ஆசைகளை சற்று தவிர்த்து விடுங்கள்

திங்கள்கிழமை 31 மார்ச், 2014

பெங்களூர், இந்தியா


கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த கால நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவேண்டும். மக்கள், கடந்த கால நிகழ்ச்சிகளில் கெட்டவைகளை மறக்காமல் இருக்கிறார்கள். வருங்காலத்தை பற்றிய கவலையும், பயமும் அவர்கள் மனதில் உள்ளது. இது முட்டாள்தனமான வாழ்க்கையாகும். அறிவாளிகள், சற்று ஞானம் பெற்றவர்கள், வாழ்க்கையை வேறு விதமாக வாழ்கிறார்கள். கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறார்கள். வருங்காலத்தை பற்றி உற்சாகமும், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். வருங்காலத்தை பற்றிய பதட்டம் அவர்களிடம் இல்லை. நீங்கள் எல்லோரும் அறிவாளிகள். அப்படி வாழ்கிறீர்கள். இல்லையா?

கேள்வி - பதில்கள்

பார்வையாளர் யார்? பார்வையாளருடன் ஒன்றாக இணைவது நம் இலட்சியமா ?

இலட்சியம் என்று ஒன்றும் கிடையாது. ஒன்றாக இணைவதற்கு வேறு எதுவும் கிடையாது. அங்கு இருக்கிறது. அவ்வளவு தான். புரிகிறதா? அங்கு என்ன இருக்கிறதோ, அது அங்கு இருக்கிறது. அது எப்போதும் தற்சமயத்தில் உள்ளது. சாட்சியாக உள்ளது. எது இந்த கேள்வியைக் கேட்டதோ, அது தான் சாட்சி. தெரிந்து கொள்ள வேண்டியது இதுதான். மனம் ஒன்றன்பின் ஒன்றாக வரும் ஆசைகளால் நிரம்பி அடைத்துக் கொள்கிறது. தானியங்கி துப்பாக்கியிலிருந்து வரும் குண்டுகள் போல, ஆசைகள் மனதில் வருவதால், உன்னால் தெளிவான வானத்தை பார்க்க முடிவதில்லை. உண்மையில் நீயே அந்த தெளிவான வானம். எனவே ஆசைகளைத் தூக்கி எறி.

விஹாய காமான் ய: ஸர்வான் புமாம்ஸ் சரதி நிஸ்ப்ருஹ |
நிர்மமோ நிரஹங்கார: ஸ சாந்திமதி கச்சதி ||  [2 – 71]

பகவத்கீதையில் பகவான் கிருஷ்ணர் ஆசைகளை அறவே அகற்றினால், அமைதி கிடைக்கும் என்று சொல்கிறார். இல்லாவிடில், எதன் மீதோ தீவிரமான ஆசை கொண்டு நீ ஓடிக் கொண்டிருப்பாய். நீ ஒரு ட்ரெட்மில்லில் (உடற்பயிற்சிக்காக ஒரே இடத்தில் ஓட வைக்கும் இயந்திரம்) ஓடுவது போல ஆசைகளை துரத்திக் கொண்டிருக்கும் வரை உனக்கு ஓய்வு கிடைக்காது. ஓய்வு வேண்டுமானால், நீ இயந்திரத்தை நிறுத்தும் பொத்தானை அழுத்தி, அதிலிருந்து இறங்கி, ஒரு இடத்தில் உட்கார வேண்டும். ஆனால் வாழ்க்கையில் நாம் ஆசைகளைத் துரத்திகொண்டு ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆசைகளைத் துரத்தும் வரை எங்கும் சென்றடைய முடியாது. நீ அமைதியாக ஓய்வெடுக்கும் போது இந்த உண்மை உனக்குப் புரியும். ஆனால் இந்த அமைதி நிலைப்பதில்லை. மனதில் அடுத்த ஆசை தோன்றும்.

யோகி என்றால் யார் ?

யாருக்கு ஒரு வருடத்தில் ஒரு ஆசை தோன்றுகிறதோ அவரே யோகி.யோகியில்லாதவர் யார் ?யாருக்கு ஒவ்வொரு மணித்துளியிலும், ஒவ்வொரு நாளிலும் ஒரு மில்லியன் ஆசைகள் தோன்றுகிறதோ, அவரை யோகி என்று சொல்ல முடியாது. எனவே உங்கள் ஆசைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். புரிந்ததா ?

ஆசைகளை எப்படிக் குறைப்பது  என்று நீ என்னைக் கேட்பாய். எல்லாமே அழியக் கூடியது என்பதைப் புரிந்துகொள். அவ்வளவு தான். இதை வைராக்கியம் என்று சொல்வார்கள். இதற்காக நீ எதுவும் செய்ய வேண்டியதில்லை. எல்லாம் அழியப்போகிறது. இந்த எண்ணமே ஆசைகள் தோன்றாமலிருக்க வழியாகும். எல்லாம் அழியப் போகிறது என்று அறிவதே தியானம். வைராக்கியம் இல்லா விட்டால் தியானம் நிகழ வாய்ப்பில்லை.

குருதேவா ! கடவுளே தொந்தரவாகி விட்டால் நான் என்ன செய்வது ?

நீ கடவுளைத் தொந்தரவு செய்யாதே. கடவுள் உன்னைத் தொந்தரவு செய்வதாக நினைக்கும் போது, நீ கடவுளைத் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறாய். இது ஒரு பிரச்சினையாகி விடும்.ஒரு முறை, ஜபல்பூரிலோ, வேறு எங்கேயோ, ஒரு பெண் எட்டு நாட்களாக ஒன்றும் உண்ணாமல் இருந்தாள். குருதேவரோடு பேசாமல் நான் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தாள்.
நான் சொன்னேன். இது ஒரு பெரிய பிரச்சினை. நான் உலகம் முழுதும் பயணம் செய்கிறேன். ஃபோனில் சில இடங்களிலிருந்து தொடர்பு கொள்ள முடியும். சில இடங்களில் தொடர்பு கிடைக்காது. மக்கள் இப்படி நினைத்து அடம் பிடித்தால், பெரிய பிரச்சினையாகி விடும்.
நான் அவளைத் திட்டி, ‘இப்படி சாப்பிடாமல் இருக்காதே. உடனே சாப்பிடு “ என்று சொன்னேன்.
இது சேவையல்ல. என்னை சேவை செய்ய வைக்கிறார்கள் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.

நான் சேவை செய்யத் தயார். ஆனால் இது சேவையல்ல. தலைவலியாகி விடுகிறது. இப்படிப் பட்ட செயல்கள் எனக்குப் பிடிக்காது. கடவுள் தொந்தரவு செய்வதாக நீ எப்போதும் சொல்லக் கூடாது. நீ கடவுளுக்காக, குருவுக்காக, இதய பூர்வமாக ஏங்கினால், அது நல்லது. இது உன்னை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும். அந்த ஏக்கம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் எந்த ரசமும் இல்லை. கடவுளுக்காக ஏங்கா விட்டால் வாழ்க்கையில் வரட்சி வரத் துவங்கும். மக்கள் பொருளுக்காக ஆசைப் படுகிறார்கள். மேலும் மேலும் பொருளை சேர்க்க விரும்பி இறந்து விடுகிறார்கள். ஆனால் நீ கடவுளுக்காக ஆசைப் பட வேண்டும்.  ஞானியாகலாம். கடவுளுக்காக ஏங்கும் போது, வாழ்க்கையில் விரும்பும் எல்லாவற்றையும் அடைந்து, உயர்ந்த நிலைக்குச் செல்லலாம். கடவுளுக்கான ஏக்கம் இப்படி இருக்க வேண்டும்.

அன்பான குருதேவா ! அன்பு கசப்பாக மாறிவிடும் போது என்ன செய்யலாம் ?

காத்திரு. எதிர்ச்செயல் செய்யாதே. கசப்பு மறுபடியும் அன்பாக மாறிவிடும். பல முறை நீ இதைப் பார்த்திருப்பாய். யாருக்கு நீ அதிகமாக நன்மை செய்திருக்கிறாயோ, அவர்களுடைய அன்பு கசப்பாக மாறுகிறது. நீ எல்லோரும் ஞானிகள் போல் நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர் பார்க்கிறாய். அப்படி நடக்க வாய்ப்பில்லை. உலகில் எல்லோரும், நீ எப்படி இருந்தாலும், ஒரு புன்முறுவலோடு உன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். நிபந்தனையற்ற அன்பைக் காட்ட மாட்டார்கள். அப்படி நடக்க வாய்ப்பு கிடையாது. மக்களின் எதிர்ச்செயல்களை (கோபம், வெறுப்பு, உதாசீனம் முதலியன) நீ சந்திக்க வேண்டும். கண்டிப்பாக எதிர் கொள்ள வேண்டும். உலகம் அப்படித் தானிருக்கும்.

குருதேவா, நம் ஆத்மா நித்தியமானது, தூய்மையானது, பண்டைய காலத்திலிருந்து இருப்பது என்றால், அது ஏன் தன்னை அறிவதில்லை? தன் உண்மையான நிலையை ஏன் தெரிந்து கொள்ளவில்லை ?

