மனமிருந்தால் மார்க்கமுண்டு

ஜூன் 23 – 2013 – பெங்களூர் - இந்தியா



கே: குருஜி, நீங்கள் மனித நேயம் நிறைந்தவராக வளருவீர்கள் என்று கனவு கண்டீர்களா? 

குருதேவ்:  நான் வளரவே இல்லை என்று நினைக்கின்றேன். நான் வளர மறுக்கின்ற ஒரு இளம் பருவத்து இளைஞனாகவே என்னை உணர்கின்றேன்.  நான் இளைஞனாக இருந்த போது முரண்பாடுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  எப்போதும் அமைதியையே நான் விரும்பினேன். மக்கள் ஒருவரோடொருவர் சண்டையிடும் போது நான் தலையிட்டு ஏதாவது செய்ய விரும்பினேன். நம் அமைதியானது கண்ணுக்குத் தெரியாத அறிவுக்கு எட்டாத  ஒரு பிரபஞ்சத்தின் கதவுகளை திறக்கின்றது. அங்கே உண்மையின் பல நிலைகள் வெளிப்படுத்த படுகின்றன. அமைதியே இதற்கு அடிப்படை உங்களுக்குள்ளே இருக்கும் பெரும் பரிமாணத்தை உங்களுக்குள் அமைதியும், தெளிவும் நீங்கள் அணுக முடியும் என்பதனை மக்களுக்குத் தெரிவிப்பதே எனக்கு சவாலாக இருந்தது. 

கே:  உங்கள் குழந்தைப் பருவத்தில் உங்களை வியக்க வைத்து ஊக்கம் கொடுத்தவர்கள் யார்?

குருதேவ்: முதலில் என் தாய்.  நான் மேம்பாடு அடைவேன் என்று எப்போதும் சொல்வார்.   என்னை பொருத்தவரை கச்சிதம் அவருடன் பிறந்தது. எதை செய்தாலும் அவர் முழுமையாக கச்சிதமாக செய்வார். இரண்டாவதாக என்னுடைய ஆசிரியர். அவர் மகாத்மா காந்திக்கும் ஆசிரியராக இருந்த பண்டிட் சுதாகர்சதுர்வேதி. அவர் இன்றும் உயிருடனிக்கின்றார். வயது 115. நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஓய்வு நேரங்களில் அவரிடம் வேத பாடங்களை கற்றேன்.   அவர் பெரும் தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியவர். மகாத்மா காந்தியுடன் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் இருந்தவர், நாட்டின் சுதந்திரத்திற்காக தன வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

திருமணம் செய்து கொள்ளாமலே அவர் தலித் மற்றும் ஹரிஜன இனத்திலிருந்து எட்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து IAS அதிகாரிகளாக்கியுள்ளார். அவரது வாழ்க்கையும் மனித நேயத்திற்கு அவரது அர்ப்பணிப்பும் ஒரு மாபெரும் தூண்டுகோல் ஆகும்.  

கே: வாழும் கலை என்பது 32 ஆண்டுகளாக 152 நாடுகளில் பரவி 370 மில்லியன் மக்களின்  வாழ்வை எட்டியுள்ளது. நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்த மிகப்பெரிய சவால் என்ன? 

குருதேவ்: நான் இந்தச் சவால்களை நினைவுபடுத்தி கொள்ளவோ, கணக்கில் வைத்துக் கொள்ளவோ இல்லை. நிறைய சவால்கள் வந்தாலும் இலக்கு தெளிவாக இருந்தால் தொடர்ந்து மேலே செல்லலாம். அடிப்படைவாதிகளுக்கு இது பிடிக்கவில்லை. ஏனென்றால் மக்கள் எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர்களாகவும் பரந்த மனப்பான்மை உடையவர்களாகவும் மாறி வருவது அவர்களது அடித்தளத்தையே அரிப்பதாக இருந்தது. சிலர் சுயநலமாக தங்களை பற்றி மட்டுமே நினைப்பவர்களாக இருக்கின்றனர். அற்ப செயல்களை செய்பவர்களாகவும்,மூட எண்ணங்கள் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் மதத்திற்கு எதிரான பல மூட நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர்.  

