உன் இதயத்தின் குரலைக் கேள்

செவ்வாய்க்கிழமை – 27 மே - 2015      

பாத் ஆண்டகாஸ்ட், ஜெர்மனி



(புன்னகையோடு இரு. மற்றவர்களையும் புன்னகை புரியசெய் என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி கீழே வருகிறது)

கேள்வி - பதில்கள்

குருதேவா! என் குடும்பப் பொறுப்புக்காக பணம் சம்பாதிப்பதிலும், சேவை செய்வதிலும் சம நிலையில் சரியான கவனம் செலுத்த கடினமாக உள்ளது. இதற்கான சூத்திரம் ஏதாவது சொல்வீர்களா?

உனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியுமா? அப்போது எப்படி சமநிலையில் ஓட்டுகிறாய்? அதே போல் குடும்பப் பொறுப்பையும்,சேவை செய்வதையும் சமநிலையில் வைக்க முடியும். நீ சமூக சேவை செய்யும் போது அதிலேயே மூழ்கி, உன் குடும்பப் பொறுப்பை புறக்கணித்தால், உன் மனச்சாட்சி உன்னைக் குத்தும். அதே போல் உன் குடும்பத்தை மட்டும் மனதில் நினைத்து என் மனைவி, என் பெற்றோர்கள், என் கணவன், என் குழந்தைகள் என்று எப்போதும் அவர்களைப் பற்றியே கவலைப் பட்டு, சமூக சேவையில் ஈடுபடாவிட்டாலும், “நான் எப்போதும் மற்றவர்களின் நலனுக்காக எதுவும் செய்யவில்லை. உலக நன்மைக்காக எதுவும் செய்ய வில்லை. சம்பாதிக்கும் பணம் முழுதும் எனக்காகவே செலவழிக்கிறேன். யாருக்கும் எதுவும் கொடுக்கவில்லை“ என்று உன் மனச்சாட்சி உன்னைக் குத்தும்.

மக்கள் தங்களுக்காக விலை உயர்ந்த துணிகளை வாங்குகிறார்கள். விடுமுறை நாட்களில் சுற்றுப் பயணம் சென்று நிறைய செலவழிக்கிறார்கள். ஆனால் ஒரு டாலர் ( ஒரு யூரோ) கூட யாருக்கும் நன்கொடை கொடுக்கத் தயாராக இருப்பதில்லை. நாம் சம்பாதிப்பதில் குறைந்த பட்சம் 3% தனியாக எடுத்து வைத்து, தர்ம காரியத்துக்கு நன்கொடை அளிக்க வேண்டும்.சமுதாய நலனுக்காக செலவிட வேண்டும். அப்படி செய்யும்போது,சம்பாதிக்கும் 97% பணம் சுத்தமாக இருக்கும். அப்படி செய்யாமல் 100% சம்பாதிப்பதையும் உனக்கே செல்விடுவது நல்லதல்ல. சம்பாதிக்கும் பணம் சுத்தமாக இருக்க வேண்டும். சம்பாதிப்பதில் 97% மட்டுமே சுத்தமான பணம் என்று நினைத்துக் கொள். 3% லிருந்து 5% வரை நன்கொடைக்காக செலவிடு. நீ சம்பாதிப்பது எவ்வளவாக இருந்தாலும் அது உனக்குப் போதாது.யாரைக் கேட்டாலும், எனக்குத் தேவையான பணம் கிடைப்பதில்லை. குறைகிறது என்றே சொல்வார்கள்.

