நம் முன்னோர்களை வணங்குவோம்


3, ஆகஸ்ட் - 2012 - பெங்களூர்


நிறைய பக்தர்கள் குருதேவருக்கு மயில் தோகைகளை சமர்ப்பிக்கிறார்கள். குருதேவர் கேட்கிறார். இவைகள் தானாக விழுந்ததா? அல்லது மக்கள் மயிலிடமிருந்து உருவி எடுக்கிறார்களா? அப்படி உருவி எடுத்த மயில் தோகைகளைக் கொண்டு வர வேண்டாம். மயில் தோகையை உருவி எடுப்பதை நாம் ஊக்குவிக்கக் கூடாது. இவை தானாக விழுந்ததா அல்லது விழுவதற்கு முன் மயிலிடமிருந்து உருவி எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

அப்படி உருவி எடுத்த மயில் தோகைகளைக் கொண்டு வரவேண்டாம். அதை வாங்காதீர்கள். நீங்கள் அதை வாங்க ஆரம்பித்தால் மயில்களைக் கொன்று அதன் தோகைகளை விற்க ஆரம்பித்து விடுவார்கள். எல்லா இடத்திலும் நாம் விளம்பரம் செய்து மயில் தோகை வாங்குவதை / விற்பதை தடுக்க வேண்டும். சிலர் பேராசையின் காரணமாக மயில் தோகைகளைப் பிடுங்கி அதன் உயிருக்கு ஆபத்து விளைவிப்பார்கள். நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா? இன்று முதல் நாம் மயில் தோகையை வாங்க மாட்டோம். இது ஒரு நல்ல முடிவு.
கே: குருதேவா, நான் உங்களுடன் ஆட விரும்புகிறேன்.

குருதேவர்: என் ஆத்மா எப்பொழுதும் ஆடிக் கொண்டிருக்கிறது.

கே: குருவினால் கர்ம வினையைத் தீர்க்க முடியுமா? அப்படியென்றால் அது எப்போது நடக்கும்?

குருதேவர்: குரு ஒருவரின் கர்ம வினைகளைத் தீர்க்க முடியுமென்றால் அவர் எல்லோருடைய கர்ம வினைகளையும் மாற்றி அமைக்கலாமே? அப்படி அல்ல. நீயும் முயற்சி எடுக்க வேண்டும்.

கட்டாயமாக குரு பாபத்திலிருந்து உன்னை விடுவிக்க முடியும். நீ தவறு செய்து, நீ செய்தது தவறு என்று தெரிந்து கொள்ளும் போது உன்னால் அதிலிருந்து விடுபட முடியாது. ஆனால் குரு உன்னை உன் தவறிலிருந்து விடுவிப்பார். அப்படிப் பார்க்கும் போது உன் கர்மவினைகளும் சற்று தீரலாம்.

அதே சமயம் நீ உன் ஆத்ம சக்தியைப் பிரயோகிக்கலாம். நீ நல்ல காரியங்கள் (புண்ணியம்) செய்யலாம். அன்பும், பக்தியும் பெருகப் பெருக கர்ம வினைகளிலிருந்து விடுபடலாம்.

கே: என் கோழைத்தனத்தால் நான் வாழ்க்கையின் பிரச்சினைகளை எதிர் நோக்க முடியாமல் இருக்கிறேன். கோழைத் தனத்திலிருந்து வெளி வருவது எப்படி?

குருதேவர்: முதலில் உன்னை எதிர்நோக்கும் சவால் / பிரச்சினை எதுவாயினும், அதை சமாளிக்கும் சக்தி உன்னிடம் உண்டு என்று தெரிந்து கொள். அதை நீ நன்றாக தெரிந்து கொள்வது அவசியம். சவால் எதுவாயினும் சமாளிக்கும் சக்தியும் திறமையும் உன்னிடம் இருக்கிறது. அந்த மன உறுதியோடு செல். நான் உன்னோடு இருக்கிறேன்.

