உலகத்தில் மிகவும் மதிக்கப்பட வேண்டிய விஷயம்


30 - ஆகஸ்ட் 2012 - ப்ரேசில், தென் அமெரிக்கா
 
குருதேவர்...
 
இப்போது உங்களை முக்கியமான கேள்வி கேட்கப் போகிறேன். நீங்கள் ஒருவரை உண்மையிலேயே வாழ்த்துகிறீர்களா? இல்லை அதை ஒரு உபசாரமாக நினைக்கிறீர்களா?
தினமும் வாழ்க்கையில் பலரை சந்திக்கிறோம். நல்ல வார்த்தைகள் சொல்லி அளவளாவுகிறோம். ஆனால் அவை ஒரு உபசாரத்துக்காகத் தான். (உண்மையாக அல்ல) இல்லையா? யாராவது ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தால், “உங்களுக்கு மிக்க நன்றி” என்று சொல்கிறோம். “மிக்க” என்பதற்கு அர்த்தம் இல்லை. நீங்கள் சஹாரா பாலைவனத்தில், தாகத்தால் தவிக்கும் போது,  ஒருவர் உங்களுக்கு தண்ணீர் கொடுத்து,தாகம் தணியும் போது சொல்லும் “மிக்க நன்றி” உண்மையானது. எனவே, வாழ்க்கையில், நிறைய சந்தர்ப்பங்களில் நாம் மேலோட்டமாக பழகும் போது, அந்த உறவு ஆழமில்லாமல் இருக்கிறது. வாழ்க்கை அர்த்தம் இல்லாமல், சாறு இல்லாமல் இருக்கிறது. இந்த நிலை மாறி, நாம் மற்றவர்களுடன் உண்மையாக, கபடமில்லாமல், கலப்பட மில்லாமல், இதயத்துடன் இதயம் இணைந்து பழக வேண்டும்.இதைத் தான் நான் ஆன்மீகம் என்று சொல்வேன். உன் ஆத்மாவிலிருந்து உண்மையாக உறவு கொள்ளும் போது அதை ஆன்மீகம் என்று சொல்லலாம்.
 
குழந்தைகளாக இருந்த போது நாம் அப்படித்தான் கள்ளமில்லாமல் பழகினோம். நீங்கள் குழந்தையாக இருந்த சமயம் நினைவில் இருக்கிறதா? இந்த பூமி, உலகம் எல்லாமே உயிருள்ளதாகத் தோன்றியது. நிலவு உங்களுடன் பேசியது. மரங்கள், பிராணிகள் எல்லாமே உங்களுடன் பேசியன. நீங்கள் இயற்கையாக இந்த உலகத்துடன் பேசி வந்தீர்கள். உங்களுக்கு இது நினைவில் வருகிறதா? கார்ட்டூன் புத்தகங்களிலும் / படங்களிலும் உள்ள சிறுவர் சிறுமியர் மரங்களுடன் பேசுவது உங்களுக்குத் தெரியும். அது ஒரு வித்தியாசமான உலகம்.
 
இப்போது கேள்வி “நாம் இன்னும் அந்த கபடமற்ற குழந்தையின் உள்ளத்துடன், அதே சமயம் அறிவில் சிறந்தவர்களாக இருக்க முடியுமா?” என்பது தான். நம்மால் முடியும் என்று நான் சொல்கிறேன். அறிவும் கள்ளமில்லா மனமும் உலகில் சிறந்தது. அருமையானது. நிறைய பேர் அறிவுடனும் அதே சமயம் கபடமாகவும் நடந்து கொள்கிறார்கள். கபடமில்லாமல் அதேசமயம் அறிவில்லாமல் இருப்பது சுலபம். நமது கல்வி முறை, நாம் கள்ளமில்லா தன்மையை இழக்காமல், அறிவுடையவர்களாக ஆக உதவ வேண்டும. இப்போது நாம் எல்லோரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக, உபசாரமில்லாமல் உண்மையாக உணர்கிறோம். எந்த விஷயத்தைப் பற்றி இன்று பேசலாம்?
 
(பார்வையாளர்கள்: அன்பு, பிறப்பு, மன்னிக்கும் தன்மை, உறவுகள், தீர்மானம் செய்தல், கடவுள், ஊழல், அமைதி, கருணை, கோபம், பயம், தனியார்துறை பொருளாதாரம், நம்பிக்கை, பொறுமை) பொறுமையைப் பற்றிப் பேச வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதை அடுத்த ஆண்டு பேசுவேன். அப்புறம் _ _ _ _ _.சொல்லுங்கள். நிஜமாகவே இன்று இரவு என்ன விஷயம் பேசுகிறேன் என்பது முக்கியமா? உங்களுக்கே தெரியும். நான் வார்த்தைகளில் சொல்வதை விட அதிகமாக இங்கு இருப்பதாலேயே தெரிவிக்கிறேன். இல்லையா? எதைப் பற்றிப் பேசுவது என்பது அவ்வளவு முக்கியமா? இந்த உலகம் அதிர்வுகளால் ஆனது.
உன் பௌதீக ஆசிரியரிடம் பேசினால், இந்த உலகம் அலைத் தன்மையே அன்றி வேறு ஒன்றும் இல்லை என்பார். நாம் ஒவ்வொருவரும் அலைகள் தான். நீ உன் மையத்துடன் (ஆத்மாவுடன்) தொடர்பு கொண்டால், அலைகள் நல்லெண்ணத்தைப் பரப்பும். நீ உன் மையத்தோடு (ஆத்மாவுடன்) தொடர்பில்லாமல், சிக்கியிருந்தால் உன் அலைகள் எதிர்மறை சக்திகளை பரப்பும். அமைதி, அன்பு, கருணை இவை தான் நம்முடைய உண்மையான அலைகள். பிசிறில்லாத உண்மையான அலைகள். நம்மிடமிருந்து வரும் நல்லெண்ணங்களை அந்த அலைகள் உலகில் பரப்பும்.
நீ கோபம் அடைந்து நிலை தடுமாறும் போது, எதிர்மறை எண்ணங்கள் வரும் போது என்ன செய்ய வேண்டும்? அதை மாற்றி நல்ல எண்ணங்களைக் கொண்டு வர வேண்டும். ஆனால் இதை எப்படிச் செய்வது என்று யாரும் நமக்குக் கற்றுக் கொடுக்க வில்லை. வீட்டிலும், பள்ளியிலும் சொல்லிக் கொடுக்க வில்லை. இல்லையா? உன் பாட்டி ஒருவேளை உனக்குச் சொல்லியிருக்கக் கூடும். (கோபம் குறைய) ஒரு மூலையில் போய் பத்து வரை எண்ணு. அவ்வளவு தான். ஆனால்10 வரையோ 100 வரையோ எண்ணுவது இப்போது உதவுவதில்லை.
நீங்கள் உங்கள் மனதை கவனித்தால், உங்கள் மனம் கடந்த காலத்தில் நடந்ததை எண்ணி கோபம் கொள்கிறது. வருங்காலத்தில் நடக்கப் போவதை எண்ணி அச்சமுற்று கவலையில் ஆழ்கிறது. இரண்டும் நமக்கு உதவப் போவதில்லை. இல்லையா? கடந்த காலத்தைப் பற்றிக் கோபப் படுவதில் என்ன கிடைக்கும்? அது சென்று விட்டது. வருங்காலத்தைப் பற்றிக் கவலைப் படுவதால் என்ன நடக்கும்? அதுவும் அர்த்தமற்றது. தற்சமயம் உனக்கு உதவக் கூடியது தியானம் தான். மக்கள் சில நிமிடங்கள் தியானத்தில் இறங்கப் பழகுவார்களானால், தினமும் 10 நிமிடங்களாவது தியானம் செய்தால், மன அழுத்தத்தைப் போக்கி மகிழ்ச்சியடைய முடியும்.
நான் ஒரு வன்முறையற்ற சமுதாயம், நோயில்லாத உடல், குழப்பம் இல்லாத மனம், கட்டுப் பாடில்லாத அறிவு, சுழன்று சுழன்று கஷ்டப் படுத்தாத நினைவு, வருத்தமில்லாத ஆத்மா இவற்றைக் காண விரும்புகிறேன்.காண எவ்வளவு பேர் விரும்புகிறீர்கள்? (பார்வையாளர்கள் அனைவரும் கைகளை உயர்த்துகிறார்கள்) நம் குழந்தைகளுக்கு, வருங்கால சந்ததியினருக்கு, ஒரு நல்ல உலகத்தைக் கொடுக்க வேண்டும். அதிகமான அன்புள்ள, அதிகமான கருணையுள்ள உலகத்தை உருவாக்க வேண்டும். துப்பாக்கிகள் இல்லாத ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்கு போதை மருந்து தேவையில்லை. வன்முறை தேவையில்லை. அவர்கள் மேலும் மேலும் அன்பானவர்களாக வேண்டும். மனிதாபிமானம் உள்ளவர்களாக வேண்டும். கருணையுள்ள சமுதாயத்தில் வாழ வேண்டும். ஆரோக்கியமான சமுதாயத்தில் வாழ வேண்டும். நீங்களும் அப்படி விரும்ப வில்லையா? அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும்.
கே: இந்த பூமியில் நமது நோக்கம் என்ன?
குருதேவர்: இந்த பூமியில் நமது நோக்கமில்லாமல் எவைகள் இருக்கின்றன?: முதலில் எதெல்லாம் நமது நோக்கமாகக் கூடாது என்று ஒரு பட்டியல் போட வேண்டும். நீ துயரத்தில் உழலக் கூடாது. மற்றவர்களை துயரத்தில் ஆழ்த்தக் கூடாது. சரியா? இப்படியே, எதெல்லாம் உனது நோக்கம் இல்லை என்று தள்ளி விட்டால், உன்னுடைய நோக்கம் என்ன என்று தெரிந்து கொள்வாய்.
கே: மற்றவர்கள் எதிர்மறை எண்ணங்களுடன் இருக்கும்போது, அதில் பாதிக்கப் படாமல் எப்படி இருக்கலாம்.
குருதேவர்: நீ உன் ஆத்மாவுடன் இரு. சில குறைபாடுகளை ஏற்றுக் கொள். சில சமயம் குறைகளை ஏற்றுக் கொள்ளும் பொறுமை நம்மிடம் இல்லாததால் நாம் பாதிக்கப் படுகிறோம். சிலர் எதிர்மறை எண்ணங்களுடன் இருந்தால், அவர்களை சில சமயம் அப்படியே இருக்க விடு. அவர்கள் அப்படி நடக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு என்று நினை. (அவர்களை விட்டுப் பிடிக்கலாம்). நான் இங்கு வந்திருப்பது உங்களுடைய கவலைகளை எடுத்துச் செல்வதற்காகத் தான். உங்கள் பிரச்சினைகள், கவலைகளை என்னிடம் விட்டு விடுங்கள். உங்கள் முகத்தில் என்றும் மாறாத புன்னகையைக் காண விரும்புகிறேன்.
கே: நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியுமா?
 
குருதேவர்: வாழ்க்கைக்கு அடிப்படை தேவையானது, உணர்ச்சிகளை விட முக்கியமானது ஒன்று இருக்கிறது என்று அறியும் போது நாம் நம் உணர்ச்சிகளை சுலபமாகக் கடந்து செல்ல முடியும். அது தான் நம் ஆத்மா. உயிர் சக்தி. என்றுமே மாறாதது.
கே: அன்புக்கும், காம இச்சைக்கும் உள்ள வித்தியாசத்தைத் தெரிந்து கொள்வது எப்படி?
குருதேவர்: அன்பில் மற்றவருக்கு முக்கியத்துவம் இருக்கும். காம இச்சையில் உனக்கு முக்கியத்துவம் கொடுப்பாய்.
கே: குருதேவா! (மற்றவரின் கருத்தை) மனதில் ஏற்றுக் கொள்ளாமல் தடுப்பவர்களுக்கு எப்படி உதவலாம்?
குருதேவர்: இவ்வுலகில் பல விதமான மக்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். சிலருக்கு மனத் தடை இருக்கும். அது பரவாயில்லை. அவர்கள் அவர்களின் வேகத்திலேயே நடக்கட்டும். இந்த பூமியில் முயல்கள், மான்கள், நத்தைகள் எல்லாமே இருக்கின்றன. ஒரு நத்தையை முயல் போல் ஓடச் சொன்னால் முடியுமா? சிலர் நத்தையின் வேகத்தில் நடப்பார்கள். சிலர் மான்களைப் போல் வேகமாக ஓடுவார்கள். உலகம் இப்படித்தான் இருக்கும். புன்முறுவலோடு மேலே செல்.
கே: மற்றவர்களின் தவறை மன்னிக்கக் கஷ்டமாக இருக்கிறது.
குருதேவர்: மன்னிக்க வேண்டாம். அது உனக்கு சுலபமாக இருக்கிறதா? ஒருவரை மன்னிக்காமல் இருந்தால், நீ அவர்களைப் பற்றியே எல்லா நேரமும் சிந்தித்துக் கொண்டிருப்பாய். ஒருவர் மேல் உள்ள கோபத்தை அடக்கி வைப்பது சுலபமா? அட கடவுளே! எவ்வளவு சக்தி விரயமாகிறது. மற்றவர்களை மன்னிப்பது எதற்குத் தெரியுமா? உன் நன்மைக்காகத் தான்.
குற்றவாளியை, பொறியில் மாட்டிய இரை போல் பார்த்தால் மன்னிப்பது சுலபமாகி விடும். ஒவ்வொரு குற்றவாளியும், அறியாமல் தவறிழைத்திருக்கிறார்கள். அவர்களுடைய மனத்தின் சின்ன புத்தியினால் தவறு செய்திருக்கிறார்கள். இந்த மகத்தான, அழகான வாழ்க்கையைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. தன்னலம் காரணமாக, மற்றவர்களைப் பொருட்படுத்தாமல், மதி கெட்டு தவறு செய்திருக்கிறார்கள் . அதற்குக் காரணம் சின்ன புத்தி தான். அதனால் அவர்களை மன்னித்து விட வேண்டும். உனக்குக் கிடைத்த வாய்ப்புகள் போல், பெரிய மனத்தோடு காரியம் செய்ய, அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என்று தெரிந்து கொள். எனவே கருணையோடு அவர்களை மன்னித்து விடு.

உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பாருங்கள்


25 - ஆகஸ்ட் – 2012, டர்பன் - தென் ஆப்பிரிக்கா
நெருக்கமான சூழ்நிலையில், ஒருவருக்கொருவர் சுமூகமாக நட்புடன் இருக்கும் போது தான் உணர்வு மலர முடியும். இப்பொழுது நீங்கள் ஒருவருக்கொருவர் நெருக்கத்தை உணருகிறீர்களா?எல்லோரும் ஒரு சில நொடிகள் நம் பக்கத்தில் இருப்பவர், பின்னாலும் முன்னாலும் இருப்பவர்களை வாழ்த்தி அறிமுகப் படுத்திக் கொள்ளலாமா?
மிகவும் ஒழுங்கான, ஆசாரமான சூழ்நிலை உணர்வுக்கு மிகவும் இணக்கமாகாது. நீங்கள் உபசாரம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் இதயம் மூலமாக மற்றவரின் இதயத்தை உணர்வது அவசியம். இது தான் உண்மையான ஞானம். அறிவு பூர்வமான தொடர்பு தேவை இல்லை. அறிவு பூர்வமான சந்திப்பில் வாக்குவாதம் வரக்கூடும். ஆனால் இதய பூர்வமான நட்பில் உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற ஒரே மொழி தான் உள்ளது. இப்பொழுது எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு உன் வாழ்க்கையைப் பார். உனக்கு வாழ்வில் என்ன தேவை? எப்பொழுதாவது அமர்ந்து எனக்கு என் வாழ்க்கையில் என்ன தேவை என்று சிந்தித்திருக்கிறாயா? இதற்கு நேரமே இருப்பதில்லை. “நான் யார்?” என்று நம் சிந்தனைக்கு வருவதில்லை. யாரோ ஏதோ நமக்குச் சொல்வதை கற்றுக் கொள்கிறோம். நாம் நிறைய படித்து கல்வி கற்கிறோம். ஆனால் நான் யார்? எனக்கு என்ன தேவை? இந்தக் கேள்விகள் நம் மனதில் வருவது அரிது.
நீங்கள் உங்கள் 60,70,80 ஆண்டு வாழ்க்கையைப் பார்த்தால், இந்த 80 ஆண்டுகளை எப்படிக் கழித்திருக்கிறீர்கள். 40 ஆண்டுகள் தூக்கத்தில் கழிந்திருக்கிறது. 8 ஆண்டுகள் குளியல் மற்றும் கழிவரையில் இருந்திருக்கிறீர்கள். ஏறக் குறைய அதே சமயத்தை உணவு உண்ணுவதில் செலவழித்திருக்கிறீர்கள். 10 லிருந்து 15 ஆண்டுகள் பிரயாணத்திலும், வேலையிலும் கழிந்திருக்கும். அதிக பட்சம் 2 அல்லது 3 ஆண்டுகள் நம் வாழ்வில், மகிழ்ச்சியாக இருந்திருக்கிறோம். இல்லையா? நீங்கள் வாழ்வில் விரும்புவது மகிழ்ச்சியைத் தானே?
பழைய,புதிய புத்தகங்கள் எல்லாம் அதிக மகிழ்சியைப் பற்றி விவரிக்கின்றன. எல்லா மனிதர்களும், ஆண்கள் பெண்கள் அனைவரும், விரும்புவது மகிழ்ச்சியைத் தான் என்று பழைய நூல்களை எழுதியவர்களுத் தெரியும். மகிழ்ச்சி என்பது விலைக்கு வாங்கக் கூடிய பொருள் அல்ல. நீ எங்கு இருக்கிறாயோ, அங்கேயே அப்பொழுதிலேயே மகிழ்ச்சி இருக்கிறது. அந்த மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கும் வழிதான் தியானம். தியானம் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம் படுத்தும். அதிக மகிழ்ச்சியை அளிக்கும். இங்கேயும், அங்கேயும் நாம் தேடுவது நமக்குள்ளேயே இருக்கிறது.
நான் இங்கு வந்த காரணமே “நீங்கள் தேடுவது உங்களுக்குள் ஆழப் புதைந்திருக்கிறது, அந்த ஒளி, அந்த ஆத்மா உங்களிடம் மிக அன்பாயிருக்கிறது எதற்கும் கவலைப் பட வேண்டாம்” என்று சொல்வதற்காகத் தான். இது தான் நம் வாழ்வின் இலட்சியம். இல்லையா?
நம் வாழ்வின் நோக்கம் என்ன? எல்லோரையும் எழுப்பி. ஏய், விழித்துக் கொள். சிரி என்று சொல்வது தான். நீங்கள் மற்றவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த வேண்டும். உங்களுக்குத் தெரியும். நம்மிடம் எத்தனையோ பொருள்கள் இருந்தாலும் நாம் மகிழ்ச்சியோடு இருப்பதில்லை. நம்மிடம் ஏதாவது இல்லையென்றாலும் நாம் துக்கத்தோடு இருக்கிறோம்.
உங்களுக்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். இந்தியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்குக் குடி பெயர்ந்த ஒருவர் கென்யாவிலிருந்து லண்டனுக்கு வந்தார். இது பல நாள் முன்பு நிகழ்ந்தது. அவர் என்னிடம் வந்து குருதேவா! எனக்கு ஒரு பி.எம்.டபிள்யூ கார் கிடைக்க என்னை வாழ்த்துங்கள்” என்று கேட்டுக் கொண்டார். “கடவுள் விருப்பத்தால் அது உனக்குக் கிடைக்கும்” என்று வாழ்த்தினேன். 6 மாதம் கழித்து அவர் என்னைப் பார்த்த போது மகிழ்ச்சியோடு, “குருதேவா, எனக்கு அந்தக் கார் கிடைத்து விட்டது. ஆனால் பர்மிங்ஹாமில் தெருக்கள் மிகக் குறுகலாக இருப்பதால் அதை நிறுத்துவதற்கு இடமில்லாமல் கஷ்டமாக இருக்கிறது. அங்கும் இங்கும் இடித்து அதன் மேல் கோடு விழுகிறது. என்ன செய்வது” என்று சொன்னார்.பர்மிங்ஹாமில் தெருக்கள் மிகக் குறுகலாக இருக்கும்.
சில மாதங்களுக்குப் பின் அவரைப் பார்த்தபோது “இந்தக் காரை வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்படுகிறேன். இதை விற்க விரும்பினாலும், இந்தக் காரை வாங்குபவர் யாரும் இல்லை” என்று வருத்தத்துடன் சொன்னார். உன்னிடம் இல்லாத போது துக்கப் பட்டாய். இப்போது நீ விரும்பியது உன்னிடம் இருக்கும் போதும் மகிழ்ச்சி இல்லை.
வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வையில், அடிப்படையில ஏதோ தவறு இருக்கிறது. மகிழ்ச்சி என்பது நம்மிடம் இருக்கும் ஒரு பொருளினாலோ, இல்லாத ஒன்றாலோ கிடைப்பதில்லை. மகிழ்ச்சி என்பது நம் மன நிலையைப் பொறுத்தது தான் என்ற அறிவு பிறக்க வேண்டும்.
உங்களுக்குத் தெரியுமா? ஐரோப்பியர்களுள் 30% பேர் மனச் சிதைவால் (டிப்ரஷன்) பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த விவரம் சென்ற முறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது கிடைத்தது. இப்பொழுது அந்தத் தொகை அதிகமாக ஆகியிருக்கலாம்.பூடான் போன்ற சிறு நாடுகளில் மனச் சிதைவால் பாதிக்கப் பட்டவர்கள் யாரும் இல்லை. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.பங்களாதேஷ் மக்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தாலும் பலர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்காவின் நிலை எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும், நீங்கள் அனைவரும் இன்று முதல் மகிழ்ச்சியாக இருக்க, மற்றவர்களிடம் மகிழ்ச்சியைப் பரப்ப உறுதியாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு நல்ல எண்ணம் இல்லையா? பார்வையாளர்கள் தலையை அசைத்து “ஆம்” என்கிறார்கள்.
வன்முறை இல்லாத சமுதாயம், நோயில்லாத உடல், அழுத்தமில்லாத மனம், கட்டுப்பாடில்லாத அறிவு, சுழன்று சுழன்று வருத்தப்படுத்தாத நினைவு, துக்கமில்லாத ஆத்மா ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமை. (குருதேவர் வெளியில் பார்த்து சத்தமான இசை அரங்கின் வெளியிலிருந்து வருவதைக் கேட்கிறார்.)
 
நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுவதைக் கலைக்க இந்தச் சத்தம் வருகிறது. சமஸ்கிருத மொழியில் ஒரு பழமொழி இருக்கிறது. “ஷ்ரேயன்ஸி பாஹூ விக்னானி”. ஏதாவது விலைமதிக்க முடியாத பொருளை நாம் நாடும் போது நிறைய தடைகளும், கலைக்கும் சக்திகளும் அந்தப் பொருளைப் பெற முடியாமல் செய்யும். (இந்த ஸ்லோகம் பகவான் கிருஷ்ணர் அவருடைய பக்தரான உத்தவருக்குச் சொன்னது.
கலைக்கும் சக்திகள் வலுவடைந்தால் அந்தப் பொருள் மிகவும் விலை மதிக்க முடியாததென்று கொள்ளலாம். நீ ஏதாவது கெட்ட காரியம் செய்ய வேண்டுமென்று விரும்பினால் அதற்குத் தடை வராது. அதுவே நீ நல்ல காரியம் செய்ய விரும்பி, காரியத்தைத் துவங்கினால் அதற்குப் பல தடைகள் வரக் கூடும்.
இந்த உலகம் ஐந்து பொருள்களால் (பஞ்ச பூதங்கள்) உருவானது. இன்றைய விஞ்ஞானிகளும் இதைச் சொல்கிறார்கள். பழங்காலத்து ரிஷிகளும் இதையே சொன்னார்கள். இந்த ஐந்து பொருட்கள் – பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாயம். அதனால் தான் இவ்வுலகை சமஸ்கிருத மொழியில் “பிரபஞ்ச” என்று அழைக்கிறார்கள். “பஞ்ச” என்றால் ஐந்து. “ப்ரபஞ்ச” என்றால் ஐந்து பொருள்களின் சேர்க்கை. உலகம் இந்த ஐந்து பொருள்களால் ஆனது. நம் உடலும் இந்த ஐந்து பொருள்களால் ஆனது. நம் உடலில் 60% நீர். உடல் உஷ்ணம் நெருப்பைக் குறிக்கும். நம் உடல் பூமியையும் அடையாளமாகக் கொள்கிறது. உடலில் உள்ள காலியிடங்கள் ஆகாயத்தைக் குறிக்கிறது. எனவே நம் உடல் ஐந்து பொருள்களால் ஆனது. உலகில் உள்ள அனைத்துமே இந்த ஐந்து பொருள்களால் ஆனது.
இப்பொழுது ஒரு தியானம் செய்யலாம். தியானத்துக்குப் பின் யக்ஞம் செய்யலாம். யக்ஞம் என்பது உலக தத்துவத்தை ஒன்று சேர்ப்பது. இவ்வுலகிற்கு கோடிக் கணக்கான கதிர்கள் வருகின்றன. அண்ட பெரு வெளியின் இயக்கமும், உடலில் உள்ள நுண்ணிய செல்களின் இயக்கமும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவை. ஒரு சிறிய வண்ணத்துப் பூச்சியின் இறக்கைகள் அசையும் போது மேகங்களின் மீது தன் பிரபாவத்தைக் காட்டுகிறது. இதைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? அமேசான் காட்டில் வண்ணத்துப் பூச்சி இறக்கைகளை அடிப்பதால் துவங்கும் அலைகள் சீனா தேசத்தின் மேல் இருக்கும் மேகங்களைச் சென்று அடைய முடியும். ஒரு குரங்கு செய்யும் செயல் எல்லா குரங்குகளையும் பாதிக்கிறது. இதைப் பற்றி ஆப்பிரிக்காவில் கேட்டிருக்கிறீர்களா?
ஆப்பிரிக்கா “பெரிய ஐந்து” என்று சொல்லப் படுகிறது. “பெரிய ஐந்து” இருக்கும் நிலம். [ஆப்பிரிக்காவில் வேட்டையாட மிகவும் கஷ்டமான ஐந்து மிருகங்கள் – சிங்கம், ஆப்பிரிக்க யானை, கேப் எருமை, சிறுத்தை மற்றும் ரெய்னோசிரஸ் (காண்டா மிருகம்). ஒவ்வொரு மிருகமும் ஒரு அலைத் தன்மை கொண்டது. அண்ட வெளியிலிருந்து அந்த மின்காந்த அலை அதிர்வு அந்த மிருகத்தின் மூலம் பூமிக்கு வருகிறது. ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு விதமான அலை அதிர்வை பூமிக்குக் கொண்டு வருகிறது. அதனால் ஒவ்வொரு பிராணியும் இந்த பூமிக்கு மிகவும் அவசியம்.
நம்முடைய வேத காலத்து ரிஷிகள் இதை அறிந்திருந்தார்கள். ஒவ்வொரு பறவையும், ஏன் ஒவ்வொரு விதையும் ஓர் அலை அதிர்வோடு தொடர்பு கொண்டிருக்கிறது. எல்லாமே எல்லாவற்றுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது. நம் உடல் ஒரு செல்லிலிருந்து பிறந்தாலும், அந்த செல் 33 விதமான க்ரோமொசோம்களைக் கொண்டது. நம் டி என் ஏ யில் இருக்கும் பல விதமான க்ரோமோசோம்கள் நம் உடலின் மற்ற பாகங்கள் உருவாகி வளர காரணமாயிருக்கிறது.
அண்ட வெளியின் பல விதமான அதிர்வுகள் உடலின் பல பாகங்களோடு தொடர்பு கொண்டவை. அதனால் அண்ட வெளியும், உடலின் நுண்ணிய செல்களும் தனித் தன்மையோடு தொடர்பு கொண்டிருக்கின்றன. அதனால் தான், “நாம் ஆகாயத்திலிருந்து, காற்றுக்கும், காற்றிலிருந்து நெருப்புக்கும், நீருக்கும், பிறகு பூமிக்கும் செல்லும்போது இவ்வுலகம் தோன்றியது” என்று  நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
அதனால் தான் யக்ஞம் செய்கிறோம். யக்ஞம் செய்யும் போது உலகம் தோன்றியதற்கு எதிரான திசையில் பூமியிலிருந்து ஆகாயத்துக்குச் செல்கிறோம்.  நிலத்தில் விளையும் திவ்வியமான பயிரை, பூண்டுகளை நெய்யுடன் (நீர்) யக்ஞத்துக்கான அக்னியில் (நெருப்பும், காற்றும்) விட்டு, ஜபிக்கும் மந்திரங்கள் ஆகாயத்தைச் சென்றடையும். யக்ஞம் உலக அமைதிக்காகச் செய்யப் படுகிறது. யக்ஞம் செய்வதன் நோக்கம் என்ன? முதன்மையாக நல்ல ஆரோக்கியம் மற்றும் செல்வம், மன அமைதி, மகிழ்ச்சி, எல்லோரும் கூடி இருப்பது, நம்மைச் சூழ்ந்திருக்கும் எதிர்மறைச் சக்திகளை அழிப்பது, இவற்றுக்காக யக்ஞம் செய்கிறோம்.
எதிர்மறைச் சக்திகள் உன்னைச் சூழும் போது, கோபம், பொறாமை, பேராசை, சலிப்பு, வெறுப்பு முதலியவற்றின் அதிர்வலைகள் உன்னிடமிருந்து சுற்றுப் புறத்தில் பரவும். அப்படிப்பட்ட எதிர்மறையான அதிர்வலைகளை அழிப்பதே யக்ஞத்தின் நோக்கம். அதனால் தான் இந்த முறை தென் ஆப்பிரிக்காவில் யக்ஞம் செய்வதைத் துவங்க நினைத்தேன். சமீபத்தில் நடந்த துரதிருஷ்ட வசமான சம்பவங்களில் பல சிறுவர்கள் இறந்ததாகக் கேள்விப் பட்டேன். எனவே, எல்லோருக்கும், அமைதியையும், செல்வத்தையும், மகிழ்ச்சியையும் வேண்டி,வேத மந்திரங்களுடன் ஒரு யக்ஞம் செய்யலாம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் செய்தது போல், சிறப்பான பயிர் பூண்டுகளை, நெய்யுடன் அக்னிக்கு அளித்து, மந்திரங்களை ஜபிக்கலாம். நீங்கள் எல்லோரும் இந்த யக்ஞத்தில் கலந்து கொள்ளலாம்.
இது ஒரு சிறிய பூஜையைப் போன்றது. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, நம்முடைய அமைதி, செல்வம், மகிழ்ச்சி, திருப்தி, மற்றவர்களுடன் நல்லுறவு, ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு, ஒருவருக்கு ஒருவர் உதவும் பண்பு முதலியவற்றைக் கொடுக்குமாறு எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கேட்டுக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் விட நமக்கு மனத் திருப்தி மிகவும் அவசியம். நம் மனம் திருப்தி அடையும் போது, நம் தேவைகள் பூர்த்தி அடைந்து விட்டதை நாம் உணரும்போது, நாம் மற்றவர்களை வாழ்த்த தகுதி பெறுவோம். நம் விருப்பங்கள் தானாகவே நிறைவேறுவதை நாம் பார்ப்பது மட்டும் அல்ல. நாம் மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் தகுதியானவராகிறோம். மற்றவர்களை வாழ்த்தி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் சிறப்பான சக்தி திருப்தியுடன் இருக்கும். ஆத்மாவுக்கு உண்டு. எனவே இப்போது ஒரு யக்ஞம் நடத்தி, 10000 வருடங்களாக ஜபித்து வரும் மந்திரங்களை ஜபிக்கலாம். யக்ஞம் நடக்கும் போது கண்களை மூடி மந்திர ஜபத்தின் ஒலியைக் கேட்டு (ஷவரில் குளிப்பது போன்ற உணர்வில்) நம்மைத் தூய்மைப் படுத்திக் கொள்ளலாம்.
குருதேவர் எல்லோரையும் தியானத்தில் ஈடுபட வைக்கிறார்.
கே: குருதேவா! வாழ்க்கையில் இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு மிக்க நன்றி. நான் சரியான பாதையில் செல்கிறேன்.எதற்காகப் பிறவி எடுத்தேனோ,அந்த நோக்கத்தை அடையும் காரியங்களை சரியாக முடிக்கிறேன் என்று எப்படி தெரிந்து கொள்ளலாம்? தயவு செய்து சொல்லுங்கள்.
குருதேவர்: உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. இது சரி என்று உனக்கு மனதில் படும். அதை நீ செய்யும் போது, நீ நல்ல உணர்ச்சியை அனுபவிப்பாய். இன்னொன்று சொல்கிறேன். நீ சரியான பாதையில் இருக்கும் போது உனக்கு சந்தேகம் வரும். இதைக் கவனித்திருக்கிறீர்களா? ஒருவரின் நேர்மையைச் சந்தேகிப்போம். அவருடைய நேர்மையின்மையைச் சந்தேகிக்க மாட்டோம். அவர் நேர்மையற்றவர் என்று யாரோ சொன்னால் நம்பி விடுவோம். அதை பரிசீலிக்க மாட்டோம். நம்முடன் மிக நெருங்கியவரிடம், “நீ, உண்மையாகவே என்னை விரும்புகிறாயா?” என்று கேட்போம். அவர் “நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்” என்று சொல்லும் போது “உண்மையாகவா?” என்று கேட்போம்.
ஒருவர் “உன்னிடம் கோபமாக இருக்கிறேன்” என்று சொல்லும்போது “உண்மையாகவா?” என்று கேட்க மாட்டோம். அதேபோல் எப்போதும் நமக்கு நம் திறமையைப் பற்றி சந்தேகம் வரும். திறமையின்மையைப் பற்றி சந்தேகம் எப்போதுமே வருவதில்லை. யாரோ ஒருவர் “நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?” என்று கேட்டால் “நிச்சயமாகத் தெரியவில்லை” என்று சொல்வாய். ஆனால் மனச்சிதைவு (டிப்ரஷன்) அடைந்திருப்பதைப் பற்றி சந்தேகம் வருவதில்லை. அதை உறுதியாக நம்புகிறாய். எதிர்மறை தன்மைகளைப் பற்றி உறுதியாகவும், நல்ல திறமைகள், குணங்கள் பற்றி சந்தேகமடைந்து மனதுக்குள் வினாக்கள் எழுப்புகிறோம். (நிஜமாகவே நான் மகிழ்ச்சியோடு இருக்கிறேனா? என்னால் இதைச் செய்ய முடியுமா?) எனவே உனக்கு சந்தேகம் வரும் நேரங்களில் ஏதோ நல்லவைகள் இருக்கும்.
கே: இந்தப் பிறவியில் நாம் கரையேறுவதற்கு (முக்தியடைய) என்ன செய்ய வேண்டும்? நம்மைச் சுற்றி உள்ள எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை எப்படி அகற்றலாம்?
குருதேவர்: உங்கள் பிரச்சினைகளை இங்கு விட்டு விடச் சொன்னேன்.உங்களுடன் வந்த உங்களை தொந்தரவு செய்யும் குடும்பத்தினரை அல்ல. (சிரிப்பு). ஒரு முறை ஆசிரமத்தில் “உங்கள் பிரச்சினைகளை இங்கு விட்டு விட்டுச் செல்லுங்கள்” என்று சொன்ன போது ஒரு பெண் “என் மாமியார் தான் என்னுடைய பெரிய பிரச்சினை. அவளை இங்கே விட்டு விட்டுச் செல்லலாமா? “ என்று கேட்டாள். “உன் மாமியாரையும் கேட்கிறேன். அவள் உன்னை இங்கு விட்டு விட்டுச் செல்ல விரும்பினால் என்ன செய்வது?” என்று நான் சொன்னேன்.
எனவே பிரச்சினைகள், சவால்கள் இல்லாமல் வாழ்க்கை இருக்க முடியாது. வாழ்வில் பிரச்சினைகளையும், பல் வேறு மனநிலை கொண்டவர்களையும் சந்திக்க வேண்டி வரும். உன் பார்வையை விரிவாக்கி, சின்னச் சின்ன விஷயங்களை (இப்போது அவை மிகப் பெரியதாகத் தெரியலாம்) பொறுத்துக் கொண்டால் உனக்கு நல்லது.
முதலாவது : எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர் என்று நீ நினைத்தால் அவரிடமிருந்து தூர விலகி விடு.
இரண்டாவது : அவர் எப்போதும் அப்படியே இருக்க மாட்டார் என்று தெரிந்து கொள். காலம் செல்லச் செல்ல அவர் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மாறுவார்.
மூன்றாவது : “சரி, அவர் அப்படியே இருக்கட்டும். அவரை சமாளிக்க நான் புது புது தகுதிகளை என்னுள் வளர்த்துக் கொள்ளலாம். என்னுடைய சாமர்த்தியம் அதிகரிக்கும். என் தகுதிகள் வளர அவர் ஒரு காரணம்” என்று நினை.
கடைசியாக : கடவுளிடம் விட்டு விடு. கடவுள் உன் பிரச்சினையை தீர்த்து விடுவார் என்று விட்டு விடு.
மகாத்மா காந்திக்கு பிடித்த பஜனையில் “ஈஸ்வர், அல்லா தேரோ நாம், சப்கோ சன்மதி தே பகவான்” என்று வரும். “எல்லோருடைய மனத்தையும், அறிவையும் தூய்மையாக்கி நல்வழியில் செலுத்து” என்று இறைவனிடம் வேண்டுகிறோம். இதே தான் காயத்ரி மந்திரத்திலும் இருக்கிறது.
“தியோ யோ ந ப்ரசோதயாத்” இறைவன் என் அறிவுச் சுடரைத் தூண்டட்டும்.
என் அறிவு சின்னச் சின்ன கருத்துக்களிலும், எண்ணங்களிலும் சிக்க வேண்டாம். எப்போதும் எல்லாம் வல்ல இறைவனின் அருள் ஒளியை பிரகாசப்படுத்தி அவர் விருப்பத்தின் படி நடக்கட்டும். மனித சமுதாயத்துக்குக் கிடைத்த பல அருமையான மந்திரங்களுள் காயத்ரி மந்திரம் ஒரு சிறப்பான மந்திரமாகும். இறைவனின் மனத்தின் பிரகாசம் என் மனத்தில், என் எண்ணத்தில், என் அறிவில் ப்ரதிபலித்து ஒளிரட்டும். என் அறிவு இறைவனின் தத்துவப்படி செயல் பட வேண்டும்.
கே: என்னுடன் மிக நெருங்கியிருப்பவர் பொய் மேல் பொய்யாகச் சொல்லி என்னை ஏமாற்றுகிறார். இது அவருடைய இரண்டாவது இயல்பாகி விட்டது.முகபாவம் மாறாமல் பொய் சொல்லுகிறார். சிலர் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? அவர்களுடைய நிலைமை என்ன ஆகும்? தயவு செய்து என் மன அமைதிக்கு உதவுங்கள்.
குருதேவர்: இறைவனுக்கு வேடிக்கை விளையாட்டுகளில் பிரியம் இருக்கிறது என்பதை நினைவுக்கு கொண்டு வா. எல்லோருமே உன்னைப் போல் இருந்தால், நீங்கள் எல்லோரும் “போர்ட்” கம்பெனி போல் இருப்பீர்கள். உலகம் “போர்ட்” கம்பெனி அல்ல. ஒரே மாதிரி கார்களை உற்பத்தி செய்வதற்கு. அவர்கள் கூட ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் கார்களின் மாடல்களை மாற்றுகிறார்கள். இறைவன் வேடிக்கை விளையாட்டில் பிரியம் கொண்டவர். உன்னைச் சுற்றி பல விதமான மனிதர்களை நடமாடச் செய்கிறார். உன்னுள் எட்டிப் பார். உன்னிடம் எவ்வளவு எதிர்மறை குணங்கள் இருக்கின்றன.எவ்வளவு நல்ல குணங்கள் இருக்கின்றன. நீ எப்படி எதிர்மறை குணங்களை தவிர்த்து நல்ல குணங்களை வளர்க்கலாம் என்று எண்ணிப் பார். உன்னால் என்ன செய்ய முடியுமோ, அதைப் பற்றித் தான் நீ எண்ண வேண்டும். மற்றவர்களின் குறைகளை எப்படி நீக்குவது என்பதை இப்போதைக்கு அவர்களிடமே விட்டு விடு.
நீ அவர்களுக்குக் கற்பிக்க முடியும் என்றால் கருணையோடு அதைச் செய். அல்லது அருகில் இருக்கும் வாழும் கலை ஆசிரியரிடம் அவரை அழைத்துச் செல். வாழும் கலை ஆசிரியரால் அவர் மாறுவதற்கு உதவி செய்ய முடியும். நீ மிகவும் கருணையுள்ளவனானால், அவர் நேர்மையான வராக மாற, அவர் வாழ்க்கை சிறப்பதற்காக பிரார்த்தனை செய். ஆனால், நான் முன்பு கூறிய படி எல்லாவிதமான மனிதர்களும் இந்த பூமிக்கு அவசியம். அவர்கள் இந்த உலகை வண்ண மயமாக ஆக்குகிறார்கள். தெரிந்ததா? அவர்கள் உன்னுடைய சில பொத்தான்களை அழுத்தி, உன்னை உணர்ச்சி வசப்பட வைக்கிறார்கள். நீ பதறுகிறாயா? பொறுமையாக எதிர்கொள்கிறாயா? என்று பார்க்கிறார்கள்.
கே: ஜெய் குருதேவ்! இளைஞர்களும் ஆன்மீகமும் என்பதைப் பற்றி பேச வேண்டுகிறேன்.
குருதேவர்: நாம் ஸ்தூல உடலும், சூட்சும (நுணுக்கமான) உடலும் கொண்டு உருவாக்கப் பட்டவர்கள். நம் ஸ்துல உடல், கார்போ ஹைட்ரேட்டுகள், புரோட்டின்கள், அமினோ அமிலங்கள், விட்டமின்கள் ஆகியவைகளால் ஆனது. நம் சூட்சும உடல், தாராள குணம், அன்பு, கருணை, சக்தி, பரந்த மனம், முழுமை, நேர்மை, உண்மை, அறிவு, உணர்ச்சி இவைகளை அடக்கியது. இந்த சூட்சும குணங்களான அழகு, அன்பு முதலியவைகளை வளர்ப்பது தான் ஆன்மீகம். தியானம், இசை, மந்திர ஜபம்,சேவை முதலியவை ஆன்மீகத்தின் அங்கங்கள். ஆன்மீகம் உன்னை இளமையாக வைக்கிறது. உனக்கு சக்தியை அளிக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா? நான் இப்போது தான் 15 மணி நேர விமான பயணம் முடிந்து இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன். அரை மணி நேரத்தில் உடை மாற்றிக் கொண்டு இங்கு அவசரமாக வந்து விட்டேன். விமான பயணத்தின் களைப்பு என்னிடம் தெரிகிறதா? (பார்வையாளர்கள் “இல்லை” என்று சொல்கிறார்கள்). “குருதேவா! நாங்கள் கேப்டவுனுக்கு விமானத்தில் செல்லும்போது களைப்படைகிறோம். உங்களுக்குக் களைப்பாக இல்லையா” என்று யாரோ ஒருவர் என்னைக் கேட்டார்.
மனம் புத்தம் புதியதாக இருக்கும்போது, மனம் அதன் மூலத்தோடு (ஆத்மாவோடு) இணைந்திருக்கும் போது எப்போதுமே ஒரு புதுமையான மலர்ச்சி இருக்கும். இளமை என்பது ஆத்மாவுடன் இணைந்திருப்பது. இளமை என்பது எல்லோருடனும் தொடர்பு கொள்ளும் திறமை. இளைஞர்களுக்கு இந்த குணம் அமைய ஆன்மீகம் உதவும்.
கே: நம் அன்புக்குரியவர் இறந்தபின், பொதுவாக நம்மைத் தேற்றுவதற்காக, அவர் உன்னோடு எப்பொழுதும் இருப்பார் என்று சொல்வது வழக்கம். அது உண்மையா? இறந்தபின்னும் அவர் வாழ்வில் நம்மை வழி நடத்திச் செல்வாரா?
குருதேவர்: ஏன் நீ அவர்களை சற்று நேரம் சுதந்திரமாக இருக்க விட்டு விடக் கூடாது? அவர்கள் இந்த உலகத்தில் நிறைய (சுக துக்கங்களை) அனுபவித்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவர்கள் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும். அவர்களுக்குப் பிடித்த எதையாவது செய்யட்டும். அவர்களும் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடு படட்டும். அவர்கள் ஏன் எப்பொழுதும் உன்னை வழி நடத்த வேண்டும்? (சிரிப்பு) வழி காட்டுவதற்கு என்ன இருக்கிறது? ஒரு ரயில் வண்டியில் அமர்ந்திருப்பது போல் தான் நம் வாழ்க்கையும். வண்டி நின்ற பின் நீ இறங்கப் போகிறாய். போக வேண்டிய இடம் முன்பே நிச்சயிக்கப் பட்டிருக்கிறது. எல்லோரும் ஒரு நாள் இறக்கத் தான் வேண்டும். இறந்த பின் மற்றொரு பரிமாணத்தைப் பார்ப்பாய். எனவே அதைப் பற்றிக் கவலைப் படாதே.
நீ மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் இருந்தால் உன் அமைதி இந்த உலகில் இருந்து அந்த உலகத்தையும் சென்றடையும். நீ பூரணமான அன்பும், பக்தியும் கொண்டிருந்தால் அதில் ஒரு பகுதி, அதிலிருந்து ஒரு ஒளிக்கதிர் அவர்களையும் (இறந்தவர்களையும்) சென்றடையும். அவர்களும் மகிழ்வார்கள். நீ செய்யும் நல்ல சேவைகள், உனக்குப் புண்ணியத்தைக் கொடுக்கும். அந்த புண்ணியத்தில் ஒரு பகுதி இறந்தவர்களுக்கும் போய்ச் சேரும்.
கே: செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யாமல் ஒத்திப்போடும் (காலதாமதம் செய்யும்) பழக்கத்தை எப்படி நீக்குவது?
குருதேவர் : இதற்கான விடை நான் அடுத்த ஆண்டு சொல்கிறேன். (சிரிப்பு). உதாரணத்துக்கு. நீ ஒரு தையல் காரரிடம், தீபாவளிக்கு அணிவதற்காக உடை தைக்கக் கொடுக்கிறாய் என்று வைத்துக் கொள்.அல்லது உன் கல்யாணத்துக்காக உடை தைக்கக் கொடுத்திருக்கிறாய். கல்யாணத்துக்கு ஒருவாரம் முன்பு உடை தயாராக இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்ற போது தையல் காரர் அதை ஒத்திப் போட்டு 6 மாதத்துக்குள் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னால் உன் மன நிலை எப்படி இருக்கும்?
உனக்குப் பல்வலி என்று வைத்துக் கொள். ஒரு பல் டாக்டரிடம் செல்ல வேண்டியிருக்கிறது. உன் பல் டாக்டர் 3 மாதத்துக்குப் பின் வா. ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறேன் என்று சொன்னால் நீ என்ன செய்வாய்? உன் பல் டாக்டர் ஒத்தி வைப்பதை நீ விரும்ப வில்லை. உன் தையல் காரர் ஒத்தி வைப்பதை நீ விரும்ப வில்லை. உனக்குத் தேவையான எந்த சேவையும் ஒத்தி வைக்கப் பட்டால், நீ அதை விரும்ப வில்லை. எல்லோரும் உடனுக்குடன் உனக்குத் தேவையானதைச் செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்.
நீ கேட்ட கேள்விக்குக் கூட உடனே சரியான விடை வேண்டும். சரியா? ஆனால் நீ மட்டும் நீ செய்ய வேண்டிய வேலைகளை ஒத்திப் போட விரும்புகிறாய். விழித்துக் கொள்! இப்போதே விழித்துக்கொள்! (செய்ய வேண்டியவைகளை ஒத்திப் போடாதே) 

நம்பிக்கை முக்கியமானதா???


13, ஆகஸ்ட், 2012 - பெங்களூரு, இந்தியா

இன்றுடன் உங்கள் மௌனம் முடிந்துவிட்டது என்று குருதேவ் முதுநிலை பயிற்சியாளர்களுக்கு அறிவிக்கிறார்.
 

குருதேவ்: ஏரிக்கரையோரம், ஒரு பயிற்சியாளர் மற்றொருவரிடம் கேட்கிறார் " எப்போது இந்த மௌனம் முடியும்?" மற்றவர் அவரிடம் " நாளை காலையுடன் முடிந்து விடும்" என்கிறார். (சிரிப்பு). 
இப்படியும் சிலர் மௌனம் அனுஷ்டிக்கிறார்கள்! உண்மையான  ஈடுபாட்டுடன் அனுஷ்டிப்பவர்களும் இருக்கிறார்கள். 
 

மௌனத்தின் போது நீங்கள் உங்கள் சக்தி அனைத்தையும் சேமிக்கிறீர்கள். பேசுவதன் மூலம் சக்தி நிறைய செலவழிந்து விடுகிறது.அதனால்தான் சில காலம்  மௌனம் அனுஷ்டிப்பது நல்லது. வருடத்தில் இரண்டு மூன்று தடவைகள் அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை  மௌன பயிற்ச்சி எடுத்துக் கொளவது நல்லது. இதனால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.உடல், மற்றும் மன ரீதியாக பல நன்மைகள் ஏற்படுகின்றன. நரம்பு மண்டலத்தில் உள்ள அழுத்தம் வெளியாகிறது. புத்துணர்ச்சி ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகிறது. அத்துடன் மௌனத்தின் பிறகு, நமது சொற்கள் புடமிட்டப்பட்டு தெளிவாகின்றன. கூறுவ தெல்லாம் நடக்க ஆரம்பிக்கின்றன. அதனால்தான் "சாதனா "- பயிற்ச்சிகள் முக்யத்துவம் வாய்ந்ததாகின்றன. 

கே: நம்பிக்கை எந்த அளவிற்கு முக்யத்துவம் வாய்ந்தது? 
 
குருதேவ்: நம்பிக்கை இன்றி நீங்கள் வாழ முடியாது. நீங்கள் காரில் வந்திருந்து அதை வாகனங்கள் நிறுத்துமிடத்தில் விட்டு விட்டு இங்கு வந்து அமர்ந்திருந்தால் திரும்பிப் போகும் பொழுது உங்கள் கார் அங்கே இருக்கும் என்று நம்புகிறீர்கள். அல்லவா? இந்த நம்பிக்கை இல்லாமல் நீங்கள் வாழ முடியுமா?முடியாதல்லவா? ஆகவே முதலில் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். 
 

மூன்று விதமான நம்பிக்கைகள் இருக்கின்றன.
 

1.   உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை. அது இல்லாத நிலை '' பாரநோயா" என்கிற வியாதியாகும்.

2.   உங்களைச் சுற்றி உள்ளவர்களின் நல்லெண்ணத்தின் மீது நம்பிக்கை.உலகில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று நம்பிக்கை அவசியம். இல்லையெனில் இந்த சமுதாயத்தில் ஒரு அங்குலம் கூட நகர முடியாது.

3.   அறிவுக்குப் புலப்படாத, மறைபொருளாய் இவ்வுலக இயக்கும் சக்தியின் மீது நம்பிக்கை. இந்த மூன்றில் முதல் இரண்டும் மிக அவசியமானவை. மூன்றாவது வாழ்வைப் பரிமளிக்க  செய்யும். 
 

கே: முயற்சிகள் எடுத்தும் வெற்றி கிட்டவில்லையே? 
 

குருதேவ்: முயற்சி மட்டுமே வெற்றியைத் தராது. நம்பிக்கையும்,முழு ஈடுபாடும் தேவை. வெறும் ஈடுபாடு மட்டும் போதாது. முயற்சி , நம்பிக்கை, ஈடுபாடு இவை அனைத்துமே வெற்றிக்கு வழி வகுக்கும்.
 
 
கே: அகங்காரத்தைப் பற்றிக் கூறுங்கள்.  
 

குருதேவ்: அன்பில் தோல்வியும் ஒரு வெற்றி, ஆனால் அகங்காரத்தில் வெற்றியும் தோல்வியே.! 
 

கே: குருதேவ்! பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறுகிறார் " உங்களுக்கு எது இயல்பாக வருகிறதோ அது முழு நிறைவானதாக இல்லாவிடினும் அதையே செய்து கொண்டிருங்கள்" என்கிறார். இதுபற்றிக் கூறுங்கள். 
 

குருதேவ்: ஆம்.உங்கள் குண இயல்புப் படியே  இருங்கள். செயற்கை தன்மை வேண்டாம். எது உங்களியல்பு இல்லையோ அதை முன்னிறுத்த வேண்டாம். ஆனால் குருதேவ் இவ்வாறு கூறியிருக்கிறார் என்று ஒருவரின் இறுதி யாத்திரையின் போது நடனமாட வேண்டும் போல் தோன்றுகிறது இயல்பாக இருக்க வேண்டும் என்று  ஆடி, கைதட்டிக் களிக்காதீர்கள் அது சரியல்ல. மரபையும் பின்பற்ற வேண்டும். அதுபோல, குருதேவ் "ஒரு உலகம் ஒரு குடும்பம் அனைவரையும் அரவணைத்து கொள்ள வேண்டும்" என்று கூறி இருக்கிறார் என்று  தெருவில் நடந்து கொண்டிருக்கும் பெண்ணை அணைத்து, எல்லாமே என்னுடையது" என்றால் உதை தான்  கிடைக்கும். எல்லாமே ஒன்று,அனைத்தும் என்னிலொரு பகுதி என்கிற நிலையான 'பிரம்ம பாவம்' என்பதை வளர்த்து கொள்வது நல்லது. அதற்காக மற்றவர் பையிலிருந்து எடுத்து அது என்னுடையது என்பது தவறு. 
 

கே: குருதேவ்! நான் ஒரு சுவாரஸ்யமில்லாதவன் என்று மக்கள் என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். நான் என்ன செய்வது? 
 

குருதேவ்: மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப் படாதீர்கள். ஒரு குறிக்கோளை எடுத்துக் கொண்டு அதை நோக்கிச் செல்லுங்கள். தனியாகவே என்றாலும் பரவாயில்லை, குறிக்கோளை அடையுங்கள். பின்னர் எல்லோரும் சேர்ந்து கொள்வார்கள். 
 

நான் கூட என்னை சுவாரஸ்யமில்லாதவன் என்று உணர்ந்திருக்கிறேன். நான்  இளைஞனாக இருந்தபோது அனைவரும் கிரிக்கெட்டைப் பற்றி தான் பேசுவார்கள். எனக்கு அதில் ஈடுபாடு இல்லாததால் நான் அவர்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஐந்து நாட்களும் ரேடியோவில் காதை நுழைத்து விமரிசனங்களைக் கவனித்து கொண்டிருப்பார்கள். அதையே பேசிக்கொண்டிருப்பார்கள்.எனக்கு அதில் விருப்பம் இல்லாததால் என்ன பேசுவது என்றே தெரியாது.
நீங்கள் உங்கள் பாதையை அமைத்துக் கொண்டு அதில் நடங்கள். உங்களை பற்றியும்,  மற்றவர்களை பற்றியும் மதிப்பீடு செய்ய வேண்டாம். 
 

