விழித்தெழுந்து நிகழ் தருணத்தில் இருங்கள்

வெள்ளிக்கிழமை, 19 பெப்ரவரி 2016,


 பெங்களூரு, இந்தியா

அர்ஜுனன், நடுங்கிக்  குலுங்கிக் கொண்டிருந்தான். ஸ்ரீ கிருஷ்ணர் புன்முறுவலுடன், " ஞான ஒளி பெற்ற சிறந்த அறிவாளியைப் போன்று பேசு.  உன்னைப் பற்றியே நீ வெட்கப்பட வேண்டிய  உன்னுடைய நிலையினைப் பார். சற்றும் துன்பம் அடையத் தேவையில்லாத ஒன்றைப் பற்றி நீ துன்புற்றுக் கொண்டிருக்கின்றாய். உன்னுடைய  துன்ப நிலை  ஞானத்தைச்  சுட்டிக்  காட்டவில்லை.  இப்போது இங்கே இரு " என்று கூறினார். ஏசுநாதரும் இதையே " எனக்கு முன்னர் வந்தவர்களெல்லாம் கொள்ளைக்காரர்கள், திருடர்கள் என்று கூறினார். இவ்வாறு கூறியதில்   அவர் சுட்டிக்காட்டிய பொருள் என்ன? முன்னர் வந்த வர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் அல்லது திருடர்கள் என்பதில்லை. அவர்கள் மக்கள்  மனதைத் திருடி விட்டனர் என்றே பொருள். அதனால் மக்கள் நிகழ் தருணத்தில் இருக்கவில்லை. மனம் கடந்த காலத்திலேயே கட்டுண்டு கிடக்கின்றது. இந்த க்ஷணத்தில் இருங்கள். இயேசு " நீங்கள் இப்பொழுது இங்கில்லாத மோசஸையும் மற்றவர்களையுமே  எண்ணிகொண்டு  அவர்களையே  புகழ்ந்து கொண்டிருக் கிறீர்கள். பின்னால் எப்போதோ வரப்போகும் தேவதூதனை எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். அவர்களது  தீர்க்க தரிசனத்தை  நிறைவேற்றவே  நான் வந்திருக்கின்றேன்" என்று கூறினார். விழித்தெழுந்து  நிகழ் தருணத்தில் இருங்கள்.

நமது இருப்பு மீழ் சுற்றானதா? எப்போதுமே இருளிலிருந்து  ஒளிக்கும், ஒளியிலிருந்து இருளுக்கும் சென்று கொண்டிருப்போமா?

ஆம். பிறப்பு இறப்பு எனும் மீழ் சுழற்ச்சியில்  அதுவே  நிகழும். பின்னர் அதனைத் தாண்டி விடக்கூடும். அதுவே  விடுதலை(முக்தி).  வெளியே ஓடி விட்டபின்னர்  அது விளையாட்டுத்தான்.  அது ஓர் தீவிரப் பிரச்சினை கிடையாது. ஓர் விளையாட்டு தான், உங்களுடைய சொந்த விளையாட்டு.

ஓர் பெரும் பிரச்சினை மற்றும் போர் என்று கருதப்படுவது ஞானம் பெற்ற பின்னர் ஓர் விளையாட்டாகவே தோன்றுகிறது. எதனாலும் உங்களுடைய நிறைவைக் குறைக்க முடியாது, ஏனெனில் மண்ணில் சிறிது விளையாடுவது உங்களை மிக அழுக்காக்கி விடாது அதனைக் கழுவிக் குளித்து களைந்து விடலாம் என்பதை  நீங்கள் அறிவீர்கள். ஈரமாவதற்கு  யாருமே துன்புறமாட்டார்கள். உங்கள் கால்களை நீரில் அமிழ்த்தினால் "ஒ! என் பாதங்கள் நனைந்து விட்டனவே!" என்று பதற மாட்டீர்கள். நீரிலிருந்து பாதங்களை வெளியே எடுத்து விட்டால் உடனேயே அவை காய்ந்து  விடும்.ஆனால்  இந்த முதிர்ச்சியை அடைவதற்கு சிறிது  காலம் எடுக்கும்.

வேதங்களில் சோம ரசம் ஏற்படுத்தும்  போதையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றது. போதை ஞான ஒளியிலிருந்து வேறுபட்டதா?

ஆம். சோ ரசம் என்பது  ஆழத்தில்  ஒரு மாறுபட்ட நிலையை உருவாக்குகிறது,  அது உங்களைப் பேரின்பத்தில் ஆழ்த்துகிறது. அவ்வளவு தான்.  இதற்கு மேல் கூற எதுவுமில்லை.

என் வாழ்க்கையில் அனைத்து பரப்புக்களிலும்  அஷ்ட வக்கிர கீதை ஓர் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. நமது மெய்யுணர்வில் எந்த நிலை இத்தகைய ஞான தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது?

எனக்குத் தெரியாது. அது பல நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது  என்பது  உறுதி. தூங்குவதற்கு முன்னர் கூட நீங்கள்  ஞானச்  செய்தி ஒன்றினைக் கேட்டுக்கொண்டே தூங்கலாம்.  தூக்கத்தில் கூட மெய்யுணர்வில் ஏதோ ஓர் நிலையில் அது உட்கிரகிக்கப் படுகின்றது.

யோக வசிஷ்டா கூட மிக அழகானது.அதையும் நீங்கள் கேட்க வேண்டும். இறைவன், வாழ்க்கை மற்றும் மெய்யுணர்வு பற்றிய கோட்பாடுகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு உண்மை என்பது பரந்த வான்வெளியினைப் போன்று உங்களில் மலரும். இறைவனுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, சாத்தான் இவை பற்றியெல்லாம் பேசும் அறிஞர்கள் மற்றும் சமய வல்லுனர்கள் ஆகியோர் அனைவரும் யோக வசிஷ்டாவினைக் கவனமாகக் கேட்டறிய வேண்டும். உலகெங்கும் இருக்கும் விஞ்ஞானிகள் இந்த இறை ஞானத்தினை மிகவும்  விரும்புவர். இது யாராலும் மறுக்க முடியாத ஒன்று ஆகும். இந்த மெய்ஞானப் பரப்பில் நீங்களும் ஓர் அங்கமாவீர்கள். நீங்கள் கடவுளின் ஓர் அங்கமாகி  அதிலிருந்து  தப்ப முடியாத நிலை ஏற்படும்.

