வாழ்க்கையை ஞானக் கண்கள் மூலம் பார்!

ஞாயிற்றுக்கிழமை 30 நவம்பர், 2014

டில்லி, இந்தியா


(தெற்குஆசிய நாடுகளின் பிராந்தீய ஒத்துழைப்பு சங்கம் (SAARC) வாயிலாக, புற்றுநோய் மருத்துவர்களின் கூட்டமைப்புடன் வாழும் கலை சேர்ந்து “ப்ரேரணா” என்ற திட்டத்தை குருதேவர் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் அவர்கள் துவக்கி வைத்தார். “ப்ரேரணா” என்பது புற்று நோயால் வாடும் மக்களுக்காகத் துவக்கப்பட்ட சிறப்புத் திட்டமாகும். புற்று நோய் மருத்துவர்களின் கூட்டமைப்பு மாநாட்டில் குருதேவர் ஶ்ரீஶ்ரீ ஆற்றிய உரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

இங்கு கூடியிருக்கும் மருத்துவர்களோடு கலந்து பேசுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எல்லோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரித்து மிகச் சிறப்பாக பணியாற்றுகிறீர்கள். உங்களில் பலர் புற்று நோயாளிகளை பராமரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் உங்களையும் பராமரித்துக் கொள்ள வேண்டும்.“ப்ரேரணா” என்ற திட்டத்தை துவங்க நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். ஒரு நோயாளி குணமடைய அவருடைய வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இது மிகவும் அத்தியாவசியமானது.
வாழ்க்கையை நீங்கள் ஞானக் கண்களோடு பார்க்கும் போது, எதிர்மறை உணர்வுகள் மிக எளிதாக நீங்கி, நீங்கள் ஆத்மபூர்வமாக புன்னகையோடு இருக்க துவங்குவீர்கள். சமீபத்தில் நான் அமெரிக்க உளவியல் சங்கம் வெளியிட்ட கட்டுரை ஒன்றைப் படித்தேன். அதன்படி நீங்கள் எட்டு வாரம் தியானம் செய்தபின் உங்கள் மூளையின் கட்டமைப்பு மாறுதல் அடைகிறது. சாம்பல் நிற செல்கள் அதிகரிக்கின்றன. எட்டு வார தியானத்தால் இப்படிப்பட்ட நன்மாற்றம் அடைவதைப் பார்க்க முடியும் போது, மக்கள் தியானம் செய்வதால் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை நிறைய உள்ளது.

மற்றொரு ஆராய்ச்சியினபடி, 1950 களில் மனநிலை மருத்துவமனைகளிலிருந்தவர்களின் பதட்ட 
நிலை எப்படி இருந்ததோ, தற்போது பள்ளி மாணவர்களிடமும் அப்படிப்பட்ட பதட்ட நிலை காணப்படுகிறது. இது ஒரு அபாயகரமான விஷயம். மக்களிடையே அதிக மன உளைச்சலும், கவலையும் காணப்படுகிறது. ஒரு 20 வயது இளைஞன், “எனக்கு வாழவே பிடிக்கவில்லை” என்று சொல்கிறான். அந்த வயதில் வாழ்க்கையைப் பார்க்கவே இல்லை. அதற்குள் வாழப் பிடிக்கவில்லை என்று தற்காலத்து இளைஞர்கள் பலர் சொல்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் கண்டிப்பாக ஆரோக்கியமாக இருக்க இயலாது. ஐந்தாறு ஆண்டுகளில் எல்லா பிரச்சினைகளுக்குள்ளாவார்கள். இப்போது “ஸ்கிசோஃப்ரினியா” என்ற மனநோய் மாணவர்களிடையே வெகுவாக பரவியிருக்கிறது. புத்திசாலி மாணவர்களுக்கு மன உளைச்சலை தாங்க முடியாமல் என்னவோ ஆகிவிடுகிறது. அவர்கள் “பைபோலார்” மற்றும் “ஸ்கிசோஃபிரினியா” நோய்க்கு ஆளாகிறார்கள். நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். 25 – 30 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்கிசோஃபிரினியா அல்லது பைபோலார் என்ற நோய் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? (பார்வையாளர்கள் “இல்லை” என்று சொல்கிறார்கள்.)

இப்போது பெரிய மற்றும் சிறு நகரங்களில் இந்த நோய்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். சமுதாயத்தில் எல்லோருடைய நலத்தையும் பராமரிப்பது அவசியம். தற்போதைய வாழ்க்கை முறைகளைப் பற்றி கவனித்து மக்களின் நல்வாழ்வுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். “இதற்கெல்லாம் காரணம் மன உளைச்சலே என்பதை நாமனைவரும் அறிவோம்”
மன உளைச்சல்? ஒரு விளக்கப்படி நிறைய காரியம் செய்ய வேண்டியிருக்கும் போது அதற்கு வேண்டிய சக்தி இல்லாமல் சக்தி குறைவாக இருக்கும் போது மன உளைச்சல் வரும். இன்றைய காலகட்டத்தில் வேலை பளுவை குறைப்பதென்பது முடியாது.நேரம் எல்லோருக்கும் ஒன்றே தான். அதை நாம் அதிகப்படுத்த முடியாது. நம் சக்தியை அதிகப்படுத்தி வேலையை முடிப்பது ஒன்றே சாத்தியமாகும். நம் சக்தியை அதிகரிக்கப் பல வழிகள் உள்ளன.

·         நாம் உண்ணும் உணவு
ஆரோக்கியம் அளிக்கும் உணவை உண்பது அவசியம். தெற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் (சார்க்) பெரும்பாலான மக்கள் ஆரோக்கியம் தரும் உணவை உண்பதில்லை. அவர்கள் உண்ணும் உணவில் போதிய ஊட்டச் சத்து இருப்பதில்லை. பொதுவாக நாம் உருளைக் கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய் மற்றும் வெங்காயத்தை உண்கிறோம். அவ்வளவு தான். உருளைக்கிழங்கில் மாவுப் பொருள் (ஸ்டார்ச்) உள்ளது. நாம் உண்ணும் சப்பாத்தியிலும் ஸ்டார்ச் உள்ளது. பருப்பு வகைகளிலும் ஸ்டார்ச் உள்ளது. இவை சரிவிகித உணவாகாது. தினசரி உணவில் நாம் ஊட்டச் சக்தி தரும் பொருள்களை சேர்த்துக் கொள்வதில்லை. மக்களிடையே ஊட்டச்சக்தி கொடுக்கும் சரி விகித உணவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

·         நல்ல தூக்கம்.
போதிய அளவு தூக்கம் உங்களுக்கு சக்தியைக் கொடுக்கிறது. மருந்துகளை விட தூக்கத்தினால் அதிக உதவி கிடைக்கிறது. என்னால் மருந்துகளின் சக்தியைக் குறைவாக மதிப்பிட முடியாது. இருந்தாலும் ஒரு நோயாளிக்கு மருந்து மட்டும் கொடுத்து அவரைத் தூங்கவிடாமல் செய்தால், அவர் எடுத்துக்கொண்ட மருந்து வேலை செய்யாது.எனவே தூக்கம் மிகவும் அத்தியாவசியமான தேவையாக உள்ளது. இப்போது பலர் தூக்கமின்மை (இன்சோம்னியா) என்ற நோயால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். தேவையான அளவு தூங்க முடியாமல் பலர் அவதிப்படுகிறார்கள். கெட்ட கனவு காண்பது பலருக்கு வழக்கமாகி விட்டது. யோக சாதனைகள் மூலம் ஒருவரை தேவையான அளவு தூங்க வைக்க முடியும். தூக்க மாத்திரை சாப்பிடாமல் வேண்டிய அளவு தூங்க யோகப் பயிற்சிகள் உதவும். சில குறிப்பிட்ட யோகாசனங்களைச் செய்து தியானம் செய்தால் உங்களுக்குத் தேவையான அளவு நல்ல தூக்கம் வரும். யோகப் பயிற்சிகளை கற்றுக் கொண்டு, தொடர்ச்சியாக செய்து வருவது, உங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும்.

·         சுகாதாரம்
தெற்கு ஆசிய நாடுகளில் சுகாதாரப் பழக்க வழக்கங்களை பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. சுகாதாரப் பழக்கத்தின் அவசியத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாழும் கலை இக்காரியத்தை 5 எச் திட்டம் மூலம் செயல்படுத்தி வருகிறது. ஹெல்த், ஹைஜீன், ஹோம்ஸ், ஹார்மனி இன் டைவர்சிடி, ஹ்யூமன் வேல்யூஸ் என்று இத்திட்டத்தை ஆங்கில மொழியில் அழைக்கிறோம். தமிழில் இதன் பொருள். ஆரோக்கியம், சுகாதாரம், அனைவருக்கும் வீடுகள், வேற்றுமையில் ஒற்றுமை, மனிதாபிமான மதிப்புகள் என்று சொல்கிறோம்.

