ஒரே பிறவியில் கர்மங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிடுமா?

சனிக்கிழமை 23 ஜனவரி 2016.

பெங்களூரு. இந்தியா


 ஓர் அமைச்சர் ,ஆளுநர்  போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் அல்லது ஓர் நிறுவனத்தின் தலைவர் அதிகாரத்துவத்தில் ஒரேயடியாக சிக்கிக் கொள்ளக் கூடாது. அவர்கள் சில சமயங்களில் கீழேயிறங்கி பல்வேறு தரப்பு மக்களிடமும்  பேச வேண்டும். எப்போதும் அல்ல, சில சமயங்களில் அது உதவும்.

உதாரணமாக ஓர் ஆய்வுக் குழுவில் இயக்குனர், மற்றும் இரண்டாம் மூன்றாம் நிலையில் அவர் கீழ் பணிபுரிவோரிடம்  பல சிறப்பான கருத்துக்கள் இருக்கலாம். சிறப்பானவையாக அவை இருந்த போதிலும் இயக்குனர் அவற்றை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் நிறுவனத்தின் தலைவர் அவ்வப்போது இவ்விதமான கருத்துக்களை கேட்டறிய வேண்டும்.

அரசின் உயர் மட்டத்தில் இரண்டாம் மூன்றாம் நிலையில் பணி புரியும் ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார். ஓர் பணித்திட்டத்தில் வளங்கள் மற்றும் நிதி இவற்றைச் சேமித்து, பணித்திட்டத்தின் செலவை 60 முதல் 70 சதவீதம் குறைக்கும்வகையில் தம்மிடம் ஓர் யோசனை இருப்பதாகக் கூறினார். அது ஒரு புதுமையான யோசனை. இளைஞர்களுக்கு  அத்தகைய புதுமையான யோசனைகள் தோன்றுகின்றன. ஆனால் உயர் மட்டத்திலிருக்கும் இயக்குனர் பழமைவாதி. நீண்ட நாட்களாகப் பணியில் இருந்து களைத்து ஒய்வு  பெறும் நிலையில் உள்ளார். இத்தனை ஆண்டுகளாக அவர் உழைத்து, படிப்படியாக முன்னேறி இயக்குனர் நிலைக்கு வந்திருப்பவர். இளம் வயதினரைப் போன்று சாகசங்கள் மற்றும் உற்சாகம் ஆகியவை இல்லை. ஆகவே இந்த இளைஞனுக்கு சிறந்த யோசனை இருந்த போதிலும் இயக்குனர் தனக்கு எவ்வாறு அப்பணித்திட்டத்தை முடிக்க வேண்டும் என்று தெரியும் என்றும் இப்புதிய யோசனை சரியாக இருக்காது, என்றும்  கருதி அதை ஒதுக்கி விட்டார்.

இந்தத் துறை அமைச்சர்கள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். தங்கள் பணியைப் பாதிக்குமோ என்னும் எண்ணத்தில்,இளையோர்களிடம் பேசப் பயப்படுகின்றனர். அதிகாரத்துவத்தில் " இதைச் செய்தால், அல்லது அதைக் கூறினால் தனிப்படுத்தப்பட்டு விடுவோமோ அல்லது வேலை போய் விடுமோ என்னும் பயம் எழுகிறது. அவ்வாறு தான் மனம் வேலை செய்கிறது. ஆகவே, பயத்தின் காரணமாக தங்களது படைப்பாற்றலுக்கு ஓர் மூடி போட்டு மறைத்து, தங்கள் எண்ணங்களை வெளியே கூறுவதேயில்லை. இந்த நிலையில், உயர் அதிகாரியோ, அல்லது அமைச்சரோ இத்தகைய இளையோரை அணுகி, பேசினால் அது பயனுள்ளதாக இருக்கும். அவ்வப்போது பேசுங்கள். அப்போது தான் அவர்கள் மனந்திறந்து தங்களுடைய கருத்துக்களையும் யோசனைகளையும் பகிர்ந்து கொள்வர். இது போன்றிருந்தால் சூழல்,  அதிகாரம் மற்றும் பயம் நிறைந்ததாக இல்லாமல்  நட்புடன் திறந்த மனதுடன் மற்றும் புதுமையுடன் இருக்கும். புதுமைகளை புகுத்த பயமற்ற ஓர் சூழல் தேவையாகும்.

இதில் ஓர் சிக்கல் என்னவெனில், நிறுவனத்தின் ஒழுங்கு சீர் குலையக் கூடும். உயர் அதிகாரிகள் இளையவர்களை தொடர்பு கொண்டிருந்தால், அவர்கள் எவ்வாறு மூத்தவர்கள் கூறுவதைக் கவனிப்பார்கள்? இது ஓர் பிரச்சினையாகலாம். மூத்தவர்கள் முற்றிலும் அதிகாரமின்றி ஆகி விடக் கூடும். இளையோரைக் கட்டுப்படுத்த முடியாமலும், அவர்களை வேலை வாங்க முடியாமலும் ஆகி விடக் கூடும். அது அபாயந்தான். ஏனெனில், இளையோர் சிறு விஷயங்களுக்குக்  கூட மூத்த அதிகாரிகளை எளிதாக அணுகக் கூடும். இது இந்த முறையில் ஓர் அனுகூலமற்ற நிலையும் ஆகும். அதே சமயம், அதிகாரத்துவத்தில் சிக்கிக் கொண்டால், ஒவ்வொன்றும் அமைப்பின் முறையிலேயே சென்று படைப்பாற்றலை மறைத்து விடக் கூடும்.

இவ்விரண்டுக்குமிடையே ஓர் மைய நிலையைக் கண்டறிய வேண்டும். எவ்வாறு அச்சமநிலையைக் கண்டறிவது?  இது ஓர் பெரிய கேள்வி. அமைப்பு சீர்குலைந்து விடாமல் படைப்பாற்றலை மலரச் செய்யவேண்டும். இதற்கு மூத்த மேலாண்மையினருக்கு சிறந்த பயிற்சி தேவை. மூத்த மேலாண்மையினர்  நட்பு மற்றும் திறந்த மனதுடன், அதே சமயம் தன்னம்பிக்கை இளையோரால் அச்சுறுத்தப்படாத மன நிலை இவற்றுடன் இருந்தால் அவர்கள் நன்கு வேலை வாங்க முடியும். சிலர் மேலாண்மை பற்றிப் பேசுமாறு என்னைக் கேட்டுக் கொண்டதால், இந்தக் கருத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணினேன்.

அனைத்துக் கர்மங்களையும் அழிக்க  ஒரே ஒரு பிறவி போதுமா?

ஆம். 20 ஆண்டுகள் ஓர் அறை  பூட்டப்பட்டிருந்தால், அதைச் சுத்தப்படுத்தி அங்கு வெளிச்சம் ஏற்படுத்த, 20 ஆண்டுகள் தேவையில்லை.
.
வெங்காயம், பூண்டு போன்ற சில காய்கள் தமசிக் என்று கருதப்படுகின்றன. ஆனால் மேல்நாட்டு மருத்துவர்கள் உணவு நன்மையின் பொருட்டு அவற்றை  பரிந்துரைக்கின்றனரே?

நல்லதே! ஆயுர்வேதத்தில் கூட உங்களுக்குக் கொழுப்பு சத்து பிரச்சினை  இருந்தால், வெங்காயம் அல்லது  பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும், ஆனால் தினமும் அல்ல. சில சமயங்களில் அவற்றின் மருத்துவ குணங்களினால் அவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆழ்ந்த தியானத்திற்குச் சென்று  சிலரால் வெளி வர முடியாமல் போனால் வெங்காயம் அல்லது பூண்டு தரப்படும், அப்போது உடனடியாக வெளி வருவார்கள். வெங்காயம் மற்றும் பூண்டு இவற்றுக்கு பிராண சக்தியைக் குறைக்கும் குணம் உண்டு. உங்களைச் சற்று கனமாக உணர வைத்து இருத்தி வைக்கும். ஆகவே தியானம் செய்பவர்கள் வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றைத் தினமும் எடுத்துக் கொள்ளக் கூடாது. எப்போதாவது ஓர் சமயம் எடுத்துக் கொள்ளலாம்.

ஏன் மக்கள் ஏமாற்றுகின்றனர்?  ஏமாற்றப்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?

அவர்கள் தாம் செய்வதை அறிவதில்லை. மக்கள் எச்சரிக்கையுடனோ அர்ப்பணிப்புடனோ இருப்பதில்லை. மனம் போன போக்கில் வாழ்கின்றனர். அவர்களது தவறுகளுக்கு பின்னால் உள்நோக்கம் எதையும் கண்டறியாதீர்கள். கருணையுடன் இருங்கள். மனிதர்களின் மனங்களில் பல்வேறு விதமான சலனங்கள் ஏற்பட்டு எங்கு செல்ல விரும்புகின்றனவோ அங்கு செல்கின்றன. மனம் அப்படித்தான் இருக்கும். கட்டுப்பாட்டிற்குள் இருப்பதில்லை. எனவே அறிவொளியுடன் கூடிய நடத்தையை அவர்களிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் செய்யக் கூடியதெல்லாம், அவர்கள் தியானம் செய்து நல்ல மனிதப் பிறவிகளாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தி, அவர்களை அர்ப்பணிப்பு மற்றும் கருணையுள்ளவர்களாக மாற்றும் முறையில் கவனம் செலுத்துவது மட்டும் தான்.

மனித வடிவில் பிறப்பதற்கு முன்பு, வேறு  என்ன வகையான பிறவிகளை ஒருவன் கடந்து வர வேண்டும்?

84,00,000 பிறவிகளுக்கு பின்னரே மனிதப்பிறவி அமைகிறது. ஏன் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க வேண்டும்? கண்ணாடியைப் பாருங்கள். ஓர் குரங்கை நீங்கள் ஒத்திருப்பதாக தோன்றினால் முற்பிறவியில் நீங்கள் குரங்காக இருந்திருப்பீர்கள். ஓர் குதிரை அல்லது கழுதையைப் போன்று தோன்றினால் அவைகளாகப்  பிறந்திருப்பீர்கள். எந்த விலங்காக வேண்டுமானாலும் பிறந்திருக்கலாம். நமது ஆசிரியர்களில் ஒருவர், ஓர் சிறுவனிடம் அவன் ஓர் முட்டாள் கழுதை என்று கூறினார். அதற்கு நான், அவன் அதுவல்ல, முழுமையான பூஜ்யம் என்று கூறினேன். ஒவ்வொரு தனி மனிதனிடமும் கிளி, காகம், ஆந்தை, மயில், போன்ற அனைத்து உயிரினங்களின் தனிமங்கள் கலந்திருக்கும். என்ன பிறவி எடுத்திருந்தீர்கள் என்பது முக்கியமல்ல. இப்போது ஓர் மனிதப் பிறவி. அதை பேரின்பத்துடன் வாழுங்கள். நீங்கள் மரணப் படுக்கையில் இருக்கும் போது, இந்த உயிரினங்களை உதாரணமாக கோழி  என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்காதீர்கள். அடுத்த பிறவியில் கோழிப் பண்ணையில் பிறவி எடுப்பீர்கள்.(சிரிப்பு) ஓர் முட்டையை எண்ணிக் கொண்டிருந்தால் அதுவாகவே உங்களைப் பின்னர் காண்பீர்கள் !

