ஈர்ப்பு விதி

சனிக்கிழமை, 30 மே 2015,

பெங்களூரு இந்தியா(உங்களை உற்றுக் கவனியுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருக்கின்றேன். ஆனால் எனக்கு ஓர் கவலை உள்ளது. கடந்த ஆறு மாதங்களாக என் வருங்கால வாழ்க்கை துணையுடன் நிறைய முறைகள் சண்டை ஏற்பட்டு விட்டது. இந்த உறவைத் தொடர வேண்டுமா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை?

அன்பை கோருவதை நிறுத்துங்கள். நீங்கள் அன்பினைக் கோரினாலோ அல்லது அன்பிற்கு ஆதார விளக்கம் கேட்டாலோ நீங்களே அதை  அழிப்பவராகின்றீர்கள்.எவ்வாறு உங்கள் மீது தனது அன்பை ஒருவர் நிரூபிக்க முடியும்? நீங்கள் அத்தகைய சுமையை ஏற்றக்கூடாது. ஒரு வேளை, தினமும் ஒருவர் உங்களிடம் "நீங்கள்  நேர்மையானவரா? நீங்கள் நேர்மையானவரா? என்றே கேட்டுக் கொண்டிருந்தால் எவ்வாறு உணருவீர்கள்? உங்களுக்கு பிடிக்காது அல்லவா? அது போன்றே நீங்கள் ஒருவரிடம் நீங்கள் என்னை உண்மையாக விரும்புகிறீர்களா என்றே கேட்டுக் கொண்டிருந்தால் அந்த நபர் எவ்விதம் உணருவார்? ஒருவர் தன்னுடைய அன்பை நிரூபிப்பது என்பது ஒரு பெரிய விஷயம். துணை உங்களிடம் வந்து சேர்வது உங்களுடைய ஆதரவினைத் தேடி,ஆனால் அதைத் தருவதற்கு பதிலாக நீங்கள் அவரை துன்புறுத்திக் கொண்டிருக்கின்றீர்கள். அன்பை கோருவதை நிறுத்துங்கள். அன்பு என்பது தரப்பட வேண்டும் கேட்டுப் பெறுவதல்ல.

நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டதாக ஏற்றுக் கொள்ளுங்கள். பின்னர் அப்புரிதல் வளரும். நீங்கள் கேள்வி கேட்டுக் கொண்டோ சந்தேகித்துக் கொண்டோ இருந்தால் புரிதல் நொறுங்கி விடத் துவங்கும். அது முட்டாள்தனம்.உங்களது உணர்வுகள் பிறர் கருத்துக்களின் உதைபந்தாக இருக்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் உணர்வுகளின் படியே சுதந்திரமாக இருக்க வேண்டும். உங்கள் மீது உங்கள் துணையின்  கவனம் குறைவதாக நீங்கள் உணர்ந்தால், "என்னை நீங்கள் மிகவும் விரும்புகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னை இந்த அளவு விரும்புகிறீர்கள்?" என்று கேளுங்கள். அப்போது அவரது தொனி முற்றிலும் மாறி, நீங்கள் விரும்பும் படியே ஆகும். இதைத்தான் கேட்க விரும்புகிறீர்கள் அல்லவா? அதற்கு நீங்கள் அடுத்தவரை குறை கூறக்கூடாது.  நீங்கள் குறை கூறினால் அதுவே உங்களை வந்தடையும். நீங்கள் பணிவுடன் பாராட்டுக்களை வழங்கினால் அது பாய்ந்து உங்களையே மீண்டும் வந்தடையும். எப்போதும் பாராட்டுக்களையே வழங்குங்கள். அது பல மடங்கு அதிகமாக உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். ஆனால் குறை கூறினால் அதுவே உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். இதுவே ஈர்ப்பின் விதி. என்ன வீசுகின்றீர்களோ அதுவே  பாய்ந்து உங்களைத் திரும்ப வந்தடையும்.

குருதேவ், குருவாக இருப்பதா? சீடனாக இருப்பதா உங்களைப் பொறுத்த வரையில் எது உங்களுக்கு எளிது?

எளிது அல்லது கடினம் என்பது ஒரு கோட்பாடு தான். உங்களுக்கு ஆற்றல் இல்லையெனில் எதுவுமே கடினம் தான். உற்சாகமும் ஆற்றலும் இருந்தால் எதுவுமே எளிது தான். உடல் நலமற்று சோர்ந்திருக்கும் ஒருவரிடம்," ஒரு மைல் தூரம் நடக்க விரும்புகிறீர்களா? என்று கேட்டால் நிச்சயம் அவர்" இல்லையில்லை, அது மிகக் கடினம்" என்றுதான் கூறுவார். உற்சாகமும் ஆற்றலும் நிறைந்த ஒரு இளைஞரிடம் "ஒரு கிலோமீட்டர் நடக்க விரும்புகிறீர்களா என்று கேட்டால், அவர், நான் 10 கிலோமீட்டர் ஓடுவேன் என்று கூறுவார். நீங்கள் ஆற்றலுடன் துடிப்பான உற்சாகத்துடன் இருக்கும் போது, உங்கள் திறன்கள் மற்றும் வரம்புகளைத் தாண்டி உங்களை நீட்டி கொள்ள வேண்டும் என்று விரும்புவீர்கள்.

நீங்கள் உற்சாகத்துடன் இருக்கும் போது, தானாகவே சீடனாகி விடுகிறீர்கள் ஏனெனில், அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள், நீங்கள் உற்சாகத்துடன் இருக்கும் போது தானாகவே குருவாகி விடுகிறீர்கள் ஏனெனில் நீங்கள் தெரிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ளவும் பிறர் மீது அக்கறை செலுத்தவும் விரும்புகிறீர்கள். நீங்கள் அனைவர் மீதும் களைப்புடன் சோர்வுற்று உணர்ந்தால் பிறர் மீது அக்கறை செலுத்தாமல் இருந்தால் எவ்வாறு குருவாக முடியும்? எனவே உங்கள் ஆற்றல் நிலையை பொறுத்தே உள்ளது. இது உங்கள் உடல் ஆற்றலை பற்றியது அல்ல. "ஒ எனக்கு 70 வயதாகி விட்டது,  எனக்கு ஆற்றல் இல்லை" என்று கூறமுடியாது.

உடல் ஆற்றல் உங்கள் உற்சாகத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல. உடல் பலவீனமாக இருந்தாலும் மன ஆற்றல் அதிகமிருக்கலாம். இந்த நிலையில்  நீங்கள் சீடனாகவும் குருவாகவும் இருக்க முடியும். இரண்டுமே எளிதாக அமையும். 80-90 வயதானவர்கள் கூட என்னிடம் உற்சாகத்துடன், நான் என்ன  சேவை செய்யட்டும்? என்று கேட்கின்றனர். நான் அவர்களிடம்," நீங்கள் அமர்ந்து மக்களை ஆசீர்வதியுங்கள் போதும்” என்றே கூறுகின்றேன்.

இளைஞர்கள் நான் என்ன செய்யட்டும் என்று கேட்பதில்லை, வயதானவர்களே நான் சேவையில் ஈடுபட விரும்புகின்றேன் என்று கேட்கின்றனர். அவர்களால் உடலளவில் அதிகம் செய்ய முடியாது அவர்களது நோக்கம் அவர்கள் இளமையாக இருக்கிறார்கள் என்பதை காட்டுகின்றது. ஆத்மாவின் இளமை தான் எது ஒன்றையும் கடினமா அல்லது எளிதா என்று தீர்மானிக்கின்றது. உங்களுடைய ஆத்மா இளைமையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் சாசுவதமான சீடனும் சாசுவதமான ஆசிரியருமாக இருக்கின்றீர்கள்.

குருதேவ், விடுதலைக்கு ஒரு கூரான கவனம் தேவை என்று தாங்கள் கூறியிருக்கின்றீர்கள். தீவிரவாதிகளுக்கும் கூட கூரான கவனம் இருக்கின்றது. அவர்கள் முக்தியடைய முடியுமா?

தீவிரவாதிகள் என்று பொதுவாக மதிப்பிடக் கூடாது. அதிலும் பல வகைகளும் அணுகுமுறைகளும் உள்ளன. சிலர் பணத்திற்காகச் செய்கின்றனர், சிலர் அது கடவுளின் கட்டளை என்ற தவறான புரிதலுடன் செய்கின்றனர். எனவே அனைத்துத்  தீவிரவாதிகளையும் பொதுவாக மதிப்பிடாதீர்கள். தீவிரவாதம் போன்றவற்றில் நீங்கள் ஓர் தீவிரவாதி விடுதலை அடையமுடியும் என்று கூற முடியாது. அதே சமயம் அதை மறுக்கவும் முடியாது. அப்படி ஒரு வாய்ப்பும் இருக்கலாம்.ராவணன் முக்தியடைந்தான். சதாம் ஹுசைன் கூட முக்தியடைந்திருக்கலாம். விடுதலைப் புலிகளின் பிரபாகரன் கூட முக்தியடைந்திருக்கலாம். நமக்குத் தெரியாது. பிரபாகரனின் ஆதரவாளர்கள் அவர் ஓர் சிறந்த மனிதர் முக்தியடைந்தார் என்றே எண்ணுகின்றனர்.

