங்கையின் ராவணனும் சிவபெருமானின்  மிகப்பெரிய பக்தன். பிறகு அவன் ராமபிரானின் மனைவியாகிய சீதையை தூக்கிச் செல்லும் பெரும் தவறினை எப்படி செய்தான்? 

குருதேவ்: இலங்கையில் வேறொரு இராமாயணம்  பின்பற்றப்படுவது தெரிகின்றது.  அதன்படி பகவான் ராமன் தான் அவர்கள் நாடு கடத்தப்பட்டிருந்த போது மனைவி சீதையை காட்டில் கவனிப்பின்றி விட்டு பெரிய தவறு செய்துவிட்டதாக சொல்லப்படுகின்றது. இலங்கையில் இராவணன் சீதையை கடத்திச் சென்றது ஏன் என்பதற்கு முற்றிலும் மாறான ஒரு கதையை அவர்கள் சொல்கின்றனர். இராவணனின் தங்கை சூர்ப்பனகை ராமன்பால் கவர்ந்திழுக்கப்பட்டு அவன் மீது காதல் கொள்கின்றாள். அவள் ராமனை அணுகிய போது அவன் அவளது விருப்பத்திற்கு இணங்க மறுத்து அவளை அவமரியாதை செய்து விடுகின்றான். அதோடு மட்டுமில்லாமல், ராமனின் இளைய சகோதரன் லக்ஷ்மணன் மேற்கொண்டு எதுவும் செய்வதை தடுப்பதற்கென அவளது மூக்கை அறுத்து விடுகின்றான். யாராவது தங்கையின் மூக்கை அறுத்தால், மன்னிப்பானா? அரசன் என்றில்லை, தன் தங்கைக்கு தீங்கு விளைவிக்கும் ஒருவனை எந்த மனிதனும் மன்னிக்க மாட்டான். இது போன்ற செயலை பொறுத்துக் கொள்வதே ஒரு குற்றமாகும். எனவே, ராவணன் தன தங்கை அவமரியாதை செய்யப் பட்டதற்கு பதிலடி கொடுப்பதற்காக சீதையை கடத்திச் சென்றான். மேலும் ராவணன் சீதாப்பிராட்டியை மிகவும் மரியாதையுடன் நடத்தியாதாகவும் சொல்லப் படுகின்றது. 

ராவணன் மிகவும் தீயவனாக இருந்திருந்தால் அவன் ராமன் ராமேஸ்வரத்தில் செய்த பூஜைக்கு பூசாரியாக இருக்க சம்மதித்திருக்க மாட்டான். இந்தக் கதை உங்களுக்கெல்லாம் தெரியுமா? ராவணனுக்கு எதிரான போரில் வெற்றிபெற வேண்டுமென்பதற்கென ராமன் சிவலிங்கம் ஒன்றினை பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினான். இதனை செய்வதற்கு ஒரு பூசாரி தேவைபட்டார். ராமன் பூசைச் சடங்குகளை செய்வதற்கு ஏற்ற ஒரு நல்ல பூசாரி ராமேஸ்வரத்தில் இல்லை. ராவணன் பிறப்பால் அந்தணன்.அதோடு சிவபெருமானின் சிறந்த பக்தன். ஆகவே ராவணின் தம்பி விபீஷணன் போரின் போது ராமன் பக்கமிருந்தவன்) இந்த பூசைச் சடங்குளை எல்லாம் செய்வதில் இராவணன் கைதேர்ந்தவன் என்று சொன்னான். ராமன் ராமேஸ்வரத்தில் பூஜையை முன்னின்று நடத்தித் தருமாறு ராவணனுக்கு அழைப்பு விடுத்தான். ராவணனும் அழைப்பை ஏற்று வந்தான். ஆனால் ராமனின் மனைவி இல்லாமல் பூஜை முழுமை பெறாது என்று சொன்னான். ஆகவே ராமனிடம் ராவணன் "நீ திருமணமானவன் என்பதனால் நீ உன் மனைவியுடன் சேர்ந்தமர்ந்து தான் பூஜை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பூஜை செய்ய முடியாது" என்று சொன்னான்.