இதன் பெயர் அதிபிரஷ்ணா. இந்தக் கேள்வியைப் பற்றி உண்மையில் உனக்கு கவலை இல்லை. இதைக் கேட்பது மிகவும் அதிகமானது. எனவே எப்போது முதல் அஞ்ஞானம் ஏற்பட்டது. இப்படிப் பட்ட கேள்விகளுக்கு எப்போதுமே விடை அளிக்கப்படவில்லை. நம் பண்டைய வேதங்களில் கூட இதற்கு விடை கிடையாது. இது அதிபிரஷ்ணா என்று சொல்லப்படுகிறது. இதைத் தெரிந்து கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் ? யாராவது “ஆம், இது  2  பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டது” என்று சொன்னால், அதனால் என்ன உபயோகம்?  உனக்கு  என்ன கிடைக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. முதலில் ‘ நீ யார் ? ‘என்பதைத் தெரிந்து கொள். பிறகு முதல் அஞ்ஞானம் எப்போது ஏற்பட்டது என்று உன்னால் சொல்ல முடியும்.

குருதேவா, நான் எல்லா பொருட்களையும் சரியான இடத்தில் வைத்து எடுக்கும் பழக்கம் உள்ளவன். என் மனைவியும், மகளும் இதற்கு எதிரானவர்கள். இவர்களுடைய இந்த குணம் எனக்கு எரிச்சல் வர ஒரு காரணமாகிறது. அவர்களை எப்படி சரி செய்வது ?

அதை ஏற்றுக் கொள். நீ உன் பழக்கப்படி சரியாக நடந்து கொள். உன்னைப் பார்த்து அவர்களும் ஒரு நாள் கற்றுக் கொள்வார்கள். அவர்கள் அப்படியில்லா விட்டால், வாழ்க்கையில் ஒரு வேடிக்கையும் இருக்காது. ஒருவர் நிதானத்தை இழக்க வேண்டும். மற்றவர் அவரை சமாதானப் படுத்த வேண்டும். இல்லா விட்டால் வாழ்க்கை சலிப்பாகவும், ருசியில்லாததாகவும் இருக்கும். ஆனால் எதையுமே மிக அதிகமாக இழுக்க வேண்டாம். சில சந்தர்ப்பங்களில் நிதானத்தை இழப்பதால் ஒன்றும் ஆகி விடாது.

உண்மையான நட்பின் அடையாளம்

செவ்வாய்கிழமை, 31 மார்ச், 2015,

சிங்கப்பூர்



(குறைவாக எதிர்பார்த்து அதிகமாக புரிந்து கொள்ளுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

உலகத் தலைவர்களுடன் சமாதான முயற்சிகளில் ஈடுபடும் போது எதைப் பற்றிப் பேசுகின்றீர்கள்? உங்களுடைய பேச்சு வார்த்தைகளில் என்ன நிகழ்கின்றது, உலகத் தலைவர்களிடம் நீங்கள் என்ன கேட்கின்றீர்கள் என்பவற்றைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்கின்றது.

முதலாவதாக ஒருவரை சந்திக்கும் போது, அவரை மனித பிறவியாக கருதியே சந்திக்கின்றேன். ஒருவர் உலகத் தலைவராக இருந்த போதிலும், அவரும் மனிதர் தான், அவருக்கும் அவரது சொந்தப் பிரச்சினைகள் என்பது இருக்கும். ஆகவே மனிதன் என்னும் நிலையிலேயே ஒருவரை சந்திக்கின்றேன். தலைவர்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதன் விளைவுகளைப் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள். எடுக்கும் முடிவுகள் தவறானவையாகவே எப்போதும் இருக்கும்.   அவர்கள் முதலில் தங்களுடைய ஆற்றல் மற்றும் மன அழுத்தத்தத்தினை கையாள வேண்டும், அதற்காகவே என்னிடம் வருகின்றனர். தங்களது பிரச்சினைகள் அல்லது அவர்களுடைய நிலைமையை எவ்வாறு மேன்மையாக கையாள்வது ஆகியவற்றுக்கு அவர்களுக்கு  உள்ளுணர்வு தேவைப்படுகின்றது.

இரண்டாவதாக நாங்கள் சந்திக்கும் போது சில பிரச்சினைகள் இருக்கலாம். அவை மோதல்கள் நிகழும் இடங்களை பற்றிய பிரச்சினைகளாகவும் இருக்கலாம். சேர்ந்தமர்ந்து எங்களுடைய தொடர்புத் திறனின் மூலம் எவ்வாறு அத்தகைய மோதல்களைத் தீர்க்க உதவலாம் என்றே பார்ப்போம். இங்கு எவ்வாறு எங்களது தன்னார்வ தொண்டர்கள் அத்தகைய சூழ்நிலையில் மக்களைச் சென்றடைந்து அவர்களுடன் தொடர்பு கொண்டு அவற்றை கையாளும் திறனை பெற்றுள்ளனர் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

ஓர் உதாரணம் தருகின்றேன்: அர்ஜெண்டினாவிலுள்ள மிகப் பெரிய சிறைச்சாலையினை முற்றிலும் சீரமைத்திருக்கின்றோம். அங்கு மிகக் கொடிய குற்றங்களை புரிந்தவர்கள் அற்ப விஷயங்களுக்குக் கூட ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு வன்முறையற்ற சூழலை எடுத்து வர முடிந்ததை பெரிய சாதனையாகவே நான் கருதுகின்றேன். அர்ஜெண்டினாவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உயர் அதிகாரிகளும் ‘நாங்கள் அச்சிறைக்கு வந்து எது மாற்றத்தினைக் கொண்டு வந்தது என்று காண விரும்புகின்றோம்‘ என்று கூறினர். அத்தகைய சமூகநல திட்டங்களும் உதவின.

ஐவரி கோஸ்ட் போன்ற சில பதற்றமான பகுதிகளையும் ஏற்றுக் கொண்டோம். உதாரணமாக ஐவரி கோஸ்டில் சமய சார்புள்ள மோதல்கள் நிறைந்த இரண்டு கிராமங்களில் திட்டப்பணிகளை மேற்கொண்டோம். ஒரு பகுதியில் இஸ்லாமியரும் மற்றொரு பகுதியில்  கிறிஸ்தவர்களும் நிறைந்திருந்தனர். ஒருவரையொருவர் முற்றிலும் தவிர்த்தனர். தன்னார்வத் தொண்டர்களில் ஒருவரான மும்பையை சேர்ந்த பிரெஞ்சு மொழி பேசக்கூடிய பெண் அங்கு சென்று அவர்களிடம் பேசி, தனித்தனியாக அவர்களுக்குத் திட்டப்பணிகளைச் செய்து அவர்களை ஒருங்கிணைத்தார். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவப் பகுதியில் கழிப்பறைகளை கட்டினர். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியப் பகுதியில் பள்ளியினை நிர்மாணித்தனர். எங்களது இம்முயற்சிகளை  அங்கீகரித்து ஐவரி கோஸ்ட் அரசு சமூக நல்லிணக்கத்தினை உருவாக்கியதற்காக வாழும் கலைக்கு ஓர் விருதினை அளித்தது.

இவை நான் ஏற்றுக் கொள்ளும் பணித்திட்டங்கள். சாதாரணமாக நான் எந்த நிகழ்ச்சி நிரலுடனும் எந்த உலகத் தலைவரையும் சந்திப்பதில்லை. அவர்களிடம் நான் எந்தச் சலுகையும் கேட்பதில்லை. பங்களிக்கவே நான் இங்கிருக்கின்றேன். அப்படியே அவர்களிடம் நானே செல்வதாயினும், எவ்வாறு அவர்களது சமுதாயத்திலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பதைக் கண்டறியவே செல்கின்றேன். அவர்கள் என்னிடம் வரும் போது, பிரச்சினைகளுடன் வருகின்றனர், மிகுந்த மகிழ்ச்சியுடனும் லேசாகவும் உணர்ந்து திரும்பிச் செல்வதையும் அறிகின்றேன்.

நல்ல நண்பனின் அடையாளம் என்ன தெரியுமா? ஒருவர் நல்ல நண்பரா இல்லையா என்பதைக் கண்டறியச் சில கட்டளை விதிகள் உள்ளன. தெரியுமா? ஒரு நண்பனிடம் பிரச்சினையுடன் சென்று, லேசாக உணர்ந்து திரும்பினால் அவர் நல்ல நண்பர். ஆனால் ஒரு நண்பரிடம் பிரச்சினையுடன் சென்று," கடவுளே! இது சிறிய பிரச்சினை என்று எண்ணினேனே? இவ்வளவு பெரிதானதா? என்று கனத்த மனதுடன் திரும்பினால் அவர். நல்ல நண்பன் அல்ல.

இது உங்களுக்கும் பொருந்தும். யாரேனும் ஒருவர் உங்களிடம் பிரச்சினையுடன் வந்தால், அதை மேலும் பெரிதாக்கி " பிரச்சினை ஜெயிக்க முடியாத ஒன்று, அவ்வளவு தான், நீ அழிக்கப்பட்டு விடுவாய்" என்று கூறி அவர்களை மேலும் துன்புறுத்துவீர்களா அல்லது நம்பிக்கையுடனும் லேசாகவும் உணரவைத்து புன்முறுவலுடன் திரும்பச் செல்ல உதவுவீர்களா? இதுவே ஓர் நல்ல நண்பனுக்கான கட்டளை விதி. இதை பற்றி முன்னர் உங்களில் யாரேனும் சிந்தித்திருக்கின்றீர்களா? இல்லையெனில், இன்று புதிதாக ஒன்றினை பற்றி சிந்திக்க கற்றுக் கொண்டீர்கள். இதை பரீட்சித்து ஓர் சோதனையோட்டம் செய்து பாருங்கள்.