ஆசை,  புத்தி மற்றும் ஈகோ ஆகிவையே தெளிவற்ற நிலையை ஏற்படுத்துகின்றன.உங்கள் ஆசைகளை ஓர் பத்து நிமிட நேரத்திற்கு உறைநிலைக்கு எடுத்துச் சென்றால் என்ன ஆகிறது? ஒன்றுமில்லாத நிலை ஏற்படுகிறது. அறிந்து கொள்ள வேண்டும் என்றலையும் புத்தியை சில நிமிடங்களுக்கு உறைய விடுங்கள் அப்போது ஒன்றுமில்லாத நிலை ஏற்படும். எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் எண்ணங்களை உறைய விடுங்கள் அப்போது என்ன ஏற்படுகிறது. ஒன்றுமேயில்லாத நிலை தோன்றுகிறது. இது மிக எளிதானது. இதை விட எளிதாக எதுவுமே இருக்க முடியாது.

விஞ்ஞானிகள் யோகா வசிஷ்டாவினை மிகவும் விரும்புவர் ஏனெனில் அது உங்களைப் படிப்படியாக அழைத்துச் செல்கிறது. புத்தி மோசமானது அதை உறைய  விடு என்று கூறுவதில்லை, புத்தியை விடப் பெரிதான ஒன்றுள்ளது, ஆகையால் புத்தியை உறைய விடு என்று கூறுகிறது. இது போதும் என்று கருதுகிறேன்.

எப்போது உயிர் இப்பூமிக்கு வருகிறது? கருத்தரிக்கும் போதா அல்லது அதற்கும் முன்னதாகவா?

கருத்தரிக்கும் போது தான். கருத்தரிக்கும்போது உயிர் நுழைகிறது. மற்றொரு சாத்தியக்  கூறு கர்ப்பத்தின் ஐந்தாவது மாதத்தில் ஏற்படுகிறது. அபூர்வமான வேறொரு சாத்தியம் பிறக்கும் போது ஏற்படுகிறது. எனவே மூன்று சாத்தியக் கூறுகள் உள்ளன. கர்ப்பம் தரிக்கும் போது பெரும்பாலும் உயிர் நுழைகிறது. ஐந்தாவது மாதத்தில் ஓர் ஆத்மா அகன்று வேறொரு ஆத்மா நுழையலாம் அது போன்றே பிறக்கும் காலத்திலும் ஏற்படலாம். ஒருவர் ஓர் காரினை வாங்கி ஒன்பது மாதங்களில் வேறொருவருக்கு விற்பது போன்று அந்த சாத்தியக்கூறும் உள்ளது.

உடல் தோன்றி வளரத் துவங்கிய பின்னரே மனம் வளர்கின்றது, ஆனால் மனமே உடலை உருவாக்குகிறது என்றும் அறிகிறோமே?

மெய்யுணர்வு தான் முதலாவது;  பின்னர் அது உடல் உருவாக உதவுகிறது. மெய்யுணர்வு என்பது வெறும் ஊக்கியாகவே உள்ளது. அதனுடைய இருப்பினாலேயே உடல் வளர்கின்றது.

இறைவன் இறைவி ஆகிய இருபாலினரின் வடிவத்தைப் பற்றிக் கூற முடியுமா? இரு வடிவங்களுமே  நம்மிடம் இருப்பதை உணர முடியுமா?


நிச்சயமாக. தாய் மற்றும் தந்தை இருவரின் அம்சங்களும் உங்களிடம் உள்ளன.  சிவன் மற்றும் சக்தியின் பிரதிநிதியாகவே இருக்கின்றீர்கள். இவ்விரண்டும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் கண்டறியும்போது முழுமையாக உணருவீர்கள். இந்த சமநிலையை உணரும் போது நிறைவாகவே உணருவீர்கள். இந்த கண்டறிதலுக்கு முன்னர் நீங்கள் மற்றவர்களுடன் சகவாசத்தைத்  தேடிக் கொண்டிருப்பீர்கள். வாழ்க்கையில் முன்னேறிச் செல்லும் போது ஏதோ ஒரு கால கட்டத்தில் சிவனும் சக்தியும் நம்முள்ளேயே இருப்பதை அறியும் இந்த ஞானம் தானாகவே மலர்ந்து விடுகிறது. நீங்கள் எதுவுமே செய்ய வேண்டியதில்லை !!

சுய ஞானத்தின் சக்தி

புதன்கிழமை, 17 பெப்ரவரி 2016,

பெங்களூரு, இந்தியா


 என்னுடைய் தியானம் எவ்வாறு உலகைப் பாதிக்கும்?

உலகம் என்பது அதிர்வலைகள் நிறைந்தது. அதிர்வலைகள் நல்லிணக்கத்துடன் இருந்தால் மோதல்கள் இருக்காது. நாம் வெளிவிடும் அதிர்வலைகள் நல்லிணக்கமின்றி இருந்தால் நிச்சயமாக அது தொந்தரவுகளை உருவாக்கும். இதுதான் சாதாரண அனுபவம். சில சமயங்களில்  நீங்கள் செல்லும் ஓர் இடத்தில்  காரணமின்றி வேதனையடைவீர்கள். அதனுள் சென்று பார்த்தால், அந்த இடத்தில் தேவையில்லாத விவாதங்கள் அல்லது சண்டைகள்  நிகழ்ந்திருக்கும். ஆகவே நமது வாழ்க்கை, நமது நடத்தை நமது சூழல் அனைத்துமே அதிர்வலைகளால் பாதிக்கப்படுகின்றன.

சாம வேதத்தை பற்றி விவரித்துக் கூறினீர்கள். அதைக் கற்க முடியுமா?

சாம வேதத்தைக் கற்க அதிக காலம் ஆகும். முடியாததா என்ன? கற்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதைச் செய்யுங்கள். ஆனால் ஒழுங்கான வாழ்க்கை முறையுடன் அதிக காலம் செலவிட நீங்கள் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஆசிரியருடன் அமர்ந்து கற்க வேண்டும். ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்பானவர்களாக இருப்பர். அதிக நேரமும் ஆற்றலும் தேவைப்படும்.

பகவத்கீதையின் முதல் அத்தியாயம் விஷாத யோகம் என்று அழைக்கப்படுகிறது. விஷாதம் எவ்வாறு யோகமாகும்?