பெங்களூர் ஆசிரமம் துவங்கிய போது, பலர் ஆசிரமத்துக்கு வந்தார்கள். அவர்கள் எல்லோரும் தங்குவதற்கு போதிய அறைகள் இல்லை. கழிப்பறைகளும் குறைவாகவே இருந்தன. வகுப்பு நடத்த போதிய மண்டபங்கள் இல்லை. இருந்தபோதிலும் “நாம் ஆசிரமத்துக்கு வெளியே சேவை செய்வது அவசியம். வெளியே வசிக்கும் மக்களுக்கு கழிப்பறைகள் கட்டித் தரவேண்டும்“ என்று சொன்னேன். “நமக்கே இடம் போதவில்லை“ என்று ஆசிரமத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். “எப்போதுமே நமக்கு இடம் போதாது. ஏனென்றால் எவ்வளவு கட்டினாலும் அதை விட அதிகமாக மக்கள் வருவார்கள்“ என்று நான் சொன்னேன். “எனவே முதலில் நமக்கான வசதிகளை செய்து கொள்வோம். பிறகு மற்றவர்களுக்குச் சேவை செய்வோம் என்று நீ சொல்ல முடியாது. இரண்டுமே அவசியம். இங்கு ஆசிரமத்தில் ஒரு தூண் கட்டினால், ஏழைகளுக்கும் கட்டித் தரவேண்டும் என்று அவர்களுக்கு எடுத்துச் சொன்னேன்.

நாம் அப்படித் தான் செய்தோம். இப்போது ஆசிரமத்துக்கு வெளியே வசிக்கும் அனைவருக்கும் கழிப்பறை வசதி உள்ளது. முன்பு அவர்கள் மண்ணால் கட்டிய குடிசை வீடுகளில் வசித்தார்கள். இப்போது ஒரு குடிசையை கூட பார்க்க முடியாது. அவர்கள் வாழ்க்கையில் வளர்ச்சி அடைந்து செங்கல், சிமெண்ட்டால் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கிறார்கள்.எனவே நாமனைவரும் இணைந்து வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட வேண்டும். நம் இதயத்தில் குரலைக் கேட்க வேண்டும். இதயத்தின் குரலைக் கேட்கும் போது, நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியைக் காண்போம். நம் ஒவ்வொரு செயலும் ஏழைகளிடம் இரக்கம் காட்டுவதாக, நமக்கும் அவர்களுக்கும் நன்மை தருவதாக இருக்கும்.

மற்ற குருமார்களுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

இது என்ன கேள்வி! உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரிடமும் என் உறவு மிகவும் நன்றாக உள்ளது. என் பக்கத்திலிருந்து யாருடனும் எனக்குப் பிரச்சினை இல்லை. யாருக்காவது என்னோடு பிரச்சினை இருந்தால் அது அவர்களுடைய பிரச்சினை. மக்களிடையே உண்மையான ஆசிரியராக, உண்மையான சமூக சேவகராக, உண்மையான குருவாக இருப்பவர்களால் பிரச்சினையும் இல்லை. ஆனால் எல்லாத் துறைகளிலும், சில கறைபடிந்த மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பிரச்சினையாக இருக்கிறேன். அவர்கள் எனக்கு பிரச்சினையாக இருக்கிறார்கள். நேர்மையற்ற டாக்டருடன் எனக்குப் பிரச்சினை உண்டு. இலஞ்ச ஊழல் செய்யும் அரசியல்வாதியுடன் எனக்குப் பிரச்சினை உள்ளது. போலியான குருமார்களுடன் எனக்கு பிரச்சினை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இது ஒரு பிரச்சினை மட்டுமல்ல. ஒரு சவால். இப்படிப்பட்ட மனிதர்களிடம் ஒரு நன் மாற்றத்தைக் ஏற்படுத்த வேண்டும். நான் அதைப் பற்றிச் சிந்திக்கிறேன். உங்களிடம் நல்ல ஆலோசனை இருந்தால் சொல்லுங்கள்.

