குருதேவின் புத்தாண்டுச் செய்தி


31 டிசம்பர் 2012 – பெர்லின் - ஜெர்மனி
இந்த 2012 ஆம் ஆண்டு வெகு வேகமாகக் கடந்து சென்று விட்டது. அதை ஒரு முறை திரும்பிப் பார்ப்போம். இந்த ஆண்டு துவங்கிய போது, டிசம்பர் 21 ஆம் நாள் பற்றி நிறையப் பேச்சு இருந்தது. அன்றைய தினத்தில் உலகம் அழிந்து விடும் என்ற வதந்தி நிலவி வந்தது. பொதுவாக மக்கள் வதந்திகளை நம்புகிறார்கள்; அதிலும் சிலர் மிக அதிகமாக நம்புகிறார்கள்.
ஆகவேஅவர்கள் உணவுப்பொருட்களை வாங்கி வீடுகளின் அடித்தளத்தில் பதுக்கி, இறுதி நாளுக்கு காத்திருந்தார்கள். நான் எப்போதும் அத்தகைய நிகழ்வுக்கு சாத்தியம் இல்லை என்றே கூறி வந்தேன். ஆனால் இந்த ஆண்டு, முந்தைய ஆண்டுகளைப் போலவே அழிவுகள் ஏற்பட்டன. முந்தைய ஆண்டுகளை விட இன்னும் சற்று அதிகமாகவே என்றும் கூறலாம். அமெரிக்காவில்,  ஜப்பானில்,மற்றும் பல நாடுகளில், இயற்கையின் சீற்றத்தால் அழிவுகள் ஏற்பட்டன.
அதே சமயத்தில், பொருளாதாரச் சரிவினால் ஏற்படக்கூடிய வீழ்ச்சியும் சமாளிக்கப் பட்டுவிட்டது. எல்லாமே ஓரளவு சரியாகி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதை விட நன்றாக முன்னேற வேண்டும். முன்னேற்றம் ஆரம்பித்து விட்டது. 2013 நன்றாகவே இருக்கும்.
சுற்றுச் சூழல்பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு இவை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆண்டுகளாக நாம் கூறிவந்த மனிதநேயம்வன்முறையை ஒடுக்குதல் ஆகியவை பற்றி மக்கள் இப்போது விழித்துக்கொண்டு, அதைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு நாம் அனைவரும்,மேம்பட்ட சமுதாயம்- அதாவது வன்முறையற்றகுற்றம், ஊழல் இல்லாத,பாதுகாப்பான, நேர்மையான ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.
எல்லாவற்றிக்கும் மேலாக, ஆன்மீக வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வுக்கு நாம் உழைக்க வேண்டும். ஏற்கனவே அத்தகைய விழிப்புணர்வு ஏற்பட ஆரம்பித்து விட்டது.அதிகமான அளவில் மக்கள் விழிப்படையத் துவங்கி விட்டனர்.
நமது வாழும்கலை நிறுவனம் பெருமளவில் எழப்போகிறது. இந்த ஆண்டு மக்களின் வாழ்கையை மேலும் மகிழ்ச்சியாக்கக் கூடிய இரண்டு புது க்ரியாக்களை கற்றுத் தரப்போகிறோம். அவற்றால் மக்கள், அதிக மகிழ்வுடனும் ஆற்றலுடனும், கடமையுணர்வும், கருணையும் ஆக்கசக்தியும் மிகுந்தவர்களாகவும் விளங்குவார்கள்.
காலம் நமக்கு பல சவால்களைத் தந்து வருகிறது.அவற்றை எவ்வாறு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்கிறோம் என்று பாருங்கள். ஒவ்வொரு சவால் எழும்போதும் அதை எவ்வாறு நமது வளர்ச்சிக்குரிய சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள முடியும் என்று கவனித்து செயல்படுங்கள். இதுதான் நீங்கள் செய்ய வேண்டியது.
இந்த ஆண்டு முடிவடையும் இத்தருணத்தில்,முடிந்த ஆண்டில் நீங்கள் சந்தித்த அனைத்து சவால்களையும், அவை எவ்வாறு உங்கள் வளர்ச்சிக்கு உதவியது என்றும் எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு சவாலையும் எப்படி சமாளித்தீர்கள், அப்போது என்னென்ன தவறுகள் செய்தீர்கள் அந்த தவறுகளிலிருந்து என்னவெல்லாம் கற்றுக்கொண்டீர்கள் என்று யோசனை செய்து பாருங்கள். இதுவே முதல் படி.
இரண்டாவதாக , கடந்த ஆண்டு உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கிடைத்த நன்மைகள் யாவை என்று எண்ணிப் பாருங்கள். இத்தகைய நன்மைப் பரிசுகளை உலகின் நலனுக்காக எவ்வாறு உபயோகிக்கப் போகிறீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்.
ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திறன் அல்லது நன்மை கிடைத்திருக்கும்.அவற்றை எவ்வாறு பயன் படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். நீங்கள் அனைவரும் உங்களது திறமையை நன்கு பயன் படுத்துகிறீர்களா? இதுதான் நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டிய விஷயம்.இனி வரும் ஆண்டிற்கு திட்டமிடுங்கள். வருகிற 12 மாதங்களில் ஒவ்வொரு நாளும் என்ன செய்யப் போகிறீர்கள்
தினமும் தியானம் செய்யுங்கள். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் நேரத்தை ஒதுக்கி, நமது முது நிலை பயிற்சியான ஆழ்ந்த தியானமும், மௌனமும் அனுசரியுங்கள்.குறைந்த பட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது இத்தகைய பயிற்சி செய்யுங்கள்.தவிர சமூகத்திலுள்ள பிற மக்களுக்காக ஏதாவது பயனுள்ள தொண்டில் ஈடுபடுங்கள்.
உங்களைப்பற்றி  மட்டும் நினைத்துக் கொண்டு இருக்காமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். பிறகு உங்களுக்கென்று என்ன வேண்டியிருந்தாலும் அது தானாகக் கிடைப்பதைக் காண்பீர்கள் முதலில் நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும். பிறகு நீங்கள் கேட்பது கிடைக்கும். எனக்கு மட்டும் எல்லாம் வேண்டும், ஆனால் எனக்கு எதுவும் செய்ய விருப்பமில்லை என்று சொன்னால் அது நடக்காது. நீங்கள் சமுதாயத்தில் சில நல்ல காரியங்கள் செய்ய வேண்டும். 

மக்கள் முகங்களில் புன்னகையை கொண்டு வர வேண்டும்.

அப்படிச் செய்தால் மட்டுமே, உங்களுக்கென்று எதுவும் கேட்கும் உரிமை உங்களுக்குக் கிடைக்கும். நான் சொல்வது புரிகின்றதா? இதுதான் உண்மையான பணம். உங்களிடம் பணமோ அல்லது வங்கியின் கடன் அட்டையோ இல்லாமல் கடைக்குச் சென்றால் எந்தப் பொருளையும் யார் தருவார்கள்

உங்கள் வங்கிக் கணக்கில் கொஞ்சமாவது இருப்பு இருக்க வேண்டும் இல்லையா? நீங்கள் சேவை செய்யும்போது உங்கள் வங்கி இருப்பு உயர்கின்றது. பிறகு நீங்கள் எது வேண்டுமென்று விரும்பினாலும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கடை முழுவதையும் கூட வாங்கலாம்.  எனவே சமுதாயத்தில் சிறிதளவாவது நல்லது செய்யவேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்வோம்.நமக்கு எது வேண்டுமென்றாலும் நமக்குக் கிடைக்கும், நமக்கு கொடுக்கப்படும்  என்று நம்பிக்கை கொள்வோம். நம் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றப்படும். நாம் ஒன்றை விரும்பினால் அது நிச்சயம் நமக்கு அளிக்கப்படும்.