யோகா மூன்று விதமாக விளக்கப்பட்டிருக்கின்றது.

1. பல மூலிகைகளின் சேர்க்கை. ஆயுர்வேதம் மற்றும் ஆயுர்வேத மருந்துகள் ஆகியவையும் யோகம் என்று அழைக்கப்படுகின்றன.
2. பல கோள்களின் கலவையும் யோகம் என்றே அழைக்கப்படுகிறது. ராஜ யோகம், கால சர்ப்ப யோகம் என்னும் சொற்கள் ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
3. தனிப்பட்ட ஆத்மா பிரபஞ்ச ஆத்மாவுடன் இணைதலும் யோகமே ஆகும்.

யோகத்தில் முழு அதிகாரத்துடன் விளங்கும் பகவத் கீதை சிறிய தனிப்பட்ட ஆத்மா பிரபஞ்ச ஆத்மாவுடன் இணைவதையே குறிப்பிடுகிறது. சிறிய சுயம் பெரிய சுயத்துடன் தொடர்பு கொள்வது விஷாத அதாவது வருந்துதல் என்பதாகும். இவ்வாறு தான் அதாவது போர்க்களத்தில் குதித்து விட்டதற்காக வருந்துதல் - வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயங்களுக்காக வருந்துதல் - என்றுதான் யோகம் துவங்குகிறது. அதுதான் விஷாத யோகம்.

பலர் இதிலேயே சிக்கிக் கொண்டு விட்டனர் என்றே நான் கருதுகிறேன். பெரும்பாலும் மக்கள் வாழ்க்கைக் கஷ்டங்களை சந்திப்பதால் ஆன்மீகத்திற்கு வருகின்றனர். பிரச்சினைகள் வரும்போது ஆன்மீகத்திற்குத் தாவுகின்றனர். அர்ஜுனனுக்கும் அதே நிலைதான். அவன் மனம் உடல் இரண்டும் வருந்தி, அவற்றுக்கு விடை காண ஸ்ரீ கிருஷ்ணரிடம் வருகின்றான். எனவே பகவத் கீதை விஷாத யோகத்துடன் துவங்குகின்றது.

நீங்கள் அஷ்டவக்கிர கீதையை பார்த்தால், அது விஷாத யோகத்தில் துவங்குவதில்லை. அது ஜிஞ்ஞாநச யோகத்துடன் துவங்குகிறது. ஜனகர்  ஞானம் தேடுபவர். அர்ஜுனன் பாதிக்கப் பட்டவன். கஷ்டத்தில் பாதிக்கப்பட்டு யோகத்தில் செல்கிறீர்கள். ஞானம் தேடியும் யோகத்தில் செல்லலாம். கஷ்டத்திலிருந்து அர்ஜுனன் தெரிந்து கொள்ள வேண்டும் என்னும்  ஆவலினால் மேலும் மேலும் அறிய விரும்புகிறான். ஆனால் ஜனகர் முற்றிலும் ஞானம் தேடுதல் மட்டுமே கொண்டுள்ளார். இது மிகவும் சுவாரஸ்யமான ஓர் விஷயம்.

எதுவாயினும் உங்கள் வாழ்க்கையில் விஷாத யோகத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அங்கிருந்து நகர்ந்து, சாங்க்ய யோகத்திற்குச் செல்லுங்கள். உலகில் பெரும்பான்மையினர் வருத்த நிலை யிலேயே இருக்கின்றனர். விஷாத யோகத்திலேயே சிக்கி  இருக்கின்றனர்.  ஆனால் எவ்வாறா யினும் நீங்கள் 12 வது அத்தியாயமான  பக்தி யோகத்திற்குச் செல்ல வேண்டும்.

வெற்றிடம் எவ்வாறு மனதைப் பாதிக்கிறது என்பதைப் பற்றிக் கூற முடியுமா?

காலம் மற்றும் இடம் இவற்றால் மனம் பாதிப்படைகின்றது. ஆனால் உங்கள் ஆத்மா மனதை விட சக்தி வாய்ந்தது. அது இடம் மனம் காலம் அனைத்தையும் பாதிக்கின்றது.ஆகையால் சுய ஞானம் தான் எல்லாமே என்றாகிறது. சுய ஞானம் மகிமையானது. மற்றும் சுய ஞானம் அடைந்தவன் மகிமை பெற்றவன். ஏனெனில் அதுவே அனைத்திற்கும் விடை காண்கின்றது. தியானம், பக்தி, ஈடுபாடு, கவனம் அனைத்தும் மிக மகிமை வாய்ந்தவை ஏனெனில் அவற்றால் காலம் மற்றும் இடத்தின் பாதிப்பை செல்லத்தகாததாகச் செய்ய முடியும்.

புற நிலை மற்றும் அக நிலை  ஞானம் பற்றி எடுத்துரைத்தீர்கள். அக நிலை ஞானம் உண்மையானது என்றும் கற்பனையில் வீழ்ந்து விடவில்லை என்றும் எவ்வாறு அறிந்து கொள்வது ?

அதற்குத்தான் இந்த வகுப்புக்கள் மற்றும் தியானப் பயிற்சிகள் அனைத்தும் உங்களுக்கு அளிக்கப் படுகின்றன. நீங்கள் அறிவொளி பெற்று விட்டீர்கள் என்று எண்ணினால் ஜாக்கிரதையாக இருங்கள். ஓர் ஆசிரியரிடம் பேசுங்கள். அவர் மூலம் என்னிடம் பேசுங்கள். எனக்கு எழுதுங்கள். அது கற்பனையா அல்லது உண்மையா என்று நான் உங்களுக்குக் கூறுகிறேன்.

உண்மையில் நடப்பவை  போலத் தோன்றினாலும் கூட அது உண்மையில்லை என்பதைப் பற்றிப் பேச முடியுமா?

அதற்குச் சிறந்த உதாரணம் கனவுகள். கனவு காணும்போது, அது உண்மை போன்றே தோன்றுகிறது, ஆனால் விழித்தெழுந்தால் அது உண்மையில்லை. அதுதான். மிக எளிதான விஷயம். ஏன் இவ்வளவு எளிதான கேள்விகளையே கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்? சவாலான கேள்விகளைக் கேளுங்கள்!

