அன்பு எப்போது முடிவற்றதாகின்றது ?


பெப்ரவரி14, 2015

பெங்களூர் - இந்தியா

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!


"தெய்வீகமே உங்கள் காதலராக இருக்கட்டும்" என்று நான் முன்பு சொல்லி இருக்கின்றேன்.  இன்று சொல்கிறேன்,"இயற்கை உங்கள் காதலராகட்டும்". நாம் நீர், காற்று, சக்தி, சுற்றுச் சூழல், செடிகொடிகள் என்று இயற்கையின் அனைத்தையும் பாதுகாக்க வேண்டும். இது நமது பொறுப்பாகும், ஆகவே, "இயற்கையே உங்கள் காதலராகட்டும்"  என்பதே இந்த ஆண்டு காதலர் தினத்திற்கான செய்தி ஆகும். 

உணர்வுகளை வெளிப்படுத்துவது கடினமானதாகும். உணர்வுகள் வெளிப்படுத்த இயலாதவை. அதே நேரம் நீங்கள் அவற்றை மறைக்கவும் முடியாது. ஒரு நிலையில் உணர்வுகளை எப்போதுமே மறைக்க முடியாது. மற்றொரு நிலையில், உணர்வுகளை எப்போதுமே முழுமையாக வெளிப்படுத்தவும் முடியாது. தொன்றுதொட்டு மனித இனம் விவரிக்க இயலாததை வெளிப்படுத்துவதற்கு முயற்சிகள் பலமேற்கொண்டுள்ளது. நம் சைகைகள் மற்றும் செயல்கள் அனைத்தும் நம் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காகவே. இருந்தாலும் அன்பு வெளிப்படுத்தப்படாததாகவே இருக்கின்றது. அதுவே அதன் அழகாகும். அதனாலேயே அன்பு இன்னும் தொடர்ந்துள்ளது. அன்பு முடிவற்றதாவதும் இப்போதுதான். 

அன்பு முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டால் அது அத்துடன் முடிந்து விடும். அதில் மிச்சம் ஏதும் இருக்காது ஆனால் அப்படி நடப்பதில்லை. நீங்கள் வெளிப்படுத்தும் போது ஏதோ ஒன்று இன்னமும் விவரிக்கப்படாமல் மிச்சம் இருக்கின்றது. இது போதாது என்ற உணர்வே உங்களுக்கு உண்டாகின்றது. அன்பு முறிவடையும் போது மட்டும் தான் நீங்கள் போதும் போதுமென்று உணர்வை அடைகின்றீர்கள். ஆனால் அன்பு வயப்பட்டு இருக்கும் போது நீங்கள்  இது போதுமென்ற உணர்வை அடையமுடியாது அன்பு எப்போதுமே முழுமை அடைவதில்லை. 

காதல் வயப்பட்டிருக்கும் எவரும் "என்னால் என் உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை" என்றே சொல்வார். வெளிப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படலாம். அவ்வாறு மக்கள் தங்கள் அன்பினை வெளிப்படுத்த முயற்சி செய்வதற்கான ஒரு சிறந்த தருணமே காதலர் தினம் ஆகும். என் காதலராக இருப்பீர்களா என்று பிறரை நீங்கள் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் உங்கள் காதலர்கள். அவர்கள் உங்களை நேசிக்கின்றார்கள் என்று நீங்களே அனுமானம் செய்துகொள்ள வேண்டும். எவருடைய அன்பையும் நீங்கள் சந்தேகம் கொள்ளக் கூடாது. அனைவரும் உங்களை நேசிக்கின்றனர் என்று அப்படியே ஏற்றுக்கொண்டு விடுங்கள். அவ்வளவு தான். 

