மனப் பரிணாமத்தின் மூன்று நிலைகள்

28 மே - 2013 - பெங்களூரு – இந்தியா

மனப்பரிணாம வளர்ச்சிக்கு  மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை மாயையில் இருத்தல். அது மாயை என்பது கூடத் தெரியாமல் அதில் கட்டுண்டு இருத்தல். உதாரணமாக, ஒருவர்  ஒரு பிரமையில் சிக்குண்டு அது தவறான கருத்து என்பதைக் கூட அறியாமல் அதையே உண்மை என்று நம்பிக் கொண்டிருத்தல். இது முதல் நிலை,

இரண்டாவது நிலை, ஒருவர் தான் மாயா மயக்கத்தில் கட்டுண்டு இருக்கிறோம் என்று தெரிந்தே அதில் கட்டுண்டு இருப்பது. தான் முழுவதுமாக மாயையில் சிக்குண்டு இருப்பதை உணர்ந்து அதற்காக வருந்தும் நிலை. மூன்றாவது, மாயையிலிருந்து முழுவதுமாக விடுபட்டு அதனால் பாதிக்கப் படாமல் இருக்கும் நிலை. மாயையால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்த நிலையே மூன்றாவது நிலை.

இவை தாம் மூன்று நிலைகள். முதல் நிலையில் தான் ஒருவன் தன்னுடைய மனதினாலேயே துன்பத்தை அனுபவிக்கிறான்.  அமைதியாக அமர்ந்திருக்கும் போது கூட, பல விதமான எண்ணங்கள் சூழ்ந்து கொள்கின்றன.

இது சரி, இது சரியல்ல, நான் இதைச் செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும், இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர், எனக்கு என்ன ஆகும், ஆகாது என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றி கொண்டிருக்கின்றன.எங்கிருந்தெல்லாமோ வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நொடி கூட மன அமைதி இல்லை. மனம் முழுவதும் இத்தகைய எண்ணங்கள் நிரம்பி மாயமயக்கத்தில் வீழ்ந்து அது மாயை என்று கூட உணராமல் இருக்கின்றது. இது தான் முதல் நிலை.

சரி! நம்மை ஒரு நொடி ஒதுக்கி வைப்போம். நாமெல்லோரும் யாரேனும் ஒருவர் மாய மயக்கத்தில் கட்டுண்டு இருப்பதைப் பார்த்திருக்கின்றோம். அப்படிப்பட்ட ஒருவரைக் காணும் போது நீங்கள் ,'' சரி! இவர் மாயமயக்கதில் சிக்குண்டு உண்மையை உணராமல் இருக்கிறார்'' என்று நினைத்திருக்கிக்கிறீர்கள்.எத்தனை பேர் இவ்வாறு நினைத்திருக்கிறீர்கள்? கை உயர்த்துங்கள் (பலர் கையுயர்த்துகிறார்கள்) 

சிலர் இந்த உலகமே தனக்கு எதிராக செயல்படுவதாக தவறாக எண்ணுகிறார்கள்.முதலில், உலகில் உள்ளோருக்கு இவர் யார் என்று கூடத்  தெரியாது. யாருக்கும் இவரைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லை. இருந்தும் இவர் இவ்வுலகம் தனக்கு எதிரானது என்று எண்ணுகிறார். ஒவ்வொருவரையும் தனது எதிரியாகவே கருதுகிறார். மாயையினால் தான் இந்த மயக்க நிலை. மற்றும் சிலர் எல்லோரும் தன்னையே கவனித்து வருவதாக உணருகிறார்கள். "ஓ! எல்லோரும் என்னைப் புகழுகிறார்கள்'' என்கிறார்கள். இவர்களும் மயக்க நிலையிலேயே இருக்கிறார்கள், அப்படியே இருந்து இறந்து விடுகிறார்கள்.

பல முறைகள், மற்றவர்களின் மருட்சியை  நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது, ஆனால் தன்னுடைய மயக்கத்தை புரிந்து கொள்ள முடிவதில்லை, மருட்சி மயக்கத்தை  உண்மை என்றே நம்புகிறார்கள். மற்றவர்களுடைய மயக்கத்தை உணர்ந்து புரிந்து கொள்ள முடிகிற அளவுக்குத், தான் மாயையில் சிக்கிக் கொள்ளும் போது அது மாயை என்று உணராமல் இருக்கின்றோம்."அவன் அப்படிப்பட்டவன், அவள் அப்படிப்பட்டவள், இது சரி, அது தவறு என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் எதையோ எண்ணிக் கொண்டு ஒரு நொடி கூட அமைதியின்றி இருக்கிறோம்.சத்சங்கத்தின் போது கூட மனம் மாயையின் காரணமாக எண்ணச் சுழற்ச்சியில் சிக்குண்டு விடுகிறது. இதுதான் மாயை என்றுணராமல் அதில் சிக்குண்டு மனத் துன்பத்திற்கு ஆளாகும் முதல் நிலை.

இரண்டாவது நிலை என்பது, நடப்பதெல்லாம் மாயையினால் ஏற்படும் மயக்கம் என்று உணர்ந்தாலும் அதை கடந்து வெளி வரமுடியாத நிலை. இந்த இரண்டாவது நிலையில்  நீங்கள் மாயை மயக்கத்தில் இருப்பதை உணருவீர்கள். அவரைப் பற்றி இவரைப்பற்றி என்றெல்லாம் நீங்கள் எடுத்த தீர்ப்பு பொய்யானதாக மாறுவதை  அறிந்து கொள்ளுவீர்கள். அவர்களெல்லாம் நீங்கள் முடிவெடுத்தபடி அல்ல என்பதை அறிந்து கொள்ளுவீர்கள். நீங்கள் செய்து கொண்ட கருத்துப் பதிவுகள் அனைத்தும் தவறானது என்பதைக் கண்டு கொள்வீர்கள். அவை அனைத்தும் மயக்கம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஆயினும் அம்மயக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் இருப்பீர்கள். மயக்க நிலையை உணர்ந்தாலும் வெளிவர முடியவில்லை. இதை எவ்வாறு கடப்பது?

