அமைதிக்கு சாத்தியமிருக்கிறது

வியாழக்கிழமை - 20, நவம்பர் - 2014                  

எர்பில், ஈராக்

நீங்களனைவரும் அகதிகள் முகாமுக்குச் சென்று, மக்கள் இழந்த புன்னகையை மறுபடியும் அவர்கள் முகத்தில் கொண்டுவர உத்தரவாதம் அளிக்க வேண்டுமென்று கேட்டு கொள்கிறேன். நேற்று ஓரிரண்டு முகாம்களுக்குச் சென்றபோது, அங்கிருந்த மக்கள்,“இன்று நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். எங்களால் புன்னகை புரிய முடிகிறது“ என்று சொன்னார்கள். அது ஒரு நல்ல சந்திப்பாக அமைந்தது. பேரழிவுக்கு பின்பு, எல்லா துன்பங்களுக்குமிடையே வாழும் மக்களுடைய இழந்த புன்னகையை மீட்டுக் கொடுப்பதை, நம்மால் இயன்ற ஒரு சேவையாக செய்ய முடியும். நாமனைவரும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

இப்படிப்பட்ட சம்பவங்களை எப்படி தடுப்பது என்று அடுத்ததாக கவனிக்க வேண்டும். வன்முறை படைகளில் மக்கள் சேருவதை எப்படி தடுக்க முடியும் என்று பார்க்க வேண்டும். எல்லா நாடுகளின் அரசுடன் கலந்து பேசி,அமைதியை நிலைநாட்ட, நம்மிடமுள்ள எல்லா சக்திகளையும் பிரயோகித்து, மக்களுக்கு அமைதியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். நாம் பாதுகாப்பு படைக்காக செலவிடும் பணத்தில் சிறு பகுதியை அமைதி பற்றிய கல்வி திட்டங்களுக்காக செலவழித்தால், இளைஞர்கள் மனிதாபமற்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். வழி தவறிய இளைஞர்களும் நம்மை சேர்ந்தவர்களே. சகோதரர்களே. ஏன் வழிதவறிச் சென்று விட்டார்கள்? ஏனென்றால் அவர்களுக்கு அமைதி பற்றிய கல்வியறிவு கிடைக்க வில்லை. நாம் உடனடியாக, நம் கல்வித் திட்டத்தில், அமைதியால் கிடைக்கும் நன்மைகள் பற்றி மாணவ மாணவியருக்கு எடுத்து செல்ல வேண்டும். இந்த பூமியில் யாரும் கடவுள் பெயரால் வன்முறை செயலில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கொல்லக்கூடாது.

கல்வித் துறையில் ஈடுபட்டிருக்கும் மக்களை கேட்டுக் கொள்கிறேன். அமைதிக் கல்வியை அமல்படுத்துங்கள். பல்வேறு கலாசாரங்கள், பல மதங்கள் பற்றிய கல்வியறிவையும், மன உணர்ச்சிகள கையாள்வதற்கும்,அதிர்ச்சிகளை எதிர் கொள்வதற்கான வழிகளையும் மாணவ மாணவியருக்குக் கொடுக்க வேண்டும்.

மீடியா நிறுவனங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நல்ல நிகழ்வுகளை பற்றி அதிகமாக எடுத்து சொல்லுங்கள், உலக நாடுகளில் பல்வேறு இனத்தவர்களிடையே எழும் சிறுசிறு முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல், மக்கள் ஒருவருக்கொருவர் கருணை காட்டும் நிகழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுங்கள். மீடியா செய்தி நிறுவனங்கள், மக்கள் தங்கள் மன அழுத்தங்களிலிருந்து விடுபடும் வழிகளை எடுத்துச் சொல்ல வெண்டும்.

மக்கள் எப்போதும் மனஅழுத்தத்தோடும், இதயத்தில் சுமையோடும் வாழத் தேவையில்லை.மீடியா மக்களை வன்முறையற்ற வழியில் எடுத்துச் செல்லவேண்டும். பத்திரிகைத் துறையில் இரண்டு முக்கியமான அமசங்கள் உள்ளன. ஒன்று நிகழ்ச்சியை அப்படியே மக்களின் முன் வைப்பது. சில சமயம் அப்படிச் செய்வது மக்களுக்கு மன அழுத்தத்தை உருவாக்கும்.அப்படிப்பட்ட நிகழ்வுகளோடு, நல்ல நிகழ்வுகளை பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். பலர் நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள். அது பற்றிய செய்தி மக்களை சென்றடைய வேண்டும்.

