எதுவானாலும் சரி அமைதியாக இருங்கள்


வெள்ளிக் கிழமை, 1 ஜனவரி 2016 ,

பெர்லின், ஜெர்மனி


கனவு காண்பது எளிதாக இருக்கிறது, விமர்சிக்கும் யதார்த்தவாதியாக இருப்பதுவும் எளிதாக இருக்கிறது. அனைத்து பிரமைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை கைவிட்டு பின்னரும் ஓர் சுடருடன் வாழ்வில் எவ்வாறு இருப்பது?

வாழ்க்கையில் தீவிரங்களுடன் இருத்தல் எளிதானதாகும்.நடுவழியில் செல்ல அறிவுத்திறன் தேவை. அதுவே யோகா மற்றும் ஆன்மீகம் ஆகும். அவை மைய நிலையில் இருப்பதைத் தான் கூறுகின்றன. மைய நிலைக்கு வந்துவிட்டால், எது நிகழ வேண்டுமோ அது நிகழும். அனைத்தும் அண்டவிதியின் படியே நிகழும். புத்தர் தன் வாழ்க்கை முழுவதும் ஒன்றையே கூறினார். "நடு நிலையினை எடுத்துக் கொள்ளுங்கள்” என்பது தான் அது. பகவத்கீதையின் சாரமும் அதுவே. ஸ்ரீ கிருஷ்ண பகவான் “அதிகமான வேலை செய்பவனும் சோம்பேறியும் யோகத்தின் உச்சநிலையை அடைய முடியாது. நடு நிலையில் இருப்பவர்களே துன்பங்களிலிருந்து வெளி வர முடியும்” என்று கூறியுள்ளார். உங்களுடைய வாழ்க்கையிலிருந்தே ஓர் நடைமுறை உதாரணத்தினைத் தருகிறேன். உங்களால் முடிந்த அனைத்தையும் உங்கள் நண்பருக்கோ அல்லது யாருக்காவதோ செய்தும் கூட, உங்கள் மீது எந்தத் தவறும் இல்லாத போதும் உங்களுக்கு எதிரியாகி விலகிச் செல்வதைக் கவனித்திருக்கின்றீர்களா? உங்கள் நெஞ்சத்தினை நீங்கள் அள்ளித் தந்த பிறகும், திருப்தியின்றி விலகிச் சென்று விடுகிறார்கள். இதை எத்தனை பேர் அனுபவித்திருக்கிறீர்கள்?(பலர் கைஉயர்த்துகின்றனர்) 

நீங்கள் ஏன் இவர் என்னிடமிருந்து விலகிச் செல்கிறார் நான் எவ்வளவோ செய்தேனே! என்று ஆச்சரியப்பட்டிருப்பீர்கள் அல்லவா? அது போன்றே நீங்கள் எதுவுமே செய்திருக்காத யாரோ ஒருவர் உங்களது எதிரியாக இருந்தவர் உங்களுக்குத் தேவையான தருணத்தில் உங்களுக்கு நெருங்கிய நண்பராக ஆகவோ அல்லது உதவி செய்யவோ கூடும். எத்தனை பேர் அனுபவித்திருக்கிறீர்கள்? (பலர் கை உயர்த்துகின்றனர்) இது விசித்திரமானது தான்!"நான் இவருக்கு எதுவுமே செய்ததில்லை ஆனால் எனக்கு அதிக உதவி செய்துள்ளார் என்று ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். இங்கு தான் நீங்கள் கர்ம விதியினை நம்ப வேண்டும்.

மக்கள் ஒன்று கூடி விசித்திரமான நிலைகளில் மற்றும் சூழல்களில் பிரிகின்றனர்.இவையனைத்தும் கர்மத்தின் ஓர் பகுதியே . நண்பர்களோ அல்லது எதிரிகளோ எதுவாயினும் நீங்கள் உங்களது சாந்த நிலையினை நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.எப்போது நண்பர் எதிரியாவார் என்றோ எப்போது எதிரி நண்பராவார் என்றோ தெரியாது. நடுநிலையில் உங்கள் சம நிலையினைக் காத்து வாழுங்கள். இதுதான் முழு செய்தி ஆகும்.

கர்மச் சுழற்சியிலிருந்து எவ்வாறு வெளிவருவது?