இந்திய மக்களான நாம் பல்வேறு வித்தியாசமான பழக்கங்களை உடையவர்கள். இந்தியாவில் பல மொழிகளும், 600 வகையான பேச்சு வழக்கங்களும் தற்போது உள்ளன. நாம் பல்வேறு மதங்களை பின் பற்றுகிறோம். எனவே நாமனைவரும் அமைதியாக ஒற்றுமையாக வாழ்வது மிகவும் அவசியம். எனவே மேற்கூறிய 5 எச் திட்டத்தின் மூலம் மக்களுக்குத் தேவையான சேவைகளை செய்கிறோம். நாம் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருந்து, மக்களைக் கொடிய நோய்கள் வராமல் தடுத்து காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியம். குளிர் காலத்தில் சிலர் தங்கள் வீடுகளின் கதவுகளைத் திறந்து வைப்பதில்லை.இதனால் உள்ளிருக்கும் காற்று மிகவும் அசுத்தமாகி விடும்.பல வீடுகளில் காற்றோட்டம் இருப்பதில்லை. “புற்று நோய் வருவதற்கான காரணங்களில் ஒன்று, அந்த நபர் போதுமான அளவு சுத்தமான காற்றை சுவாசிப்பதில்லை” என்று ஒரு பெயர் பெற்ற புற்று நோய் மருத்துவர் சொன்னதைக் கேட்டேன். நீங்கள் நன்றாக சுவாசித்து, போதிய அளவு ஆக்ஸிஜன் உடலில் செல்லும் போது, உடலில் உள்ள நச்சுப்பொருள்கள் வெளி வருகின்றன. அப்போது உடல் பல நோய்களிலிருந்து தன்னைத் தானே குணப்படுத்தி கொள்ளும் ஆழ்ந்த மூச்சு எடுத்து விடும் பழக்கத்தால் புற்று நோய் வராமல் காத்துக் கொள்ள முடியும். ப்ராணாயாமம் (மூச்சுப் பயிற்சி), தியானம் மற்றும் யோகப் பயிற்சிகள் செய்ததாலும், உணவுப் பழக்கங்களில் தேவையான மாற்றங்கள் செய்ததாலும், நோயிலிருந்து குணமடைந்த நூற்றுக் கணக்கான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களைப் பார்த்திருக்கிறேன். பலருக்கு கீமோ தெராபி அவசியமாக இருக்கவில்லை. ஏனென்றால் அவர்களுடைய பயிற்சிகளால், அவர்களுடைய உடல் தன்னைத் தானே நோயிலிருந்து காத்துக் கொள்ளும் வலிமை பெற்றது.

·         மூச்சு விடுதல்

சரியான முறையில் மூச்சை இழுத்து விடுவதால் உங்களுக்கு அதிக சக்தி கிடைக்கும். தூய்மையான புதிய காற்று அவசியம். சில சமயம் பெரிய நகரங்களில் சாலையில் செல்லும் போது, அங்கிருக்கும் காற்று பெட்ரோல், டீசல் புகையால் மாசுபட்டிருப்பதை உணரலாம்.. இதைத் தவிரவும் தற்போது எலெக்ட்ரோ மாக்னடிக் அலைகளும் நம் உடலை பாதிக்கின்றன. (செல்ஃபோன், ரேடியோ, டி.வி. அலைகள்) 9 மணி நேரம் டி.வி பார்த்தால் கண்டிப்பாக நோய் வாய்ப்படுவீர்கள்.

அமெரிக்காவில் பெற்றோர்கள் வேலைக்காக வெளியில் செல்லும் போது, குழந்தைகளை டி.விக்கு முன் அமர்த்தி விட்டுச் செல்வது வழக்கம். மூன்று நான்கு வயது குழந்தைகள் பல மணி நேரம் டி.வி. பார்ப்பது சகஜமாகி விட்டது. அவர்கள் பார்ப்பவை எல்லாம் மூளையில் பதிந்து எப்படிப்பட்ட மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்? பள்ளிக் குழந்தைகளுக்கு இதனால் கவனக் குறைவு என்ற நோய் வந்திருக்கிறது. (ஆங்கிலத்தில் அடென்ஷன் டிஃபிஷியென்ஸி ஸிண்ட்ரோம் என்று பெயர்). நம் வாழ்க்கை முறையைக் கவனித்து மன உளைச்சலை நீக்க / குறைக்க என்ன செய்ய வேண்டும்? எப்படி ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கலாம் என்று சிந்திக்க வேண்டும்.
இயற்கை நமக்களித்திருக்கும் அழகான கருவியான இந்த உடலுக்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி விளக்குவது அவசியம். நாம் நம் உடலுக்கு மரியாதை அளிக்க வேண்டும். மனதுக்கும் மரியாதை செய்ய வேண்டும். உங்களுடைய எதிர்மறை எண்ணங்கள் மனதின் ஆழத்தில் புதைத்திருந்தால்,அது உடலில் புற்று நோயை வளர்க்கும். கோபம், பொறாமை,பேராசை முதலிய எதிர்மறை குணங்களை மனதில் வைத்திருக்கும் போது, வெளியில் சொல்ல முடியாது. இப்படிப்பட்ட எதிர்மறை சக்திகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள நாம் செய்யும் பயிற்சிகளும், ஞானமும் உதவும்.
வாழ்க்கையை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்!! கோபமும் பொறாமையும் மறைவதை பார்க்கலாம். எதைப் பார்த்துப் பொறாமைப்படுகிறாய்?உலகில் 700 கோடி மக்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் போதுமான வாய்ப்பு இருக்கிறது. வாழ்க்கையை ஞானக் கண்கள் மூலம் பார்க்கும் போது எல்லா எதிர்மறை உணர்வுகளும் எளிதாக நீங்கி விடும். உங்களால் ஆத்மபூர்வமாக புன்னகை செய்ய முடியும். வாழும் கலையின் நோக்கம் உலகில் வாழும் அனைவருடைய முகத்திலும் புன்னகையை காண்பதுதான். உன்னுடைய குறுகிய எல்லையிலிருந்து வெளியே வந்து, பல்வேறு விதமான பார்வையில் இவ்வுலகத்தைப் பார்க்கும் போது, உன் வாழ்க்கையில் ஒரு நல்ல வித்தியாசத்தை அனுபவிக்க முடியும்.
வாழ்க்கையில் ஒரு சிறிய பிரச்சினை வரும் போது (அதை நீ பெரிய பிரச்சினையாக நினைக்கக் கூடும்) அதில் நீ சிக்கிக் கொள்கிறாய். விழித்துக் கொள். இதை விட பெரிய பிரச்சினைகளை மக்கள் எதிர் கொள்கிறார்கள். உன் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது. உன்னால் அவர்களுக்கு உதவி செய்ய முடியும். தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்யத் துவங்கு. இப்படி செய்யும் போது, உன் பிரச்சினை எவ்வளவு சிறியது. நீ நினைத்தது போல் அது ஒரு பெரிய பிரச்சினை அல்ல என்பதை நீ புரிந்து கொள்வாய். உன் பிரச்சினை அவ்வளவு மகத்தானது அல்ல என்று நீ அறியும்போது, அதற்குத் தீர்வு காண, உனக்கு வேண்டிய சக்தியும் உற்சாகமும் தானாகவே கிடைக்கும். மனதுக்கு சற்று பயிற்சி தேவை. சில மணிநேரங்களில் நாம் மக்களுக்குப் பயிற்சி அளிக்கமுடியும். மக்களின் பார்வையை ஆக்கபூர்வமான திசையில் திருப்பி, அவர்களுடைய மனதைக் கையாள, வாழ்க்கைமுறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள உதவும் சில குறிப்புகளை இப்பயிற்சிகளின் மூலம் சொல்லிக் கொடுக்க முடியும்.
நாம் ஒருவருடைய வாழ்க்கை முறையை மாற்ற முடியாது. அதை அவர்களே (நல்வழியில்) மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு மருத்துவர் மருந்து கொடுப்பதை போல குறிப்புகளை அளிக்கலாம். ஆனால் அதைப் பின்பற்ற அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அதே மாதிரி அவர்களுடைய மன உளைச்சல் நீங்க வழி மட்டுமே சொல்ல முடியும். விழித்துக் கொள். மக்கள் உன்னை விட பெரிய பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு உன் உதவி தேவைப்படுகிறது. உன்னால் அவர்களுக்கு உதவ முடியும். இந்த திசையில் சென்று உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்.
முல்லா நசிருதீன் பற்றிய கதை ஒன்று உள்ளது. ஒரு தடவை முல்லா பல உறுப்புகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடல் முழுதும் கட்டுப் போடப் பட்டிருந்தது. அவரைப் பார்க்க அவருடைய நண்பர் ஒருவர் வந்தார். முல்லா, இப்போது எப்படி இருக்கிறாய்? என்று விசாரித்தார். “நான் நன்றாக இருக்கிறேன். சிரிக்கும் போது மட்டும் வலிக்கிறது“ என்று முல்லா சொன்னார். முல்லாவின் நண்பர், “இந்த நிலையில் உன்னால் எப்படி சிரிக்க முடிகிறது?“ என்று கேட்டார். “இப்போது நான் சிரிக்காவிட்டால், வாழ்க்கை முழுதும் சிரித்ததே இல்லை என்றாகி விடும்“ என்று முல்லா விடையளித்தார். எந்த சூழ்நிலையிலும் சிரிக்கலாம் என்று மனதில் திடமாக இருப்பதே ஞானம் எனப்படும்.
வாழ்க்கையை ஒரு போராட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு சவாலாக எடுத்துக் கொள். வாழ்க்கையை வருத்தம் என்று கருதாதே. பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வழியே வாழ்க்கை எனப்படும். அதை நான் ஞானம் என்று சொல்கிறேன்.இந்த ஞானம் நம்மிடம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால் சிலரே அதை அறிந்திருந்தார்கள். அவர்கள் வாழ்க்கையில் இந்த ஞானத்தை உபயோகித்து விட்டு, தங்கள் பிள்ளைகளிடம் சொல்லிச் சென்றார்கள் ஆனால் இவ்வுலகிலுள்ள மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது இந்த ஞானத்தை எல்லா மக்களோடும் பகிர்ந்து கொள்ளும் நேரம் வந்திருக்கிறது என்று நினைத்தேன். இந்த மூச்சு, யோகம் மற்றும் தியான பயிற்சிகளை கற்று எல்லோரும் பயன் பெற வேண்டும். ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

ஒரு குருவின் பங்களிப்பு. . . .


நவம்பர் 24, 2014

ஹரியானா இந்தியா 


கேள்வி பதில்கள்

குருதேவ்! சில மாதங்களுக்கு முன் என்னுடைய தனிப்பட்ட குரு அவருடைய ஸ்தூல உடலை விடுத்து விட்டார். அவர் இல்லாததால் ஏற்பட்டுள்ள துயரையும் அவருடைய பிரிவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எவ்வாறு நான்,குரு என்பவர் உடல்ரீதியாக இருப்பவர் அல்ல ஆனால் மூலாதாரமாக எங்கும் வியாபித்திருப்பவர் என்பதை உணர்ந்து என்னை தேற்றிக்கொள்ளுவது? நான் எப்படி அவர் இல்லாமல் வாழ்வது மற்றும் மனதை அமைதியாக வைத்துக் கொள்வது?