முகாம்களில் பல இளைஞர்கள் மக்களுக்குத் தொண்டு செய்வதை பார்க்க முடிந்தது. தங்கள் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு, தாங்கள் செய்து வந்த வேலைகளை கைவிட்டு, இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சேவைக்காக கொடுத்திருக்கிறார்கள். செய்திகளைப் பிரசுரம் செய்ய வேண்டும். மற்றவர்களை உற்சாகப்படுத்த முன்னுதாரணமாக அமையும்.அவர்களும் வாழ்க்கையில் நல்ல காரியங்கள் செய்யத் துவங்குவார்கள்.மீடியா மக்களை ஊக்கப்படுத்தி, சேவைத் திட்டங்களில் ஈடுபட வைக்கவேண்டும். இது அவர்களுடைய மன அழுத்தத்தை போக்கும்.

கேள்வி - பதில்கள்

ஒவ்வொரு மதத்திலும் இரண்டு அம்சங்கள் இருப்பது தெரியும். ஒன்று நம்பிக்கை. மற்றொன்று சடங்குகள். எது மதங்களை இணைக்கும்? எது மதங்களை பிரிக்கும் ?

மதத்தில் மூன்று அம்சங்கள் உள்ளன“.

·         மதிப்புகள்
·         சின்னங்கள்
·         சடங்குகள் / நடைமுறைகள்

முதலாவது; மதிப்புகள் எல்லா மதங்களிலும் ஒன்றாகவே உள்ளன. உதாரணமாக சகோரத்துவம், கடவுள் அன்பானவர், கருணையுள்ளவர் என்ற கருத்து. ஏழைகளுக்கும், தேவையானவர்களுக்கும் சேவை செய்யவேண்டும் என்ற கொள்கை எல்லா மதங்களிலும் இருக்கிறது. 

இரண்டாவது; சின்னங்கள். ஒவ்வொரு மதத்துக்கும் சின்னங்கள்,புனித ஸ்தலங்கள் மற்றும் வேதங்கள் (புனிதமான போதனைகள்) உள்ளன

மூன்றாவது; சடங்குகள் / பூஜை விதிகள். பல்வேறு சடங்குகள் இருக்கக்கூடும்.

மக்கள் பொதுவாக மதிப்புகளை மறந்து,சடங்குகள் மற்றும் நடைமுறைகளிலுள்ள வேறுபாடுகளை எடுத்துக்கொண்டு மோதிக் கொள்கிறார்கள்.அதனால் நான் “ ஆன்மீகம் மக்களை ஒன்று சேர்க்கிறது. மதங்கள் மக்களைப் பிரிக்கக்கூடும்“ என்று சொல்கிறேன்.

உலகிலுள்ள முக்கிய மதங்களை பார்க்கும் போது, ஆப்ரஹாம் மூலம் வந்த மதங்கள் மூன்று உள்ளன. ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் போல அவை ஒரே மூலத்திலிருந்து வந்தவை. ஆனால் இவற்றினிடையே பல மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்படுகின்றன.
மற்ற ஆறு மதங்கள் பின் வருமாறு. ஷிண்டோ மதம், டாவோ மதம், புத்த மதம், இந்து மதம், சீக்கிய மதம், ஜைன மதம். இவற்றிடையே மோதல்கள் எப்போதும் நடந்ததில்லை. தூரக் கிழக்கு நாடுகளில் வழங்கும் இம்மதங்களை பின்பற்றுபவர்கள் எப்போதும் அமைதியாக ஒற்றுமையாக  வாழ்ந்து வருகிறார்கள். இம் மதங்களிலுள்ள சடங்குகள் வேறு வேறானவை. இந்து மதத்தில் நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் உள்ளன. ஆனால் மோதல் ஏற்பட்டதில்லை.

அடிப்படை விதி; மற்றவரை மரியாதையோடு, கௌரவத்தோடு நடத்த வேண்டும். இஸ்லாம் மதத்தின் கோட்பாடுகளும் இப்படித் தான் இருந்தன. இஸ்லாமியரில்  ஐந்து பெரிய பிரிவுகள் உள்ளன. அதற்கு மேலும் இருக்கக்கூடும். சரித்திரப்படி எல்லாப் பிரிவினரும் அமைதியாக ஒற்றுமையாக வாழ்ந்ததை தெரிந்து கொள்ளலாம். ஈராக்கில் கூட ஷியா, சுன்னி இனத்தவர்கள் ஒருவரோடொருவர் இணைந்து வாழ்ந்து வந்தனர்.இனப்பிரிவுகளுக்கிடையே மோதல் ஏற்படும் போது, மற்ற அடையாளங்களை விட மதத்தின் அடையாளம் முக்கியமாகி விடுகிறது. அதிலிருந்து எல்லா பிரச்சினைகளும் துவங்குகின்றன. ஆன்மீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்யும் போது எல்லா மதத்தினரும் ஒற்றுமையாக வாழ முடியும்.

