இறை நம்பிக்கையை எப்படி தக்க வைக்க முடியும்?

23 ஜூன் 2013 - பெங்களூர் - இந்தியா 
               

கே: ஶ்ரீ ஶ்ரீ ஜெர்மனியிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பேரழிவைத் தந்த வெள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளானார்கள். மக்களிடையே நாம் சுற்றுப்புற சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் மற்றும் இதற்காக செய்தி நிறுவனங்கள் எப்படி பங்கு பெற வேண்டும் என்று விளக்குங்கள்.

குருதேவர்: இயற்கையின் சீற்றத்தால், இப்படி அபாயங்கள் வரக்கூடும். மனித சமுதாயத்தின் தவறான செயல்களாலும் அதிக அழிவு ஏற்படுகிறது.  அபாயம் நேரக் கூடிய இடங்களில், முன் கூட்டியே அதை எதிர் பார்த்து அழிவுகளைத் தவிர்க்கவோ அல்லது நஷ்டத்தைக் குறைக்கவோ நாம் தயார் நிலையில் இருப்பதில்லை. என்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது. சமீபத்தில் பேரழிவைத் தந்த வெள்ளத்தால் கேதார்நாத் என்ற இடத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இது ஒரு விதத்தில் நாம் இயற்கையை பற்றிய விழிப்புணர்வோடு இருக்கத் தவறியதால் ஏற்பட்ட விபத்தாகும். நாம் இயற்கையைப் பாதுகாக்க தவறி விட்டோம். இமய மலைப் பகுதியில் காடுகளை பெருமளவில் அழித்ததால் இப்படி விபத்துகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. வளர்ச்சியின் பெயரால் மரங்களை வெட்டி காடுகளை அழிக்கிறோம். மின் சக்தி உற்பத்தியை அதிகரிக்க நதிகளின் போக்கில் அணைகளைக் கட்டுவதால் நதிகளின் போக்கு மாறுகிறது. அப்படிச் செய்வதை நிறுத்தி, மாற்றுத் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

இரண்டாவதாக, இந்தியாவில் யாத்திரிகர்களின் தேவைகளை பற்றிய விழிப்புணர்வு இல்லை. அரசாங்கத்துக்கு அவர்களின் உயிர் நலனைப் பற்றிக் கவலை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் கேதார் நாத்துக்கு செல்கிறார்கள். அவர்கள் பயணம் செய்ய நல்ல அகலமான சாலைகளை அமைத்திருக்க வேண்டும். மாற்று வழிகளும் இருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் வெள்ளத்தில் சிக்கிய மக்களை விரைவாக பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். வெள்ளம் வருவதும், அதனால் சில பகுதிகள் சேதமடைவதும் இயற்கை. தகுந்த ஏற்பாடுகள் இருந்திருந்தால், குறைந்த பட்சம் பல மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.
கனடாவிலும், ஐரோப்பாவிலும் வெள்ளச் சேதமிருந்தாலும், மக்களின் உயிருக்கு ஆபத்தில்லாமல் எல்லோரையும் காப்பாற்றி விட்டார்கள். சுனாமிக்குப் பிறகு இதுவரை இவ்வளவு பெரிய உயிர்ச் சேதம் எங்கும் நிகழ வில்லை. கேதார் நாத் விபத்தை இமாலய சுனாமி என்றழைக்கலாம். வாழும் கலைத் தன்னார்வலர்கள் அங்கு விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்க ஏற்பாடு செய்து அங்கு சேவையில் ஈடு பட்டிருக்கிறார்கள். வாழும் கலையினர் ஜெர்மனியிலும் கனடாவிலும் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

நான் யாரையும் அங்கு அனுப்பவில்லை. தானாகவே முன்வந்து அங்கு சென்று சேவை செய்கிறார்கள். நம் ஆத்ம சக்தி வெளிப்படும் போது, இப்படி மக்கள் மற்றவர்களுக்கு உதவ முன் வருவார்கள். மனித நேயப் பண்புகளை நம் இதயம் வெளிப்படுத்தும். தன்னிச்சையாக உடனுக்குடனே அவதிக்குள்ளானவர்களுக்கு உதவி செய்வார்கள். இப்படிப்பட்ட நிகழ்வுகள், மனித நேயப் பண்புகள் வெளிப்பட வாய்ப்பாக அமைகின்றன. நீ ஒரு இயந்திரமா அல்லது மனிதனா என்று சோதிக்கிறது.  சமயத்தில் நாமனைவரும் சேர்ந்து விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அறிந்து உதவ வேண்டும். எங்கு விபத்துகள் ஏற்பட்டாலும், பெருமளவில் மக்கள் முன் வந்து உதவ வேண்டும். அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். வாநிலை பரிசோதனைச் சாலைகள் முன் கூட்டியே வெள்ளம் வருவதைக் கண்டறிந்து மக்களுக்கு அறிவிக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் செல்ல உதவ வேண்டும். உயிர்ச் சேதம் கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டும். நாம் இதைக் குறித்து செய்ய வேண்டிய காரியங்கள் பல உள்ளன. அபாய நிலையைக் கட்டுக்குள் கொண்டு வருவது ஒரு விஞ்ஞானமாகும். மக்கள் நலனில் அக்கரை உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சூழ்நிலைகளை சமாளிக்க உதவ வேண்டும். பலர் செய்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்த எல்லோருக்கும் நான் நன்றி சொல்கிறேன். குறிப்பாக இந்திய ராணுவத்தைச் சேர்ந்த படை வீரர்களுக்கு மிக மிக நன்றி. தன்னலம் கருதாத அவர்களுடைய அயராத உழைப்பு மிக போற்ற தக்கது.

கே: இது வரை நடக்காத, மிகவும் எதிர்பாராத வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்து கேதார்நாத்தில் பல ஆயிரம் உயிர்களைப் பறித்துச் சென்றது. பலர் உறவினர்களைப் பிரிந்து தவித்தார்கள். இறைவனைப் பிரார்த்திக்கச் சென்றவர்கள் இப்படிப்பட்ட விபத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அனுபவத்தில் பலர் இறை நம்பிக்கையை இழக்கக் கூடும். இதை எப்படி நாம் சமாளிக்கலாம்.

குருதேவர்: முதலில் கடவுள் பார பட்சமற்றவர் என்பதை அறிய வேண்டும். இயற்கை பாரபட்சமற்றது. அது தன்னிடம் என்ன இருக்கிறது. உன்னிடம் என்ன இருக்கிறது என்று பார்ப்பதில்லை. கடவுள் கேதார்நாத்தில் மட்டும் வாழ்பவர் அல்ல. அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். உன் இதயத்தில் இருக்கிறார். அவர் எங்கும் இருப்பவர். யாத்திரிகர்கள் செல்லும் இடங்களில், வேண்டிய வசதிகள் செய்து தர வேண்டும். இப்போது அப்படி இல்லை. நாம் மக்களின் தேவைகளைப் புறக்கணிக்கிறோம். அவர்களுக்கு வேண்டிய எல்லா வசதிகளும் செய்ய வேண்டும். சென்று வர நல்ல சாலைகளும் அமைக்கப் பட வேண்டும். தொலைபேசி வசதிகளும் அதிகரிக்கப் பட வேண்டும். விபத்துக்களால், சில மக்கள் நம்பிக்கை இழக்கலாம். ஆனால் நாம் எது நடந்தாலும் அசையாத நம்பிக்கையோடு இருக்க வேண்டும். உண்மை ஒரு நாள் வெல்லும். நல்லவர்கள் தங்களுக்கு உரிய இடத்தை அடைவார்கள். இது பிரார்த்தனைக்கான சமயம். விபத்து நேரும் போது, நம் மனத்தை பயம் ஆட்கொள்ளும் போது பிரார்த்தனை உதவும். மனத்தைத் தளர விட வேண்டாம். எல்லா இடங்களுமே கடவுளுக்குச் சொந்தமானது. இயற்கையின் சீற்றத்தால் விபத்து ஏற்படும் போது உன் நம்பிக்கை சோதனைக்குள்ளாகிறது. அசையா நம்பிக்கையுடன், இந்த சமயத்தில் மற்றவர்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் என்று பார்.

எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. அதற்காக கடவுளுக்கு நன்றி சொல். உயிர் இழந்தவர்களின் ஆத்மா அமைதி அடைய பிரார்த்தனை செய். அவர்கள் குடும்பத்தினருக்கு அமைதி கிடைக்கவும், தங்கள் துக்கத்திலிருந்து விரைவில் மீண்டு வரவும் கடவுளை வேண்டலாம். உயிர் பிழைத்தவர்களுக்காக கடவுளுக்கு நன்றி சொல். கொடுமையான விபத்திலிருந்து அவர்கள் அனுபவித்த கஷ்டங்களை நினைத்துப் பார்.

மக்கள் அடைந்த துயரத்தை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. விழிப்புணர்வோடு அந்த இடத்தில் என்ன மாற்றங்கள் செய்து, பின் வரும் நாட்களில் மக்கள் பாதுகாப்பாகச் சென்று வர ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நல்ல சாலைகள், முறையான தொலைபேசித் தொடர்பு, முறையான வாகன வசதிகள், உணவு விடுதிகள் முதலியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும்.

மக்கள் பல ஆண்டுகளாக அந்த இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். விபத்துகளால், மக்கள் அங்கு செல்வதைத் தடுக்க முடியாது. கடந்து போன விபத்திலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். விபத்துகள் பூமியில் எந்தப் பகுதியிலும் ஏற்படாமல் காக்க வேண்டும். பிற்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்று நம்மால் சொல்ல முடியாது. முடிந்த வரை நம்முடைய அசட்டையைத் தவிர்க்க வேண்டும்.

கே: சமீபத்தில் ப்ரேசில் நாட்டில் நடந்த மக்களின் எதிர்ப்புப் போராட்டங்களால், வாழ்க்கையின் எல்லா பக்கங்களும் பாதிக்கப் பட்டிருக்கின்றன. இதை எப்படி சமாளிக்கலாம்?