ஒய்வு எடுக்கவும். தியானம் செய்யவும். நீங்கள் அதிக தியானம் செய்யும் போது குரு என்பவர் ஒரு பிரகாசிக்கும் ஒளி என்றும் நித்தியமானவர் என்று உணரலாம். குரு என்பவர் உடலால் அல்ல. உடலுக்குள் இருக்கும் தெய்வீக ஒளி ஆவார். அன்பே குரு. நீங்கள் குருவிடம் இருந்து பெற்ற அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவருமே வாழ்வில் மற்ற யாராவது சிலருக்கு குருவாக இருக்கின்றோம். குருவாக இருப்பதன் பொருள் என்ன? குரு என்பவர் உங்களுடைய நலனையும்,முன்னேற்றத்தையும் தவிர வேறு எதையும் விரும்புவதில்லை. அதுவே குரு தத்துவம்.நிச்சயமாக நீங்கள் மற்ற யாராவது ஒருவருடைய வாழ்வில் குருவின் பாத்திரத்தை ஏற்று கொள்ளுவீர்கள்

குருதேவ்! எவ்வாறு நாம் அகங்காரத்தை விட முடியும்?

எதற்காக நீங்கள் அகங்காரத்தை விட விரும்புகிறீர்கள்? அதை சற்றே தள்ளி வைத்து விடவும். அதனுடன் போராட வேண்டாம். அடிக்கடி நாம் அகங்காரத்தை விட்டுவிட எண்ணுகின்றோம், ஏனென்றால் அது வலியை ஏற்படுத்துகிறது. அகங்காரத்தில் இருந்து விடுபட வேண்டும் என்னும் எண்ணம் அதை இன்னும் பெரிதாக்கும். இயல்பாக இருப்பதே அகங்காரத்தை சமாளிப்பதற்கான எளிய வழி ஆகும். அனைவரும் உங்களை சார்ந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவும். நான் பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றேன். நான் செல்லும் எந்த நாட்டிலுமே யாருமே எனக்கு புதியவராக தெரிவதில்லை.

குருதேவ்! மறுபிறப்பு அல்லது அவதாரம் குறித்து சொல்லவும்.

கண்டிப்பாக மறுபிறப்பு இருக்கின்றது. அது நிச்சயம் என்று தெரிந்து கொள்ளவும். பெளதிகத்தில் வஸ்து மற்று சக்தி ஆகிய இரண்டையும் உருவாக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்று சொல்லப்படுகிறது. மனமும் ஆன்மாவும் தூயசக்திகள்.  அவை பல வழிகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுகின்றன. முந்தைய ஆயுள்காலங்களில் நான் பலமுறை வந்திருக்கின்றேன், நீங்களும் பலமுறை வந்திருக்கின்றீர்கள். வித்தியாசம் என்னவென்றால் நான் அதை அறிந்திருக்கின்றேன், நீங்கள் அதை அறியவில்லை. அவ்வளவு தான். நீங்கள் அடிக்கடி தியானம் செய்தால் நீங்களும் அந்த அனுபவத்தை பெறலாம்

இந்திய இளைஞர்கள் அரசியலில் நுழையலாமா?

ஆம். நிச்சயமாக இளைஞர்கள் அரசியலில் நுழைய வேண்டும். நான் இதை ஊக்குவிக்கிறேன். வாழும் கலையில் புவனேஸ்வரில் நாம் நல்லாட்சி முறையை கற்று தரும் ஒரு கல்லூரியை துவங்கி இருக்கின்றோம். அரசியலில் நுழைந்து அங்கு வேலை செய்ய நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் இக்கல்லூரியில் சேர வேண்டும். ஹரியானாவில் உள்ள இளைஞர்களுக்கு சில இடங்களை ஒதுக்கி வைக்குமாறு நான் ஸ்ரீ ஸ்ரீ பல்கலைகழக துணை வேந்தரிடம் கேட்கின்றேன். எந்த மாநிலத்திலோ அல்லது மண்டலத்திலோ உள்ள இளைஞர்கள் நல்ல தரமான கல்வி பெறாமல் போவதை நான் விரும்பவில்லை.ஒவ்வொரு  மாகாணத்திலும் உள்ள சில இளைஞர்கள் அந்த கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும். இது அவர்களுடைய சிந்தனையையும் நாட்டை பற்றிய தொலை நோக்கையும் விரிவடைய செய்ய உதவும்.

குருதேவ்! மதத் தலைவர்களும் தொண்டர்களும் செய்யும் தவறான செயல்களை கேட்டு மனம் தொந்தரவு அடைகின்றது. தயவு செய்து இதை எப்படி கையாள்வது என்று வழி காட்டவும்.

இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மதத் தலைவர்களும் தொண்டர்களும் உள்ளனர். அதிலே இரண்டு அல்லது மூன்று பேர் செய்யும் தவறான செயல்களை கண்டோ அல்லது அவர்கள் தவறான சிந்தனைகளில் சிக்கி இருப்பதை கண்டோ, ஒருவருடைய மனதில் பதட்டமோ, எதிர்மறையான எண்ணங்களோ தோன்றக்கூடாது. யார் ஒருவர் தவறு செய்கிறாரோ அவர் நிச்சயமாக அதற்காக வருந்த வேண்டி இருக்கும் விளைவை ஏற்க வேண்டி இருக்கும். அது அவருடைய கர்மவினை அதை அவர் தவிர்க்க முடியாது. ஆனால் நீங்கள் இந்த மாதிரியான விஷங்களில் சிக்கி இருக்கக் கூடாது. நல்ல ஞானமும் வழிகாட்டலும் நமக்கு எங்கிருந்து அல்லது யாரிடம் இருந்து கிடைத்தாலும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டர் என்று நீங்கள் எண்ணியிருக்கும் ஒருவர் தவறான செயல்கள் செய்தாலோ அல்லது மதிப்பிற்குரிய நிலையில் இருந்து வீழ்ந்தாலோ, நீங்கள் அவர் மீது இரக்கமும் கருணையும் கொள்ள வேண்டும். அவர் மீது வெறுப்பு கொள்ளக்கூடாது, ஏனென்றால் அவர் அதை அறியாமையினாலும் தவறான கேள்வி ஞானத்தினாலுமே செய்கிறார். நீங்கள் அதை தவிர்த்து முன்னேறலாம். ராமாயணத்தில் வந்த அரக்க அரசன் ராவணன் சீதா தேவியை அபகரிக்க ஒரு வயதான துறவி போல மாறுவேடமிட்டு வந்தான், இல்லையா? அதனால் அந்த மாதிரியான எண்ணங்கள் உள்ளவர்கள் இன்றும் இருக்கக்கூடும். ஒருவர் என்ன செய்ய முடியும்? ராவணன் வயதான துறவி போல் மாறு வேடமிட்டு வந்திருக்கவில்லை என்றால் நமக்கு இன்று ராமாயணமே கிடைத்திருக்காது.

ஒவ்வொரு சமுதாயத்திலும் துஷ்டர்கள் இருக்கின்றனர். தவறு செய்யும் இம்மாதிரியான சிலர் அவர்களுடைய செயல்களால் மொத்த சமுதாயத்திற்கும் அவமானத்தை கொண்டு வருகிறார்கள். சில மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் இருந்து சிறுநீரகத்தை திருடுவதன் மூலமாக செல்வவளத்தை பெறுகின்றனர். அதனால் நீங்கள் இதை நினைத்து பயந்து கொண்டு மருத்துவரிடம் செல்லுவதையே நிறுத்திவிட வேண்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது அல்லவா? உங்களால் ஆரோக்யமாக இருக்க முடியுமா? 

அதை போலவே சில கடைக்கார்கள் உணவு தானியங்களிலும்,சர்க்கரையிலும் கலப்படம் செய்வதன் மூலம் லாபம் பெறுகின்றனர். இதனால் நீங்கள் அனைத்து கடைகளையும் மூடிவிட்டால், சமுதாயத்தில் எப்படி காரியங்கள் நடைபெறும்? வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து காரியங்கள்  மீதும் நாம் சந்தேகம் கொண்டால், அது நமக்கு உபயோகமாக இருக்காது. நாம் அம்மாதிரியாக தவறான செயல்கள் செய்பவர்களை பார்த்தால் அவர்கள் மீது கருணையும் இரக்கமும் கொள்ள வேண்டும். அவர்கள் நேர்வழியில் இருந்து விலகி உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் நேர்மையானவர்களும் அப்பாவிகளும் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு குற்றவியல் வழக்குகளில்சிக்கிக் கொள்ளுகிறார்கள். உதாரணத்திற்கு, காஞ்சிமடத்தின்  சங்கராச்ர்யா தவறுதலாக ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். 9 ஆண்டுகள் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 3500 மணி நேரங்களுக்கு பின் அவர் அப்பாவி என்று கண்டறியப்பட்டது. ஆனால் ஊடகங்கள் அவர் அப்பாவி என்று நிரூபணமாகி விடுவிக்கப்பட்டதை எட்டு நிமிடங்கள் மட்டுமே காண்பித்தன. அம்மாதிரியான துரத்ருஷ்டவசமான சம்பவங்கள் நல்லவர்களுக்கு ஏற்படுகின்றன. நீங்கள் இதை ஒரு  தவமாகக் கருதிக்கொள்ள வேண்டும். நீங்கள் இந்த மாதிரியான தவறான காரியங்களில்  ஈடுபடக்கூடாது என்று அறிந்து கொள்ள இவைகளெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டும். அனைவரையும் மதிக்க வேண்டும். எப்போதும் அவர்களை பற்றிய நல்லவைகளை எடுத்துக் கொள்ளவும். வாழ்க்கையில் நாம் இதை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

நீங்கள் இந்த உலகத்தில் பார்க்கும் அனைத்து நல்ல விஷயங்களும் தெய்வீகத்தில் இருந்து வந்தவை. கெட்ட குணங்கள் அல்லது பழக்கங்கள் தெய்வீகத்தை அறியாதவர்களிடம் இருந்து வருபவை. தவறான அறிவாலும் அறியாமையினாலும் ஒருவருடைய பார்வை மங்கலாகவும் கலங்கியும் இருக்கும் போது தான் அவ்வாறான தவறுகளை செய்கின்றனர். இதை புரிந்து கொண்டு அமைதியாக இருக்கவும். உங்கள் அனைவருடைய மனதிலும் இன்னும் ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். வாழ்வில் ஒரு பாத்திரமாக இருப்பது அவர்களுடைய கர்ம வினையா அல்லது விதியா என்பதே அந்த கேள்வி. உங்களில் யார் யாருடைய மனங்களில் இந்த  கேள்வி எழுந்தது? (பலர் கைகளை உயர்த்துகின்றனர்).

