நம் பாரதத்தை மேம்படுத்த சேவை மனப்பான்மையுள்ள தொண்டர்களே, முன்வாருங்கள்!

புது டெல்லி - டிஸம்பர் 5 - 2012



நான் விளக்கேற்றும் போது திரி தீப்பிடித்து எரிய சற்று நேரம் ஆனது. “எண்ணெய் விளக்கில் திரி பற்றிக்கொள்ள நேரம் ஆகிறது. ஆனால் அது ஒருமுறை நெருப்பில் பற்றிக்கொண்டு விட்டபின் நின்று அழகாக எரிய ஆரம்பித்து விடுகிறது” என்று.

நம் நாட்டில் உள்ள மக்களும் இதே போலத்தான். ஆரம்பத்தில் அவர்கள் சற்றே மெதுவாக செயல்பட ஆரம்பித்தாலும்,  ஆரம்பித்தபின் நிறுத்தவே மாட்டார்கள். நெருங்கிய நண்பர்களிடமோ, குடும்பத்தில் உள்ள சொந்தக்காரர்களிடமோ, நாம்  மிகவும் நேசிக்கும் பிற நபர்களிடமோ யாரும் லஞ்சம் கேட்பதில்லை, பெறுவது இல்லை, எதிர்பார்ப்பதும் இல்லை.

இதுபோன்று நமக்குச் சொந்தமானவர்கள் என்ற மனப்பான்மை எங்கு நம்மை விட்டு விலகிச்செல்கிறதோ, அதே எல்லையில் தான் லஞ்சமும் தலைகாட்ட ஆரம்பிக்கின்றது.
’வாழும் கலை’ இதையே தான் தன் தன்னார்வத்தொண்டர்கள் மூலமும், ஆசிரியர்கள் மூலமும்,இதர பிற வாழும் கலையுடன் தொடர்பு கொண்டுள்ளவர்கள் மூலமாகவும் போதிக்கிறது.

”ஒவ்வொருவரும் தன் சொந்தத்தை விரிவு படுத்துங்கள். உலகம் உங்களுக்கே சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்” மனிதனின் ஜாதியோ, மதமோ, இனமோ, மத நம்பிக்கையோ, பேசும் மொழியோ, அந்த  மக்களின் வயதோ, அவர் வாழ்வது கிராமமோ நகரமோ எதுவாக இருப்பினும் அவர்கள் அனைவரும் நமக்குச் சொந்தமே, 

அவர்களும் நம்மில் ஒருவரே,என்ற எண்ணத்தினை நாம் முதலில் நம் மனதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு ஒருவர் சொந்தம் என்ற உணர்வுடன் இந்த மனித சமுதாயம் முழுவதுமே ஒன்றாக உணர்வுகளால் இணைய வேண்டியது, நமது தர்ம சாஸ்திரம் நீதி நூல் நீதி நெறி முதலியவற்றிற்கு ஏற்றார்போல மிகவும் அவசியமான நியாயமான ஒன்றாகும்.

இது ஓர் உயர்ந்த பரிபூரண நிலைக்கான, மனதில் ஏற்படும் அழகான கற்பனையே என்றாலும், இந்தக்கனவினை ஒருபோதும் விட்டு விலகக்கூடாது.  நாம் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும். 

இந்த மிகச்சரியான திக்கினை நோக்கி நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சிறு காலடிகளும் கூட நம்மை நெடுந்தூரத்திற்கு கொண்டு சென்று, நம் மனதில் ஏற்படுத்திய கனவினை நனவாக்கிக் காட்டிட வழிவகுக்கும். குற்றங்கள் மற்றும் லஞ்சலாவண்யங்கள் மலிந்து போய், அவை நம் மீது சவாரி செய்ய ஆரம்பித்து விடுமேயானாலோ, அதன் பிறகு அந்த சமுதாயத்தில், ஒருத்தர் கூட பாதுகாப்பாகவோ நிம்மதியாகவோ வாழ முடியாமல் போய்விடும்.