நாங்கள் பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவம் ஆகியவற்றை வளர்த்து கொள்ள வேண்டும் என்று தாங்கள் கூறுவதைக் கேட்க  மகிழ்ச்சியாயுள்ளது. எனினும், நான் ஒரு நேர்மையான குழப்பத்தில் உள்ளேன். பன்முகத்தன்மை மற்றும் பன்மைத்துவம் நோக்கி நகர்த்த சமூகத்தில் மிக வலிமையான நெம்புகோல்களில் ஒன்று அரசியல். அண்மை காலத்தில், தாங்கள் தேர்ந்தெடுத்த அரசியல் விருப்பங்களுடன் நான் போராடிக் கொண்டிருக்கின்றேன். எவ்வாறு  அவர்கள் பன்முகத்தன்மை, பன்மைத்துவம், மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிக்கும் இலக்கினை அடைவார்கள் என்றறிய விரும்புகிறேன்.

முதலாவதாக எனக்கு அரசியல் விருப்பத் தேர்வுகள் எதுவும் கிடையாது. நல்ல நெறிமுறையான செய்தித்தாள் ஒன்றிடம் எந்த அரசியல் கட்சியுடன் இணைந்துள்ளீர்கள் என்று கேட்டால் எதுவுமே இல்லை என்றே பதில் கூறுவார்கள்.

ஒரு நீதிபதி, ஒரு ஆன்மீகத் தலைவர், ஒரு மருத்துவர், ஒரு பத்திரிகையாளர், அல்லது ஓர் ஆசிரியர் ஆகியோர் எந்த கட்சி அல்லது சித்தாந்தத்தையும் சார்ந்திருக்க முடியாது. அவர்கள் மக்கள் அனைவரும் பயன் பெறக்கூடிய விதத்திலேயே இருக்க வேண்டும் இல்லையெனில், அவர்கள் தாங்கள் வகிக்கும் பங்கினைச் சரியாக செய்ய முடியாது. ஒரு ஆன்மீகத் தலைவர் அல்லது சமூகத்தொண்டர்,எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது சித்தாந்தம் இவற்றினை சார்ந்திருக்க முடியாது என்பதே எனது நம்பிக்கை. இப்பொழுது நீங்கள்," ஏன் இந்தியாவில் ஊழலை நீங்கள் எதிர்த்து நின்றீர்கள்" என்று கேட்கலாம். 

நல்லது, சற்றேனும் பொது அறிவுடைய எந்தத் தனி மனிதனும் ஊழல் வதந்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருப்பதைத் தாங்கிக் கொள்ள மாட்டான். கடந்த காலத்தின் ஆளும் கட்சியியினை நான் எதிர்க்கவில்லை,கடந்த கால ஊழலுக்கே நான் எதிரானவர். ஊழல் இறுதி நிலையினை அடைந்து விட்டது. வெட்கமேயில்லாத அளவு ஊழல். ஆகவே நான் அதனை எதிர்த்து நின்று ஊழலுக்கும் குற்றத்திற்கும் எதிராகப் பேசினேன். நான் இதனை செய்திருக்க வேண்டும் என்றே எண்ணுகின்றீர்கள் அல்லவா? அதைத்தான் செய்தேன். மக்களிடம் சோம்பலும் செயலற்ற நிறைவும் காணப்பட்டன. அவர்கள் அனைவருமே ஒரே மாதிரி ஊழல் நிறைந்தவர்தாம் என்று கருதி வாக்களிக்க விருப்பமின்றி இருந்தனர். அப்போது நான்," நிலையான ஆட்சிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். மாற்றம் தேவை" என்று கூறினேன். எந்தக் கட்சியாயினும் இதையே தான் கூறுவேன். மக்களை வாக்களிக்க தூண்டுதலில் என்ன தவறு? இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரின் விருது எங்களுக்கு கிடைத்தது. பாரபட்சமாக இருந்திருந்தால் அவ்விருதினை தந்திருக்க மாட்டார்கள்.

மக்கள் என்னிடம் சில சமயங்களில்,"தாங்கள் சுற்றுப் பயணம் செய்கையிலும், விழாக்களில் கலந்து கொள்ளும் போதும் ஏன் ஊழல் மிகுந்தவர்கள் உங்களிடம் மேடையில் வருகின்றனர்? அவர்களை நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும்" என்று கூறுகின்றனர்."அது ஓர் மருத்துவமனையினைத் திறந்து வைத்து, அதற்குள் நோயாளிகள் வரக் கூடாது என்று கூறுவது போன்றதாகும்" என்றே நான் பதிலளிக்கின்றேன். ஊழல் நிறைந்தவர்கள் என்னிடம் வராமல் வேறெங்கு செல்வார்கள்? ஆகவே அனைத்து ஊழல் மக்களையும் என்னிடம் அழைத்து வாருங்கள்,நான் அவர்களிடம் பேசுகின்றேன்.  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றியடைகின்றேனா என்று பார்க்கலாம்.கடந்த காலத்தில் எப்போதும் என்றில்லை, பலமுறைகள் நல்ல முறையில் நடந்திருக்கின்றது.(சிரிப்பு). அதில் மேலும் உழைக்க விரும்புகிறேன் அனைத்து ஊழல் அரசியல்வாதிகளும் என்னிடம் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

இறுதியாக ஒன்று கூற விரும்புகிறேன். நாம் அரசியலை ஆன்மீகமயமாக்க வேண்டும். இன்று அரசியல் வணிகமாகி விட்டது, அதில் சேவை என்பதே இல்லை. மக்களை பற்றிய கவலையே இல்லாது ஒரு தொழிலாகி விட்டது. ஏதேனும் ஒன்று உங்கள் தொழிலாகி விட்டால் அதுவே முக்கியமாகி விடும், மக்கள் மற்றும் சமுதாயம் என்பவற்றினை பற்றிய முக்கியத்துவம் குறைந்து விடும். ஆகவே கருணை, அக்கறை, மக்களைப்  பற்றிய விசாரம் ஆகியவற்றுடன் அரசியல் இருக்க வேண்டுமெனில், அரசியல்வாதிகள்  மகாத்மா காந்தி மற்றும் அவரது தலைமுறையினரைப் போன்று ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டும்.

இங்கும் லீ கோன் ஏவ் போன்று பல சிறந்த தலைவர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்திலிருந்தே தலைவர்கள் தங்கள் முழு மனதையும் கவனத்தையும் தங்கள் நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். அதனால் தான் சிங்கப்பூர் நன்கு வளர்ச்சியடைய முடிந்தது. சிங்கப்பூர் வீழ்ந்து விடும், மீண்டும் மலேசியாவையே வந்தைடையும் என்று மலேசியா எதிர்பார்த்து கொண்டிருந்தது. ஆனால் அவ்வாறு இல்லை, அரசியல் தலைவர்களின் அர்ப்பணிப்பால் சிங்கப்பூர் நன்கு வேரூன்றி வளர்ந்தது. அதனால் தான் அரசியல் ஆன்மீகமயமாக்கப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன். அரசியல் ஒரு வியாபாரம் அல்லது தொழில் போன்றிருக்கக் கூடாது. ஓர் சமுதாயத் தொண்டாக இருக்க வேண்டும். இதை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? 

இரண்டாவதாக சமயத்தினை மதச் சார்பற்றதாக ஆக்குவது. ஒவ்வொரு சமயத் தலைவரும்  தங்கள் சமயத்தவர் அல்லது ஹிந்துக்கள் அல்லது புத்த மதத்தினர் அல்லது கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கர் என்றில்லாமல் உலக மக்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். நான் மட்டுமே சுவர்க்கத்திற்கு செல்வேன், மற்றவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று கூறும் மனிதர் மக்களுக்கு ஆபத்தானவர். அத்தகையவர் அனைவருக்கும் நரகத்தை உருவாக்குபவர்கள். எனவே சமயத்தை மதச் சார்பற்றதாக்க வேண்டும்.

மூன்றாவதாக வணிகத்தினை சமுதாயமயமாக்க வேண்டும். இதன் சாரம் என்னவென்றால், ஒவ்வொரு வியாபாரியும் பெரு நிறுவன சமூகப்பணி செய்ய வேண்டும். கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். என்ன நினைக்கின்றீர்கள்? அவர்கள் தங்கள் வருவாயில் 5 முதல் 10 சதவீதம் சமூகத்திற்கே திருப்பித் தர வேண்டும். உண்மையில் அது ஓர் முதலீடு போன்றது. மக்களுக்குப் பொருள் வாங்கும் திறன் இல்லையெனில் வியாபாரமும் கீழிறங்கி விடும். நெறியற்ற முறை வணிகத்தால் சமூகத்தினை வறுமையாக்கினால் வெகு விரைவில் வணிகம் வீழ்ந்து விடும்.ஆகவே சிறந்த உலகையும் சிறந்த வருங்காலத்தையும் உருவாக்க சமயத்தை மதச் சார்பற்றதாக்கி, அரசியலை ஆன்மீகமாக்கி,வணிகத்தினை சமூக மயமாக வேண்டும். வாழ்த்துக்கள் !

அறிவியலும் ஆன்மீகமும் என்று எடுத்துக் கொண்டால், இன்றிருக்கும் அறிவியலில் மற்றும் அறிவியல் கல்வியில் என்ன மாற்றம் நிகழ வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள்?