வாழ்க்கை என்பது விதி மற்றும் உங்களுடைய சுய முயற்சி இரண்டின் சேர்க்கையே. நான் இதை உங்களுக்கு ஒரு எளிய உதாரணத்தின் மூலமாக விவரிக்கின்றேன். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின் உங்களுடைய உயரம் அதிகரிக்கிறதா? ஐந்து அடியோ அல்லது ஆறு அடியோ, நீங்கள் அந்த உயரம் வளர்ந்த பிறகு, அதற்கு மேல் வளர்ச்சி ஏற்படுவதில்லை. ஆகவே உங்கள் உயரம் உங்கள் தலைவிதியை போன்றது. உங்கள் எடையை நீங்கள் 10 கிலோ அதிகரிக்க விரும்புகிறீர்களோ அல்லது 20 கிலோ குறைக்க விரும்புகிறீர்களோ, அது உங்களையே சார்ந்தது. உங்களுடைய எடையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது என்று நீங்கள் நினைத்தால் அது சரியான எண்ணம் அல்ல. நீங்கள் உங்கள் எடையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும், அது உங்களிடம் இருக்கும் விருப்பமே.           


ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் உங்களுடைய உயரத்தை அதிகரிக்க இயலாது என்பதை தெரிந்து கொள்ளுவதே விதி ஆகும். வெளியே மழை பெய்து கொண்டிருந்தால், அது விதி. ஆனால் மழையில் நனைவதா இல்லையா என்று முடிவு செய்வது உங்களுடைய தேர்வு. அது உங்களுடைய சுய முயற்சி. ஒரு குடையை எடுத்துக் கொண்டு நீங்கள் நடந்தால் நீங்கள் மழையில் நனைய மாட்டீர்கள்., இல்லையென்றால் நனைந்து விடுவீர்கள். ஆன்மீக பாதையில் இருப்பது என்பதன் பொருள் உங்கள் விதி மற்றும் உங்களுடைய சுய முயற்சியின் தரம் இரண்டையும் அதிகரித்துக் கொள்ளுவதே.

எல்லையில்லா அன்பு

திங்கட்கிழமை - 24/11/2014,

ஹரியானா, இந்தியா.நாம் இப்பொழுது 22 நிமிடங்கள் தியானம் செய்துள்ளோம் என்று அறிய முடிந்ததா? தியானம் செய்யும் பொழுது, நேரம் கடந்து சென்றதை உணர முடிந்ததா? தியான நேரத்தில் உங்கள் மனம் அலைப்பாய்ந்ததா? சிறதளவு கூட அலைப்பாயாமல் இருந்தது. மனதை அமைதியாகவும், சீராகவும் வைத்துகொள்ளும் திறமையை நீங்கள் பயிற்சி செய்யவேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்தும் திறமையை தெறிந்து கொண்டால், பின்னர் நீ எல்லா நேரங்களிலும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.

பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.

“மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மொக்ஷயோ
பந்தாய விஷயாசங்கோ முக்தியை நிர்விஷயம் மனஹ

ஒருவருடைய மனது, அவருடைய சொந்த எதிரியாகவும், நல்ல நண்பனாகவும் இருக்கிறது. பந்தங்களில் மாட்டி அவஸ்தைபடுவதும், ஒருவன் உலக மாயை மற்றும் பந்தங்களிலிருந்து முக்தி அடைவதற்கும் மூல காரணம் மனம் தான். நமது இருப்பு 7 நிலைபாடுகளில் உள்ளன. நான் இன்று எட்டாவதாக ஒன்றை அந்த வரிசையில் சேர்க்கிறேன். அது தான் “சுற்றுச்சூழல்”. சுற்றுச்சூழல், உடல்,மூச்சு, மனது, புத்திசாலித்தனம், ஞாபகசக்தி, அகங்காரம், ஆத்மா என்ற 8 நிலைபாடுகள்.
இந்த நேரத்தில் உங்கள் மனம் இங்கு இருக்கிறதா? நீங்கள் எல்லோரும் இங்கு தான் உள்ளீர்களா? நான் சொல்வதை நீங்கள் கவனமாக கேட்கிறீர்களா அல்லது உங்கள் மனம் எங்காவது அலைந்து திரிகிறதா? உங்கள் மனது இப்போது நிகழ்காலத்தில் இருக்கிறது. 

கேட்பதற்கும், பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும், தொடு உணர்ச்சிக்கு காரணமாக இருப்பது மனம்பின் புத்திசாலித்தனம். நாம் கேட்பது நன்றாக இருக்கிறதா? இல்லையா? மற்றும் நாம் விரும்பியதை சுவைக்கிறோமா இல்லையா? என்று அறியும் திறமையை “புத்திசாலித்தனம்“ கொடுத்து உதவுகிறது. அதன் பின் “ஞாபக சக்தி” அல்லது “சித்தா”. புத்திசாலித்தனத்தின் மூலமாகவும், உணர்ச்சிகளின் மூலமாகவும் தெறிந்து, புரிந்து கொண்டு அதில் ஞாபகத்தில் வைக்க உதவுவது “ஞாபகசக்தி”. “சித்தா”வில் பதிந்துள்ள நிகழ்ச்சிகளை வெளிக்கொணர்வது. பிறகு “அகங்காரம்” கடைசியாக “ஆத்மா”. நமது இந்த இருப்பின் ஏழு நிலைகளை பற்றி ஆழமாக புரிந்து கொண்டால்,அது நம் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொடுக்க முடியும். இது தான் “வாழும் கலை”யில் நடக்கிறது. உங்கள் இருப்பின் நிலைகளை தெறிந்து கொள்ளும் ஞானத்தை பெறும் பொழுது நீ உன்னுள் இருக்கும் மகிழ்ச்சியால் மலர்கிறாய்.

நீங்கள் வாழ்கையில் செய்யும் எந்த செயலுக்கும் பின்னணியில் ஒரு குறிக்கோள் உண்டல்லவா? என்ன செயல் செய்கிறீர்களோ அதை ஏன் செய்கிறீர்கள்? மகிழ்ச்சியாக இருப்பதற்காக தானே? நாம் செய்ய கூடிய செயல்கள் அனைத்தும் மகிழ்ச்சிக்காக தான். ஆனால் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறோமா? சிறு குழந்தைகளை பார்த்து நீங்கள் மகிழ்ச்சியாக உள்ளீர்களா? இல்லையா ? என்று கேட்டால் நான் பள்ளிபடிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும் போது மகிழ்ச்சியாக இருப்பேன் என்று பதில் கூறுவார்கள். கல்லூரிக்கு சென்ற பின் நல்ல வேலை கிடைத்தவுடன் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைகிறார்கள். நல்ல வேலை கிடைத்த பின் நிலையாக ஒரு இடத்தில குடும்பம் நடத்தினால் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்கிறார்கள். சிறிது காலம் கழித்து குழந்தைகள் இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பேன் என நினைக்கிறார்கள்.ஆனால் குழந்தை இருந்தால்,அவர்கள் படிப்பை பற்றி, நல்ல பள்ளியில் சேர்க்கை கிடைத்த பின் மகிழ்ச்சியாக இருப்பேன் என்பார்கள். சில வருடங்கள் கழித்து அவர்கள் குழந்தைகளும் நல்ல படிப்பை முடித்து நிலையான வாழ்க்கை அமைத்து கொண்டு மகிழ்ச்சியாக இருப்பேன். அதற்குள்ளாக,அவர்களது சொந்த வாழ்க்கையே முடிய ஆரம்பித்து விடும். 

வாழ்நாள் முழுவதும் சளைக்காமல் நாம் மகிழ்ச்சியை தேடி அலைகிறோம். ஆனாலும் நாம் அதை காண முடிந்ததா? எது போல என்றால், நாம் தூங்குவதற்கு படுக்கையை இரவு முழுவதும் தயார் செய்து பிறகு தூங்க போகும் முன் விடிந்து விடுவதை போல். நாம் படுத்து ஓய்வெடுக்க நேரம் இல்லாமல் ஆகி விடுகிறது. இந்த மாதிரி நிகழ்வதற்கு நாம் அனுமதிக்க கூடாது. நமது வாழ்க்கை மிகவும் முக்கியமானது. இந்த வாழ்கையிலேயே படைப்பின் வெளிப்பாடுகளாலும், சுழற்சியாலும் நாம் “அதை” அடைந்து விடுகிறோம். மிக சக்தி வாய்ந்த ஒன்று தான் இந்த உலகத்தில் அனைத்தையும் நடத்துகிறது என்பதை ஒப்புக்கொள்வது மிக முக்கியம். இதை நீ உணர்ந்து விட்டால் யாராலும் உன் சிரிப்பை எடுத்துவிட முடியாது. அல்லது உன்னுள் இருக்கும் ஆழமான அன்பை அசைக்க முடியாது. வாழ்க்கை மிக இலகுவாக நடத்த இரண்டு முக்கிய விஷயங்கள். முதலாவது “அன்பு”. உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை விரும்பவில்லை என்று சொன்னால் உங்களால் வாழ முடியுமா? முடியாது.