ஆரம்ப நாட்களில், தியானம் கற்றுத் தருவதற்கென நான் பல இடங்களை சுற்றி வந்தபோது  சிலர் இதனை இயல்பான ஒன்றாக நினைக்காமல் மாய வித்தை என்று நினைத்தார்கள்.  யாராவது தியானம் செய்தால் அவர்களை இயற்கைக்கு மாறானவர்களாக நினைத்தனர்.  காலம் மாறிவிட்டது.  மூட நம்பிக்கைகள் குறைந்துள்ளன. ஆரம்ப காலத்தில் நான் அணிந்திருந்த உடை, என் தோற்றம் , என்னுடைய இனம், மதம்  அனைத்தும் முக்கியமாக இருந்தன. உலகளவில் ஏற்றுக் கொள்ளப்படாதவைகளாக  இருந்ததனால் ஒரு கால கட்டத்தில் அனைத்துமே தடைகளாக தெரிந்தன. இப்பொழுது மூட நம்பிக்கைகள் குறைந்து விட்டன. 

கே: நீங்கள்  ஒரு நாளில் 20 மணி நேரம் செயல்படுவதாக கேள்விப்பட்டோம். இதற்கான தூண்டுதலும் ஊக்கமும் உங்களுக்கு எங்கிருந்து கிடைக்கின்றது?

குருதேவ்: நீங்கள் ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமென்று விரும்பினால் அதற்கான சக்தி நிச்சயம் இருக்கும். மனமிருந்தால் மார்க்கமுண்டு என்றொரு பழமொழி உள்ளது.  நான் எப்போதும் நம்புகின்ற ஒரு விஷயம், நம் இயல்பிற்கு மாறான எதையும் எப்போதுமே செய்யக் கூடாது என்பது தான். நமக்கு இயல்பாகத் தோன்றாத ஒன்றை செய்யகூடாது. நான் வேலை செய்யும் போதும் பேராற்றலுடன் தொடர்பு கொண்டுள்ளதால் நான் எளிதில் சோர்வடைவதில்லை போலும். 

இந்த கிரகத்தில் அன்பு தான் மாபெரும் சக்தி. அதனுடன் நம்மை இணைத்துக் கொள்ளும் போது  நம்முள் அளவில்லாத சக்தியின் மூலம் இருப்பதைக் காணலாம். அப்போது நம் செயல் ஒரு முயற்சியாக  இல்லாமல் தன்னிச்சையாக நடைபெறுகின்றது. முயற்சி செய்யும் போது தான் சக்தி விரயமாகின்றது. அப்படியில்லாமல் ஒரு செயல் தன்னிச்சையாக நிகழும் போது உற்சாகமும் சக்தியும் இறுதிவரை நிலைத்திருப்பதைக் காணலாம்.

கே: குருதேவ், நான் என் குழந்தைகளிடம் வெற்றி என்னும் கருத்து பற்றி எளிதாக விளக்குவது எப்படி? 

குருதேவ்: குழந்தைகள் வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுவதில்லை. குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுவிடுங்கள். அவர்கள் மனதில் வெற்றி தோல்வி பற்றிய கருத்தினை திணிக்க வேண்டாம். வாழ்க்கையை அது வருகின்றபடி அவர்கள் முழுமையாக அனுபவிக்கவிடுங்கள். 