குருதேவர்: மக்களுக்கு நீதி கிடைக்காத போது, லஞ்ச ஊழல்களால் மக்கள் அவதிப் படும்போது போராட்டங்கள் ஏற்படுவது இயல்பானது. மக்கள் ஒன்று கூடி தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். இது நல்லது. மக்களின் விழிப்புணர்வைக் காட்டுகிறது. லஞ்ச ஊழலை அப்படியே ஏற்றுக் கொள்வது சரியல்ல. எது எப்படி இருக்கிறதோ அதை அப்படியே, ஏற்றுக் கொள்வது ஒரு வழி. மற்றொரு வழி லஞ்ச ஊழலை எதிர்த்துப் போராடுவது; அநீதிக்கு எதிராகப் போராடுவது; எது தவறு என்று நினைக்கிறோமோ அதை எதிர்த்துப் போராடுவது. இது வரவேற்கத் தக்க பண்பாகும். இதை நாம் பாராட்ட வேண்டும்.

போராட்டங்களின் போது நாம் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. கூட்ட மனப்பான்மையினால் மக்கள் வன்முறையில் இறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எதிர்ப்புப் போராட்டங்கள் அமைதியாக நடக்க வேண்டும். போராட்டங்கள் ஒரு தனி மனிதனை எதிர்க்காமல் அவனுடைய கொள்கையை மட்டுமே எதிர்ப்பதாக இருக்க வேண்டும். ஏனென்றால் மக்கள் மாறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒவ்வொருவரும் தன்னைத் தானே மாற்றிக் கொள்ள முடியும். மக்கள் இப்படி மாறுவதை நாம் கவனிக்க வேண்டும். எதிர்ப்புப் போராட்டங்களை, தீர்மானிக்கப்பட்ட விஷயத்துக்காக மட்டும், அமைதியாக ஒரு முறையோடு நடத்த வேண்டும்.

நாம் அமைதியாக இல்லாவிட்டால், நாம் தீர்மானித்த விஷயத்தை, நம் இலட்சியத்தை மறந்து விடுவோம். போராட்டங்களை சரியான வழியில், வன்முறையில்லாமல் நடத்த வேண்டும். போராட்டம் தீர்மானிக்கப் பட்ட கருத்தைச் சார்ந்து இருக்க வேண்டும். தனி ஒரு மனிதரை எதிர்க்கக் கூடாது. அவர்களுடைய சொத்துக்கோ, அரசாங்கச் சொத்துக்கோ சேதம் ஏற்படக்கூடாது. இதைக் கருத்தில் வைப்பது மிக மிக அவசியம்.

மக்கள் நல்ல எண்ணத்தோடு போராட்டத்தைத் துவங்குகிறார்கள். சில சமூக விரோதிகளால், போராட்டம் வன்முறையை நோக்கிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன. மக்கள் இது பற்றிய விழிப்புணர்வோடு இருந்து, சமூக விரோதிகள் தங்கள் பக்கம் சேராமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

வன்முறையற்ற அமைதியான போராட்டங்களை நாம் வரவேற்க வேண்டும். கட்டாயமாக வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். அப்படி ஏற்பட்டால், தகுந்த போலீஸ் படையையோ, ராணுவத்தையோ அழைத்து வன்முறையை அடக்க வேண்டும். இது ஒரு கடினமான சூழ்நிலை. அதனால் தான் நான் ஒரு அமைதியான புரட்சியை, வன்முறையற்ற போராட்டத்தை வலியுறுத்துகிறேன். இன்றைய சூழ்நிலையில் இது மிகவும் அவசியம்.

கே: அன்பான குருதேவா ! நம்மால் நம் உரிமைகளை, வன்முறையில்லாமல் எப்படிக் காக்க முடியும்? அரசாங்கம் மக்களைப் பிரித்து, அரசியல் நடத்தும் போது, மக்களுக்குள் ஒருவரை ஒருவர் சேர்ந்தவர் என்ற உணர்வை எப்படி கொண்டு வர முடியும்?

குருதேவர்: எந்த ஒரு லட்சியத்துக்கும் பல தடைகள், பல சவால்கள் இருக்கும். இந்த சவால்கள் பெரிதாகும் போது, நாம் நம்முடைய நற்பண்புகளை மறக்காமல் நடந்து கொள்ள வேண்டும். அநீதியால் வாடும் போது அமைதி காப்பது கடினம் (அதுவும் வன்முறை மற்றும் கலவரங்களின் போது அமைதியாக இருப்பது கடினம்) என்று எனக்குத் தெரியும். நாம் நம் ஆத்ம பலத்தைப் பெருக்கி, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எது வந்தாலும் நாம் நம் உரிமைகளைக் காத்து, இலட்சியத்தை நோக்கி முன்னேறுவதில் உறுதியாக இருக்க வேண்டும்.

நீ மன உறுதியோடு இருந்தால், தடைகள் மற்றும் பின்னோக்கி இழுக்கும் சக்திகளை வென்று முன்னேற முடியும். நீதியை நாடுவது, மனித உரிமைக்காகப் போராடுவது எளிதல்ல. இது ஒரு நீண்ட பாதை. சமூகத்தில் சுயநலம் அதிகார வெறி பிடித்தவர்களும் இருக்கிறார்கள். சிலர் வன்முறையை மட்டுமே பின்பற்றி முன் யோசனையில்லாமல் நடக்கிறார்கள். சூழ்நிலையில், நாம் வன்முறையைத் தவிர்த்து, அமைதியாகப் போராட மிகவும் கவனத்தோடு செயல் பட வேண்டும்.
மக்கள் மனம் தளராமல் இருக்க, அவர்களோடு இணைந்து நல்வழியில் ஒன்று சேர்ந்து செல்லும் போது, உண்மை எப்போதும் வெற்றி அடையும். வாய்மை வெல்லும் என்ற திட நம்பிக்கையோடு இருந்தால், எந்த விதமான தடைகளையும் மீறி, சுய நம்பிக்கை மற்றும் தைரியத்தோடு முன்னேறி இலட்சியத்தை அடைய முடியும்.

நாம் குழப்பமடைந்தால், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டால், கோபம் கொண்டால், நமக்குள்ளே ஏதோ ஆட்டம் கண்டு சக்தியிழந்தவராக ஆகிறோம். பெரிய காரியத்தை சாதிக்க நமக்கு அபார சக்தி தேவை. அப்படிப்பட்ட பெரிய சக்தி நாம் அமைதியாக இருக்கும் போது கிடைக்கும்.

இரண்டாவது: எப்போதும் பேச்சு வார்த்தையைத் துவங்க உடன்பட வேண்டும்.

மூன்றாவது: ஒரு மனிதரை அல்லது ஒரு அமைப்பை கெட்டவர் / கெட்டது என்று முடிவு செய்து லேபில் ஒட்ட வேண்டாம். அப்படிச் செய்தால், நீ பேச்சு வார்த்தைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறாய். மகாத்மா காந்தி, ஆங்கிலேயரை, எப்போதுமே கெட்டவர்கள் என்று நினைக்க வில்லை. எப்போதுமே பேச்சு வார்த்தை மூலமாகவே பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பினார்.மற்றவர்களோ / அரசாங்கமோ மக்களுக்கு எதிராக செயல் படுவதாக நினைக்க வேண்டாம். அப்படி நினைக்கும் போது கோபம் அதிகமாகி நம் சக்தியை இழக்கிறோம்.

பேச்சு வார்த்தைக்கான சந்தர்ப்பத்தை இழக்காமல் இருப்பது தான் நல்லது. விடா முயற்சியோடு, லட்சியத்தை நோக்கி, நீதியை நாடி, நம் உரிமைகளைப் பெற, அமைதியை நாடி, செல்வ வளம் மற்றும் முன்னேற்றத்தை நாடி செல்ல வேண்டும். நீங்களும் திட மனதோடு, மற்றவர்களையும் ஊக்குவித்து, அமைதியான போராட்டங்களை நடத்த வேண்டும். சொல்வது எளிது, செய்வது கடினம் என்று நான் அறிவேன். இருந்தாலும் இந்த பாதையில் செல்லும் போது வெற்றி பெறுவது உறுதி.

கே: குருதேவா! பாகிஸ்தானில் உள்ள முகமதியர்களும் அமைதியை விரும்புகிறார்கள். அந்த நாட்டில் வன்முறையை எப்படி நீக்கலாம்?

குருதேவர்: வன்முறையை ஒழிக்க, வன்முறையாளர்களை அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தி வழி காண வேண்டும். அவர்களுடைய தவறான கருத்துகளை நீக்கி மனதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

இரண்டாவது:வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டு அதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். கருத்து வேற்றுமைகள் விரோதமாக / வாக்கு வாதமாகத் தேவையில்லை. வேற்றுமைகள் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஒவ்வொருவரும் தனித்தனியானவர். வேறு வேறு உடைகளை அணிகிறோம். வாழ்க்கை முறைகள் தனித்தனியாக இருக்கின்றன. வேற்றுமைகளை ஏற்றுக் கொண்டு, உலகம் முழுதும் ஒரு குடும்பமாகும் நோக்கத்தோடு வாழ வேண்டும்.உலகில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.பல மொழிகளைப் பேசுகிறோம்.பல மதங்களை பின்பற்றுகிறோம். பல விதமான கலாசாரங்களைப் பின் பற்றி வருகிறோம். பல நாடுகளில் வாழ்கிறோம். நம் இளைஞர்களின் மனதில், இப்படிப்பட்ட பல்வேறு கலாசாரங்களைக் கொண்டாடும் மனப் பாங்கை வளர்க்க வேண்டும். அவர்களுக்கு அது புரிந்தால், அவர்கள் தீவிர வாதியாக அல்லது பயங்கரவாதியாக மாற மாட்டார்கள்.