ஒவ்வொருவரும் நம்மேல் அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். நீங்கள் எத்தனை நபர் மீது, “நிபந்தனையற்ற அன்பு” செலுத்துகிறீர்கள் என்று கேட்டு பாருங்கள். சாகும் தருவாயில் இரண்டு கேள்விகள் தான் நம்முன் நிற்கும். எவ்வளவு அன்பை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள்? மற்றும் இந்த வாழ்கையில் எவ்வளவு ஞானம் சம்பாதித்துள்ளீர்கள்?. நாம் பல நேரங்களில் இதற்கு எதிர் மறையாக தான் செய்கிறோம். நாம் மற்றவர்களிடமிருந்து அன்பை பெறுவதில் (கொடுப்பதை விட்டு) ஆர்வம் காட்டுகிறோம். மற்றும் நாம் மற்றவர்களிடமிருந்து ஞானத்தை பெறுவதை விட்டு,கொடுப்பதிலே நின்று விடுகிறோம். அசைக்க முடியாத உன்னுள் இருக்கும் மகிழ்ச்சியையும் நீங்கள் இருக்கும் இடத்தில் மற்றும் உங்களை சுற்றி உள்ள மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பது தான் “ஆன்மீக ஞானம்”. உங்களுள் நீங்கள் ஆழமாக செல்லவும், உங்களை சுற்றி உள்ளவர்களுக்கு அமைதி மற்றும் ஆனந்தத்தை கொடுப்பது தான் ஆன்மிகம்.

ஆன்மிகம் இல்லாத வாழ்க்கை மிகவும் உலர்ந்ததாகவும், ரசமில்லாததாகவும் இருக்கும். மிகவும் உலர்ந்த வாழ்க்கை எதிர்மறை எண்ணங்களில் முழ்கடித்து விட வழி வகுக்கும். மிக சீக்கிரமாக அடிக்கடி கோபம் அடைதல், சஞ்சலமடைதல் மற்றும் அடங்காத ஆசை, வெறுப்பு ஆகியவைகளில் நாம் மாட்டிக் கொள்கிறோம். இதற்கெல்லாம் காரணமாக இருப்பது பிடிப்பில்லாத மற்றும் ரசம் இல்லாத வாழ்க்கையே. ஆகவே, எப்படி நமது வாழ்க்கையை ரசமுள்ளதாக ஆக்குவது.

இந்த இரண்டு வழிகளில் தான்.
1.ஆழமான நம்பிக்கை மற்றும்
2.ஆழ்ந்த ஓய்வு.

இந்த பிரபஞ்சத்தை படைத்தவர் மிக்க அன்புள்ளவராகவும், நெருக்கமுடையவராகவும் இருக்கிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை வை. கடவுள் எனக்குள் இருக்கிறார் மற்றும் நான் அவருள் இருக்கிறேன் என்று நம்பு. இந்த எளிய நம்பிக்கை மட்டுமே உன்னை மிக உயர்ந்தவனாக ஆக்கி விடும். உங்கள் பெற்றோர் உங்கள் மேல் காட்டும் அன்பை விட ஆயிரம் மடங்கு கடவுள் நம்மீது அன்பு செலுத்துகிறார். நீங்கள் அதை எந்த பெயரில் வேண்டும் என்றாலும் அழைக்கலாம். சக்தி, அம்பாள், சிவா அல்லது கடவுள் இன்னும் பிற. கடவுள் நெருக்கமாக அன்பு செலுத்துகிறார் என்ற நம்பிக்கையை  வைத்திருக்க வேண்டும். நீங்கள் ஒரு முறை செய்து பார்த்தால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை அறியலாம். பின் எதை வேண்டுகிறீர்களோ, அது நடக்க ஆரம்பித்து விடும். உங்கள் மனதில் நீங்கள் நம்பிக்கையை வைத்து உங்களுள் ஓய்வாக இருங்கள். ஆகவே முதலில் உங்களுக்கு கடவுளிடம் நம்பிக்கை இருக்க வேண்டும். பின் சமுதாயத்தில் பல நல்ல பெரிய மனிதர்கள் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.

சிலர் தவறான வழிகளில் செல்கிறார்கள். ஆனால், இன்றும் நல்ல மனிதர்கள் உயரிய இடத்தில உள்ளார்கள். உங்களை சுற்றி உள்ள மனிதர்களின் நல்ல விஷயங்களில் நம்பிக்கை வையுங்கள். பின் உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள். உங்கள் மேல் நம்பிக்கை வைப்பது மிகவும் முக்கியம். மற்றும் அந்த நம்பிக்கையோடு ஓய்வு எடுங்கள். இந்த ஓய்வு தியானம் செய்வதால் மட்டுமே கிடைக்கும். இப்பொழுது நாம் தியானம் செய்தோம். நன்றாக இருந்ததல்லவா? ஆகவே நீங்கள் எல்லோரும் தியானம் செய்யுங்கள். மற்றும் சில “பிரணாயாமா” கற்றுக்கொள்ளுங்கள். பின்னர் எந்த காரணத்திற்காகவும் நீங்கள் வருத்தமடைய, உற்சாகமற்று இருக்க தேவையில்லை.

உணர்ச்சி சார் நுண்ணறிவினை வளர்த்துக் கொள்ளுங்கள்

திங்கள்கிழமை, 24 நவம்பர் 2014,

ஹரியானா - இந்தியா


(முடிவான அன்பு என்னும் இடுகையின் தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது)

குருதேவ், என்னைச் சுற்றியிருக்கும் மக்கள், என்னை விரைவாகவும் எளிதாகவும் ஏமாற்றி விடுகின்றார்கள் என்று கருதுகின்றேன். இவ்வாறு செய்வதில் அவர்கள் என்ன மகிழ்ச்சியை அடைகின்றார்கள்?

ஏமாற்றுவதில் விரைவாக செய்தால் என்ன? மெதுவாக செய்தால் என்ன? அவர்கள் விரைவாகவே உங்களை ஏமாற்றட்டும், மெதுவாக ஏமாற்றினால் அது உங்களுக்குப் பிரச்சினைகளை அதிகமாகத் தரும். கவனியுங்கள், நீங்கள் அறிவுள்ளவர் என்பதை அறியுங்கள். எவ்வாறு இரு கைகளையும் இணைத்துத் தட்டினால் தான் ஓசை ஏற்படுமோ அது போன்று ஏமாற்றுவதற்கும் இருவர் தேவை.. ஒருவர் உங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றினால் நீங்கள் முழு விழிப்புணர்வுடன் இல்லாததும் அதற்கு காரணம். உங்களை சுற்றி நடப்பவை பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்தால் அவர்கள் எவ்வாறு உங்களை ஏமாற்றக்கூடும்? எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உணர்ச்சிகளினால் நீங்கள் மெய்மறந்து விடாமல் இருந்தால், யார் உங்களை ஏமாற்றமுடியும்? இது உங்களுடைய உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் பிற சொந்த உறவுகளுக்கும் பொருந்தும். உங்களுடைய உணர்ச்சிகள் உங்களை மங்க விட அனுமதிக்காதீர்கள். உறவுகளில் உணர்ச்சிகள் இடம் பெறுகின்றன. ஆனால் நீங்கள் அறிவுத்திறனுடன் புத்திசாலித்தனமாகச் செயல்பட வேண்டிய நிலையில், உணர்ச்சிகளில் ஆழ்ந்து மெய்மறந்து விடக்கூடாது.எச்சரிக்கையுடன் புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். நீங்கள் ஏமாற்றப்படமாட்டீர்கள், உறவுகளும் ஒத்திசைவுடன் இனிமையாக இருக்கும். மக்கள் தங்களுடைய அறிவுத்திறனைப் பயன்படுத்தாமல், உணர்ச்சி வேகத்திலேயே மட்டும் செயல்படும் போது அற்ப விஷயங்களுக்குக் கூட சண்டையிடுவதை பார்த்திருப்பீர்கள்.  நம்மை ஏமாற்ற யாருக்கும்  சந்தர்ப்பம் அளிக்கக்  கூடாது. உங்களில் எத்தனை பேர் நான் கூறுவதை ஏற்றுக் கொள்கின்றீர்கள்? (பலர் கை உயர்த்துகின்றனர்)

வீட்டில் அதிகமான நகைகளும் பணமும் இருந்தால் அவற்றைப் பத்திரமாகப் பூட்டி வையுங்கள். வெளியில் வைக்க வேண்டாம். கவனக் குறைவாக வெளியில் அவற்றை வைத்தால், உங்கள் பணிப்பெண் அவற்றை ரகசியமாக எடுக்கும்போது அவளை எவ்வாறு குறை கூற முடியும்? முதலில் வெளியே வைத்தது உங்கள் தவறு. புத்தியுடன் வெளியே வைக்காமல் இருந்தால் அவர்களுக்கும் திருடும் சபலம் ஏற்படாது.

ஒரு குழுவிலோ அல்லது பொது இடங்களிலோ யாரேனும் என்னை அவமானப்படுத்தினால் நான் என்ன செய்ய வேண்டும்? அதைப் பற்றிப் புகார் கூறுவது சரியா?

ஒருவர் உங்களை அவமானப்படுத்தினால் நீங்கள் என்ன செய்யவேண்டும்? உங்களால் அனைவரின் வாயையும் கட்டுப்படுத்த முடியாது. இத்தகைய சூழலில் உங்களுக்கு இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன.

1. நீங்களும் அது போன்றே நடந்து கொண்டு அவர்களை அவமானப்படுத்தலாம்.
2.அவர்களது அறியாமையைப் புன்முறுவலுடன் எதிர்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் அறியாமையும் அதை வெளிப்படுத்திக் கொள்ளும் இருக்கும் உரிமையும் உள்ளது என்று அவர்களிடம் கூறி அமைதியாக இருக்கலாம்.

பாருங்கள், உங்களை யாரேனும் அவமானப்படுத்தினாலும் அது எப்போதும் நிலைத்திருக்காது. ஒருவர் கூறும் இனிமையற்ற சொற்கள் உங்கள் காதுகளை அடையும் சில கணங்களே அவை அங்கிருக்கும். நீரில் ஏற்படும் குமிழிகளைப் போன்று அவை மிகத் தற்காலிகமானது  ஆகும். இத்தகைய இனிமை யற்ற விஷயங்கள் வரும்,போகும், இந்த சின்ன விஷயங்களை பற்றி  எண்ணி மறுகிக் கொண்டிருக்கவோ, பிறரைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கவோ யாருக்கு இவ்வுலகில் நேரம் இருக்கிறது? எனவே இத்தகைய விஷயங்கள் நடக்கும் போது அவற்றைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். உங்களைப் பாதிக்கவும் விடாதீர்கள்.