அதிக ஆய்வு வேண்டியதில்லை - தன்னிச்சையாக வாழுங்கள்.

செவ்வாய்கிழமை, 16 பெப்ரவரி, 2016,

பெங்களூரு -  இந்தியா


 சில சமயங்களில் விஷயங்களை என்னுடைய கடந்த கால அனுபவங்களின்  அடிப்படையில் நிறம் மாறி காண்கின்றேன். எவ்வாறு நடுநிலையில் இருப்பது?

 நான் நடுநிலையில் இல்லை என்று உணரும் தருணத்திலேயே நீங்கள் அதிலிருந்து வெளி வந்து விடுகிறீர்கள். இந்தக் க்ஷணத்தில் நீங்கள் களங்கமற்றவர். நடந்தவற்றிலிருந்து வெளியேறிவிட்டீர்கள்.

மிக அதிகமாக எதையும் ஆராய்ந்து கொண்டிருக்கக் கூடாது. ஒரு வேலை உங்களுக்கு அதிகமான அளவு ஒய்வு நேரம் இருக்கின்றது போலும் !  நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகப் பணி செய்து கொண்டிருந்தால் இவ்வாறெல்லாம் ஆய்வு செய்ய நேரம் ஏது? செயல் தன்னிச்சையானது. சில சமயங்களில் நீங்கள் தவறான செயல்களைப் புரிந்து, அதன் பயன்களை அனுபவித்து பின்னர் முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா?

குருதேவ், எவ்வாறு பக்தியுடன் பணி புரிவது? ஓர் குறிப்பிட்ட பயனை விரும்பி நான் செயல்படுவதாக எண்ணுகிறேன். எவ்வாறு இதை மாற்றிக் கொள்வது?

நீங்கள் பக்தி / முழு ஈடுபாட்டுடன் செயல் புரிவதாகவே கருதிக் கொள்ளுங்கள். ‘கட்டாயம்’ ‘ வேண்டும்’ என்னும் சொற்களையெல்லாம் அப்புறப் படுத்துங்கள். இயல்பாக  இருங்கள்.
நீங்கள் ஏற்கனவே இப்பாதையில் இருக்கின்றீர்கள். இப்பாதையில் முழு ஈடுபாடு என்பது ஆழமாகப் பதிந்திருக்கின்றது. அன்பு உங்கள் ஸ்வபாவம். அதிலிருந்து ஒரு போதும் நீங்கள் வெளியேற முடியாது. பக்தி என்பது மேன்மையான அன்பு அல்லது அதன் உண்மையான வடிவில் உங்களுக்குள்ளேயே இருக்கின்றது. அது இல்லையென்று எண்ணினாலோ அல்லது அடைய வேண்டும் என்று நினைத்தாலோ அது நடக்கப் போவதில்லை. அனாவசியமாக உங்களை நீங்கள் சிரமப் படுத்திக் கொள்கின்றீர்கள். அது ஏற்கனவே இருக்கின்றது ! உங்கள் இல்லத்திற்குள்ளேயே இருந்து கொண்டு நான் என் இல்லத்திற்குச் செல்ல விரும்புகிறேன் என்று கூறுவது போன்றதாகும். அன்பானவரே ! விழித்தெழுங்கள் ! நீங்கள் பிரமையில் இருக்கிறீர்கள். உங்கள் வீட்டிலேயே தான் இருக்கின்றீர்கள். இளைப்பாறுங்கள் !

வேதங்களின் சாரம் என்ன?

படைப்பின் சாரமே வேதங்கள். படைப்பிலுள்ள - நிகழ்காலம், கடந்த காலம், வருங்காலம் அனைத்தும் விதை வடிவில் வேதங்களில் உள்ளன. சாரத்தின் சாரம் என்ன என்று கேட்டு விடாதீர்கள் ! வேதங்களே சாரம் என்றுதான் அழைக்கப் படுகின்றன. "சாரவத் விஸ்வதோ முகம்" அதாவது வேதங்கள்  பன்முகத் தன்மையுடையவை. பல்வேறு பரிணாமங்கள் கொண்டவை , இருப்பின் சாரம்.

குருதேவ், இன்று அறிவியலில் புவியீர்ப்பும் ஓர் அலையே என்று கண்டுபிடித்துள்ளனர். புவியீர்ப்பு மற்றும் பருப்பொருள் பற்றி வேதங்கள் என்ன கூறுகின்றன?
பருப்பொருளும் ஆற்றலும் ஒன்றேயாகும். பருப்பொருள் கண்ணுக்குத் தெரிவது, அது ஆற்றலிருந்து வேறுபட்டதல்ல. பருப்பொருள் ஓர் மாயை, ஆற்றலே உண்மையானது என்று வேதங்கள் கூறுகின்றன. ஏதேனும் உண்மையானது என்றால் அது ஆற்றலே. பிரம்மனே ஆற்றல். உலகம் அதன் உருவம். பொருளின் பெயரும் உருவமும் தாற்காலிகமானவை. நிலைபேறுடையது ஆற்றலே.

ஜோதிஷ சாஸ்திரத்தில் நவகிரகங்கள்   என்னும் ஒன்பது கிரகங்கள் பற்றிக் கூறப் படுகின்றன. அறிவியல் கூற்றுப் படி ஒன்பதுக்கும் மேற்ப்பட்ட கிரகங்கள் உள்ளன. மேலும் ஏன்  சூரியன் மற்றும் சந்திரன் கிரகங்கள் என்று அழைக்கப் படுகின்றன? இது அறிவியல் பூர்வமானதா?

சூரியன் மற்றும் சந்திரன் நிச்சயமாக பூமியைப் பாதிக்கின்றன. சந்திரன் சூரியனின் ஒளியையே பிரதிபலித்தாலும் அதன் ஆற்றல் நீர் மற்றும் மனம் இவற்றைப் பாதிக்கின்றது. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் பட்டுள்ளது. ஒருவருக்குப் பித்துப் பிடிக்கும் போது ஆங்கிலத்தில் லூனடிக் என்று அழைக்கப்படுகிறார். - ( லூனார் என்னும் ஆங்கிலச் சொல் சந்திரனைக் குறிக்கும் ). அது போன்று பல ஆற்றல்கள் செயல்படுகின்றன. படைப்பு முழுவதும் நுண்ணுயிர் தொடர்புடையது. பருவநிலை கிரகங்கள்  இணைப்பு என்று மட்டுமே எண்ண  வேண்டாம்.   அண்ட ஆற்றல் எங்காவது மற்றும் எப்படியோ இந்த கிரகங்களுடன் தொடர்பானது  என்று ஜோதிஷ சாஸ்திரம் விவாதிக்கிறது.