சிறந்த தலைவர்களாகக் கருதப்படும் லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோரின் செயல்களால்  பலர் இறந்தனர், ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் புரட்சியின் காரணமாக 10 மில்லியன் மக்கள் இறந்தனர். இவற்றையெல்லாம் பார்த்தால், அவர்களை தலைவர்கள் என்றே கூற மாட்டீர்கள். கேரளாவில் அவர்கள் தலைவர்கள் என்று கருதப்படலாம், ஆனால் ரஷ்யாவின் பல பகுதிகளில் அவர்கள் குற்றவாளிகளாகவே கருதப்படுகின்றனர். அதனால் தான் லெனின்கிராட் என்னும் நகரின் பெயரை புனித பீட்டர்ஸ்பர்க் என்று மாற்றியுள்ளனர். பொதுப்படையாக எதையும் கேட்காதீர்கள். வரலாற்றாசிரியர்களுக்கும் மனதத்துவ நிபுணர்களுக்கும் மனித மனங்களை பார்க்கும் பணியினை விட்டு விடுகின்றேன்.

உங்களை உற்றுக் கவனித்து கொள்ளுங்கள்

30 - மே - 2015, 

பெங்களூரு - இந்தியா


குருதேவ், அரசியலில் சேர விரும்பும் இன்றைய இளைஞர்களை நம் நாட்டு நலனுக்காக எவ்வாறு வழி நடத்துவீர்கள் ?

முதலில் உங்கள் சாதனாவை செய்து உங்களுடைய பார்வையினை விரிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, உங்களுக்கு ஏராளமான பொறுமை தேவை. பெரிய பார்வையுடன் நீங்கள் செல்லும் போது அதை நசுக்கிப் பிழிந்துவிடும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். பார்வையினையே நீங்கள் துறந்து விடுமளவிற்கு செல்லலாம், ஆனால் நீங்கள் மனம் தளர்ந்து விடக்கூடாது. நூறு முறை நீங்கள் ஏமாற்றங்களை சந்திக்கலாம். ஆனால் நூற்றியோராவது தடவை நீங்கள் வெற்றியடைவீர்கள். அதற்கு உங்களுக்கு பொறுமையும், விடாமுயற்சியும் தேவையாகும். உங்கள் பார்வையையும்  உங்கள் நெறிமுறைகளையும் விட்டுவிடாமல் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக, உங்களுடைய ஆன்மீகப் பகுதியினை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு எவ்வளவு பணிகள் இருந்தாலும் கண்டிப்பாக ஆண்டுக்கு 4-5 நாட்கள் மௌனப் பயிற்சியினை எடுத்துக் கொள்ளுங்கள். தினமும் 20 நிமிடங்கள் ஞானச் செய்தியினைக் கேட்டு தியானத்தில் அமருங்கள். அது உங்களது ஆற்றலை மேம்படுத்தும்.  ஓர் அரசியல்வாதி என்னும் முறையில் இரண்டு விஷயங்களில் கவனமாக இருங்கள்.
1. பணம்.  2. பாலுறவு.

இந்த இரண்டு விஷயங்களில் மக்கள் உங்களை பற்றி பல வதந்திகளை உருவாக்கலாம். அவதூறுகளுக்கு ஆளாகாமல் கவனமாக இருங்கள். எளிதில் இத்தகைய அவதூறுகளுக்கு ஆளாகி விட்டால், உங்கள் நேரம் முழுவதையும் அவை பொய் என்று நிரூபிப்பதிலேயே வீணாக்க நேரிடும். ஆரம்பத்திலிருந்தே  இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது. மற்றொரு விஷயம், அரசியலைத் தொழிலாக்கிக் கொள்ளாதீர்கள். அது நீங்கள் மேற்கொள்ளும் பணியாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஏராளமான வலிமை, ஆற்றல்  மற்றும் உற்சாகம் ஏற்படும். அதைத் தொழிலாக்கிக் கொண்டால், நிறையத் தேய்மானம் மற்றும் மதிப்பிறக்கத்தை அனுபவிப்பீர்கள். ஆகவே இந்தக் குறிப்புக்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவரது உண்மையான குணநலன்கள் எவ்வாறு தெரியவரும்?

மற்றவரது உண்மையான இயல்பை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? உங்களுடைய குண இயல்பை அறிந்து கொள்ளுங்கள். அது போதும். பிறரை பற்றி மதிப்பீடு செய்யாதீர்கள்.உங்களுக்குத் தெரியாது, உங்கள் காலம்  நன்றாக இருந்தால் எதிரிகளும் நண்பராவர், உங்கள் காலம் மோசமாக இருந்தால் நெருங்கிய நண்பர் கூட விரோதி போன்று நடந்து கொள்வர். அதனால், உங்கள் மீது கவனம் வையுங்கள், பிறரை மதிப்பீடு செய்ய வேண்டாம்.

குருதேவ், உலகம் முழுவதும் யோகா ஒரு பில்லியன் டாலர் தொழிலாக அமைந்துள்ளது. இந்தியாவில் யோகாவிற்கென்று ஓர் தனி அமைச்சரும் இருக்கின்றார். மறுபடியும் யோகா சிகரமான நகையாக இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் பட்டியலிட முடியுமா?

யோகாவில் தரக் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. யார் வேண்டுமானாலும் எதையாவது யோகா என்று கூறக்கூடாது. அனைத்து யோகா ஆசிரியர்களும் ஒவ்வொரு நாளும்  ஒரு குறிப்பிட்ட கால அளவு யோகப் பயிற்சி செய்ய வேண்டும். இப்போதெல்லாம், ஒரு வாரம் யோகா பயின்று உடனேயே யோகா ஆசிரியர் ஆகிவிடுகின்றனர். அவர்கள் உடலையே அசைக்காமல் பிறருக்கு உடலையசைக்க அறிவுறுத்துகின்றனர். அவர்களால் அசையாமல் 10 நிமிடங்கள் கூட இருக்க முடியாது ஆனால் பிறரிடம் தியானம் பற்றிப் பேசுகின்றனர்.

உங்களால் சில நிமிஷ நேரம் கூட அசைவின்றி அமர்ந்திருக்க முடியாத பட்சத்தில் நீங்கள் எவ்வாறு தியானம் கற்பிக்க முடியும்? பேசிக்கொண்டே நடப்பதும் நடந்து கொண்டே பேசுவதும் ஓர் யோகா ஆசிரியரின் மந்திரமாக இருக்க வேண்டும். யோகப் பயிற்சியினை முழுமையாகக் கற்றிருத்தல் வேண்டும். இந்திய அரசாங்கம் யோகாவில் தரக் கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது நல்லதேயாகும். யோகா ஆசிரியர்களுக்கு  சான்றளிக்க தர முறைகளை வடிவமைத்து கொண்டிருப்பது மிகவும் அவசியமானதாகும்.

இது ஆயுர்வேதத்திற்கும் பொருந்தும். ஆயுர்வேத வைத்தியர்கள் மத்தியில் ஒரு வேடிக்கைப் பேச்சு உண்டு. யஸ்ய கஸ்ய தரோ முலம் ஏன கேன அபி கர்ஷிதம். யஸ்மை கஸ்மை பிரததவ்யம் யத் வ தத் வ பவிஷ்யதி.(ஏதோ ஒரு மரத்தின் வேர்களை ஏதோ ஒன்றுடன் கலந்து யாரேனும் ஒருவருக்கு அளித்தால் ஏதேனும் ஏற்படும்) இது ஆயுர்வேதத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நமது அரசு இந்தப் பயிற்சி முறை, மருந்துகள் மற்றும் மருத்துவர்களை வரையறைப்படுத்தியுள்ளது. ஆயுர்வேதக் கல்வி முறை மிகச் சிறப்பாக இருக்கிறது என்று கூறமாட்டேன். அது மேலும் மேம்பட வேண்டும். ஆயுர்வேதக் கல்வியினை முடித்த சில மருத்துவர்களுக்கு நாடி பரீட்சை கூடச் செய்யத் தெரிவதில்லை. அது மேம்பட வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் ஒரு நிலைக்கு  வந்துவிட்டது. அதே போன்று யோகா கற்பிக்கும் ஒருவருக்கு மனதின் இயல்பு, மூச்சின் வகைகள், இருப்பின் ஏழு அடுக்குகள், ஆகியவை பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அப்போது  அவர்கள் சிறந்த யோகா ஆசிரியர்களாக விளங்க முடியும்.