அடுத்ததாக, நீங்கள் வாழ்க்கையில் புது பாடங்களைக் கற்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.  உங்களுடைய உற்சாகம், மகிழ்ச்சி , புன்னகை ஆகியவற்றை வாழ்க்கைப் பயணம் முழுவதும் நிலையாக வைத்திருக்க வேண்டும். புரிந்ததாஅனைவரும் நடந்து செல்கின்றனர். சிலர் கூக்குரலும் அழுகையுமாக நடந்து செல்கின்றனர்.  சிலர் புன்னகையோடு நடந்து செல்கின்றனர். அனைவரும் நகர்ந்து கொண்டே இருக்கும் ஒரு கொணறி பட்டை மீது இருக்கின்றனர். சிலர் சிரித்துக்கொண்டும் சிலர் அழுதுகொண்டும் யார்  எப்படியிருந்தாலும் கன்வேயர் பெல்ட் மட்டும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. காலம் என்கின்ற இந்த கன்வேயர் பெல்ட் மீது எப்படி நடப்பதென்பது உங்கள் விருப்பம். அது உங்கள் கைகளில் இருக்கின்றது.

ஒரு சீருந்து வண்டியில் (கார்)முன்பக்கம் பார்க்கும் கண்ணாடி பெரியதாகவும் பின்புற பார்வைக்கான கண்ணாடி சிறியதாகவும் இருக்கின்றது. இவை இரண்டும் மாறி இருந்தால் உங்களால் காரை ஓட்டிச் செல்ல முடியுமா? முடியாது. இல்லையா? இதன்மூலம் கார் உங்களுக்கு கற்பிக்கும் பாடம் என்ன தெரியுமா? பின்புறப் பார்வைக்கான கண்ணாடி கடந்த காலத்தையும் முன் பக்கம் பார்க்கும் கண்ணாடி நிகழ் காலத்தையும் குறிக்கின்றன. 

கார் ஓட்டும் போது நாம் பக்க வாட்டிலும் பின்புறமும் பார்க்க வேண்டியது அவசியமென்றாலும் முக்கியமாக முழு கவனத்துடன் முன் பக்கம் பார்த்து ஓட்ட வேண்டும்.பக்க வாட்டிலும் பின் புறமும் மட்டுமே பார்த்து ஓட்டினால் விபத்து நேரிடும். கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் சிறிதளவு கவனத்தில் கொண்டு நாம் முழுமையாக நிகழ் காலத்தில் வாழ வேண்டும். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

நல்ல மனிதர்களின் குரல் ஓங்கும் காலம் வந்து விட்டது. தீமை செய்பவர்கள் மனம் மாறி வெளிச்சத்திற்கு வருவார்கள். ஆன்மீக அலை மக்களிடம் மனமாற்றத்தை உண்டாக்கும். வரும் ஆண்டுகளில் இது நிச்சயம் நிகழும். ஆன்மீக அலை அதிக முக்கியத்துவம் பெறும். பிறரை ஏமாற்றும் மக்கள் எல்லோரும் அம்பலப்படுத்தப்பட்டு பதவியிலிருந்து கீழே இறங்குவார்கள். ஏமாற்றுக்காரர்கள் அம்பலப்படுத்தப்படுவது நிச்சயம் நிகழும். நல்ல நேரம் நம்மை எதிர்நோக்கியுள்ளது .

அன்பின் மறுபக்கம்.....


   

29 – டிசம்பர் - 2012 - பாத் ஆண்டோகாஸ்த், ஜெர்மனி

கே: ஆன்மீகத்துக்கும், கணிதத்துக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றிப் பேசுவீர்களா?

குருதேவர்: ஆன்மீகத்தின் கணிதப்படி 2 + 1 = 0. புரிந்ததா? இதைப் பற்றி சிந்தித்துப் பார். உடலும் மனமும் ஆன்மாவுடன் இணையும் போது வேறு ஒன்றும் அறியத் தேவை இல்லை. அது அப்படித்தான்.

கே: ஏசு என்றால் என்ன அர்த்தம்? அவர் பிறப்பு மற்றும் தோற்றத்துக்குக் காரணம் பற்றிப் பேச பலர் கேள்விகள் எழுப்பியிருக்கிறார்கள். அதைப் பற்றி கொஞ்சம் பேசுங்கள்.

குருதேவர்: ஏசு அன்பை அடக்கியவர். அவர் எப்படிப்பட்ட அவமானங்களையும், வலியையும் தாங்கி வருந்தினார் என்று எண்ணிப்பார். அவர் மக்களின் நிந்தனைகளையும், வலியையும் பெருந்தன்மையோடு, அமைதியாக ஏற்றுக் கொண்டார். எல்லோரும் அவர் மேல் பழி சுமத்தினார்கள். அவருடைய சீடர்கள் அவரை விட்டு ஓடி விட்டார்கள்.

அந்த சமயத்தில் அவர் எப்படி துன்பப்பட்டிருப்பார் என்று எண்ணிப்பார். உன்னால் முடிந்ததை எல்லாம் நீ உன் பக்தர்களுக்குச் செய்தபின், ஒரு நாள் அவர்கள் உங்களை விட்டு விலகினால், அதை விட பெரிய துன்பத்தைக் கற்பனை கூட செய்ய முடியாது. ஆனால் ஏசுவின் வாழ்க்கை அப்படி இருந்தது. எல்லோரும் அவரைக் கைவிட்டு விலகிய பின், அவர் கடவுளை “நீயும் என்னைக் கை விட்டு விட்டாயா?” என்று கேட்டார்.


எனவே அவருடைய வாழ்க்கை, ஒரு பக்கம் அளவிட முடியாத வேதனையையும் மற்றொரு பக்கம் அன்பு நிரம்பியதுமாக இருந்தது. இதற்காக அன்பு நிறைந்தவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்றில்லை. அப்படி அல்ல. அவர் மக்களுக்குச் சொன்ன செய்தி. மற்றவர்களைப் பற்றி நீ தீர்ப்புச் சொல்லாதே. அவர்களைக் குரூரமாகத் துன்புறுத்த வேண்டாம். எல்லோரிடமும் அன்போடும், கருணையோடும் நடந்து கொள். ஏனென்றால் கடவுளும் அன்பும் ஒன்று தான்.

ஏசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் மனம், புத்தியின் போக்கில் வாழ்ந்தார்கள். அவர்கள் பாவத்தையும் அதற்கான தண்டனையையும் மட்டும் தான் எண்ணி வாழ்ந்தார்கள். சொர்க்கத்தைப் பற்றிக் கனவு கண்டார்கள். நரகத்தை நினைத்து பயந்தார்கள்.

ஏசு வந்து, “தற் சமயத்தில் வாழுங்கள். எல்லோரையும் நேசித்து, அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள். கடவுளிடம் பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் அவர் நம் தந்தை. நம் தந்தை நம்மைச் சேர்ந்திருப்பது போல் அவரும் நம்மைச் சேர்ந்தவர். என் தந்தையும் நானும் ஒருவரே” என்று சொன்னார். அந்தக் காலத்தில் ஏசு ஒரு புரட்சி கரமான கருத்தைச் சொல்லி, “பயணம் தலையிலிருந்து இதயத்துக்குச் செல்வது. தலையிலிருந்து சொர்க்கத்துக்கும், நட்சத்திரங்களுக்கும் செல்வது அல்ல” என்று மக்களுக்கு உணர்த்தினார்.