கே: குருதேவா! இறந்தவர்களுக்காக நாம் சில சடங்குகளைச் செய்கிறோம். இந்தச் சடங்குகளுக்கு அடிப்படைக் காரணம் ஏதாவது உண்டா?

குருதேவர்: இறந்தவர்களின் ஆன்மாவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகத் தான் நாம் இந்த சடங்குகளில் ஈடுபடுகிறோம். ஆனால் நடுவில் பண்டிதர்களும், புரோகிதர்களும் நமக்குப் புரியாத பலவற்றைச் சொல்லி இந்த சடங்குகளை மிகவும் சிக்கல் நிறைந்ததாக்கி விட்டார்கள்.

அவர்கள் சமஸ்கிருதத்தில் சொல்வதை மொழி பெயர்த்தால் நீ அதைப் புரிந்து கொள்வாய். நாம் எள்ளை கையில் எடுத்து “தர்ப்பயாமி, தர்ப்பயாமி தாரையாமி” சொல்வது எதற்காக என்று தெரியுமா? அதற்கு தர்ப்பணம் என்று பெயர்.

இறந்தவரின் பெயரைச் சொல்லி, சிறிது எள்ளும் நீரும் கையில் எடுத்து தட்டில் ஊற்றுகிறோம். ஏன் அப்படிச் செய்கிறோம்? இறந்தவரின் ஆன்மாவிடம் “உங்கள் நிறைவேறாத ஆசைகள் ஏதாவது இருந்தால், அவை இந்த எள் விதைக்குச் சமம். குறிப்பிட்டுச் சொல்லும் அளவு பெரிதல்ல. அவை சின்ன சின்ன விஷயங்களே. அதை விட்டு விடுங்கள். இறைவன் அடியில் அளவு கடந்த ஆனந்தம் இருக்கிறது. அதை மகிழ்ச்சியாக அனுபவியுங்கள். உங்களின் நிறைவேறாத ஆசைகளை நாங்கள் நிறைவேற்றுகிறோம்.” என்று சொல்கிறோம். இதையே தர்ப்பணத்தின் போது இறந்தவர்களின் ஆன்மாவிடம் சொல்கிறோம்.

இறந்தவர்களுக்கு இன்னும் ஆசைகள் இருக்கும். அவர்களின் பேரக் குழந்தைகளின் திருமணத்தைக் காண விரும்பியிருப்பார்கள். (கொள்ளு பேரன் திருமணத்தைக் கூட) அல்லது கொள்ளு பேத்தியின் மகளைக் காண விரும்புவார்கள். இந்த மாதிரியான ஆசைகள் அவர்கள் இறக்கும் சமயத்தில் அவர்கள் மனதில் இருந்திருக்கக் கூடும். நாம் அவர்களுக்கு “இந்த ஆசைகள் மிகவும் சிறியவை. அதை விட்டு விடுங்கள்” என்று சொல்கிறோம். வாழ்க்கையின் சாரமே அன்பு தான். அன்பே இறைவன். அந்த ஒளி பொருந்திய அன்பான பரம் பொருளை நோக்கிச் செல்லுங்கள் என்று இறந்தவரின் ஆன்மாவுக்குச் சொல்வதே ‘சிரார்த்தம்” என்பதாகும்.

மேலும் இந்தச் சடங்குகளின் மூலம் அவர்களின் ஆசிர்வாதத்தை வேண்டுகிறோம். “நீங்கள் விரும்பியவற்றைச் செய்கிறோம். எங்களை வாழ்த்துங்கள்” என்று சொல்கிறோம்.

இந்த மாதிரி சிரார்த்தம் உலகத்தின் எல்லா பகுதிகளிலும் உண்டு. தென் அமெரிக்காவில் கூட இது நடக்கிறது. ஒரு குறிப்பிட்ட நாளில் ஊரில் உள்ள அனைவரும் திரண்டு வந்து இறந்தவர்களை நினைத்து அவர்கள் உருவத்தைச் செய்த பொம்மைகளை எரிக்கிறார்கள். பல விதமான சடங்குகளை நிறைவேற்றுகிறார்கள்.  சீனாவிலும், சிங்கப்பூரிலும் கூட இது மாதிரி சடங்குகள் உண்டு.

