நல்லவர்களின் மௌனம்....


20 - டிசம்பர் - 2012 பெங்களூர் - இந்தியா

கேள்வி: மனிதர்கள் நிறைந்த இந்த உலகத்தைப் பார்க்கும் போது, அக்கறை கொள்ளும் உலகமாக எனக்குத் தெரியவில்லை. மக்களிடம் நற்குணம் உள்ளது,ஆனால் அவர்கள் தங்களது பலவீனம், பேராசை,பாதுகாப்பின்மை போன்றவற்றால் வழி நடத்தப்படுகின்றார்கள். 

இந்த பூமி அனைத்தும் அன்பினால் ஆக்கப்பட்டது ஆனால் சில சமயங்களில் இந்த உலகில் இரக்கம் கொள்வது, மிகவும் கடினமாக உள்ளது. இதுவே மக்களை ஒரு நாள் தீவிரவாதியாக,  கொலை செய்யத் துவங்கவும் அப்பாவி ஒருவரை கற்பழிக்கவும் தூண்டுகின்றது என்று நினைக்கின்றேன். இந்த உலகின் மீது தொடர்ந்து அக்கறை கொள்வது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: எந்த ஒரு கேள்விக்கும் ஒரே ஒரு சரியான பதில் தான் இருக்க முடியும்.   இரண்டு சரியான விடைகள் இருக்க முடியாது. இதை நீங்கள் கேள்வியாக எடுத்துக் கொண்டால் நீங்களே விடை தேட வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். அப்படியல்லாமல் ஒரு பாதையாக எடுத்துக்கொண்டால், நீங்கள் இதில் பல முறை நடைப்பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு முறையும் உங்களுக்கு புது விடை கிடைக்கும்.

மேலும் எதையும் பொதுப்படையாக்காதீர்கள். மக்களிடம் அன்பு இல்லை;இரக்கமுள்ள மனிதர்களே இந்த கிரகத்தில் இல்லை என்றெல்லாம் நினைக்க வேண்டாம். அது தவறு.  எல்லோரும் சுயநலவாதிகள் என்று பொதுப்படையாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் ஊழல் செய்பவர்கள் என்று முத்திரை குத்த முடியாது. சுயநலமில்லாமல் இந்த சமுதாயத்திற்கு சேவை செய்யும் மக்கள் பலர் இருக்கின்றனர்.   

குஜராத் மாநிலத்தில் IAS அதிகாரியாக இருக்கும் வாழும் கலை ஆசிரியர் ஒருவரைப்பற்றி நான் சொல்ல விரும்புகின்றேன். ஒரு தொழிலதிபர் அவருக்கு 51 கோடி ரூபாய் அளிக்க முன் வந்தார். அவர் செய்ய வேண்டியதெல்லாம் அந்த தொழிலதிபர் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த நிலத்தினை அவருக்கே உரிமையாக வழங்குவதற்கென ஒரே ஒரு கையெழுத்து  போட வேண்டியது தான். இது வெறும் சம்பிரதாயம்தான். இது வழக்கத்திற்கு மாறானது இல்லை என்று அவர் தன செயலை எளிதாக நியாயப்படுத்தி இருக்கலாம்.அல்லது இந்த 51 கோடி ரூபாய் எனக்கு வேண்டாம். நான் இதை ஏழை மக்களுக்கு அளிக்கிறேன் என்று சொல்லி இருக்கலாம். இது போல் பல்வேறு நியாயங்களைச் சொல்லி சமாளித்திருக்கலாம். 

அரசாங்க வேலையில் இன்னும் மூன்று தலைமுறை உழைத்தாலும் அவரால் 51 கோடி பணம் சேர்க்க முடியாது. அது ஒன்றும் சிறு தொகை இல்லை. இருந்தாலும் இந்த மனிதர் “'இல்லை நான் இதை ஏற்க மாட்டேன்”' என்று உறுதியாக நின்றார். இது போன்ற மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர். மக்கள் ஆன்மீகப் பாதையில் வரும் வரையில் அவர்கள் நுண்ணறிவுடன் இயங்க மாட்டார்கள். 