அவர் சொல்லிய கருத்துக்களை 70 வருடங்களுக்கு யாரும் எழுதி வைக்கவில்லை. (புரிந்து கொள்ளவில்லை). ஏசு மறைந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பைபிள் எழுதப்பட்டதாக அறிஞர்கள் மூலம் எனக்குத் தெரிய வந்தது. பின் வரும் பதிப்புகளில் பல கருத்துக்கள் திரிந்திருக்கக் கூடும். அதனால் தான் கிறிஸ்துவர்களில் 72 உட் பிரிவினர் இருக்கின்றனர். ஒவ்வொரு பிரிவினரும், அவர்கள் தான் ஏசு சொன்னவைகளைச் சரியாகப் பின் பற்றுவதாக நினைக்கிறார்கள்.

ஏசு கிறிஸ்து ஒருவர் தான். ஆனால் 72 பிரிவினர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு பிரிவினரும் பைபிளை அவர்கள் வழியில் பொருள் கொள்கிறார்கள். வேறு வேறு பிரிவினர், சர்ச்சையில் ஈடுபடாமல், ஏசு சொன்னதன் சாரத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கருத்து வேற்றுமைகளுக்கு, உலகில் முடிவே கிடையாது.

புத்தருக்கும் அதே மாதிரி நிலை ஏற்பட்டது. ஒரு பகவான் புத்தர். ஆனால் பௌத்தர்களுக்குள் 32 உட் பிரிவினர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு பிரிவினரும், புத்தரின் அறிவுரைப்படி நடப்பது தாங்கள் மட்டுமே என்று நினைக்கிறார்கள்.

முகம்மது நபியின் மதத்திலும் அதே நிலை தான் நிலவுகிறது. முகம்மதியர்களில் 5 உட் பிரிவினர் உண்டு. அவர்கள் ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். சொல்லப் போனால் அவர்கள் ஒன்றுக் கொன்று முரண்பாடான கொள்கைகளைக் கொண்டிருக்கிறார்கள். கொள்கையை முழுதும் அனுபவபூர்வமாகப் புரிந்து கொள்ளாமல் ஒரு கொள்கையோடு தங்களை இணைத்துக் கொள்வது மக்கள் வழக்கம். மக்கள் அக் கொள்கைகளைத் தம் அடையாளமாகக் கருதி, அந்த அடையாளத்துக்காகத் தங்கள் உயிரையே கொடுக்கத் தயாராகிறார்கள்.

ஏசுவின் உபதேசம் “விழித்துக் கொள். சொர்க்கம் என்பது உனக்குள் இருக்கிறது. கடவுள் அன்பு வடிவானவர் என்று அறிந்து கொள்” என்பது தான். எனவே, ஒரு குழந்தையைப் போல் இரு. குழந்தைக்கு தப்பெண்ணம் எதுவும் கிடையாது. நீ குழந்தையைப் போல் இல்லாவிட்டால் உன்னால் சொர்க்கத்துக்குள் நுழைய முடியாது. ஆனால் இதை யாரும் அறிவதில்லை.

குழந்தையின் கபடமில்லாத தன்மையும், நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சேர்ந்தவர்கள் என்ற அறிவும் இப்போது மக்களிடத்தில் இல்லை. அதனால் தான் மதத்தின் பெயரில் பல குற்றங்கள் நிகழ்கின்றன. அரசியல் அதிகாரத்துடன் மதம் சேர்ந்த போது, கம்யூனிஸம் பிறந்தது. இவையெல்லாம் நிகழக் காரணம் நாம் நம்முள்ளே இருக்கும் உள்ளொளியை அறிய வில்லை. நம் உள்ளே இருக்கும் ஆத்மாவின் ஒளியை அறிய வில்லை.

கே: அன்பான குருதேவா! ஒன்றும் செய்யாமல் இருப்பது நமக்கு இத்தனை இன்பத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்குமானால், நாம் ஏன் ஏதாவது காரியம் செய்ய வேண்டும்?

குருதேவர்: உன் இயல்பின் படி, நீண்ட நேரத்துக்கு ஒன்றும் செய்யாமல் இருக்க உன்னால் முடியாது. நிகழ்ச்சிகளின் வேறு பாட்டினை உணரும் போது தான் பரமானந்தத்தை அனுபவிக்க முடியும். நீ ஏதாவது காரியம் செய்யும் போது, 100 % முயற்சியோடு ஈடுபடும்போது தான் எதையும் செய்யாமல் இருப்பதின் மதிப்பை உணரலாம்.

பார்! நீ மிகவும் சுறுசுறுப்போடு ஓடியாடி வேலை செய்த பின்னால் தான் அயர்ந்த ஓய்வை அனுபவிக்கிறாய். நாள் முழுதும் ஒரு வேலையும் செய்யாமல் படுக்கையில் படுத்திருந்தால், இரவில் உன்னால் தூங்க முடியாது. அதனால் நீ செய்ய வேண்டிய காரியங்களைச் செய்வது அவசியம்.

நாம் செய்ய வேண்டிய வேலைகள் சில உண்டு. அந்த வேலைகளைச் செய்யும் போது, இடையில் ஒன்றும் செய்யாமல் இருக்கும் நிலைகளும் ஏற்படும்.

கே: ஆசைகள் உற்பத்தி ஆகிறதா? ஆசைகளை அழிக்க முடியுமா? முடியுமென்றால் எவ்வாறு?

குருதேவர்: குழந்தைப் பருவத்திலிருந்த்உ இன்று வரை கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து நினைவில் கொண்டு வா. அப்போது உனக்கு நிறைய ஆசைகள் இருந்தன. நிறைய ஆசைகளை நீ நிறைவேற்றிக் கொண்டாய். நிறைவேறாத ஆசைகளை நீ விட்டு விட்டாய். குழந்தையாக, சிறுவனாக மற்றும் இளைஞனாக இருந்த காலத்தில் எழுந்த ஒவ்வொரு ஆசையையும் உன்னால் நிறைவேற்றிக் கொள்ள முடிய வில்லை.

அப்படி நடந்திருந்தால், உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கும். நீ மிகவும் துக்கத்தில் ஆழ்ந்திருப்பாய். அப்படி எல்லா ஆசைகளும் நிறைவேறாமல் போனதற்காக, கடவுளுக்கு நன்றி சொல். உனக்கு என்ன என்ன நடக்க வேண்டுமோ, அது மட்டும் தான் நடந்திருக்கிறது.

வாழ்க்கையில் நீ சந்தித்த கசப்பான அனுபவங்கள், உன்னுடைய தனித்தன்மைக்கு ஒரு ஆழத்தைக் கொடுத்திருக்கிறது. நல்ல அனுபவங்கள்  உன் தனித் தன்மையை விரிவாக்கியிருக்கிறது. எனவே அவை எல்லாமே உன் வாழ்வின் வளர்ச்சியில் பங்கு வகித்திருக்கின்றன. அனுபவங்கள் நல்லவையோ, கெட்டவையோ அவைகளை வரவேற்க வேண்டும். இரண்டுமே உன்னை வலிமையானவனாக்குகின்றன. கற்பனை செய்ய முடியாத அளவு, உன் ஆன்ம வளர்ச்சிக்கு உதவுகின்றன. எல்லா அனுபவங்களும், நீ செய்யும் யோக சாதனைகளின் (ஆன்ம சாதனைகளின்) ஒரு பகுதி என்று அறிந்து கொள்.

எனவே மகிழ்ச்சியான அனுபவங்கள் சாதனையின் ஒரு பகுதி. நீ சந்தித்த கசப்பான அனுபவங்களும் சாதனையின் ஒரு பகுதி தான். உதாரணத்துக்கு, உன்னைப் பாராட்டும் மக்களும், உன்னைத் தூற்றும் மக்களும் உன் சாதனையின் ஒரு பகுதிதான் என்று எடுத்துக் கொள். இரண்டு வழிகளிலும் நீ உறுதியானவனாக, நடுநிலை வகிப்பவனாக, நீ எப்படி வளர வேண்டுமோ, அப்படி வளர்வாய்.