சஞ்சயன் திருதிராஷ்டிரருக்கு மகாபாரதப் போரின் நிகழ்வுகளைப் பற்றி எடுத்துரைத்தார். வீட்டிலிருந்தபடியே உலகில் நடப்பவற்றை அறிந்துகொள்ளும் அது போன்ற சித்திகளை நாம் மீண்டும் அடைய முடியுமா? நான் ஓர் நிருபர் என்பதால் என் வாழ்க்கை சுலபமாக ஆகும்.

மூளை  செல்போன் என்னும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளது. நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல் போன் வழியாக அனைத்துச் செய்திகளையும் திரட்டலாம். அதைச் சார்ஜ் செய்து வைத்துக் கொண்டால் போதும். அது போன்றே உங்கள் மனநிலையையும் சார்ஜ் செய்து கொண்டால், உங்களுக்கு உள்ளுணர்வு ஆற்றல் மேம்பட்டு சரியான நேரத்தில் சரியான உள்ளுணர்வினை அடைவீர்கள். இதை நீங்கள் கவனிக்க வேண்டும். யோகாவும் தியானமும் ஒரு நிருபருக்கு மிகத் தேவையான விஷயங்களாகும். ஏனெனில்,

1. உங்களது கருத்துக்கவனம் கூர்மையாக இருக்க வேண்டும்.
2. உங்களது வெளிப்பாடு தெளிவாகவும் நலம் மிக்கதாகவும் இருக்க வேண்டும்.
யோகாவும் தியானமும் இவையிரண்டையும் உங்களுக்கு  அளிக்கும்.

குருதேவ், ஒருவர் கடவுளை தன்னுடைய புலன்களின் மூலம் அறிய முடியாது ஏனெனில் கடவுள் புலன்களுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் எவ்வாறு கடவுளை உணர்வது? அவர் உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அப்பாற்பட்டவர் அல்லவா? அறியமுடியாதவராயின் எவ்வாறு கடவுளைத் தெரிந்து கொள்வது?


அசைவின்றி இருந்து கடவுளுடன் ஒன்றிவிட முடியும். அதுவே தியானம் என்னும் திறன். நீங்கள் அஷ்டவக்கிரகீதையைக் கேளுங்கள்.

சந்தேகங்களை வெல்வது

வியாழன், 29/05/2015,

பெங்களூரு, இந்தியா


(“பிரதிபலிப்பதிற்கான நேரம்” என்ற பதிவின் தொடர்ச்சி இது)

இப்போது இது புரிந்துவிட்டதால், ‘நம்முடைய சத்துவத்தை எப்படி அதிகப்படுத்துவது? இந்த விழைவுகளை வென்று மேலே எப்படி செல்வது?’ என்று நீங்கள் கேட்க விரும்பலாம். அதை தியானம் மூலமே செய்யமுடியும்.

அதிக தொண்டு, யோகப்பயிற்சி மற்றும் சத்சங்கம் ஆகியவையே நீங்கள் செய்ய வேண்டியது. இது எப்படி உதவும்? உங்களை தமோ குணத்திலிருந்து இரஜோ குணத்திற்கு உயர்த்தும். பின்னர் இரஜோ குணத்திலிருந்து சத்வ குணத்திற்கு உயர்த்தும். இங்குள்ள எல்லாவற்றின் நோக்கமும் இதுதான். இந்து மூன்று குணங்களும் நேரத்திற்கு நேரம் ஒன்றிலிருந்து மற்றவற்றிற்கு மாறி மாறி ஏற்படுவதை நாம் அனுபவித்திருக்கிறோம். ஆனால் சரியான உணவு முறை, சரியான நடத்தை, சரியான சுற்றம் மற்றும் தியானம் இவற்றின் மூலம் ஒருவர் மாற முடியம், இந்த இயல்புகளை விஞ்சிச் செல்ல முடியும்.

எப்போதும் தாமச குணம் கொண்டவர்களுடன் இருப்பதால் நீங்களும் அவர்களைப் போல மாறி, எப்போதும் வருத்தத்தில் மூழ்கி எதிர்மறை மனநிலை ஏற்படும்.இதை என் வாழ்க்கை முழுவதும் பார்த்துவிட்டேன். எல்லாமே பயனற்றவை. எனக்கு எது உண்மையாக எனக்கு வேண்டுமோ அது கிடைப்பதே இல்லை. அவ்வளவு துயரமாய் இருக்கிறது. என் வாழ்க்கை முழுவதும் மக்கள் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டு என்னை திட்டுகிறார்கள்.’ என்று சில சமயம் சிறியவர்கள் கூட சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

சிறிய குழந்தை இப்படிச் சொல்வதை கற்பனை செய்ய முடியுமா? ஒரு முறை ஒரு சிறிய பெண் பிள்ளை இப்படிச் சொன்னது. இப்படியெல்லாம் பேசுவதற்கு அந்தக் குழந்தை எவ்வளவு காலம் வாழ்ந்து விட்டது? பிறகு, அந்தக் குழந்தையின் தாய் சொன்னார், அந்தக் குழந்தையின் பாட்டி அப்படியெல்லாம் பேசுவாராம். அதை அப்படியே எடுத்துக் கொண்டு இந்தக் குழந்தை கிளிபிள்ளையைப் போல பேசியிருக்கிறது. எனவே, நீங்கள் ஒரு குழந்தையின் முன்னே நடந்துகொள்ளும் விதம் பேசும் விதம் ஆகியவை அந்தக் குழந்தையை பலமாக பாதிக்கிறது

நீங்கள் இராஜச அல்லது தாமச குண நிலையில் குழந்தை முன்னே இருந்தால் அவர்கள் அதை உடனே பிடித்துக்கொண்டு அவர்களும் அப்படியே நடந்து கொள்ள ஆரம்பிப்பார்கள். நம்முடைய சுற்றம் நம்மை வெகுவாக பாதிக்கிறது. நான்கு பேர் ஒன்றாக அமர்ந்திருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களில் ஒருவர், ‘இது சரியில்லை,அது சரியில்லை.’ என்று புலம்ப ஆரம்பித்தல், வெகு சீக்கிரத்தில் மற்ற மூவரும் அவருடன் சேர்ந்து அவ்வாறே பேச ஆரம்பித்து விடுவார்கள். பிறகு நான்கு பேரும் அவ்வாறு எதிர்மறையாய் பேச ஆரம்பிக்க அரை மணி நேரத்தில், நால்வரும் சோர்வடைந்து மந்தமாக ஆகிவிடுவார்கள். சோர்வாய் துன்பமான மனநிலையுடன் நால்வரும் வீடு திரும்புவார்கள். ‘எல்லோருக்கும் ஆனந்தமும் உற்சாகமும் ஏற்பட நாம் எல்லோரும் வேலை செய்வோம் வாருங்கள். 

எல்லாம் அருமை.இதை மேலும் செம்மையாக்க நாம் என்ன செய்வது?’ இப்படிச் சொல்பவர்களுடன் நாம் அமர வேண்டும். சத்வ உணர்வு நிலையும் உற்சாகமும் சேரும்போது நீங்கள் அவ்வளவு அதிகம் செய்யலாம். சில சமயம் நீங்கள் மட்டும் உடற்பயிற்சி நிலையம் சென்று பயிற்சி செய்து கொண்டிருந்தால் சோம்பலாகயிருக்கும். பயிற்சிக்குப் போகவே பிடிக்காது. ஆனால், உங்களுடன் ஒரு நண்பர் தவறாமல் வருகிறார் என்று வைத்துகொள்வோம், ஒருநாள் கூட பயிற்சியை நீங்கள் தவற விட விரும்பமாட்டீர்கள். இல்லையா? ஒரு நாள்,போக விருப்பமில்லையென்றாலும், எப்படியோ உங்களை நீங்களே இழுத்துக் கொண்டு சென்று விடுவீர்கள். யோகப் பயிற்சிக்கும் அதுவே தான். அதை ஒரு கட்டாயமாக நினைத்தால் ஒவ்வொரு முறையும் உங்களை நீங்களே இழுத்துச் செல்லத்தான் வேண்டும்.

கேள்வி - பதில்

குருதேவ், ஒருவர் ஆன்மீகப் பாதையில் பல வருடங்களாக இருந்துவருகையில், வெகு காலத்திற்குப் பிறகு திடீரென்று எதன்மீதோ சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. அந்தப் பாதை ஏற்றதாகத் தெரியவில்லை, அப்போது ஒருவர் என்ன செய்வது?