ஆகவே தான் நாம் இந்த ஞானத்தினை ஒவ்வொரு வாசலுக்கும், ஒவ்வொரு பள்ளிக்கும், ஒவ்வொரு இதயத்திற்கும் கொண்டு செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இதனை நீங்கள் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும். நான் சொன்னது போல் இந்த உலகில் தீமை இருப்பது தீயவர்கள் இருப்பதனால் அல்ல. நல்லவர்கள் மெளனமாக இருப்பதனால் தான்.  

உங்களுக்கு உங்களையே நன்றாகத் தெரியுமா? நீங்கள் எப்போது கருணையுடன் நடந்து கொள்வீர்கள் எப்போது கடுமையாக இருப்பீர்கள் என்பது உங்களுக்கே தெரியாது. சில நேரங்களில் நீங்கள் பிறரிடம் கடுமையாக நடந்து விட்டு"அவர்களுக்கு வேண்டும், அவர்களிடம் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் "என்று சொல்லி அதனை நியாயப்படுத்துவீர்கள். சில நேரங்களில் நீங்கள் கருணையோடு நடந்து கொள்ளும்போதும் அந்த கருணையையும் நியாயப் படுத்துவீர்கள், இல்லையா? 

ஆக, உங்களது உணர்வுகள், உங்கள் நடத்தை பற்றியே உங்ககளுக்கு சரியாகத் தெரியாதபோது நீங்கள் ஏன் மற்றொருவரை,அல்லது மற்ற அனைவரையும் மதிப்பீடு செய்ய வேண்டும்? இந்த உலகம் முழுவதும் இரக்கமில்லாத, ஊழல் நிறைந்த தீயவர்களால் நிறைந்துள்ளது என்று ஏன் நினைக்க வேண்டும்? அது உண்மையில்லை. நீங்கள் உங்கள் கருத்தை மறு பரிசீலினை செய்ய வேண்டும்.

நீங்கள் மிகவும் நல்லவர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள? நீங்கள் நல்லவர் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். உங்களுடன் பழகியவர்களிடம் உங்களைப் பற்றிக் கருத்துக் கேட்டுப் பாருங்கள் அது உங்கள் எண்ணத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கலாம். நீங்கள் மிகவும் சுயநலமானவர் என்று வேறொருவர் உங்களிடம் சொன்னால் உங்களுக்குப் பிடிக்குமா? மிகவும் சுயநலம் மிக்கவர், எதிர்மறை உணர்வுகள் உள்ளவர் என்று யாரேனும் சொன்னால், நீங்கள் உடனே, "பாருங்கள், என்னிடம் நல்ல உணர்வுகளும் உள்ளன" என்று சொல்வீர்கள் இல்லையா? 

நல்ல இதயமும், நல்ல குணங்களும் இல்லாத மனிதரே இல்லை என்று சொல்லலாம்.நற்குணங்கள் இல்லாத மனிதனே இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.அவை சில நேரங்களில் மன அழுத்தம், அறியாமை போன்றவற்றின் அடியில் புதைந்து விடுகின்றன.பெண்களிடம் தவறாக நடந்து குற்றம் புரிந்தவர்கள் கூட இப்பொழுது "நான் தவறு செய்து விட்டேன். தயவு செய்து என்னை தூக்கிலிடுங்கள் "என்று சொல்கிறார்கள். விழிப்புணர்வு இல்லாமல் அறியாமை என்னும் மேக மூட்டத்தில் சிக்கி தவறு செய்து விட்டனர். இப்பொழுது மிகவும் வருந்தி துன்பப் படுகின்றார்கள். எவ்வளவு வேதனை? எவ்வளவு குற்ற உணர்வு? ஆகவே தான் நாம் அகண்ட கண்ணோட்டத்தோடு பார்க்கும் போது குற்றவாளிகளிடம் கூட இரக்கம் கொள்ளாமல் இருக்க முடியாது.