அதற்கு ராமன், "ஏதேனும் இல்லையென்றால் அதற்கு மாற்று உபாயம் சொல்ல வேண்டியது பூசாரியின் கடமை. என் மனைவி என்னுடன் இல்லை (அப்போது ராவணனால் சிறைப்படுத்தப் பட்டிருந்தாள்) இந்தப் பிரச்சினைக்கு மாற்று உபாயம் என்னவென்று சொல்லுங்கள். அவளுக்கு பதில் அந்த இடத்தில் அவளது சிலையை வைத்து செய்ய முடியுமா?" என்று கேட்டான்? அதற்கு ராவணன் "மாற்று ஏற்பாடுகளில் எனக்கு உடன்பாடில்லை, சிவபெருமான் வழிபாட்டில் அனைத்தும் முறையாக இடம் பெற்றிருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன். நான் உன மனைவியை பூஜைக்கு வரவழைக்கின்றேன். பூஜை முடிந்தவுடன் அவளை இலங்கைக்கு திருப்பி அனுப்பி விடுங்கள்" என்று கூறினான். 

ராவணன் சீதையை பூஜைக்கு அழைத்து வருகின்றான். பூஜை முடிந்ததும் ராமரும் சீதையும் குனிந்து பாதங்களை தொட்டு வணங்கிய போது ராவணன் ராமனை 'விஜயி பவ' (வெற்றி உண்டாகட்டும்) என்று வாழ்த்துகின்றான். ஒருவர் தன் பாதங்களை தொட்டு வணங்கும் போது முனிவருக்கு அவரை வாழ்த்துவதை தவிர வேறு வழியில்லை.ராமன் எதை வேண்டி பூஜை செய்திருந்தானோ அதை அவன் பெற வேண்டுமென்று ராவணன் வாழ்த்த வேண்டியிருந்தது. அவன் சீதையை 'சுமங்கலி பவ' (மங்கலமனைதையும் பெறுவாயாக) என்று வாழ்த்தினான். ராவணன் பெருந்தன்மை வாய்ந்தவனாக இருந்தான். இருவரையும் வாழ்த்திய பின் ராவணன்  சீதையை இலங்கைக்கு அழைத்து சென்றுவிட்டான். 

நாம் எப்போதும் ராவணனை வில்லனாகவே கருதுகின்றோம். ஆனால் ராவணனும் நிறைய நற்குணங்களைக் கொண்டிருந்தான். அதனால் தான் போர்க்களத்தில் ராவணன் மரணப்படுக்கையில் இருக்கும் போது, ராமன் லக்ஷ்மணனிடம் ராவணனின் அருகில் சென்று அவன் பாதங்களைத் தொட்டு வணங்கி ஞானம் பெறும்படி கூறினான். ராமன் "நான் ராவணன் அருகில் சென்றால், அவனது ஆன்மா அவன் உடலை விட்டு விலகி என்னுடன் இணைந்து விடும் அவ்வாறு  நடப்பதற்கு முன்  உன்னால் முடிந்த அனைத்தையும் அவனிடமிருந்து கற்றுக் கொள்" என்று சொன்னான். ராவணின் பெயரில் ஒரு கீதை இருக்கின்றது, அதன் பெயர் ராவண கீதை. 

ஐந்து கீதைகளில் அதுவும் ஒன்று. ஸ்ரீமத்பகவத்கீதை, அஷ்டவக்கிரகீதை, உத்தவகீதை மற்றும் குருகீதை இவற்றுடன் மற்றொன்று ராவணகீதை (ராவணனின் பாடல்கள்). இதில் ராவணன், லக்ஷ்மணனுக்கு கற்றுத் தந்த பல உபதேசங்கள் அடங்கி உள்ளன.ராவணனின் உபதேசங்கள் முடிந்தவுடன், லக்ஷ்மணன் ராமனுக்கு, ராவணனிடம் வரும்படி சைகை காட்டுகின்றான். ராமன், ராவணனிடம் வந்தவுடன் ராவணனின் ஆத்மா உடலை விட்டு நீங்கி,ஒளி பெற்று, ராமனுடன் கலக்கின்றது. அத்யாத்ம ராமாயணத்தில் இது ஒரு கதை. நான் இதை முழுவதும் படித்ததில்லை, ஆனால் இக்கதையைக் கேட்டிருக்கின்றேன். நீங்கள் அதைப் படிக்கவேண்டும்.