சிங்கப்பூரில் எப்படிப்பட்ட சடங்கு என்று தெரியுமா? இறந்தவர்களுக்காக ஒரு குறிப்பிட்ட தினம் இருக்கிறது. அன்று இறந்தவர்களின் பிரியமான பொருட்களை காகிததால் செய்து அவைகளை எரிக்கிறார்கள். ஒருவருடைய தகப்பனாருக்கு கார் பிடிக்கும் என்றால் காகிதத்தால் ஒரு அழகிய பென்ஸ் கார் செய்து தெருவில் வைத்து எரிப்பார்கள். சிங்கப்பூர் பொதுவாக தூய்மையான நகரம். ஆனால் அன்றைய தினம் ஒவ்வொரு தெருவிலும் ஏராளமான எரிந்த காகிதப் பொருட்கள் கிடக்கும்.

சீனாவில் ஒரு நம்பிக்கை. ரூபாய் நோட்டுக்களை (கள்ள நோட்டு) எரித்தால் முன்னோர்களுக்குப் போய்ச் சேரும். அவர்கள் உங்களை அதிர்ஷ்டமடைய வாழ்த்துவார்கள். சில சமயம் நான் இதை ஏமாற்று வேலை என்று நினைப்பேன். அதே சமயம் அதில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நினைத்து சரி என்று கொள்வேன். நடுத்தெருவில் காகித வீடுகளைக் கட்டி எரிப்பதால், அதிர்ஷ்டம் வரும் (முன்னோர்களின் வாழ்த்துக்களால்) என்று நம்புகிறார்கள். பித்ரு லோகத்தில் (முன்னோர்கள் இருப்பிடம்) இருப்பவர்களைத் தொடர்பு கொள்வது “சிரத்தை” என்பது. அது தான் நம்பிக்கை. பித்ருலோகத்துக்குச் சென்றவர்களைச் சிறப்பிப்பது ஒரு சடங்காக இருக்கிறது.

ஐரோப்பாவில் கூட “எல்லா புனிதர்களின் தினம்” என்று ஒருநாள் மலர்களை எடுத்துக்கொண்டு இடுகாட்டுக்குச் செல்வது வழக்கம். சிரத்தை என்பது எல்லா மதங்களிலும், கலாசாரங்களிலும் இருக்கிறது. சமஸ்கிருதத்தில் இதை மிகவும் உயர்வாக அர்த்தமுள்ளதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது மக்களுக்குப் புரியவில்லை.

பிண்ட தானத்தில் – நம் உடல் நாம் உண்ணும் உணவால் வளர்ந்தது. இல்லையா? – சடங்கில் அன்னத்தைப் பந்து போல் செய்து (அல்லது இறந்தவருக்குப் பிடித்த உணவை) ஏழைகளுக்குத் தானம் செய்வது வழக்கம்.

இது ஒரு நம்பிக்கை. நன்றியுடன் செய்வது. ஒரு உத்சவம் போல் நம் முன்னோர்களை நினைத்துக் கொண்டாடுவது. இறந்தவர்களை நினைத்து, அவர்களுக்குப் பிடித்தமான உணவை சமைத்து, படைத்து, பிறகு அதை சிலருக்கு அளித்து மகிழலாம்.

அவர்கள் இருக்கும் லோகத்தில் அவர்கள் ஆனந்தமாக மேலும் முன்னேற வாழ்த்தி, அவர்களுக்கு நன்றி செலுத்தி அவர்களின் வாழ்த்தைக் கோரி நாம் நம்முடைய பாதையில் முன்னேறலாம். நாம் செய்ய வேண்டியது அது தான்.