ஒருமுறை இந்தியாவில் ஊழல் செய்யும் அரசியல்வாதி என்னைப் பார்க்க வந்தார். அவரை வரவேற்று மேடையில் அமரச் செய்தேன்.அங்கிருந்தவர்களுக்கு அந்த மனிதர் மேடையில் என்னுடன் அமர்வது பிடிக்கவில்லை. ஏன் ஊழல் செய்பவரை மேடையில் அமர அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்கள். அந்த மனிதர் என்னிடம் வந்து திருந்தாவிட்டால் எங்கு போய் திருந்துவார்? என்று கேட்டேன். நான் எல்லா இலஞ்ச ஊழல் செய்பவர்களையும் என் மேடைக்கு அழைக்கிறேன் என்று சொன்னேன். அவர்களோடு மேடையை பகிர்ந்து கொள்வதில் எனக்குத் தயக்கமில்லை. உண்மையில் அவர்கள் எல்லோரும் நம் ஆசிரமத்துக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். இங்கு வந்து பார்த்து அவர்கள் தங்கள் பார்வையை விரிவாக்கிக் கொள்ள முடியும். எங்கு நம்மைச் சேர்ந்தவர் என்ற உணர்வு இல்லையோ, அங்கு இலஞ்ச ஊழல் துவங்குகிறது. அப்படிப்பட்ட ஊழல் செய்பவர்கள் நம்முடைய ஆசிரமத்துக்கு வந்து பார்த்தால், அவர்களுக்குத் தானாகவே, எல்லோரும் நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு வந்து விடும்.

கெட்டவர் என்று நீ நினைப்பவர்களோடு கை கொடுத்தால், சீர்திருத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களுக்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. எனவே யாரையும் தீண்டத் தகாதவராக்க கூடாது. உன்னோடு நட்பு வைக்க விரும்பவில்லை என்று சொல்வதை விட, நாம் ஒன்று சேர்ந்து நல்ல காரியங்கள் செய்வோம் என்று சொல்வது மேலானது என்பது என் கருத்து.

அன்பான குருதேவா! என் அன்புக்குரியவர்களின் மேலும் மேலும் எழும் தேவைகளை நிறைவேற்றி திருப்திப்படுத்துவது எப்படி?

சில சமயங்களில் சற்று உணர்ச்சியில்லாமல் நடந்து கொள்வது சரி தான். அவர்களுடைய தேவை நியாயமாக இல்லாத போது, அர்த்தமில்லாமல் இருந்தால், நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் உனக்கில்லை. அதற்காக கவலைப்பட வேண்டாம். நீ டாக்டராக இல்லாத போது, ஒருவர் வந்து எனக்கு மருந்து கொடு என்று கேட்டால் உன்னால் என்ன செய்ய முடியும்? என்னால் மருந்து கொடுக்க இயலாது என்று சொல்ல வேண்டும். அப்படிச் செய்யாமல் நீ வருத்தப்பட்டால் அது உன் பிரச்சினை. நான் சொல்வது சரியா?

இதே போல் நாம் மன உறுதியோடு இருக்க வேண்டும். நீ மன உறுதியோடு இருக்கும் போது, யாரும் உன் மன அமைதியைக் கெடுக்க முடியாது. நடுநிலையில் இருக்கும் போது, உன்னால் உன் சூழ்நிலையை சமாளிக்க முடியும். சூழ்நிலை எவ்வளவு சிக்கலாக இருந்தாலும் சரி, மற்றவர்களின் தேவை எதுவாக இருந்தாலும், உன்னால் அதை சமாளிக்க முடியும். புரிகிறதா? சில மாதங்களுக்கு முன் ஒரு சூழ்நிலையை சந்திக்க வேண்டியிருந்தது. ஒரு கனவான் – பல காலமாக எனக்குத் தெரிந்தவர் – தன் மனைவியோடு மகிழ்ச்சியோடு வாழ்ந்தவர். இருவருமே நல்லவர்கள். ஆன்மீகப் பாதையில் செல்பவர்கள். அந்த கனவான் மற்றொரு பெண்ணை விரும்பி கோவிலுக்குச் சென்று அவளைத் திருமணம் செய்து கொண்டார். இப்போது அவர் வாழ்க்கையில் பிரச்சினை உருவாகி விட்டது. முதல் மனைவி மனமுடைந்து, “ என்னைக் கைவிட்டு வேறு ஒரு பெண்ணிடம் சென்று விட்டீர்கள் “ என்று கணவனிடம் சொன்னாள்.