வயது வந்தவர்களுக்கு என்னிடம் வேறொரு சூத்திரம் உள்ளது.  வயது வந்தவர்கள் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் புன்னகை புரிகின்றீர்கள் என்பதைக் கொண்டு உங்கள் வெற்றியை அளவிடலாம். உங்கள் புன்னகையும் தன்னம்பிக்கையும் உங்கள் வெற்றியைக் குறிப்பிடுகின்றன. உங்களது பயமின்மையும் பிறர் மீது நீங்கள் கொள்ளும் அக்கறையும் பகிர்ந்து கொள்ளும் தன்மையும் உங்கள் வெற்றியைக் குறிப்பிடுகின்றன. 

குழந்தைகளைப் பொருத்தவரை முடிவு எதுவாக இருந்தாலும் நல்லதே என்று சொல்லுங்கள்.  பரிசு பெற்றாலும் சரி அல்லது தோல்வியடைந்தாலும் சரி. பரவாயில்லை. தேர்வில் வெற்றி பெற்றாலும் சரி அல்லது தேர்வு சரியாகச் செய்யவில்லை என்றாலும் சரி. பரவாயில்லை. இருந்தாலும், அவர்கள் இன்னும் சிறிது நன்றாக படிக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெற வேண்டும் இன்னும் அதிக முயற்சி செய்ய வேண்டும் என்பதனை அவர்களுக்கு நினைவு படுத்திக்கொண்டே இருங்கள்.  வாழ்வில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கருத்தினை அவர்கள் மனதில் திணிக்காதீர்கள். அது பெரும் இறுக்கத்தையும் பதட்டத்தையும் உண்டாக்கும். இளம் பருவத்தினர் பலர் வெற்றி பெற வேண்டும் என்ற பெரும் அழுத்தத்துடன் செயல் பட்டு இறுதியில் உளவியல் சம்பத்தப்பட்ட நோயில் முடிக்கின்றனர். எனவே குழந்தைகளின் இயற்கையான ஆக்கபூர்வமான போக்கு காப்பாற்றப்பட வேண்டும். 

கே: வாழ்வில் வெற்றி பெறுவதற்கு என்னை நான் எப்படி தயார் செய்து கொள்வது?

குருதேவ்: புத்திசாலித்தனமாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டும். பழமையில் சிக்கி நின்று விடாமல், புதிய கருத்துக்களை வரவேற்க  வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக நம் ஆழ் மனதிலிருந்து தளர்வாக பதட்டமின்றி இருக்கவேண்டும். 

கே: எனக்கு நெருங்கியவர்களின், வெற்றிக்கான கருத்து என்னுடையதிலிருந்து வேறுபட்டதாக இருந்தால் என்ன செய்வது? 

குருதேவ்: அப்படியே இருக்கட்டும். வெற்றி என்பதை பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அவர்களது கருத்தை உங்களால் மாற்றமுடியாது. நீங்கள் உங்கள் கணிப்பு, மற்றும் கருத்துக்களை மேற்கொள்ளுங்கள். வாழ்க்கையில் எதையாவது அடைய விரும்பினால், ஒரு இலட்சியத்தை மேற்கொண்டால், அதில் பல தோல்விகள் ஏற்படலாம். பரவாயில்லை. உங்களது இலட்சியம் தான் முக்கியம். அதை நோக்கியே நீங்கள் முயற்சி செய்து உழைக்க வேண்டும். ஒவ்வொரு தடையும் வெற்றிக்குப் படிக்கல்லாக அமையும்.

வெற்றிக்காக மனக்கொந்தளிப்பு அடையக்கூடாது, அதுவே வெற்றிக்குத் தடையாக ஆகிவிடும். உங்கள் மனப்போக்கையும், செயலையும் முழு நிறைவுடன் செம்மைப் படுத்துங்கள். எளிதாக, தானாகவே முயற்சியின் பலனை காண்பீர்கள்.

கே: வெற்றிக்கான வழியில் இன்னல்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமானால் எவ்வாறு ஒருவர் வாழ்வில் பாதுகாப்பாக உணர முடியும்?