சில நேரங்களில் நீங்களும் சில தவறுகள் செய்கிறீர்கள். யாரோ ஒருவர் அதனையே எந்த நேரமும் பிடித்துக்கொண்டு அதை சொல்லிக்கொண்டிருந்தால் உங்களுக்குப் பிடிக்குமா? நிச்சயமாக இல்லை. அதை விட்டுத் தள்ளிவிட்டு மேலே செல்லுங்கள் என்று நீங்கள் சொல்வீர்கள் இல்லையா? இந்த உண்மையையை நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

எல்லாம் நீங்கள் இந்த உலகத்தை எப்படிப் பார்க்கின்றீர்கள் என்பதில் இருக்கின்றது. எனவே உங்கள் பார்வை எப்படியோ அப்படியே உங்கள் படைப்பும் இருக்கும் என்று ஒரு பழமொழி சொல்கின்றது.

கேள்வி: மகாபாரதத்தில் சிறந்த அறிவாளியான பீஷ்மர் பல விஷயங்களில் அமைதியாக இருந்ததுடன் துரியோதனின் பக்கத்தில் இருந்து போரிடவும் முடிவு செய்தது ஏன்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நான் மகாபாரதத்தைப் பற்றி பேச வேண்டும் என்று ஏன் விரும்புகின்றீர்கள்?    நடந்தது என்னவென்று பீஷ்மர் ஏற்கெனவே சொல்லி இருக்கின்றார். அவர் மிகவும் பணிவானவர். துரியோதனின் உயர்ந்த அதிகாரத்திற்குள் நல்ல மனிதர்கள் அனைவரும் சிக்கி இருந்தனர்.அது தான் பிரச்சினை. நல்லவர்கள் தவறான கட்சியில் தவறான தலைமையின் கீழ் இருக்கின்றனர். நல்லவர்களின் தலைமையின் கீழ் சில தீயவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். என்ன செய்வது? அப்படித் தான் நடக்கின்றது. 

ஒவ்வொரு கட்சியும் குற்றவாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட இடம் அளிப்பது  ஏனென்று தெரியுமா? அவர்களிடம் நிறைய வாக்குகள் உள்ளன. அவர்களிடம் நிறைய பண பலமும் உடல் பலமும் உள்ளது. இடம் கொடுத்தால் அவர்கள் ஜெயித்துக் காட்டுவார்கள். இந்த குடியரசு நாட்டில் அனைத்தும் எண்களின் விளையாட்டாக இருக்கின்றது. அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது தவிர்க்க முடியாததாக இருப்பது ஏனென்றால் நல்லவர்கள் எல்லாம் "வாக்களிப்பது போன்ற வேலைகளுக்கெல்லாம் யார் போவார்கள்? எல்லோரும் ஊழல் நிறைந்தவர்கள் எல்லா கட்சிகளுமே பயனற்றவை" என்று சொல்லிக்கொண்டிருப்பது தான்.

மக்கள் இவ்வாறு தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தாமல் இருப்பதே காரணம். நல்லவர்கள் தங்களுக்கென்று வாக்குகளை சேமிக்க வேண்டும். மக்களிடம் அதிக வாக்குகள் பெரும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால் எந்த கட்சியும் குற்றவாளிகளுக்கும், ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளுக்கும் தேர்தலில் இடம் கொடுக்காது. சேவை மனப்பான்மை உள்ளவர்களைத் தேடி தேர்தலில் இடம் அளிப்பார்கள்.