நம் இந்தியாவை  பயத்துடன் வாழ்வதற்கும், நீதி நெறியில்லாமல், வாழ்வதற்கும் ஒரு போதும் நாம் திருப்பி விடலாகாது. அவ்வாறான நாட்டில் மக்கள் பாதுகாப்புடன் வாழ முடியாது. அதன் பிறகு அது நம் புண்ணிய பாரத தேசமே இல்லை என்றாகி விடும் அபாயம் உள்ளது. இங்குள்ள மக்கள் மக்கள் அனைவரும் எப்போதுமே பயமில்லாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும், ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும், ஒவ்வொரு மொழிக்கும் இங்கு ஆதரவு அளிக்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். 

ஆனால் இன்றுள்ள சூழ்நிலை ஒவ்வொரு பகுதியினரும் ஒவ்வொரு விதமான அச்சுறுத்தலுக்கு பயந்து வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களின் எண்ணிக்கைள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ஆகையால், மக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு மனதளவில் தகுந்த பாதுகாப்பு உணர்வும், நம்பிக்கையும் ஏற்படும் விதமாக அவர்களைத் தயார்ப்படுத்த, நாம் இந்த நடவடிக்கைகளை இப்போது எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.  

நேற்று நான் 756 குற்றவாளிகள் மத்தியில் என் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தேன். அவர்கள் அனைவரும் குண்டர்கள் என்றும்,கொள்ளைக்காரர்கள் என்றும், போக்கிரி, துஷ்டன், அயோக்கியன் எனவும் பெயரிடப்பட்டிருந்தனர். நாம் நேற்று அவர்களுக்கு ”கருணாதார்கள்” எனப் புதுப் பெயரிட்டு அழைத்தோம்.“கருணாதார்கள்” என்றால் புதிய ஒளிக்கு விளக்குப்பிடிப்பவர்கள் என பொருள்படும். அதாவது சமூகத்திற்கு  ஒரு புது நம்பிக்கை அளிக்கும் சொல்.

ஒரு வாரம் முன்பு நமது வாழும் கலையின் ஒரு பகுதியான YLTP யில் பங்கேற்ற அவர்களை நாம் மீண்டும் சந்தித்து உரையாடியபோது, இந்த ஒரே வாரத்தில் அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த மனமாற்றம் மிகவும் வியக்கத்தக்க முறையில் இருந்தது. நமது நம்பிக்கை உண்மையிலேயே வின்னைத்தொடுவதாக அமைந்திருந்தது. சேரிப் பகுதிகளில் மிகவும் அற்பமான குற்றங்கள் முதல் மிகப்பெரிய குற்றங்கள் வரை இவர்கள் செய்கின்றனர். அவர்களுடைய மனதும் மூளையும் நல்ல வழிகளில் மாற்றப்படுமானால், நாம் நல்ல நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். வெறும் நம்பிக்கைகள் மட்டுமல்ல, இவை நம் மீது  பல்வேறு சமூகப் பொறுப்புக்களையும் சுமத்தக்கூடும்.   

நம்மால் ஏதாவது கொஞ்சம் செய்யமுடியும் எனத்தோன்றினால், நாம் அதை உடனே செய்திடல் வேண்டும். நாம் வாய்மூடி சும்மா இருத்தல் கூடாது. இந்தியாவை முன்னேற்றக் கூடிய தன்னார்வத்தொண்டர்கள் என்பது நல்லதொரு முயற்சி. இங்குள்ள நீங்கள் சில குழுக்களாக மாறி, ஆயிரக்கணக்கானவர்களாக உங்களைப் பெருக்கிக்கொண்டு, ”குற்றமற்ற,  லஞ்சமற்ற வெறும் இந்தியா”வைக் கொண்டுவர முடியும்.  என்ன சொல்கிறீகள்?  [பார்வையாளர்கள் அனைவருமே “ஆம்” என்றனர்] 

01.03.2009 அன்று எனக்கு நன்றாக நினைவில் உள்ளது ....... தன்னார்வத்தொண்டர்களாகிய நீங்களும், மாணவ மணிகளும் சேர்ந்து பயங்கரவாதத்தினை எதிர்த்து போராட ஆரம்பித்தீர்கள். ஏனென்றால் 2008 ஆம் ஆண்டு மட்டும் 12 மாதங்களில் 13 பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இந்தத் திடீர் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். 