படைப்பும் நுண்ணியலும் ஒன்றோடொன்று இணைந்தவை. உதாரணமாக உயிரோட்ட ஆற்றல் பறவைகள், கிரகங்கள், தானியங்கள், மற்றும் மனித உடலின் சில பகுதிகள் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. உதாரணமாக சனியின் ஆற்றல் காகத்துடன் இணைந்தது. காகத்தின் அதிர்வு, சனி கிரகம், எள் விதை, மனித  உடலில் பற்கள்  இவையனைத்தும் இணைந்தவையாகும். ஏராளமான ஆய்வுகள் இதைப் பற்றிச் செய்யப் பட்டிருக்கின்றன. வருங்காலத்திலும் மக்கள் ஆய்வு செய்ய வரவேற்கப் படுகின்றனர்.
அது போன்றே ஆடு, செவ்வாய் கிரகம், கொண்டைக் கடலை ஆகியவை தொடர்புடையவை. கல்லீரலும் கொண்டைக் கடலையும் தொடர்புடையவை என்பதை  நாம் அறிவோம். மயிர், நகங்கள், பற்கள் ஆகியவற்றுக்கு எள்  நிச்சயம் உதவும் . உதாரணமாக ஆயுர்வேதத்தின் படி, சிறிது நல்லெண்ணையைக் கொப்பளித்தால் வாய்ப்புண், பயோரியா போன்ற பிரச்சினைகள் தீரும்.

பண்டைய கால மக்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். அக்காலத்தில் ஆழ்ந்த ஆய்வு செய்யப் பட்டு, அல்லது உள்ளுணர்வால் அறியப் பட்டவை. இவை தற்கால அறிவியல் நிபுணர்களுக்கு சவாலாக அமைந்துள்ளது. நிரூபிக்கப் பட வேண்டும் இல்லையெனில் மறுக்கப் படவேண்டும். தவறு என்றால் அதை மறுத்து நிரூபிக்க வேண்டும். சரியென்று கருதினால் அதையும் நிரூபித்துக் காட்ட வேண்டும் ! மயிர், நகம் மற்றும் பற்கள் இவையெல்லாம் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பது மிக சுவாரஸ்யமான விஷயம் அல்லவா? உண்மையில் எல்லாமே எல்லாவற்றுடன் தொடர்புடையவை. சில அதிக நேரிடையாக தொடர்புள்ளவை.

சில குறிப்பிட்ட மூலிகைகள் உடலின் குறிப்பிட்ட பகுதிகளுக்குப் பயன் தரும். ஆயுர்வேத மெட்டீரியா மெடிக்கா என்பது  கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் வேதங்களில் காணப்படுகின்றன. உலகிலேயே கவிதை வடிவிலுள்ள ஒரே மெட்டீரியா மெடிக்கா இதுவேயாகும். எனவே, வைத்தியர்கள் ஆயுர்வேத மருத்துவர்கள் ஆகியோர் எளிதாக மனப்பாடம் செய்து உடல் உறுப்புக்களையும் அவற்றின் தாக்கத்தையும் பற்றி அறிந்தனர். இந்தப் பாடல்களைக்  கேட்பது மிக அற்புதமாக உள்ளது. எவ்வாறு அவை கவிதையாக எழுதப் பட்டன என்பதும் அதிசயிக்கத் தக்கதே. இந்தக் கவிதைகள் புலப்படாத மெய்யுணர்வின் ஓரத்திலிருந்து ஆழமாக வெளிப் பட்டவையாகும். ஆகையால்தான் இது உள்ளுணர்விலிருந்து தோன்றிய ஞானமாகக்  கூறப் படுகிறது. உள்ளுணர்விலிருந்து தோன்றுவது சரியாகவே இருக்கும்.

குருதேவ் இன்று தொழில் என்பது மிகச் சிக்கலானதாக உள்ளது. ஓர் அலுவலகத்தில் எடுக்கப்படும் முடிவுகளால் ஏன்  தங்கள் செலாவணிப் பணத்தின்  மதிப்பு வீழ்ந்து விட்டது என்பது கூடத் தெரியாத பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு பாதிக்கப் படுகிறது. இந்த அமைப்பிலிருந்து விலகி சுதந்திரமாக இருப்பது எப்படி?

உண்மையில் அது சாத்தியமில்லை. அனைத்துமே செலாவணிப் பணத்துடன் தொடர்பு கொண்டது. அல்லவா? நீங்கள் ஓர் விவசாயியாக இருந்து, உங்களது உணவு தானியங்களை நீங்களே விளைவித்துக் கொண்டாலும், உரம் வாங்க, மற்றும் தானியங்களை விற்க என அனைத்திற்கும் நீங்கள் நாணய முறையைச் சார்ந்திருக்க நேரிடும்.

உலகப் பொருளாதாரத்தினை மேலாண்மை செய்பவர்கள் சற்றுக் கருணையுடன் இருக்க வேண்டும் என்றே நான் கூறுவேன். அவர்கள் தங்களுடைய பணவசதியை மட்டுமே கவனித்துக் கொண்டு பூமியிலுள்ள மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் கழுத்தறுக்கும் தொழிலதிபர்களாக இருக்கக் கூடாது. அவர்கள் உலகப் பொருளாதாரத்தில் விளையாடுவது வேதனைக்குரியது. நல்லவர்களும் இருக்கிறார்கள், ஆனால் பலர் நேர்மையற்று சுய நல நோக்கத்துடன் பூமியின் மக்களை மிகவும் பாதிக்கின்றனர்.

குருதேவ், சரணாகதியில் பொறுப்புத் துறப்பு உள்ளது போலத் தோன்றுகிறது. அது உண்மையா?