இன்று சமுதாயத்தில் பரவலான மது நுகர்வு உள்ளது. நாம் இந்த அச்சுறுத்தலை தடுத்து நிறுத்துவதற்கு என்ன செய்ய முடியும்?

மது அருந்தும் அனைவரையும் போதை தரும் சத்சங்கத்திற்கு அழைத்து  வாருங்கள். அவர்கள் தங்கள் தீமையான பழக்கங்களை முற்றிலும் மறக்கக் கூடிய போதை தரும் ஆன்மீகத்திற்கு அவர்களை அறிமுகப்படுத்துவேன் என்று உறுதியளிக்கின்றேன். பலர் புகை பிடித்தல், மது அருந்துதல், பிற தீய பழக்கங்கள் அனைத்தையும் இந்த ஆன்மீகப் பாதைக்கு வந்த பின்னர் துறந்திருக்கின்றனர். ஆகவே அத்தகையவர்களை நீங்கள் தவிர்க்க வேண்டாம். அதற்குப் பதிலாக அவர்களை சத்சங்கிற்கு வருமாறு சமாதனப்படுத்தி நம்ப வையுங்கள். எப்படி மாறுகின்றார்கள் என்பதை நீங்களே காண்பீர்கள். பக்தி மற்றும் ஆழ்ந்த அன்பில் போதை காணும் போது அதை விட்டு விலகவே முடியாது.

குருதேவ், விவாகரத்தினை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?

இல்லை, இல்லை. ஆனால் உங்களுடைய உறவு இருதரப்பினருக்கும் தொடர்வது கடினம் என்னும் நிலையில், அதனால் உங்கள் வாழ்வே நரகமாகும் நிலையில், எந்த முயற்சியும் அவ்வுறவினைக் காக்க இயலாத நிலையில், இருவரும் சமாதானமாக பிரிந்து அவரவர் வழியில் செல்வதே நல்லது என்று கூறுவேன். ஆனால் விவாகரத்திற்கு முன்னர், இருவரும் 100 சதவீதம் தங்களைத் திருத்திக் கொண்டு திருமண உறவினை மேம்பட முயற்சி செய்ய வேண்டும்.

குருதேவ், தயவு செய்து நம் நாட்டிலுள்ள வரதட்சிணை சட்டங்களைப் பற்றிப் பேசுங்கள்.

யாரும் எந்த உருவிலும் வரதட்சிணை வாங்கவோ கொடுக்கவோ கூடாது. இங்குள்ள அனைத்து இளைஞர்களையும் வரதட்சிணையை ஆதரிக்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். உங்கள் பெற்றோரிடம் வேறெதையுமின்றி தங்கள் மருமகளை மட்டும்  வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறுங்கள்.

குருதேவ், பெண் சிசுவதையைப் பற்றிக் கூறுங்கள்

நான் முற்றிலும் அப்பழக்கம்  ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுவேன். இங்கு ஹரியானாவில் பெருமளவில் அது நடைபெற்று வருவதாக அறிகின்றேன். பெண் சிசுவதை பத்திற்கு ஏழு என்னும் விகிதாசாரத்தில் நடைபெறுவதாக கூறப்படுகின்றது. இங்கு மருத்துவர்கள் இருக்கின்றார்கள்? அவர்களிடமெல்லாம், இதைத் தடுக்கவும், கருவினைப் பாலினம் சார்ந்த பரிசோதனை செய்ய மறுக்குமாறும்   நான் வேண்டிக் கொள்கின்றேன். பெண்சிசுவதை முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். தடுப்பதற்கு கடுமையான சட்டங்கள் ஏற்பட வேண்டும்.

எந்த மதமும் வெறுப்பை போதிப்பதில்லை

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர், 2014                        

ஈராக்

(வன்முறை, மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் குர்டிஸ்தானத்திலிருக்கும் எர்பில் நகரில் நடந்த அமைதி மாநாட்டின் போது வாழும் கலை ஸ்தாபகரும் மற்றும் புகழ் பெற்ற ஆன்மீகத் தலைவருமான ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் அவர்கள் பேசியது)

என்னை பேச அழைத்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், கௌரவிக்க தகுந்த கவர்னர் டாக்டர் முகமது இர்ஷத் அவர்களுக்கும், பொதுக் குழுத் தலைவருக்கும்,வந்திருக்கும் பிரமுகர்களுக்கும், பெரியோர்களுக்கும் நன்றி.

பொதுவாக அமைதி மாநாடுகள் ஏற்கனவே அமைதி நிலவும் இடத்தில் நடப்பது வழக்கம். ஆனால் அமைதி நாடுகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நடைபெற வேண்டுமென்று நான் நினைக்கிறேன். ஆகவே, மோதல் நடந்த இந்த இடத்தில் நாம் அமைதி மாநாடு நடத்த வேண்டுமென்று நான் சொன்னதற்கு இது ஒரு காரணமாகும். எடுத்துக்கொண்ட கருத்தில் தெளிவு காண்பதற்காக மாநாடுகள் நடத்தப்படுகின்றன. பல பிரமுகர்களுக்கிடையே, பல்வேறு இனத்தவர்களுக்கிடையே, பேச்சுவார்த்தை மூலம் உறவுகள் மேம்படுவதற்காக மாநாடுகள் நடத்தப்படுகின்றன. பேச்சு வார்த்தைகள்,வேறு எண்ண ஓட்டங்களுக்கிடையே இருக்கும் இடைவெளியை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். மீண்டும் அமைதியை நிலைநாட்ட, உறுதிமொழி எடுப்பதற்காக இந்த மாநாடு நடத்தபடுகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் பயம் நீங்கி வலுப் பெறுவதற்கு இந்த மாநாடு வழி செய்ய வேண்டும்.

சமயத்தில், வாழும் கலையை சேர்ந்த எங்கள் தன்னார்வத் தொண்டர்கள், இரண்டு ஆண்டுகளாக இங்கு செய்து வரும் சேவையை நினைவுபடுத்த விரும்புகிறேன். திருமதி / குமார் மௌவானி ஏற்கனவே சொல்லியபடி, பல அரசு சாரா நிறுவனங்கள், ஒன்றாக இணைந்து, போரினால் பாதிக்கப் பட்ட பெண்களின் நலத்துக்காகப் பாடுபட்டு வருகின்றன. இந்த 21 ம் நூற்றாண்டில் பலர் மக்களின் கலாசாரத்தை பின் நோக்கி இழுத்து, நாகரீகமற்ற இருண்ட காலத்துக்கு கொண்டு செல்வதைப் பார்க்கும் போது மனதில் வலியேற்படுகிறது. தீவிரவாதிகள்,அமைதியாக வாழ விரும்பும் மக்களிடையே விரோதத்தை ஏற்படுத்தி, நாடுகளுக்கிடையே பகையை மூட்டி சமுதாயத்தில் அழிவை உருவாக்குகிறார்கள்.

கௌரவிக்க தகுந்த தலைவர், ஏற்கனவே சொல்லியபடி, இந்தியாவும் அவர் சொன்ன மதிப்புகளைப் (கருத்துகளை) பகிர்ந்து கொள்கிறது.இந்தியா எப்போதுமே மற்ற நாட்டின் மீது படையெடுப்பதில்லை. ஆனால் மற்ற நாடுகளின் படையெடுப்பால் பலமுறை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வது, அமைதி மற்றும் வன்முறையற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மட்டுமே. மகாத்மா காந்தி அவர்களும் மற்ற பல தலைவர்களும், கடந்த காலத்தில் ஏற்பட்ட இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் போது, மக்கள் மனதில் நம்பிக்கையைப் பதித்து அமைதியை வளர்த்து வந்தார்கள்.

பூங்கொத்தில் பல அழகிய மலர்கள் இணைந்திருப்பது போல, குர்திஸ்தானத்தில் பல இனத்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். பல கலாசாரங்கள் வழக்கில் உள்ளன. இப்படிப்பட்ட சமுதாயத்தை நாம் காத்து வளர்க்க வேண்டும். வழங்கி வரும் பல்வேறு கலாசாரங்களில், ஒரு மதத்தையோ, ஒரு கலாசாரத்தையோ இழந்து விட்டால், உலகுக்கே ஒரு இழப்பாகி விடும். எல்லா கலாசாரங்களுமே இவ்வுலகின் பாரம்பரியத்தை சேர்ந்தவை. எல்லாவற்றையும் காத்து வளர்ப்பது அவசியம். இப்படிப் பார்க்கும் போது, யெஸிடிஸ் மற்றும் ஷாபத் (இப்பகுதியில் வழங்கி வரும் பழமையான மத நம்பிக்கைகள்) இனத்தவர்களை அழியாமல் காக்க வேண்டும்.

நாமனைவரும் இவ்வுலகில் ஒற்றுமையாக வாழமுடியும். உலகின் வடிவமைப்பே அப்படித் தானிருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும். அமைதியாக வாழும் மன உறுதி, கருணை மற்றும் ஒன்றாக இணைந்து வாழும் மனித நேயப் பண்புகளைப் போற்றி வளர்ப்பது தற்போதைய கால கட்டத்துக்கு மிகவும் அவசியம். நேற்று ஓரிரண்டு முகாம்களுக்குச் சென்றேன். அங்கு வசிக்கும் மக்களின் நிலைமையை பார்த்தாலே மனமுடைந்து போகிறது. அவர்களுடைய மொழி புரியாவிட்டாலும், அவர்களுடைய வலியை, மன வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்தது. பல மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வந்து அகதிகளாக வாழ்கிறார்கள். பல இளைஞர்கள் தங்களுடைய படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்திருக்கிறார்கள். அகதிகள் முகாம்களில் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

யேசு கிறிஸ்துவோ, கடவுளோ இதை விரும்ப வில்லை. கடவுளின் வேலையை செய்வதாக நினைத்து கொடுஞ்செயல் செய்பவர்கள் மிகவும் தவறு செய்கிறார்கள். கௌரவிக்கத் தக்க மதத் தலைவர்கள், எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள், முகமதியர்கள், யெஸிடிஸ் மற்றும் பல மதங்களின் உட்பிரிவுகளை சேர்ந்த பல தலைவர்கள், இந்த அமைதி மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கிறோம்.நாமனைவரும் சேர்ந்து பேசி, வன்முறையாளர்களுக்கு, வன்முறையால் கடவுளை மகிழ்விக்க முடியுமென்ற தவறான கொள்கையுள்ளவர்களுக்கு ஒரு தெளிவான செய்தி அனுப்ப வேண்டும்.