சமயங்களில் சிலர் அன்பை வெளிப்படுத்துவது இல்லை. சிலர் அவ்வப்போது வெளிப்படுத்தி கொண்டே இருப்பார்கள். சிலர் அடுத்த பிறவியில் வெளிப்படுத்தலாம். சில சமயங்களில், முரட்டுத்தனமாகவும், இனிமையாகப், பழகாதவர்களாகவும் உள்ள சிலருக்கும் நம் மீது அன்பு இருக்கும். ஆனால் அவர்கள் அதனை வரப்போகும் ஆண்டுகளுக்காகவோ அல்லது வரப்போகும் பிறவிகளுக்காகவோ ஒதுக்கி வைத்திருக்கின்றனர். இதை இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் பாதுகாப்பாகவும், முழுமையாவும், 

ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவும் உணர்வீர்கள். ஆகவே இந்த காதலர் தினத்தில் நீங்கள் "இயற்கையே என்னுடைய காதலர். நான் இயற்கையை நேசிக்கிறேன்" என்று சொல்லலாம். நீங்கள் ஒரு மலராக ஆகலாம். நீங்கள் ஒரு ஒரு ரோஜா மலரை வாங்கி அளிக்க வேண்டியதில்லை, உங்களையே ஒரு பூத்துக்குலுங்கும் ரோஜா மலராக் கற்பனை செய்து கொள்ளலாம்.

மணமுள்ள பல மலர்கள் ரோஜா மலரைப்போல அழகும் நெசவும் கொண்டிருப்பதில்லை. மற்றும் சில மலர்கள் ரோஜா மலரைப் போல அழகாக இருக்கின்றன ஆனால் அதைப்போல் மணம் கொண்டிருப்பதில்லை. ஒரு ரோஜா மலர் அழகு மணம் இரண்டையும் கொண்டிருக்கும். அதனால் தான் அது மலர்களின் ராணி என்று அழைக்கப்படுகிறது. நீங்களே உங்களை மலர்களின் ராணி என்று கொள்ளலாம். உங்களிடம் அந்த அழகும் மணமும் உள்ளன.  அன்பிற்குரியவர்களிடம் இதுதான் எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அழகாக காட்சியளித்தால் மட்டும் போறாது, நல்ல மனத்தை வெளிப்படுத்தி மகிழ்விக்க வேண்டும். சிலரிடம் அந்த மணம் இருக்கலாம் ஆனால் அவர்களுடைய செயல்கள் நீங்கள் அன்பின் வெளிப்பாடு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வாறு இல்லை என்றால், அதை அவர்களுக்கு தெரிவிக்கவும். அவ்வாறு தெரிவிப்பது மிக முக்கியமானது.  காதலர் தினம் உங்களுடைய அன்பை அவ்வாறு வெளிப்படுத்த வேண்டிய ஒரு தினம் ஆகும்.

உலகத்தில் மக்கள் இரண்டு உச்ச நிலைக்கும் செல்கிறார்கள். இந்தியாவில் இருப்பது போல கிராமப்புறங்களில் மக்கள் அவர்களுடைய அன்பை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. அவர்களிடம் நிறைய அன்பு உள்ளது ஆனால் அதை அவர்கள் உள்ளுக்குள்ளே புதைத்து வைத்திருப்பார்கள். அது வார்த்தைகள் மூலமாக அல்லாது செயல்களாக வெளிப்படுத்தப்படுகிறது. உங்களில் பெரும்பாலானவர்களுடைய பெற்றோர் ஒருவருக்கொருவர்" நான் உன்னை நேசிக்கின்றேன்" என்று சொல்லிக்கொள்வதே கிடையாது. பெற்றோர்கள் குழந்தைகளிடமும் அவ்வாறு கூறிக்கொள்ளுவதில்லை. வாழ்நாள் முழவதிலும் அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்க மாட்டார்கள். அவர்களிடம் அன்பு இல்லை என்பதல்ல அதன் பொருள். அவர்களிடம் நிறைய அன்பு உள்ளது, ஆனால் அதை அவர்கள் வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில்லை. நாம்  ஒரு இடைப்பட்ட நிலையில் இருக்க வேண்டும். அதிகமாக   வெளிப்படுத்தவும் வேண்டாம், வெளிப்படுத்தாமலே இருக்கவும் வேண்டாம். மேற்கு கிழக்கு இரண்டிலுமே சிறந்தது  கூர்மையான மனதுடனும் மிருதுவான இதயத்துடனும் இருப்பது.