சிலர் சொர்க்கத்தின் திறவுகோல் தங்கள் கையில் மட்டும் இருப்பதாக நினைப்பது தான் பயங்கர வாதம் வரக் காரணமாகிறது. இது ஒரு தவறான எண்ணம். இந்த தவறான கருத்தினால் அப்படி ஒரு இடத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். நான் தீவிர வாதக் கொள்கை உடையவர்களை சந்தித்திருக்கிறேன். தீவிர வாதிகளில் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள். ஒன்று தீவிர மதவாதிகள். மற்றொன்று தங்கள் கொள்கைக்காக வன்முறையில் ஈடுபடுபவர்கள். 

இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகள் தங்கள் கொள்கைக்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறார்கள். மற்றவர்களுக்குத் தீங்கு செய்வதால், அவர்களை வருத்துவதால் தங்கள் லட்சியத்தை அடைய முடியாது என்று அவர்கள் அறிவதில்லை. தீவிரவாதத்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியும் கிடைக்காது. வேற்றுமையில் ஒற்றுமை காண முடியும் என்ற அறிவை மக்களிடையே பரப்ப வேண்டும். மனம் விட்டுப் பேசும் கலாசாரத்தையும் வளர்க்க வேண்டும். நான் சொல்வது மட்டுமே சரி. மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்று நினைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இப்படிப்பட்டவர்கள் சில மூச்சுப் பயிற்சிகளைக் கற்று ஓய்வாக இருக்கப் பழகினால் இயற்கையின் அழகை, வேற்றுமையில் காணக் கூடிய அழகை உணர்ந்து மாற்றம் அடைவார்கள் என்பது உறுதி. பலர் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டதை நான் பார்த்திருக்கிறேன்.  ஏதோ தெரியாத பயம், தவறான கொள்கையைச் சரி என்று நினைப்பது, அல்லது ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் அகப்பட்டு வருந்தியவர்கள், வன்முறையாளர்களின் தவறான ஆலோசனைகளைக் கேட்டு அவர்களுடைய வலையில் சிக்குகிறார்கள். தவறான கொள்கைக்காக தன்னைத் தானே அழித்துக் கொள்கிறார்கள்.

கே: சமூக வளர்ச்சிக்கு அமைதியே சரியான வழி என்று அர்ஜெண்டினாவின் அரசியல் வாதிகளுக்கு எப்படிப் புரிய வைக்கலாம்?

குருதேவர்: அரசியலில் ஆன்மீகம் வர வேண்டும். வியாபாரத்தில் சமூக நலம் பற்றிய உணர்வு இருக்க வேண்டும். மதச் சார்பற்ற சமூக வளர்ச்சிக்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இது தான் இந்தக் கேள்விக்கு விடையாகும். மதச் சார்பில்லாமல் இருப்பதன் அர்த்தம் மதத் தலைவர்கள், தங்கள் மதத்தையும், தங்கள் இனத்தவர்களையும் மட்டும் எண்ணாமல் உலக முழுவதையும் கருத்தில் வைக்க வேண்டும்.

பொதுவாக மதத் தலைவர்கள் தங்கள் மதத்தை பின்பற்றும் மக்கள் மட்டும் தங்களை சேர்ந்தவர்கள் என்று எண்ணுகிறார்கள். மதத் தலைவர்கள் இந்த எல்லையைக் கடந்து, உலகில் உள்ள எல்லா மக்களின் நலத்துக்காகவும் இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும். அதே போல் ஒவ்வொரு வியாபாரியும் சமூக நன்மை கருதி ஏதாவது பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பொறுப்பு அவர்களுடைய நிறுவனத்தின் கடமையாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் முதலில் தங்கள் நாட்டின் நலன் பற்றி நினைக்க வேண்டும். பிறகு தங்கள் கட்சி நலன் பற்றியும், கடைசியில் தங்கள் நலனைப் பற்றியும் எண்ண வேண்டும்.  பெரும்பாலும் இன்றைய அரசியல்வாதிகள் முதலில் தங்கள் நலனைப் பற்றிக் கவலைப் படுகிறார்கள். பிறகு தங்கள் கட்சியின் நலனைப் பற்றி எண்ணுகிறார்கள். நாட்டு நலன் பற்றி எண்ணுவது மிகவும் குறைவாக இருக்கிறது. உடனடியாக இந்தப் போக்கைத் திருப்பி மாற்றி அமைப்பது மிகவும் அவசியம். சமூகத்தில் பெரும் பான்மையினருக்கு நலன் ஏற்பட அவர்கள் காரியம் செய்தால், இயற்கையாகவே ஆன்மீக வழியில் செல்வார்கள்.அமைதியை விரும்புவார்கள். இன்று உலகம் முழுதும் சமூகத்தில் நிலவும் குறுகிய கண்ணோட்டம் மறைந்து விடும்.

செல்வம் மற்றும் பதவி வரும்; போகும். நம் நற்பண்புகளால் செய்யும் நற்காரியங்கள் எப்போதும் நிலைத்திருக்கும். அரசியல் வாதிகள் இதைப் புரிந்து கொள்வது அவசியம். குறுகிய கண்ணோட்டத்தைத் தவிர்த்து, பலருக்கு, நீண்ட நாள் பயனளிக்கும் செயல்களைச் செய்ய வேண்டும். அவர்களின் திட்டங்கள் இந்த இலட்சியத்தை அடைய உதவ வேண்டும். இது மிகவும் சிந்திக்க வேண்டிய விஷயமாகும். எனவே அமைதி மிக மிக இன்றியமையாதது. அமைதியாக இருக்கும் போது நாம் நல்ல கருத்துக்களைப் பற்றி சிந்தனை செய்ய முடியும். நமக்கு அமைதி இல்லா விட்டால், நாம் மிகவும் குழப்பமாக இருக்கும் போது, நம் செயல்களும், எண்ணங்களும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும். மன அமைதி மேலும் குலைந்து விடும். அதனால் எல்லோரும் தியானம் செய்வது அவசியம்.

கே: அமைதி என்றால் என்ன? நம் வாழ்வில் அமைதி நிலவ, நம் மதம், கலசாரம், குடும்பம் மற்றும் நம் கல்வி முறைகளில் (மூன்று வயது முதல்) என்ன மாற்றம் செய்ய வேண்டும்?

குருதேவர்: குழந்தைகளை ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நண்பனை (தோழியை) சேர்த்துக் கொள்ளச் சொல்லலாம். 40 , 50 குழந்தைகள் படிக்கும் ஒரு வகுப்பில் ஒரு குழந்தையை, உனக்கு எவ்வளவு நண்பர்கள் என்று கேட்டால், பொதுவாக கையில் இருக்கும் விரல்களிலேயே எண்ணி விடுவார்கள். அந்த நண்பர்களோடு மட்டுமே ஆண்டு முழுதும் இருக்கிறார்கள். குழந்தைகளின் தோழமை உணர்ச்சியை வளர்க்க வேண்டும். அதற்காக ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நண்பனைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லலாம். யாராவது கேலி செய்தால், வருத்தப்பட வேண்டாம். சிரித்து விட்டு மேலே செல். நகைச் சுவை உணர்ச்சியோடு இரு. ஒரு விளையாட்டு வீரனைப் போல் இரு. (வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்). வேற்றுமைகளைப் புகழலாம்.

யாராவது வேறு விதமான ஆடை அலங்காரங்களுடன் காட்சி அளித்தால், அவர்கள் மாற்றார்கள் என்று எண்ண வேண்டாம். அவர்களும் உன்னைச் சேர்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு பழகு. நம் குழந்தைகளுக்கு இப்படிப் பட்ட பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். வாழ்வில் அன்பும் அமைதியும் அளிப்பது தான் மதத்தின் நோக்கம். உலகின் ஒரே சத்தியமான இறைவனுடன் பக்தியுடன் சேர்வதற்கான வழி தான் மதம் எனப்படுவது. சமுதாயத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதும் மதத்தின் நோக்கமாகும். தெய்வீகமான ஆத்ம உணர்வு (அனுபவம் / ப்ரகாசம் / அன்பு) தான் மதத்தின் சாரமாகும். அதுவே நமது இலட்சியமாக இருக்க வேண்டும்.

இரண்டாவது: நம்முடைய பல்வேறு விதமான கலாசாரம். சில நூறு கிலோ மீட்டர் தூரம் சென்றால் கலாசாரம் வேறாக இருக்கிறது. மொழியும் மாறு படுகிறது. உணவுப் பழக்கமும் பேச்சு வழக்கும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த வேறுபாடுகள் படைப்பின் அழகாகும்.  இதை வெறுப்பாக மாற்றக் கூடாது. வேறுபாடுகளை நாம் பாராட்ட வேண்டும். கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியம். இப்படிச் செய்ய நமக்கு சக்தி தேவை.

நாம் மன அழுத்தமடைந்தால் சக்தி எப்படிக் கிடைக்கும்? அதனால் தான் நாம் பிராண யாமம் (மூச்சுப் பயிற்சி) செய்ய வேண்டும். சரியான உணவுப் பழக்கம் வேண்டும்.வாழ்வில் நகைச் சுவை அவசியம். தினமும் 10 நிமிடமாவது தியானம் செய்வது மிக அவசியமாகும். இதை எல்லோரும் செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 10 / 15 நிமிடங்கள் ஒரு இடத்தில் அசையாமல் அமர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும். மனதுக்கும் ஓய்வளிக்க வேண்டும். புத்திக்கும் ஓய்வளிக்க வேண்டும். உனக்குள் சென்று பார். மூச்சைக் கவனி. நீ ஒரு சக்தியின் ஊற்று. நீ அன்பின் சாகரம். நீ ஒரு கருத்துக்களின் மலை என்று அறிந்து கொள்.