வாழ்த்துக்களும், பழிச் சொற்களும் இந்த பூமியில் மற்றும் தான் ஏற்கப் படுகின்றன. அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். ஒரு வலிமையான ஆத்மாவுடன், வலிமையான மனிதனாக மாறு. அது தான் உண்மையான பலம். வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளையும் புன்முறுவலோடு ஏற்றுக் கொள்ள முடிகிறதா? அது தான் இந்த நிகழ்ச்சிகளின் உத்தேசமாகும். உன்னால் எப்போதும் புன்னகையோடு இருக்க முடியுமா? அது கடினம். எனக்குத் தெரியும். ஆனால் நீ அப்படி இருப்பது அவசியம்.

எதையாவது விட்டு ஓட முயன்றால், அது உன்னைத் தொடர்ந்து வரும். இந்தப் பிறவியில் இல்லையென்றாலும், அடுத்த பிறவியில் நிகழும். அதனால் தான் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு, எது நடக்க வேண்டுமோ, அவ்வளவையும் அனுபவித்து விடு என்கிறார்கள். பெரிய புன்முறுவலோடு, வீரத்தோடும் உற்சாகத்தோடும் தொடர்ந்து செல்.

கே: ஏக்கம் ஏன் மிகுந்த துன்பத்தை அளிக்கிறது? நான் சொல்வது இறைவனை அடைய ஏக்கம், பரம் பொருளை அடைய ஏக்கம் பற்றி. நாம் எங்கிருந்து வந்தோம்?

குருதேவர்: பார் அன்பும், மனவருத்தமும் (துன்பமும்) வெகு நெருக்கமானவை. கை கோத்துக் கொண்டு செல்பவை. நீ யாரிடமாவது அன்பு செலுத்தும் போது, ஒரு நாள் மனம் வருத்தம் அடையலாம். அது அப்படித்தான் நிகழ்கிறது. வாழ்க்கையில் அதை ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். அதை விட்டு ஓடாதே. துன்பம் அடைவது காதலின் ஒரு பகுதி. இன்று ஒருவர் வந்து என்னிடம், “என் மகன் இப்படி இருக்கிறான். நான் சொல்வதைக் கேட்பதில்லை” என்று சொன்னார். பார்த்தீர்களா. அது இயல்பு தான். தாய் தன் மகனுக்காக எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறாள். அவன் தன் சொல்லைக் கேட்காத போது மிகவும் மனவருத்தம் அடைகிறாள்.

இயற்கையில், தாய் தன் மகனுக்கு நல்லவைகள் நடக்க வேண்டுமென்று விரும்புகிறாள். ஆனால் மகனோ, தனக்கு எது நல்லது என்று நான் அறிவேன் என்று நினைக்கிறான். அதனால் தாய் சொல்வதைக் கேட்பதில்லை. இப்போது, இந்த சூழ்நிலையில் என்ன செய்வாய்?

தாய் என்னிடம் வந்து, “குருதேவா! என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்” என்று கேட்டாள்.“பார்! நான் எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று அவளிடம் சொன்னேன். “உன் மகனுக்கும் நல்லது நடக்க வேண்டும். உனக்கும் நல்லது நடக்க வேண்டும்” என்றேன்.

“ஆனால், குருதேவா! என் மகன், நான் சொல்வதை விட, நீங்கள் சொல்வதைத் தான் கேட்கிறான்” என்று அவள் சொன்னாள். “அவன், நீ சொல்வதை விட நான் சொல்வதைக் கேட்கிறான் என்றால், குருதேவருக்கு எந்த சுய நோக்கமும் இல்லாததால், சரியானதைத் தான் சொல்வார் என்று அவனுக்குக் கட்டாயமாகத் தெரியும்” என்று அவளிடம் சொன்னேன்.

அவளுடைய மகனிடம், “நீ, என்ன விரும்புகிறாயோ, அதைச் செய்” என்றேன். பார்!~ “நீ அதைச் செய், இதைச் செய்” என்று யாருக்கும் சொல்வதில்லை. ஆகவே, மனவருத்தம் என்பது அன்பின் ஒரு பகுதி. இந்த வலி தவிர்க்க முடியாதது. அன்பு இருக்கும் போது சில நேரங்களில் வேதனையையும் ஏற்படுத்தும். வேதனைக்குப் பயந்தால், அன்பு செலுத்துவதை நிறுத்தவேண்டும் என்று பொருள். ஒரேயடியாக நிறுத்துவது மூடத்தனமாகும். பலர் அப்படிச் செய்கிறார்கள்.
சில சமயம் மனவருத்தம் ஏற்படுகிறது என்பதால்,அன்பு செய்வதை நிறுத்துவது புத்திசாலித்தனமல்ல. அது ஒருவர் செய்யும் மூடத்தனமான காரியமாகும். யார் அந்தச் சிறிய நெருடலை, வேதனையைத் தாங்கி, மேலே செல்கிறார்களோ அவர்களுடைய அன்பு உண்மையான பரமானந்தத்தைத் தரும்.

கே: மனிதர்கள் ஞானம் அடைய,ஏன் இவ்வளவு காரியங்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது?

குருதேவர்: அது அவசியம் தான். தற்போது அப்படித் தெரிந்து கொள்.  

குருவின் அருகாமையில் இருத்தல்..


29 டிசம்பர் 2012 பாட், ஆண்டோகாஸ்ட், ஜெர்மனி

கே: உபநிஷதத்தைப் பற்றிச் சொல்லும்போது அது குருவின் அருகாமையில் இருப்பது என்று விளக்கினீர்கள். உடல் ரீதியில் அருகில் அமர்வது தான் உபநிஷதமா?


குருதேவர்: நாம் அனைவரும் ஏற்கனவே இங்கு ஒன்றாக இருக்கிறோம். ஒருவருக்கொருவர் அருகில் அமர்ந்திருக்கிறோம். இல்லையா? அருகாமை என்பது மனத்திலிருந்து வருவது. இதய பூர்வமாக உணர்வது. உன் மனம் எங்கோ இருந்து, சந்தேகத்தால் நிரம்பி, எதிர்மறை எண்ணங்களில் உழல்வதாக இருந்தால், நீ என் அருகில் அமர்ந்திருந்தால் கூட அது உதவாது.

ஆனால், உன் இதயம் நிர்மலமாக இருந்து உன் மனம் தூய்மையாக இருந்து உனக்கு சரியான நோக்கம் இருந்தால், நீ ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்த போதிலும் நாம் ஒருவருக்கொருவர் அருகாமையில் இருக்கிறோம்.

நாம் இருவரும் ஒருவரே, நாம் ஒருவருக்கொருவர் அருகாமையில் இருக்கிறோம் என்று அப்போது தான் உனக்குத் தெரிய வரும். அப்படிப் பட்ட முழு உணர்வு உனக்கு இருந்தால் நமக்கிடையே இடைவெளி இல்லை என்பது உனக்குப் புரியும்.ஆனால், நீ இங்கு அமர்ந்து, “குருதேவர் என்ன நினைக்கிறார். அவர் எல்லோரையும் கூட்டி வைத்து தலைமை பதவியை நாடுகிறாரோ என்ற சந்தேகம் இருந்தால் அருகாமையை உணர முடியாது.

ஒரு பெண் “நீங்கள் எல்லோரையும் வசியம் செய்யும் சக்தியைப் பெற என்ன செய்கிறீர்கள்?” என்று என்னைக் கேட்டாள். மக்களை வசியம் செய்ய நினைப்பவன் மக்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறான். மக்களிடமிருந்து அதைப் பெற முயல்கிறான். ஆனால், எனக்கு எதுவும் வேண்டாம். நான் மக்கள் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும், எல்லோரும் ஆன்மீகப் பாதையில் நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

பார்! இன்று உலகில் அனைவருக்கும் ஆன்மீக ஞானம் தேவை. நமக்கு வன்முறையற்ற சமுதாயம் தேவை. இந்தியாவில் என்ன நடந்தது என்று உங்களுக்குத் தெரியுமா? கொடும் பாவமான நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அது மிகவும் துர்பாக்கியமான ஒரு நிகழ்ச்சி. நாடு முழுவதும் கொந்தளிக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்குக் கேடு விளைந்திருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாமல் குற்றங்கள் நிகழ்கின்றன. மக்கள் மற்றவர்களை ஒரு மனிதராகப் பார்ப்பதில்லை.