அந்த நேரத்தில் தான் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கவேண்டும். சந்தேகம் ஏற்படும் கணங்கள் மேகம் போன்றது. மேகங்கள் வரத்தான் செய்யும்,ஆனால் அவை வந்து மறைந்துவிடும். அதனோடு நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், அதை நீங்கள் கைக்கொள்ளாமல் விட்டால், அவை வரும் சென்றுவிடும். அதனுடன் நீங்கள் கைகுலுக்கி அதன் ஒழுக்கில் நீங்கள் சென்றால், அதை வெல்வதற்கு நீண்ட காலம் ஆகும். உண்மை எப்போதும் உயர்ந்து நின்று இறுதியில் வெல்லும்.
நம் சுற்றத்தின் காரணமாய் சந்தேகம் வருவது இயல்பே. “ஓ, உனக்குத் தெரியுமா, அந்த மனிதர் அவ்வளவு தியானம் எல்லாம் செய்கிறார், ஆனாலும் அவர் நோயாளியாகி விட்டார்,’ என்றெல்லாம் யாரேனும் சொல்வார்கள்.

அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? ஒருவர் யோகப் பயிற்சி, தியானம் எல்லாம் செய்தும் நோய்வாய்ப்பட்டால் அதைச் செய்வதன் பயன் என்ன? தியானத்தினால் அவர் நோய்ப்படவில்லை. அவர் செய்த வேறு ஏதாவது ஒன்று அவருக்கு நோயை வரவழைத்திருக்கும். அவருடைய கர்ம வினையின் காரணமாகவும் நோய் வந்திருக்கலாம்.

கர்ம வினை தத்துவம் மிக மிக ஆழமானது, அதை நமது நேர்வரிசைக்கிரமமான சிந்தனையினால் புரிந்து கொள்ள இயலாது.சிலர் மிக நல்ல வாழ்கை வாழ்ந்திருந்தும், தனது வாழ்கையின் இறுதியில் ஏராளமான பிரச்சினைகளை சந்திக்கக் கூடும். நல்ல செயல்கள் நல்ல விளைவுகளை மட்டுமே தரும். மாமரம் மாம்பழங்களை மட்டுமே தரும். கசப்பான வேப்பம் பழங்களைத் தராது. இது இயற்கை விதி. எனவே, சந்தேகம் வரும் போது, அவை வரட்டும். வந்தபின் தானாகவே செல்லட்டும். நீங்கள் முன்னேறிச் சென்றவாறு இருங்கள்.

குருதேவ், கர்ம வினை, புருஷார்த்தம் மற்றும் காலம் இவற்றினிடையே உள்ள தொடர்பு என்ன?

புருஷார்த்தம் என்பது சரியான நேரத்தில் சரியான செயலை செய்வது. புருஷார்த்தத்தை செய்வதன் மூலம் ஒருவர் கர்ம வினையையும் காலத்தையும் வெல்லலாம். எல்லா கர்மங்களும் கரைகிறது மற்றும் காலம் உங்களுக்குச சாதகமாக அமைகிறது. ஒருவருடைய செயல்களின் பலன்கள் அதற்கான சரியான நேரத்திற்கு முன் கிடைக்காது. புருஷார்த்தம் இல்லாமல் ஒருவர் சரியான செயல்களைச் செய்ய முடியாது.

குருதேவ், அரசியலிலும் அரசாட்சியிலும் தர்மத்தின் இடம் என்ன? ராஜதர்மம் என்பதின் பொருள் என்ன?

அரசியலில் தர்மத்திற்கு பெரிய பங்கு இருக்கிறது. அரசாட்சியில் இருப்பவர்கள் அரசாங்கத்தையும் சமூக விஷயங்களையும் நேர்மையான முறையில் நடத்த வேண்டும். முடிந்த எல்லா வழிகளிலும் சமூகத்தில் தர்மத்தை (நீதி மற்றும் மனிதப்பண்புகள்) தூக்கி நிறுத்துவதும் கடைபிடிப்பதும் ஒரு மன்னனின் கடமை. இதுதான் ராஜதர்மம்: சமுதாயத்தில் தர்மத்தை நிலை நிறுத்துவது, அதைக் கடைபிடிப்பது மற்றும் அதர்மத்தை இல்லாமலாக்குவது. நேர்மையான, அறத்தின் வழியிலான சமுதாய முன்னேற்றத்தை உறுதிசெய்வது ஆகிய இவையே ஒரு மன்னனின் தலையாய கடமையாகும்.

தர்ம ரக்ஷதி ரக்ஷிதஹா’, என்று சொல்லப்படுகிறது. தர்மத்தின் வழியில் நடந்து தர்மத்தை நிலை நிறுத்துபவர்களை, தர்மமே தாங்கி நின்று அவர்களைக் காக்கிறது. எனவே ஒரு மன்னனின் கடமையும் தர்மத்தை எப்போதும் காத்து நிலை நிறுத்துவதே. தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயதினரையோ அல்லது மக்களில் ஒரு பகுதியினரையோ குறிப்பது அல்ல. எது இவ்வுலகில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அளித்து அவ்வுலகில் விடுதலை அளிக்கிறதோ அதுவே தர்மம். தர்மம் இவ்வுலகில் அப்யுதயாவை (மகிழ்ச்சியும் அமைதியும்) அளித்து, அவ்வுலகில் நிஷ்ரயாசைன் (விடுதலை) அளிக்கிறது.

குருதேவ், நீங்கள் பிரபஞ்சத்தைப் பற்றி பேசினீர்கள் (பஞ்ச பூதங்களின் பங்கையும் ஒன்றோடொன்று அது நிகழ்த்துபவையும்). இந்தப் பிரபஞ்சமே எண்ணிக்கையால் நிரம்பியிருக்கிறது – மூன்று குணங்கள், பஞ்ச பூதங்கள், போன்றவை. நம் வாழ்வில் எண்ணிக்கைக்கு உள்ள முக்கியத்துவம் என்ன?

வேத ஞானத்தில் ஆறு தத்துவங்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவது சான்க்யா, அதாவது பிரபஞ்சத்தை எண்களால் அளந்து ஆராய்வது.மிக முக்கியம்.நம்மைச் சுற்றி உள்ள எல்லாவற்றிலும் எண்ணிக்கை உள்ளது.உதாரணமாக, நமது DNA வில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை, DNA சங்கிலியின் எண்ணிக்கை, போன்றவை. இவை எல்லாவற்றுக்கும் எண்ணிக்கை உள்ளது. இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிலும் எண்கள் பங்கெடுப்பதைப் பார்க்கலாம். ருத்ராபிஷேகத்தில் வரும் மந்திரம், ‘ஏகசமே, த்ரயஞ்சமே, பஞ்சசமே..’. (ஒன்றிலிருந்து ஆரம்பித்து ஒற்றைப்படை வரிசையைச் சொல்கிறது)

இந்தப் பிரபஞ்சமே கணங்களால் ஆனது. கணங்கள் என்றால் அலகு (unit), இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்குவது பலவேறு அலகுகள். கணம் என்றால் குழு என்றொரு பொருளும் உள்ளது. எனவே இந்தப் பிரபஞ்சம் அலகுகளாலும் குழுக்களாலும் ஆனது. கணேசப் பெருமானின் மற்றொரு பெயர் கணநாதன், அதாவது குழுக்களின் தலைவன்.

தனிம அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தனிமத்துக்கும் ஒரு குறிப்பிட்ட அணு எண்ணிக்கையும் மின்னணு எண்ணிக்கையும் உண்டு. வெள்ளி, கரி, தங்கம் மற்றும் வைரம் ஆகியவை பார்ப்பதற்கு ஏன் வித்தியாசமாய் இருக்கிறது என்றால், அணுக்களில் உள்ள வேவ்வேறு எண்ணிக்கையினாலான புரோடான்களும் மின்னணுக்களும் தான். புரோட்டான் மற்றும் மின்னணுக்களின் எண்ணிக்கை வெவ்வேறு விகதக் கலவையில் இருப்பதால் தான் வெவ்வேறு தனிமங்களை நம்மால் பார்க்க முடிகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த முழு பிரபஞ்சமே ஒரே ஒரு அதிர்வு மட்டுமே. ஆனால் அந்த ஒரே அதிர்வின் பல்வேறு எண்ணிக்கையினாலான கலவையே இந்தப் பிரபஞ்சத்தில் வெவ்வேறு பொருட்கள் ஆக்குகிறது.

எனவே எண்ணிக்கை மிக முக்கியம். கரிம தனிமத்தில் உள்ள புரோடான் மின்னணு எண்ணிக்கை மட்டும் மாறினால் அது வைரமாகிறது. இரண்டும் கரிம தனிமத்தின் வெவ்வேறு வடிவங்கள், கரித்துண்டு படிக வைரமாகிறது. எனவே பிரபஞ்சத்தில் காணப்படும் வித்தியாசமான பொருட்கள் வெவ்வேறு கலவையினாலான எண்கள் அன்றி வேறில்லை. 