கேள்வி: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியினால் மக்கள் அதிக கோபம் கொண்டுள்ளனர்.  இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக பட்ச தண்டனை கோருவது நியாயமா? பெரும்பாலான மக்கள் பயத்தினால்தான் நல்வழிப்படுகின்றார்களா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: கடும் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட பலருக்கு அந்த தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை..கடும் குற்றம் புரிந்து சிறையில் இருக்கும் தீவிரவாதிகளுக்குக் கூட இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 31 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்ட பின் கசாப் என்பவனுக்கு அதிக பட்ச தண்டனை அளிக்கப்பட்டது. ஒரு தீவிரவாதிக்கென  செலவழிக்கப்பட்ட 31 கோடி ரூபாயில் எத்தனை கிராமங்களை முன்னேற்றமடையச்  செய்திருக்கலாம் என்று எண்ணிப்பாருங்கள். எத்தனை சாலைகளும் வீடுகளும் மின்சாரம், மற்றும் வெளிச்சம் பெற்றிருக்கலாம் என்று யோசனை செய்யுங்கள். வெறும் சட்டம் மட்டும் போதாது. சமுதாயத்தில் மாற்றமும் ஆட்சியாளர்கள் மற்றும் சட்டம் இயற்றுபவர்கள் மன நிலையில் மாற்றமும் கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியம். சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: மிகுந்த கவனத்தோடு செயல்படும் ஒருவரோடு நான் தொடர்பு கொண்டுள்ளேன். பந்தத்தில் சிக்கி விட்டால் அது தன் ஆன்மீகப் பாதையை பாதிக்குமென்று  நினைத்து  பயப்படுகின்றார். இது சரியா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: யாரையும் அவர்களது அன்பை நிரூபிக்க வேண்டுமென்று சொல்லாதீர்கள்.  அப்பொழுதுதான் இது போன்ற நிலை வரும். நாம் ஒருவரிடம் அதிக அளவு அன்பு செலுத்தும் போது அவர்களுக்கு அதை எப்படிக் கையாளுவது என்றும் அதற்கு எப்படி பதில் கொடுப்பது என்றும் தெரிவதில்லை. இல்லையா? அவர்களிடம் குழப்பம் ஏற்பட்டு விடுகின்றது. அன்பைப் பெற தெரிந்து கொள்ளாததினால் பலர் அன்பை அளிக்கவும் மறந்து விடுகின்றனர்.  அதனால் தான் இவற்றில் எல்லாம் சிக்கி விடாதீர்கள் என்று நான் சொல்கின்றேன்.     

மனதை தளர்வாக வைத்து மகிழ்ச்சியோடு இருங்கள். நான் அனைவரையும் நேசிக்கின்றேன்  அனைவரும் என்னை நேசிக்கின்றனர் என்று நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெளிப்படுத்தப் பட வேண்டியவை மிக இயல்பாக வெளிப்படும். அது தானாக நிகழும். யாராவது ஒருவர் நான் பந்தத்தில் சிக்கிவிடுவேன் என்று பயப்படுவதாகச் சொன்னால் அவர்கள் ஏற்கெனவே எங்கேயோ பந்தத்தில் சிக்கியுள்ளனர் என்று அர்த்தம்.

எப்பொழுது ஒருவரை நாம் அவரது வார்த்தைகளைத் தாண்டி புரிந்து கொள்ளுகின்றோமா அப்பொழுதான் உண்மையான தொடர்பு உண்டாகின்றது. ஆனால் நாம் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் போது நாம் மிகவும் மேலோட்டமான நிலையிலேயே இருக்கின்றோம். இந்த மேலோட்டமான நிலை நீண்ட காலத்திற்கு பயன் தராது. 
உங்களுடைய உறவு வார்த்தைகளையும், உணர்ச்சிகளையும் தாண்டி இருக்க வேண்டும்.  ஏனென்றால் அவை இரண்டுமே மாறக்கூடியவை. அப்படி இருந்தால் உங்களுடைய உறவு  ஒரு நல்ல கடமையுணர்வோடு கூடிய உறவாக அமையும் .நட்பு அல்லது திருமணம் போன்ற எந்த உறவாக இருந்தாலும் உணர்ச்சிகளை தாண்டி அமைந்தால் மட்டுமே அது நிலையானதாக இருக்கும். 