அதற்கு அவளுடைய கணவர், “ உன்னையும் கைவிட மாட்டேன். அவளையும் கைவிட முடியாது. “ என்றார். அவர் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். அவர் மனைவி,“நான் தற்கொலை செய்து கொள்வேன். நீங்கள் அவளோடு சந்தோஷமாக வாழலாம்.“ என்றாள். புதிதாக வந்த பெண்,“ நான் உங்கள் வாழ்க்கையை கெடுத்துவிட்டேன், எனவே நான் தற்கொலை செய்து கொள்வேன். சந்தோஷமாக இருந்த உங்கள் இருவருடைய வாழ்க்கையையும் கெடுத்து விட்டேன்“ என்றாள். குற்ற உணர்வுடன், “நான் தற்கொலை செய்து கொள்வது தான் சரி. நீங்கள் சந்தோஷமாக வாழ்க்கை நடத்துங்கள் “ என்று சொன்னாள். அதற்கு அந்த மனிதர், “ நான் உன்னையும் கைவிட விரும்பவில்லை. அவளையும் கைவிட முடியாது. எனவே நான் தற்கொலை செய்து கொள்வேன். “ என்றார். அந்த மூவரும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகச் சொன்னார்கள்.

இந்தச் செய்தி எனக்குத் தெரிய வந்த போது, அந்த மூவரையும் அழைத்துப் பேசினேன். நீங்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டால், எங்களுக்கு (வாழும் கலைக்கு) என்ன ஆகும்? “ வாழும் கலையைப் பின்பற்றிய மூவர் தற்கொலை செய்து கொண்டார்கள்“ என்று மக்கள் பேசுவார்கள். அது வாழும் கலையின் மேல் ஒரு பெரிய கறை படிந்தது போலாகி விடும். வாழும் கலை அமைப்பு மக்களை தற்கொலையிலிருந்து காக்க முயற்சிக்கிறது. இப்போது அவர்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பேசுவார்கள். இல்லையா? எனவே எனக்கு இந்தப் பிரச்சினை ஒரு பெரிய சவாலாகி விட்டது. கடவுளே, ஏதாவது செய்து இவர்களுடைய தற்கொலையை தடுக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் பிரச்சினையாகி விடும். மக்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து விடுபடுவதற்காக வாழும் கலைப் பயிற்சிக்கு வருகிறார்கள். இங்கோ வாழும் கலையில் இருக்கும் மூன்று பேர் தற்கொலை செய்து கொள்வேன் என்கிறார்கள். ஒரு வழியாக அவர்களுடைய பிரச்சினையைத் தீர்த்து வைத்தேன். எப்படி என்று சொல்ல மாட்டேன். எல்லோரும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அந்தப் பெண்ணும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாள். எல்லாம் சரியாகி விட்டது.

குருதேவா! மாயை பற்றிச் சொல்வீர்களா? மாயையிலிருந்து எப்படி விடுபடலாம்?

ஆங்கிலத்தில் மெஷர் என்ற சொல்லே சமஸ்கிருத மொழியில் மாயா என்றழைக்கப்படுகிறது. மாயா (மாயை) என்றால் அளவிட முடிந்தது என்று அர்த்தமாகும். எனவே எல்லாம் மாயை என்றால் எல்லாம் அளக்க முடிந்தது என்று பொருள். நீரை, வெப்ப நிலையை, தூரத்தை,நேரத்தை அளக்க முடியும். எனவே நாம் இவ்வுலகில் காணும் அனைத்துமே நேரத்திலும் விண்வெளியிலும் அடங்கியது. இரண்டும் அளவிடக் கூடியவை. நேரத்திலும் விண்வெளியிலும் அடங்கிய எல்லாமே மாயை எனப்படும். அளவிட முடிந்த எல்லாமே மாயை தான்.