இது மிகவும் சோகமான சம்பவம். நாம் நம் நாட்டில் இந்த சோகமான சம்பவத்தினை எதிர்கொண்டது மிகவும் வருந்தத்தக்கது. டெல்லியிலுள்ள இளைஞர்களாகிய நீங்கள எழுந்து முன்நின்று, எழுச்சியுடன்  கண்டனக்குரல் எழுப்பினீர்கள். கிரன் பேடி, கெஜ்ரிவால போன்ற இன்னும் சிலரை அழைத்தீர்கள். இந்த இயக்கத்தின் செயல் பாட்டினால் 2010 ஆம் ஆண்டில் லஞ்சமற்ற இந்தியாவினைக் கொண்டுவர விதை ஊன்றப்பட்டது. 

ஆகவே, தன்னார்வத்தொண்டர்களாகிய உங்களால் எவ்வளவோ சாதிக்க முடியும்.  நீங்களே உண்மையான ஊக்கமூட்டிடும் எழுச்சிமிக்க  சக்தியாகும். இந்திய இளைஞர்களாகிய நீங்கள் இவற்றை வீரத்துடன் சவாலாக ஏற்றுக்கொண்டு கையாள ஆரம்பித்தால், பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், போதைப் பொருட்களுக்கு  அடிமையாதல், மதுவுக்கு அடிமையாதல், லஞ்ச லாவண்யத்தில் ஈடுபடுதல் முதலியவற்றை தலைகீழாக மாற்றி சாதிக்க முடியும்.

உங்களின் பலத்தினை குறைவாக மதிப்பிடாதீர்கள். நீங்கள் நினைத்தால் பல அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்த முடியும். தாங்கள் 180 டிகிரிக்கு தங்களைச் சுற்றியுள்ள எதையும் சுலபமாக வளைத்திட முடியும். வாலிபர்களே, நம் நாட்டின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இளைஞர்களே,  உங்களிடம் மட்டுமே இதற்கான சக்தி முழுமையாக உள்ளது. நான் இங்கு வாலிபர்கள் எனக் குறிப்பிட்டுள்ளது, இங்குள்ள வயதான அனுபவம் வாய்ந்த வாலிபர்களையும் சேர்த்துத்தான். 

[பலரும் சிரித்தனர்] இதுபோன்ற ஓர் இளைஞர் நேற்று தன் 56 ஆவது திருமண நாளைக் கொண்டாடினார்.  இந்த தம்பதியினர் தங்களுடைய 80 ஆவது வயதை எட்டியுள்ளனர்.  அவர்களிடம் இன்றும் உள்ள ஊக்கம், ஆசை, ஆர்வம், தெம்பு முதலியன என்னால் நம்பும்படியாகவே இல்லை. இதுதான் மனோவலிமை என்பது. 

நேர்மை, மேன்மை, முழுமை, சீரிய நிலை,உருக்குலையாமை போன்றவைகளும், மனதின் உள்ளுணர்ச்சிகளும் மனோவலிமை உள்ளவர்களுக்கு மட்டுமே வெளிப்படும். மனோ வலிமை என்பது மிகவும் விசாலமான பார்வையினால் அன்புடனும் கவனத்துடனும் வாழ்வினைப் பார்க்கக்கூடியது. மிகக்குறுகிய காலமே நாம் இந்த பூமியில் வாழ இருக்கும் போது, அதற்குத் தகுந்தாற் போல சிலவற்றிற்கு நாம் முன்னுரிமை கொடுத்து, நம் வாழ்க்கையினை பார்க்க வேண்டும். 