அதனால் தான் நான் வன்முறை, குற்றங்கள் இல்லாத ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்க விரும்புகிறேன். எல்லோரும் இப்படிப் பட்ட உலகை அடைய விரும்ப வேண்டும். அப்படிப்பட்ட நல்ல சமுதாயம் உருவாக வேண்டும். இல்லையா? யாரோ “குருதேவா! உங்களுக்கு நிறைய சக்தி இருக்கிறது” என்று சொன்னார். என்ன சக்தி? நான் எல்லோரையும் வசியம் செய்யும் சக்தி வாய்ந்தவன் என்று நீங்கள் சொல்வதை ஒரு அவமதிப்பாக நினைக்கிறேன். “ஓ! அந்த ஆன்மீக இயக்கம் அல்லது மூடநம்பிக்கையுள்ள கூட்டம், அவர்கள் பலத்தால் எல்லோரையும் அடக்க வல்லவர்கள்” இப்படி நினைப்பது மூடத்தனமாகும். இதெல்லாம் மக்களின் மனத்தில் இருக்கும் தவறான கருத்துக்களாகும்.

அந்தப் பெண்ணிடம், “இந்தக் கேள்வியை அன்னை தெரசாவிடம் கேட்பாயா? இல்லை. ஏன் கேட்கக் கூடாது. ஏனென்றால் அவர் ஒரு ஏற்கப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர். யாரும் அன்னை தெரசாவிடம், அவர் தன் வசிய சக்தியால் மக்களை ஆட்டி வைத்தார் என்று சொல்லவில்லை. அவர் ஆசிரமத்தில் 4000 பேர்கள் தங்கி இருக்கின்றனர். எல்லோருமே, தங்கள் வீட்டை விட்டு வந்து இங்கு ஏழ்மையோடு இணைந்த வாழ்க்கை நடத்துவோம் என்ற சபதம் எடுத்திருக்கிறார்கள்.

நான் யாரையுமே, நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வந்து விடுங்கள் என்று கேட்பதில்லை. நீங்கள் உங்கள் குடும்பத்தைப் பாதுகாத்து மகிழ்ச்சியோடு இருங்கள் என்று தான் சொல்கிறேன். எங்கிருந்தாலும் மகிழ்வோடு ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கி அதில் வாழுங்கள் என்று தான் சொல்கிறேன்.4000 பெண்கள் தங்கள் வீட்டை விட்டு வந்து அன்னை தெரசாவிடம் வந்து தங்கி முக்தி அயைய விரும்பினார்கள். ஆனால் “நீ அவர்களை உன் வசிய சக்திக்குள் கட்டுப்பாட்டோடு வைத்திருக்கிறாய்” என்று நீ அன்னை தெரசாவிடம் கேட்கமாட்டாய். இது மனத்தின் விகாரம்.
ஆன்மீகத்தில், இன்று உண்மையானவர்கள் பலர் இல்லை. அதனால் தான் ஆன்மீகத்தை வியாபாரமாகக் கருதாமல், ஒரு உண்மையான வழியில் செல்லுங்கள் என்று நான் சொல்கிறேன். 

ஆன்மீகத்தின் பெயரில் ஏமாற்றுபவர்கள் இவ்வுலகில் பலர் இருக்கிறார்கள். அப்படி இருந்த போதிலும், நாம் அதைப் பற்றி அதிகக் கவலைப்பட வேண்டாம். அதற்காக ஒவ்வொரு ஆன்மீக இயக்கமும், மக்களை தவறான வழியில் செலுத்துவதாக எண்ண அவசியமில்லை.ஒரு இயக்கம் என்பது படத்தைச் சுற்றி இருக்கும் ஃபோட்டோ ஃபிரேம் போலத் தான் என்று நான் எப்பொழுதும் சொல்வேன். ஃப்ரேம் இல்லாமல் படத்தைத் தனியாக மாட்ட முடியாது. அதைப் போல் ஒரு இயக்கம் தேவைப்படுகிறது.

எவ்வளவு பேர் உங்களுக்குத் தங்கும் வசதியையும், உணவுக்கான தேவைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?. உங்களுக்கு ருசியான இத்தாலிய தேசத்து உணவு வகைகளைப் பறிமாறிய அனைவருக்கும் நீங்கள் நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் இதை ஒரு ஒப்பந்த வேலையாக நினைக்காமல், எதையும் எதிர்பாராத சேவையாகச் செய்கிறார்கள்.

இந்த சேவையை மக்கள் மிகவும் பக்தி சிரத்தையுடன் இதயபூர்வமாகச் செய்கிறார்கள். நானும் அப்படிப்பட்ட சேவைகளில் ஈடுபடுகிறேன். உலகின் பல பாகங்களுக்குச் சென்று பயிற்சி அளிக்கிறேன். நான் அதற்காகப் பணம் வாங்குவதில்லை. என்னுடன் இருக்கும் அனைவரும் அதைப் பார்த்து ஓர் உதாரணமாக எடுத்துக் கொண்டு சேவை செய்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் நன்கொடைகளை நானே வைத்திருந்தால் பெரிய கோடீஸ்வரனாக ஆகியிருப்பேன்.

நான் இங்கு வந்து உங்களுக்குப் பாடம் சொல்கிறேன். இங்கிருந்து வேறு இடத்துக்குச் செல்கிறேன். இந்த ஆசிரமத்துக்கு, ஆசிரியர்கள் வந்து இப்படிப்பட்ட பயிற்சிகள் நடக்காவிட்டால், இந்த ஆசிரமத்தை மூட வேண்டி வரும். சிலர் மட்டுமே இந்த ஆசிரமத்தை நடத்த முடியாது. இங்கு வந்து அவர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் செய்யும் சேவைகளை மேலும் மேலும் செய்யத் தூண்டுகிறேன்.

எல்லா தொண்டர்களும் சேவை செய்து அதன் பலனை குருவுக்கு அளிப்பதாக நினைக்க வேண்டாம்.. குருவே, எல்லா சேவைகளுக்கும் காரணமாக, தூண்டு கோலாக நின்று தொண்டர்களைத் தூக்கி விடுகிறார் என்று அறியுங்கள்.நான் ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வேலை செய்து பலருக்கு உதவுகிறேன். இதை மகிழ்வோடு செய்கிறேன். யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் செய்கிறேன். நான் விரும்புவது எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது தான். அவர்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் எனக்கும் மகிழ்ச்சி கிடையாது.

தற்போது உலகில் அவநம்பிக்கை நிலவுகிறது. கணவன் மனைவியிடையே சந்தேகம். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடையே நம்பிக்கையின்மை. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் மேல் அவ நம்பிக்கை. இப்படிப் பலப்பல சந்தேகங்கள்..இது இப்படியே சென்றால் சமுதாயம் சீரழிந்து வாழத்தகுதி இல்லாததாக ஆகிவிடும். இதை மாற்றியாக வேண்டும்.மக்களுக்கு சுயநம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. எல்லோரும் தன்னை நம்ப வேண்டும். சமுதாயத்தில் நல்ல எண்ணத்தின் மேல் நம்பிக்கை வேண்டும். உலகை இயக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தியின் மெல் நம்பிக்கை வேண்டும். எங்கும் பரவி இருக்கும் தெய்வ சக்தியின் மேல் நம்பிக்கை வேண்டும்.
இந்த மூன்றின் மேலும் நம்பிக்கை வைப்பது அவசியம். அதைத்தான் நாம் ஆன்மீகம் என்று சொல்கிறோம். உன் மேல் நம்பிக்கை வைக்கத் துவங்கு. உன்னைச் சுற்றியிருப்பவர்களிடம், அவர்களின் நல்ல குணத்தின் மேல் நம்பிக்கை வை. தெய்வத்தின் மேல் நம்பிக்கை வை. அது தான் ஆன்மீகத்தின் சாரமாகும்.