எதை அளவிட முடியாது? மகிழ்ச்சியை, அன்பை, வாழ்க்கையை அளவிட முடியாது. எனவே இவற்றை மாயை என்று சொல்ல முடியாது. தெய்வம் / கடவுள் என்றால் பேரின்பம் என்று அர்த்தம். உண்மையை அளவிட முடியாது. உண்மை, ஆன்மா மற்றும் பேரின்பம் தான் கடவுள். கடவுள் என்றால் என்ன? சத் சித் ஆனந்தம். சத் என்றால் உண்மை.சித் என்றால் ஆன்மா. ஆனந்தம் என்றால் பேரின்பம். கடவுள் என்றால் உண்மை, ஆன்மா மற்றும் பேரின்பம். இவற்றை அளவிட முடியாது. நீயும் அதுவே தான். உன் ஆத்மாவின் இயல்பு பேரின்பம். பேரின்பத்தை அளவிட முடியாது. அன்பை அளக்க முடியாது. எனவே அவற்றை மாயை என்று சொல்ல முடியாது.
நீ மாயையில் மூழ்கியிருக்கிறாய் என்று சொன்னால், நீ சின்ன சின்ன நிலையற்ற பொருள்களின் மேல் ஆசை கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம். மாயை என்றால் எப்போதும் நிலை மாறுவது என்று அர்த்தம். எப்போதும் மாறி வரும் சூழ்நிலைகளும், உன்னைச் சுற்றியிருக்கும் மாறி வரும் பொருட்களும் மாயை எனப்படும். நிலையற்ற பொருள்களை நாடினால், நிலையான மாற்றமில்லாத கடவுளை நாடமாட்டாய். உன் வாழ்க்கை மிகவும் தடுமாற்றமாக இருக்கும். என்றும் நிலையான, மாறாத, மாறாத, மாறாத கடவுளை நாடினால் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை வரும். இதையே நீ மாயையிலிருந்து வெளிவருகிறாய் என்று சொல்லலாம்.

மேற்கத்திய நாடுகளில் அதிர்ச்சிக்காக, மன உளைச்சலுக்காக மற்றும் மனப் பதட்டத்துக்காக அளிக்கப்படும் சிகிச்சை முறைகளைப் பற்றி, தங்கள் கருத்து என்ன ? வாழும் கலை அளிக்கும்  பயிற்சிகளுக்கு அவை முரண்பாடாக உள்ளதா ? அல்லது நிறைவு செய்வதாக இருக்கிறதா?

மேற்கத்திய சிகிச்சை முறைகளில் பல மாற்றங்களும், முன்னேற்றங்களும் நிகழ்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பின் பற்றிய சிகிச்சை முறைகள் தற்போது உபயோகத்தில் இல்லை. எல்லாவற்றையும் நிராகரித்து விட்டார்கள். நான் பிரச்சினைகளுக்கு ஒரு முழுமையான தீர்வு காண விரும்புகிறேன். மேற்கத்திய சிகிச்சை முறைகளில் சில அம்சங்கள் நன்றாக உள்ளன. உதாரணத்துக்கு கண்டறியும் வழிகள் நன்றாக உள்ளன. அதிர்ச்சியிலிருந்து நிவாரணமடைய நம்முடைய பண்டைய வழி முறைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன. காலம் காலமாக பயனுள்ளவையாகவும், குறைந்த சமயத்தில் நிவாரணம் அளிப்பதாகவும் உள்ளன.