ஜப்பானில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை பற்றி உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் ஜப்பான் சென்றிருந்த போது, எல்லா மதத் தலைவர்களையும் சந்திக்க விரும்பினார். அவருக்கு ஒரு புறம் ஒரு புத்த பிட்சுவும், மற்றொரு புறம் ஷிண்டோ மதகுருவும் அமர்ந்திருந்தனர். 

நிக்ஸன் ஷிண்டோமத குருவைப் பார்த்து “ஜப்பானில் ஷிண்டோ மதத்தைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர்? “ என்று கேட்டார்.

அவர் சொன்னார். 80%

நிக்ஸன புத்தமத குருவைப் பார்த்து “ஜப்பானில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் எத்தனை பேர்? என்று கேட்டார்.

அவர் சொன்னார். 80%

அமெரிக்க ஜனாதிபதிக்கு இது புரியவில்லை.இது எப்படி சாத்தியம் ? என்று கேட்டார். ஆனால் அது சாத்தியம். அதே போல் இந்தியாவுக்கு வந்து பார்த்தால், ஜைன மதத்துக்கும் இந்து மதத்துக்கும் உள்ள நம்பிக்கைகள் வேறு வேறாக இருந்தாலும், அவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை பார்க்க முடியும். அதேபோல் சீக்கிய மதத்தினரும்,இந்துக்களும் மற்ற மதத்தினரின் பண்டிகைகளில் கலந்து கொண்டு கௌரவித்து கொண்டாடுவதை பார்க்கலாம். என்றுமே பெரிய மோதல் ஏற்பட்டதில்லை. நாங்கள் மட்டும் தான் சொர்க்கத்துக்கு செல்ல முடியும் என்று எந்த மதத்தினரும் சொல்வதில்லை.

மத்தியக் கிழக்கு நாடுகளின் மதங்கள், தூரக் கிழக்கு நாடுகளின் மதங்களிலிருக்கும் நல்ல கருத்துக்களை கற்றுக்கொள்ள முடியும். அவர்கள் யெஸீடிசாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, இஸ்லாமியரில் ஷியா, சுன்னி, அஹமதியா அல்லது சூஃபி பிரிவுகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எல்லோரும் ஒற்றுமையாக வாழ முடியும். மதங்களின் பன்முகத் தன்மையைக் கௌரவிப்பது முக்கியம்.

கடத்திச் செல்லப்பட்டவர்களை மீட்பதற்காக,(அதிலும் முக்கியமாகப் பெண்கள் மற்றும் குழந்தைகளை), உலகின் மதத் தலைவர்களை, (அதிலும் முக்கியமாக அரேபியா மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளின் மதத் தலைவர்களை) வலியுறுத்துவீர்களா? நாங்கள் அமெரிக்க அரசின் உதவியை நாடிய போது, உணவு அனுப்ப சொல்லிக் கேட்டுக்கொண்ட போது, “கடத்தப்பட்ட மக்களை மீட்க, ஈராக் அரசு மற்றும் அண்டைய நாடுகளின் அரசுக்கு எழுதியிருப்பதாக சொன்னார்கள். “

இந்த விஷயத்தை அரசுகளுக்கிடையே தீர்த்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு அரசுக்கும் பல கொள்கைகள் உள்ளன. எங்களை போன்ற அரசுசாரா நிறுவனங்களிலிருந்து, முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். தெரிந்த வரை, ஒவ்வொரு நாட்டின் அரசின் வெளிநாட்டுக் கொள்கைகளில் நான் தலையிட முடியாதென்று நினைக்கிறேன். நாட்டின் அரசை மற்றொரு நாட்டின் அரசோடு மோதவிட முடியாது. அப்படி செய்தால் நட்பில்லாதவர்களாக பார்ப்பார்கள். நீங்கள் வெவ்வேறு அரசுகளுக்கு எழுதி, யாருக்கு, எந்த இனத்தவருக்கு எப்படிப்பட்ட உதவி தேவையோ, எடுத்துச் சொல்லி உதவி கேட்க வேண்டுமென்று நினைக்கிறேன். அப்படிச் செய்தால் உங்களுக்கு வேண்டிய உதவி அந்த அரசிடமிருந்து கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவிலிருக்கும் எல்லோரும் அறிந்த ஒரு நதி இன்று மிகவும் மாசுபட்டிருக்கிறது. மதத் தலைவர்கள் இந்துக்களை பார்த்து, நீ இந்து மதத்தையோ, புத்த மதத்தையோ சேர்ந்தவர்களாக இருந்தால், இந்த நதியில் நீராட வேண்டுமென்று சொல்கிறார்கள். ஆனால் இந்த நதி மிகவும் அழுக்காக உள்ளது. இப்படிச் சொல்வதற்குப் பின்னால் என்ன உள்ளது என்று நீங்கள் சொல்ல முடியுமா?