குருதேவ்: நம்பிக்கை. நம்பிக்கையை உணர முடியும். சில நிமிடங்கள் தியானம் செய்வது உங்களுக்கு நம்பிக்கையை தரும். உங்களுடைய வாழ்க்கையைத் திரும்பிபாருங்கள். பல சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகளை எப்படிச் சமாளிப்பது என்று கவலைப்பட்டு, எப்படி வெற்றிகரமாக அவற்றைத் தாண்டி வந்திருக்கிறீர்கள் என்று எண்ணிபாருங்கள். உங்கள் வாழ்க்கையைத் திரும்பிபார்த்தால், ஒவ்வொரு நிகழ்ச்சியும் உங்களை உறுதியாக்கி யிருக்கின்றது. மோசமான நிகழ்வுகள் உங்கள் ஆழ்மன பலத்திற்கு உதவி இருக்கின்றது. நல்ல நிகழ்வுகள் உங்கள் திறமையிலும், ஆக்க சக்தியிலும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது. ஆகவே, நல்லதோ, தீயதோ எந்த சந்தர்ப்பமானாலும் அதை நமது வளர்ச்சிக்குப் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

கே: எந்த ஒரு விஷயத்திலும் நாம் நமது மிகச் சிறந்த பங்கை அளித்திருக்கிறோம் என்று எப்படி அறிந்து கொள்ளுவது?

குருதேவ்: எப்படி வயிறு நிறைந்து விட்டது என்று அறிந்து கொள்ளுகிறீர்கள்? எப்படி மிக சிறந்த பங்கை அளித்து ஓடியிருக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ளுகிறீர்கள்? அது கண்கூடாக தெரியும். உங்கள் கால் வலிக்கிறது! அதை மற்றவர்கள் எடுத்துக் கூற வேண்டியதில்லை. நீங்கள் உணவருந்திய பின்னர் உங்கள் வயிறு நிறைந்து விட்டது, இனிமேல் உண்ணமுடியாது என்று மற்றவர்கள் கூறத் தேவையில்லை. அது போன்று நீங்கள் நூறு சதம் பங்கை அளித்து செயல்படும் போது உங்களுள்ளேயே திருப்தி உணர்வு ஏற்படுகிறது. "நான் என் முழுப் பங்கையும் அளித்து விட்டேன், இனி செய்வதற்கு எதுவுமில்லை "என்று உங்களால் கூற முடியும்.

உங்கள் செயல்பாட்டுப் பங்கில் ஏதேனும் குறை இருந்தால், உங்கள் மனம்,"இதை இன்னும் கூட நன்றாகச் செய்திருக்கலாம்" என்று கூறும். கடந்து போனதை பற்றி வருந்தி கொண்டிராமல், முன்னேறிச் செல்லுங்கள். கடந்து போனதை அப்படியே ஏற்றுக் கொண்டு, இனி வரும் முயற்சியில் நூறு சதம் ஈடுபடுவதாக உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். இத்தகைய உறுதி நிலை நீங்கள் நூறு சதம் உங்கள் பங்கை அளிப்பதற்கு உதவும்.

கே: உண்மையான அன்பின் குறியீடுகள் என்ன?

குருதேவ்: அதற்கு எந்த விதமான சான்றுகளும் தேவையில்லை. அன்பு என்பதை இதய பூர்வமாக உணர முடியுமே தவிர, புத்திபூர்வமாக விளக்கிக் கூற முடியாது. அன்பு என்பதை மறைக்கவும் முடியாது,வெளிப்படுத்தவும் முடியாது.உலகெங்கும் காதலர்களின் வேதனையே இதுதான். அவர்களால் நூறு சதம் வெளிப்படுத்த முடியாது, அதனால் முழுமையற்று உணருகிறார்கள். அதே சமயம் அதை மறைக்கவும் முடியாது, அது வெளிப்படும். நீங்கள் எந்த அளவு அன்பை மறைக்க முயற்சிக்கிறீர்களோ அந்த அளவு உங்கள் செயல்களில் அது வெளிப்படும்.