வாழ்நாள் முழுவதுமே ஒருவருக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாகவே இருக்கும்.  ஒவ்வொரு நிகழ்வும் நமக்கு ஒரு பாடத்தை தரும், ஒவ்வொரு நிகழ்வில் இருந்தும் நமக்கு ஒரு நல்லது வரும். வாழ்க்கையை நேர்மையாகவும் ஒரு அர்ப்பணிப்புடனும் எளிதாக எடுத்துக் கொள்ளுவதே வாழும் கலையின் நோக்கம் ஆகும்.  


நாகரீகமான நடத்தை மற்றும் முறைசாரா சாதாரண சூழல் இரண்டுமே தேவை. நீங்கள் அதிகம் முறைசாரா நிலையில் மற்றவர்களை தள்ளியும் மிதித்தும் செல்லுவீர்கள். சிலருக்கு அது மிகவும் மூர்க்கத்தனமாக தோன்றும். ஆசியாவில் இது ஒரு பிரச்சினை. மக்கள் எதிரில் இருப்பவர்களை கூட கவனிக்காமல் அவர்களை தாண்டி செல்லுவதை சுபாவமாக கொண்டிருப்பார். நீங்கள் மற்றொரு கலாசாரத்தில் இருந்து வந்திருந்தால் உங்களுக்கு இது மூர்க்கமாகவும் காட்டு மிராண்டித்தனமாகவும் தோன்றும். ஆனால் இங்கே அனைவரும் நம்மை சார்ந்தவர்கள் என்னும் எண்ணம் இருக்கும். அதே நேரத்தில் சில கலாச்சாரங்களில் அவர்கள் கண்டிப்புடனும் ஒழுக்கமாகவும் இருப்பார். மற்றும் அனைத்தும் முழுநிறைவாகவும் இருக்க வேண்டும் விரும்புவார்கள்.  சிறு சிறு தவறுகளைக் கூட பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.   அது ஒருவரை நிலை சாய்த்து விடுவதுடன் மன குழப்பத்தையும் உண்டாக்கிவிடும்.அந்த மனப்போக்கில் இருந்து 

நாம் வெளி வந்து விட வேண்டும். நாம் அந்த நிலையிலேயே இயல்பாக இருக்க வேண்டும். காலையில் ஏதாவது நடந்து விட்டால் நாள் முழுவதும்  அதையே நினைத்துக்கொண்டிருக்கத் தேவை இல்லை. அந்த சம்பவம் அல்லது நிகழ்ச்சி நடந்து முடிந்து விட்டது. யாரோ ஒருவர் வரிசையில் தாண்டி சென்று விட்டார்! நீங்கள் உட்காரலாம் என்று நினைத்த இடத்தில் வேறு எவரோ உட்கார்ந்து விட்டார்! விஷயங்கள் நேரத்தில் நடக்கவில்லை! இவை அனைத்தும் உங்களை வெகு நேரத்திற்கு மன அமைதி இல்லாமல் இருக்கச் செய்யும். உங்களுக்கு இரண்டு தேர்வுகள் தான் உள்ளன. ஒன்று விஷயங்கள் சரிவர நேரத்தில் நடக்கவில்லை என்று இறுக்கமாகவும் மன வருத்ததுடனும் இருக்கலாம் அல்லது நிகழ் காலம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்து உங்களால் முடிந்ததை செய்துகொண்டு புன்னகையுடன் இருக்கலாம். நீங்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டீர்கள் என்றால் உங்களுக்குன் இரண்டு தேர்வுகள் உள்ளன. விரக்தியாகவும் மகிழ்ச்சியற்றும் இருக்கலாம் அல்லது ஆனம்தமாக பாடிக்கொண்டிருக்கலாம்.