துரதிஷ்டவசமாக, வன்முறையில் ஈடுபடும் மக்கள் அமைதியை மதிப்பதில்லை. அமைதியான மக்கள் எப்போதுமே வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். சமுதாயத்தில் இரண்டு விதமான மக்களையும் ஒன்றாகக் கூட்டி பேச்சு வார்த்தை நடத்த நாம் வழி காண வேண்டும். இந்த அமைதி மாநாட்டில், மன அளவிலும், இதய பூர்வமாகவும் சிந்தித்து, நம்மால் என்ன செய்ய முடியுமென்று பார்க்க வேண்டும். வழி தவறி மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவோரிடம், எப்படி பேச்சு வார்த்தை நடத்தலாம்? பெண்களையும்,குழந்தைகளையும் எப்படிப் பாதுகாப்பது? இளைஞர்களை, தற்கொலைப்படையில் சேராமல்,பயங்கரவாதக் கொள்கைகளை பின்பற்றாமல், தீவிரவாதியாகாமல் எப்படித் தடுப்பது? இக்கேள்விகளுக்கான விடை காண்பது, இந்த மாநாட்டின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

இங்கு பல அறிஞர்கள் இருக்கிறார்கள். நம் எல்லோருடைய சிந்தனைகளையும் முன் வைத்து, கலந்து பேசி, வன்முறையை அறவே ஒழித்து, உலகின் எல்லா பகுதிகளிலும் வெறுப்பு நீங்கி, மக்கள் ஒற்றுமையாக, அமைதியாக வாழவும், தீவிர வாதிகள் தங்கள் கொடுஞ் செயல்களை கைவிட்டு, மக்களிடம் கருணை காட்டவும், வறுமை நீங்கி செல்வம் செழிக்கவும் ஒரு உறுதியான திட்டம் தீட்ட வேண்டும்.சில வார்த்தைகளோடு, குர்டிஸ்தானத்தில் பெண்களை பாதுகாக்கவும், அமைதியை நிலை நாட்டவும் வழி காண்பதற்காக நடத்தப்படும் இந்த அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அனைவருக்கும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். அமைதிக்காக நாமனைவரும் பாடுபடுவோம்.

அமைதிக்கு சாத்தியமிருக்கிறது

வியாழக்கிழமை - 20, நவம்பர் - 2014                  

எர்பில், ஈராக்

நீங்களனைவரும் அகதிகள் முகாமுக்குச் சென்று, மக்கள் இழந்த புன்னகையை மறுபடியும் அவர்கள் முகத்தில் கொண்டுவர உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன். நேற்று ஓரிரண்டு முகாம்களுக்குச் சென்றபோது, அங்கிருந்த மக்கள்,“இன்று நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். எங்களால் புன்னகை புரிய முடிகிறது“ என்று சொன்னார்கள். அது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. பேரழிவுக்கு பின்பு, எல்லா துன்பங்களுக்குமிடையே வாழும் மக்களுடைய இழந்த புன்னகையை மீட்டுக் கொடுப்பதை, நம்மால் இயன்ற ஒரு சேவையாக செய்ய முடியும். நாமனைவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

இப்படிப்பட்ட சம்பவங்களை எப்படி தடுப்பது என்று அடுத்ததாக கவனிக்க வேண்டும். வன்முறை படைகளில் மக்கள் சேருவதை எப்படி தடுக்க முடியும் என்று பார்க்க வேண்டும். எல்லா நாடுகளின் அரசுடன் கலந்து பேசி,அமைதியை நிலைநாட்ட, நம்மிடமுள்ள எல்லா சக்திகளையும் பிரயோகித்து, மக்களுக்கு அமைதியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாம் பாதுகாப்பு படைக்காக செலவிடும் பணத்தில் சிறு பகுதியை அமைதி பற்றிய கல்வி திட்டங்களுக்காக செலவழித்தால், இளைஞர்கள் மனிதாபமற்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். வழி தவறிய இளைஞர்களும் நம்மை சேர்ந்தவர்களே. சகோதரர்களே. ஏன் வழிதவறிச் சென்று விட்டார்கள்? ஏனென்றால் அவர்களுக்கு அமைதி பற்றிய கல்வியறிவு கிடைக்க வில்லை. நாம் உடனடியாக, நம் கல்வித் திட்டத்தில், அமைதியால் கிடைக்கும் நன்மைகள் பற்றி மாணவ மாணவியருக்கு எடுத்து செல்ல வேண்டும். இந்த பூமியில் யாரும் கடவுள் பெயரால் வன்முறை செயலில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கொல்லக்கூடாது.

கல்வித் துறையில் ஈடுபட்டிருக்கும் மக்களை கேட்டுக் கொள்கிறேன். அமைதிக் கல்வியை அமல்படுத்துங்கள். பல்வேறு கலாசாரங்கள், பல மதங்கள் பற்றிய கல்வியறிவையும், மன உணர்ச்சிகள கையாள்வதற்கும்,அதிர்ச்சிகளை எதிர் கொள்வதற்கான வழிகளையும் மாணவ மாணவியருக்குக் கொடுக்க வேண்டும்.

மீடியா நிறுவனங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நல்ல நிகழ்வுகளை பற்றி அதிகமாக எடுத்து சொல்லுங்கள், உலக நாடுகளில் பல்வேறு இனத்தவர்களிடையே எழும் சிறுசிறு முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல், மக்கள் ஒருவருக்கொருவர் கருணை காட்டும் நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள். மீடியா செய்தி நிறுவனங்கள், மக்கள் தங்கள் மன அழுத்தங்களிலிருந்து விடுபடும் வழிகளை எடுத்துச் சொல்ல வெண்டும்.

மக்கள் எப்போதும் மனஅழுத்தத்தோடும், இதயத்தில் சுமையோடும் வாழத் தேவையில்லை.மீடியா மக்களை வன்முறையற்ற வழியில் எடுத்துச் செல்லவேண்டும். பத்திரிகைத் துறையில் இரண்டு முக்கியமான அமசங்கள் உள்ளன. ஒன்று நிகழ்ச்சியை அப்படியே மக்களின் முன் வைப்பது. சில சமயம் அப்படிச் செய்வது மக்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும்.அப்படிப்பட்ட நிகழ்வுகளோடு, நல்ல நிகழ்வுகளை பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பலர் நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். அது பற்றிய செய்தி மக்களை சென்றடைய வேண்டும்.

முகாம்களில் பல இளைஞர்கள் மக்களுக்குத் தொண்டு செய்வதை பார்க்க முடிந்தது. தங்கள் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு, தாங்கள் செய்து வந்த வேலைகளை கைவிட்டு, இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சேவைக்காக கொடுத்திருக்கிறார்கள். செய்திகளைப் பிரசுரம் செய்ய வேண்டும். மற்றவர்களை உற்சாகப்படுத்த முன்னுதாரணமாக அமையும்.அவர்களும் வாழ்க்கையில் நல்ல காரியங்கள் செய்யத் துவங்குவார்கள்.மீடியா மக்களை ஊக்கப்படுத்தி, சேவைத் திட்டங்களில் ஈடுபட வைக்கவேண்டும். இது அவர்களுடைய மன அழுத்தத்தை போக்கும்.

கேள்வி - பதில்கள்

ஒவ்வொரு மதத்திலும் இரண்டு அம்சங்கள் இருப்பது தெரியும். ஒன்று நம்பிக்கை. மற்றொன்று சடங்குகள். எது மதங்களை இணைக்கும்? எது மதங்களை பிரிக்கும் ?

மதத்தில் மூன்று அம்சங்கள் உள்ளன“.

·         மதிப்புகள்
·         சின்னங்கள்
·         சடங்குகள் / நடைமுறைகள்

முதலாவது; மதிப்புகள் எல்லா மதங்களிலும் ஒன்றாகவே உள்ளன. உதாரணமாக சகோரத்துவம், கடவுள் அன்பானவர், கருணையுள்ளவர் என்ற கருத்து. ஏழைகளுக்கும், தேவையானவர்களுக்கும் சேவை செய்யவேண்டும் என்ற கொள்கை எல்லா மதங்களிலும் இருக்கிறது. 

இரண்டாவது; சின்னங்கள். ஒவ்வொரு மதத்துக்கும் சின்னங்கள்,புனித ஸ்தலங்கள் மற்றும் வேதங்கள் (புனிதமான போதனைகள்) உள்ளன

மூன்றாவது; சடங்குகள் / பூஜை விதிகள். பல்வேறு சடங்குகள் இருக்கக்கூடும்.

மக்கள் பொதுவாக மதிப்புகளை மறந்து,சடங்குகள் மற்றும் நடைமுறைகளிலுள்ள வேறுபாடுகளை எடுத்துக்கொண்டு மோதிக் கொள்கிறார்கள்.அதனால் நான் “ ஆன்மீகம் மக்களை ஒன்று சேர்க்கிறது. மதங்கள் மக்களைப் பிரிக்கக்கூடும்“ என்று சொல்கிறேன்.

உலகிலுள்ள முக்கிய மதங்களை பார்க்கும் போது, ஆப்ரஹாம் மூலம் வந்த மதங்கள் மூன்று உள்ளன. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் போல அவை ஒரே மூலத்திலிருந்து வந்தவை. ஆனால் இவற்றினிடையே பல மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்படுகின்றன.
மற்ற ஆறு மதங்கள் பின் வருமாறு. ஷிண்டோ மதம், டாவோ மதம், புத்த மதம், இந்து மதம், சீக்கிய மதம், ஜைன மதம். இவற்றிடையே மோதல்கள் எப்போதும் நடந்ததில்லை. தூரக் கிழக்கு நாடுகளில் வழங்கும் இம்மதங்களை பின்பற்றுபவர்கள் எப்போதும் அமைதியாக ஒற்றுமையாக  வாழ்ந்து வருகிறார்கள். இம் மதங்களிலுள்ள சடங்குகள் வேறு வேறானவை. இந்து மதத்தில் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் உள்ளன. ஆனால் மோதல் ஏற்பட்டதில்லை.