ஒரு காலத்தில் கங்கை நதியின் நீர் மிகவும் தூய்மையாக இருந்தது. இன்று எங்கள் பிரதம மந்திரி கங்கை நீரின் அசுத்தத்தை நீக்க திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்கிறார். கங்கை புனித நதியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் நாங்கள் நதிகளை கௌரவிக்கிறோம். மரங்களை, விலங்குகளை வணங்குகிறோம். படைப்பின் எல்லாவற்றையுமே வணங்கத்தக்கதாக கருதுகிறோம்.

எந்த வேதத்திலும் (நன்னூல்களிலும்), நதியில் மூழ்கி எழவேண்டுமென்று எழுதப்படவில்லை. அப்படிச் செய்தால் மட்டுமே யோகம், தியானம் செய்யத் தகுந்தவராவார் என்று சொல்லப்பட வில்லை. இவை சடங்குகள். சொல்லியபடி, சடங்குகளும், நடை முறைகளும் வேறுபடுகின்றன. காலம் செல்லச்செல்ல,மக்கள் சடங்குகளை மட்டும் பின்பற்றுகிறார்கள். மக்கள் மதங்களின் மதிப்பை உணர்ந்து போற்ற வேண்டும். மதிப்பு தான் ஞானம்.

பண்டைய பாடல்களில், “ஞானம் ஒரு நதியைப் போன்றது” என்று சொல்லப்படுகிறது. ஞானம் பெற்றால் ஆனந்தமாக வாழலாம். முக்தியடையலாம் என்று சொல்லப்படுகிறது. இது தான் உண்மை. அசுத்தமான நதி என்று சொல்லும் கங்கை ஞானத்துக்கு உவமையாகக் காட்டப்பட்டது. ஞானத்தில் மூழ்கி எழுந்தால், முக்தியடைய முடியுமென்று சொல்லப்பட்டது. காலப்போக்கில் அதைத் தவறாக அர்த்தம் கொண்டு, கங்கையில் மூழ்கி எழுந்தால்,முக்தி கிடைக்குமென்ற தவறான நம்பிக்கையில் இருக்கிறார்கள். காலப்போக்கில் நடந்த ஒரு விபத்து போன்றது.இப்படிச் சொல்வதன் சாரத்தைப் புரிந்து கொள்வது அவசியம். நாம் நம் மதத்தில் சொல்லப்பட்ட மதிப்புகளைப் புரிந்து கொண்டு அதன் படி வாழ வேண்டும்.

யோகா என்றால் என்ன? அமைதியை நிலை நாட்ட யோகாவால் எப்படி உதவ முடியும்?

யோகா என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைக்கும் நுட்பமான செயல்முறை எனக் கொள்ளலாம். யோகா உன்னை மன அழுத்தத்திலிருந்து மற்றும் பதற்றத்திலிருந்து விடுவிக்கும். 
மன அழுத்தம் உன்னை வலுவிழக்கச் செய்கிறது. கோபம், பொறாமை - எதிர்மறை உணர்ச்சிகளால் துன்பப் படவைக்கும்.மூச்சுப் பயிற்சிகள்,தியானம்,எளிய உடற் பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை நீக்கும் போது, அது உன் உடலும் மனமும் ஓய்வாக இருக்க உதவும். நீ ஆனந்தத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் அனுபவத்தில் உணர முடியும்.

நீ நலமாக, ஆனந்தமாக இருக்கும் போது, வன்முறையில் ஈடுபடமாட்டாய். யாராவது ஒருவர் வன்முறையில் ஈடுபட்டால், அவருடைய அந்தச் செயலுக்குப் பின்னால் கோபமும் ஏமாற்றமும் உள்ளன என்று புரிந்து கொள்ளலாம். நாமனைவரும் குழந்தையாக இருக்கும் போது யோகா செய்திருக்கிறோம். குழந்தை பிறந்ததிலிருந்து 3 வயது வரை கவனித்து வந்தால், எல்லா விதமான யோகப் பயிற்சிகளையும் அது செய்வதை பார்க்க முடியும். ஒரு குழந்தை மூச்சு விடும் முறை, பெரியவர்கள் மூச்சு விடும் முறையிலிருந்து வேறுபட்டது. மூச்சு, உடலையும் உணர்ச்சிகளையும் இணைக்கும் பாலம் போன்றது. மூச்சு விடும் முறையை மாற்றி, நம் உணர்வுகளை அமைதியாக்க முடியும். எதிர் மறை உணர்வுகளை முற்றிலும் நீக்க முடியும்.