ஒரு குருவின் பங்களிப்பு. . . .


நவம்பர் 24, 2014

ஹரியானா இந்தியா 


கேள்வி பதில்கள்

குருதேவ்! சில மாதங்களுக்கு முன் என்னுடைய தனிப்பட்ட குரு அவருடைய ஸ்தூல உடலை விடுத்து விட்டார். அவர் இல்லாததால் ஏற்பட்டுள்ள துயரையும் அவருடைய பிரிவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தையும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எவ்வாறு நான்,குரு என்பவர் உடல்ரீதியாக இருப்பவர் அல்ல ஆனால் மூலாதாரமாக எங்கும் வியாபித்திருப்பவர் என்பதை உணர்ந்து என்னை தேற்றிக்கொள்ளுவது? நான் எப்படி அவர் இல்லாமல் வாழ்வது மற்றும் மனதை அமைதியாக வைத்துக் கொள்வது?

ஒய்வு எடுக்கவும். தியானம் செய்யவும். நீங்கள் அதிக தியானம் செய்யும் போது குரு என்பவர் ஒரு பிரகாசிக்கும் ஒளி என்றும் நித்தியமானவர் என்று உணரலாம். குரு என்பவர் உடலால் அல்ல. உடலுக்குள் இருக்கும் தெய்வீக ஒளி ஆவார். அன்பே குரு. நீங்கள் குருவிடம் இருந்து பெற்ற அனைத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவருமே வாழ்வில் மற்ற யாராவது சிலருக்கு குருவாக இருக்கின்றோம். குருவாக இருப்பதன் பொருள் என்ன? குரு என்பவர் உங்களுடைய நலனையும்,முன்னேற்றத்தையும் தவிர வேறு எதையும் விரும்புவதில்லை. அதுவே குரு தத்துவம்.நிச்சயமாக நீங்கள் மற்ற யாராவது ஒருவருடைய வாழ்வில் குருவின் பாத்திரத்தை ஏற்று கொள்ளுவீர்கள்

குருதேவ்! எவ்வாறு நாம் அகங்காரத்தை விட முடியும்?

எதற்காக நீங்கள் அகங்காரத்தை விட விரும்புகிறீர்கள்? அதை சற்றே தள்ளி வைத்து விடவும். அதனுடன் போராட வேண்டாம். அடிக்கடி நாம் அகங்காரத்தை விட்டுவிட எண்ணுகின்றோம், ஏனென்றால் அது வலியை ஏற்படுத்துகிறது. அகங்காரத்தில் இருந்து விடுபட வேண்டும் என்னும் எண்ணம் அதை இன்னும் பெரிதாக்கும். இயல்பாக இருப்பதே அகங்காரத்தை சமாளிப்பதற்கான எளிய வழி ஆகும். அனைவரும் உங்களை சார்ந்தவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவும். நான் பல நாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றேன். நான் செல்லும் எந்த நாட்டிலுமே யாருமே எனக்கு புதியவராக தெரிவதில்லை.

குருதேவ்! மறுபிறப்பு அல்லது அவதாரம் குறித்து சொல்லவும்.

கண்டிப்பாக மறுபிறப்பு இருக்கின்றது. அது நிச்சயம் என்று தெரிந்து கொள்ளவும். பெளதிகத்தில் வஸ்து மற்று சக்தி ஆகிய இரண்டையும் உருவாக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது என்று சொல்லப்படுகிறது. மனமும் ஆன்மாவும் தூயசக்திகள்.  அவை பல வழிகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுகின்றன. முந்தைய ஆயுள்காலங்களில் நான் பலமுறை வந்திருக்கின்றேன், நீங்களும் பலமுறை வந்திருக்கின்றீர்கள். வித்தியாசம் என்னவென்றால் நான் அதை அறிந்திருக்கின்றேன், நீங்கள் அதை அறியவில்லை. அவ்வளவு தான். நீங்கள் அடிக்கடி தியானம் செய்தால் நீங்களும் அந்த அனுபவத்தை பெறலாம்

இந்திய இளைஞர்கள் அரசியலில் நுழையலாமா?

ஆம். நிச்சயமாக இளைஞர்கள் அரசியலில் நுழைய வேண்டும். நான் இதை ஊக்குவிக்கிறேன். வாழும் கலையில் புவனேஸ்வரில் நாம் நல்லாட்சி முறையை கற்று தரும் ஒரு கல்லூரியை துவங்கி இருக்கின்றோம். அரசியலில் நுழைந்து அங்கு வேலை செய்ய நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் இக்கல்லூரியில் சேர வேண்டும். ஹரியானாவில் உள்ள இளைஞர்களுக்கு சில இடங்களை ஒதுக்கி வைக்குமாறு நான் ஸ்ரீ ஸ்ரீ பல்கலைகழக துணை வேந்தரிடம் கேட்கின்றேன். எந்த மாநிலத்திலோ அல்லது மண்டலத்திலோ உள்ள இளைஞர்கள் நல்ல தரமான கல்வி பெறாமல் போவதை நான் விரும்பவில்லை.ஒவ்வொரு  மாகாணத்திலும் உள்ள சில இளைஞர்கள் அந்த கல்லூரியில் சேர்ந்து பயில வேண்டும். இது அவர்களுடைய சிந்தனையையும் நாட்டை பற்றிய தொலை நோக்கையும் விரிவடைய செய்ய உதவும்.