கே: கொரியாவில் தற்கொலைகள் அதிகமாகியிருக்கின்றன. அதிக போட்டியின் காரணமாக கொரிய இளைஞர்கள் தங்கள் கலாசாரத்தை மறந்து ஆன்மீக நாட்டமின்றி இருக்கிறார்கள். எங்களுக்கு ஞானம் பற்றிய அறிவுரை கூறுங்கள்.

குருதேவர்: உன் சக்தி குறையும் போது மன உளைச்சல் ஏற்படுகிறது. சக்தி மிகவும் குறைவாக இருக்கும் போது, தற்கொலை எண்ணம் மனதில் வருகிறது. முறையான மூச்சுப் பயிற்சிகள், தியானம் மற்றும் அன்பான நண்பர்கள், உறவினர்களின் உறவால் சக்தி அதிகரிக்கும். பொதுவாக நம் மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழும் போது, அதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் போது சிலர் அந்த எதிர் மறை எண்ணங்களைப் போக்காமல், அதை உறுதி செய்வார்கள். ஆம்! நீ சொல்வது சரி தான். இந்தப் பிரச்சினையிலிருந்து மீள முடியாது என்று சொல்வார்கள். இப்படிச் செய்வது சரியல்ல. அந்த எதிர்மறை எண்ணத்தைப் போக்கி, அவரை உற்சாகப் படுத்த வேண்டும். அவருடைய சக்தியை அதிகரிக்க உதவ வேண்டும்.

ஏழைகள் மட்டும் தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று எண்ண வேண்டாம். சில செல்வந்தர்களும், தங்கள் மன நிலை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  தற்கொலைக்கும் செல்வ நிலைக்கும் சம்பந்தம் கிடையாது. தற்கொலை செய்து கொள்ள எண்னம் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு தியானப் பயிற்சி அளிக்க வேண்டும். மூச்சுப் பயிற்சிகளையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் அவர்கள் சக்தி பெற்று தற்கொலை எண்ணத்தைக் கை விடுவார்கள். அப்படிச் செய்ய முடியும்.

தன் மீது வன்முறை (தற்கொலை) மற்றவர்கள் மேல் செய்யப் படும் வன்முறையைப் போலவே கருதப் படும். இது மிகவும் கொடியது.இன்றைய உலகம் ஒரு புறம் சமூக விரோத செயல்களாலும், மற்றொரு புறம் தனி நபர் தற்கொலைகளாலும் பாதிக்கப் பட்டிருக்கிறது. ஆன்மீகம் ஒன்றால் மட்டுமே இரு சாராரையும் நடுவில் சேர்த்து கொடிய செயல்களிலிருந்து காப்பாற்ற முடியும்.
யாராவது தற்கொலை எண்ணம் கொண்டவர் என்று உனக்குத் தெரியும் போது அவரை யோகப் பயிற்சியில் ஈடுபடுத்து. அவர்களைச் சுற்றி நல்லவர்கள் இருக்கும் படிப் பார்த்துக் கொள். இசை நடனத்தில் ஈடுபாடு கொள்ளும் படிச் செய். வாழ்க்கை என்பது நம்மிடம் இருக்கும் பொருள்கள் மட்டும் அல்ல. வாழ்க்கை ஒரு குற்றச் சாட்டோ அல்லது ஒரு பாராட்டோ மட்டும் அல்ல. 

வாழ்க்கை என்பது ஒரு உறவு அல்லது ஒரு பதவியை விட மிக உயர்ந்தது. தற்கொலைக்குக் காரணம். உறவில் தோல்வி. வேலையில் தோல்வி. அடைய நினைத்ததை அடைய முடியாமல் போவது. வாழ்க்கை என்பது நம் மனதில் எழும் சிறிய ஆசைகளைக் காட்டிலும் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. வாழ்க்கையைப் பரந்த கண்ணோட்டத்தில் பார். சமூக சேவையில் உன்னை ஈடுபடுத்திக் கொள். மற்றவர்களுக்கு சேவை செய்வதால் மக்கள் தங்கள் மனதைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும். மன உளைச்சல் என்பது பொருளாதார சீரழிவை விடக் கொடுமையானது. எந்த கடுமையான சூழ்நிலையிலும் ஒருவர் அதிலிருந்து வெளிவந்து மற்றவர்களையும் காப்பாற்ற பொறுப்பு ஏற்க வேண்டும். வாழும் கலை நிறுவனம் மன உளைச்சலால் வருந்துபவர்களுக்கு மிகவும் உதவி வருகிறது. மேலும் பலர் இதில் சேர்ந்து நம் சமுதாயத்தில் நிலவும் கொடுமையான மனச் சிதைவு நோயையும், தற்கொலை எண்ணத்தையும் அறவே நீக்கப் பாடுபட வேண்டும்.

கே: போதை மருந்துக்கு அடிமையாக இருப்பது, புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது முதலியன இன்றைய சமுதாயத்தில் மிகப் பிரச்சினையாக இருக்கின்றன. இதை ஒழிப்பது எப்படி? இப்பழக்கங்களுக்கு அடிமையான இளைஞர்களின் பெற்றோர்களுக்கு என்ன ஆலோசனை சொல்வீர்கள்?

குருதேவர்: பெற்றோர்கள்,கெட்ட பழக்கத்திலிருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அதனால் வரும் கெடுதல்களை அவர்களுக்கு விளக்க வேண்டும். இளைஞர்கள் பாதுகாப்பு வேலியை அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட பொருள்கள் இருக்கும் திசையையே அவர்கள் பார்க்கக் கூடாது. இப்படிச் செய்வது மிக அவசியம். ஒரு சிறிய செடியை வளர்க்கும் போது, அது அழியாமல் காக்க அதைச் சுற்றி ஒரு வேலி அமைப்பது போல், இளைஞர்களின் மனத்துக்கு ஒரு வேலி அமைப்பது அவசியம். அவர்களுக்குப் புரியும் படி விளக்கி கெட்ட வழியில் போகாமல் பாதுகாக்க வேண்டும்.

யார் அப்படிப்பட்ட பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார்களோ, அவர்களை மூன்று வழிகளில் திருத்த முடியும். 1. அன்பு. 2. பேராசை 3. பயம்.

1.   அவர் விரும்பும் ஒருவர் அவரிடமிருந்து சத்தியம் வாங்கிக் கொண்டால், அவர் அப்பழக்கத்தை சத்தியத்தைக் காப்பதற்காக விட்டு விடலாம்.
2.   அந்தப் பழக்கத்தை விட்டாரானால் அவருக்கு பெரிய அதிர்ஷ்டம் வரும் என்று சொல்லி பேராசையை உண்டாக்கலாம்.
3.   அப்பழக்கத்தால் விளையும் தீங்கைச் சுட்டிக் காட்டி பயத்தை உருவாக்கி அப்பழக்கத்திலிருந்து விடுவிக்கலாம்.

எந்த வழியிலாவது அவர்களுக்கு உதவி, தீய பழக்கத்திலிருந்து வெளிவரச் செய்ய வேண்டும்.  ஹோமியோபதியிலும், ஆயுர்வேதத்திலும் இதற்கான மருந்துகள் இருக்கின்றன. இப்பழக்கத்தைக் கைவிட யோகப் பயிற்சிகள் மற்றும் தியானம் உதவும். யோகம் மற்றும் தியானத்தினால் பல லட்சம் பேர்கள் இப்படிப் பட்ட கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட்டதை நான் பார்த்திருக்கிறேன்.

கே: யோக பயிற்சிகள், தியானம் மற்றும் ப்ராணயாமம் ஒரு மத சம்பந்தமான பயிற்சி என்று நினைப்பவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?

குருதேவர்: யோக பயிற்சிகள், தியானம் மற்றும் பிராணயாமம் ஒரு மதத்தைச் சேர்ந்தது, அதை பிற மதத்தவர் செய்யக் கூடாது என்ற தவறான எண்ணமுள்ளவர்கள் அதை அனுபவித்து உணர்ந்ததில்லை. இப்பயிற்சிகள் எல்லோருக்கும், (எல்லா மதத்தினருக்கும்) உதவக் கூடியவை. மனம் அமைதியாக உதவுகின்றன. பயிற்சியை இடை விடாமல் செய்கிறவர்களின் திறமைகளை வெளிப்படுத்த உதவுகின்றன. இப் பயிற்சிகள் உலக முழுவதுக்கும் பொதுவானவை. இவை எந்த மதக் கொள்கைகளுக்கும் எதிரானதல்ல. இப்பயிற்சிகளை மதச் சார்புள்ளவை என்று நினைப்பது தவறு. இப்பயிற்சிகளைக் கற்றுச் செய்தால், இந்த தவறான எண்ணம் விலகி விடும்.

கே: உலகில் பல மதங்கள் உள்ளன. மதம் மனித இனத்தைப் பிரிப்பதற்குக் காரணமாக இருக்கிறதா? அல்லது மதம் எல்லோரையும் ஒன்று சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்டதா ?

குருதேவர்: சரியான ஞானம் இல்லாத போது, மதம் மக்களைப் பிரிப்பதாகத் தோன்றுகிறது. மதம் ஒன்று தான் ஒருவருடைய அடையாளம் என்று நினைக்கிறோம். பல்வேறு மதங்களிடையே பூசல் ஏற்படுகிறது. பிறகு ஒரு மதத்துக்குள்ளேயே பூசல் ஏற்பட்டு உட்பிரிவுகள் தோன்றுகின்றன. சரியாகப் புரிந்து கொள்ளாமல், சரியான ஞானம் இல்லாதது தான் இதற்குக் காரணம்.

ஒரு அறிவுள்ளவர் எல்லா மதத்திலும் கிடைக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வார். மதம் ஒருவருடைய வாழ்வில் ஒரு மதிப்பை ஏற்படுத்துகிறது என்று அவருக்குத் தெரியும். இதை அறியாமல், ஞானம் இல்லாமல் மதம் என்பது உன்னுடைய அடையாளம் என்று நினைத்தால் அது உன் வளர்ச்சிக்கு உதவாது. அது பிரிவினை எண்ணத்தைத் தூண்டும்.