இல்லை ! இரண்டும் இணைந்து செல்ல வேண்டும். சரணாகதியடைந்து, பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அல்லது பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு சரணாகதியடைந்து விட வேண்டும். எவ்வாறு? தொலைக்காட்சி பார்க்கும் போது ஒரே நேரத்தில் காட்சியைக் கண்டு கொண்டே கேட்பது போன்று .சரணாகதியடைந்த பின்னர் முழுப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுங்கள். பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, உங்களை விட மிகப் பெரிய ஒன்று உள்ளது என்பதையுணர்ந்து அதற்கு சரணடைந்து விடுங்கள். உங்கள் பொறுப்பை நிறைவேற்ற தேவையான ஆற்றல் அனைத்தையும் அளிக்கும்படிப் பிரார்த்தனை செய்யுங்கள்.

பொறுப்பு மற்றும் சரணடைதல் ; நோக்கம் மற்றும் சரணடைதல் இவை ஒன்றிலிருந்து மற்றொன்று மாறுபட்டதல்ல. உண்மையில் இரண்டும் சேர்ந்தே செல்லும். சங்கல்பமின்றி சரணடைய முடியாது.  சரணடையாமல் சங்கல்பம் (நோக்கம்)முழுமையற்றே இருக்கும்.

குருவிடம் சீடனுக்கு எதிர்பார்ப்பு இருந்தால் அவை என்னவாக இருக்க வேண்டும்? குருவிற்கு சீடனிடம் எதிர்பார்ப்பு இருந்தால், அவை என்னவாக இருக்கும்?

அந்தக் கணக்கை நீங்களே போட்டுப் பாருங்கள்!. சிரத்தையுடன், உறுதியுடன் சரணடைந்து ஞானத்தை வேண்டுங்கள். உண்மையில் குருவிற்கு எதிர்பார்ப்பு எதுவுமிருக்காது. உதாரணமாக ஓர் பள்ளியின் முதல்வர் மாணவர்கள் பல நிலைகளில் - நர்சரி, முதல், இரண்டாம், அல்லது மூன்றாம் வகுப்புக்களில் உள்ளனர் என்பதை அறிவார். அவரிடம், இந்தக் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டால் என்ன கூறுவார்? அவர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு வகுப்புக்கு வர வேண்டும். சிரத்தையுடன் படிக்க வேண்டும் என்றே கூறுவார் அல்லவா? நிச்சயமாக முதல் வகுப்பு குழந்தை ஐந்தாம் வகுப்பு கவிதையினை மனப்பாடமாக ஒப்பிக்க வேண்டும் என்று கூற மாட்டார். நீங்கள் இங்கிருக்கின்றீர்கள் அல்லவா? இங்கிருப்பது, பணி புரிவதற்காகவே.

நல்லிணக்கம் என்பதே நிசப்தத்தின் பொருள்

திங்கள்கிழமை, 2 பிப்ரவரி 2016,

பெங்களூரு, இந்தியா


குருதேவ், இசை, சக்கிரங்களைப் பாதிக்கும் என்று கூறப் படுகிறது . குறிப்பிட்ட இசைக் கருவிகளைப் பற்றியும் சக்கிரங்களின் மீது அவற்றின் விளைவுகளையும் பற்றியும் சற்றுக் கூற முடியுமா?

முரசு மூலாதாரத்தினைப் பாதிக்கிறது. பெரிய, சிறிய முரசுகள் மூலாதாரத்திலிருந்து இரண்டாம் சக்கிரமாகிய ஸ்வாதிஷ்டானம் வரையில் விளைவினை  ஏற்படுத்துகின்றன. தாரை போன்ற பெரிய காற்று இசைக் கருவிகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் சக்கிரங்களாகிய ஸ்வாதிஷ்டானம் மற்றும் மணிபுரா சக்கிரங்களில் விளைவினை ஏற்படுத்துகின்றன. உலோக இசைக்கருவி ஒலிகள் மணிபுரா மற்றும் அனஹாதா ( நான்காம் சக்கிரம்) இவற்றில் விளைவுகளை  ஏற்படுத்துகின்றன. ஓர் உலோகம் கீச்சிடும் ஒலி எழும்போது வயிற்றில் ஏதோ ஓர் உணர்வு ஏற்படுகிறது.

எத்தனை பேர் இதைக் கவனித்திருக்கிறீர்கள்? கம்பியிசைக் கருவிகள் நாபியிலிருந்து இதயப் பகுதி வரையில் விளைவினை ஏற்படுத்துகின்றன. வீணை மற்றும் சிதார் போன்ற கருவிகள் அனஹாதா எனும் இதயச் சக்கிரத்தில் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. புல்லாங்குழல் போன்ற காற்றிசை கருவிகள் சில சமயங்களில் பியானோ இசை, அனஹாதா முதல் விஸ்ருதி ( தொண்டைச் சக்கிரம்) வரையில் விளைவினை ஏற்படுத்துகின்றன. மணிகள், நீரின் ஒலி, பறவைகளின் ஒலி, மிக மெல்லிய நுண்ணிய ஒலிகள் தொண்டை முதல் ஆக்ஞய சக்கிரம்  ( புருவங்களின் நடுவிலுள்ள சக்கிரம் ) வரையில் விளைவை ஏற்படுத்துகின்றன. பிற அனைத்து இசைக்கருவிகள் மற்றும் தியானம் சஹாஸ்ராரத்தில்  (தலையின் உச்சியிலுள்ள  சக்கிரம்) விளைவினை ஏற்படுத்துகிறது.

இந்திய சடங்குகளைக் கவனித்துப் பார்த்தால் இதைப் புரிந்து கொள்வீர்கள். கோவில்களில் முரசுகளை  வெளிப்புற எல்லையிலும், பெரிய காற்றிசைக் கருவிகளை அதற்கடுத்த  நிலையிலும், உட் புரத்தில்  மணிகள் மற்றும் சங்கும், வைக்கப் பட்டிருக்கும். முரசுகளில் துவங்கி, கம்பியிசைக் கருவிகள் பின்னர் காற்றிசைக் கருவிகள் அதற்கும் அடுத்து மணிகள் என ஒலி அலைகள் சமச்சீர் செய்யப்பட்டு, அனைத்தும் நிசப்தத்தில் முடிவடைந்து விடுகின்றன. சப்தத்தின் குறிக்கோள் நிசப்தமேயாகும். இது உங்களனைவருக்கும் தெரியுமா? சப்தம் நிசப்தத்திலிருந்து தோன்றி அதன் நோக்கமும் நிசப்தமேயாகிறது. நிசப்தம் என்பதன் பொருள் முழு நல்லிணக்கம் என்பதாகும். உங்களுக்குள்  மிக ஆழத்தில் முழு நல்லிணக்கம் ஏற்படும்போது, சப்தம் கூட மிக கனமாகத் தோன்றும். ஆனால் சப்தம், இசை ஆகியவை பாதையேயாகும்.. இசையே ஓர் தனி மனிதனை பிரபஞ்சத்துடன் இணைக்கிறது. குறுகிய மனம் இசையின் மூலம் விரிவடைந்து அது ஏற்கனவே மிகப்பெரிய மனதின் அல்லது மெய்யுணர்வின் ஓர் பகுதியே என்று கண்டறிகின்றது.