ஓர் உதாரணத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். வாழும் கலை வகுப்பு எடுக்கும் ஓர் ஆசிரியர்,அவர் குஜராத்தில் ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஒரு சாதாரண காகிதத்தில் தன்னுடைய கையொப்பம் இட மட்டும், இவருக்கு ரூபாய் ஐம்பத்தோரு கோடி தர ஒருவர் முன்வந்தார்கள். சாதாரணமான தொகை அல்ல 51 கோடி ரூபாய்!

ஒரு அரசாங்க அதிகாரி தன் வாழ்நாளில் 51 கோடி ரூபாய் பணத்தை கனவிலும் அடைய முடியாது. ஒரு வாழ்நாள் மட்டுமல்ல மூன்று முறை பிறவி எடுத்து மீண்டும் அரசாங்க அதிகாரியாகவே அவர் இருந்தாலும் இந்தப் பெருந்தொகையினை அவர் ஒருகாலும் அடையவே முடியாது.

இது போல 51 கோடி ரூபாய்கள் [10 மில்லியன் டாலர்கள்] வைத்துள்ள அதிகாரிகள் யாரையுமே நான் இதுவரை பார்த்தது இல்லை. இந்த அதிகாரிக்கு இந்த அரியதோர் வாய்ப்பு அவரைத்தேடி வந்தும் கூட ”முடியாது, கையொப்பமிட என்னால் முடியவே முடியாது” எனச்சொல்லி மறுத்து விட்டார். இவர் அந்தத்தாளில் தன் கையொப்பத்தை இட்டிருந்தாலும் கூட, இதை பிறர் யாருமே கவனித்து இருக்கப்போவது இல்லை.

இந்த மிகப்பெரிய தொகையினை தான் பெறுவதற்கு அவர் எவ்வளவோ காரணங்களும் சமாதானங்களும் சொல்லிக்கொள்ளலாம் தான். ”நான் இந்தப்பணத்தினை பெற்று ஏழைமக்கள் பலருக்கும் உதவ நினைக்கிறேன். சமுதாயத்திற்கு என்னால் ஆன பல நல்ல காரியங்கள் செய்ய நினைக்கிறேன்” என்று கூட இவர் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

10 மில்லியன் டாலர் என்பது ஒரு மிகப்பெரிய தொகை. இந்தப் பணத்தினை வாங்க மறுத்துள்ள அவரின் நேர்மையை பாருங்கள். இவரை நினைக்கவே எனக்கு மிகவும் பெருமையாகவும், பொறாமையாகவும் உள்ளது. இந்த மனோவலிமையை எது நமக்கு அளிக்கும் என்பதை இப்போது பார்ப்போம். நீங்கள் ஒரு துறவியாக வேண்டும் என்ற அவசியமே இல்லை. இருப்பினும் உண்மையான சன்யாசிகள் மனோவலிமை பெற்றவர்களாகவே இருப்பார்கள். 

ஆனாலும் ஒரு சராசரியான சம்சாரி, இல்லறத்தில் இருப்பவர்,  மனோவலிமையுடனும், விவேகத்துடனும் நடந்துகொண்டு, இதுபோன்ற ஒரு மிகப்பெரிய தொகையினை, துச்சமாக நினைத்து,  வாங்க மறுப்பது என்பது சுலபமானது அல்ல. 

விவேகம், கருணை, நேர்மை, உள்ளுணர்வு இவை எல்லாமே அதற்கான சிறப்பினை உங்களிடமிருந்து மட்டுமே வெளிக்கொணர்ந்திட முடிகிறது. இதுபோல உங்களிடமிருந்தே வெளிப்படும் விலைமதிப்பற்ற மிக நல்ல மனிதம் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் மலர்ச்சியைத் தோற்றுவிக்கும். அதையே நான் தெய்வீகத்தன்மை, ஆன்மிகம், ஞானமார்க்கம் என்கிறேன்.

ஒருசில பக்திப்பாடல்கள், ஸ்லோகங்கள், பிரார்த்தனைகளை செய்வதோ, ஒருசில புனித யாத்திரைகளை மேற்கொள்வதோ மட்டுமே ஆன்மிகம் அல்ல.  நல்ல மனிதத்தன்மைகளின் மதிப்பினை நமக்குள் உருவாக்கிக் கொண்டு நாம் வாழவேண்டும்.