பாரபட்சம். அறிவியலை பொல்லாங்கு தடை செய்தால் விரைவில் அது அழிந்து விடும். சாத்தியங்களுக்கு திறந்த மனதுடன் இருப்பதே அறிவியலின் அடிப்படை. பிற ஆராய்ச்சியாளர் களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்காமலோ அவற்றைக் காணாமலோ பாரபட்சமாக இருந்த விஞ்ஞானிகளின் தோல்விகளைப் பற்றி வரலாறு கூறுகின்றது. அத்தகைய விஞ்ஞானிகளின் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளனர். இது வரலாற்றில்  இருக்கிறதல்லவா? ஆம்! பொல்லாங்கு நீக்கப்பட வேண்டும். அனைத்து சாத்தியங்களுக்கும் திறந்த மனதுடன் இருப்பதே அறிவியல் திறன் கொண்ட மனம்.

இரண்டாவதாக உற்சாகம் மற்றும் உள்ளுணர்வு. எதையும் செய்வதற்கு உற்சாகமின்றி இருந்தால் அனைத்துக் கல்விக்கும் என்ன பயன்? உயர் கல்வியுடன் எதையும் செய்யாமல் வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டு தொலைக்காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன பயன்? கல்வியும் அதைப் பயன்படுத்தும் உற்சாகமும் இருக்க வேண்டும். உள்ளுணர்வு,கண்டுபிடிப்பு, உற்சாகம் இவை தாம் ஓர் விஞ்ஞானி மற்றும் கலைஞரின் முக்கியப் பண்புகள்.

ஹிந்து சமயத்தில் ஏன் பல கடவுள்களை வழிபடுகிறோம்? அதற்குப் பின்புலத்தில் ஏதேனும் அறிவியல் காரணம் உள்ளதா?

உங்கள் உடலில் மொத்தம் எத்தனை குரோமோசோம்கள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரே ஓர் செல் எவ்வாறு பல பாகங்களை கொண்ட உடலாக வளர்ந்தது என்று ஆச்சரியப் பட்டிருக்கின்றீர்களா? ஏனெனில் ஒரே செல் அவ்வாறு உருவாகுமாறு வடிவமைக்கப் பட்டிருக்கின்றது.

ஒரு கேக் கடைக்கு சென்றால் எத்தனை வகையான கேக்குகள் விற்கப்படுகின்றன? ஒரே ஒரு கேக் தான் இருக்கிறதா என்ன? ஏன்? ஏனெனில் பன்முகத் தன்மையை விரும்புவது ஆத்மாவின் இயல்பு. இறைமை நீங்கள் ஒரே வகை பழத்தையே விரும்ப வேண்டும் என்று எண்ணியிருந்தால், வாழைப் பழத்தை மட்டும் படைத்து அனைவரும் அதை மட்டுமே உண்ண வேண்டும் என்று நிர்ணயம் செய்திருக்கும். இல்லை. கடவுள் விரும்புவது பன்முகத் தன்மையினையே. மெய்யுணர்வும் அதையே விரும்புகிறது. ஒரே கோதுமையிலிருந்து பல வகை இனிப்புக்களைச் செய்கிறோம். அரிசியிலிருந்து இட்லி, புலாவ் போன்ற பல வகை உணவுகளை செய்கின்றோம். ஏன்? ஏனெனில் இயற்கை பன்முகத் தன்மையினை விரும்புகின்றது ! பன்முகத் தன்மையினை விரும்பும் கடவுள் தான் மட்டும் தினமும் ஒரே வடிவில் வருவாரா என்ன? கடவுளும் தன்னைப் பல வழிகளில் வெளிப்படுத்திக் கொள்ளவே விரும்புவார். பன்முகத் தன்மையினை விரும்பும் கடவுள் தன்னைப் பல உருவங்களில் வெளிப்படுத்திக் கொண்டார் என்றே வேத காலத்தில் வாழ்ந்த பழமையான ஹிந்துக்கள் கருதினர். எனவே 108 பெயர்கள், 108 வடிவங்கள் அல்லது 1008 பெயர்கள் 1008 வடிவங்கள் என்று வெளிப்படுத்தப்பட்டன. ஆனால் ஒரே தெய்வம் தான்.

அது போன்றே சூரியனின் கதிர்கள் ஒன்றா பலவா? ஒரே சூரியன் தான் ஆயினும் அதன் கதிர்கள் ஒரு முப்பட்டைக் கண்ணாடியின் வழியே செல்லும் போது ஏழு வண்ணங்கள் (VIBGYOR) தெரிகின்றன. அது போன்று ஒரே பரமாத்மா அல்லது பரப்ரம்மன் - ஒரே தெய்வம் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக் கொள்கின்றது. ஒரு கத்தோலிக்க தேவாலயத்திற்கு சென்றால், கருணை அல்லது சிகிச்சைக்கான பீடம் உள்ளது. அல்லவா? ஒரே புனித மேரி ஒரே ஏசு கிறிஸ்து ஆனால் பல பீடங்கள் உள்ளன. இதைப் பழமையான தேவாலயங்களில் காணலாம். ஏன்? பல பயன்களுக்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அது போன்று இந்த அரங்கில் பல நாற்காலிகள் மேஜைகள் கதவுகள் மற்றும் மேடை அனைத்தும் ஒரே மரத்தால் செய்யப்பட்டுள்ளன. நீங்கள் மேடையை தரையாகவோ, கதவை நாற்காலியாகவோ பயன்படுத்த முடியாது. ஆகவே நடைமுறைப் பயன்பாட்டிற்கு அவை வேறு வேறாக இருக்கின்றது. அது போன்று ஹிந்து பாரம்பரியத்தில் "ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி " - அதாவது ஒரே கடவுள் ஆனால் வெவ்வேறு  நோக்கங்களுக்காக பல்வேறு வடிவில்  உணரப்படுகின்றது. தடைகள் ஏற்பட்டால் யானை முக கணேசரை வணங்குகிறீர்கள். ஏனெனில் யானை தடைகள் எத்தனை இருந்தாலும் தன் பாதையை மாற்றிக் கொள்ளாது. வலிமையுடன் நடந்து செல்லும். தடைகள் இருந்தால் கணேசரை வணங்குவது ஏனெனில் அந்த ஆற்றல் உங்களுக்கேற்படும் தடைகளைத் தாண்டிச் செல்ல உதவும். 

இந்த பூமியிலுள்ள அனைத்து மரபணு குறியீடுகளையும் ஒரே ஒரு மனித டி என் ஏ  இழை தன்னில் உள்ளடக்கியுள்ளது. மனித டி  என் ஏ  இழையிலிருந்து பூமியிலுள்ள எந்த விலங்கையும் உருவாக்கலாம், ஆனால் மாறாக செய்ய முடியாது.(சிரிப்பு) இதன் பொருள் என்னவென்றால், உங்களுக்குள் இந்த அனைத்து அதிர்வலைகளும் உள்ளன என்பதேயாகும். நமது முன்னோர் மிக புத்திசாலிகள். கடவுள்களின் மற்றும் பெண் தெய்வங்களின் சின்னங்களை பற்றி ஒரு சிறிய கையேடு எழுதியுள்ளேன்.அதைப் படியுங்கள். பிரமாதமாகவும் வசீகரமாகவும் உள்ளது. 

ஓர் சிறிய குழந்தை கூட இந்தக் கேள்வியை கேட்கும். சுண்டெலி எதைக் குறிப்பிடுகிறது? தர்க்கம் என்பதைக் குறிக்கின்றது. சுண்டெலி வலையைக் கடிக்கும். அதுவே தர்க்கம். தர்க்கத்தின் மீது ஞானம் சவாரி செய்கின்றது- அதுவே யானை கணேச பகவான். அது போன்று தெய்வத் தாய் புலியின் மீது சவாரி செய்கின்றாள். புலி கொடிய மிருகம்.கொடூரம் ஒரு புறமும், தெய்வத்தாயின் மென்மை மற்றொரு புறமும் ஒன்றிணைந்து காணப்படுகின்றன. எதிரெதிர் பண்புகள் ஒன்றுக்கொன்று நிறை செய்கின்றன. கொடுமையினை கருணை வெற்றி காணும் போது, - கொடிய குணத்தினை  கருணை முற்றிலும் கட்டுப்படுத்தும் நிலையில் - வெல்வது தாய்மை. கொடூரத்தை இன்னொரு கடுமையால் வெல்ல முடியாது. தாய்மை, பொறுமை அன்பு ஆகியவையே வெற்றி கொள்ளும். அதுதான் தெய்வத்தாய் புலி அல்லது சிங்கத்தின் மீது சவாரி செய்வதன் குறியீடு.

சிங்கம் மிக சக்தியுள்ளது. எப்போதெல்லாம் சமுதாயத்தில் கொடுமையான சக்தி பரவுகிறதோ அப்போதெல்லாம் கருணை என்னும் மிகச் சிறந்த தனிமம் கொடுமையை வெற்றி கொண்டு அதன் மீது சவாரி செய்கிறது. இதைத்தான் புலி அல்லது சிங்கம் பெண் தெய்வத்தினை சுமந்து செல்வது குறிக்கின்றது. இதில் நீங்கள் ஆழ்ந்து சென்றால் ஒவ்வொரு சின்னமும் திடுக்கிட வைப்பதையும் மிகுந்த பயனுள்ளதாக இருப்பதையும் காண்பீர்கள். 