ஒவ்வொரு உணர்ச்சியையும், எண்ணம் மற்றும் வார்த்தைகளின் ஒவ்வொரு சங்கிலியையும்  நீங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டால், நீங்கள் எதனாலும் அசைக்க முடியாத, உடைக்க முடியாத ஒரு உறவு நிலைக்கு செல்ல முடியும். 

கேள்வி: குருதேவ், விவாகரத்து பெறுவதென்பது ஆன்மீகப் பாதையில் ஒரு தடையாக அமையுமா? நான் திருமணமானது முதல் என் வாழ்வில் மிகவும் நிலை குலைந்து உள்ளேன். 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் உங்களுடைய நூறு சதவீத முயற்சியையும் செய்யுங்கள். உங்களது திருமண உறவு சரியாகிவிட்டால் நல்லது. அப்படி உங்கள் முயற்சி பயனளிக்காமல் நீங்கள் இருவருமே துன்பத்தில் இருந்துகொண்டு சிறிதளவு மகிழ்ச்சி என்பது கூட இல்லாமல் இருந்தால், அந்த துன்பத்தில் தொடர்ந்து இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. அப்பொழுது நீங்கள் ஒருவருக்கொருவர் "நீ உன்னுடைய பாதையில் செல். நாம் இருவரும் இனி நண்பர்களாகவே இருப்போம்" என்று சொல்லி கொள்ளலாம். மேலோட்டமான உணர்ச்சிகளை வைத்து எந்த முடிவும் எடுக்காதீர்கள். அமைதியான மனதோடு யோசித்து உங்களுக்கு என்ன தேவை என்று பாருங்கள்.. 

கேள்வி: நாம் அன்பை உணர்ந்துகொள்வதற்காக மட்டுமே இந்த பூமிக்கு வருவதாகவும், சொர்க்கத்தில் அன்பு என்பது  இல்லையென்றும் சொல்லப் படுகின்றது. அப்படியென்றால் ஏன் ஒவ்வொருவரும் சொர்கத்திற்கு செல்ல ஆசைப்படுகின்றனர் 

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஏனென்றால் அவர்கள் உண்மையான அன்பை அறிந்து கொள்ளாததினால் தான். அவர்கள் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை அனுபவிக்க வில்லை தெய்வீக அன்பை ஒரு முறை சுவைத்து விட்டால் அவர்கள் அளவிட முடியாத திருப்தியை அடைவார்கள். நாரத பக்தி சூத்திரத்தில் நாரதர் "Tripto Bhavati" "தெய்வீக அன்பை உணர்ந்த உடனே ஒருவர் மிகுந்த திருப்தி நிலையை அடைகின்றார். 

கேள்வி: குருதேவ்,நேற்று நீங்கள் "சமத்துவத்தோடு போரிடுங்கள்" என்று சொல்லி இருக்கின்றீர்கள். நாங்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களிடம் அந்த  விருப்பம் உண்டானாலே போதும் அது நிகழத் தொடங்கி விடும். யாரோ ஒருவர் மீதுள்ள வெறுப்பினால் இல்லாமல் ஒரு நல்ல காரணத்திற்காக நீங்கள் போரிடும் போது உங்களது மனமும் மூளையும் மிகுந்த விழிப்போடு இருக்கும். மக்கள் கோபத்திலும் வெறுப்பிலும் இருக்கும் போது மூளை வேலை செய்யாது. அல்லது அது தவறான திசையில் வேலை செய்யும்.