குருதேவ்! மதத் தலைவர்களும் தொண்டர்களும் செய்யும் தவறான செயல்களை கேட்டு மனம் தொந்தரவு அடைகின்றது. தயவு செய்து இதை எப்படி கையாள்வது என்று வழி காட்டவும்.

இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மதத் தலைவர்களும் தொண்டர்களும் உள்ளனர். அதிலே இரண்டு அல்லது மூன்று பேர் செய்யும் தவறான செயல்களை கண்டோ அல்லது அவர்கள் தவறான சிந்தனைகளில் சிக்கி இருப்பதை கண்டோ, ஒருவருடைய மனதில் பதட்டமோ, எதிர்மறையான எண்ணங்களோ தோன்றக்கூடாது. யார் ஒருவர் தவறு செய்கிறாரோ அவர் நிச்சயமாக அதற்காக வருந்த வேண்டி இருக்கும் விளைவை ஏற்க வேண்டி இருக்கும். அது அவருடைய கர்மவினை அதை அவர் தவிர்க்க முடியாது. ஆனால் நீங்கள் இந்த மாதிரியான விஷங்களில் சிக்கி இருக்கக் கூடாது. நல்ல ஞானமும் வழிகாட்டலும் நமக்கு எங்கிருந்து அல்லது யாரிடம் இருந்து கிடைத்தாலும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொண்டர் என்று நீங்கள் எண்ணியிருக்கும் ஒருவர் தவறான செயல்கள் செய்தாலோ அல்லது மதிப்பிற்குரிய நிலையில் இருந்து வீழ்ந்தாலோ, நீங்கள் அவர் மீது இரக்கமும் கருணையும் கொள்ள வேண்டும். அவர் மீது வெறுப்பு கொள்ளக்கூடாது, ஏனென்றால் அவர் அதை அறியாமையினாலும் தவறான கேள்வி ஞானத்தினாலுமே செய்கிறார். நீங்கள் அதை தவிர்த்து முன்னேறலாம். ராமாயணத்தில் வந்த அரக்க அரசன் ராவணன் சீதா தேவியை அபகரிக்க ஒரு வயதான துறவி போல மாறுவேடமிட்டு வந்தான், இல்லையா? அதனால் அந்த மாதிரியான எண்ணங்கள் உள்ளவர்கள் இன்றும் இருக்கக்கூடும். ஒருவர் என்ன செய்ய முடியும்? ராவணன் வயதான துறவி போல் மாறு வேடமிட்டு வந்திருக்கவில்லை என்றால் நமக்கு இன்று ராமாயணமே கிடைத்திருக்காது.

ஒவ்வொரு சமுதாயத்திலும் துஷ்டர்கள் இருக்கின்றனர். தவறு செய்யும் இம்மாதிரியான சிலர் அவர்களுடைய செயல்களால் மொத்த சமுதாயத்திற்கும் அவமானத்தை கொண்டு வருகிறார்கள். சில மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் இருந்து சிறுநீரகத்தை திருடுவதன் மூலமாக செல்வவளத்தை பெறுகின்றனர். அதனால் நீங்கள் இதை நினைத்து பயந்து கொண்டு மருத்துவரிடம் செல்லுவதையே நிறுத்திவிட வேண்டும் என்று பொருள் கொள்ளக்கூடாது அல்லவா? உங்களால் ஆரோக்யமாக இருக்க முடியுமா? 