எதிர்பார்ப்பை குறைத்துக் கொள்: அதிகமாகப் புரிந்து கொள்

செவ்வாய்க்கிழமை 31 மார்ச் 2015                                   

சிங்கப்பூர்

(எலிகளின் ஓட்டப்பந்தயத்தை தாண்டி என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)


கேள்வி பதில்கள்

சற்று நேரத்துக்கு முன்பு, எல்லாமே நாம் பார்க்கும் விதத்தில் உள்ளது என்று கூறினீர்கள். எனவே நாம் பார்த்து அறிந்து கொள்ளும் சக்தியை எப்படி மேம்படுத்த முடியும்?

நாம் பார்த்து அறிந்து கொள்ளும் சக்தியை, சரியான உணவு, தியானம் மற்றும் உடற் பயிற்சிகளால் மேம்படுத்திக் கொள்ள முடியும். நம் உடலின் இரத்த ஓட்டம் மற்றும் ப்ராண சக்தியின் ஓட்டம் இதில் பெரும்பங்கு வகிக்கிறது. நன்றாக உண்டுவிட்டு ஒரு வேலையும் செய்யாமல் ஓரிடத்திலேயே அமர்ந்திருப்பதாக வைத்துக் கொள். நீ ஒரு உடற்பயிற்சியும் செய்வதில்லை, அகலத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறாய் என்று வைத்துக் கொள். அப்போது பார்த்து அறிந்து கொள்ளும் சக்தி மேக மூட்டத்தில் மூடியது போலிருக்கும். உடற்பயிற்சியால் இரத்த ஓட்டம் மற்றும் ப்ராண சக்தியின் ஓட்டம் மேம்படும்.சரியான உணவால் நம் பார்வையையும், நம் உள்ளுணர்வையும் மேம்படுத்திக் கொள்ள முடியும். சரியான மூச்சும் தியானமும் இதற்கு உதவும். 70 %  வரை இதன் பங்கு உள்ளது என்று நான் சொல்வேன்.

சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்கள் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில், மக்களிடையே சகிப்புத் தன்மையை எப்படி ஊக்குவிக்க முடியும் ?

நீ இந்தக் கேள்வியைக் கேட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய கவலையும் இது தான். இரவு பகலாக, நானும் மக்களை இந்த பெரும்பான்மை, சிறுபான்மை வேறுபாடுகளிலிருந்து எப்படி விடுவிக்க முடியும் என்ற சிந்தனையில் இருக்கிறேன். வேறுபாடுகளை நீக்கி, மக்களனைவரும் ஒரே மனித குலத்தைச் சேர்ந்தவர்கள்,ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக வாழ வேண்டும். கல்வியறிவின் மூலம் இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.

இனவெறி / மதவெறி இன்றைய உலகின் மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இன வெறியர்கள் மற்றும் வன்முறையாளர்கள், நம்மை விமான நிலையங்களில் காலணிகளை / செருப்புகளைக் கழற்றி வைத்து சோதனைக்குள்ளாக்கி விட்டார்கள். வன்முறையாளர்களின் செயல்களால், மாதா கோவில்களிலும் மற்ற வழிபாடு செய்யும் இடங்களிலும் கழற்றி வைக்காத காலணிகளை, பெல்ட்களை, கோட்டுகளை விமான நிலையங்களில் சோதனையின் போது கழற்றி வைக்க வேண்டியிருக்கிறது. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய நிலைமையாகும்.

எல்லா நாடுகளிலும் வேற்றுமையில் ஒற்றுமை பற்றிய அறிவு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதை நம் கல்வித் திட்டங்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கப்பூர் ஒரு அருமையான உதாரணமாக இருக்கிறது. இங்கு இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் மற்றும் புத்தர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து வாழ்கிறார்கள். இதற்காக இந்த நாட்டின் முந்தைய பிரதம மந்திரியான திருவாளர் லீ க்வான் யூக்கு வணக்கம் செலுத்த வேண்டும். அவர் தான் உறுதியாக நின்று “நாமனைவரும் ஒன்று சேர்ந்து இங்கு வாழ வேண்டும்” என்று சொன்னார். இது ஒரு பெருமைக்குரிய உதாரணமாகும்.

எனக்கு “சகித்துக் கொள்வது” என்ற வார்த்தை பிடிக்காது. ஏன் என்று அறிவீர்களா? சகித்துக் கொள்வது என்றால் உங்களுக்குப் பிடிக்காத ஒன்றை நீங்கள் சகித்துக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். உதாரணமாக உங்களுக்கு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களையும், முகமதியர்களையும் பிடிக்காது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை சகித்துக் கொண்டு வாழ்கிறீர்கள். இது சரியல்ல. 

நாம் ஒருவரோடு ஒருவர் அன்போடு, மற்றவர்களின் நல்ல குணங்களைப் பாராட்டி, மரியாதையோடு நடந்து கொள்ள வேண்டும். இந்த உலகம் பல மலர்களால் ஆன ஒரு பூங்கொத்து போன்றது. இந்த பூமியில் பல வகையான பாரம்பரிய பழக்கவழக்கங்கள் உள்ளன. ஏதாவது ஒரு கலாசாரம் அழிந்தாலும், அது இந்த பூமியின் பாரம்பரியத்துக்கு நஷ்டமாகக் கருதப்படும். உங்களுக்குத் தெரியும். சமீபத்தில் ஈராக் நாட்டில் நடந்த யெஸிடிஸ் இனமக்களின் படுகொலை 73வது தடவையாக நடந்தது. அதற்கு முன்பாக 72 தடவைகள் அப்படிப் பட்ட படுகொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. அவர்களுடைய ஜனத்தொகை 2 கோடி 70 லட்சம் இருந்திருக்கிறது. இன்று அவர்களுடைய ஜனத்தொகை குறைந்து 10 லட்சமாகி விட்டது. அவர்களில் சிலர் என்னிடம் வந்து அவர்களுடைய இனத்தைச் சேர்ந்த 15000 பேர் சிஞ்சார் மலைப் பகுதியில் உணவு மற்றும் நீர் இல்லாமல் மாட்டிக்கொண்டு தவிப்பதாக சொன்னார்கள். யாரும் எங்களுக்கு உதவி செய்ய வில்லை. தயவு செய்து நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

எனவே வாழும் கலையைச் சேர்ந்த தொண்டர்கள் சிலர் சேர்ந்து, அவர்களுக்கு உதவி செய்வதற்காக நாலே வாரத்தில் 120 டன் எடையுள்ள தானியங்களையும் மற்ற உணவுப்பொருட்களையும் சேகரித்து விமானம் மூலம் அவர்களுக்குக் கிடைக்கச் செய்தார்கள். அப் பொருட்களை விமானத்தில் ஏற்றக் கூட யாரும் முன் வர வில்லை. எனவே நான் அமெரிக்காவுக்குச் சென்று அங்கு அரசுத் துறையில் பேசினேன். அவர்கள் ஈராக் அரசோடு பேசி அவர்களை குர்டிஸ்தான் அரசோடு பேசச் செய்து நிவாரணப் பொருட்களை யெஸிடி இன மக்களுக்கு அனுப்பி வைக்கச் செய்தோம். 15000 பேர்களின் உயிரைக் காப்பாற்ற முடிந்ததை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். நிவாரணப் பொருட்கள் அவர்களுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும்.

இந்த சிறுபான்மையான யெஸிடி இன மக்களிடம் தங்கள் கலாசாரத்தை, பாரம்பரியப் பழக்க வழக்கங்களைக் காத்து வளர்க்கும்படிக் கேட்டுக் கொண்டேன். அவர்களுடைய கலாசாரம் 5000 வருடங்களாக காக்கப்பட்டிருக்கிறது. இது உலகப் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். அவர்களை கத்தி முனையில் அச்சுறுத்தி மதமாற்றம் செய்வதில் ஒரு அர்த்தமும் கிடையாது. இன்று உலகை வன்முறையால் துன்புறுத்தும் மக்களுக்கு இதை உறுதியாகச் சொல்ல வேண்டும்.நாமனைவரும் ஒன்று சேர்ந்து, இப்படிப்பட்ட மாற்றத்தை எப்படிக் கொண்டு வரலாம் என்று சிந்திப்பது அவசியம். நீங்களனைவரும் என்ன சொல்கிறீர்கள் ? மத சம்பந்தமான கல்வியறிவு அவசியம். ஆனால் அது வெறியாக மாறக் கூடாது. மத வெறியர்களிடமிருந்து மக்கள் ஒதுங்க வேண்டும்.

என்னைச் சுற்றியிருப்பவர்களின் எதிர்பார்ப்புகளை எப்படி நிறைவேற்றலாம்? என் பிரியமானவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் எப்படி மகிழ்ச்சியாக இருக்கலாம் ?