முதல் அடையாளம்.
நாம் அனைவரும் ஒரே கடவுளைச் சேர்ந்தவர்கள் (பேரண்டத்தின் ஒரே ஒளியைச் சேர்ந்தவர்கள்) என்று தெரிந்து கொள்வது அவசியம்

இரண்டாவது அடையாளம்.
நாம் எல்லோரும் உலகக் குடும்பத்தில், ஒரே மனித சமுதாயத்தின் உறுப்பினர்கள்.

மூன்றாவது அடையாளம்.
நாம் ஒரு நாட்டையோ, ஒரு மொழியையோ சார்ந்தவர்கள்.

நான்காவது அடையாளம்.
நாம் ஒரு மதத்தைப் பின் பற்றுகிறோம்.

ஐந்தாவது அடையாளம்.
நம் கலாசாரம். நம் குடும்பம்.

நீங்கள் எந்த அடையாளத்தையும் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் ஒரு மனித சமுதாயத்தின் பகுதி, ஒரு பேரண்ட ஓளியைச் சேர்ந்தவர் என்பதை மறக்கும் போது மதச் சார்பான பிரிவுகள் தலை தூக்கி நம்மை அழித்து விடும். சரியான ஞானத்தோடு இருக்கும் போது வேற்றுமைகளை கொண்டாட முடியும். எல்லா மதத்திலுமுள்ள நல்ல கருத்துக்களை ஏற்று நல்ல மனிதனாக வளர முடியும்.

கே: ஶ்ரீ ஶ்ரீ ! எல்லோருக்கும் பொதுவான அறிவுரை என்ன?


குருதேவர்: ஒவ்வொரு மனிதரின் முகமும், பேரண்டம் என்ற புத்தகமாகும். கடவுளின் புத்தகம். ஒவ்வொருவரும் அன்பின் ஊற்று. இந்த அன்பு வெளிப்பட்டு, அன்பின் ஊற்று பெருகி நம் பூமியைச் செழிப்பாக்கட்டும். உங்கள் எல்லோருக்கும் என் அன்பு! வாழ்த்துக்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு

ஜூன் 23 – 2013 – பெங்களூர் - இந்தியாகே: குருஜி, நீங்கள் மனித நேயம் நிறைந்தவராக வளருவீர்கள் என்று கனவு கண்டீர்களா? 

குருதேவ்:  நான் வளரவே இல்லை என்று நினைக்கின்றேன். நான் வளர மறுக்கின்ற ஒரு இளம் பருவத்து இளைஞனாகவே என்னை உணர்கின்றேன்.  நான் இளைஞனாக இருந்த போது முரண்பாடுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  எப்போதும் அமைதியையே நான் விரும்பினேன். மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிடும் போது நான் தலையிட்டு ஏதாவது செய்ய விரும்பினேன். நம் அமைதியானது கண்ணுக்குத் தெரியாத அறிவுக்கு எட்டாத  ஒரு பிரபஞ்சத்தின் கதவுகளை திறக்கின்றது. அங்கே உண்மையின் பல நிலைகள் வெளிப்படுத்த படுகின்றன. அமைதியே இதற்கு அடிப்படை உங்களுக்குள்ளே இருக்கும் பெரும் பரிமாணத்தை உங்களுக்குள் அமைதியும், தெளிவும் நீங்கள் அணுக முடியும் என்பதனை மக்களுக்குத் தெரிவிப்பதே எனக்கு சவாலாக இருந்தது. 

கே:  உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்களை வியக்க வைத்து ஊக்கம் கொடுத்தவர்கள் யார்?

குருதேவ்: முதலில் என் தாய்.  நான் மேம்பாடு அடைவேன் என்று எப்போதும் சொல்வார்.   என்னை பொருத்தவரை கச்சிதம் அவருடன் பிறந்தது. எதை செய்தாலும் அவர் முழுமையாக கச்சிதமாக செய்வார். இரண்டாவதாக என்னுடைய ஆசிரியர். அவர் மகாத்மா காந்திக்கும் ஆசிரியராக இருந்த பண்டிட் சுதாகர்சதுர்வேதி. அவர் இன்றும் உயிருடனிக்கின்றார். வயது 115. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஓய்வு நேரங்களில் அவரிடம் வேத பாடங்களை கற்றேன்.   அவர் பெரும் தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியவர். மகாத்மா காந்தியுடன் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் இருந்தவர், நாட்டின் சுதந்திரத்திற்காக தன வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

திருமணம் செய்து கொள்ளாமலே அவர் தலித் மற்றும் ஹரிஜன இனத்திலிருந்து எட்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து IAS அதிகாரிகளாக்கியுள்ளார். அவரது வாழ்க்கையும் மனித நேயத்திற்கு அவரது அர்ப்பணிப்பும் ஒரு மாபெரும் தூண்டுகோல் ஆகும்.  

கே: வாழும் கலை என்பது 32 ஆண்டுகளாக 152 நாடுகளில் பரவி 370 மில்லியன் மக்களின்  வாழ்வை எட்டியுள்ளது. நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த மிகப்பெரிய சவால் என்ன? 

குருதேவ்: நான் இந்தச் சவால்களை நினைவுபடுத்தி கொள்ளவோ, கணக்கில் வைத்துக் கொள்ளவோ இல்லை. நிறைய சவால்கள் வந்தாலும் இலக்கு தெளிவாக இருந்தால் தொடர்ந்து மேலே செல்லலாம். அடிப்படைவாதிகளுக்கு இது பிடிக்கவில்லை. ஏனென்றால் மக்கள் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர்களாகவும் பரந்த மனப்பான்மை உடையவர்களாகவும் மாறி வருவது அவர்களது அடித்தளத்தையே அரிப்பதாக இருந்தது. சிலர் சுயநலமாக தங்களை பற்றி மட்டுமே நினைப்பவர்களாக இருக்கின்றனர். அற்ப செயல்களை செய்பவர்களாகவும்,மூட எண்ணங்கள் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் மதத்திற்கு எதிரான பல மூட நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர்.  

ஆரம்ப நாட்களில், தியானம் கற்றுத் தருவதற்கென நான் பல இடங்களை சுற்றி வந்தபோது  சிலர் இதனை இயல்பான ஒன்றாக நினைக்காமல் மாய வித்தை என்று நினைத்தார்கள்.  யாராவது தியானம் செய்தால் அவர்களை இயற்கைக்கு மாறானவர்களாக நினைத்தனர்.  காலம் மாறிவிட்டது.  மூட நம்பிக்கைகள் குறைந்துள்ளன. ஆரம்ப காலத்தில் நான் அணிந்திருந்த உடை, என் தோற்றம் , என்னுடைய இனம், மதம்  அனைத்தும் முக்கியமாக இருந்தன. உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படாதவைகளாக  இருந்ததனால் ஒரு கால கட்டத்தில் அனைத்துமே தடைகளாக தெரிந்தன. இப்பொழுது மூட நம்பிக்கைகள் குறைந்து விட்டன. 

கே: நீங்கள்  ஒரு நாளில் 20 மணி நேரம் செயல்படுவதாக கேள்விப்பட்டோம். இதற்கான தூண்டுதலும் ஊக்கமும் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றது?

குருதேவ்: நீங்கள் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமென்று விரும்பினால் அதற்கான சக்தி நிச்சயம் இருக்கும். மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றொரு பழமொழி உள்ளது.  நான் எப்போதும் நம்புகின்ற ஒரு விஷயம், நம் இயல்பிற்கு மாறான எதையும் எப்போதுமே செய்யக் கூடாது என்பது தான். நமக்கு இயல்பாகத் தோன்றாத ஒன்றை செய்யகூடாது. நான் வேலை செய்யும் போதும் பேராற்றலுடன் தொடர்பு கொண்டுள்ளதால் நான் எளிதில் சோர்வடைவதில்லை போலும். 

இந்த கிரகத்தில் அன்பு தான் மாபெரும் சக்தி. அதனுடன் நம்மை இணைத்துக் கொள்ளும் போது  நம்முள் அளவில்லாத சக்தியின் மூலம் இருப்பதைக் காணலாம். அப்போது நம் செயல் ஒரு முயற்சியாக  இல்லாமல் தன்னிச்சையாக நடைபெறுகின்றது. முயற்சி செய்யும் போது தான் சக்தி விரயமாகின்றது. அப்படியில்லாமல் ஒரு செயல் தன்னிச்சையாக நிகழும் போது உற்சாகமும் சக்தியும் இறுதிவரை நிலைத்திருப்பதைக் காணலாம்.

கே: குருதேவ், நான் என் குழந்தைகளிடம் வெற்றி என்னும் கருத்து பற்றி எளிதாக விளக்குவது எப்படி? 

குருதேவ்: குழந்தைகள் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுவதில்லை. குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுங்கள். அவர்கள் மனதில் வெற்றி தோல்வி பற்றிய கருத்தினை திணிக்க வேண்டாம். வாழ்க்கையை அது வருகின்றபடி அவர்கள் முழுமையாக அனுபவிக்கவிடுங்கள். 

வயது வந்தவர்களுக்கு என்னிடம் வேறொரு சூத்திரம் உள்ளது.  வயது வந்தவர்கள் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் புன்னகை புரிகின்றீர்கள் என்பதைக் கொண்டு உங்கள் வெற்றியை அளவிடலாம். உங்கள் புன்னகையும் தன்னம்பிக்கையும் உங்கள் வெற்றியைக் குறிப்பிடுகின்றன. உங்களது பயமின்மையும் பிறர் மீது நீங்கள் கொள்ளும் அக்கறையும் பகிர்ந்து கொள்ளும் தன்மையும் உங்கள் வெற்றியைக் குறிப்பிடுகின்றன. 