நீங்கள் அதைப் படிக்கும்போது, கைகேயி (தசரதனின் மனைவி, ராமனுக்குத் தாய் போன்றவள்) உண்மையில் நல்ல குணவதி என்பதை தெரிந்து கொள்வீர்கள். சாதரணமாக நாம் அவளை வஞ்சகமான பெண்மணி என்றே எண்ணுகின்றோம்.ஆனால் அப்படி இல்லவே இல்லை.அவள் தீய பெண் கிடையாது. அவள் ராமனைக் காட்டுக்குச் செல்லும்படி கூறியது ஏனென்றால், ராமன் காட்டுக்குச் செல்ல விரும்பியதால் தான். அதனால்தான் சர்வம் வாசுதேவம் இதி (ஒவ்வொன்றும் வாசுதேவனே) என்று கூறப்படுகிறது. ராவணனும் ராமனும் வாசுதேவனே (அதாவது இருவருமே தெய்வீகத்தின் அவதாரங்கள்)

கே: குருதேவ்! தாங்கள் கீதையில் கிருஷ்ணர், "மூன்று குணங்களால் நான் ஆளப்படவில்லை, மூன்று குணங்கள் என்னுள்ளே இல்லை"என்றதாகக் கூறினீர்கள். புரிந்து கொள்வதற்காக, ஒரு மனிதன் அணிந்துகொள்ளும் ஆடைகளை உதாரணமாகக் கூறினீர்கள். ஆனால் நான் அணிந்து கொண்டிருக்கும் ஆடைகளைப் பார்த்தால் அதுவே நான் என்று தோன்றவில்லையா?

குருதேவ்: அணிந்து கொண்டிருக்கும் ஆடைகளில் நீங்கள் இருப்பதனால், அலமாரியிலும், துணி துவைக்கும் மெஷினிலும் நீங்கள் இருக்கின்றீர்கள்! (சிரிப்பு) துணிகள் துவைக்கப் படுகின்றன, நீங்கள் அல்ல. அப்படியானால் எவ்வாறு ஆடைகளினுள்ளே நீங்கள் இருப்பதாகக் கூற முடியும்.சற்று சிந்தித்து பாருங்கள்.உங்கள் துணிகளைத் துவைத்து உள்ளே வைத்தபின் அவற்றில் நீங்கள் இருக்கின்றீர்களா? துவைக்கும் மெஷினிக்குள் துணிகளுடன் நீங்கள் செல்கிறீர்களா? இதைத் தர்க்க ரீதியாக புரிந்து கொள்ள முடியாது. இது ஒரு நுண்ணிய விஷயம். அனுபவபூர்வமாகவே உணரமுடியும்.  நீங்கள் ஆடைகளை அணிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவை உங்களுடையவை. ஆனால் அவற்றால் நீங்கள் ஆளப்படவோ, கட்டுப்படவோ இல்லை. இது தெளிவான விஷயம்.

கிருஷ்ணர் கீதையில்,"எல்லா குணங்களிலும் நான் இருக்கின்றேன்,அவை என்னைச் சார்ந்தவை, ஆனால் அவை என்னிடத்தில் வாசம் செய்யவில்லை" என்கிறார். இதை புத்தி பூர்வமாக விளக்குவது என்பது இயலாத ஒன்று, உணர்ந்து தான் அறிய வேண்டும். ஒவ்வொரு உதாரணமும் சில வரையறைகளுக்கு உட்பட்டது. உதாரணங்களை அதன் எல்லைகளுக்கு  மீறி  விரித்து பார்க்க முடியாது. அப்போது அதன் முக்கியத்துவம் குறைந்து புத்தியைக் குழப்பிவிடும். எது தெரிவிக்கப் பட வேண்டுமோ அதற்கு, வரையறைக்குட்பட்டு உதாரணம் உதவுகிறது. அதன் வரையறைகளுடன் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உதாரணம், வெளிப்படையாக தெரியாத, புரிந்து கொள்ள முடியாத, விவரித்துக் கூற முடியாத விஷயங்களை சுட்டிக்காட்டப் பயன்படுகிறது. உங்கள் புத்தியை வழி நடத்தி,நீங்கள் புரிந்து கொள்ள உதவுகின்றது. அத்துடன் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் விஷயத்தைப் புரிந்து கொண்டவுடன் அவ்வளவு தான்.இளைப்பாறுங்கள்.