உங்கள் பெருவிரலில் உள்ள வரிகளின் ஆழமும் அதற்கிடையேயான தூரமும் சற்று மாறினால் எல்லாம் மாறிப்போகிறது. அதனால்தான் கை ரேகை ஒருவரைப் போல வேறு யாருக்கும் இருப்பதில்லை. உங்கள் வீட்டை உங்கள் கைரேகை கொண்டு பூட்டி இருந்தால் உங்கள் கைரேகை மட்டுமே அதைத் திறக்க முடியும். எண்ணிக்கையில் சிறிய மாறுபாடு மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்க இயலும். நமது ரிஷிகள்,கனட ரிஷி, கபில ரிஷி, போன்றவர்கள் உணர்ந்திருந்தார்கள். மிகப் பெரிய எண்ணான பூஜ்யத்தை உபநிஷத்களும் வேதமறிந்த ரிஷிகளுமே கொடுத்தனர். உலகிற்கு பூஜ்யத்தை அளித்தது இந்தியா. பூஜ்யம் இல்லையென்றால், வேறு எந்த எண்ணும் இருக்க முடியாது. பிறகு ஒன்பதிற்கு மேல் எந்த எண்ணும் செல்லாது. பூஜ்ஜயத்தின் விளக்கம் வேதத்தில் உள்ளது. ஒரு சுலோகம், ‘ஓம், பூர்ணமதா பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உடச்யேத். பூர்ணாஸ்ய பூர்ணமதய பூர்ணமேவவ வஷிஷ்யதே.’ இதன் பொருள்: ‘அது முழுமை, இது முழுமை; முழுமையிலிருந்து முழுமை வெளிப்படுகிறது. முழுமையிலிருந்து முழுமையை வெளியே எடுத்தால் முழுமை அப்போதும் மீதமிருக்கிறது. இந்த சுலோகம் பூஜ்யத்தின் விளக்கத்தை தன்னுள்ளே கொண்டிருக்கிறது. உங்களில் எத்தனை பேருக்கு இது தெரியும்?

ஞானிகளிடம் அடைக்கலம் புகவேண்டும்

வியாழக்கிழமை 28 மே 2015 

பெங்களூர், இந்தியா


(கீழே வருவது “நல்லவர்களுக்கு ஏன் கெடுதல் நடக்கின்றது“ என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)

கேள்வி - பதில்கள்

ஞானம் தேடுபவர், உருவ வழிபாடு செய்வதை விட உருவமற்ற இறைவனை வழிபடுவது சிறந்த்து என்று சொல்லப்படுகிறது. அது ஏன்?

நீ உருவ வழிபாட்டிலிருந்து, உருவமற்ற வழிபாட்டுக்கு செல்ல வேண்டும். நேராக உருவமற்ற வழிபாட்டுக்கு செல்லும்போது, அந்த வழி துன்பம் நிறைந்ததாக இருக்கும். பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் ‘சில மக்கள் உருவமற்ற இறைவனை வழிபடுகிறார்கள். ஆனால் அந்த வழி வலியும், துன்பமும் நிறைந்தது“ என்று சொல்கிறார். நீங்களே இதை பார்க்க முடியும். உதாரணமாக மோசஸின் வாழ்க்கையைப் பாருங்கள். அவர் வழி துன்பமும் வருத்தமும் நிறைந்ததாக இருந்தது. ஏசுபிரானின் வாழ்க்கையும் துயரம் நிறைந்ததாக இருந்தது. முகமது நபியின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தன் வாழ்க்கையில்,பல துன்பங்களையும், வலியையும் அனுபவிக்க நேர்ந்தது. அவர் சரித்திரம் இரத்தம் சிந்துவதாக இருந்தது. அவருடைய மரணத்துக்கு பின்பும், துக்கம் தொடர்ந்தது. அவருடைய குடும்பத்தினரும் துன்பத்துக்கும், வலிக்கும் உள்ளாக நேர்ந்தது.
ஆகவே புத்தர் “புத்தம் சரணம் கச்சாமி‘ என்று சொன்னார். ‘நான் புத்தரிடம் அடைக்கலம் புகுகிறேன் என்று அர்த்தம். புத்தர் என்றால், உருவமற்ற கடவுளுக்கு ஒரு உருவம் கொடுத்திருக்கிறோம் என்று பொருள்.

புத்தர் சொன்னது.“சங்கம் சரணம் கச்சாமி“.என்னை இந்த சமுதாயத்துக்கு அர்ப்பணிக்கிறேன் நான் இந்த சமுதாயத்துக்கு சேவை செய்து அடைக்கலம் புகுகிறேன்“ என்று அர்த்தம். மேலும் புத்தர் சொன்னார். “தம்மம் சரணம் கச்சாமி“ நான் இறுதியான உண்மையிடம்  அடைக்கலம் புகுகிறேன்.
துன்பத்திலிருந்து விடுபடுவதற்கு புத்தர் நான்கு விஷயங்களை சொன்னார்.துன்பத்தை அடையாளம் கண்டுகொள். ஒரு காரணம் உண்டு. துன்பத்திலிருந்து விடுபட முடியும். துன்பத்திலிருந்து விடுபட புத்தரிடம் (ஞானியிடம்) அடைக்கலம் புகவேண்டும். புத்தர் என்பது உருவமற்ற இறைவனின் உருவமுள்ள அடையாளமென கொள்ளலாம்.பகவான் கிருஷ்ணரும் இதையே சொல்லியிருக்கிறார்.   
அஹம் த்வம் சர்வ பாபேஹ்யோ, மோக்ஷபாபேப்யோ மோக்ஷயிஷயாமி மா சுசஹ“

உருவமற்ற இறைவனை வழிபடுபவர்களின் பாதை மிகக் கடினமானது, துயரம் நிறைந்தது என்று பகவான் கிருஷணர் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறார். உண்மை. எல்லா வழிபாடுகளும் உருவமற்ற இறைவனையே அடைகின்றன. உருவ வழிபாட்டு வழி ஆனந்தமானது. மக்கள் புரிந்து கொள்ளக் கூடியது. நீங்கள் பாறைகளும்,குண்டுகுழிகளும் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது நெடுஞ்சாலை போன்ற அருமையான பாதையைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுப்பது உங்களை வேறு பாதைகளில் எடுத்துச் செல்லும்.

இந்தியா, ஏன் ஞானிகள் விரும்பி வந்து சேருமிடமாக உள்ளது? ஏன் ஆன்மீக வளம் பெற்ற தனி நாடாக இருக்கிறது? இந்தியாவுக்கு ஏதாவது தனிச் சிறப்பு உள்ளதா?

உலகின் எல்லாப் பகுதிகளிலும் புனிதர்கள் இருந்திருக்கிறார்கள்.கலிஃபோர்னியாவின் நகரங்களுக்கு புனிதர்களின் பெயரையே வைத்திருக்கிறார்கள்.க்விபெக் அல்லது மாண்ட்ரியால் சென்றாலும் பல நகரங்களுக்கு புனிதர்களின் பெயர் உள்ளது. ஆனால் இந்தியா பட்டியலில் முதலிடம் பெறுகிறது.
இந்தக் கேள்வி, ஸ்விட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் மலை ஏன் உள்ளது என்று கேட்பதை போலிருக்கிறது. அமெரிக்காவில் ஏன் பெரிய அழகான ஏரிகள் உள்ளன? ஏன் நயாகாராவில் மட்டும் பெரிய நீர்வீழ்ச்சிகள் உள்ளது? அப்படித்தான்! ஒவ்வொரு நாடும் ஏதோ ஒன்றுக்குப் பிரசித்தமானது. வெந்நீர் ஊற்றுகளை அமெரிக்காவில் யெல்லோஸ்டோன் பூங்காவில் பார்க்கிறோம். பல ஆண்டுகளாக இந்தியா அறிஞர்களும், ஞானிகளும் வசிக்கும் நாடாக இருந்து வருகிறது. எனவே இன்றைய கால கட்டத்திலும், கம்ப்யூடர் துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. கம்ப்யூடர் துறை அறிவு சார்ந்த தொழிலாக இருப்பதால் இந்தியா இத்துறையில் முதலிடம் பெற்றிருக்கிறது. ஒருவேளை நாட்டின் டி.என்.ஏ வில் அறிவாளிகள் மற்றும் ஞானிகள் பலரை உருவாக்கும் திறன் உள்ளது என்று நினைக்கிறேன். ஆனால் உலகில் எந்த நாட்டிலும் ஞானிகளுக்கு குறைவில்லை. சைனா மற்றும் ஜப்பானிலும் பல ஞானிகள் உள்ளனர்.

குருதேவா ஏன் பக்தி யோகம், கர்ம யோகத்தையும் ஞான யோகத்தையும் விட சிறப்பாக சொல்லப்படுகிறது ?

பக்தி யோகம் மிகவும் ருசிகரமானது. எளிதானது. சீக்கிரம் அடையக் கூடியது. மிகக் குறைந்த உழைப்பில், நிறையச் சாதிப்பது அறிவாளிகளின் போக்கு.