எனது ஆன்மீகப் பயணத்தில் எதுவுமே ஓர் பொருட்டில்லை என்று கண்டறிகின்றேன். இந்த ஞானம் என்னை முற்றிலும் செயலற்ற நிலைக்கு எடுத்துச் செல்கிறது. இதிலிருந்து எவ்வாறு வெளி வருவது?

நீங்கள் வெளி வர விரும்புகிறீர்கள். எனவே ஏற்கனவே அதற்கு ஓர் அடி எடுத்து வைத்து விட்டீர்கள். நீங்கள்  வெளி வந்து ஓர் தன்னார்வலராக பணியாற்றவே அவ்வப்போது நாம் இத்தகைய மாபெரும் விழாக்களை ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் சோம்பேறித்தனம், சோர்வு போன்றவற்றில் வீழ்ந்து விட மாட்டீர்கள். குழுவாகப் பணியாற்றும் போது, திறன்களை வளர்த்துக் கொள்கின்றீர்கள். உங்கள் விழிப்புணர்வு மேலோங்குகிறது. உங்கள் பொறுமை அதிகரிக்கிறது. ஏனெனில் நீங்கள் பல்வேறு விதமான மக்களைக் குழுக்களில் காண்கின்றீர்கள். அவர்கள் உங்களது அனைத்துப் புள்ளிகளையும் அழுத்துகிறார்கள், இறுதியாக நீங்கள் மைய  நிலைக்கு வருகின்றீர்கள்.


அனைத்தும் நல்ல முறையிலேயே சென்று கொண்டிருக்கும்போது நீங்கள் புன்னகையுடன் இருப்பது என்ன பெரிய விஷயம்? ஓர் மூடன் கூட அவ்வாறிருப்பான். நீங்கள் ஓர் அறிவுத் திறன் மிக்கவரானால், விஷயங்கள் சரியான முறையில் செல்லாத போதும் புன்னகையுடன் இருக்க வேண்டும். அனைத்துமே ஞானத்தினால் ஏற்படுகிறது, ஞானம் சேவையின் மற்றும் குழுப்பணியின் மூலம் ஏற்படுகிறது. குழுக்களில் பணியாற்றுவது நிச்சயமாக பயன் தரும்.

வெற்றியின் திறவுகோல் - அர்ப்பணிப்பு

புதன்கிழமை, 20 ஜனவரி 2016


 நல்ல ஆரோக்கியத்தின் அடையாளம் என்னவென்று தெரியுமா? குளுமையான தலை, குழைவான வயிறு, மற்றும் வெதுவெதுப்பான பாதங்கள் - இவையே ஆரோக்கியத்தின் அடையாளம். உங்கள் உடல், மனம், ஆத்மா சரியாக இருந்தால் அனைத்துமே சரியாக இருக்கும். பாதங்கள் குளிர்ந்து, தலை சூடாக, வயிறு இறுக்கமாக இருந்தால் ஏதோ சரியில்லை ; அபாயம் என்று பொருள். உடல் நலம் குன்றும்போது, தலை சூடாகவும், பாதங்கள் குளிர்ந்தும்  வயிறு இறுக்கமாகவும் ஆகின்றன. ஓர் பழங் கால முனிவர்,” பேவ் கரம், பேட்  நரம், ஔர் சிர் தண்டா, ஐஸா நஹி ஹோ தொ மார் தண்டா " என்று கூறுவதுண்டு. இதை நாம் கவனிக்க வேண்டும். 

நீங்கள் தியானம் செய்யும்போது வயிறு குழைவாக ஆவதைக் கவனித்திருக்கின்றீர்களா? எத்தனை பேர் இதைக் கவனித்திருக்கிறீர்கள்?” குளுமையான மனநிலை, வெம்மையான பாதங்கள், மற்றும் குழைவான வயிறு ஆகியவை ஆரோக்கியத்தின் அடையாளம். குளிர் பாதங்களும் கடினமான வயிறும் பிரச்சினைகளின் அறிகுறிகள். அவை அதிக ஆபத்தானவை என்பதில்லை, ஆனால் கவனிக்கப்பட வேண்டியவை.

எவ்வாறு தியானத்தின் மீது கட்டுங்கடங்கா விருப்பத்தை மேம்படுத்திக் கொள்வது?

தியானம் செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதுவே போதும். அறிவுபூர்வமாக அதன் பயன்களை புரிந்து கொள்ளுங்கள். தியானம் செய்யும்போது உங்கள் மூளையின் அமைப்பு மாறுகிறது. வயிறு குழைகிறது, பாதங்கள் வெம்மையாகின்றன, இதயம் பெரிதாகிறது, அறிவு கூர்மையாகிறது.. இதை விட வேறென்ன வேண்டும்? இவை உங்களிக்களிப்படும் பல தூண்டுதல்கள் !

உள்ளுணர்வுடன் புதுமையாக ஆற்றலுடன், கவர்ச்சியாக இருக்க விரும்புகிறீர்களா? இவை தியானம் உங்களுக்குத் தரும். வேறேதுவுமிருக்கிறதா? இவையனைத்தையும் தாண்டி, உங்களுக்கு விருப்பமின்றி இருந்தால் உங்களுடலில்  போதுமான வைட்டமின்கள்  இருக்கின்றதா என்று சோதித்துப் பாருங்கள். வைட்டமின் D  அல்லது B 12  குறைபாடு அல்லது அறிவுக் குறைபாடு இருக்கலாம். ( சிரிப்பு ) அதைச் சரியாக்குங்கள். இன்னும் ஆர்வம் வேண்டும் என்று எண்ணும் போதே , உங்களுக்கு ஏற்கனவே அது இருக்கிறது. நான் இதை விரும்பவேண்டும் என்று எண்ணும் போது, அதை விரும்பிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த உணர்ச்சிகளெல்லாம் மேலெழும்பச் செய்வதோ அல்லது கடையில் வாங்குவதோ முடியாது.

எவ்வாறு வாழும் கலையினை 155 நாடுகளில் இத்தகைய வேகத்தில், இத்தகைய சமாதானத்துடன் நடத்தி வருகிறீர்கள்?

அவற்றை நான் நடத்துவதேயில்லை. (சிரிப்பு) அதுதான் ரகசியம். ஓர் தெய்வீக ஆணையின் கீழ் எல்லாமே நிகழ்ந்து வருகின்றன. அறிவுத்திறன் (ஞானம்) ஓர் நடத்தும் திறனை தன்னுள் கொண்டது. நீங்கள் ஞானத்துடனிருந்தால் அனைத்தும் தானே நிகழும். நடுவில்  நீங்கள் இருக்கும் போது, அதன் சுற்றளவு ஏற்கனவே இருக்கிறது. நடுவில் இருக்கும் நீங்கள் வட்டத்தின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் சம தூரத்திலேயே இருக்கிறீர்கள். நடுநிலை  ஏராளமான ஆளும்திறன் கொண்டது, ஏனெனில், அந்த நடுநிலையே அத்திறனை -  ஞானத்தை .உங்களுக்கு அளிக்கும். சுய ஞானம் நடத்தும் திறனை உடையது ஏனெனில் மிக உயரிய ஆத்மா இந்தப் பிரபஞ்சத்தையே கச்சிதமாக அமைத்துள்ளது.

இந்தச் செம்பருத்திப் பூக்கள் எவ்வாறு இத்தனை கச்சிதமான நிறத்துடன் மற்றும் மென்மையுடன் அமைந்துள்ளன என்று ஏன் நீங்கள் என்னைக் கேட்கவில்லை? லட்சக்கணக்கான செம்பருத்தி மரங்களில் லட்சக்கணக்கான செம்பருத்திப்  பூக்கள் மலர்கின்றன. மலரும் மல்லிகைப் பூக்கள் பூரணத்துவம் பெற்றவையாகவே இருக்கின்றன. அதன் வாசனை  எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது.  சுவையான இளநீர் கொண்டவையாக எவ்வாறு  தேங்காய் இருக்கிறது என்று நீங்கள் ஏன் கேட்பதில்லை? இப்படைப்பில் கோடிக்கணக்கான விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளன. படைப்பின் அடித்தளமாகிய  அந்த  சக்தி, அந்த மெய்யுணர்வு மிகுந்த ஆளுமைத் திறனும் எல்லையில்லாத ஞானமும் கொண்டது. நாம் அதனுடன் இருக்கும்போது அது நமக்குள்ளும் இங்குமங்குமாக வியாபிக்கின்றது.

எவ்வாறு அர்ப்பணிப்பு மற்றும் உணர்வுகளை சமப்படுத்துவது?

உணர்வுகள் மாறும், ஆனால் உணர்வுகள்  மாறும் வேகத்திற்கு ஏற்ப அற்பணிப்பு மாறக் கூடாது. உணர்வுகள் மிக விரைவாக மாறும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஓர் பெண்மணி, கடைக்குப் பொருட்கள் வாங்கச்  செல்லும் முன்னர்  என்னிடம் வந்து “ குருதேவ் நான் கடைகளுக்குச் செல்ல விரும்புகிறேன், என்னை ஆசீர்வதியுங்கள்” என்று கேட்பதுண்டு. அதை நான் விசித்திரமாகக் கருதுவதுண்டு. சாதாரணமாக நோயுற்று இருக்கும்போது, எதையேனும் அடைய விரும்பும் போது, ஆசி வேண்டுவதுண்டு. ஆனால் கடைக்குச் செல்வதற்குக் கூடவா? எது அவரைத் தூண்டியது? 