இது தான் உண்மையான நம்பிக்கை என்பது. நம்பிக்கை மிகவும் அவசியமானது. உங்களின் மேல் உங்களுக்கு நம்பிக்கையும், உங்களைச்சுற்றியுள்ள பிறரின் மேல் உங்களுக்கு நம்பிக்கையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லோருமே மிகவும் மோசமானவர்களாக இருக்கும் போது, நான் ஒருவன் மட்டும் எப்படி  சரியானவனாக இருக்க முடியும்? என்பதே நாம் பாதி நேரங்களில் நமக்குள் நினைக்கிறோம். எல்லோருமே மிகவும் மோசமானவர்கள் என உங்களின் உள்மனது நினைக்கும்போது, லஞ்சம் வாங்குவது ஒன்றும் தவறல்ல என நீங்களே உங்கள் மூளையில் நினைத்து, சமாதானம் செய்து கொள்ளத் தொடங்குகிறீர்கள்.

இது தான் வாழ்க்கையின் மிகச்சரியான பாதை, எல்லோரும் நீந்திச்செல்லும் இந்த பாதையிலேயே நாமும் நீச்சல் அடித்துச்செல்ல வேண்டும் என நினைக்கிறீர்கள். 
தாங்கள் உயிருடன் வாழ  நினைக்கையில் இவை போன்ற எண்ணங்கள் ஏற்படுவது மிகவும் யதார்த்தமே.

நீங்கள் இப்போது எழுந்து நிற்க விரும்பினால், அதற்கான மனோவலிமை  உங்களுக்குள் உற்பத்தியாக வேண்டியுள்ளது.  அதுவே தான் தியானம் என்பதாகச் சொல்லப்படுகிறது. 
தியானம் மட்டுமே மனோவலிமையைத் தர வல்லது. அதுவே தங்களுக்கு முழுமையான நேர்மையான பூர்ணத்துவத்தை  அளிக்கிறது. அதற்கான உள்ளுணர்வை அனுமதிக்கிறது. வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெளிவாக நாம் அடைய வேண்டியதை அளிக்கிறது. இது மிகவும் அத்யாவசியமான தேவை என நான் உணர்கிறேன். 

நான் ஏற்கனவே சொன்னது போல, இத்தகைய கொடும் குற்றம் புரிந்த குற்றவாளிகளுடன் நான் பேசிப் பழகிக்கொண்டிருந்தபோது [உண்மையில் அவர்களை இதுபோல கொடும் குற்றவாளிகள் என்றே நான் கூறக்கூடாது தான்] சரியான வழிகாட்டுதல் இல்லாத இளைஞர்கள் என்றே எனக்குத் தோன்றியது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் ஓர் அழகினைக் காண முடிந்தது.    

தங்களின் மன அழுத்தத்துடன் கூடிய தவறான கருத்துக்களை உருவாக்கிக் கொண்ட இவர்களை அதிலிருந்து விடுவித்துக் கொள்ள எந்தவிதமான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் அளிக்கப்படாமல் போனதே இவர்கள் குற்றவாளிகளாக மாறக் காரணமாக அமைந்துள்ளது.