ஆசிர்வாதத்துக்கு காலாவதியாகும் தேதி உள்ளதா? சில சமயம் ஆசிர்வாதம் பலிக்காமல் போகிறது. அதன் காரணம் என்ன?

நான் உன்னை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தங்கம், வைரத்துக்கு காலாவதியாகும் தேதி உண்டா? நீ ஆசிர்வாதத்தை, தங்கம் வைரத்தை விட, மஞ்சள் கற்களை விட, உலோகத்தை விட குறைவாக நினைக்கிறாயா? ஒரு போதும் அப்படி நினைக்க வேண்டாம்.

குருதேவா ஸாதனா என்ற செல்வம் நாம் இவ்வுலகை விட்டுச் செல்லும் போது நம்மோடு வரும் என்றால், ஏன் நாம் ஸாதனாவிலேயே முழு நேரத்தையும் ஈடுபடுத்துவதில்லை?

உன்னால் அப்படி செய்ய முடியாது. உடலால் எல்லா நேரமும் ஸாதனாவில் ஈடுபட முடியாது. ஒரு வருடம் சாப்பிடக் கூடிய உணவை, நீ இரண்டே நாட்களில் உண்ண முடியாது. ஒவ்வொரு நாளும், நீ குறிப்பிட்ட உணவையே உண்ணமுடியும். அதே போல், ஸாதனாவிலும் அதிகப்படியாக ஈடுபட முடியாது. அப்படி செய்தால், நீ ஒரு நீல நட்சத்திரமாகி விடுவாய். (வாழும் கலையில் நீல நட்சத்திரம் என்று சொல்வோம்.) நீல நட்சத்திரம் என்றால் அவன் நிலத்தில் நடக்கமாட்டான். மரை கழன்றவன். (மனநலமற்றவன் )

வாழும் கலை துவங்கிய காலத்தில், ஒருவர் சஹஜ் சமாதி தியானப் பயிற்சி எடுத்துக்கொண்டார். அவர் ஒரு புத்திசாலி. அவருக்கு அந்த பயிற்சி மிகவும் பிடித்துவிட்ட்து. நான் இன்றே ஞானமடைய விரும்புகிறேன்; ஞானமடையும் வரை விடாமல் தியானம் செய்வேன் என்று சொன்னார். அவர் அமர்ந்து, ஒரு நாளில் எட்டு மணி நேரம் வரை தியானம் செய்வார். டெல்லி ராமகிருஷ்ண ஆசிரமத்துக்கு சென்று, நாள் முழுதும் அங்கு அமர்ந்து தியானம் செய்வார். மக்கள் தியான மண்டபம் மூடும்போது வெளியே போக சொல்லும் வரை அங்கேயே அமர்ந்திருப்பார். திடீரென்று ஒரு நாள், அவர் தான் ஹனுமான் என்று எண்ணத் துவங்கினார். அங்குள்ள கோவிலுக்கு சென்று, “நான் தான் ஹனுமான். நானிருக்கும் போது ஏன் மக்கள் இந்தக் கல்லை வழிபடுகிறார்கள்”? என்று சொன்னார்.

அங்கு என்ன நடந்திருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம். 12 போலீஸ் காரர்கள் வந்து அவரை அங்கிருந்து கூட்டிச் செல்ல வேண்டி வந்தது. அவரை மனநோய் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த நாட்களில் செல்ஃபோன் கிடையாது. நான் ஜான்சியில் இருந்தேன். இந்தூரில் ஒரு நிகழ்ச்சிக்காக செல்ல வேண்டியிருந்தது. ஜான்சி இரயில் நிலையம் சென்ற பின்பு, நாம் டெல்லி செல்ல வேண்டுமென்று சொன்னேன். நான் டெல்லிக்குச் சென்ற பின், அங்குள்ளவர்களுக்கு பாரம் இறங்கியது. அந்தப் பையனை எப்படி நடத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.

நிச்சயமாக அந்தப் பையன் குணமாகிவிட்டான். என்ன சொல்கிறேன் என்று புரிந்து கொள்ளுங்கள். ஸாதனா என்பதை நாம் படிப்படியாகச் செய்ய வேண்டும். முதுநிலைப் பயிற்சி சற்று அதிகம் செய்யலாம். ஆண்டுக்கு 4 அல்லது 5 முறை செய்யலாம். நாள் முழுதும் ஸாதனாவில் அமர்ந்திருப்பது சாத்தியமில்லை. வளர்ச்சி படிப்படியாக இருக்க வேண்டும். ஒருநாள், திடீரென்று உனக்குப் புரியும். ஓ நான் மாறி விட்டேன். எதுவும் என்னைத் தொந்தரவு செய்வதில்லை. நான் ஆனந்தமாக இருக்கிறேன். என் மகிழ்ச்சியை எதுவும் கெடுக்க முடியாது. இப்படிப்பட்ட ஆச்சரியம், நீ வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் போது வரும்.


நல்லவர்களுக்கு ஏன் தீயவை நிகழ்கின்றன?

வியாழக்கிழமை, 28 மே,2015,

பெங்களூரு, இந்தியா


அனைத்து ஆன்மீக பயிற்சிகளும் பிராணன் உடல் வழியாக முழுவதும் மையநாடியை சென்றடைய உதவுகின்றன.இந்த மையநாடி நமது உடலின் நடுப்பகுதியினூடே ஓர் தூண் போன்று இருக்கின்றது. அது யோகாவின் மூலம் செயல்திறன் பெறுகின்றது. யோகா என்பது ஆசனங்கள் மட்டுமல்ல, தியானமும் ஆன்மீகப் பயிற்சிகளும் இணைந்தது. இந்த ஆற்றல் பாயும் போது, வலிமையுடனும் உறுதியாகவும், மனத்தெளிவுடனும் உணருகின்றீர்கள். நாம்  புலன்களை அதிகமாகப் பயன்படுத்தும் போது இந்த  ஆற்றல் வலுவிழக்கின்றது. அதிக உணவு உட்கொள்வது, அதிக திரைப்படங்களை காண்பது, அதிகமாக கவலைப்படுவது அல்லது பேரார்வம் மிக்கவராக இருப்பது என்பது போன்ற நிலைகளில் பிராணன் மையக் கால்வாய் வழியாக செல்லாமல் பலமிழக்கின்றது. பிராணன் உடைந்தது போன்ற உணர்வினை பெறுகிறோம். பிராணனின்  ஓட்டம் உடைந்து, ஏடாகூடமாக செல்வது போன்று  தோன்றும் போது, மனம் அலைபாய்கின்றது. கவனக்குறைவு, கற்க முடியாத அல்லது வெளிப்படுத்த முடியாத நிலை, போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நல்ல தொடர்புகள் ஆற்றலைச் சரியான நிலைக்கு மீட்டெடுத்து வருகின்றன.

நீங்கள் செய்வது சரியா அல்லது தவறா என்று உங்களது பிராணனே உங்களுக்கு தெரிவிக்கும். பிராணன் உடையும்போது உங்கள் உடலின் நடுப்பகுதியில் தொடர் பாய்வினை உணர முடியாமல் நீங்கள் பலமிழந்து உணர்வீர்கள். தடையற்று  பிராணன் பாய்ந்து கொண்டிருக்கும் போது,  உண்மை, அர்ப்பணிப்பு, தைரியம், நம்பிக்கை கருணை, மற்றும் மகிழ்ச்சி ஆகியவை வாழ்வில் தோன்றும்.

குருதேவ், நல்லது ஏதேனும் நிகழும் போது நாம் அதை குருக் கிருபை என்று கூறுகிறோம். கெட்டது நிகழும் போது என்ன கூறுவது? குரு இருப்பது ஒருவருக்கு பாதுகாப்பு என்று பொருள் எனக் கூறியிருக்கின்றீர்கள். அப்படியானால் ஏன் தீயவை நிகழ்கின்றன?

நல்லது. கடவுள்  யார் எப்படியிருந்தாலும்,அனைவரையும் விரும்புகிறவர். கெட்டவை நிகழும் போது அது உங்கள் நம்பிக்கையை அகற்றுமானால் அது நம்பிக்கையே அல்ல. ஆனால் தீயது எது நிகழ்ந்தாலும், நம்பிக்கை அகலாமல் இருந்தால் அதன் முடிவு எப்போதுமே சிறப்பானதாகவும் அற்புதமாகவுமே இருக்கும்.