"ஒவ்வொரு தடவையும் நான் கடைக்குச் சென்று ஒரு புதிய உடையை வாங்கி,  வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தவுடன் பிடிக்காமல் போகிறது. பிறகு அதை மீண்டும் கடைக்கு எடுத்துச் சென்று மாற்றுகிறேன். வாங்கும்போதே வண்ணம் பிடிக்கவில்லையெனில் மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டறிந்த பின்னரே வாங்குகிறேன். இது போன்று ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது. என் கணவர் இதனால் பெரும் சங்கடத்துக்கு ஆளாகிறார். எனவே இம்முறை மாற்ற தேவையில்லாத ஓர் உடையை தேர்ந்தெடுக்க விரும்புகிறேன் ஆசீர்வதியுங்கள்" என்று கூறினார்.ஆகவே நமது மனம் இப்படிப்பட்டது ஆகும். நமது உணர்வுகள் எப்போதும் மாறிக் கொண்டே யிருக்கும். உணர்வுகள் மற்றும் மனநிலைகளை மட்டுமே அடிப்படையாக அமைத்துக் கொண்டால் நாம் அழிந்து விடுவோம்.

நாராயணனை அறிய ஒருவருக்கு எல்லையில்லாத பொறுமை வேண்டும் என்று கூறப் பட்டிருக்கின்றது. அவ்வாறெனில் ஏன் லக்ஷ்மி சஞ்சல அல்லது விரைந்தோடுபவர்  என்று  கருதப் படுகிறாள்?

சஞ்சல என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். “சல்” என்றால் நகருதல்   “சஞ்சல” என்றால் விரைவாக நகருதல் என்பது பொருளாகும். கடைத்தெருவுக்குச் சென்று பொருட்கள் வாங்கி செலவு செய்ய  வேண்டாமெனில் ஏன்   வங்கிக்குச் சென்று பணம் எடுக்க வேண்டும்? அர்த்தமற்றதல்லவா? உங்களிடம் பணம் இருந்தால் எதற்காக  அப்பணம் உங்களிடம் இருக்கிறது? அதைச் செலவிட வில்லையெனில் அதன் மதிப்பு என்ன? செல்வம் என்பதே சுழற்சிக்குத் தான். ஒரு பானை நிறைய தானியங்கள் இருந்தால் அவற்றை மீண்டும் விதைக்க வேண்டும். மேலும் அதிக தானியம் கிடைக்கும். நீண்ட காலத்திற்கு அப்படியே வைத்திருந்தால் அவை மக்கிப் போய்விடும். ஆகவே செல்வமும் நகர்ந்து கொண்டேயிருந்தால்தான் வளரும், நீடித்திருக்கும். பழங்காலத்தில் இருந்தே மக்கள் இந்த ரகசியத்தை அறிந்திருந்தனர் அதனால்தான் லக்ஷ்மியை சஞ்சல என்று கூறுகின்றனர்.

நாராயணன் எப்போதுமே உள்ளார். நரம்பு அல்லது நரம்பு மண்டலம் என்பது நாராயணா என்பதிலிருந்தே தோன்றியிருக்கிறது. நர என்றால் நரம்பு. நாராயணா என்றால் நரம்பு மண்டலத்தில் குடியிருக்கும் மெய்யுணர்வு என்பது பொருளாகும். அவ்வாறில்லையெனில் இப்போது நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டோ புரிந்து கொண்டோ இருக்க  மாட்டீர்கள். எனவே நீங்களே நாராயணன். நீங்கள் நீடித்து வைத்துக் கொள்வதற்கு உங்களுக்கு வரும்படி வேண்டும், அது நகர்ந்து கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் லக்ஷ்மி என்பது பொருளாகும்.

மௌன பயிற்சித் திட்டத்தின் போது ஒருவர் தனக்குள்ளேயே பேசிக் கொள்வது கூடஅனுமதிக்கப்படாதா ?

அப்படியாவது உங்களுக்குளேயே பேச வேண்டும் என்னும் கட்டாயம் உள்ளதா? உங்களுக் குள்ளேயே  பேசிக் கொள்ள என்ன தேவையிருக்கிறது? நான் நன்றாக இருக்கிறேன்  அல்லது இல்லை, நான் பெங்களூருவில் இருக்கிறேன் என்றெல்லாம் உங்களுக்கு நீங்களே நினைவுறுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா ? எப்போதும் பேசிக் கொண்டேயிருந்து வீணாகும் ஆற்றல் அனைத்தையும் ஒன்று திரட்டுங்கள். இரண்டு நாட்கள் மௌனத்தில் ஆழ்ந்து அனுபவியுங்கள். உங்களுக்குள்ளேயே இருக்கும் ஆழம், அகன்ற பரப்பு ஆகியவற்றைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

பிறருடைய விமர்சனக் கருத்துக்கள் மற்றும் நடத்தை என்னைத் திசை திருப்பித் தொந்தரவு செய்கிறது. என்னால் அவற்றை விட்டு விட முடிவதில்லை. தயவு செய்து  உதவுங்கள்.

விட்டு விடுவதற்கு கடினமாக இருந்தால் கெட்டியாகப்  பிடித்துக் கொள்ளுங்கள். உங்களை பற்றிய அத்தனை விமர்சனக் கருத்துக்களையும் எழுதிக்  கொள்ளுங்கள். தினமும்  காலை, மதியம் மற்றும் மாலை மூன்று வேளையும்  அதை படியுங்கள். படிக்காமல் காலையுணவு கூட எடுத்துக் கொள்ளாதீர்கள். இவ்வாறு இரண்டு நாட்களுக்குச் செய்யுங்கள். மூன்றாவது நாள் விமர்சனம் பற்றிய எண்ணம் முற்றிலும் விலகி விடும். இதை நான் தீவிரமாகவே கூறுகிறேன். மறக்க முடியாத ஒவ்வொருவருடைய விமர்சனக் கருத்துக்களையும் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நான் கூறிய படி செய்யுங்கள். அது பயனளிக்கிறதா இல்லையா என்று கூறுங்கள். இல்லையெனில் வேறு வழி முறை ஒன்றினைப் பரிந்துரைக்கிறேன்.

இந்த உலகில் வெற்றியாளர்கள் பலர் தியானம் செய்வதில்லை. அது போன்று தியானம் செய்யும் பலர் பெயர் , புகழ், பணம் அடைதல், சாதனைகள் இவற்றில் வெற்றியாளர்களாக இல்லை. இதை எவ்வாறு விளக்க முடியும்?

வெற்றி என்று எதைக்  குறிப்பிடுகிறீர்கள்? பெரிய தொகை வங்கியிலிருப்பதையா?பெயரும் புகழும் இருக்கலாம், ஏராளமான பணம் இருக்கலாம் ஆனால் அவர்கள் முகத்தில் புன்முறுவல் இருக்காது. நல்ல தூக்கம் இருக்காது. சரியாக உண்ண முடியாது. அது உங்களுக்குத் தெரியுமா? என்னைப் பொறுத்த வரையில் ஒருவரது முகத்திலிருக்கும் வற்றாத புன்முறுவலே அவரது வெற்றியைக் குறிக்கும். வாழ்க்கையில் எந்த நிலைமையையும், தடைகளையும்  தாண்டி வெற்றியடைய முடியும் என்னும் தன்னம்பிக்கை  தான் என்னைப் பொறுத்த வரையில் வெற்றி.

அதுதான் வெற்றி ! சில செல்வந்தர்களைப் பாருங்கள். பிறருடன் நட்புக்கு கொள்வதற்கு கூடப்பயப்படுவார்கள். பணம் பிடுங்குவதற்காகவே நட்புக்கு கொள்வதாகக் கருதுவார்கள். அத்தகைய பீதி அவர்களுக்கு இருக்கும். இதை வெற்றி என்று கூறுவீர்களா? இத்தகைய பல பிரபலங்கள் இருக்கின்றனர். பிழிந்தெடுத்தால்கூட சிறு துளி கூட மகிழ்ச்சியின்றியே இருப்பர். இதை வெற்றி என்று நான் கூற மாட்டேன். 

நீங்கள்  வெற்றியுடனும் புகழுடனும் இருக்க விரும்பினால் அவற்றை அடையலாம்.ஆனால் அதற்கு ஆரோக்கியமான உடல்நிலையும் மனநிலையும் தேவை. அதை அடைய நீங்கள் தியானம் செய்ய வேண்டும். தியானம்  வெற்றிக்கு நேரிடையான வழி என்பதல்ல. அது ஓர் மரத்தின் வேருக்கு நீரூற்றுவது போன்றதாகும். வேரில் நீர் ஊற்றினால் நல்ல பூக்களும், பழங்களும், பசுமையும் கிடைக்கும். தியானம் செய்ய விருப்பமில்லையெனில் செய்ய வேண்டாம். அது கட்டாயமில்லை. நன்றாக மன அழுத்தத்தை அடையுங்கள். அதுவே உங்களுக்கு வெற்றியை பெற்றுத் தருமானால் நல்லது, அப்படியே இருங்கள். யார் உங்களைத் தியானம் செய்யுமாறு கூறியது?


விழித்தெழுங்கள். தயவு செய்து  விழித்தெழுங்கள்.  ஆற்றலுடன் வெற்றிகரமான வாழ்க்கையை அடைய தியானம் ஓர் தடையில்லை. உண்மையில் அது உங்களுக்கு உதவுகிறது. தியானம் செய்து  வெற்றி காணாதவர்கள் இருந்தால் அது அவர்களது விருப்ப தேர்வு.

பிறரது மகிழ்ச்சியே நமது மகிழ்ச்சியின் திறவுகோல்

செவ்வாய் கிழமை, 19 ஜனவரி 2016,

பெங்களூரு இந்தியா


திருமணமான சிலர் மகிழ்வின்றி இருக்கின்றனர், திருமணமாகாத சிலரும் மகிழ்வின்றி இருக்கின்றனர். திருமணமான சிலர் ஆனந்தமாக இருக்கின்றனர், ஆகாதவர்களும் ஆனந்தமாக இருக்கின்றனர். இரண்டாவது  வகையில் இருப்பதே சிறந்தது. திருமணமோ இல்லையோ நீங்கள் மகிழ்ச்சியாக நடு நிலையில் இருந்தால் ஞான ஒளிக்கு அருகாமையில் இருக்கிறீர்கள்.

உலக வாழ்க்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு  கட்டுண்டு இருக்கும் போது எவ்வாறு மனதைத் தளையிலிருந்து விடுபட்டு வைத்துக் கொள்வது?

அதைத் தளை என்று எண்ணினாலே அது தளையாகும். அதை ஓர் தொண்டாகக் கருதினால் அது தளை போன்று தோன்றாது. ஒருவர் உங்களிடம் இதைச் செய்தேயாக வேண்டும் என்று கூறினால் அது உங்களைக் கட்டுப்படுத்துவது போன்றாகும். ஆனால் அதையே  நீங்களாகவே இதயபூர்வமாக விரும்பிச் செய்தால் அதையே செய்து கொண்டிருப்பீர்கள்.