கே: சிலர் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைக்கிறார்களே. அது ஏன்?

குருதேவர்: அவர்களின் புத்திக் குறைவால் (அறிவின்மையால்) அப்படிச் செய்கிறார்கள். அப்படிச் செய்யக் காரணம் அவர்கள் மிகமிக சுகமான வாழ்க்கையில் பற்று வைத்திருக்கிறார்கள். அந்தச் சுகம் போகும் போது, துக்கமடைவதைத் தடுப்பதற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அது ஒரு முட்டாள்தனமான செயல். அது, குளிரால் நீ மிகவும் நடுங்கும் போது உன்னுடைய ஆடைகளைக் களைவது போல் தான். அப்படிச் செய்வதால் நீ குளிரிலிருந்து விடுபடமுடியாது. ஆனால் அப்படிப்பட்ட அறிவு அவர்களுக்கு இல்லாமையால் அப்படிச் செய்கிறார்கள்.

அதனால் தான் முதலிலிருந்தே அனைவருக்கும் ஆன்மீகக் கல்வியறிவைப் புகட்ட வேண்டும். யாருக்கு சகிப்புத்தன்மை, எதையும் தாங்கும் மனம் (தவ வலிமை) இருக்கிறதோ, குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்தாத தன்மை இருக்கிறதோ, யாரெல்லாம் வருத்தத்தைத் தாங்கும் இயல்புடையவர்களாக இருக்கிறார்களோ, பிரச்சினைகளைச் சமாளிக்கிறார்களோ அவர்கள் ஆத்ம சக்தி யுடையவர்கள். ஆத்ம பலம் உடையவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.

ஆத்ம சக்தி குறைந்தவர்கள், ஆத்ம பலம் இல்லாதவர்கள், யார் எப்பொழுதும் சுகத்தையே மிகவும் விரும்புகிறார்களோ, அவர்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள்.

ஆகவே சுகத்தில் இருக்கும் பற்றை முதலிலிருந்தே நீக்க வேண்டும். யார் கடின உழைப்புக்குப் பழக்கப்பட்டவர்களோ, யார் குற்றச் சாட்டுகளைத் தாங்கிக்கொள்கிறார்களோ, அவர்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள்.

கே: குருதேவா! மோட்சத்தைப் பற்றிச் சொல்லுங்கள்

குருதேவர்: உனக்கு இருக்கும் ஆசைகள் அனைத்தையும் இறப்பதற்கு முன் தீர்த்துக்கொள். “உனக்கு எதுவும் தேவையில்லை” என்று ஒரு க்ஷணம் நீ உணர வேண்டும். அது தான் மோட்சம். நீ இறப்பதற்கு முன் திருப்தி அடைய வேண்டும். எப்போது திருப்தி அடைகிறோமோ அப்போதே மோட்சம் (விடுதலை) கிடைத்து விட்டது. முக்தியடைந்து விட்டீர்கள்.

கே: குரு பூர்ணிமா அன்று நீங்கள் கண்ணீர் விட்டதைப் பார்த்து மிகவும் கஷ்டமாக இருந்தது.

குருதேவர்: இல்லை. கண்ணீர் வருவதற்கு, வருத்தம் அல்லது தொந்தரவு மட்டும் காரணம் அல்ல. அன்பின் காரணமாகவும் கண்ணீர் வரும்.

நான் மற்றவர்களின் பிரதிபிம்பமாக இருந்தேன். எல்லாருடைய கண்களிலும் கண்ணீர் இருந்தது. அதைப் பார்த்து என் கண்களிலும் நீர் நிரம்பியது. குரு பூர்ணிமா அன்று எல்லோருடைய இதயமும் நன்றியால் நிரம்பியிருந்தது. எப்படிப் பட்ட நன்றி! கண்ணீர் வராத ஒரு கண் கூட அங்கு இல்லை. எனவே எல்லாக் கண்களும் ஈரமான போது என் கண்களும் ஈரமாயின.