கே: விஞ்ஞான அறிவின் படி, காலம் மாறக் கூடியது, ஆகாயம் நிலையானது என்று சொல்லப்படுகிறது. பழைய ஏடுகளின் படி, காலம் நிலையானது. ஆகாயம் மாறக் கூடியது என்று சொல்கிறார்கள். இதை விளக்குவீர்களா?

குருதேவர்: காலம் இருவகைப்படும். ஒன்று மாறக்கூடியது. கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம். மற்றொன்று மகத்தான காலம். அது என்றும் மாறுவதில்லை. மற்ற மாறக் கூடிய காலங்கள் எல்லாம் அதில் அடங்கும். அது மகா காலம் என்று அழைக்கப் படுகிறது. அது தான் எல்லாவற்றையும் அடக்கிய மகா காலமாகும்.

மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நீ சொல்லும் போது ஒரு கால கட்டத்தை அடிப் படையாக வைத்து மற்றொரு காலகட்டம் வரை மாறுதல்கள் என்ன என்று சொல்வாய். இந்த மாற்றத்தை அறிவதற்கு  மாற்றமே இல்லாத அடிப்படையான ஒன்று இருக்க வேண்டும். அது ஆகாயத்தில் இடை வெளியாகவோ (இரண்டு இடங்களுக்கு இடையே உள்ள தூரம்) அல்லது காலத்தின் இடைவெளியாகவோ இருக்கலாம்.

ஆகவே அடிப்படையான மாறாத ஒன்று மற்ற மாற்றங்களை நிர்ணயிக்கிறது. காலத்தைப்  பற்றி அறிய, மனத்தைப்  பற்றி அறிவது அவசியம். நீ மனதை அறியா விட்டால், காலத்தைப்  பற்றி அறிய முடியாது. மனதை அளவிட முடியாது. அதேபோல மகா காலத்தையும் அறிய முடியாது. அதனால் தான் எவ்வளவு நீ மனத்தை அறிகிறாயோ, அவ்வளவு காலத்தைப் பற்றியும் அறியமுடியும் என்கிறார்கள்.

கே: ஆசிர்வாதம் எப்படி செயல்படுகிறது என்று விளக்குவீர்களா?

குருதேவர்: ஆசிர்வாதம் என்பது தூய்மையான இதயத்திலிருந்து பாயும் ஆக்கபூர்வமான சக்தி.

கே:  வைராக்கியத்தைப் பற்றியும், அதி தீவிர ஆசை (ஜுர வேகம்) இல்லாமல் இருப்பதைப்  பற்றியும் அழகாகப் பேசினீர்கள். ஆனால் இந்த அறிவுரை உங்களைப் பார்த்ததுமே ஜன்னல் வழியாக வெளியேறி, ஜுரவேகம் அதிகரிக்கிறது.

குருதேவர்: எதையாவது பிடித்துக் கொள்வது மனத்தின் இயல்பு. மனம் மற்ற விஷயங்களிலிருந்து விடுபடும் வரை, ஏதோ ஒன்றைப் பற்றி இருப்பது சரிதான். நாள் ஆக ஆக மனம் அமைதியாக ஆகும் போது, நீ அதிலிருந்தும் (ஜுரவேகத்திலிருந்து) விடு பட்டுவிடுவாய்.

கே: குருதேவா! திருமணம் செய்து கொள்ளாமலோ, குழந்தைகள் இல்லாமலோ இருப்பதால் கர்ம வினைகள் குறையுமா? அல்லது அவை நம் விருப்பத்தைப் பொறுத்ததா?

குருதேவர்: அது உன் விருப்பத்தைப்  பொறுத்தது. நீ உன் மனதை எப்படிக் கையாள்கிறாய் என்பதைப் பொறுத்திருக்கிறது.

கே: 12.12.12 அன்று நடந்த மூன்று தியானங்கள் பற்றிச் சொல்வீர்களா? (மனித சமுதாயம் பற்றி, பூமியைப் பற்றி, இவ்வுலகைப் பற்றி)

குருதேவர்: தியானத்தின் அனுபவத்தை அளக்க முடியாது. நமக்குத் தெரிந்த அளவுகோல்களுக்கு அப்பால் தியானம் இருக்கிறது. ஆனால் கட்டாயம் தியானத்தின் அனுபவத்தை நாள் செல்லச் செல்ல நீ தெரிந்து கொள்வாய்.இவ்வுடல் சில காலமே இருக்கும் என்று சொல்கிறீர்கள். எப்படி பீஷ்மர் தன் விருப்பப்படி பல நாள் வாழ்ந்து அவர் விருப்பப்படி உயிர் நீத்தார்.?

குருதேவர்: நான் பீஷ்மருக்கு வக்கீலாக இருக்கப் போவதில்லை. மகாபாரதத்தின் வேறு எந்தப் பாத்திரத்துக்கும் நான் வக்கீலாக மாட்டேன். நீ ஒரு வக்கீலோடு, ஆதிமனித சமூகத்தைப் பற்றிய ஆராய்ச்சியாளரோடு உட்கார்ந்து இந்த ஆராய்ச்சியைச் செய்.

நாம் சிறுவர்களாக இருக்கும்போது ஒரு பறவை எப்படி சில மனிதர்களைத் தூக்கிக் கொண்டு பறக்க முடியும் என்று வியப்படைந்திருக்கிறோம். ஒரு சிறு பறவையின் மேல் எப்படி ஒரு மண்டபத்தை வைக்க முடியும் என்று ஆச்சரியப்பட்டிருக்கிறோம்.

பொதுவாக புராணக் கதைகளில் ஒரு பறவை ஒரு சிறிய வீட்டைத் தூக்கிக் கொண்டு பறப்பதை சித்திரம் மூலமாகவோ, கதைகளின் மூலமாகவோ தெரிந்து கொண்டிருக்கிறோம். அந்த சிறு வீட்டை இந்தியாவில் மண்டபம் என்று சொல்வோம்.

உங்களுக்குத் தெரியுமா? விஞ்ஞானத்தின் படி, நம் விஞ்ஞானிகள் 300 டன் எடையைத் தூக்கக் கூடிய பறவைகள் இருந்திருக்கின்றன என்று சொல்கிறார்கள். டைனோசர்கள் இருந்த காலத்தில் விமானத்தைப் போன்ற பெரிய பறவைகள் இருந்திருக்கின்றன. அப்படிப் பட்ட பெரிய பறவைகளின் மேல் 10 மனிதர்களை வைக்கலாம். 10 மனிதர்கள் ஏன்? 100 மனிதர்கள் கூட அதன் மேல் பறக்கலாம். அந்தப் பறவைகளுக்கு அப்படிப்பட்ட பயிற்சி அளிக்கலாம். ல்லாம் சாத்தியமே.

கே: நாம் நினைப்பது சரியாக நடக்காத போது, சுயஅறிவோடு, சுறுசுறுப்பாக இருந்து கோபம் கொள்ளாமல் இருப்பது எப்படி?