நமது ஆஸ்ரமத்தில் நாங்கள் சிலரை ஓய்வெடுக்கும்படி கூற வேண்டும். இப்படிப் பலரிடம் கூற வேண்டியுள்ளது ஏனெனில் அவர்கள் ஆத்ம திருப்தியுடன் இடைவிடாது பணி புரிகின்றனர். சிலர் எதுவுமே செய்வதில்லை. ஆகவே ஒரே தீர்வு அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்காது. சிலரை ஏதேனும் பணி செய்யுமாறு கூற வேண்டும். சிலரிடம் பணியினை நிறுத்தி ஓய்வெடுக்குமாறு கூற வேண்டும். தளையுண்டு உணர்வதற்கும்   விடுதலையாக  உணர்வதற்கும் காரணம் மனமேயாகும். மனம் மகிழ்ச்சியாக இருந்தால், எதைச் செய்தாலும் மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால் மன வருத்தம், மற்றும் மனப்பாரம் இருக்கும்போது எதுவுமே சுவாரஸ்யமாக இருக்காது. பிறருக்கு ஆனந்தத்தையோ அல்லது வருத்தத்தையோ உங்களால் அளிக்க முடியாது. யாருக்கு என்ன விதியோ அதை அவர்கள் அடைவார்கள். ஆனால் அது பிறருக்கு மகிழ்ச்சியை எடுத்து வருவதைத் தடுக்க முடியாது. உங்களுடைய பங்கில் முயற்சிகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டாம்.

பூஜை அறையில் விளக்கேற்றுவது கட்டாயமா?

இல்லை. கட்டாயமில்லை. அது உங்கள் விருப்பம். உங்களுக்கே நீங்கள் ஒளியாகுங்கள். நமது உடல் திரி போன்றது, நமது மெய்யுணர்வு விளக்காகும். அது முக்கியமானது. ஆனால் நமது இல்லத்தில் ஓர் விளக்கேற்றுவதோ, அல்லது சில சடங்குகளைச் செய்வதோ ஓர் நல்ல சூழலை ஏற்படுத்துகிறது. அதற்காக மட்டும் செய்யப்படுகின்றன. கடவுளை மகிழ்விப்பதற்கு அல்ல. அது சூழலில் ஓர் அமைதியினை எடுத்து வருகின்றது.

ஏன் முதியவர்களுக்கு முன்னாலேயே இளையவர்களும் நல்லவர்களும் இறந்து விடுகின்றனர்? அது கர்மாவா?

இது ஐந்து நித்திய ரகசியங்களில் ஒன்றாகும். "ஏன் பழுக்காத கனிகள் மரத்திலிருந்து விழுந்து விடுகின்றன அல்லது மலராத  மொட்டுக்கள் உதிர்ந்து விடுகின்றன  என்றெல்லாம் என்னைக் கேட்காதீர்கள். அவையெல்லாம் இயற்கையின் ஓர் பகுதி. ஒரு தோட்டக்காரன்  எவ்வாறு முதிர்வதற்குள் இளம் தேங்காய்கள்  உதிர்ந்துவிடாமல் காக்க தன்னால்  முடிந்தவற்றையெல்லாம்  செய்வது போன்று,  நாமும் இவற்றைத் தடுப்பதற்கு நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம். நோய் மற்றும் பிற காரணங்கள் அனைத்தையும் தாண்டி ஒன்றிருக்கின்றது, அதுவே கர்மா. கர்மா மிக ஆழமானது. அதில் ஆழமாகச் சென்று பார்த்தால் மனதில் அச்சத்தை ஏற்படுத்தும். வாழ்க்கை எனும் இம்  முழு நிகழ்வு ஒரு நித்திய தொடர்புடையது;  மற்றும் அது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வந்து மற்றொரு குறிப்பிட நேரத்தில் அகன்று விடுமாறு  திட்டமிடப்பட்டது. இறப்பு விகிதத்தைக் குறைக்க முயற்சித்து, மற்றவைகளை தெய்வீக சட்டத்துக்கு விட்டு விடுவது நல்லது. எதையுமே செய்யாமல் ஆரம்பத்திலேயே தெய்வீக சட்டத்துக்கு  விட்டு விடுவது என்பது சரியல்ல மனிதர்களாகிய நாம் , நம்மால் முடிந்தவற்றைச் செய்வது என்பதே நமது இயல்பு.

நிழலிடா விமானத்தில் என்ன உள்ளது? சற்று விவரித்துக் கூற முடியுமா?

நாம் இந்த உலகத்தில் காண்பது ஒரு பனிப்பாறையின் முனையே என்று வைத்துக் கொள்வோம். நமக்குத் தெரியாதவை ஏராளமாக உள்ளன. ஏராளமானவை ஆழம், வேகம், மற்றும் பரப்பு மிகுந்தவை. இன்று விஞ்ஞானிகள் மில்லியன் கணக்கான உலகங்கள் உள்ளதாக இன்று கூறுகின்றனர். பல மில்லியன் மற்றும் ட்ரில்லியன் சூரியன்களும் இருக்கின்றனவாம்.

பிறப்பு மற்றும் இறப்பு என்னும் சுழற்சியிலிருந்து எவ்வாறு விடுபட முடியும்?

ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? ஏனெனில் இதில் களைப்படைந்து விட்டீர்கள். அதனால் தான் தியானம் செய்யுங்கள், நீங்கள் சாந்தி பெறுவீர்கள் என்று நான் கூறுகின்றேன்.
நீங்கள் விளையாடும் போது களைப்படைந்து வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்க விரும்புகிறீர்கள். ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் விளையாட விரும்புகிறீர்கள். இதுவே விடுதலை  என்பது.

நாம் இந்த உலகத்திற்கு வந்திருப்பது விளையாடவேயாகும். விடுதலை பெற்ற ஒருவன் மீண்டும் திரும்பி வரவே விரும்புவான். பஜ கோவிந்தத்தில் ஸ்ரீ சங்கராச்சாரியார்," என்னுடைய வீடு சுவர்க்கத்திலிருக்கும் சுரதரு, இங்கு சிறிது காலம் விளையாடவே வந்திருக்கின்றேன் என்று கூறுகிறார்.

உரையாடல் பற்றிக் கூறுங்கள்

அறிவிலிருந்து  இதயத்துடன் உரையாடுதலே இன்றையத் தேவை. ஒரு  மதத்தில் இருந்து மற்றொன்றுக்கு மாறும்  போது, எது நல்லது என்று ஒப்பிட்டு பார்க்கத் துவங்கு கிறீர்கள் . ஒரு ஆன்மீக நபர் என்றால், நீங்கள் எல்லாவற்றிலுமிருந்து  ஞானம் ஏற்று, அனைவரையும் மதித்து,  உங்கள் பாதையில் நடப்பீர்கள். ஞானம்  எல்லாவிடங்களிலிருந்தும் பாய்ந் தோடட்டும் என்பதே பண்டைய பாரம்பரியம் ஆகும். அதுவே திறந்த மனமும் கூட. இதுவே இன்றைய பயங்கரவாதத்தின்  காரணமாக உள்ளது. மக்கள் தங்கள் கடவுள் மட்டுமே உண்மையான கடவுள் மற்றும் பிறர் வணங்கும் கடவுள் சரியல்ல என்று எண்ணுகின்றனர். அவர்கள் அழிவினையே உருவாக்குகிறார்கள்.

வெறுப்பைக் கையாளுவது எவ்வாறு? இனிமையற்ற எண்ணங்களும் பற்றுகளும் இருக்கும் போது நிகழ் தருணத்தில் இளைப்பாறுவது  எவ்வாறு?

டெல்லியிலுள்ள ஒரு குருவைப் பற்றிக்  கூறுகிறேன் கேளுங்கள். இவர் ராணுவத்தில் சிப்பாயாக  இருந்தவர். 1971 இல் இந்தியப் பாகிஸ்தான் போர் நிகழ்ந்த போது, கழுத்தில்  குண்டு சுட்டு  விட்டது. அவர் மயக்கமாகி, அப்போதே அறிவொளி பெற்றார். தத்வ ஞானம் பற்றிய அனைத்தையும் அறிந்தார். அக்காலத்தில் நான் 19 வயது இளைஞனாக  இருந்தேன். எனக்கு மிகுந்த மரியாதையளித்து, என்னை யோகிராஜ் என்று அழைப்பார். எனக்கு வெட்கமாகவே இருந்தததுண்டு. என்னைப் பெரிய மனிதனாகக் கருதி, அனைத்து ஞான விஷயங்களையும் என்னிடம் பேசுவார். யாருமே வெறுப்படையும் அளவுக்கு மிக அதிக அளவில் அங்கு  ஈக்கள் இருந்தன.  ஆனால் அவர்," ரெஹ்னே தோ "( அப்படியே இருக்கட்டும்) என்று கூறுவதுண்டு. அந்த ஒரு வார்த்தையான அப்படியே இருக்கட்டும் என்பது  முழு அணுகுமுறை மனப்பான்மையையும் மாற்றக் கூடும். அதுவே முக்கியமானது. வெறுப்பை தவிர்க்க தியானம் செய்ய வேண்டும். ஓய்வெடுக்க வேண்டும். ஆசை மற்றும் வெறுப்பு இரண்டையும் தியானம் மற்றும்  அசைவற்று இருப்பதன் மூலம் கடந்து விட முடியும்.

நாம் ஞானத்தைத் தவறாக பயன்படுத்தக் கூடாது

வியாழக்கிழமை, 14 ஜனவரி 2016, 

பெங்களூரு இந்தியா


(படைப்பின் மர்மங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

தீவிரவாத இயக்கங்கள் முழு விழிப்புணர்வுடன் மக்களைக் கொல்கின்றன. அப்போதும் நிகழ் தருணம் மகிழ்ச்சியானது என்று கூற முடியுமா?.

தவறான புரிதலுடன் அவர்கள் எதையோ செய்கின்றனர். இங்கே யாரையாவது கொன்றால், தாங்கள்  சுவர்க்கத்திற்கு செல்ல முடியும் என்று எண்ணுகின்றனர். இறைவனின் பணியைத் தாங்கள் செய்வதாகவும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இது அவர்களது நம்பிக்கை. இது மகிழ்ச்சியான தருணம் என்று எவ்வாறு கூறமுடியும்? தூக்கிலிடப்படுபவர்களுக்கு நிச்சயமாக இது மகிழ்ச்சியான தருணம் இல்லை. தவறாகப் பொருள் கொள்வதையும், எந்த அர்த்தமும் இல்லாத வகையில் ஞானத்தை விரிவாக்குவதையும் தவிர்த்து விடுங்கள். இது ஓர் விசித்திரமான கேள்வி. நிகழ் தருணத்தில் இருப்பதற்கு பலவற்றை நீங்கள் செய்ய முடியும் அல்லது செய்யாமல் இருக்க முடியும்.