நீ 100 % உன்னால் முடிந்ததைச் செய். அவர்கள் அதற்கு மேலே எதிர்பார்த்தால்“ என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். என்னால் முடியாது “ என்று சொல். நீ ஒரு டாக்டராக இல்லாத போது, யாராவது அவர்களுடைய நோயை குணப்படுத்த சொன்னால், நீ என்ன செய்வாய்?அவர்களுடைய திருப்திக்காக அவர்களுக்கு ஊசி போடுவாயா? இல்லை! “அன்புக்குரியவரே ! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் “ என்று நேர்மையாக அவர்களிடம் சொல்ல வேண்டும். அவர்களுக்குப் புரிந்துவிடும். நீ 100% முடிந்ததை செய். அப்படி தான் மற்றவர்களுடைய தேவையை நிறைவேற்ற வேண்டும். இப்போது நீ மற்றவர்கள் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறாய். அப்படி அவர்கள் செய்யாவிட்டால் வருந்த வேண்டாம். அவர்கள் மீது கருணை காட்டு. அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்வார்கள் என்று நம்பு. எப்படி எடுத்துச் சொல்வது என்று அவர்கள் அறிய வில்லை. எல்லோரும் “நன்றி” என்று சொல்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒரு வேளை அவர்கள் உனக்கு நன்றி சொல்லா விட்டால், அவர்களுக்கு அத்தகைய பண்பாடுகளை யாரும் சொல்லிக் கிடைக்க வில்லை என்று உணர்ந்து அவர்களிடம் கருணையோடு நடந்து கொள். 

நீ அந்த நிகழ்ச்சிக்கப்பால் பார்க்கவேண்டும்.அதை ஒரு பெரிய அளவில் எடுத்துக் கொள். இவ்வுலகில் ஒருவருடைய பழக்க வழக்கங்கள், அவர்களுடைய வளர்ப்பைப் பொறுத்திருக்கிறது. அவர்களுடைய கல்வியையும், அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகளையும் பொறுத்திருக்கும். அவர்களிடம், இந்த மூன்று விஷயங்களில் ஏதாவது குறைபாடுகள் ஏதாவது இருந்தால் அவர்களுடைய பழக்க வழக்கங்களில் வெளிப்படும். எனவே அவர்களைப் பழி சொல்வதை கைவிட்டு அவர்களைப் பார்த்து, அவர்களுக்கு உனக்கு கிடைத்ததை போன்ற கல்வி கிடைக்கவில்லை என்றுணர்ந்து மன்னித்துவிடு. உனக்கிருக்கும் உணர்திறன் அவர்களிடம் வளரவில்லை. நீ மற்றவர்களுடைய தேவைகளை உணர்கிறாய். 

அவர்களிடம் அந்தத் திறமை இல்லை. யாராவது உனக்கு ஏதாவது காரியம் செய்வதாக வைத்துக் கொள். நீ அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறாய். நீ செய்யும் உதவிக்கு யாரோ திருப்பி நன்றி சொல்லாவிட்டால், அவர்களுக்கு போதிய கல்வி அறிவு இல்லை. பண்பாடு இல்லை என்று விட்டு விடு. அவர்களைப் பழிக்க வேண்டாம். இதைத் தான் நான் உனக்குச் சொல்வேன். நீ அவர்களைப் பழிக்கும் போது உனக்கு கசப்புணர்வு ஏற்படுகிறது.அவர்களுக்குப்  போதிய கல்வியறிவு இல்லாததால் தான் அவர்கள் அப்படி நடந்து கொண்டார்கள் என்று நீ விட்டுவிட்டால் உன் மனம் அமைதியடையும். நீ என்ன சொல்கிறாய்?

விஞ்ஞானத்துக்கும் ஆன்மீகத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய உங்கள் கருத்தைக் கேட்க விரும்புகிறோம்.

இது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். கீழைநாடுகளில் விஞ்ஞானமும் ஆன்மீகமும் இணைந்து செல்கின்றன. நீ பகவத் கீதையையோ, உபநிஷத்துக்களையோ படித்தால், அவை ஞான விஞ்ஞானம் என்று சொல்வதை நீ அறிய முடியும். அதன்படி விஞ்ஞானமும் ஆன்மீகமும் இணைந்து செல்வதைப் பார்க்கலாம். உண்மையில், ஆறு வகையான தத்துவ சாத்திரங்களில்,முதல் மூன்றும் பதார்த்தங்களை பற்றிய விஞ்ஞானமாகும். அதன்படி நீ ஒரு அணுவை முழுமையாக அறிந்து கொண்டால், நீ முக்தியடையலாம். பதார்த்த ஞானம் மோட்சமாகும். நீ ஒரு அணுவை முழுமையாகப் புரிந்து கொள்ளும் போது மோட்சமடைவாய். கடவுளைப் பற்றிய கருத்துக்களை தத்துவ சாத்திரங்கள் பேசவே இல்லை. வைசேஷிகம், நியாயம் மற்றும் சாங்க்யம் என்பவை மூன்று தர்ஷணங்கள் என்று சொல்லப் படுகின்றன. நம் உடல் எட்டு பதார்த்தங்களால் ஆனது. – நீர், பூமி, காற்று, நெருப்பு, வெட்டவெளி (ஆகாயம்), மனம், அறிவு மற்றும் நினைவாற்றல் இவைகளால் ஆனது என்று சொல்லப்படுகிறது. இவையனைத்தும் ஆத்மாவால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதில் மூன்று கண்களுக்குத் தெரியாதவை. திடப்  பொருள்களாக இல்லை. அவை மனம், அறிவு மற்றும் நினைவாற்றல் எனப்படும். மற்ற ஐந்தும் நம்மால் பார்த்து உணரமுடிந்த பொருள்களாகும். அவை பூமி, காற்று, நீர், நெருப்பு மற்றும் வெட்டவெளி எனப்படும்.

இந்த எட்டு பதார்த்தங்களையும் நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.அப்போது நீ அந்த நிலையான ஒன்றை அறிய முடியும். அது தான் உன் ஆத்மா. உலகில் எல்லாமே ஆத்மாவால் உருவானவை. (இந்த எட்டு பதார்த்தங்களும் ஆத்மாவால் நிறைந்திருக்கின்றன. இந்த ஒன்றை நீ புரிந்து கொள்வது, சமாதி அல்லது தியானம் என்றழைக்கப் படுகிறது. நீங்கள் ப்ரொஃபஸர் துர் என்பவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அவர் உலகில் ஒரு தலை சிறந்த அணு விஞ்ஞானியாவார். ஒரு முறை அவர் என்னிடம் சொன்னார். “குருதேவா! நான் இப்போதெல்லாம் விஞ்ஞானத்தைப் பற்றிப் பேசும் போது, மக்கள் நான் தத்துவ ஞானத்தைப் பற்றிப் பேசுவதாக நினைக்கிறார்கள்.” (பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்) அவர் சொன்னார். “ நான் 40 ஆண்டுகளாக பதார்த்தங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கடைசியில் தெரிந்து கொண்டது இது தான். பதார்த்தம் என்று ஒன்றுமே கிடையாது. எல்லாமே ஒரு அலைத் தன்மை தான். எல்லாமே அலைகளால் ஆக்கப்பட்டவை தான்.

எனவே குவாண்டம் பௌதீகத்தைப் பற்றிச் சொல்லும் போது வேதாந்தம் படிப்பதைப் போலிருக்கிறது. வேதாந்தம் படிக்கும் போது “ ஓ! பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இதைப் பற்றித் தான் சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிவாய். காண்பதெல்லாம் ஒன்றுமில்லை. வெறும் தோற்றம் தான். ஒரு கனவு போன்றது. உண்மையல்ல. வெகு காலத்துக்கு முன்பே அவர்கள் இதை சொல்லியிருக்கிறார்கள். சூரியன் உதிப்பதும், மறைவதும் ஒரு தோற்றம் தான் என்று சொல்லியிருக்கிறார்கள். சூரியன் பூமியைச் சுற்றுவதில்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
நீங்கள் இந்து கோவிலுக்குச் சென்றால் அங்கு ஒன்பது கிரகங்களைப் பிரதிஷ்டை செய்திருப்பதை காணலாம். சூரியன் நடுவிலும், மற்ற கிரகங்கள் அதைச் சுற்றியும் இருப்பதைப் பார்க்கலாம். கலீலியோ தான் பூமி உருண்டை என்பதை கண்டு பிடிக்கவில்லை. வேத காலத்தில் பூமியைப் பூகோளம் என்றழைத்தார்கள். உருண்டை வடிவானது என்பது இதன் பொருள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி உருண்டை வடிவம் கொண்டது என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள்.

கம்போடியாவில் ஒரு பழைய கோவில் உள்ளது. கி.பி. 200 ல் கட்டப்பட்டது. அங்கு நீங்கள் விஷ்ணு அவர் கையில் உருண்டை வடிவமான பூமியைத் தூக்கிக் கொண்டிருப்பது போன்ற சிலையைக் காணலாம். எனவே பூமியின் வடிவத்தை மக்கள் பல காலமாக அறிந்திருந்தார்கள். விஞ்ஞானமும் ஆன்மீகமும் ஒன்றோடொன்று முரண்பாடானவை அல்ல. விஞ்ஞானம் என்றால் இது என்ன? என்று தெரிந்து கொள்வது. பதார்த்த அறிவைப் பெறுவது. ஆன்மீகம் என்றால் நம்மை பற்றி அறிவது. நான் யார்? என்ற கேள்விக்கு விடை தேடுவது. காண்பதெல்லாம் எந்தப் பொருளால் ஆனது என்பதை அறிவது. இது தான் ஆன்மீகம். எனவே விஞ்ஞானமும் ஆன்மீகமும் ஒன்றை ஒன்று நிறைவு செய்பவையாகும். கீழைநாடுகளில் எந்த விஞ்ஞானியும் கொலை செய்யப்படவில்லை. அப்படி நடந்ததே கிடையாது. விஞ்ஞானிகள் சமூகத்தினரால் ஊக்குவிக்கப்பட்டார்கள்.