மாயையின் மயக்கத்தில் சிக்குண்டு அதை உணராமல், பிறரால் துன்புறுகிறோம். இது முதல் நிலை. ஆனால் இவை எல்லாம் நமது மன மயக்கத்தினால்தான் என்று உணரும் போது நம் மீதே கோபம் வருகிறது. எத்தனை பேர் இதை அனுபவத்திருக்கிறீர்கள்? நீங்கள் துன்புறுவது உங்களாலேயே தான் ,மற்றவரால் அல்ல என்றுணர்ந்து வருந்துகின்றீர்கள். இது இரண்டாவது நிலை. முதல் நிலையில் ஒருவன் இது தான் மாயை என்றுணராமல் அதில் சிக்குண்டு மனத் துன்பத்திற்கு ஆளாகி, அத்தகைய சூழ்நிலைக்கு தானே தான் காரணம் என்று அறியாமல் உலகைப் பழிக்கிறான். உலகிலுள்லோரைத் திருத்த முடியாததால், செயலற்ற நிலையில் கோபமடைகிறான்.  அவனிடம் வன்முறை மனோபாவத்தை அதிகப்படுத்துகிறது. முதல் நிலையில் இருப்பவர்களை விட, தனது மாயா நிலையை உணர்ந்து கொண்டவர்கள் சற்று புத்திசாலிகள். அவர்கள் தங்களது சூழ்நிலைக்கும் துன்பத்திற்கும் உலகைக் குறை கூறுவதில்லை. தங்களையே நொந்து கொள்கிறார்கள். இக்குற்ற உணர்வில்  அவர்கள் தடைப்பட்டு அந்நிலையிலேயே நின்று விடுகிறார்கள். 

மூன்றாவது நிலை இந்த இரண்டு நிலைகளை விட மேலானது. அதில் ஒருவன் மாயையினால் பாதிக்கப்படாத நிலையில் இருக்கிறான். நடப்பெதெல்லாம் மாயையினால், மனத்தினால் என்று உணர்ந்து, அதில் சிக்கிக் கொள்வதில்லை. அவன், இது மனத்தின் இயல்பு, மருட்சி என்பது மாயையின் இயல்பு என்பதை நன்கறிந்து கொள்கிறான். ஆயினும், மனம் என்பது தான் அல்ல, அது போன்று  மருட்சியில் (மாயை) சிக்கிக்கொண்டிருப்பதும் தான் அல்ல என்பதையும் அறிந்தவன் ஆகிறான். அவன் மனதின் இயல்பைத் தடுக்கவோ, குறுக்கிடவோ முயலுவதில்லை, அதே நேரம் மாயையில் சிக்கிக் கொள்வதுமில்லை. இரண்டையுமே அவற்றின் போக்கில் விட்டு விடுகிறான். நல்லறிவாளன்  மனம் பல காரணக் கூறுகளினால் பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்தவன். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் நீங்கள் உண்ணும் உணவு. 'ஜைஸா அன்  வைஸா மன்' என்று ஒரு சொல்வழக்கு உண்டு. அதன் மொழிபெயர்ப்பு "உண்ணும் உணவே நீங்கள்" என்பதாகும். அதாவது, என்ன உணவு எடுத்து கொள்ளுகிறீர்களோ அது உங்கள் மனத்திலும் நடத்தையிலும் செயல்விளைவினை ஏற்படுத்தும்.

ஆகவே உங்கள் மனமானது நீங்கள் உண்ணும் உணவு, உங்கள் சுற்றுச்சூழல் மற்றும் உங்கள் வாழ்வில் நீங்கள் இருக்கும் காலகட்டம்  இவற்றைப் பொறுத்தே இயக்க விளைவுகளைப் பெறும். காலம் என்பதும் மனதில் ஒரு விளைவினை ஏற்படுத்தும். உங்கள் வாழ்வின் சில காலகட்டங்களில் மன உணர்ச்சிப்புயல்களில் சிக்கிக் கொள்ளும் நிகழ்வுகளும் உள்ளன. ஆகவே காலம்,உணவு மற்றும் சுற்றுச் சூழல் இவையால் மனம் இயக்க விளைவுகளை பெறுகின்றது. எனவே, அறிவாளி மாயை என்பது தன்னியல்புப்படி செயல்படுகிறது என்றுணர்ந்து, தன் உள்ளுயிர்த் தன்மையில் இளைப்பாறுகின்றான். இதுதான் உண்மையான ஞானம். இந்த ஞானத்தினால் மனம் பொய்த் தோற்ற அழுக்கிலிருந்து சுத்தப் படுத்தப்பட்டு, மாயையிலிருந்து விடுபடுகின்றது. இந்த ஞானத்தினால் அறிவும் சுத்திகரிக்கப்பட்டு மாயையிலிருந்து தன்னைத் தனிப்படுத்தி கொள்கின்றது. இப்படிப்பட்ட மெய்யறிவாளர்கள் தாங்கள் எது செய்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கின்றார்கள்.