அடிப்படை விதி; மற்றவரை மரியாதையோடு, கௌரவத்தோடு நடத்த வேண்டும். இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளும் இப்படித் தான் இருந்தன. இஸ்லாமியரில்  ஐந்து பெரிய பிரிவுகள் உள்ளன. அதற்கு மேலும் இருக்கக்கூடும். சரித்திரப்படி எல்லாப் பிரிவினரும் அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்ததை தெரிந்து கொள்ளலாம். ஈராக்கில் கூட ஷியா, சுன்னி இனத்தவர்கள் ஒருவரோடொருவர் இணைந்து வாழ்ந்து வந்தனர்.இனப்பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் போது, மற்ற அடையாளங்களை விட மதத்தின் அடையாளம் முக்கியமாகி விடுகிறது. அதிலிருந்து எல்லா பிரச்சினைகளும் துவங்குகின்றன. ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழ முடியும்.

ஜப்பானில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் ஜப்பான் சென்றிருந்த போது, எல்லா மதத் தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். அவருக்கு ஒரு புறம் ஒரு புத்த பிட்சுவும், மற்றொரு புறம் ஷிண்டோ மதகுருவும் அமர்ந்திருந்தனர். 

நிக்ஸன் ஷிண்டோமத குருவைப் பார்த்து “ஜப்பானில் ஷிண்டோ மதத்தைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர்? “ என்று கேட்டார்.

அவர் சொன்னார். 80%

நிக்ஸன புத்தமத குருவைப் பார்த்து “ஜப்பானில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர்? என்று கேட்டார்.

அவர் சொன்னார். 80%

அமெரிக்க ஜனாதிபதிக்கு இது புரியவில்லை.இது எப்படி சாத்தியம் ? என்று கேட்டார். ஆனால் அது சாத்தியம். அதே போல் இந்தியாவுக்கு வந்து பார்த்தால், ஜைன மதத்துக்கும் இந்து மதத்துக்கும் உள்ள நம்பிக்கைகள் வேறு வேறாக இருந்தாலும், அவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை பார்க்க முடியும். அதேபோல் சீக்கிய மதத்தினரும்,இந்துக்களும் மற்ற மதத்தினரின் பண்டிகைகளில் கலந்து கொண்டு கௌரவித்து கொண்டாடுவதை பார்க்கலாம். என்றுமே பெரிய மோதல் ஏற்பட்டதில்லை. நாங்கள் மட்டும் தான் சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என்று எந்த மதத்தினரும் சொல்வதில்லை.

மத்தியக் கிழக்கு நாடுகளின் மதங்கள், தூரக் கிழக்கு நாடுகளின் மதங்களிலிருக்கும் நல்ல கருத்துக்களை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யெஸீடிசாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியரில் ஷியா, சுன்னி, அஹமதியா அல்லது சூஃபி பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லோரும் ஒற்றுமையாக வாழ முடியும். மதங்களின் பன்முகத் தன்மையைக் கௌரவிப்பது முக்கியம்.

கடத்திச் செல்லப்பட்டவர்களை மீட்பதற்காக,(அதிலும் முக்கியமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளை), உலகின் மதத் தலைவர்களை, (அதிலும் முக்கியமாக அரேபியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளின் மதத் தலைவர்களை) வலியுறுத்துவீர்களா? நாங்கள் அமெரிக்க அரசின் உதவியை நாடிய போது, உணவு அனுப்ப சொல்லிக் கேட்டுக்கொண்ட போது, “கடத்தப்பட்ட மக்களை மீட்க, ஈராக் அரசு மற்றும் அண்டைய நாடுகளின் அரசுக்கு எழுதியிருப்பதாக சொன்னார்கள். “

இந்த விஷயத்தை அரசுகளுக்கிடையே தீர்த்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அரசுக்கும் பல கொள்கைகள் உள்ளன. எங்களை போன்ற அரசுசாரா நிறுவனங்களிலிருந்து, முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். தெரிந்த வரை, ஒவ்வொரு நாட்டின் அரசின் வெளிநாட்டுக் கொள்கைகளில் நான் தலையிட முடியாதென்று நினைக்கிறேன். நாட்டின் அரசை மற்றொரு நாட்டின் அரசோடு மோதவிட முடியாது. அப்படி செய்தால் நட்பில்லாதவர்களாக பார்ப்பார்கள். நீங்கள் வெவ்வேறு அரசுகளுக்கு எழுதி, யாருக்கு, எந்த இனத்தவருக்கு எப்படிப்பட்ட உதவி தேவையோ, எடுத்துச் சொல்லி உதவி கேட்க வேண்டுமென்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால் உங்களுக்கு வேண்டிய உதவி அந்த அரசிடமிருந்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் எல்லோரும் அறிந்த ஒரு நதி இன்று மிகவும் மாசுபட்டிருக்கிறது. மதத் தலைவர்கள் இந்துக்களை பார்த்து, நீ இந்து மதத்தையோ, புத்த மதத்தையோ சேர்ந்தவர்களாக இருந்தால், இந்த நதியில் நீராட வேண்டுமென்று சொல்கிறார்கள். ஆனால் இந்த நதி மிகவும் அழுக்காக உள்ளது. இப்படிச் சொல்வதற்குப் பின்னால் என்ன உள்ளது என்று நீங்கள் சொல்ல முடியுமா?

ஒரு காலத்தில் கங்கை நதியின் நீர் மிகவும் தூய்மையாக இருந்தது. இன்று எங்கள் பிரதம மந்திரி கங்கை நீரின் அசுத்தத்தை நீக்க திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறார். கங்கை புனித நதியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் நாங்கள் நதிகளை கௌரவிக்கிறோம். மரங்களை, விலங்குகளை வணங்குகிறோம். படைப்பின் எல்லாவற்றையுமே வணங்கத்தக்கதாக கருதுகிறோம்.

எந்த வேதத்திலும் (நன்னூல்களிலும்), நதியில் மூழ்கி எழவேண்டுமென்று எழுதப்படவில்லை. அப்படிச் செய்தால் மட்டுமே யோகம், தியானம் செய்யத் தகுந்தவராவார் என்று சொல்லப்பட வில்லை. இவை சடங்குகள். சொல்லியபடி, சடங்குகளும், நடை முறைகளும் வேறுபடுகின்றன. காலம் செல்லச்செல்ல,மக்கள் சடங்குகளை மட்டும் பின்பற்றுகிறார்கள். மக்கள் மதங்களின் மதிப்பை உணர்ந்து போற்ற வேண்டும். மதிப்பு தான் ஞானம்.

பண்டைய பாடல்களில், “ஞானம் ஒரு நதியைப் போன்றது” என்று சொல்லப்படுகிறது. ஞானம் பெற்றால் ஆனந்தமாக வாழலாம். முக்தியடையலாம் என்று சொல்லப்படுகிறது. இது தான் உண்மை. அசுத்தமான நதி என்று சொல்லும் கங்கை ஞானத்துக்கு உவமையாகக் காட்டப்பட்டது. ஞானத்தில் மூழ்கி எழுந்தால், முக்தியடைய முடியுமென்று சொல்லப்பட்டது. காலப்போக்கில் அதைத் தவறாக அர்த்தம் கொண்டு, கங்கையில் மூழ்கி எழுந்தால்,முக்தி கிடைக்குமென்ற தவறான நம்பிக்கையில் இருக்கிறார்கள். காலப்போக்கில் நடந்த ஒரு விபத்து போன்றது.இப்படிச் சொல்வதன் சாரத்தைப் புரிந்து கொள்வது அவசியம். நாம் நம் மதத்தில் சொல்லப்பட்ட மதிப்புகளைப் புரிந்து கொண்டு அதன் படி வாழ வேண்டும்.

யோகா என்றால் என்ன? அமைதியை நிலை நாட்ட யோகாவால் எப்படி உதவ முடியும்?

யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைக்கும் நுட்பமான செயல்முறை எனக் கொள்ளலாம். யோகா உன்னை மன அழுத்தத்திலிருந்து மற்றும் பதற்றத்திலிருந்து விடுவிக்கும். 
மன அழுத்தம் உன்னை வலுவிழக்கச் செய்கிறது. கோபம், பொறாமை - எதிர்மறை உணர்ச்சிகளால் துன்பப் படவைக்கும்.மூச்சுப் பயிற்சிகள்,தியானம்,எளிய உடற் பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை நீக்கும் போது, அது உன் உடலும் மனமும் ஓய்வாக இருக்க உதவும். நீ ஆனந்தத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் அனுபவத்தில் உணர முடியும்.

நீ நலமாக, ஆனந்தமாக இருக்கும் போது, வன்முறையில் ஈடுபடமாட்டாய். யாராவது ஒருவர் வன்முறையில் ஈடுபட்டால், அவருடைய அந்தச் செயலுக்குப் பின்னால் கோபமும் ஏமாற்றமும் உள்ளன என்று புரிந்து கொள்ளலாம். நாமனைவரும் குழந்தையாக இருக்கும் போது யோகா செய்திருக்கிறோம். குழந்தை பிறந்ததிலிருந்து 3 வயது வரை கவனித்து வந்தால், எல்லா விதமான யோகப் பயிற்சிகளையும் அது செய்வதை பார்க்க முடியும். ஒரு குழந்தை மூச்சு விடும் முறை, பெரியவர்கள் மூச்சு விடும் முறையிலிருந்து வேறுபட்டது. மூச்சு, உடலையும் உணர்ச்சிகளையும் இணைக்கும் பாலம் போன்றது. மூச்சு விடும் முறையை மாற்றி, நம் உணர்வுகளை அமைதியாக்க முடியும். எதிர் மறை உணர்வுகளை முற்றிலும் நீக்க முடியும்.