குழந்தைகளைப் பொருத்தவரை முடிவு எதுவாக இருந்தாலும் நல்லதே என்று சொல்லுங்கள்.  பரிசு பெற்றாலும் சரி அல்லது தோல்வியடைந்தாலும் சரி. பரவாயில்லை. தேர்வில் வெற்றி பெற்றாலும் சரி அல்லது தேர்வு சரியாகச் செய்யவில்லை என்றாலும் சரி. பரவாயில்லை. இருந்தாலும், அவர்கள் இன்னும் சிறிது நன்றாக படிக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெற வேண்டும் இன்னும் அதிக முயற்சி செய்ய வேண்டும் என்பதனை அவர்களுக்கு நினைவு படுத்திக்கொண்டே இருங்கள்.  வாழ்வில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கருத்தினை அவர்கள் மனதில் திணிக்காதீர்கள். அது பெரும் இறுக்கத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கும். இளம் பருவத்தினர் பலர் வெற்றி பெற வேண்டும் என்ற பெரும் அழுத்தத்துடன் செயல் பட்டு இறுதியில் உளவியல் சம்பத்தப்பட்ட நோயில் முடிக்கின்றனர். எனவே குழந்தைகளின் இயற்கையான ஆக்கபூர்வமான போக்கு காப்பாற்றப்பட வேண்டும். 

கே: வாழ்வில் வெற்றி பெறுவதற்கு என்னை நான் எப்படி தயார் செய்து கொள்வது?

குருதேவ்: புத்திசாலித்தனமாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டும். பழமையில் சிக்கி நின்று விடாமல், புதிய கருத்துக்களை வரவேற்க  வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக நம் ஆழ் மனதிலிருந்து தளர்வாக பதட்டமின்றி இருக்கவேண்டும். 

கே: எனக்கு நெருங்கியவர்களின், வெற்றிக்கான கருத்து என்னுடையதிலிருந்து வேறுபட்டதாக இருந்தால் என்ன செய்வது? 

குருதேவ்: அப்படியே இருக்கட்டும். வெற்றி என்பதை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அவர்களது கருத்தை உங்களால் மாற்றமுடியாது. நீங்கள் உங்கள் கணிப்பு, மற்றும் கருத்துக்களை மேற்கொள்ளுங்கள். வாழ்க்கையில் எதையாவது அடைய விரும்பினால், ஒரு இலட்சியத்தை மேற்கொண்டால், அதில் பல தோல்விகள் ஏற்படலாம். பரவாயில்லை. உங்களது இலட்சியம் தான் முக்கியம். அதை நோக்கியே நீங்கள் முயற்சி செய்து உழைக்க வேண்டும். ஒவ்வொரு தடையும் வெற்றிக்குப் படிக்கல்லாக அமையும்.

வெற்றிக்காக மனக்கொந்தளிப்பு அடையக்கூடாது, அதுவே வெற்றிக்குத் தடையாக ஆகிவிடும். உங்கள் மனப்போக்கையும், செயலையும் முழு நிறைவுடன் செம்மைப் படுத்துங்கள். எளிதாக, தானாகவே முயற்சியின் பலனை காண்பீர்கள்.

கே: வெற்றிக்கான வழியில் இன்னல்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமானால் எவ்வாறு ஒருவர் வாழ்வில் பாதுகாப்பாக உணர முடியும்?

குருதேவ்: நம்பிக்கை. நம்பிக்கையை உணர முடியும். சில நிமிடங்கள் தியானம் செய்வது உங்களுக்கு நம்பிக்கையை தரும். உங்களுடைய வாழ்க்கையைத் திரும்பிபாருங்கள். பல சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்று கவலைப்பட்டு, எப்படி வெற்றிகரமாக அவற்றைத் தாண்டி வந்திருக்கிறீர்கள் என்று எண்ணிபாருங்கள். உங்கள் வாழ்க்கையைத் திரும்பிபார்த்தால், ஒவ்வொரு நிகழ்ச்சியும் உங்களை உறுதியாக்கி யிருக்கின்றது. மோசமான நிகழ்வுகள் உங்கள் ஆழ்மன பலத்திற்கு உதவி இருக்கின்றது. நல்ல நிகழ்வுகள் உங்கள் திறமையிலும், ஆக்க சக்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆகவே, நல்லதோ, தீயதோ எந்த சந்தர்ப்பமானாலும் அதை நமது வளர்ச்சிக்குப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கே: எந்த ஒரு விஷயத்திலும் நாம் நமது மிகச் சிறந்த பங்கை அளித்திருக்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்ளுவது?

குருதேவ்: எப்படி வயிறு நிறைந்து விட்டது என்று அறிந்து கொள்ளுகிறீர்கள்? எப்படி மிக சிறந்த பங்கை அளித்து ஓடியிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுகிறீர்கள்? அது கண்கூடாக தெரியும். உங்கள் கால் வலிக்கிறது! அதை மற்றவர்கள் எடுத்துக் கூற வேண்டியதில்லை. நீங்கள் உணவருந்திய பின்னர் உங்கள் வயிறு நிறைந்து விட்டது, இனிமேல் உண்ணமுடியாது என்று மற்றவர்கள் கூறத் தேவையில்லை. அது போன்று நீங்கள் நூறு சதம் பங்கை அளித்து செயல்படும் போது உங்களுள்ளேயே திருப்தி உணர்வு ஏற்படுகிறது. "நான் என் முழுப் பங்கையும் அளித்து விட்டேன், இனி செய்வதற்கு எதுவுமில்லை "என்று உங்களால் கூற முடியும்.

உங்கள் செயல்பாட்டுப் பங்கில் ஏதேனும் குறை இருந்தால், உங்கள் மனம்,"இதை இன்னும் கூட நன்றாகச் செய்திருக்கலாம்" என்று கூறும். கடந்து போனதை பற்றி வருந்தி கொண்டிராமல், முன்னேறிச் செல்லுங்கள். கடந்து போனதை அப்படியே ஏற்றுக் கொண்டு, இனி வரும் முயற்சியில் நூறு சதம் ஈடுபடுவதாக உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். இத்தகைய உறுதி நிலை நீங்கள் நூறு சதம் உங்கள் பங்கை அளிப்பதற்கு உதவும்.

கே: உண்மையான அன்பின் குறியீடுகள் என்ன?

குருதேவ்: அதற்கு எந்த விதமான சான்றுகளும் தேவையில்லை. அன்பு என்பதை இதய பூர்வமாக உணர முடியுமே தவிர, புத்திபூர்வமாக விளக்கிக் கூற முடியாது. அன்பு என்பதை மறைக்கவும் முடியாது,வெளிப்படுத்தவும் முடியாது.உலகெங்கும் காதலர்களின் வேதனையே இதுதான். அவர்களால் நூறு சதம் வெளிப்படுத்த முடியாது, அதனால் முழுமையற்று உணருகிறார்கள். அதே சமயம் அதை மறைக்கவும் முடியாது, அது வெளிப்படும். நீங்கள் எந்த அளவு அன்பை மறைக்க முயற்சிக்கிறீர்களோ அந்த அளவு உங்கள் செயல்களில் அது வெளிப்படும்.

கே: ஒருவரை ஆழ்ந்து நேசிக்கும் போது அவரை இழந்து விடுவோமோ என்கிற உணர்வும் ஏற்படுகின்றது.இதை எவ்வாறு வெற்றிகொள்வது?

குருதேவ்: எங்கேயோ அன்பு, பயம், வெறுப்பு ஆகியவை இணைந்திருக்கின்றன. அதை உங்கள் மதி நுட்பத்தினாலேயே தூய அன்பை வெறுப்பு மற்றும் பயம் இவற்றின் கலப்பில்லாமல் வைத்திருக்க முடியும். அதனாலேயே, ஞானம், மதிநுட்பம், ஆன்மிகம் இவையாவும் அவசியம். அவை, நமது அறிவு, இதய உணர்வுகள் ஆகியவற்றைச் சரியான நிலையில் வைக்கின்றன.

கே: குருதேவ்! அன்புதான் நம் வாழ்வின் உள்பொருள் என்றால் ஏன் நாம் சிலர் மீதே அன்பை உணருகின்றோம்?

குருதேவ்: அன்பின் வெளிப்பாடு என்பது வெவ்வேறு வயதினரிடம் வெவ்வேறு விதமாக செயல்படும். குழந்தைகளிடம் அன்பு காட்டுவது வேறு விதம்,வயது வந்தவர்களிடம் காட்டும் அன்பு வேறு விதம், முதியவர்களிடம் காட்டும் அன்பு வேறு விதம். அன்பிற்கு பல வண்ணங்கள் உண்டு. கடவுளிடம் அன்பு, நாட்டின் மீது அன்பு, இந்தப் பூமியின் மீது அன்பு, மரங்களிடம் அன்பு, இவ்வாறு பல்வேறு விதமாக, நமது வாழ்வின் உட்பொருளான அன்பு வெளிப்படுகின்றது.

கே: திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பின்னர் அன்பு மறைந்து விடுகின்றதே? எப்போதும் அது நீடித்திருக்க என்ன செய்வது?

குருதேவ்: ஒரு போதும் உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பை சந்தேகிக்காதீர்கள், அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்காதீர்கள். பேரளவான  ஒன்றை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பது கொடுமையானது.உங்களிடம் ஒருவர் அவர் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றால் அது உங்கள் மனதில் பாரமாக வந்து விழும். யாருடைய அன்பிற்கும் சான்று கேட்காதீர்கள்.

சில சமயங்களில் அவர்களது அன்பின் வெளிப்பாடு மாறலாம்.சற்று வித்தியாசமாக இருக்கலாம். உங்கள் மீது அவர்கள் கவனம் குறைவது போலத் தோன்றினால், அவர்கள் அன்பு செலுத்தவில்லை என்று குறைப்படுவதற்குப் பதிலாக, 'ஏன் என்  மீது இத்தனை அன்பு செலுத்துகிறாய்' என்று கேளுங்கள். அவர்கள் உங்கள் மீது அவ்வளவாக அன்பில்லாமல் இருந்தாலும்,  அப்போது முதல் அன்பு செலுத்தத் துவங்குவார்கள்.