மனக் கவலைகளிலிருந்தும் மன அழுத்தத்திலிருந்தும் நம்மை விடுவிக்க  போதுமான அன்புள்ளவர்களும், பெரும் கருணை மனம் கொண்ட நல்ல மனிதர்களும் இந்த உலகிலும்,  இந்த மனித சமுதாயத்திலும், நம்  அக்கம்பக்கத்திலும் உள்ளார்கள்; அவர்கள் நம்மை நிச்சயமாக கஷ்டங்களிலிருந்து காப்பாற்றி நமக்கு உறுதுணையாக நிற்பார்கள் என்ற நம்பிக்கையை பெறக்கூடிய வாய்ப்பினை அவர்களுக்கு நாம் தரவில்லை என்பதே உண்மை. உன்னுடன் தோளோடு தோள் நின்று உன்னைக்காக்க, உனக்கு உதவிட, உனக்கு ஆறுதல் அளிக்க மனிதர்கள் ஆங்காங்கே இருக்கிறார்கள்.  இந்த நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் சமுதாயத்தில் நாம் திரும்ப புதிதாகத் தோற்றுவிக்க வேண்டும். இதுபோல நாம் செய்யாது போனால், நம் நாட்டிற்கே உரித்தான தர்ம சாஸ்திரங்கள், நீதி நெறிகள் முதலியன முற்றிலுமே இல்லாமல் மறைந்து போகும்.  

மனிதன் மேல் மனிதனுக்கும், ’மனிதம்’ மேல் மனிதனுக்கும், மக்களின் மேல் மக்களுக்கும், சமுதாயத்தில் நம்பிக்கை என்னும் பண்புகள் இல்லாது போய்விடுமானால், பிறகு தர்ம சாஸ்திரம்  நீதி நெறிகள் என்பதெல்லாம் சமுதாயம் என்ற செடியினில் பூத்துக்குலுங்கும் வாய்ப்பே இல்லாது போகும். எனவே நம் எதிரில் உள்ளவர் மீதும், நம்மைச்சுற்றியுள்ள மனிதர்கள் மீதும், நாம் இதுவரை பார்க்காதவை, கேட்காதவை மீதும், நமக்கு இதுவரை தெரியாதவர்கள் மீதும், நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் தான் நம்மை காத்து உதவிவருகிறார்கள் என்பதை உணர வேண்டும். 

இந்த நம்பிக்கையைத்தான் நம்மில் சிலர் கடவுள் என்கிறோம், வேறு சிலர் இயற்கை என்கிறோம்,  அதிசயமான ஆச்சர்யமான, மாபெரும் சக்தி என்கிறோம். சுகமான சுபமான சந்தோஷமான நிம்மதியான ஆரோக்யமான சமுதாயத்திற்கு இவையெல்லாமே அவசியமான தேவைகளாகும். ஆகையினால் இந்தியாவை முன்னேற்றமாக்க விரும்பும் தன்னார்வத் தொண்டர்கள், சமுதாயத்தில் பலகீனமானவர்களையும்,குற்றம் புரிவோரையும் மட்டுமே சுத்தமாக்கினால் போதாது. சமுதாயத்தில் சந்தோஷமான அலைகளை ஏற்படுத்தவும் அவர்கள் முக்கியமாக செயல்பட வேண்டும்.

இன்று யுனைடெட் நேஷன்ஸ் GDH என்பது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.
[அதாவது ஒட்டுமொத்த அத்யாவஸ்யமான சந்தோஷம் = GDH]  இதுவரை ஒட்டுமொத்த அத்யாவஸ்யமான உற்பத்திகள் என்று தான் அவர்கள் பேசி வந்தனர். இனிமேல் அது போன்ற பேச்சுகள் இருக்காது. நமது அண்டை நாடான பூடானில் ஒட்டுமொத்த அத்யாவஸ்யமான சந்தோஷம் என்பது அதிகமாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
சமீபகாலம் வரை கூட, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட, கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்த சமுதாயமாகவே பூடான் இருந்திருந்தாலும், அதன் சந்தோஷத்தினை அது தன்னிடம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  இன்றும் கூட நம் இந்திய கிராமங்களில் வாழும் மக்கள் பலரும் மிகுந்த சந்தோஷத்துடன் உள்ளனர். அவர்களிடம் உள்ள ஒரே ஒரு டம்ளர் கஞ்சியோ கூழோ மோரோ என்றாலும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத்தயாராகவே உள்ளனர். 