குருதேவர்: சில சமயம் கோபம் வந்தால் மனதில் வைத்துக் கொள்ளாதே. கோபம் வரட்டும். அது நீண்ட நேரம் இருக்க வேண்டாம். வந்து போகட்டும். சில சமயம் கோபம் அவசியம். அது வந்தால் பரவாயில்லை. உன் கோபத்தால் யாருக்காவது நன்மை விளையுமென்றால், சிறிது கோபம் வரட்டும். ஆனால் உன் கோபத்தால் உனக்குத் துன்பம் ஏற்படுமென்றால், அது உன்னை வருத்தப் படுத்துமென்றால் அதை சரியாகப் பார்க்க வேண்டும். .

உனக்கு ஏன் கோபம் வருகிறது. தெரியுமா? மற்றவர்களை குறைபாடு உடையவர்களாக நீ பார்க்கிறாய். அல்லது உன்னை குறைபாடு உடையவனாக நீ பார்க்கிறாய். உன் மீதே உனக்குக் கோபம் வருகிறது. அதனால் தான் இந்த ஞானம் (வாழும் கலை) உனக்கு உதவும். உன் மனத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும்.நீ உன்னை உயர்வானவனாக நினைத்தால், உன்னிடம் இருக்கும் குணங்களை, நீ யார் என்பதை நீ அறிய மாட்டாய். எனவே, இயற்கையே உனக்குத் தேவையான பாடங்களை அளித்து, உண்மையை அறிய வைக்கும்.

தெய்வீகத்தின் நாட்டியம்...

டிசம்பர் 28 - 2012 பேட் அண்டோகஸ்ட் - ஜெர்மனி
கே: குருதேவ், தயவு செய்து குருமார்களின் வம்சாவளி வரிசையைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்களேன்.

குருதேவ்: பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதனால் அது எப்பொழுது துவங்கியது என்று நமக்குத் தெரியாது.யோகா ஞானம், தியானம் பற்றிய ஞானம், இந்த பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தியினால் ஆனது என்னும் ஞானம் ஆகியவை குருமார்களின் மூலமாக வழிவழியாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. 

பொதுவாக, ஒன்று உருவாக்கப்படும் போது, படைப்பவனும், படைக்கப்பட்ட பொருளும் வெவ்வேறாகும். உதாரணமாக, நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியை உருவாக்கும் போது, இந்த மெழுகுவர்த்தி என்னிலிருந்து வேறுபட்டது என்று நினைப்பீர்கள்.அதனை உங்களிடமிருந்து பிரித்து வைப்பீர்கள். இது என்னுடைய படைப்பு இது நானல்ல என்று நினைப்பீர்கள். இப்படித்தான் படைப்பவன் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்று மக்கள் நினைக்கின்றார்கள். ஆனால் கடவுள் எங்கும் நிறைந்திருப்பவர் என்று சொன்னால் அவர் படைக்கப்பட்ட அந்த பொருளுக்குள்ளும் இருக்க வேண்டும். எங்கும் நிறைந்தது என்று ஒன்று சொல்லப்படும்போது அதை விட்டு வெளியில் வேறொன்று இருப்பதற்கான இடம் எங்கே இருக்கின்றது? 

நான் அனைத்து சக்திகளையும் உடையவன் என்றால், என்னைவிட சக்தி வாய்ந்த ஒன்று இருக்க முடியுமா? வாய்ப்பே இல்லை. படைப்பு, படைப்பாளி என்பவை  இருவேறு பொருட்கள் இல்லை. இருப்பது ஒரே பொருள்தான். இதனை எப்படி புரிந்து கொள்வது? நடனம், நடனமாடுபவர் என்ற உதாரணத்தை எடுத்துக் கொண்டால், நடனமாடுபவரிடமிருந்து  நடனத்தைப் பிரிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நடனம் பார்க்கவேண்டுமென்றால் நடனமாடுபவரின் மூலமாகத்தான் பார்க்க முடியும். 

ஒரு ஓவியனும் அவன் வரைந்த ஓவியமும் வெவ்வேறானவை. ஒரு ஓவியன் ஒரு ஓவியத்தை வரைந்துவிட்டு அங்கிருந்து சென்று விடலாம். அப்பொழுதும் அந்த ஓவியம் அதே இடத்திலேயே இருக்கும். ஆனால் ஒரு நாட்டியக்காரர் நாட்டியத்தை விட்டு விலகிச் செல்ல முடியாது. எனவே  படைப்பு , படைப்பவன் என்பது நடனம், நடனமாடுபவர் போன்றது கடவுள் அல்லது அன்பு அல்லது  ஒளி என்று நம்மால் அழைக்கப்படும் சக்தி இந்த வையகம்  முழுவதும் பரவியுள்ளது. இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் ஊடுருவி உள்ளது.இதுவே நம் பண்டைய ஞானத்தின் சாரம் ஆகும். நவீன அறிவியல் விளக்குவதும் அதையே தான். இந்த உலகம் முழுவதும் ஒரே சக்தியினால் ஆனது. இந்த உண்மை தத்துவ ஞானிகளின் பற்பல புதிர்களுக்கு தீர்வளிக்கும். 

கே: பற்றாக்குறை என்பதிலிருந்து மிகுதி என்று எண்ணும் எண்ணங்களின் நிலைக்கு நாம் மாறுவது எப்படி? 

குருதேவ்: அவ்வாறு செய்ய வேண்டும் என்ற உங்களது எண்ணத்திற்கு நீங்கள் ஏற்கெனவே  அந்த திசை நோக்கி நகரத் துவங்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். உங்களுடைய தேவைகள் என்ன என்று பாருங்கள். அவையனைத்தும் எப்போதும் தீர்த்து வைக்கப்படுவதைக் காண்பீர்கள்.  உங்களுக்குத் தேவையானவை எல்லாம் எப்போதும் உங்களுக்குக் கிடைக்கும். ஆனால் அதற்கென நீங்கள் தவறான எல்லைக்குச் சென்று "நான் எதுவும் செய்ய வேண்டாம்.  அனைத்தும் என்னிடம் வரும்" என்று சொல்ல வேண்டாம். அது தவறு. நீங்கள் முயற்சிகள் செய்வதுடன் மிகுந்த தைரியமும் கொண்டிருக்க வேண்டும்.முயற்சி, தைரியம் இவையிரண்டும் தான் உங்களுக்கு செல்வம் அளிக்கும். 

சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி, "உத்யோகினம் புருஷ-சிம்ஹம் உபயாடி லக்ஷ்மி" என்று சொல்கின்றது. அதாவது சிங்கம் போன்று மன தைரியம் கொண்டுள்ள ஒருவன் தன முயற்சிகளனைத்தையும் செய்யும்போது அவனிடம் நிறைய செல்வம் வந்து சேரும். எனவே உங்கள் முயற்சிகள் அனைத்தையும் செய்துவிட்டு ஒரு சிங்கம் போன்று தைரியமாக இருங்கள். உங்களுக்குத் தெரியுமா? ஆண் சிங்கம் மிகவும் சோம்பேறி. பெண் சிங்கம்தான்  வேட்டையாடி இரை கொண்டுவந்து ஆண் சிங்கத்திற்கு கொடுக்கின்றது. ஆண் சிங்கம் இரை தேடி வேட்டையாடும் வேலையைக்கூட செய்யாமல் சோம்பேறியாக இருக்கின்றது.  இருந்தாலும் அது நம்பிக்கையோடு இருப்பதன் காரணமாக அது காட்டிற்கே அரசனாக இருக்கின்றது. ஆகவே உங்களுக்கும் இதுதான் தேவை. சிங்கம் போன்ற கம்பீரமும் நம்பிக்கையும் தேவை. அப்படி இருந்து கொண்டு நீங்கள் உங்கள் நூறு சதவீத முயற்சியையும் செய்தால் செல்வம் உங்களைத் தேடி வரும்.