கே: ஒருவரை ஆழ்ந்து நேசிக்கும் போது அவரை இழந்து விடுவோமோ என்கிற உணர்வும் ஏற்படுகின்றது.இதை எவ்வாறு வெற்றிகொள்வது?

குருதேவ்: எங்கேயோ அன்பு, பயம், வெறுப்பு ஆகியவை இணைந்திருக்கின்றன. அதை உங்கள் மதி நுட்பத்தினாலேயே தூய அன்பை வெறுப்பு மற்றும் பயம் இவற்றின் கலப்பில்லாமல் வைத்திருக்க முடியும். அதனாலேயே, ஞானம், மதிநுட்பம், ஆன்மிகம் இவையாவும் அவசியம். அவை, நமது அறிவு, இதய உணர்வுகள் ஆகியவற்றைச் சரியான நிலையில் வைக்கின்றன.

கே: குருதேவ்! அன்புதான் நம் வாழ்வின் உள்பொருள் என்றால் ஏன் நாம் சிலர் மீதே அன்பை உணருகின்றோம்?

குருதேவ்: அன்பின் வெளிப்பாடு என்பது வெவ்வேறு வயதினரிடம் வெவ்வேறு விதமாக செயல்படும். குழந்தைகளிடம் அன்பு காட்டுவது வேறு விதம்,வயது வந்தவர்களிடம் காட்டும் அன்பு வேறு விதம், முதியவர்களிடம் காட்டும் அன்பு வேறு விதம். அன்பிற்கு பல வண்ணங்கள் உண்டு. கடவுளிடம் அன்பு, நாட்டின் மீது அன்பு, இந்தப் பூமியின் மீது அன்பு, மரங்களிடம் அன்பு, இவ்வாறு பல்வேறு விதமாக, நமது வாழ்வின் உட்பொருளான அன்பு வெளிப்படுகின்றது.

கே: திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பின்னர் அன்பு மறைந்து விடுகின்றதே? எப்போதும் அது நீடித்திருக்க என்ன செய்வது?

குருதேவ்: ஒரு போதும் உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பை சந்தேகிக்காதீர்கள், அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்காதீர்கள். பேரளவான  ஒன்றை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பது கொடுமையானது.உங்களிடம் ஒருவர் அவர் மீது நீங்கள் வைத்துள்ள அன்பை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றால் அது உங்கள் மனதில் பாரமாக வந்து விழும். யாருடைய அன்பிற்கும் சான்று கேட்காதீர்கள்.

சில சமயங்களில் அவர்களது அன்பின் வெளிப்பாடு மாறலாம்.சற்று வித்தியாசமாக இருக்கலாம். உங்கள் மீது அவர்கள் கவனம் குறைவது போலத் தோன்றினால், அவர்கள் அன்பு செலுத்தவில்லை என்று குறைப்படுவதற்குப் பதிலாக, 'ஏன் என்  மீது இத்தனை அன்பு செலுத்துகிறாய்' என்று கேளுங்கள். அவர்கள் உங்கள் மீது அவ்வளவாக அன்பில்லாமல் இருந்தாலும்,  அப்போது முதல் அன்பு செலுத்தத் துவங்குவார்கள்.


அன்பின் வெளிப்பாட்டின் மீது நேர்மறையான கண்ணோட்டம்  வேண்டும்.அது மிகவும் மென்மையானது. உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று யாரையும் கட்டாயப் படுத்த முடியாது.அது இயலாத காரியம்.அது போன்று ஒருவர் மீது அன்பு செலுத்த வேண்டும் என்று உங்களையும் கட்டாயப்படுத்தி கொள்ள முடியாது.உங்கள் உள்ளிலிருந்து இயல்பாகவும், மென்மையாகவும் அது மலர வேண்டும்.அதற்குத் திறமை வேண்டும், அத்திறமை,அறிவு நுட்பத்தால் ஏற்படும்.