பாண்டவர்களின் தாயான குந்தி ஸ்ரீ கிருஷ்ணரிடம் ஒரு விசித்திரமான வரத்தினை வேண்டினாள். அவள்," கிருஷ்ணா! என் வாழ்க்கையில் தீயவை நிகழட்டும்" என்று கூறினாள் அதிர்ச்சியடைந்த ஸ்ரீ கிருஷ்ணர், ஏன் இவ்வாறு கேட்கின்றீர்கள் என வினவினார். குந்தி, " எப்போதெல்லாம் தீயவை நிகழ்கின்றனவோ அப்போதெல்லாம், நீ என்னுடனேயே இருக்கின்றாய் நான் அவற்றைத் தாண்டி வர உதவுகின்றாய் என அறிகின்றேன். ஒவ்வொரு ஆபத்தான காலத்திலும் நீ என்னுடனேயே இருந்ததை நான் அறிந்திருந்தேன் "என்று பதிலிறுத்தாள்.இத்தகைய மெய்யுணர்தல் மிக தனித்துவம் வாய்ந்தது. கெட்டவை நடக்கும் போது நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதல்ல, ஏனெனில் நீங்கள் முற்பிறவியில் ஏதேனும் தீயது செய்திருக்கலாம், அந்தக் கர்மபலன் இப்போது வெளிப்படலாம். அந்தப் பலன்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். தவறான உணவை உண்டால் அது ஏதேனும் நோய் வடிவில் வெளிவரும். உங்கள் மனநிலை பதட்டமாக இருந்தால், அது உங்கள் உடலில் ஏதேனும் நோயாக வெளிவரும்.

குருதேவ், ஏன் அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரின் விஸ்வரூபத்தினைக் கண்டு அச்சத்தால் கல்லாய்ச் சமைந்து விட்டான்? அவன் தயாராக இல்லாத காரணத்தாலா? கடவுளின் வடிவம் ஏன் அச்சத்தை வரவழைக்கின்றது?

புதிய அல்லது பழக்கமில்லாத எதுவும் பயத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் புதியவர் எவரையேனும் கண்டால் புதிய சூழலில் பயப்படுவார்கள். மூன்று வயதிற்கு மேல் குழந்தைகள் ஒரு புதியவரிடம் செல்ல மறுப்பார்கள். புதியவரிடம் பழக ஓரிரண்டு நாட்கள் ஆகும். நமது நரம்பு மண்டலமும் சரி செய்து கொள்வதற்கும், ஞானத்தைப் பற்றிக் கொள்வதற்கும் சற்றுநேரம் எடுத்துக் கொள்கின்றது, அதனால் தான், ஓர் ஆசிரியர் தேவை, ஓர் குரு முற்றிலும் தேவை. அது பயிற்சியாளர் மற்றும் மெய்க்காப்பு இன்றி நீச்சல் குளத்தில் குதிப்பது போன்றதாகும், அதிக பய உணர்வை அடைகிறீர்கள். ஒரு மெய்க்காப்பு இருந்தாலும் நீச்சல் குளத்தில் குதிக்க மக்கள் பயப்படுகின்றனர், ஏனெனில் அது உங்கள் உயிரை எடுத்து விடக்கூடும். அது போன்று ஒரு மாபெரும் ஆற்றல் அலை, சிறிய மனதை, நான் எனும் அகங்காரத்தை, ஆட்டி அசைத்து விடும், அதனால் பயம் ஏற்படும், அது இயல்பானது தான்.

குருதேவ், இருப்பின் ஏழு நிலைகளில் யார் தியானம் செய்வது?

ஏழு நிலைகளும் ஒத்திசைவுடன் இருக்கும் போது தியானம் நிகழ்கின்றது. யார் என்பதே இங்கு கிடையாது. தியானம் நிகழும் போது, அது தன் தாக்கத்தினை - உடல்,மூச்சு, மனம், அறிவு, நான் எனும் அகங்காரம், நினைவுத் திறன் மற்றும் ஆத்மா என்னும் ஏழு நிலைகளிலும் வெளிக் காட்டுகின்றது.

துறவு கர்வத்தை ஏற்படுத்துமா? அவ்வாறெனில் அதை எவ்வாறு கடந்து வருவது?

நிச்சயமாக. இரண்டு விதமான கர்வம் உண்டு.
1. அடைதல் மற்றும் வைத்திருத்தலினால் கர்வம்
2. விட்டுவிடுதல் தியாகம் இவற்றினால் ஏற்படும் கர்வம்

இரண்டுமே மோசமானவை. உண்மையில், அடைதலினால் ஏற்படும் கர்வத்தை கடப்பது சுலபம், ஆனால் தியாகத்தினால் ஏற்படும் கர்வத்தைக் கடப்பது கடினம், அது சில காலம் நீடித்து இருக்கும்.

குருதேவ், நான் எனும் அகங்காரத்திலிருந்து , சுயத்திற்குச்  செல்லும் பயணத்தைப் பற்றிச் சற்று விவரித்துக் கூற முடியுமா? இதை எளிதாக அடைவது எப்படி?

நான் எனும் அகங்காரத்திலிருந்து பயணம் செய்யும் போது, "பார் நான் சுயத்திற்கு செல்கின்றேன் " என்று கூறும். அவ்வாறானால் ஒரு அங்குலம் கூட அது  நகர்ந்திருக்காது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குப் பயணம் என்பது அல்ல. உங்களுக்கு நான் எனும் அகங்காரம் இருப்பதாக உணர்ந்தால், அது அப்படியே இருக்கட்டும். அதைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? அதில் தலையிடாதீர்கள் அல்லது அதை அழிக்க முற்படாதீர்கள். நான் எனும் அகங்காரத்திற்கு மாற்று மருந்து இயல்பாக இருப்பது தான்.

உங்கள் சுயத்திலிருந்து நீங்கள் வெளிவர முடியாது. சுயம் என்பது மெய்யுணர்வு; அதிலிருந்தே அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அது தான் நீங்கள், மற்றும் உங்களை சுற்றி இருக்கும் அனைத்தும் ஆகும். “நான்” என்று நீங்கள் கூறும் போது அந்த “நான்” சுயத்தினாலேயே உருவாக்கப் பட்டிருக்கின்றது.உடல், மனம், மற்றும் அனைத்தும் சுயத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. சுயம் வெட்ட வெளியைப் போன்றது. அதிலிருந்து வெளியேற முடியாது, அதை எதுவும் செய்யவும் முடியாது.

அபயா (பயமின்மை) என்பது தெய்வீகக் குணம் என்று தாங்கள் கூறியிருக்கின்றீர்கள். பயமின்மையை எவ்வாறு அடைவது? எனக்கும் இன்னமும் பயப் பதிவுகள் உள்ளன.


பதஞ்சலியின் யோகா சூத்ராவில் பதஞ்சலி, மிகச் சிறந்த விவேகிகளையும்,அறிஞர்களையும் கூட எது தாழ்த்துகிறது என்றால் அது பயம் அல்லது அபிநிவேஷ் என்கிறார்.இயற்கை அதை எங்கேயோ ஓரிடத்தில் வைத்திருக்கிறது. ஆழ்ந்த சார்புணர்வு, அன்பு, அர்ப்பணிப்பு மற்றும் தியாக உணர்வு ஆகியவை ஒருவருக்குப்  பயத்தைக் கடக்க உதவும்.

தியானம் பற்றிய உண்மைகள்

புதன்கிழமை 29 ஏப்ரல் 2015

வாஷிங்டன் டி.சி. யுனைடெட் ஸ்டேட்ஸ்


(யோகா மற்றும் தியானத்தின் மூலம் அமைதியினை உருவாக்குங்கள்) என்ற கட்டுரையின் தொடர்ச்சி கீழே வருகிறது.

கேள்வி பதில்கள்

ஒரு குழுவாக அமர்ந்து தியானம் செய்வதில் கிடைக்கும் அனுபவம் தனியாக அமர்ந்து தியானம் செய்யும் போது இருப்பதில்லை. குழு தியானம் மற்றும் தனி நபர் தியானம் பற்றிச் சொல்ல முடியுமா?

ஆம். குழுவாக அமர்ந்து பலர் தியானம் செய்யும் போது ஒரு தாக்கம் ஏற்படுகிறது. நாமனைவரும் சக்தியுள்ளவர்கள். நாம் மற்றவர்களின் சக்தியைப் பெற முடியும். மற்றவர்களுடைய செல்வாக்கால் நாம் பாதிக்கப்படுகிறோம். குழுவில் ஒரு பைத்தியக்காரர் இருந்தால் நீயும் பைத்தியமாகி விட முடியும். இப்படிப்பட்ட அனுபவம் எல்லோருக்குமே இருக்கும் என்று நினைக்கிறேன். நீ ஒரு அறையில் நுழையும் போது அங்குள்ளவர்கள் கூச்சலிட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தால், உன் மூளையில் ஒரு தாக்கம் ஏற்படுகிறது. நீ குவாண்டம் ஃபிஸிக்ஸ் படித்திருந்தால், இப்படிப் பட்ட தாக்கம் ஏன் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொள்வாய்.

நிறைய பேர் ஒன்றாக அமர்ந்து தியானம் செய்யும் போது அவர்களைச் சுற்றி ஒரு புலம் (ஃபீல்ட்) உருவாகிறது. எனவே குழுவில் செய்யும் தியானம் ஆழமாக உள்ளது. ஞானம் பற்றிய உரைகளை கேட்டு வந்தால், தியானப்பயிற்சி எடுத்துக் கொண்டால், நீ தனியாக தியானம் செய்யும் போதும், அதன் தாக்கம் குழுவில் செய்யும் தியானம் போலவே ஆழமாக இருக்கும்.