உட்கார்ந்து பகல் கனவு காண்பதோ அல்லது அதையே நினைத்து ஜுரவேகம் கொள்வதோ  எந்த பலனையும் தராது. அதையே நினைத்து படபடப்பாகி ஜுரவேகம் கொள்ள வேண்டாம்.  ஒரு வேலையை எடுத்து செவ்வனே செய்யுங்கள். உங்களுக்கு செல்வம் தானாக வந்து சேரும்.

கே: குருதேவ்! தாங்கள் பல்வேறு விதமான பிராண சக்தி பற்றி கூறி இருக்கிறீர்கள். மேலும் விளக்கிக் கூற முடியுமா?

குருதேவ்: பத்து விதமான பிராண சக்திகள் இருக்கின்றன. இவற்றில் ஐந்து பெரிய வகையானதும், ஐந்து சிறிய வகையை சேர்ந்ததும் ஆகும். இன்று நாம் பெரிய வகையை சேர்ந்த ஐந்து பிராண சக்திகளைப் பற்றிப் பார்க்கலாம்.

முதலாவது வகை ப்ராணா  உங்கள் தொப்புளில் தொடங்கி தலை வரை மேல் நோக்கி நகருகிறது. இரண்டாவது தொப்புளில் இருந்து கீழ் நோக்கி நகருகிறது.இது அபானா.உங்களது பிராண சக்தி அதிகரிக்கும் போது  உறக்கம் வராது. அபானம் அதிகரிக்கும் போது சோம்பலாகவும், சோர்வாகவும் உணருவீர்கள். இதை கவனித்திருக்கிறீர்களா? மந்தமாகவும் சோம்பலாகவும் இருப்பதற்கு அபான வாயு அதிகரித்தலே காரணம்

மூன்றாவது வகை சமானா ஆகும். இது நமது வயிற்றில் ஜீரணத்திற்கு காரணமான ஜடாராக்னி ஆகும். இது நெருப்பு போன்றது. உணவு செரிமானத்திற்கும் உடல் உறுப்புக்களின் சமநிலை செயல்பாட்டிற்கும் காரணமானதாக விளங்குகிறது.

அடுத்தது உதான வாயு அல்லது உதான பிராணா என்பதாகும். இது நமது நெஞ்சுப்பகுதியில் உணர்ச்சிகளுக்கு காரணமானதாக இருக்கிறது.சுத்ர்சனக்ரியாவின் போது ஏற்படும் அழுகை மற்றும் சிரிப்பு போன்ற உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன.அதற்கு இந்த உதான வாயு தான் காரணம்.

ஐந்தாவது வகை, வியானா ஆகும். இது உடல் முழுவதும் பரவி இருக்கிறது. நமது உடல் அசைவு மற்றும் இயக்கத்திற்கு காரணமானது. சுதர்சனக்ரியாவின் போது ஒரு வகை சிலிர்ப்பு உடல் முழுமையும் சக்தி பரவுவது போன்ற உணர்வு ஆகியவை ஏற்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா?

அது என்னவென்றால் சுதர்சனக்ரியாவின் போது இந்த ஐந்து வகை பிராண சக்திகளும் சமநிலைப்பட்டுவிடுகின்றன. அதனால் தான் அழுகை, சிரிப்பு போன்ற உணர்ச்சி வெளிப்பாடுகளும் ஒரு விதமான சிலிர்ப்பும் ஏற்படுகின்றன. தவிர க்ரியா முடிந்ததும் பசி எடுக்கிறது. ஆக, இந்த ஐந்து வகை பிராண சக்திகளும் நம்மை இயக்குகின்றன.சமான வாயு சமமின்மை ஏற்பட்டால் அஜீரணம் வாந்தி இவை ஏற்படுகின்றன. உதான வாயு சமமின்மையால் உணர்ச்சித்தடைகளும் மனக் கோளாறுகளும் ஏற்படுகின்றன. உடலெங்கிலும் வியானா சமமின்மை ஏற்பட்டால் மூட்டு வலி, உடல் இயக்கத்தடை, படபடப்பு, அமைதியின்மை இவை ஏற்படுகின்றன. இவை அனைத்தும் சுதர்சனக் க்ரியா செய்து முடித்தவுடன் சரியாகி விடுகின்றன.முன்பு இருந்த வலிகள்,உடல் இயக்கத்தடைகள் யாவும் நீங்கி விடுகின்றன. இது உங்களுக்கு நிகழ்ந்திருக்கிறதா?

இந்த ஐந்து பெரிய வகை பிராண சக்திகளைத் தவிர ஐந்து வகை சிறிய வகை பிராண சக்திகளும் உள்ளன. அவற்றைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.

கே: அன்பும், பற்றற்ற நிலையும் வாழ்கை துணை நிலையில் எவ்வாறு இணையாக அமையும்?
குருதேவ்: ஆழ்ந்த விருப்பு நிலை,பற்றற்ற நிலை இவை இரண்டுமே தேவையானவை. சாதரணமாக நாம்," ஆழ்ந்த விருப்பம் இருக்கும் போது எவ்வாறு பற்றற்று இருக்க முடியும்?அது போலவே பற்றற்ற நிலையில் எப்படி எதையும் ஆழ்ந்து விரும்ப முடியும்?" என்று எண்ணுவோம்.இதுதான் உலகில் மக்களிடையே நிலவி வரும் கருத்து. ஆனால் அவ்வாறு அல்ல.மூச்சு எடுப்பது போன்றது ஆழ் விருப்பம், மூச்சு விடுவது போன்றது பற்றற்ற நிலை. இவை இரண்டிற்கும் இடையே உள்ள நிலை தான் கருணை நிலை.இவை மூன்றுமே மிக அவசியம்.

உலகில் ஏதாவது ஒன்றில் ஆழ்ந்த ஈடுபாடு இருக்க வேண்டும். இல்லயெனில் மன அழுத்தம் ஏற்படும்.அறிவை பெருக்கிகொள்வதில் ஆழ்ந்த விருப்பம் கொள்ளுங்கள், தொண்டு செய்வதில் விருப்பம் கொள்ளுங்கள், சிந்திப்பதில் விருப்பம் கொள்ளுங்கள், அல்லது இது போன்ற ஏதாவதில் விருப்பம் கொள்ளுங்கள்.

வாழ்வில் ஏதேனும் ஒன்றில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள வேண்டும்.அது போலவே பற்றற்ற நிலையும் ஏற்பட வேண்டும்.இல்லையெனில் மகிழ்ச்சி கிடைக்காது. பற்றற்ற நிலை இல்லையெனில் மிகுந்த துன்பம் ஏற்படும். தவிர, நிச்சயமாக கருணை தேவை. ஆகவே மூன்றுமே வாழ்கைக்குத்தேவையானவை.

கே: இப்போது ஒரு வேளை விடுதலை அடைய முடியாமல் போனால் அடுத்த பிறவியில் தங்களுடன் இணைய முடியுமா?

குருதேவ்: ஆம்.நிச்சயமாக. கவலைப் படாதீர்கள்.

கே: குருதேவ்! ஏன் நிறைய தம்பதிகளுக்கு குழந்தை பிறப்பதில்லை? மேல்நாடுகளில் என்ன நடக்கிறது?


குருதேவ்: இது பற்றி மருத்துவர்களிடம் தான் கேட்க வேண்டும்.அவர்கள் தாம் சரியான அறுதியீடு செய்வார்கள். நாம் இதை பொதுக் கருத்தாக கொள்ள முடியாது.ஆயினும் மது அருந்துவதும், போதைப் பொருட்களை எடுத்துக் கொள்வதும் ஒரு காரணம் ஆகும். மேலை நாடுகளில் பள்ளி அல்லது கல்லூரிப் பருவத்திலேயே மது அருந்தத் தொடங்கி விடுகிறார்கள். இது சரி அல்ல. போதைப் பொருட்களில் இருந்து மக்கள் விலகி இருந்தால் இவ்வுலகம் இதை விட மிக நன்றாக இருக்கும்.