அன்பின் வெளிப்பாட்டின் மீது நேர்மறையான கண்ணோட்டம்  வேண்டும்.அது மிகவும் மென்மையானது. உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று யாரையும் கட்டாயப் படுத்த முடியாது.அது இயலாத காரியம்.அது போன்று ஒருவர் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று உங்களையும் கட்டாயப்படுத்தி கொள்ள முடியாது.உங்கள் உள்ளிலிருந்து இயல்பாகவும், மென்மையாகவும் அது மலர வேண்டும்.அதற்குத் திறமை வேண்டும், அத்திறமை,அறிவு நுட்பத்தால் ஏற்படும்.

ஸ்வதர்மா என்பது என்ன ?

07 ஜூன் - 2013 – பெங்களூரு - இந்தியா.கே: குருதேவ்! ஸ்வதர்மா என்பது என்ன? என்னுடைய ஸ்வதர்மம் என்ன என்பதை எப்படி அறிந்து கொள்ளுவது?

குருதேவ்: உங்களுடைய இயல்புபடி ஏற்படும் செயல்முறை தான் ஸ்வதர்மா என்பது. உங்களுடைய திறமை, சாமர்த்தியம், உங்களது இயற்கையான ஆற்றல் மற்றும் உங்களது கடமை (கர்மா) இவற்றுக்கேற்ப செயல்படுவது. எந்த செயல் உங்களுக்கு பயத்தையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தாமல் இருக்கின்றதோ அது தான் ஸ்வதர்மம். அதற்காக, இதை தவறாக புரிந்து கொண்டு, "நான் மது அருந்தாமல் இருந்தால் அமைதியின்றி இருக்கிறேன்" என்று கூறாதீர்கள். தவறு. அது முற்றிலும் தவறு. எல்லா சமயங்களிலும், ஸ்வதர்மத்தின் காரணமாக நீங்கள் அமைதியின்றி இருப்பதில்லை. ஸ்வதர்மத்தை கடைப்பிடிக்காவிடில், அமைதியின்மை காணப்படும். பகவத் கீதையில்,"ஸ்வதர்மே நிதானம் ஸ்ரேயாஹ் பரதர்மோ பயாவஹாஹ்" (3.35)பிறரிடம் பெருமையாகக் காட்டிக்  கொள்வதற்காக உண்மையல்லாத ஒன்றை செய்யும் போது பயத்தை உணருகின்றோம்; ஏனெனில் அது மெய்யல்ல, இதய பூர்வ மானதல்ல. ஆனால், இதயபூர்வமான, மெய்யான ஒன்றைச் செய்யும் போது பயம் ஏற்படுவதில்லை. ஒருவர் பொய் பேசும் போது, நிச்சயமாக உள்மனதில் பயத்தை உணருகின்றார். அதுவே உண்மை பேசும் ஒருவர் ஒரு போதும் பயப்படுவதில்லை.உண்மை பேசுவதும், உண்மைக்கு இணங்கி இருப்பதும், மிகுந்த பலத்தை அளிக்கின்றது,அல்லவா? அது தான் ஸ்வதர்மா என்பது.

வாழ்வில் எது நம்மிடம் இயல்பாக வந்தடைகிறதோ, அது நமக்கு நிறைவையும், வளத்தையும் அளிக்கின்றது. நம்முடைய இயல்புடன் ஒத்து செயல்படும் போது, நம்முள்ளேயே நாம் வளர்கின்றோம். எது நம்மை மேம்படுத்துகின்றதோ அதுவே நமது ஸ்வதர்மம். தர்மம் என்பது, நமது மனம், அறிவு, நினைவாற்றல், மற்றும் உள் ஆத்மா இவற்றை இணைத்து, ஒத்திசைய செய்வது. ஸ்வதர்மத்தை கடைப்பிடிக்கும் போது அது வளர்ச்சி அடைகின்றது.

கே: குருதேவ்! பகவத் கீதையில், கடவுள் ஒவ்வொரு இடத்திலும் இருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். இதை அன்றாட வாழ்வில் ஒருவர் எப்படி உணருவது?

குருதேவ்: பாருங்கள்! ஞானத்திற்கு இரண்டு கோணங்கள் உள்ளன. ஒன்று போதா-ஞானமே, மற்றொன்று அதை நடைமுறையில் பொருள் புரிந்து கொண்டு உணருவது. உங்கள் வீட்டிலுள்ள கதவுகள், மேஜைகள், நாற்காலிகள் அனைத்தும் மரத்தினால் செய்யப்பட்டவை என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நாற்காலிக்குப் பதிலாக மேசையையோ, கதவுக்குப் பதிலாக நாற்காலியையோ பயன்படுத்த முடியாது.அல்லவா?கட்டில் மேஜை, நாற்காலி அனைத்துமே ஒரே பொருளினால்(மரம்) செய்யப்பட்டிருந்தாலும், ஒன்றிற்குப் பதிலாக மற்றொன்றை உபயோகப்படுத்த முடியாது. ஏனெனில் ஒவ்வொன்றும் மற்றொன்றிலிருந்து வேறுபட்டவை,தனித்தனிப் பயன்பாட்டிற்கு உரியவை. அது போன்று, இளைஞர், முதியவர் அனைவரிடமும் ஒரே கடவுள் குடிகொண்டிருக்கிறார். 

அனைவரிடமும் ஒரே தெய்வீகத் தன்மை என்பதால், குழந்தைகளின் காலில் விழுந்து வணங்கினாலோ  முதியோருக்கு ஆசி அளித்தாலோ, உங்களைப் பித்து பிடித்தவன் என்பார்கள். உங்களிடம் ஏதோ கோளாறு என்று எண்ணுவார்கள்.ஆகவே, ஒவ்வொருவருக்கும் தகுந்தாற்போல் நீங்கள் நடந்து கொள்ளும் முறை மாறுபட வேண்டும். அனைவரிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்ள முடியாது. ஆனால்  ஒரே சம்பாவ -அதாவது ஒரே தெய்வீகத் தன்மையை உங்களை சுற்றியுள்ள எல்லோரிடமும்,எல்லாவற்றிலும் உணர வேண்டும்.

இந்த அத்வைத ஞானத்தைப் புரிந்து கொண்டு, மனதில் இருத்திக் கொண்டால், உங்கள் ஆத்மாவில் நீங்கள் அழுத்தமாக நிலைப்படுத்தி கொள்ளலாம். அப்போது, எல்லாவற்றிலும், ஒரே விழிப்புணர்வுத் தன்மையாயினும் அவரவரை அதனனன் இயல்புக்குத் தகுந்தவாறு அணுக வேண்டும் என்று புரிந்து கொள்வீர்கள். அதாவது, சாமர்த்தியமாகப் பிரித்துணர்ந்து, உங்களைச்  சுற்றியுள்ள எல்லாவற்றிலும், உள்ள ஆழ்நிலை ஒருமை நிலையை உணருவீர்கள். 

கே: குருதேவ்!என் கணவரை மகிழ்விப்பதற்காக நான் என்ன செய்தாலும், அவர் சந்தோஷமாகவே இருப்பதில்லை. என்னைக் குறை கூறிக்கொண்டே இருக்கின்றார். நான் என்ன செய்வது?

குருதேவ்:இததான் அவரது பழக்கம் என்று அறிந்த கொண்ட பின்னர் என் சஞ்சலப் படுகிறீர்கள்? அவரை அப்படியே ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். நீங்கள் சந்தோஷமாக இருங்கள். நீங்கள் பாதிக்கப் படாமல் இருக்கின்றீர்கள் என்றுணர்ந்து கொண்டால் ஒருவேளை, அவர் மாறி விடத் துவங்கலாம். ஒவ்வொருவரிடமும் ஏதோ சில எதிர்மறைக் குணங்கள் இருக்கும். உங்களை தூண்டி விட்டு உறுதியாக்கலாம். நீங்கள் உறுதியானவுடன் அவர்களும் மாற தொடங்குவார்கள். வாழ்க்கையில் எல்லாமே மாறிகொண்டிருக்கும். சில விஷயங்கள் மாறாமலும் இருக்கும். இவ்விரண்டையுமே நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

கே: குருதேவ்! இந்தியாவில் பசுவதை என்பது அதிகமாகிக் கொண்டே வருகின்றது. அதைத் தடுக்க பாராளுமன்றத்தில் ஏதேனும்,கடுமையான சட்டம் கொண்டு வரமுடியுமா?

குருதேவ்: நமது நாட்டில், சுதந்திரத்திற்கு முன்பு இருந்தததில் 20% பசுக்கள் மட்டுமே தற்போது இருக்கின்றன. முன்பு இருந்ததைக் காட்டிலும் விலங்குகளின் வளம் என்பது மிகவும் குறைந்து விட்டது. நாட்டின் பல இடங்களில் பால் தட்டுப்பாடு காணப்படுகின்றது. வட இந்தியாவில் சில இடங்களில் விற்கப்படும் இனிப்பு வகைகள் உண்பதற்கு ஏற்றவை அல்ல என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். யூரியா மற்றும் சில ரசாயனப் பொருட்களை சேர்த்து அவற்றைச் செய்கிறார்கள். அத்தகைய இடங்களில் பல்வேறு விதமான கலப்படங்கள் செய்யப்படுகின்றன. கோயா செய்ய, பல ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி, இனிப்பு வகைகளைச் செய்கிறார்கள். இதை வாங்கி உட்கொண்ட பலர் இறந்து விட்டார்கள், அநேக பேர், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அடிப்படைப் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும் போது, கலப்படம் செய்யத்  துவங்குகிறார்கள். தட்டுப்பாடு இல்லையெனில் கலப்படம் இருக்காது. விலங்குகளின் வளத்தை அதிகரித்து, பசுக்களின் எண்ணிக்கையை கூட்ட முயற்சிக்க வேண்டும்.