உலகில் மோதல்களுக்கு காரணம் என்ன? அவற்றை முற்றிலும் அகற்றி விட முடியுமா அல்லது அதற்கென்று ஓர் பங்கு இருக்கின்றதா?

மோதல்கள் நல்ல மனிதர்களை ஒருங்கிணைக்கிறது, இல்லையெனில் நல்லவர்கள் ஒன்று சேர மாட்டார்கள். மோதல் என்பது ஒருவரது இயல்பு, அதனை தீர்ப்பதும் இயல்பின் ஒரு பகுதியே. மனித கண்ணியம் மோதலை தீர்ப்பதேயாகும்.

இன்றைய உலகில் தீவிரவாதமே மிகப் பெரிய சவால். அதைக் கவனிக்க வேண்டும். பல்வேறு வித்தியாசங்கள் இருந்தபோதிலும் மக்கள் அனைவரும்  ஒரே குடும்பம் என்று அறிந்துணர்ந்து கொண்டால்தான் அதைக் கவனிக்க முடியும். வித்தியாசங்களையும் வேறுபாடுகளையும் கொண்டாடுவதே  புத்திசாலியான மக்களின் அடையாளம்.

குருதேவ், வேதங்கள் மனிதர்களல்லாத மூலத்திலிருந்து உருவானதாகக் கூறப்படுகிறது. அதன் பொருள் என்ன?

வேதங்கள் தரமிறக்கம் செய்யப்பட்டவை. ரிஷிகள் ஆழ்ந்த தியானத்தில் தாங்கள் கண்டு கேட்டவற்றைப் பகிர்ந்து கொண்டனர். ஒரு அருமையான கதையை உங்களுக்கு கூற விரும்புகிறேன். வேத வியாசர் படைத்தவனிடம் சென்று, தனக்கு  ஞானம் அளிக்கும்படி வேண்டினார். இறைவன்  பளபளக்கும் ஓர் மலையினைக் காட்டி, "அதுவே ஞானம் , உன்னால் எடுத்துக் கொள்ள முடிந்த அளவு எடுத்துக் கொள்" என்று கூறினார். வேதவியாசரின்  கைகளால் எவ்வளவு அள்ளிக் கொள்ள முடிந்ததோ அதுவே வேதங்கள்.

ஓராயிரத்திற்கும் மேற்பட்ட முனிவர்கள் ஆழ்ந்த தியானத்தில் சென்று, அவர்கள் என்ன அறிந்து கொண்டார்களோ அவையே  வேதங்கள். ஆயுர்வேதத்திற்கும் அது போன்ற ஓர் கதை உண்டு. சமுதாயத்தில் உடல்நலம் பெருக விருப்பத்துடன் 88000 முனிவர்கள் ஓரிடத்தில் கூடி தியானம் செய்தனர். அவர்கள்  அறிந்தவற்றை எழுதுவதற்கு ஒருவர் தேவைப்பட்டார். எனவே பாரத்வாஜ முனிவர், தாம் தியானம் செய்யாமல் பிற முனிவர்கள் தியானத்தில் அறிந்தவற்றை கூறும்போது எழுதுவதற்கு முன்வந்தார். இன்று அது உடலின் எந்தப் பகுதிக்கு எந்த மூலிகை பயன்தரும் என்று அறிந்த, பூரணத்துவம் வாய்ந்த அறிவியலாகத் திகழ்கிறது. ஆச்சரியமான விஷயம். இன்னும் அதிகமாக உள்ளாழ்ந்து சென்றால் இந்த ஞானம் மிக ஆச்சரியத்தைத் தரும்.

குருதேவ், யோக சூத்திரங்களில் யோகத்தின் நோக்கம் துன்பத்தை அகற்றுவது என்று கூறப்பட்டிருக்கிறது. யோகாவிற்கு ஆன்மீக நோக்கம் எதுவும் இல்லையா?

 அது வரக்கூடிய   துன்பத்தினைத்  தடுக்கும். அது எதிர்காலத்தில் வரக்கூடிய சோகத்தினை  நீக்குகிறது. துன்பத்தின்  மூல காரணம் யோகாவின்  மூலம் வெளியேற்றப்படுகின்றது. இது ஒரு துணைப் பொருள் ஆகும். இறுதியானது அல்ல.

யோக வசிஷ்டாவில் உள்ள ஓர் கதையில் காகபுஷுண்டி என்னும் காகம், உலகமே அழிந்த பின்னரும் உயிருடன் இருந்ததாகக் கூறப் படுகிறது. இந்தக் கதையின் முக்கியத்துவம் என்ன?


யோக வசிஷ்டா மர்மமானது. The Matrix and Inception போன்ற அண்மைக்காலத் திரைப்படங்கள் யோக வசிஷ்டாவினை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப் பட்டுள்ளன. யோக வசிஷ்டா மிக ஆழமானது. பல்வேறு பொருட்களை உள்ளடக்கியது. உங்களை வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச் செல்லும்.

நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியை எப்படி கண்டுபிடிக்கலாம்?

செவ்வாய்க்கிழமை, 2 - பிப்ரவரி, 2016

பெங்களூர், இந்தியா


கேள்வி – பதில்கள்

உங்கள் கருத்துப்படி, அன்பின் வரையறை என்ன?