குருதேவா ! இறப்புக்குப் பின் என்ன ஆகிறது என்பதைப் பற்றி பல விதமான மனிதர்கள் பல விதமான கருத்துக்களைச் சொல்கிறார்கள். இப் பிறவியில் நடந்தவைகளை நாம் இறப்புக்குப் பின் நினைவு வைத்திருப்போமா? அப்படி இல்லையென்றால் இப்பிறவியின் செயல்களால் என்ன பயன் ?

சொல். 2014 மே மாதம் 29ம் தேதி காலை என்ன சிற்றுண்டி எடுத்துக் கொண்டாய் ? உனக்கு நினைவு இல்லை. இல்லையா ? (குறும்பாக) அப்போது காலை சிற்றுண்டி எடுத்துக் கொண்டதால் என்ன நன்மை கிடைத்தது ? (பார்வையாளர்கள் பெரிதாகச் சிரிக்கிறார்கள்). பார். வாழ்க்கையில் நாம் பல செயல்களைச் செய்கிறோம். எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. 

ஒவ்வொரு நாளும் பல் துலக்குகிறோம். இல்லையா? 5 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் மாதம் 30 ம் தேதி என்ன பற்பசை உபயோகித்தாய்?எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கத் தேவையில்லை. சில செயல்களைக் கண்டிப்பாக நினைவில் வைக்க வேண்டும். நல்லது! இறப்பு என்பது இவ்வுலகை விட்டு ஒரு மறைந்திருக்கும் உலகுக்குச் செல்வது. நமக்குத் தெரியாத இவ்வுலகின் உண்மைகளைத் தொடுவது. இப்போது அதைப் பற்றிச் சிந்திக்கத் தேவையில்லை. நாம் இவ்வுடலை விடும்போது, இரண்டு கேள்விகள் நம் முன் வரும். நாம் எவ்வளவு ஞானமடைந்திருக்கிறோம்? நாம் எவ்வளவு அன்பு செலுத்தியிருக்கிறோம்? ஒரு நிமிட நேரத்தில், உன் வாழ்வில் நடந்த எல்லா நிகழ்ச்சிகளும், உன் மனதில் ஒரு திரைப்படம் போல வந்து செல்லும். நீ செய்த எல்லாமே வரும் – வருத்தத்தோடு அல்ல. அதில் நீ கற்றுக் கொண்டவைகளும் வரும். நீ எடுத்துப் போவது கற்றுக் கொண்ட பாடங்கள் மட்டுமே.

நிலைமையை ஏற்றுக்கொண்டு, முன்னேறு

திங்கள்கிழமை - 30-03-15, சிங்கப்பூர்



(நீ யார்? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டதின் தொடர்ச்சி)

நமது வாழ்க்கையில், நாம் அனுபவித்து வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு அர்த்தமும், முற்காலத்தில் நடந்து முடிந்த செயலின் விளைவு அல்லது அதன் முடிவு என்று தெரிகிறது ஆகையால் நீங்கள் நம்மை சுற்றி நடக்கும் செயலின் காரணத்தையும், அதன் விளைவையும் தொடர்புபடுத்தி பார்த்தீர்களானால், அமைதியாக இருக்க முடியும். உதாரணமாக, நீங்கள் எங்கோ சாலை விதிகளை மீறியதால் தண்டனை சீட்டு பெற்று கொண்டு அதை மறந்து விட்டீர்கள் என வைத்துகொள்வோம். உங்களுக்குள் என்ன நடக்கிறது. நீங்கள் சலனம் அடைகிறீர்கள் அல்லவா? ஆனால் நீங்கள் சாலை விதிகளை மீறிய காரணத்தையும், விளைவை நினைவுப்படுத்தி பார்க்கும் பொழுது என்ன நடக்கிறது? நீங்கள் மிக அமைதி அடைந்து, சூழ்நிலைகளை ஏற்று கொள்கிறீர்கள். அதன் பின் மனது எந்த சலனத்திற்கும், ஏன் என்ற கேள்விக்கும் இடமில்லாமல் இருக்கிறது.

நேற்று நாம் செய்த சில காரியத்தால் தான் இன்று சில விஷயங்களை அனுபவிக்கிறோம் என்பதை நாம் அறியும் பொழுது நமக்கு கோபம் வருவதில்லை. ஆகவே நீங்கள் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு முன்னேறி செல்லுங்கள். ஆன்மிக அறிவின் குறைவால் தான் நீ அமர்ந்து இது ஏன் அவ்வாறு நடந்தது? இது ஏன் எனக்கு நடந்தது? என்று அதிசயபடுகிறாய். இவ்வாறு நினைப்பது நல்லதல்ல. நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை யோசிப்பதை விட்டு நமது மனதை தோண்டி பார்த்து கொண்டிருக்கிறோம். இப்பொழுதோ, நாளையோ அல்லது இன்னும் பல வருடங்களுக்கோ பதில் கிடைக்க போவதில்லை. இந்த பயணம் ஆரம்பித்து விட்டதென்றால் நீ எதிர்பார்ப்பதை விட அதிக அளவிலான பலன்களை கொடுக்க வல்லது. இது தான் “விவேகம்”.

எது மாறுவது? எது மாறாதது? எது நிரந்தரமானவை? எது நிரந்தரமற்றவை? என உன் மனதில் பகுத்தறிந்து கொள்வது தான் “விவேகம்”. நாம் இரண்டு வகைகளால் ஆக்கப்பட்டிருக்கிறோம். ஒன்று மாறுவது, மற்றொன்று மாறாதது. சில வருடங்களுக்கு முன்பு எடுத்த உங்களது புகைப்படத்தை பாருங்கள். இப்பொழுது இருக்கும் உங்களை பாருங்கள். இரண்டும் பார்ப்பதற்கு ஒன்றாகவா இருக்கிறது? இல்லை!!!! இந்த உடல் தொடர்ந்து மாறி கொண்டே இருக்கிறது என்பது நமக்கு தெரியும். வருடத்திற்கு ஒரு முறை உடலில் உள்ள செல்கள் அனைத்தும் மாறுகின்றன. உடலில் உள்ள ரத்தம் இருபத்திநான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மாறுகின்றன. மாதத்திற்கு ஒரு முறை தோல் மாறுகிறது. எலும்பு, மஜ்ஜைகள் மற்றும் வயிற்று பகுதியின் உட்புற பூச்சு ஐந்து நாட்கள் ஒரு முறை மாறுகிறது. 

ஒரு வருடத்திற்குள் நம் உடம்பில் பல விஷயங்கள் மாறுகின்றன. இதேபோல் எண்ணங்களும், உணர்ச்சிகளும் மாறுகின்றன. ஆகையால் எல்லாமே மாறுகிறது என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது? நம்முள் “ஏதோ ஒன்று” மாறாமல் இருப்பதை வைத்து தான் தெறிந்து கொள்ள முடிகிறது. “அந்த ஏதோ” ஒன்று தான் நம் கவனத்தை கவரக்கூடியது. அது விரிவடைகிறது மற்றும் அது சுருங்குகிறது. நம்முள் ஏதோ ஒன்று விரிவடைவதையும் சுருங்குவதையும் தியானத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். அதை சுழ்நிலைகள் மற்றும் மற்றவர்களின் கட்டுபாட்டிற்கு விடுவதை விட, நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக யாராவது உன்னை புகழும் போது உன்னுள் என்ன நடக்கிறது? ஏதோ ஒன்று உன்னுள் விரிவடைவதை உணர்கிறாய். நீங்கள் தவறு செய்யாது இருக்கும் பொழுது, மற்றவர்கள் குற்றம் கண்டு பிடித்தார்கள் என்றால் உங்களுள் என்ன நடக்கிறது? உங்களுள் “ஏதோ ஒன்று” சுருங்குகிறது. உங்களுள் ஏதோ விரிவடைகிறது சுருங்குகிறது என்பது என்ன?

இதை பற்றி அறிந்து கொள்வது மிக பலனளிக்க கூடியது. அதுதான் உங்களுள் மாறாமல் இருப்பது. உங்களுள் எப்பொழுதும் மாறாமல் இருக்கும் ஒன்று தான் எப்பொழுதாவது விரிவடையவும், சுருங்கவும் செய்கிறது அது தான் நமது அனுபவம். மற்றவர்களின் வார்த்தை என்ற உதைபந்திற்கு ஆளாகாமல் நம்மில் ஏதோ ஒன்று விரிந்து சுருங்குவதை நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முக்கியம். உங்களுடைய மகிழ்ச்சியை நீங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது மிகவும் உன்னதமானது. அது தியானத்தின் மூலம் ஏற்படுகிறது. நம்முள் இருக்கும் ஏதோ ஒன்று விரிவடைவதையும், சுருங்குவதையும் மற்றும் சூழ்நிலை மற்றும் மற்றவர்களின் கட்டுபாட்டிற்கு விடுவதை விட நமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தியானம் உதவுகிறது என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். நம்முள் ஏதோ ஒன்று மாறாமல் நமது வாழ்க்கை முழுவதும் இருப்பது மற்றும் தொட்டு உணர கூடிய பொருளாக இல்லாமல் இருப்பதை பற்றி அறிந்து கொள்வது மிக பயனுள்ளதாகும்.அது தான் “நீ”. ஆகையால் மறுபடியும் அதே கேள்விக்கு வருவோம். 