எதிர்வினையாற்றாமல், ஞானம் மற்றும் தியானம் மூலம். இது உங்களைக் கர்மத்திலிருந்து வெளிக் கொணரும். ஓர் கதை கூறுகிறேன். புத்தருக்கு ஓர் சீடர் இருந்தார். அவர் புத்தரின் ஒன்று விட்ட சகோதரரும் ஆவார். அவர்  மிகுந்த புத்திசாலி, மற்றும் பக்திமான். ஆரம்ப காலத்தில் புத்தரின் சங்கம் மிகச் சிறியதாக இருந்தது. அது பின்னர் பெரிதாகி விட்டது. புத்தரின் நெருங்கிய சீடர்கள் அதிக சொந்தம் பாராட்டினர். இந்த சகோதர சீடர் தனக்கே புத்தரிடம் அதிக உரிமை உள்ளதாக எண்ணினார். ஆனால் புத்தர் யாருக்கும் சொந்தமல்ல. சமுத்திரத்தை உங்களுக்கு உரிமையானது என்று நீங்கள் கூற முடியாது. இதனால் சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டன. சகோதரன் புத்தருக்கு எதிரியாகிவிட்டான். எதிர்மறைக் கருத்துக்களும் உணர்வுகளும் மேலோங்கும் போது சிலர் அவற்றுடன் இணைந்து கொள்வர். இந்த சகோதரனும் வேறு சிலரும் ஒன்று சேர்ந்து ஓர் குழுவை ஏற்படுத்திக் கொண்டனர். ஒரு நாள் புத்தர் உபதேசம் செய்து கொண்டிருந்த போது, இந்த சகோதரன் மலையின் மீது ஏறி ஓர் பாரங்கல்லை புத்தரை நோக்கித் தள்ளி விட்டான். புத்தருக்கு சில சென்டிமீட்டர் தூரத்தில் பாராங்கல் வீழ்ந்தது. இல்லையெனில் அக்கல் புத்தரைக் கொன்றிருக்கும். விசுவாசமான பிற சீடர்கள் கோபமும் வருத்தமும் அடைந்தனர். அவர்கள், "நாம் அவனைத் தண்டித்து நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்" என்று கூறினர். 

புத்தர் அவர்களைத் தடுத்து, "இது கர்மம். நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். நாம் இதற்கு எதிர் வினையாற்ற வேண்டாம்" என்று கூறினார். 1990களில் நான் வாஷிங்டன் சென்றிருந்தேன். அங்கு ஓர் உரையாற்றினேன். சுமார் 300 பேர் வந்திருந்தனர். திடீரென்று ஒரு மிக திடகாத்திரமான ஒருவர் "இவன் ஓர் சைத்தான்" என்று கூறிக்கொண்டே என்னைத் தாக்குவதற்காக பின் வரிசையிலிருந்து எழுந்து வந்து கொண்டிருந்தார்.அனைவரும் தங்கள் இருக்கைகளிலேயே உறைந்து விட்டனர். அவர் என்னை ஒரே கையால் தூக்கி இருப்பார் அந்த அளவு அவரது உருவம் பெரியது. நான் அவருடைய கண்களை மட்டும் பார்த்து "பொறுங்கள்" என்று கூறினேன்."நான் செல்வதற்கு இன்னும் நேரம் வரவில்லை,சில பணிகளை செய்யவே இங்கு வந்துள்ளேன். என் வேலையை முடித்து விடுகிறேன் என்று வெளிப்படையாகக் கூறாமல்,பொறுங்கள் என்று மட்டுமே கூறினேன். ஆனால் மனதிற்குள் நான் செல்லத் தயராக இல்லை என்று கூறிக் கொண்டேன். அந்த மனிதர் என்னைப் பார்த்து விட்டு, என் முன்னிலையிலேயே அமர்ந்து அழத் துவங்கிவிட்டார்.மிகுந்த கோபத்துடனும் வேதனையுடனும் வந்தவர் அப்படியே அமர்ந்த போது, அவரது கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. சுருக்கமாக கூறினால்,அதன் பின்னர் அவர் பயிற்சியில் சேர்ந்து அனைத்துமே அவருக்கு மாற்றம் அடைந்தன.
இதை ஏன் கூறுகிறேன் என்றால், நம்மை சுற்றி நிகழும் அனைத்துமே ஏதோ ஓர் கர்மத்தினாலேயே நிகழ்கின்றன. இவ்வாறு நான் கூறியதால், ஏதேனும் ஆபத்தானது நிகழ்ந்தாலும் அது கர்மவினை என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். அது தவறான புரிதல் ஆகும். கர்மா என்பது ஓர் நிகழ்வு அதை வருங்காலத்தில் மாற்றும் சக்தி உங்களுக்கு உள்ளது ஏனெனில் வாழ்க்கை என்பது விதி மற்றும் விருப்பம் இவையிரண்டும் இணைந்த கலவை ஆகும்.