நவீன சிகிச்சை முறைகளில் பல நம்முடைய பண்டைய சிகிச்சை முறைகளிலிருந்து திருடப் பட்டிருக்கின்றன. நுட்பமான சிகிச்சை முறைகள், நம்முடைய பண்டைய சிகிச்சை முறைகளின் நகலாகவே, புதிய தோற்றத்தில் திரும்பி வருகின்றன. இது நம்மை எதிர் நோக்கும் மற்றொரு பிரச்சினையாகும். ஆனால் சுகாதாரத்தைப் பொறுத்த வரை நாம் ஒரு கொள்கைப் பிடிவாதத்துடன் இருக்க முடியாது. மிகவும் பண்டைய முறை என்பதால் மட்டுமே அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நவீன முறை அல்லது பண்டைய முறை என்பதன் காரணமாக நிராகரிக்கக் கூடாது. எனவே நம் புத்தியை உபயோகித்து ஒரு நடு வழியில் சென்று ஒரு முழுமையான தீர்வு காண வேண்டும்.
யாருக்காவது புற்று நோய் என்று தெரிந்தால், உடனே கீமோதெராபி செய்து கொள் என்று மக்கள் ஆலோசனை சொல்கிறார்கள். கீமோதெராபியை மறுத்து மாற்று வழி சிகிச்சையால் குணமடைந்த பலரை நான் பார்த்திருக்கிறேன். இன்று கூட அப்படி குணமடைந்த ஒருவரைப் பார்த்த அவருடைய டாக்டர் ஆச்சரியமடைந்தாராம். அதிர்ச்சியடைந்தாராம். உனக்கு எப்படி குணமேற்பட்டது என்று விசாரித்தாராம். என்ன சிகிச்சை எடுத்துக் கொண்டாய்? புற்று நோய் செல்கள் மிகக் குறைந்துள்ளது. மற்ற நோயாளிகளுக்கும் அந்த சிகிச்சையை மேற்கொள்ள ஆலோசனை சொல்ல விரும்புகிறேன் என்று அந்த டாக்டர் அவரிடம் சொன்னாராம்.

அதற்கு அந்த நோயாளி, “ சரி. நான் என் வாழும் கலை ஆசிரியரை அழைத்து வருகிறேன். நீங்கள் தியானமும், மூச்சுப் பயிற்சியும் கற்றுக் கொள்ளுங்கள்.“ என்று சொன்னாராம். எனவே தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சிகள் பல நோயாளிகளுக்கு, தங்கள் நோயிலிருந்து குணமடைய உதவியிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் எனக்கு நூற்றுக்கணக்கான நன்றி கடிதங்கள் வருகின்றன. பலர் தங்கள் நோய்களிலிருந்து குணமடைந்ததாக தெரிவிக்கிறார்கள். எல்லாவற்றையும் பட்டியலிட்டு வெளியிட்டால், இந்த அறை முழுதும் போதாது. பல மக்கள் நன்மை பெறுகிறார்கள். எனவே நாம் ஒரு முழுமையான தீர்வுக்கான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். எந்த விஷயத்திலும் இதுதான் சரி என்று பிடிவாதமாக இருக்கக்கூடாது.பண்டைய சிகிச்சை முறைகளில், மருத்துவ அறிவில் பல நன்மைகள் உள்ளன. அதைப் பின்பற்றுவதில் பாரபட்சம் காட்டக்கூடாது.


33 ஆண்டுகளுக்கு முன்பு வாழும்கலை அமைப்பு துவங்கிய போது, மக்கள் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகப் பயிற்சிகள் கற்பதற்குத் தயங்கினார்கள்.சாதாரண மனிதர்களுக்கல்ல என்று நினைத்தார்கள். இன்று பல பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களில்,தியானம் மற்றும் யோகாசன நிலையில் இருப்பவரின் படங்களைப் பார்க்கிறோம். நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் மனமழுத்தமின்றி வேலை செய்வதாக விளம்பரம் செய்யப்படுகிறது. மக்களின் பார்வையில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று கவலைப்படாமல், தைரியமாக எல்லோரிடமும் பேசி, வாழும் கலை அமைப்பு இந்த பூமியில் ஒரு நன் மாற்றத்தைக் கொண்டுவர விரும்புவதை, நம் கனவை எடுத்துச் சொல்லுங்கள். நாமனைவரும் அதற்காக உழைக்க வேண்டும்.