அதை போலவே சில கடைக்கார்கள் உணவு தானியங்களிலும்,சர்க்கரையிலும் கலப்படம் செய்வதன் மூலம் லாபம் பெறுகின்றனர். இதனால் நீங்கள் அனைத்து கடைகளையும் மூடிவிட்டால், சமுதாயத்தில் எப்படி காரியங்கள் நடைபெறும்? வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து காரியங்கள்  மீதும் நாம் சந்தேகம் கொண்டால், அது நமக்கு உபயோகமாக இருக்காது. நாம் அம்மாதிரியாக தவறான செயல்கள் செய்பவர்களை பார்த்தால் அவர்கள் மீது கருணையும் இரக்கமும் கொள்ள வேண்டும். அவர்கள் நேர்வழியில் இருந்து விலகி உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் நேர்மையானவர்களும் அப்பாவிகளும் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு குற்றவியல் வழக்குகளில்சிக்கிக் கொள்ளுகிறார்கள். உதாரணத்திற்கு, காஞ்சிமடத்தின்  சங்கராச்ர்யா தவறுதலாக ஒரு குற்றவியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். 9 ஆண்டுகள் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு 3500 மணி நேரங்களுக்கு பின் அவர் அப்பாவி என்று கண்டறியப்பட்டது. ஆனால் ஊடகங்கள் அவர் அப்பாவி என்று நிரூபணமாகி விடுவிக்கப்பட்டதை எட்டு நிமிடங்கள் மட்டுமே காண்பித்தன. அம்மாதிரியான துரத்ருஷ்டவசமான சம்பவங்கள் நல்லவர்களுக்கு ஏற்படுகின்றன. நீங்கள் இதை ஒரு  தவமாகக் கருதிக்கொள்ள வேண்டும். நீங்கள் இந்த மாதிரியான தவறான காரியங்களில்  ஈடுபடக்கூடாது என்று அறிந்து கொள்ள இவைகளெல்லாம் ஒரு பாடமாக இருக்க வேண்டும். அனைவரையும் மதிக்க வேண்டும். எப்போதும் அவர்களை பற்றிய நல்லவைகளை எடுத்துக் கொள்ளவும். வாழ்க்கையில் நாம் இதை உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.

நீங்கள் இந்த உலகத்தில் பார்க்கும் அனைத்து நல்ல விஷயங்களும் தெய்வீகத்தில் இருந்து வந்தவை. கெட்ட குணங்கள் அல்லது பழக்கங்கள் தெய்வீகத்தை அறியாதவர்களிடம் இருந்து வருபவை. தவறான அறிவாலும் அறியாமையினாலும் ஒருவருடைய பார்வை மங்கலாகவும் கலங்கியும் இருக்கும் போது தான் அவ்வாறான தவறுகளை செய்கின்றனர். இதை புரிந்து கொண்டு அமைதியாக இருக்கவும். உங்கள் அனைவருடைய மனதிலும் இன்னும் ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். வாழ்வில் ஒரு பாத்திரமாக இருப்பது அவர்களுடைய கர்ம வினையா அல்லது விதியா என்பதே அந்த கேள்வி. உங்களில் யார் யாருடைய மனங்களில் இந்த  கேள்வி எழுந்தது? (பலர் கைகளை உயர்த்துகின்றனர்).

வாழ்க்கை என்பது விதி மற்றும் உங்களுடைய சுய முயற்சி இரண்டின் சேர்க்கையே. நான் இதை உங்களுக்கு ஒரு எளிய உதாரணத்தின் மூலமாக விவரிக்கின்றேன். ஒரு குறிப்பிட்ட வயதிற்குப்பின் உங்களுடைய உயரம் அதிகரிக்கிறதா? ஐந்து அடியோ அல்லது ஆறு அடியோ, நீங்கள் அந்த உயரம் வளர்ந்த பிறகு, அதற்கு மேல் வளர்ச்சி ஏற்படுவதில்லை. ஆகவே உங்கள் உயரம் உங்கள் தலைவிதியை போன்றது. உங்கள் எடையை நீங்கள் 10 கிலோ அதிகரிக்க விரும்புகிறீர்களோ அல்லது 20 கிலோ குறைக்க விரும்புகிறீர்களோ, அது உங்களையே சார்ந்தது. உங்களுடைய எடையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியாது என்று நீங்கள் நினைத்தால் அது சரியான எண்ணம் அல்ல. நீங்கள் உங்கள் எடையை அதிகரிக்கவோ குறைக்கவோ முடியும், அது உங்களிடம் இருக்கும் விருப்பமே.           


ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின் உங்களுடைய உயரத்தை அதிகரிக்க இயலாது என்பதை தெரிந்து கொள்ளுவதே விதி ஆகும். வெளியே மழை பெய்து கொண்டிருந்தால், அது விதி. ஆனால் மழையில் நனைவதா இல்லையா என்று முடிவு செய்வது உங்களுடைய தேர்வு. அது உங்களுடைய சுய முயற்சி. ஒரு குடையை எடுத்துக் கொண்டு நீங்கள் நடந்தால் நீங்கள் மழையில் நனைய மாட்டீர்கள்., இல்லையென்றால் நனைந்து விடுவீர்கள். ஆன்மீக பாதையில் இருப்பது என்பதன் பொருள் உங்கள் விதி மற்றும் உங்களுடைய சுய முயற்சியின் தரம் இரண்டையும் அதிகரித்துக் கொள்ளுவதே.