ஒவ்வொரு நாளும் இரு முறை தியானம் செய்ய வேண்டும் என்று கூறினீர்கள். நான் 24 மணி நேரமும் தியான நிலையில் இருக்க விரும்புகிறேன். தினசரி இரு முறை தியானம் செய்வது சரி தான். ஆனால் வாழ்க்கை மிகவும் மன உளைச்சலோடு இருப்பதால், இரு முறை தியானம் செய்தால் போதாது என்று நினைக்கிறேன்.

வண்டியை குதிரைக்கு முன் வைக்கலாமா? துவக்கத்தில் ஒவ்வொரு நாளும் 20 நிமிடம் தியானத்தில் அமர்ந்து பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. அப்படிச் செய்தால் நாள் முழுதும் மனம் அமைதியாக இருக்கும். அது 24 மணி நேரம் தியானம் செய்வது போலவே இருக்கும். இப்படிப்பட்ட அனுபவம் கிடைக்க சில காலம் பிடிக்கும். இடைவிடாமல் பழக்கப்படுத்திக் கொண்டால் உன்னால் அதை உணர முடியும். முழு மனதாக தியானம் செய். படிப்படியாக மெதுவாக ஈடுபாட்டோடு செய். அப்படிச் செய்ய முடியவில்லை என்று செய்யாமல் இருக்காதே. சிலர் அதை ஒரு சாக்காக எடுத்துக் கொண்டு 24 மணி நேரம் தியானம் செய்த பின்னும் என் மனம் அலைபாய்கிறது என்று சொல்கிறார்கள்.

எனவே, தினசரி 20 நிமிட தியானம், உன் மனதை அமைதியாக வைக்க, பழக்கத்தில் வர உதவும். படிப்படியாக உனக்கு மேலும் நேரம் கிடைக்கும் போது, மேல் நிலை தியானப் பயிற்சிகளில் கலந்து கொண்டு, அதிக நேரம் தியானத்தில் ஈடுபடலாம். அப்படிப் பழகிய பின் ஒரு நாள் தியானம் செய்ய முடியாமல் போனாலும் உன் மனம் அமைதியாக இருப்பதை உன்னால் உணர முடியும்.

என்னுடன் வேலை செய்பவர்கள் மன உளைச்சலோடு இருக்கிறார்கள். அவர்களை எப்படி யோகப் பயிற்சிக்கு அழைத்து வருவது என்று எனக்கு தெரியவில்லை. எப்படிச் சொல்லி அவர்களை யோக சாதனைகளை கற்கும் படி செய்யலாம்?

இப்படிப்பட்ட சிந்தனை உன்னோடு இருக்கட்டும். ஏனென்றால் அவர்களை இந்த வகுப்புக்கு அழைத்து வர உனக்கே ஒரு வழி புலப்படும். நீ யோக சாதனைகளால் ஏற்படும் நன்மைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். அல்லது யோகாவுக்கு முன்னும் யோகாவுக்குப் பின்னும் என்ற தலைப்பில் ஒரு ஆராய்ச்சி செய்து, ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடலாம். இக்கட்டுரையைப் பற்றி விவாதிக்க அவர்களை அழைக்கலாம். விஞ்ஞான அறிவியலில் விருப்பமுள்ள மனிதர்கள் இப்படிப்பட்ட உரையாடல்களில் கலந்து கொள்ளத் தயங்க மாட்டார்கள். ஆனால், சிலர் எதையும் ஒப்புக்கொள்ளாத மனப் போக்குடையவர்களாக இருக்கக் கூடும். அவர்களை விஞ்ஞான அறிவுடையவர்கள் என்று சொல்ல மாட்டேன். மனதில் பார பட்சம் இருக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன் நான் பாஸ்டன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஒரு பயிற்சி நடத்தத் திட்டமிட்ட போது, அங்குள்ள அதிகாரிகள் அதை ஒரு வித்தியாசமாகக் கருதினார்கள். நான் மிகவும் வலியுறுத்திக் கேட்டதால், ஒரு சிறிய தூசி படிந்த அறையைக் கொடுத்தார்கள். 9 கைதிகளை மட்டும் பயிற்சிக்கு அனுப்பினார்கள். ஆனால் இன்று அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று பல சிறைச்சாலைகளில் யோகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மக்கள் இப்பயிற்சிகளை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

தியானம் என்றால் என்ன? தியானம் செய்யும் போது, நான் வழி நடத்தும் அறிவுரைகளை கேட்டேன். இருந்தாலும் என் மனம் (பல சிந்தனைகளோடு) அலைந்தது. ஆனால், 25 நிமிடம் தியானத்தில் இருந்ததை நான் உணரவில்லை.

சரி தான். உனக்கு முதல் அனுபவம். 25 நிமிடம் ஆனாலும், நேரம் கடந்ததை நீ உணரவில்லை. மனதில் சுற்றும் சிந்தனை அலைகள், கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாகி, உன் உடல் நன்றாக ஓய்வோடு இருப்பதை நீ அனுபவத்தில் உணரலாம். இது தான் தியானத்தின் அடையாளமாகும்.
உனக்குத் தெரியுமா? தியானம் என்பது ஒரு முறை செய்தால் போதாது. வழி நடத்துதலோடு செய்யும் தியானப் பயிற்சிகளுக்கான ஒலித் தட்டுகள் (ஆடியோ சி.டி) உள்ளன. துவக்கத்தில் இந்த ஒலித் தட்டுகளைக் கேட்டு நீ தியானம் பழகலாம். பழகிய பின் இந்த ஒலித்தட்டுகளுக்கு அவசியமிருக்காது.

நாம் சரியான திசையில் செல்கிறோம் (ஆத்மாவில் லயித்திருக்கிறோம் – நீங்கள் அதை எப்படி அழைத்தாலும்) என்பதை எந்த நேரத்தில் உணர முடியும் ?

இதை உன் காலில் உள்ள வலியைப் போல், வெளிப்படையாக உணர முடியும். உன் காலில் வலி இருக்கும் போது, யாரிடமும் சென்று என் காலில் வலியிருக்கிறதா? என்று கேட்க தேவையில்லை. அது ஒரு தனியான அனுபவம். தியானத்திலும் இப்படித்தான். நீ முற்றிலும் உனக்குச் சொந்தமான இடத்திலிருப்பதை உணர்வாய். ஆற்றல் மிகுந்திருக்கும். உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் சக்தியால் பூரித்திருப்பதை, துடிப்பதை உணரலாம். உண்மையில் உனக்கு ஒரு யோக ஆசிரியர் தேவையில்லை. ஒரு குழந்தை செய்வதை கவனித்துப் பார். பிறந்ததிலிருந்து 3 ஆண்டுகள் வரை, ஒவ்வொரு குழந்தையும் பல்வேறு விதமான யோக ஆசனங்களைச் செய்கிறது. மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானம் செய்கிறது. நாமனைவரும் பிறவியிலேயே யோகிகளாக இருந்தோம். ஆனால் நடுவில் அதை மறந்து விட்டோம். நாம் மறந்து விட்டதை திரும்பவும் செய்வது தான் யோக சாதனை என்பது.

நீங்கள் சேவை பற்றிப் பேசினீர்கள்.நேபாளத்தில் நடந்த நில நடுக்கத்தால் வந்த விளைவுகளை பற்றி எங்களில் பலர் கவலையாக இருக்கிறோம். நாங்கள் அங்கு அமைதியை நிலை நாட்ட, அங்கு ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை நீக்க, (உங்கள் பார்வையில்) நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

இன்று காலையில் கூட நேபாளத்தில் இருப்பவர்களோடு பேசினேன். அங்கு நிலைமை சீராகத் துவங்கியுள்ளது. காட்மாண்டு நகரில் மக்கள் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்புகிறார்கள்.ஆனாலும் 5000 மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள். தூரத்தில் இருக்கும் கிராம மக்களுக்கு உதவ பலர் சென்றிருக்கிறார்கள். இது இயற்கையில் ஏற்பட்ட பேரிடர். நீங்கள் அங்கு சென்று சேவையில் ஈடு பட விரும்பினால், உங்களால் இயன்றதை செய்யலாம். அங்கு ஐ.ஏ.எச்.வி நிறுவனம் சேவை செய்கிறது. அவர்கள் நேபாள மக்களின் புனர்வாழ்வுக்காக நிதி திரட்டுகிறார்கள். அவர்களுக்கு வீடுகள் கட்டித் தரப் போகிறோம். (மின்சாரம் இல்லாததால்) மக்களுக்கு சோலார் விளக்குகள் கொடுக்கிறோம்.