இந்தியப் பசுக்களின் பாலுக்கும், ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட பசுக்களின் பாலுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றிய ஒரு ஆராய்ச்சியை அண்மையில் பார்த்தேன். இறக்குமதி செய்யப்பட பசுக்களின் பாலிலுள்ள ப்ரோடீன் A1 ப்ரோடீன் என்று அழைக்கப்படுகின்றது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் ஆகியவற்றுக்கு காரணமாகின்றன. A1 ப்ரொடீனினால் பல நோய்கள் ஏற்படுகின்றன. அதே சமயம் மற்றொரு வகையான ப்ரோடீன் இருக்கின்றது, அது A2 ப்ரோடீன் என்று அழைக்கப்படுகிறது. A2 ப்ரோடீன் தாய்ப்பால், இந்தியப் பசுவின் பால் மற்றும் ஆட்டுப்பாலில் உள்ளது. எனவே தாய்ப்பால், இந்திய பசும்பால் மற்றும் ஆட்டுப்பாலில் உள்ள சேர்மம் ஒரே மாதிரியானது. இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு, பசு ஒரு தாயை போல மதிப்புடன் வணங்கப்பட்டது. இந்த உணர்வலைகள், பசுவின் DNA யில் A1 ப்ரோடீன் அல்லாமல் A2 ப்ரோடீன் சுரக்க வழி செய்தது. இந்தியப் பசுக்களின் பால் வீரியமுள்ளதாகவும், கான்சர் போன்ற நோய்களுக்கு பயன்படுத்த கூடியதாகவும் இருந்தது. ஆகவே, பசுவதை எப்படியும் தடுக்கப்பட வேண்டும். அதற்கான கடுமையான சட்டம் ஏற்பட வேண்டும். அதை விட முக்கியமாக, மக்களுக்கு, இத்தகைய செய்திகள் அறிவுறுத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

கே: குருதேவ்! நேற்று தாங்கள் இறைமை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் என்று கூறினீர்கள். ஏன் வறுமை, வெள்ளம் இவையெல்லாம் ஏற்படுகின்றன?

குருதேவ்: எந்தப் பிரச்சினையுமே இல்லாத ஒரு உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். எந்தப் பிரச்சினையும்,பதற்றமும் இல்லாத ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒருவன் காலையில் எழுந்து, உணவருந்தி, அலுவலகத்திற்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பி,உண்டு உறங்குகிறான்.திரும்பத் திரும்ப அதையே காட்டிக் கொண்டிருந்தால், அந்தப் படத்தைப் பார்ப்பீர்களா?அத்தகைய திரைப்படத்தை ரசிப்பீர்களா? எப்போது ஒரு திரைப்படத்தை விரும்பிப் பார்ப்பீர்கள்? ஒரு திரைப்படத்தில் வில்லன், பதற்றம், சில பிரச்சினைகள் என்று இருந்தால் "ஒ! இது நல்ல திரைப்படம்" என்று கூறுவீர்கள். அது போல,இந்த உலகம் என்பது கடவுளுக்கு ஒரு திரைப்படம் போன்றது. வெள்ளத்தினால் யாரும் மறையவில்லை. அவர்கள் வேறு ஒரு உடலெடுத்து மீண்டும் வருவார்கள். நமக்கும் செய்வதற்கு ஏதாவது வேண்டும்.பிரச்சினைகளே இல்லாமல், அனைவரும் உடல் நலத்துடன் மிக மகிழ்ச்சியாக இருந்தால் கருணை என்பதற்கே இடம் இருக்காது. யார் மீது கருணை காட்டுவீர்கள்? கருணை போன்ற பண்புகள் மறைந்து விடும்.  நமது பிறப்பின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்காகவே பிரச்சினைகள் இருக்கின்றன.


கே: நான் எவ்வாறு பித்துபிடிப்பதை தாண்டி வருவது? மிக எளிதாக ஒருவர் மீது அன்புகொண்டு பித்துப் பிடித்து, பின்னர் அதனால் வேதனை அடைகிறேனே?

குருதேவ்: உங்களுக்கு அதிக அளவில் ஒய்வு நேரம் இருக்கின்றது என்று நினைக்கிறேன். நீங்கள் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். நீங்கள் இத்தகைய இளம் வயதில் இவ்வாறு கசக்கப்படுவது சரியல்ல. நீங்கள் இன்னும் பூ போன்று மலர வில்லை. மொட்டாகவே இருக்கிறீர்கள். யாரையும் உங்களைக் நெருங்க அனுமதிக்காதீர்கள்.அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கின்றது. இப்போது உங்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். எல்லோரையும் கவருங்கள், ஆனால் அங்கேயே தேங்கி விடாதீர்கள்,முன்னேறிச் செல்லுங்கள். அதுதான் சூத்திரம்.

கே: குருதேவ்! நான், ''ஒரு யோகியின் சுயசரிதை" என்னும் புத்தகத்தில், இமயமலையில் யோகிகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்குச் செல்வதற்கு ஒரு சிறப்பு செய்முறை நுட்பத்தைக் கையாள்வதாகப் படித்தேன். உண்மையா? நாமும் அதை கையாள முடியுமா?

குருதேவ்: இல்லை, அப்படி எதுவுமில்லை. நீங்கள் இமாலயத்தில் எங்கு சென்று பார்த்தாலும் அப்படி ஒரு நுட்பத்தைக் காண முடியாது.

கே: குருதேவ்! சில அதிவேகக் கேள்விகள் கேட்கலாமா?

குருதேவ்: சரி கேளுங்கள்.

தாங்கள் யார்?

உங்களையே  கேட்டுக்கொள்ள சரியான கேள்வி.

முற்பிறவியில் நீங்கள் யார்?

அது ரகசியம். பிறிதொரு சமயம் கூறுகிறேன்.

கடவுள் என்பது என்ன? யார்?

எது மற்றும் யார் கடவுள் இல்லையோ அது.

கடவுளை எப்படி உணருவது?

அமைதியாக இருங்கள்.அவரைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். அவர் உங்களைப் பற்றிக் கவலைப்படட்டும்.

எவ்வாறு வன்முறையற்ற, அழுத்தமற்ற உலகம் இருக்க முடியும்?

வாழும் கலையை பரப்புவதன் மூலம்

பூமியின் எதிர்காலம் என்ன?

உங்களைப் போன்றவர்கள் போலப் பிரகாசமாக 

சமயம் என்பது என்ன?

சமயம் என்பது உங்களை சரியான வழியில் நடத்திச் செல்லக் கூடியது.

உண்மை என்பது என்ன?

எது விவரிக்க முடியாததோ,எது தவிர்க்க முடியாததோ அது.

எது நேர்மறை? எது எதிர்மறை?

உங்களை உயர்த்துவது நேர்மறை, உங்களை வீழ்த்துவது எதிர்மறை

குரு என்பவர் யார்?

யார் இந்தக் கேள்விக்குப் பதில் கூறுகிறாரோ அவர்.

மனம் என்பது என்ன?

எது கேள்வி கேட்கிறதோ அது.

நீங்கள் படிக்கும் போது பதற்றம்  ஏற்பட்டால் உங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். எல்லா மாணவர்களும் கட்டாயம் காரட் சாப்பிடவேண்டும். கண்ணாடி அணிந்திருப்பவர்கள். உங்களுக்குத் தேவை வைட்டமின் A.  அது காரட்டில் அதிகம் இருக்கின்றது. ஆகவே அதிகம் காரட் எடுத்துக் கொள்ளத் துவங்குங்கள். சரியான உணவு மிக அவசியம். சரியான உணவு எடுத்துக் கொண்டால் நோயற்று இருப்பீர்கள். சரியாகச் சாப்பிடாமல் இருப்பதாலேயே உடல்நிலை பாதிப்பு ஏற்படுகிறது. பல சமயங்கள் உடலுக்குச் சரியான உணவு என்பதை விட வாய்க்கு ருசியான உணவு என்பதையே உண்ண விரும்புகிறோம். உடலுக்கு நன்மை தரும் உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும்.

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை இரண்டு நீம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது வயிற்றிற்கும் நரம்பு மண்டலத்திற்கும் மிக நல்லது. உங்களுக்குத் தெரியுமா? மகாத்மா காந்தியின் ஆஸ்ரமத்தில் தினமும் நீம் சட்னி செய்து வைப்பார்கள். ஏனெனில் அது மனம், உடல் வயிறு அனைத்திற்கும் நல்லது.உடல் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். திரிபலாவும் மிக நல்லது. உடலில் உள்ள சமமின்மை சரிப்படுத்தும். ஆகவே, நாம் உடலுக்கு நன்மை தரும் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.தவிர பண்ணிசைக்க வேண்டும்.

இன்று ஒரு கட்டுரையில் "ஓம் என்பது வெறும் மந்திரமல்ல அது மருந்தும் கூட" என்று படித்தேன். ஒரு நாளில் மூன்று முறையாவது "ஓம்" என்று ஜபிக்க வேண்டும். "ஓம் நமோ நாராயணாய " அல்லது "ஓம் நமசிவாய" என்று தினமும் ஜபிக்க வேண்டும். இவை மகாமந்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றைத் தினமும் பண்ணிசைத்துக் கூறுவது மிக அவசியம். நல்ல உணவை எடுத்து கொள்ளுங்கள், ஆயுர்வேத மருந்துகளை உபயோகியுங்கள், தினமும் பண்ணிசையுங்கள், எப்போதும் புன்முறுவலுடன் இருங்கள்.

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் என்பவை இருக்கும். அவை வரும், போகும்.எந்தப் பிரச்சினையும் எப்போதும் தங்கி இருக்காது. எனக்குத் தேவையானது எனக்குக் கிடைக்கும் என்னும் நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்.