அவர்களிடம் கருணை உள்ளமும், மனித நேயமும் உள்ளன. அவர்களிடம் நீங்கள் செல்லும் போது, நீ யார்? உன்னுடைய பின்னனி என்ன? நீ எங்கிருந்து வருகிறாய்? உன்னுடைய படிப்பு என்ன? உன் பெயர் என்ன? என்று ஏதும் கேட்காமலேயே முதலில் “ வாங்கோ” என்று அன்புடன் அழைத்து “இந்தா ஒரு டம்ளர் டீ சாப்பிடுப்பா அல்லது கொஞ்சம் மோராவது சாப்பிடுப்பா” என்கின்றனர்.  அதன் பிறகே ”நீ யாருப்பா? எங்கிருந்து வருகிறாய்? செளக்யமாக சந்தோஷமாக இருக்கிறாயா?” என்கிறார்கள்.

முதலில் அவர்களிடம் அன்பானதொரு வரவேற்பும் உபசரிப்பும் உள்ளது. தன்னிடம் உள்ள ஏதோ ஒன்றைப் பகிர்ந்து அளிக்க விரும்புகிறார்கள். அதன்பிறகே கேள்விகள் தொடர்கின்றன. நவ நாகரீகமான டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் வாழும் நமக்கு, நம் அண்டை வீட்டுக்காரரைப்பற்றி கூட ஏதும் தெரியாமல் உள்ளது.

இந்தியாவை முன்னேறச்செய்யும் தன்னார்வத்தொண்டர்கள், முதலில் இந்த முட்டுக்கட்டைகளை நீக்கப் பாடுபட வேண்டும். உறைந்த பனிக்கட்டி போல் பயனற்று உள்ள இவர்களை உள்ளத்தால் ஒருங்கிணைத்து உருகச் செய்ய வேண்டும். முதலில் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை இணைக்க வேண்டும் அதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இணைக்கப்பாடுபட வேண்டும். சமுதாயங்கள் இணைந்து செயல்படுவது என்பது மிகவும் சந்தோஷம் தரும் விஷயமாகும். 

பெண்களின் கருக்கலைப்புகளைப் போக்கவும்,  லஞ்ச லாவண்யங்களை ஒழிக்கவும் மட்டுமின்றி, மகிழ்ச்சி அலைகளை மக்களிடம் தோற்றுவிக்க இது மிகவும் உதவிடும். இந்த மகிழ்ச்சி அலைகளே, மனித சமுதாயத்தில் இப்போது மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கும், மன நோய்க்கு  தடுப்பு மருந்தாகும்.

இந்தியாவை முன்னேற்ற நினைக்கும் தன்னார்வத் தொண்டர்களுக்கு, இந்த உன்னதப்பணியினை மேற்கொள்ள, தேவையான மனோ வலிமையையும் உற்சாகத்தையும் தந்திட எல்லாம் வல்ல இறைவனை நான் பிரார்த்தித்து இத்துடன் என் உரையினை முடித்துக்கொள்கிறேன். ’வாழும் கலை’ என்பது அரசுத்துறையைச் சேராத அமைப்புகளில் ஒன்று மட்டுமே. நான் இந்த ’வாழும் கலை’ என்ற பிடிக்குள் மட்டும் அடங்கியவன் அல்ல. 

இந்த ‘வாழும் கலை’ போன்ற எவ்வளவோ அமைப்புகள் உள்ளன. நான் இந்த ‘வாழும் கலை’ யைத்தவிர பிற அமைப்புகளுடனும் நெருக்கமான தொடர்புகள் உடையவன். இந்த ‘வாழும் கலை’ க்கு மட்டுமே சொந்தமானவன் அல்ல. எனவே, நீங்கள் எல்லோருமே என்னைப்போலவே தான் நினைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். 

’வாழும் கலை’யைத்தவிர மற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களும் இங்கு கூடியுள்ளனர்.  நாம் எல்லோருமே பாடுபட நினைப்பது ஒரே நோக்கத்திற்காக மட்டுமே. நாம் எல்லோருமே ஒரே மனித நேயக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து பணியாற்றி இந்த பூமியில் சந்தோஷத்தையும் புன்னகைகளையும் பூக்கச் செய்வோமாக!

நன்றி!