இவை மனதின் விக்ருதி (சிதைவு). இவ்வாறே ஈடுபட்டால், "ஒ! அப்பாவி மக்களைக் கொல்வதும் மகிழ்ச்சியானது தான்" என்று மனம் தவறாக எண்ணக் கூடும்.ஆகையால் நாம் ஆறு செல்வங்களை பற்றிப் பேசுகின்றோம்.க்ஷமா(மனசாந்தம்) தமா(புலனடக்கம்) உபரதி (இருப்பதில் மகிழ்ச்சியடைதல்) திதிக்ஷா (மனோபலம்) சமாதானா (சுயத்தில்),இறைமையில் நிலைத்திருத்தல்) மற்றும் ஷ்ரத்தா  (அசைக்க முடியாத நம்பிக்கை) ஆகியவற்றை ஒருவர் அடைய வேண்டும்.

நல்லொழுக்கங்களின் அமைப்பில் ஸ்திரப்படும் வரையில்,ஞானத்தின் நான்கு தூண்களில் நன்கு நிறுவப்படும் வரையில் ஒருவன் வேதாந்தத்தை பேச முடியாது. இவற்றில் நிலைபெறாமல் "ஒ! அனைத்தும் கடவுளே! அவ்வாறெனில் கொன்று குவிப்பவர்களும் பிரம்மனே. அனைத்தும் பேரின்ப மெய்யுணர்வான ஆனந்தத்தில் தோன்றியதென்றால் இவர்களும் அதிலிருந்து வந்தவர்களே ஆவர் " என்றும் கூறலாம்.இது மிக உயர்ந்த ஞானத்தின் தவறான பயன்பாடு. நல்ல விவேகம் வைராக்கியம் ஆறு செல்வங்கள் மற்றும் முமுக்ஷத்வா (முக்தியை நோக்கி ஈடுபாடு) இவற்றினை அடையும் வரையில் மிக உயர்ந்த ஞானம் ஒருவருக்கு வழங்கப்பட மாட்டாது. இந்த நான்கு கோட்பாடுகளும் நம்முள் நன்றாக நிறுவப்பட வேண்டும்.அப்போது தான் வேதாந்தம் பேச முடியும். அனைத்தும் கடவுள், அனைத்தும் பிரம்மன் என்னும் தத்துவத்தை, பகுத்தறியும் திறனை அடையாதவர்களுக்குக் கற்பிக்க வேண்டாம் என்றே கூறப்பட்டுள்ளது. 

ஓர் திருடன் கூட இதைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடும். திருடன், என்னவாயினும் அனைத்தும் பிரம்மனே, எனவே இந்தப் பணம் என்னுடைய பையில் இருந்தால் என்ன அல்லது வேறொருவரது பையில் இருந்தால் என்ன? ஏன் நானே வைத்துக் கொள்ளக் கூடாது? என்று கூறலாம் .(சிரிப்பு). இது போன்றிருந்தால் வேதாந்தத்தை பயன்படுத்தி அனைத்து திருடர்களும் தங்களது செயலை நியாயப்படுத்திக் கொள்ளக் கூடும். ஆகையால்தான் உயர் ஞானம் எளிதாக வழங்கப்படுவதில்லை.
சரியாக புரிந்து கொள்ளாமல் அனைத்தும் பிரம்மன் என்று நீங்கள் எண்ணினால் உங்களால் களிமண்ணிற்கும் வாழைப் பழத்திற்குமிடையே வேறுபாடு காண முடியாது. அப்போது நீங்கள் மண்ணையும் உண்ண வேண்டியதிருக்கும். மக்கள் பல சமயங்களில் ஞானத்தைத் தங்கள் வசதிக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதுவே தவறாகப் பயன்படுத்துதல் ஆகும். ஞானம் உங்களுக்கு உங்களுக்கு ஆறுதலை அளிக்கிறது. உங்களுடைய வசதிக்குப் பயன்படுத்திக் கொள்ளுதல் நெறியற்றதாகும்.  ஞானத்தில் திளைத்து வாழ்ந்தால், அது நிச்சயமாக உங்களுக்கு முழு ஆறுதலையும் முழுமையான ஆனந்தத்தையும் அளிக்கின்றது.

குருதேவ், சிவபெருமானின் ஜடாமுடி, புனித கங்கையை சிறைப்பிடித்து வைத்துக் கொண்டிருக்கின்றது. கங்காதேவி ஞானத்தின் அடையாளம். ஜடாமுடி எதன் அடையாளம்? அது எதைக் குறிக்கிறது?

தெய்வ அன்னை கங்கை, ஞானத்தை வர்ணித்துக் காட்டுகின்றது. ஒரு தனி மனிதன் அந்த அளவு ஞானத்தை பெற்றுக் கொள்ளவோ,பிடித்து வைத்துக்  கொள்ளவோ  முடியாது. முடிவில்லாத  பேரின்பம் (சிவன்) மட்டுமே அத்தகைய ஞானத்தை பிடித்து வைத்துக் கொள்ள முடியும். சாதாரண மனிதன்  முடிவில்லாத ஞானநதியிலிருந்து சிறிய ஊற்று மட்டுமே ஏற்று  திருப்தியையும் பேரின்பத்தையும் அடையமுடியும். ஒரு நூலகத்தில் ஏராளமான அளவு அறிவுச் செய்திகள் உள்ளன. உங்களுக்குள் அசைவற்ற நிலையையும் உள்ளடக்கத்தையும் அடைய உண்மையில் எவ்வளவு தேவை? ஒரு சிறிதளவு மட்டுமே அல்லவா? தேடும் அறிவுச் செய்தியை மட்டுமே நீங்கள் படிக்கிறீர்கள். ஒரு சிறிய துளி ஞானம் உங்களை வந்தடையும் போது அது உங்களுக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் அளிக்கின்றது. ஆனால் அச்சிறிதளவின்றி ஞானநதி முழுவதுமே பெருக்கெடுத்து வந்தால்,ஒருவன் (ஒரே சமயத்தில் பரந்த அளவு அறிவுச் செய்திகளை புரிந்து ஏற்றுக்கொள்ள இயலாமல்) சங்கடப்படுவான்.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் தனது விஸ்வரூபத்தை அர்ஜுனனுக்குக் காட்டிய போது அர்ஜுனன் மிகவும் பயந்து நடுங்கத் துவங்கி விட்டான்.அவன், ஸ்ரீ கிருஷ்ணரிடம்,"பகவானே! இந்தப் பரந்த அற்புதமான, பயம் தரும் தெய்வ ரூபத்தை முடித்துக் கொண்டு சாதாரண உலக ரூபத்திற்கு வருகை புரியுங்கள். என்னால் முடிவில்லாத உங்களுடைய தெய்வ தரிசனத்தை பார்க்க இயலவில்லை" என்று கூறினான். இதுவே ஸ்ரீ கிருஷ்ணரிடம் அர்ஜுனனின் பிரார்த்தனை. ஞானம் பரந்தது மற்றும் முடிவில்லாதது. ஓர் சிறு துளி ஞானம் ஆத்மாவிற்கு திருப்தியையும் அமைதியையும் தரும்.

குருதேவ், ஒருவன் காயத்ரி மந்திரத்தை தன் பெற்றோரிடமிருந்து மட்டும்தான் பெற்றுக் கொள்ள வேண்டுமா? அல்லது வேறு யாரிடமிருந்தும் பெற்று கொள்ளலாமா?

காயத்ரி மந்திரத்தை பெற்றோர் அல்லது குருவிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஒலி நாடா  மூலம் கேட்பதோ ஜபிப்பதோ சரியல்ல. முறையான சடங்குகள் மூலம் ஒருவன் காயத்ரி மந்திர சிக்ஷை அடையும் போது அம்மந்திரத்தின் சக்தி அதிகரித்து, பயனுள்ளதாகின்றது.

குருதேவ் ! ஸ்ரீ என்பதன் பொருள் என்ன? பணம் மட்டுமே ஸ்ரீ என்று குறிப்பிடப்படுகிறதா அல்லது மற்ற எல்லாவிதமான நிறைவும் செல்வமும் அவ்வாறே அழைக்கபடுகின்றனவா?

இல்லை. “ஸ்ரீ” என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. “ஸ்ரீ”  என்பது படைப்பு அல்லது ஞானம் செல்வம் போன்ற அனைத்தையும் குறிக்கும். இவையனைத்தும் “ஸ்ரீ”  என்னும் முற்சேர்க்கையைக் கொண்டவை. வெளிப்படும் அனைத்தும் “ஸ்ரீ” ஆகும். பகிரங்கமாகத் தெரியாதவற்றின் புகழும் “ஸ்ரீ”  என்றே அழைக்கப்படுகிறது. பகிரங்கமாக தெரியாத, பார்க்கமுடியாத,உணரமுடியாத மெய்யுணர்வின் சிறப்பும் புகழும் “ஸ்ரீ”  என்றே குறிப்பிடப் படுகின்றது. திறமை, வலிமை உடல் நலம் ஆகிவையும் “ஸ்ரீ”  யே ஆகும்.

குருதேவ், கம்சனின் தந்தை அக்ரசேனர் தேவ அரசர், ஆனால் கம்சன் மோசமானாவனாகி விட்டான். அதே சமயம், அரக்க அரசனாகிய ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் உன்னதமானவனாகவும் பக்தனாகவும் இருந்தான். பெற்றோரின் சம்ஸ்காரங்கள் (எண்ணப் பதிவுகள் அல்லது ஒழுக்கங்கள்) கூட குழந்தைகளுக்கு கடந்து செல்லுமா?

ஆம்.அவை குழந்தைகளுக்கு செல்லும். சிசுவின் வாழ்வை நான்கு அம்சங்கள் பாதிக்கும். 25 சதவீதம் முற்பிறவிகளிலிருந்து அவர்கள் கொண்டு வரும் எண்ணப் பதிவுகள். 25 சதவீதம் அவர்களது தாய் மற்றும் தந்தையிடமிருந்து வரும் எண்ணப் பதிவுகள்.25 சதவீதம் அவர்களிருக்கும் உடனடியான சூழல். அது ஓர் முக்கியப் பங்கு வகிக்கின்றது. மீதமுள்ள 25 சதவீதம் தன்னுடைய நடவடிக்கை எண்ணப் பதிவுகளால் ஏற்படுவது. இவ்வாறு பல விஷயங்கள் ஓர் குழந்தையின் வாழ்வில் பதிவினை ஏற்படுத்துகின்றன. ஓர் ஆசிரியரும் கூட பெரிய அளவில் ஒருவரது வாழ்வில் எண்ணப் பதிவினை ஏற்படுத்துகின்றார்.

பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது மனதை வலிமைப்படுத்தும்

செவ்வாய்க்கிழமை 12 ஜனவரி, 2016

பெங்களூர், இந்தியா


கேள்வி – பதில்கள்

என்னிடம் முறைகேடாக நடந்து கொண்டு, உடலையும், மன உணர்ச்சிகளையும் பாதிப்பவர்களை எப்படி மன்னிப்பது ? மேலும் அப்படிப் பட்டவர்களோடு, தினமும் வாழ வேண்டியிருக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? சில சமயம் அவர்களைக் கொன்று விட வேண்டுமென்ற உணர்வு வருகிறது. அப்படிச் செய்தால் கூட அந்த தண்டனை போதாது என்று நினைக்கிறேன்.

உன்னிடம் முறைகேடாக நடந்து காயப்படுத்துபவர்களை, நீ மறந்து விட வேண்டுமென்று நான் விரும்புகிறேன். தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ, விருப்பமில்லாமலோ, நீ யாருக்கோ தீங்கு விளைவித்ததில்லையா ? நீ அப்படிச் செய்திருக்கலாம். அந்த நபர், உன் வாழ்நாள் முழுதும் உன்னைப் பழி வாங்க வரும் போது உனக்கு எப்படி இருக்கும் ? அது உனக்குப் பிடிக்குமா ?

அன்பானவளே, யாரோ உன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டால், அவர் அறியாமையால் செய்திருக்கக் கூடும். அவர்களுக்குப்  போதிய அறிவு (ஞானம்) இல்லை. அவர் ஆணவம் பிடித்தவராக இருக்கலாம். ஏதோ, காயத்தினால் பாதிக்கப்பட்டோ, அறியாமையாலோ, அவர் மற்றவர்களுக்குத் தீங்கிழைக்கிறார். உன் பார்வையை விரிவாக்கி, வேறு கண்ணோட்டத்தில் பார். அவருக்குப்  போதிய அறிவு  இல்லை என்பதைப் புரிந்து கொள்வாய். அவர் ஆனந்தமாக இருக்கமாட்டார். ஆனந்தமாக இருக்கும் ஒருவர் மற்றவர்களுக்குத் தீங்கு செய்ய மாட்டார்.
ஒருவர் மற்றவர்களுக்குத் தீங்கு செய்கிறாரென்றால், அவர் ஆனந்தமாக இல்லை ; நடு நிலையில் இல்லை ; உனக்கிருக்கும் ஞானம் அவருக்கு இல்லை. அவரை ஒரு நோயாளியாகப் பார். ஒருவர் உடல் நோயால் அவதிப் படும் போது, அவரைப் பார்த்துக் கோபம் வருகிறதா ? 

இப்படிப்பட்ட மனிதர்கள் மன அளவில், உணர்ச்சிகளால் நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். ஆன்மீக அறிவில்லாமல் வாடுகிறார்கள். அப்படிப் பட்டவர்களிடம் நீ காழ்ப்புணர்ச்சியைக் காட்டினால், நீயும் அவர்களில் ஒருவராகி விடுவாய். நீ நோய்வாய்ப் படுவாய். உன் நன்மைக்காக, அப்படிச் செய்வதைக் கைவிட்டு, மேலே செல். நீ காயப்படுவதற்கு மற்றவர் மட்டும் காரணமா ? உன் அறியாமையும், அப்பாவித்தனமும் கூட அதன் காரணமாக இருக்கலாம்.

தேவையான அளவு புத்திசாலித் தனம் உனக்கில்லை ; அல்லது அதிலிருந்து உன்னைக் காத்துக் கொள்ள போதிய உள்ளுணர்வு உனக்கில்லை. எனவே நீயும் சற்று அதற்காகப் பொறுப்பேற்றுக் கொள். நீ பலமானவளாக, திறமைமிக்கவளாக இருந்திருந்தால், யாரும் உன்னிடம் முறைகேடாக நடக்க விட்டிருக்கமாட்டாய். அப்படிப்பட்டவரோடு நீ பழகியிருக்க மாட்டாய். நீயும் சற்று பொறுப்பேற்றுக் கொள். நீ தவறு செய்து விட்டாய்.  எனவே இந்த நிகழ்வை, நீ வேறு ஒரு கோணத்தில் பார்க்கும் போது, அமைதியாக இருப்பாய்.

மன்னிப்பது மற்றவருக்காக இல்லை. அது உன் நன்மைக்காக : உன் மன நலத்தைக் காப்பதற்காக. அந்த நபர் எப்படியும் ஒரு நாள் இறந்து விடுவார். நீ அவரை சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ அனுப்பும் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அப்படி நீ அவரை அனுப்பினால், நீ சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டியிருக்கும். அவர் ஒரு நாள் மரணமடைவார் என்பதை நினைவில் வை. அவருக்குப் பயணச்சீட்டு வாங்கிக் கொடுக்க அவசியமில்லை. அவருக்கு எப்போது போக வேண்டுமோ, அப்போது போகட்டும். அதை  நீ அவசரப் படுத்தினால், அவரை உடனே அனுப்பி வைக்க முயற்சித்தால், உன் எஞ்சிய வாழ் நாட்களை, நீ சிறைச்சாலையில் கழிக்க வேண்டியிருக்கும். எனவே கடந்த காலத்தை மறந்து விடு.

சில மனிதர்கள் வன்முறையாளர்களாகவும், முறைகேடாக நடப்பவர்களாகவும் இருக்கிறார்கள். இது உலக நியதி. முள் ஏன் குத்துகிறது ? என்று கேட்டால், அது முள்ளின் இயல்பு ; நீ தான் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். உன் விரலை முள்ளின் மேல் வைக்காதே. நீ பாதுகாப்பாக இல்லாததால் காயப் படுகிறாய். நீ 5 % பொறுப்பேற்றுக் கொண்டால் கூட, உன் மனம் அமைதியாக இருக்கும். ஆனால் எல்லாம் மற்றவரின் தவறு என்று நினைத்தால், நீ உன்  மனதிலும், இதயத்திலும் அவரை வைத்து வருந்துகிறாய். அப்படிச் செய்தால், நீ அவரை விட உயர்ந்த நிலைக்குச் செல்ல முடியாது. உன்னை அறியாமலேயே, அவர் செய்த தீங்கை விட அதிகமாக உன் சூழ்நிலையை பாதிக்கிறாய்.
எனவே, நாம் கவனமாக இருந்து, நம் அனுபவங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். புது செருப்பு, காலைக் கடித்ததற்காக, செருப்பைக் கடிக்க முடியுமா ? அதை விட மூடத்தனம் ஒன்றும் கிடையாது. அதை விட்டு மேலே ஆக வேண்டியதைப் பார்.

வாழ்நாள் மிகக் குறைந்த காலத்துக்கே உள்ளது. நம்மைக் காயப்படுத்தியவர்களை நினைத்து, அதை வீணாக்க வேண்டாம். உலகம் மிகப் பெரியது. எல்லா விதமான மக்களும் இவ்வுலகில் வாழ்கிறார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள் எல்லா மக்களும் இருக்கிறார்கள். தோட்டத்தில் எல்லா வகையான மரங்களும் உள்ளன. எனவே, வாழ்க்கை எல்லாம் கலந்த ஒன்றாகும். விழித்துக் கொண்டு இதைப்  பார். எத்தனை நாட்கள், மனதில் விருப்பு, வெறுப்பைச் சுமந்து கொண்டு வாழ்வாய் ? இது உன்னை எங்கே கொண்டு சேர்க்கும் ? ஒரு மனிதனின் முடிவு வரும் போது எப்படியும் அவன் இறந்து விடுவான். அவனை சொர்க்கத்துக்கோ, நரகத்துக்கோ, அனுப்பி வைக்க உனக்கு என்ன அவசரம் ? தீவிரமாக ஏதாவது செய்தால், நீ சிறைச்சாலையில் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கும். அப்படிப் பல முட்டாள் மனிதர்கள் சிறைச்சாலைக்குச் சென்றிருக்கிறார்கள்.

மாமியாரைக் கொடுமைப்படுத்திய பல மருமகள்கள் இருக்கிறார்கள். முன்பெல்லாம் மக்கள் நல்ல மருமகளாகக் கிடைக்க வேண்டுமென்று பிரார்த்தனை செய்வார்கள். இன்று பல மாமியார்கள், எப்படிப்பட்ட மருமகள் வருவாளோ என்று கவலைப்படுகிறார்கள். பெண்கள் சிறைச்சாலைக்குச் சென்று பார்த்தால், பல முதியோர்களைக் காணலாம். அவர்கள் நல்ல குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மருமகள்களுக்குத் தீங்கு செய்து விட்டு, சிறைக்கு வந்திருக்கிறார்கள் என்பதை நம்ப மாட்டாய். பல பெண்கள் தங்கள் மாமியார்கள் மேல், பொய்யாக வரதட்சிணைக் கொடுமை என்று புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார்கள். மாமியார் சிறை உணவை உண்ணட்டுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப் பார்த்தால் உனக்குக் கண்ணீர் வரும்.

பூனா மற்றும் தில்லியில் நம் பயிற்சி வகுப்புகளை, பெண்கள் சிறைச்சாலையில் நடத்தினோம். வகுப்பில் 70 – 80 வயது முதியவர்களைக் காண முடிந்தது. அவர்கள் மிக வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தாய்மார்களின் மகன்கள், வீட்டில் சி.சி.டி.வி பொருத்திப்  பார்த்ததில், தங்கள் மனைவிகள் தாயைக் கொடுமைப்படுத்தியது, பொய் சொல்லி சிறைச்சாலைக்கு அனுப்பியது தெரிய வந்ததாம். கதைகளைக் கேட்டோம்.
வாழ்க்கையில் ஆன்மீகத்தைக் கடைப் பிடிக்காதவரை, இப்படிப் பட்ட நிகழ்வுகள் தொடரும்.
கணவன் மனைவியிடையே, அம்மா பிள்ளையிடையே மற்ற உறவுகளுக்கிடையே பிரச்சினைகள் உள்ளன.

நம் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பறிவு கொடுப்பது மட்டும், அவர்களுடைய மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதிப்படுத்தாது. தார்மீக மற்றும் ஆன்மீக மதிப்புகளை அவர்களிடம் வளர்க்காமல், நல்ல ஆனந்தமான வாழ்க்கைக்கு வழி செய்ய முடியாது. அவர்களும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். அவர்களால், தங்களைச் சுற்றியிருப்பவர்களிடையே மகிழ்ச்சியைப் பரப்பவும் முடியாது. எப்படி ஆனந்தமாக வாழ்வது ? எப்படி ஆனந்தத்தைப் பரப்புவது ? என்று கற்றுக் கொள்ள வேண்டும். எனவே ஆன்மீகக் கல்வி மிகவும் முக்கியம்.