மிகவும் எளிது. எதை வரையறுக்க முடியாதோ, அதுவே அன்பு. இதுவரை நீ அன்பை அனுபவிக்காமலிருந்தால், வருங்காலத்திலும் அதை அனுபவிக்க வாய்ப்பில்லை. எனவே அதற்கு வரையறை இல்லை. அன்பானவனே, நீ அன்பால் உருவாக்கப்பட்டிருக்கிறாய். இந்த ப்ரபஞ்சமே அன்பு என்றழைக்கப்படும் அந்தப் பொருளால் உருவானது. எனவே மற்ற எல்லா பொருட்களுமே தூய்மையான அன்பு, அல்லது அன்பிலிருந்து சிதைந்த வடிவில் இருக்கும். கோபம் என்பது அன்பின் சிதைந்த ஒரு உணர்வு. நீ எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க விருப்பமுள்ளவனாக இருந்தால், அது அப்படி இல்லாத போது உனக்குக் கோபம் வரும். அது சரியாக வைப்பதற்கான அன்பு. பொருள்களின் மேல் அதிக அன்பை பேராசை என்று சொல்கிறோம். ஒருவரின் மேல் இருக்கும் அதிக அன்பு, பொறாமையாகவோ, சொந்தப் படுத்திக் கொள்ள சுயநலமாக மாறலாம். எதிர் மறை உணர்வுகள் அன்பிலிருந்து பிறந்தவையே. ஞானமற்ற அன்பு, எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. ஞானத்துடன் கூடிய அன்பு பேரானந்தத்தைக் கொடுக்கும்.

மகாத்மா காந்தி ராமராஜ்யத்துக்காக கனவு கண்டார். பெண்கள் நடு  இரவிலும், தைரியமாக தெருவில் நடந்து செல்ல முடியும் என்று அவர் சொன்னார். இந்தியா சுதந்திரமடைந்த நாடாகும் போது அப்படி நடக்குமென்றார்.

எங்கெல்லாம் ஞானமுள்ளதோ, அதுவே ராமராஜ்யமாகும்.  அஞ்ஞானமுள்ளதோ, அது அசுர ராஜ்யம். புரிந்ததா?

குருதேவா ! சில சமயம் நான் எண்ணியபடி நடக்கிறது. சில சமயம் அப்படி நடப்பதில்லை. ஏன் அப்படி?

ஆம். எனவே நீ உன் எண்ணத்தை சீர்படுத்திக் கொள்ளவேண்டும். நீ எண்ணியபடி நடந்தால், உன் எண்ணம் சரியாக இருந்தது. அப்படி நடக்காவிட்டால், உண் எண்ணம் தவறாக இருந்தது. உன் எண்ணப்படி எப்போதும் நடக்காமலிருந்ததில்லை. சில சமயம் அப்படி நடந்திருக்கிறது. உன்னுள் சத்வ குணம் நிரம்பியிருக்கும் போது உன் எண்ணப்படி நடக்கும். எனவே நீ சத்வ குணத்தை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டால், நீ விரும்புவது நடக்கும். சில மனிதர்களின் மனதில் விருப்பம் எழும் போதே அது நிறைவேறிவிடும்.

குருதேவா ! வாழும் கலையின் சின்னம், இரண்டு அன்னப் பறவைகளுக்கு நடுவில் சூரியன், இதன் முக்கியத்துவம் என்ன ?

உன் படைப்பாற்றலை உபயோகித்து, நீயே இதன் முக்கியத்துவத்தைப்  பற்றிச் சிந்தித்துப் பார். நீ எப்படி விரும்பினாலும் அப்படியே விளக்கமளிக்கலாம். சின்னம் ஒரு சின்னம் தான். யாரோ ஒரு கலைஞர் அதை வரைந்து காட்டினார். நான் அதை ஏற்றுக் கொண்டேன். “ வாழும் கலை “ என்ற பெயரும் அப்படியே. இந்தப்  பெயரை நான் வைக்க வில்லை. அது தானாகவே நடந்தது. என் பேச்சு, எப்போதும், பெயரையும், வடிவத்தையும் தாண்டி எப்படிச் செல்ல வேண்டும் என்பதைப் பற்றியே இருக்கும். பெயர், சின்னம் இவைகளில் ஒன்றுமில்லை.

மக்களுக்கு சுகாதாரம் மற்றும் நல்ல பழக்க வழக்கங்களைப் பற்றி, வாழும் கலை ஏன் பயிற்சியளிப்பதில்லை ? உதாரணமாக எச்சில் துப்பக் கூடாது, குப்பையை வீட்டுக்கு வெளியே போடக் கூடாது. நாட்டுக்குப் பயன் தரும் பல விஷயங்களைப் பற்றி  ஏன் பயிற்சியளிக்க க் கூடாது ?

நாம் அப்படிச் செய்கிறோம். நம் பயிற்சிகளான பால் சேத்னா (குழந்தைகளுக்கான விழிப்புணர்வு) மற்றும் ஒய்.எல்.டி.பி (இளைஞர்களுக்கான தலைமைப் பதவிக்கான பயிற்சி), இவற்றில் இதைச் செய்கிறோம். இப்பயிற்சிகளில் கலந்துகொண்டு, இதை புரிந்து கொள்ளலாம். மேலும் நாம் வாழும் கலையில், 5 எச் திட்டத்தை செயல் படுத்தி வருகிறோம். (ஹோம்ஸ் ஃபார் ஹோம்லெஸ், ஹெல்த் கேர், ஹைஜீன், ஹ்யூமன் வேல்யூ, ஹார்மனி இன் டைவர்சிடி)

இவைகளைப் பற்றி ஏற்கனவே அறிந்த மக்களுக்கு, இதை எடுத்துச் சொல்ல அவசியமில்லை. நீ தினமும் பல் துலக்க வேண்டும் என்று உனக்குச் சொல்லத் தேவையில்லை. உனக்கு ஏற்கனவே தெரியும். ஆனால் பழங்குடியினர், பின் தங்கிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, சுகாதாரப் பழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பவர்களுக்கு, இதை எடுத்துச் சொல்வது அவசியம். எனவே நம் பயிற்சிகள் இடத்துக்கேற்றவாறு வடிவமைக்கப் பட்டிருக்கின்றன. சுற்றுப் புறத்தைத் தூய்மைப் படுத்துவதில், வாழும் கலை உறுப்பினர்கள் பெரிய அளவில் பங்கேற்கிறார்கள். உண்மையில், இத்திட்டத்தை, நாம் 2008 லிருந்தே நாட்டின் எல்லா பகுதிகளிலும் செய்து வருகிறோம். நாட்டின் பிரதமர், சமீபத்தில் தூய்மையான பாரதம் என்ற திட்டத்தைத் துவங்கி வைத்திருக்கிறார். வாழும் கலை பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறது.