ரக்ஷாபந்தன்



1 ஆகஸ்ட் - 2012 பெங்களுரு 

இன்று ஷ்ரவண பூர்ணிமா எனப்படும் பௌர்ணமி. இதற்கு முந்தைய பௌர்ணமி குரு பூர்ணிமா. நமது ஆசான்களுக்கும் குருமார்களுக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதற்கு முன் வருவது புத்த பூர்ணிமா என்றும், அதற்கும் முந்தைய பௌர்ணமி சைத்ர பூர்ணிமா எனப்படும் சித்திரை பௌர்ணமியாகும்.

இந்த நான்காவது பௌர்ணமி தான் சரவண பௌர்ணமி எனப்படுகிறது. இந்த பௌர்ணமி சகோதர சகோதரி பந்தத்திற்கு அர்பணிக்கப் பட்டுள்ளது – ரக்ஷாபந்தன். மேலும் இந்த நாளில்தான் பூணூல் மாற்றப்படுகிறது. பூணூல் மாற்றுவதன் குறிக்கோள் நம் தோள்மீது உள்ள மூன்று கடன்கள் அல்லது கடமைகளை நமக்கு நினைவூட்டுவதுதான் – பெற்றோருக்கு நாம் செய்ய வேண்டிய கடமை, சமூகத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை மற்றும் ஞானத்திற்கு நாம் செய்ய வேண்டிய கடமை.
இவை மூன்றும் நமக்கு உள்ள கடமைகள் அல்லது கடன்கள். நாம் நம் பெற்றோர்க்கு கடன் பட்டுள்ளோம், நாம் சமூகத்திற்கு கடன்பட்டுள்ளோம், ஞானத்திற்கு – அதாவது நம் குருவிற்கு நாம் கடன்பட்டுள்ளோம். எனவே நமக்கு இந்த மூன்று கடன்களும் இருக்கிறது. பூணூல் நமக்கு இந்த மூன்று கடன்களையும் நினைவு படுத்துகிறது.
கடன் என்று சொல்லும்போது, நாம் ஏதோ ஒரு குறிப்பட்ட அளவு கடன் வாங்கினார் போலவும் அதை நாம் திருப்பித் தரவேண்டிய தேவை இருக்கிறது என்றும் நினைக்கிறோம். ஆனால் இது ஒரு கடமை அல்லது பொறுப்பு என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடன் என்ற வார்த்தைக்கு இந்த இடத்தில் அர்த்தம் என்ன? பொறுப்பு! முந்தைய தலைமுறை, வருங்கால தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறை ஆகியவற்றின் மீது உள்ள உங்கள் பொறுப்பை மறுபார்வை பார்ப்பது. அதனால்தான் நாம் மூன்ற பிரிகள் கொண்டதாக உள்ள பூணூலை நம் தோளில் அணிவது.
இதுதான் அதன் முக்கியத்துவம் – என் உடம்பை தூய்மையாகவும், என் மனதை தூய்மையாகவும் மற்றும் என் வாகை தூய்மையாகவும் நான் வைத்திருப்பேன் – உடல், மனம் மற்றும் பேச்சு ஆகியவற்றில் தூய்மை. ஒரு நூல் நம்மைச் சுற்றி எப்போதும் தொங்கிக் கொண்டிருக்கும்போது ஒவ்வொரு நாளும் நமக்கு நினைவு வருகிறது, ‘ஓ எனக்கு இந்த பொறுப்புகள் எல்லாம் இருக்கிறது’.
பண்டைக்காலத்தில், பெண்களும் பூணூலை அணிய வேண்டியிருந்தது. மேலும், பூணூல் அணிவது ஒரு குறிப்பிட்ட ஜாதிகளுக்கு மட்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. பிராமணர், க்ஷத்ரியர், வைசியர் மற்றும் சூத்திரர் என்று எல்லோரும் அணிய வேண்டிய வழக்கமிருந்தது; ஆனால் பின்னர் ஒரு சிலருக்கு மட்டும் என்று குறுகிவிட்டது.
பொறுப்பு என்பது எல்லோருக்கும் உண்டு.
திருமணமானால் இப்போது ஆறு பிரிகள் கொண்ட பூணூல் அணிகிறார்கள். மூன்று தமக்காகவும், அடுத்த மூன்று தன் மனைவிக்காகவும்.  மனைவிக்காக இருந்ததை ஆண்கள் தாமே ஏற்றுக் கொண்டார்கள். இது ஒரு ஆணாதிக்க சமூகம்; அவர்கள் ஒரு பெருந்தவறு செய்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் பெண்களுக்கும் இந்த பொறுப்பை ஏற்கும் சடங்கு இருந்தது. ஆனால் இப்போது ஆண்களே இந்தப் பொறுப்பை திருமணத்திற்கு பிறகு ஏற்றுக் கொள்கிறார்கள்.


ரக்ஷாபந்தன் தினத்தன்று ராக்கி கட்டுகிறோம். இதை நாம் இப்போது நட்பு வளையம் என்கிறோம் (Friendship band). இந்த சொல்லாடல் இப்போது தற்காலத்தில் ஆங்கிலத்தில் ஏற்பட்டது, ஆனால் நம் நாட்டில் ரக்ஷாபந்தன் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இது ஒரு பாதுகாப்பு வளையமாக இருந்தது, அதாவது ஒரு சகோதரி தன் சகோதரனுக்கு அளிக்கும் பாதுகாப்பு.
எனவே ரக்ஷாபந்தன் என்ற இந்த விழாவில் எல்லா சகோதரிகளும் தங்கள் சகோதரனுக்கு ராக்கி அணிவித்தனர். இதை தன்னுடைய உறவுமுறை சகோதரர்களுக்கு மட்டுமல்லாமல் உண்மையில் எல்லோரையும் தங்கள் சகோதரர்களாக கருதி எல்லோருக்கும் கட்டினர். ஷ்ரவண பூர்ணிமாவில் இது வெகு விமரிசையாய் கொண்டாடப்படுகிறது.
ஷ்ரவன பூர்ணிமாவிற்கு பிறகு வருவது பாதோ பூர்ணிமாவாக கொண்டாடப்படுகிறது. பிறகு வருவது அனந்த பூர்ணிமா, அதாவது அளவிட முடியாததை (Infinity) குறிக்கும் பௌர்ணமி. அதன் பிறகு வருவது ஷரத் பூர்ணிமா. அது பெரிய மிக அழகான பௌர்ணமியை குறிக்கும். சிலரது முகம் பிரகாசமாய் ஒளி பொருந்தியதாய் இருந்தால், ‘நீங்கள் ஷரத் சந்திரனைப் போல இருக்கிறீர்கள்’ என்று சொல்வார்கள்.
முழு வருடத்தில் ஷரத் சந்திரன்தான் மிகப் பெரியதும், மிகத் தெளிவானதும் மிக சிறந்ததும் ஆனது. யாராவது தயை நிறைந்து ஆனந்தமாய் இருந்தால், ‘ஷரத் சந்திர நிபானனா’ என்று சொல்வார்கள். நம் தாய்; இறைவி (தேவி) யின் முகம் ஷரத் பூர்ணிமாவைப் போல இருக்கும் என்பார்கள். எனவே இது ஒரு புனிதமான பௌர்ணமி.
இதற்கு பிறகு வருவது நிறைய விளக்குகள் ஏற்றி நாம் கொண்டாடும் கார்த்திகைப் பௌர்ணமி. எனவே ஒவ்வொரு பூர்ணிமாவுக்கும் ஒரு முக்கியத்துவம் ஒரு கொண்டாட்டம் உண்டு.
ஒரு ஷரத் பூர்ணிமாவில் தான் கண்ணன் கோபியருடன் நடனம் ஆடினான். கோபியர் பலர், ஆனால் கண்ணன் ஒருவன்தான். இருந்தாலும் கண்ணன் பல வடிவம் கொண்டு தங்கள் ஒவ்வொருவருடனும் நடனமாடியதாக உணர்ந்தார்கள் கோபியர்கள். எனவே எல்லோரும் எல்லாம் தாண்டிய ஒரு உயர்ந்த நிலையில் இருந்தார்கள்! ஒவ்வொருவரும் கண்ணன் தங்களுடையவனாக தங்கள் ஒவ்வொருவருடனும் நடனமாடியதாக உணர்ந்தார்கள். ஷரத் பூர்ணிமா இதற்கு பிரசித்தமானது. மக்கள் இந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். நிலவின் ஒளியில் பாலை வைத்துவிட்டு பின்னர் அருந்துவார்கள். ஷரத் பூர்ணிமா அன்று கொண்டாட்டம் உண்டு.
தங்கள் வாழ்க்கையையே கொண்டாட்டமாக, தினம் தினம் கொண்டாடமுடியாதவர்கள், மாதத்தில் சில நாட்களாவது கொண்டாடவேண்டும். அதாவது, பௌர்ணமி அன்று கொண்டாடினாலே வருடத்திற்கு பனிரெண்டு கொண்டாட்டங்கள் கிடைக்கும்.
மனம் சந்திரனுடன் தொடர்புடையது. அதனால் தான் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் நம் மனம் உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ இருக்கிறது. மனம் சந்திரனோடு அவ்வளவு தொடர்புடையது. அதனால் தான் வேதத்தில், ‘சந்த்ரமா மனசோ ஜடா – மனம் சந்திரனில் இருந்து பிறந்தது அல்ல, சந்திரன் மனதிலிருந்து பிறந்தது’, என்று கூறப் பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நாட்களெல்லாம் மிக முக்கியமானவை. வாழ்கையே மிக முக்கியமானது. இந்த வாழ்கை முழுதும் மிக முக்கியம் என்று ஞானவான்களுக்கு தெரியும் என்று சொல்வேன்.
எனவே இந்த தினத்தில் பூணூல் மாற்றிய பின்னர், ஒரு உறுதி (சங்கல்பம்) எடுத்துக் கொள்கிறார்கள் – அதாவது – ‘நற்புகழும் நல்விளைவும் கொண்ட செயல்கள் செய்யத் தகுந்த திறன்கள் எனக்கு அருளப்படவேண்டும்’ என்ற உறுதி.
செயல்பட அதற்குத் தகுந்த திறமை வேண்டும். உடல் தூய்மை, பேச்சுத் தூய்மை மற்றும் விழிப்பான உள்ளுணர்வு ஆகியவை இருக்கும்போதுதான் எடுத்த வேலை நிறைவடைகிறது. ஆன்மீகச் செயல்களோ உலகாயமான செயல்களோ, ஒருவர் செயல்பட அதற்கான திறன் வேண்டும். அந்த திறனைப் பெற நமக்கு அதற்கான பொறுப்பு இருக்க வேண்டும். பொறுப்பான ஆட்களே ஒரு வேலையை செய்யத் தகுந்தவர்கள். என்ன அழகான ஒரு செய்தி. பொறுப்பில்லாத ஒருவரிடம் கொடுக்கப்பட்ட வேலை இழப்பில் தான் முடியும். பொறுப்பில்லாத ஒருவரிடம் உங்கள் சமையலறை பொறுப்பை கொடுத்து விட்டு மறுநாள் காலையில் சென்றால், ‘காலை உணவு தயாரில்லை’ என்ற பதில்தான் கிடைக்கும். காலை உணவை மத்தியானம் பரிமாறினால் அவருக்கு பொறுப்பில்லை என்றுதான் அர்த்தம். ஆன்மீக வேலையோ அல்லது உலகாயமான வேலையோ,

பொறுப்பில்லாத ஒருவர் எந்த வேலையைச் செய்யவும் தகுதி இல்லாதவர். எனவே ஒருவர் முதன் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் தன் வாழ்வில் பொறுப்புகளை எப்படி நிறைவேற்றுவது என்பதுதான். பூணூல் அணியும் சடங்கு (யக்ஞோபவீத சடங்கு)  பொறுப்பேற்றுக் கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ளத்தான்.
சாதாரணமாக பூணூலை மாற்றக் கூடாது. வாழ்க்கையில் பொறுப்புகள் உண்டு. நான் என்ன செய்தாலும் பொறுப்போடுதான் செய்வேன் – என்ற உறுதி விழிப்புணர்வு கொள்வதே பூணூல் மாற்றும் சடங்கு.