எது உங்களது ஆரம்ப நிலை மற்றும் இந்த உடலை பிரிந்து நீங்கள் எங்கு செல்கிறீர்கள்? உடலை விட்டு ஏதோ ஒன்று பிரிந்து செல்கிறது. அதை எதனாலும் அழிக்க முடியாது. அதை எதனாலும் எரிக்க முடியாது, நனைக்க முடியாது, புதைக்க முடியாது மற்றும் இறப்பினால் இறக்காதது என்ற ஒரு பாடலை கேட்டீர்கள் நம்முள் இருக்கும் “ஏதோ ஒன்று” தான் அழிவிற்கு அப்பாற்பட்டது. இந்த உடல் அழிக்கப்பட்டு விட்டாலும் இதை அழிக்கவே முடியாதது. காற்றை உங்களால் அழிக்க முடியுமா? முடியாது. உங்களிடம் ஒரு குடம் இருக்கிறது. குடத்தினுள் வெற்றிடம் இருக்கிறது. அந்த இடத்தில் காற்று உள்ளது. நீங்கள் குடத்தை உடைத்து விடலாம். ஆனால் குடத்தினுள் இருந்த காலி இடத்தையோ அதுனுள் இருந்த காற்றையோ அழிக்க முடியுமா? முடியாது அல்லவா? ஆகவே அவ்வெற்றிடம் போல் தான் “நாம்”.

நாம் பெரிய செல்வக்குவியல் மேல், பிழைக்க தெரியாத ஏழையாக உட்கார்ந்து இருக்கிறோம். நம் வாழ்க்கை முழுவதற்க்கும் தேவையான பொக்கிஷம் இருந்தும் ஒன்றுமில்லாத விசயத்திற்க்காக துக்கப்பட்டு, புலம்பி, அழுது கொண்டிருக்கிறோம்.எது ஒன்று நம்மை துன்பம், மனவருத்தம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றிலிருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்கிறதோ, அதுவே மூல காரணமாய் இருக்கும் “ஞானம்”. நீங்கள் எல்லாம் இங்கு தான் உள்ளீர்களா? நான் மிக சுலபமாக தெளிவுபடுத்த முயற்சிக்கிறேன். ஆகையால் நீங்கள் இதை புரிந்து கொள்ளலாம், அல்லது அந்த ஞானம் நம் புத்திக்கு எட்டாது போய்விடும்.

வேதாந்த சொற்பொழிவுகளை கேட்க உட்கார்ந்தவுடன் நமக்கு தூக்கம் வந்துவிடுகிறது.ஏன்? என்று ஒருவர் கேட்டார். இந்த மாதிரியான சொற்பொழிவுகள் ரோசாப்பூ படுக்கை போன்றது. அது உள்மனதில் சௌகரியத்தை ஏற்படுத்துகிறது என்று மற்றொருவர் அதற்கு பதில் அளித்தார். நம்மகென்று சற்று நேரத்தை எடுத்து கொண்டு, காலாற நடந்து கொண்டு உங்களுக்குள் நான் யார்?, எனக்குள் நான் என்ன? என்ற கேள்வியை கேட்டு பாருங்கள். நீங்கள் ஒருவருக்கு கணவராகவோ, மனைவியாகவோ, மகளாகவோ இருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்குள் நீங்கள் வைத்திருக்கும் உறவு தான் என்ன? நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தேவை? என்று உங்களுக்குள் கேட்டு பார்க்கலாம்.  ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்தில் குறுகிய காலமே வாழபோகிறோம் மற்றும் இந்த உடலை திரும்ப இந்த பூமியில் விட்டு செல்கிறோம் என்பதை அறிகிறோம் அல்லவா?

ஆனால் எனக்குள் நான் யார்? இந்த மாதிரியான கேள்விக்கு பின் நமது வாழ்வு மற்றொரு உயர்ந்த நிலைக்கு உயர்வதும் மற்றொரு கோணத்தில் மாறி நம் வாழ்க்கை மலர்கிறது.
வாழ்க்கை என்பது ஆதியந்தம் இல்லாதது. நாடகத்தில் வரும் சில கதாபாத்திரங்களாக அல்ல, வாழ்க்கை தொடர்ச்சியானது. நாம் இந்த பிரபஞ்சத்திற்கு பல முறை வந்திருக்கிறோம். இதை சற்று நான் அறிந்திருக்கிறேன். மற்றும் நீங்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் இதை அறிய முடியாது என்று ஒன்றுமில்லை. நீங்களும் கூட இதை அறிந்து கொள்ள முடியும். ஆகையால் நான் சொல்வது போல் உங்களது மூலப்பொருளை பற்றி அறிந்து கொள்ளுங்கள். 

உங்கள் வாழ்க்கை 8௦-9௦ வயதுடன் முடிந்துவிடுவதல்ல. அது நிரந்தரமானது மற்றும் மிகவும் பேரின்பமானது. குழப்பங்கள் அனைத்தும் நம் வாழ்வில் ஒரு விளையாட்டை போன்று. ஆகவே நம் வாழ்வில் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் மிக பெரிய தோற்றத்தில் பார்க்க ஆரம்பித்தால், அது வேடிக்கையானது. அது போல் இருப்பது தான் உத்தமமானது. உங்களுடைய பிரச்சனைகளை என்னிடம் விட்டு செல்லுங்கள் என்று பெங்களூர் ஆசிரமத்திற்கு வருபவர்களிடம் நான் கூறுவது வழக்கம். எனது மாமியார் தான் எனது பிரச்சனை, அவர்களை இங்கு விட்டு செல்லவா? என்று ஒரு பெண்மணி கேட்டார்.மாமியாருக்கு என்ன பிரச்சனை என்று அவரிடம் கேட்டபின் நீங்கள் இருவரும் ஒன்றாக இங்கேயே தங்கி விடுங்கள் என்று கூறினேன். (கூட்டத்தில் உள்ள அனைவரும் சிரித்தார்கள்).

அடுத்த பத்து நாட்களுக்குள் நீங்கள் இறக்க போகிறீர்கள் என கற்பனை செய்து பாருங்கள். பின் யார் மேல் நீங்கள் பொறாமை கொள்வீர்கள்? யார் மேல் கோபம் கொள்வீர்கள்? மற்றும் உங்களுக்கு என்ன வேண்டும்? ஒவ்வொரு நாளும் நமது குறுகிய புத்தியால் எரிச்சல் அடையக்கூடியது, திடீரென்று நம் வாழ்கையில் மேல் உள்ள பிடிப்பை விட்டு நாம் மலர ஆரம்பித்து விடுகிறோம்.
நாம் பெரிய செல்வக்குவியல் மேல், பிழைக்க தெரியாத ஏழையாக உட்கார்ந்து இருக்கிறோம். நம் வாழ்க்கை முழுவதற்க்கும் தேவையான பொக்கிஷம் இருந்தும் ஒன்றுமில்லாத விசயத்திற்க்காக துக்கப்பட்டு, புலம்பி, அழுது கொண்டிருக்கிறோம். எது ஒன்று நம்மை துன்பம், மனவருத்தம் மற்றும் வெறுப்பு ஆகியவற்றிலிருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்கிறதோ, அதுவே மூலகாரணமாய் இருக்கும் “ஞானம்”.

நீங்கள் சம்பாதித்தவைகள், மற்றும் செய்த காரியங்கள் அனைத்தும் இங்கு விட்டுவிட்டு நீங்கள் சென்று விடுகிறீர்கள். அது புன்னகையாகவும் தன்னம்பிக்கை மற்றும் உள்ளுணர்வை கொடுக்கிறது. அதற்கு நிகராக வேறொன்றும் இல்லை. ஸ்ரீமத் பாகவதத்தில் அருமையான இரண்டு ஸ்லோகங்கள்

 :“ஜன்மாதை அஸ்ய யாதோ த்வாயாத் இதரதஸ் சர்தேஸ்வ அபிஜினாஹ் ஸ்வராத்”

மூலபொருளை பற்றிய விழிப்புணர்ச்சி மற்றும் அதனுடைய உச்ச நிலையை அடைவது,உனக்குள் சுதந்திரத்தை கொடுக்கிறது. இந்த உள் உணர்வு மிக பெருந்தன்மை கொண்டது மற்றும் மிக அழகானது.

தேன பிரஹ்ம ஹ்ருதா யா ஆதி கவயே முஹ்யந்தி யாத் சூர்யாஹ
தேஜோ வாரி ம்ருதம் யாதா வினிமயோ யத்ர த்ரிசர்கோ மிருஷா
தாம்னா ஸ்வேன நிரஷ்ட குஹகம் சத்யம் பரம் தீமஹி”

அந்த “ஏதோ ஒன்று” கோடிக்கனக்கான சூரியனின் ஜோதியை போன்றது மற்றும் அது மகிழ்ச்சிக்கு மூல காரணமானது.அந்த உள்ளுணர்வு மிக  உன்னதமான உண்மைக்கெல்லாம் உண்மையானது என்று எனது புரிந்து கொள்ளும் சக்தியை ஊக்குவிக்கிறது. நான் இந்த உண்மையில் மூழ்கி திளைக்கட்டும். உண்மை என்றால் என்ன? உண்மையென்பது இறந்த காலம், நிகழ்காலம், எதிர் காலத்தில் மாறாதது. அது மாறாமல் அப்படியே இருப்பது. அது மிக பெரிய நன்மையை இந்த பிரபஞ்சத்திற்கு தர கூடியது. அதில் எனது புத்திசாலித்தனம் முழுமையாக மூழ்கி இருக்கட்டும். மற்றும் அது தான் “தியானம்”.