ஒருவர் எதிர் கொள்ளும் நிகழ்வுகள், அவரது கர்ம வினையைப்  பொறுத்த ஒன்று என்பதை அறிவேன். ஆனால் அந்த நபர் இப்பிறவியில்  நல்லவராக இருக்கும் போது, முன் செய்த பழைய செயல்களுக்காக ஏன் வருந்த வேண்டும் ?

புரிந்து கொள். நீ காலை உணவு சமைக்கும் போது, நிறைய காரம் போட்டு விட்டாய். மதிய நேரத்தில் நீ காரம் போட்டதை மறந்து விட்டு, உண்ணும் போது காரம் தெரிகிறது. நீ “ காலையில் காரம் அதிகம் போட்டதற்கு, இப்போது ஏன் காரம் தெரிகிறது ? “ என்று சொல்ல முடியாது.

நீ இக்கட்டில் மாட்டும் போது தான் கேள்வி கேட்கிறாய். நீ பணத்தை முதலாகப் போட்டு விட்டு, சில காலத்துக்குப் பின் அதிக பணம் கிடைக்கும் போது, “ ஏன் இப்படி அதிக பணம் கிடைக்கிறது ? “ என்று கேட்பதில்லை. நீ போட்ட முதலுக்கு வட்டி சேர்ந்து வருகிறது.
நீ ஒரு மாங்கொட்டையை விதைக்கிறாய். சில ஆண்டுகளுக்குப் பின், உனக்கு பல மாம்பழங்கள் கிடைக்கின்றன. நீ ஒரு தேங்காயை விதைத்து ஒரு தென்னை மரத்தை வளர்த்தாய். அந்த மரம் ஒவ்வொரு  நாளும் ஒரு தேங்காயைக்  கொடுக்கிறது. நீ ஏன் இப்படி நிறையத் தேங்காய் கிடைக்கிறது என்று கேட்பதில்லை. அதே போல், காய்கறிகளை விதையிட்டு, செடி வைத்து வளர்க்கும் போது, சில நாட்களுக்குப் பின் அவை அதிகமாக காய்களைக் கொடுக்கும். அந்தச் சமயத்தில், “ஏன் கடவுள் இப்போது என்னோடு இல்லை. நான் மூன்று மாதம் முன்பு ஒரு பீன்ஸ் தான் கொடுத்தேன். ஏன் இப்போது நிறைய பீன்ஸ் கொடுக்கிறார்? “ என்று கேட்பதில்லை.

விழித்துக் கொள். குழந்தை ஒரு நாளில் பிறப்பதில்லை. அதற்கு 9 மாதங்கள் ஆகும். இது உலக நியதியின் ஒரு பகுதியாகும். இது இடம், நேரத்துக்குள் நடக்கும் ஒரு நிகழ்வாகும். எல்லா நிகழ்வுகளும் கர்ம வினைப்படி அந்தந்த காலத்தில், அந்தந்த இடத்தில் நிகழும். நிகழ்வுகளையே கர்ம வினை என்று குறிப்பிடலாம்.

எல்லா செயல்களும், முடிவிலியான இறைவன் சித்தப்படி பிறக்கிறதென்றால், நாம் ஏன் நம் ஒவ்வொரு செயலிலும் இறைவனைக் காண்பதில்லை ? தயவு செய்து அப்படி சாத்தியமாக்குங்கள்.

இது ஒரு கோரிக்கையா ? நீ சரியான வழியில் செல்கிறாய். முடிவில்லாத ஒன்றிலிருந்து நீ தப்பிக்க முடியாது. முடிவிலியிடமிருந்து தப்பித்துவிட முடிந்தால், அது முடிவிலி அல்ல. நீ முடிவிலியிலிருந்து தப்பி விட்டதாக நினைப்பது மாயை. விண்வெளியிலிருந்து நீ விலக முடியுமா ? சாத்தியமே இல்லை. நீ விண்வெளிக்குள்ளே இருக்கிறாய். தினந்தோறும் விண்வெளிக்குள்ளே இருப்பதாக மனதில் நினைக்கத் தேவையில்லை.  எனவே இயல்பாக இரு. நீ பெங்களூரில் இருப்பது உனக்குத் தெரியும். ஒவ்வொரு நாளும் நீ பெங்களூரில் இருப்பதை நினைவு படுத்திக் கொள்ள அவசியமில்லை.

நான் ஸ்விட்சர்லாந்து நாட்டில் பதஞ்சலியின் யோக சூத்திரத்தைப்  பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. நம் வாழும் கலையினர் சிலர் மூலிகைத் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது, யாரோ ஒரு பெண் சொன்னதைக் கேட்டார்கள். அந்தப் பெண்ணின் கணவர் தினந்தோறும் காலை 4.30 மணிக்கு எழுந்திருந்து “ நான் என்னை நேசிக்கிறேன் “ என்று திரும்பத் திரும்ப 2 மணி நேரம் வரை சொல்வாராம். இது அவருடைய தினசரி  சாதனை. வாழும் கலையினர், அந்தப்  பெண்ணிடம் “ எங்களுக்கு அப்படி செய்யத்  தேவையில்லை. நாங்கள் எங்களை நேசிக்கிறோம் என்பதை அறிவோம் “ என்று சொன்னார்களாம்.

நீ உன்னை நேசித்தால், அதை மந்திரம் போல் திரும்பத் திரும்பச் சொல்லத் தேவையில்லை. பார், நீ ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் போது,  “நான் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறேன். நான் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் போது, ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறோமா “ என்ற சந்தேகம் வந்து விடும். உன்னை நீ நேசிக்காமலிருக்க சாத்தியமே இல்லை. ஏனென்றால் நீயே அன்பு. அன்பு என்பது ஒரு செயல் அல்ல. நீ அன்பால் உருவானவன் / உருவானவள்.

உறுதிப்படுத்திக் கொள்ளும் செயல்கள் உன்னைப் பைத்தியக்காரனாக்கிவிடும். நீ ஒரு மனநோய் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியிருக்கும். நீ முடிவிலிக்குள் இருக்கும் போது, நான் முடிவிலிக்குள் அடங்கியவன் என்று திரும்பத் திரும்பச்  சொல்லத் தேவையில்லை. ஓய்வாக இரு.

உலகில் தோன்றிய முதல் மொழி எது ? எல்லா மொழிகளும் எப்படித்  தோன்றின ? குருதேவா ! மொழிகளின் கதையைச் சொல்லுங்கள்.

“ கூகிள் “ (வலை தளம்) பக்கத்துக்குச் சென்று தேடு. உனக்குத்  தெரியுமா ? பல மொழி வாரியான சமூகங்கள் உள்ளன. எப்போது அவர்களுடைய மொழி தோன்றியது என்று சொல்வார்கள். நீ அதை வேதவாக்காக நம்ப வேண்டியதில்லை. நமக்குத் தெரிந்தது – இந்திய மொழிகளுக்கெல்லாம் தாயாக இருந்தது சமஸ்கிருத மொழி தான். சொல்லப் போனால் ஆங்கில மொழிக்கும் மூலம் சமஸ்கிருத மொழியாக இருக்கலாம். இன்று இங்கிலாந்திலும், ஃப்ரான்ஸ் நாட்டிலும், பள்ளிகளில் குழந்தைகளுக்கு சமஸ்கிருத மொழியைப் பயில்விக்கிறார்கள்.

எந்த மொழி முதலில் தோன்றியது என்பது முக்கியம் அல்ல. எந்த மொழியைக் கற்க விரும்பினாலும் நீ அதை கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் மொழிகளுக்கப்பால் ஒன்று உள்ளது. அதை நீ கற்றுக் கொள். அது வாய் பேசாத தொடர்பு. உன் எண்ண அலைகள், நீ பேசாமலேயே, உண்மையில் நீ என்ன சொல்ல விரும்புகிறாய் என்பதைத் தெரியப் படுத்தி விடும். உன் ஆறாவது அறிவின் மூலம் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியும். வாழும் கலையின் உள்ளுணர்வுப் பயிற்சி மூலம், குழந்தைகள் வியக்கத் தகு அறிவாற்றல் பெறுகிறார்கள். இந்த அறையில் அமர்ந்து கொண்டு அடுத்த அறையில் நிகழ்வதைப்  பற்றி அவர்களால் சொல்ல முடியும். அவர்களுக்கு இந்தத் திறமை உள்ளது. எனவே மொழியில்லாத தொடர்பு நிலைக்கு உயர வேண்டும். அது தான் உண்மையான தியானம். 

அடுத்தவரின் தீர்ப்பு உங்களை வரையறுக்க அனுமதிக்காதீர்கள்.


சனிக்கிழமை, 2 ஜனவரி 2016,

பாத் அண்டோகஸ்ட் ஜெர்மனி


 ஒவ்வொரு கேள்வியையும் அதிசயமாக்குங்கள். "ஆஹா" என்பது தான் யோகாவின் முன்னுரையாகும். யோகா என்பது வெறும் உடற்பயிற்சியல்ல,பிரபஞ்சத்துடன் ஐக்கியமாவதேயாகும்.

யோகாவின் முன்னுரை “ஆஹா”. எந்த சமயத்தில் நீங்கள் “ஆஹா” என்று வியந்தாலும் அங்கு உங்கள் மனம் நிற்கின்றது. அழகு மூலமாக மற்றும் அதிர்ச்சியின் காரணமாக அவ்வாறு “ஆஹா” என்று வியந்து நிற்க இயற்கை உங்களுக்குப் பல சந்தர்ப்பங்களை அளித்திருக்கின்றது. இது சகித்முத்ரா என்று அழைக்கப்படுகின்றது. சகித்முத்ரா என்றால் (குருதேவர் திகைப்பை வெளிப்படுத்திய முகபாவத்துடன் ஆழ்ந்த உள்மூச்சு எடுத்து ஹா என்னும் ஒலியுடன் செய்து காட்டுகிறார்)

நீங்கள் செய்கிறீர்களா? (அவையோரை அதே முகபாவத்துடன் செய்யுமாறு கேட்கின்றார் ). ஓர் அதிர்வுடன் “ஹா” எனும் ஒலி எழுப்புங்கள். பின்னர் சிறிது காத்திருங்கள். அசைவின்றி இருங்கள். என்ன நிகழ்கின்றது என்பதை கவனியுங்கள். நீங்கள் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் இருக்கும் போது ஓர் கலக்கம் ஏற்படுவதைக் கவனித்தீர்களா? உங்களது தாடைகள் இறுக்கமின்றி கீழிறங்க வேண்டும். கண்கள் அகலமாக விரிய வேண்டும். அப்போது முடிவில்லாததற்குள் நழுவிச் செல்வீர்கள்.