கே: குருதேவ், பலவற்றிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்கின்ற போது சரியான ஒன்று எது என்று எப்படித் தெரிந்து கொள்வது? அதுவும் அனைத்துமே ஒரே அளவில் நல்லவையாக இருக்கும் போது அவற்றில் மிகச் சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பது எப்படி? 
 
குருதேவ்: சரியான தேர்வு என்பது தானாகவே தோன்றும்.அது போன்ற ஒரு சூழ்நிலை உண்டாகும் போது பொறுமையோடு காத்திருங்கள். தானாகவே நிகழும்.
 
கே: நானும் என் சகோதரனும் ஒரே மாதிரி வளர்க்கப்பட்டோம்.ஆனாலும் நாங்கள் இருவரும் வித்தியாசமாக இருக்கின்றோம். எப்படி?
 
குருதேவ்: இது ஒரு ஆழமான அறிவியல். நீங்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
 
அண்ட நுணுக்கமாகிய  உயிர், பேரளவினதாகிய முழுமையான அண்டம் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. உண்மையில் இவை இரண்டும் ஒன்றே. நுணுக்கமான உயிரிலிருந்து   அண்டத்திற்கு ஒரு இணைப்பு உள்ளது. இந்த கிரகத்திலிருக்கும் ஒவ்வொரு தானியமும்  பிரபஞ்சத்துடன் ஒரு தனிப்பட்ட முறையில் இணைக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் இதை அறிந்திருந்தனர். அதனால் தான் அவர்கள்  சூரியக் குடும்பத்திலிருக்கும் ஒன்பது கிரகங்களும் ஒன்பது விதமான தானியங்கள்,ஒன்பது விதமான விலங்குகள், ஒன்பது விதமான வடிவங்கள், ஒன்பது விதமான நிறங்கள், ஒன்பது விதமான பொருள்கள் ஆகியவற்றுடன் இணைக்கப்  பட்டுள்ளன என்று சொல்லி இருக்கின்றார்கள். ஒன்றிலிருந்து மற்றொன்று இவ்வாறு இணைக்கப் பட்டிருப்பதை அவர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது மிகவும் வியப்பாக இருக்கின்றது! உண்மையில் மிகப்பெரும் ஆச்சரியம்!
 
நாம் பள்ளியிலும், கல்லூரியிலும் இந்த உலகம் உருண்டையானது, அது சூரியனைச் சுற்றி வருகின்றது என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தவர் கலிலியோ என்று படித்திருக்கின்றோம்.  மேற்கு நாடுகளில் சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகின்றது என்று நினைத்திருந்தார்கள்.  இந்தியர்கள் தான் சூரியக் குடும்பத்தின் மையத்தில் இருப்பது சூரியன் என்பதை அறிந்திருந்தார்கள். இந்தியாவில் எந்த கோவிலுக்குச் சென்றாலும், தெரிந்து கொள்ளலாம்.
 
சூரியனை நடுவில் வைத்து மற்ற கிரகங்களை அதனை சுற்றி அமைக்கும் வழக்கம் இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளாகவே உள்ளது. அவர்கள் மேலும் என்ன செய்தார்கள் என்றால் ஒவ்வொரு கிரகத்தையும்,ஒரு மந்திரம் மற்றும் ஒரு யந்திரம் (வரைபடம்) கொண்டு இணைத்தனர். பிராண சக்தியானது ஒரு குறிப்பிட்ட நவரத்தினக்கல் ஒரு குறிப்பிட்ட தானியம்  போன்றவையோடு தொடர்புபடுத்தப்பட்டது. உதாரணத்திற்கு செவ்வாய் கிரகம்,கடலையுடனும் புதன் பச்சை பயருடனும், சனி கிரகம் எள் விதையுடனும் சூரியனும் சந்திரனும், அரிசி மற்றும் கோதுமை யுடனும் தொடர்பு கொண்டுள்ளன. ராகு, கேது மற்றும் நிலவும் கூட பல்வேறு தானியங்களுடன் இணைந்துள்ளன. 
 
இவ்வாறு ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட தானியம், ஒரு குறிப்பிட்ட வடிவம், ஒரு குறிப்பிட்ட நிறம், நம் உடலின் ஒரு குறிப்பிட்ட பாகம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. நம் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு குறிப்பிட்ட கிரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே எல்லா கிரகங்களும் நம் உடலில் செயல்படுகின்றன என்பது வியக்கத்தக்க ஒரு விஞ்ஞானம். 
 
சாமுத்திரிகா லட்சணம் எனப்படும் ஒரு அறிவியலில் உங்களது முகத்தைப் பார்த்தே உங்கள் ஜாதகத்தினை கணித்து விடுவார்கள்.சில சமயங்களில் உங்களது பற்களைப் பார்த்தே நீங்கள் எந்த வருடம் பிறந்தீர்கள் என்பதனை சரியாக சொல்லிவிடுவார்கள். இது போன்ற நிறைய  ஞானம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு மறைந்து போய் விட்டது.
 
இன்று பல்வேறு கோவில்களிலிருந்து பண்டிதர்கள் இங்கு வந்து உலகம், மற்றும் உலக மக்கள் நன்மைக்காக ஒன்பது கிரகங்களுக்கும் யாகம் செய்கின்றனர். வரவிருக்கும் சில நாட்கள் சற்று சிரமமாக இருக்கும்.எனவே உலகில் எதிர்மறையான தீய அதிர்வுகளைக் குறைத்து  நல்ல நேர்மறை அலைகளைப் பரப்ப இன்றும் நாளையும் இந்த யாகத்தினை நடத்துகின்றனர்.
 
இவையெல்லாம் பழமையானவை. ஆனால் இவற்றை எல்லாம் யாரும் சரியானபடி புரிந்து கொள்ளவில்லை. அதனைச் செய்யக்கூடியவர்களும் எவருமில்லை. இங்கு தான் நாம் நம் இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். எனவே தான் நான் இந்தப் பண்டிதர்களை அழைத்துவந்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும் என்று எண்ணினேன். 
 
கே: தீய பழக்கங்களின் அடிமைத்தனத்திலிருந்து ஒருவர் மீண்டு வருவது எப்படி?
 
குருதேவ்: சாதனா செய்வதன் மூலம்தான். எந்த ஒரு தீய பழக்கத்தின் அடிமைத் தனத்திலிருந்தும் மீண்டு வெளி வருவதற்கு சாதனா மட்டுமே உதவ முடியும். இங்கே வாருங்கள்; அமர்ந்து பயிற்சி செய்யுங்கள். வாழும் கலையின் மேல் நிலை தியானப் பயிற்சி  செய்யுங்கள். ஒரு முறை இரண்டு முறை அல்ல, தொடர்ந்து செய்து கொண்டிருங்கள். தீய பயக்கங்கள் போய்விடும்."நான் யார்?" என்று கேட்டுக் கொண்டே இருங்கள்.அதிலிருந்து மட்டும் தான் உங்களுக்கு சரியான பதில் கிடைக்கும். 
 
கே: எனக்கு ஒரு மகள் இருக்கின்றாள். அவள் திருமணத்திற்குப் பிறகு கனடாவிற்குச் சென்று விட்டாள். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நான் அவளை சந்திக்க முடியவில்லை.  நான் என் மகளை சந்திக்க முடியுமா?
 
குருதேவ்: சென்று சந்தியுங்கள். உங்கள் மகளும் "என் அம்மாவை சந்திக்க வேண்டும்" என்று நினைக்க வேண்டும். சில சமயங்களில் என்ன நடக்கின்றதால் நாம் நம் குழந்தைகளை பாசம் பரிவு போன்ற உணர்வுகள் இல்லாமல் வளர்த்து விடுகின்றோம். அவர்களுக்கு நல்ல விஷயங்களையும் நற்குணங்களையும் அளிக்கவில்லை. ஆகவே,அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது எல்லாவற்றையும் மறந்து விடுகின்றார்கள். சுயநலமாகி விடுகின்றார்கள். 
 
நீங்கள் அனைத்தையும் விட்டுத்தள்ளி விட்டு அமைதியாக இருங்கள். எல்லாம் சரியாகி விடும்