கேள்வி: ஒருவர் தன் இறை வழிபாட்டில் மிகவும் உண்மையுள்ளவராக இருக்கும் போது அவர் உள்ளிருந்து பதில்கள் உருவாகி வெளிவரும்.ஆனால் அவற்றில் எது உண்மையான பதில் எது வெறும் கற்பனையானது என்று எப்படி வேறுபடுத்துவது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்களுக்குக் காலம் பதில் சொல்லும்.
கேள்வி: நான் M.Tech. தேர்வு எழுதியுள்ளேன். மிகுந்த போட்டி நிறைந்த ஒன்று. நான் விரும்பும் கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டால் என் எதிர்காலம் பாழாகிவிடும். நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காவிட்டாலும் கூட நான் வாழ்வில் வெற்றி பெற முடியுமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நிச்சயமாக. உங்கள் வெற்றி முழுவதையும் ஒரு சிறு நிகழ்ச்சியிலோ, ஒரு நிகழ்விலோ குறுகியதாக்கி விடாதீர்கள். ஏதோ ஒரு விஷயத்தில் தோல்வி வந்த பின்னர் கூட 
நீங்கள் வாழ்க்கையில் உண்மையில் வெற்றி பெறலாம்.

கேள்வி: குருதேவ், புது விஷயங்களை கற்கவும் கிரஹித்துக் கொள்ளவும் என்னால் முடிகின்றது. ஆனால் என் உற்சாகம் பாதியிலேயே கரைந்து விடுகின்றது. அதன் விளைவாக நான் எல்லாம் தெரிந்திருந்தும் எதிலும் முழுத் தேர்ச்சி பெறவில்லை. நான் உங்களைப் போல அனைத்திலும் சிறந்தவனாவது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நிறுத்தாமல் தொடர்ந்து செல்லுங்கள். எல்லா முயற்சியையும் செய்யுங்கள்.  முயற்சி செய்தல், முயற்சி அற்று இருத்தல் என்னும் இரண்டும் கலந்ததே வாழ்க்கை. தினமும் சிறிது நேரம் முழுமையாக முயற்சி எதுவுமற்று இருங்கள். அதுவே தியானம். பின்னர் நூறு சதவீதம் முயற்சி செய்யுங்கள். ஆழ்ந்த ஓய்வுக்குப் பின்னர் வேகமான செயல்பாடு. 

நீங்கள் தேவையான ஓய்வு எடுக்காவிட்டால் உங்கள் செயல்பாடு விரைவானதாக இருக்காது.   பற்றில்லாத நிலை உங்களுக்கு இல்லையென்றால் நீங்கள் உண்மையில் முழுவதும் பற்று உள்ளவராகவும் முடியாது. பற்றுதல் பற்றில்லாமல் இருத்தல், நூறு சதவீத முயற்சி முயற்சியில்லாமல் இருத்தல் என்பது போன்ற எதிர்மறைகள் கலந்ததே வாழ்க்கை.  .  

கேள்வி: சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றது. பூமி சூரியனை சுற்றி வருகின்றது. சிலர் பணம் மற்றும் பதவியைச் சுற்றி வருகின்றனர். நான் இப்பொழுது உங்களைச் சுற்றி வருகின்றேன். இந்த சுற்றுதல்களுக்கெல்லாம் முக்கியத்துவம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்பதை இப்பொழுது நீங்களே அறிந்து கொண்டு விட்டீர்கள் இல்லையா? ஏன் அப்படி செய்கிறீர்கள் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை நீங்களே விளக்கிச் சொல்லுங்கள். சூரியன் மீது பூமிக்கு உள்ள ஈர்ப்பினால் தான்  அது அதனைச் சுற்றி வருகின்றது. நிலவுக்கு நம் மீதுள்ள ஈர்ப்பினால் தான் நம் பூமியைச் சுற்றி வருகின்றது என்று நான் நினைக்கின்றேன். 

கேள்வி: குருவை முழுமையாக புரிந்து கொண்டு அவரிடமிருந்து ஞானத்தை பெறுவதற்கு ஒரு சீடன் குருவுடன் எப்படி இருக்க வேண்டும்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இயல்பாக இருங்கள். நீங்கள் உங்கள் நெருங்கியவர்களுடன் எப்படி இருப்பீர்களோ அதே போல் இயல்பாக உங்கள் குருவுடனும் இருங்கள்.