ஞானம் என்பது நீங்கள் ஆழ்ந்து இளைப்பாறும் நிலையில் தான் பிறக்கின்றது. நுண்ணிய விஷயங்களை நீங்கள் முயற்சி செய்து புரிந்து கொள்ள முடியாது.

கே: குருதேவ்! நான் அறியாமையிலிருந்து எவ்வாறு விடுபடுவது?

குருதேவ்: நீங்கள் அறியாமையிலுள்ளீர்கள் என்பதை உணரும் போதே அதிலிருந்து விடுபட்டு விட்டீர்கள். அறிவில்லாதவர், தான் அவ்வாறு இருப்பதைத் தெரிந்து கொள்ளவே மாட்டார். எவ்வாறு தூங்கி எழுந்தபின், தூங்கினோம் என்பதை உணருகிறோமோ, அதுபோன்று, அறியாமையை உணர்ந்தவுடன் அறியாமை அகன்று விடுகிறது. அமிர்தமான விஷயம் இது.பல மணி நேரங்கள் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டே இருக்கலாம். இன்றிரவு உங்களுக்குச் செய்ய  ஒரு பயிற்சி தரப்போகிறேன். 'சர்வம் வாசுதேவம் இதி' உங்களைச் சுற்றி இருக்கும் ஒவ்வொன்றும் வாசுதேவனின் ஒரு வடிவம். என்ன விதமான பக்தி உங்களுக்கு இருந்தாலும், அது வாசுதேவனின் அருளாலேயே உங்களை வந்தடைந்தது.

கே: குருதேவ்! அஷ்டாடப் பிரகிருதியில் (தெய்வீக சக்தியின் எட்டு மூலபொருள் வடிவமான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், அறிவு மற்றும் தன்முனைப்பு சேர்க்கப்பட்டுள்ளது, ஆனால் நினைவுத்திறன் சேர்க்கப்படவில்லையே?

குருதேவ்: சரி! சேர்த்துக் கொள்ளுங்கள்! பல்வேறு ரிஷிகள், இயலுலகின் பல நிலைகளை புரிந்து கொள்வதற்காகப்  பல்வேறு விதமான கோட்பாடுகளை விவரித்துள்ளார்கள். மனம்,அறிவு,முனைப்பு ஆகிய மூன்றும்,நினைவுத்திறனின் விரிவாக்கங்களாக காணலாம். இவை ஒரே விழிப்புணர்வின் நான்கு பண்புக்கூறுகள். ஒரு நிகழ்வுடன் கட்டுப்பட்டதாகத் தவறாக எண்ணாதீர்கள். விழிப்புணர்வின் நான்கு விதமான வெளிப்பாடுகள். சில கருத்துக் கூடங்கள் இவற்றில் மூன்றை  மட்டுமே சேர்த்துக் கொள்கின்றன. நினைவுத் திறன் என்பது மனம் அல்லது அறிவு இவற்றின் இணைந்த ஒன்றாகக் கருதுகின்றன; ஆகவே தனியாக குறிப்பிடுவதில்லை.

கே: குருதேவ்! தாங்கள், வாழ்வில் என்ன செயல் நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்றதோ அதை நம் 100 சதவீதம் நன்றாக செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறீர்கள். நமது செயல் என்ன என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளுவது?

குருதேவ்: இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதுவே உங்களின் சரியான செயல் (சிரிப்பு) ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பல பாத்திரங்களில் செயல்படுகிறான். உங்களுக்கு என்ன அளிக்கப்பட்டிருக்கின்றதோ அதைச் சரியாக செய்யுங்கள். ஒரு தாயாக, தகப்பனாக, கணவனாக,மனைவியாக, சமுதாயத்தில் ஒரு குடிமகனாக சரியாக செய்யுங்கள். மதி நுட்பமுள்ளவராக அல்லது சீடனாக,குருவாக என்ன பங்கானாலும் சரி அதை பயமின்றி சரியாகச் செய்யுங்கள். எது தேவையோ அதை செய்ய பயப்படாதீர்கள்.