மிக அழகான இசையும், மற்றும் மிக அழகிய கலை வடிவங்களும் ஏன் சோகம் மற்றும் ஏக்கம் இவற்றிலிருந்து எழுகின்றன?

வாழ்க்கையில் எல்லா விதமான மனநிலைகளும் உள்ளன. ஒரே ஒரு மனநிலை என்பது உதவாது. இந்தியாவில் அவை நவரசம் அதாவது ஒன்பது விதமான அழகிய உணர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றது. அதில் பயம் என்பதும் ஒன்று ஆகும். பரதநாட்டியம் என்னும் அழைக்கப்படும் இந்திய பரதக் கலையில் இந்த ஒன்பது விதமான உணர்ச்சிகளும் (மகிழ்ச்சி, சிரிப்பு, துக்கம், கோபம், வீரம், பயம், வெறுப்பு, அதிசயம் மற்றும் அமைதி) சித்தரிக்கப் படுகின்றன.

தவிர எவ்வாறு பரத நாட்டியமும் எலும்புகளையும் தசைகளையும் இயக்குவதன் மூலம் நோய் நீக்குதல் முறையும் தொடர்புள்ளவை என்பதையும் நாம் அறிய வேண்டும்.நிச்சயமாக இவற்றுக்கிடையே உறவு உள்ளது. ஏனெனில் பரத நாட்டியத்தில் முதன்முதலாக கற்பிக்கப் படுவது கழுத்தை அசைத்தலே யாகும். நன்றாக முன்னும் பின்னும் கழுத்து லாவகமாக அசைய வேண்டும். இரண்டாவதாக கண்ணசைவு கற்பிக்கப்படுகிறது. எனவே கழுத்தசைவு, கண்ணசைவு, கையசைவு, விரல்களசைவு போன்ற அசைவுகள் பரதநாட்டியத்தில் கற்பிக்கப் படுகின்றன. இது போன்றே எலும்புகளையும் தசைகளையும் இயக்குவதன் மூலம் நோய் நீக்குதல் முறையிலும் முதுகெலும்புடன் தொடர்புடைய வகையில் உங்கள் கைகளை ஒரு விதமாக அசைக்கும்படிக் கற்பிக்கின்றனர்.

பாலியில் பாலி  நடனத்தில் உங்கள் சுண்டு விரலை அசைக்கக் கற்றுத் தருகின்றனர். இந்த நடனத்தில் உங்கள் ஆள்காட்டி விரலையும்  நடுவிரலையும்  ஒன்றாக இணைத்து வைத்துக் கொள்வது முக்கியம். மீதமுள்ள இரு விரல்களை அசைக்க வேண்டும். இது கடினமானது. சுண்டு விரலையும், மோதிர விரலையும்  தனித்தனியாக அசைப்பது கடினம், முயற்சி தேவைப்படும்.

நமது உடலில் தீர்க்க ரேகைகள் (உயிர் சக்தி பாய்ந்து செல்ல வழிவகுக்கும் வாய்க்கால்கள்) உள்ளன. பாலி நடனத்தில் இது மிக முக்கியமானது. நடன நிகழ்ச்சி முழுவதிலும் நடனக் கலைஞர் ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு தனது விரல்களை அசைத்துக் கொண்டிருக்கின்றார். ஐந்து நிமிடங்களுக்கு விரல்களை அசைத்தலே வலி ஏற்படுகிறது. அவர்கள் ஓரிரு மணி நேரம் இதைச் செய்கின்றனர், அத்துடன் கண்களையும் அசைக்கின்றனர். இவற்றால் உடலிலுள்ள பல்வேறு வாய்க்கால்கள் செயல்படுத்தப் படுகின்றன. இது நடனத்தின் மூலம் நிகழ்கின்றது. இது மிக ஆச்சரியமானதும் கூட. உங்களது உள்ளங்கையில் ஒவ்வொரு விரலும் ஓர் கிரகத்துடன் தொடர்புள்ளது. கட்டை விரல் செவ்வாய் கிரகத்துடன் தொடர்பு கொண்டது. அது மட்டுமே தனியாக உள்ளது.
ஆள் காட்டி விரல் குருவுடன் தொடர்புடையது.(வழிகாட்டுபவர்,ஆசான்).எதையேனும் சுட்டிக் காட்ட விரும்பினால் ஆள்காட்டி விரலையே பயன்படுத்துகின்றீர்கள்.அது குரு. நடுவிரல் சனியுடன் தொடர்பு கொண்டது. சனி பணியாளர். மோதிர விரல் சூரியனுடன் தொடர்புடையது. சூரியனே அரசன். நகைகள் யாரிடம் இருக்கும்? அரசரிடமே, அதனால் மோதிர விரலில் மோதிரம் அணிந்து கொள்கின்றீர்கள். அதனால் தான் அது மோதிர விரல் என்று அழைக்கப்படுகிறது. சூரியன் அல்லது அரசன் தனியாக இருக்க முடியாது. கட்டாயம் பணியாள் தேவை. ஒவ்வொரு நாட்டின் தலைவருக்கும் உயரமான சிவந்த கட்டுமஸ்த்தான ஒரு மெய்க்காப்பாளர் இருக்கிறார். ஆகையால் மோதிர விரலையும் நடு விரலையும் பிரிக்க முடியாது. சுண்டு விரல் புதனுடன் தொடர்புடையது. சின்முத்திரை செய்யும் போது என்ன நிகழ்கின்றது? ஆள்காட்டி விரலும் (குரு) கட்டை விரலும் (செவ்வாய்) ஒன்றாக இணைகின்றன. அதுவே ஞானமும் சக்தியும் ஆகும்.

ஏன் கட்டை விரல் செவ்வாயுடன் தொடர்புடையது? ஏனெனில், நீங்கள் வெற்றியடையும் போது கட்டை விரலை உயர்த்திக் காட்டுகின்றீர்கள். தோல்வியுறும் போது கட்டை விரலை கீழ் நோக்கிக் காட்டுகின்றீர்கள். இந்த சைகைகள் நம்முள் கட்டமைக்கப்பட்டவை. இது போன்று வெவ்வேறு கிரகங்கள் நமது உடலின் பல்வேறு பாகங்களை பாதிக்கின்றன. பற்கள் சனியுடன் தொடர்புடையவை. கண்கள் சூரியனுடன் தொடர்புடையவை. கன்னங்கள் சுக்கிரனுடன் தொடர்புடையவை. நெற்றி புதனுடன், மூக்கு குருவுடன் தொடர்புடையன. இந்தத் தொடர்புகள் நுண்ணுயிர் நிலைக்கும் இப்பிரபஞ்ச நிலைக்கும்  இடையேயான தொடர்புகளாக நான் குறிப்பிடுகின்றேன். இது மிகவும் கவர்ச்சியான விஷயம்  !

தங்களது சமூக அமைப்பிலிருப்பவர்களே தங்களைப் பற்றி தீர்ப்பு நிலையிலிருந்து புறம் பேசும் போது தாங்கள் என்ன செய்கின்றீர்கள்?

என்ன வேண்டுமோ பேசட்டும். அதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகின்றீர்கள்? அவர்கள் தீர்ப்பளித்து பேசட்டும்.அதனால் என்ன? பேசியதால் எதுவும் மாறப்போவதில்லை. எது எது வரவேண்டுமோ அது வந்து சேரும், என்ன நிகழ வேண்டுமோ அது நிகழும். அவ்வளவு தான். மற்றவர்கள் உங்களைப் பற்றிப் பேசினால் அவ்வாறே செய்யட்டும். அனைவருக்கும் அறியாமையுடன் இருக்கும் உரிமை உண்டு. தங்கள் அறியாமையினை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். மற்றவர்களின் தீர்ப்புக்கணிப்பை காட்டிலும்  ஏன் உங்களுடைய புரிதலுக்கும் அப்பாலும் கூட  நீங்கள் பெரியவர்,  தயாளம் கொண்டவர் என்பதை மறந்து விடாதீர்கள்.

கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் இவற்றிலிருந்து எவ்வாறு விடுபடுவது?

என்ன கருத்துக்கள்? அவற்றைத் தூர எறியுங்கள். இந்தப் பிரபஞ்சம் உங்களுக்கு ஆச்சரியப் படவும் நெஞ்சார உணரவும் ஏராளமாக அளித்துள்ளது. எனது புத்தாண்டு செய்தியில் நான் கூறியுள்ளபடி, நீங்கள் ஓர் நதிக்கரையில் அமர்ந்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள். நதி ஓடிச் செல்வதைக் காண்கின்றீர்கள். அதில் என்னவெல்லாம் செல்கின்றன? சில குப்பைகள் செல்கின்றன.சில அழுக்குகள்,மரக்கட்டைகள், கப்பல்கள், மலர்கள் அனைத்தும் மிதந்து செல்கின்றன. என்ன மிதந்து கடந்து செல்கின்றன என்பதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். கடந்து செல்லும் அனைத்தையும் காண்கின்றீர்கள் அவ்வளவு தான்.

எனக்கு மனஉறுதி மற்றும் ஒழுங்கு கொஞ்சம் கூட இல்லை. நான் பெரிதும் முயற்சி செய்துழைத்தாலும் என்னால் அவற்றை வளர்த்துக் கொள்ள முடியவில்லை. நான் என்ன செய்வது?

உங்களுக்கு மன உறுதி இல்லையென்று யார் கூறியது? உங்களுக்கு மனஉறுதி இல்லையெனில் இங்கு வந்திருக்க மாட்டீர்கள். ஒவ்வொரு எண்ணத்தையும் நீங்கள் செயல்படுத்தும் போது அது உங்கள் மன உறுதியினை எடுத்துக் காட்டுகின்றது. “நான் எழுந்து அடுத்த அறைக்குச் செல்லவேண்டும்“ என்று ஓர் எண்ணம் எழுகின்றது. அதை நீங்கள் செய்யும் போது, அது உங்கள் மன உறுதியை குறிப்பிடுகிறது. மன உறுதி இல்லாமல் இருப்பது சாத்தியமே இல்லை.சில விஷயங்கள் நடைபெறாமல் இருக்கலாம். ஏனெனில், உங்கள் மனம் சில பழக்கங்கள், அல்லது சில சபலங்கள் ஆகியவற்றுக்கு ஆட்பட்டிருக்கலாம், அப்போது நீங்கள் உங்களுக்கு மன உறுதி இல்லையோ என்று எண்ணுகின்றீர்கள். அவ்வாறில்லை உங்களுக்கு விருப்பம் இருக்கும் வரையில் சக்தியும் உண்டு.