புத்தர் மீது ஒருவர் பாரங்கல்லை தள்ளிய போது மக்கள் எதிர் வினையாற்றினர். ஆனால் புத்தர் அவர்களிடம் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கூறி புன்னகை செய்தார். அதுவே ஓர் செயல். ஒருவர் உங்களுக்கு எதிராக இருந்தால் அவரிடம் அன்பும் கருணையும் காட்ட வேண்டும். ஒரு கன்னத்தில் அடிக்கும் போது மறு கன்னத்தைக் காட்டினால்,அவர்களால் அடிக்க முடியாது. அதுவே ஓர் பெரிய போர்கருவி. அகிம்சை என்பதும் ஓர் செயலே. அது மிக அறிவார்ந்த புத்திசாலித்தனமான செயல், அது எதிர்வினையல்ல

கடந்த ஆண்டு நாங்கள் க்யூபாவில் இருந்தபோது, போராளிகளிடம் இதைத்தான் நான் கூறினேன்." நீங்கள் வேண்டுவதெல்லாம் உங்கள் மக்களுக்கு வளம் என்பது தான். அது வன்முறையால் வரப்போவதில்லை. ஐம்பது ஆண்டுகளாக வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். ரயில் நிலையங்களில், நீர்வளங்களில், தொலைபேசி கோபுரங்கள் அனைத்திலும் குண்டு வைத்திருக்கிறீர்கள், அதனால் மேலும் துன்பம் அடைந்தீர்கள். அகிம்சைக் கொள்கையுடன் செயலாற்றினால் இவ்வுலகம் முழுமையும் உங்களுடன் துணை நிற்கும் என்று கூறினேன்.முதலில் அவர்கள்,"இல்லை, முடியாது, அது சாத்தியமில்லை, ஏனெனில் காந்தீய அகிம்சைக் கொள்கைகளை பின்பற்றுவது பாசாங்குத் தனம் ஆகும்" என்று கூறினர்.அவர்கள் இந்தக் கோணத்திலிருந்து பார்த்து, புரிந்து கொண்டு ஜீரணிப்பதற்கு மூன்று தினங்கள் ஆயின. இறுதி நாளன்று அவர்கள் தாங்களாகவே தங்களுடைய இலக்கை அடைய அகிம்சையைக் கடைப்பிடிப்பதாக அறிவித்தனர். ஐம்பது ஆண்டுப் போர் முடிவுக்கு வந்தது.

தென் அமெரிக்க செய்தித்தாள்களும் ஊடகங்களும் என்னிடம்," அவர்கள் வன்முறையைக் கைவிட நீங்கள் அவர்களுக்கு என்ன கூறினீர்கள்? அவர்கள் மற்ற அமெரிக்கர்கள், நார்வீஜியர் மற்றும் பலர் முயன்ற போது அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லையே."என்று கேட்டனர் என்ன கூறினேன் என்பது முக்கியமல்ல யார் கூறியது என்பதே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது என்று பதிலளித்தேன்.

நல்லது எங்கு செல்கிறது? மக்களுக்கு எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் சில சமயங்களில் துன்புறுகிறோமே ஏன்?

ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்லதே செய்தால் அதன் பலனாக தீமை ஒருநாளும் வராது. மாமரத்தை நட்டால் மாம்பழம் தான் கிடைக்கும் செர்ரிபழங்கள் கிடைக்காது. நீங்கள் துன்புற்றால் அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

1. புத்திசாலித்தனமாக இல்லை மற்றும் முட்டாள்தனமாக இருக்கிறீர்கள்.
2. உங்களுடைய கடந்தகால கர்மா.

கடந்த காலத்தில் ஓர் வங்கிக் கடன் வாங்கி இருக்கிறீர்கள். இப்போது ஓர் தொகையை நீங்கள் வைப்பு நிதியாக்கினால், அந்த பழைய கடனைக் கழித்த மீதித் தொகையையே சேமிக்க முடியும்.. அப்போது நீங்கள் நான் இவ்வளவு தொகையை செலுத்துகிறேன். என்னுடைய கணக்கில் ஒன்றுமில்லை என்று கூறுகிறீர்களே என்று கேட்க முடியாது. உங்கள் கடனை நீங்கள் முதலில் கழிக்கவேண்டும். நீங்கள் வங்கியில் பணம் செலுத்தினாலும் உங்கள் கிரெடிட் கார்ட் கடனை வங்கி எடுத்துக் கொண்ட பின்னர் மீதமுள்ளதே உங்களை சாரும் அல்லவா? மேலும், நல்லவர்களுக்கு துன்பம் நேர்வது அவர்களது முட்டாள்தனத்தினால் தான்."நான் மிக நல்லவன்" என்று கூறிக் கொண்டு தீயில் விரலை வைத்தால்  நிச்சயம் பொசுங்கும். இயற்கை உங்களுக்கு புத்தியை அளித்திருக்கின்றது. ஆகவே நீங்கள் உங்களைச் சுற்றி இருக்கும் நிலைமையைப் புரிந்து கொண்டு அதைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏன் குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது?

குறைந்த அளவு குற்ற உணர்வு இருப்பது நல்லதுதான். அந்தச் சிறிய அளவு குற்ற உணர்வு நீங்கள் அதே தவறை மீண்டும் செய்து விடாமல் தடுக்கும். குற்ற உணர்வு என்பது என்ன? ஒரு செயல் தவறு என்று அறிவு பூர்வமாக அறிந்தாலும், தூண்டுதலால்.அதைச் செய்து விடுகிறீர்கள். ஏனெனில் அது ஏதோ ஓர் இன்பத்தினை அளிக்கிறது. உங்கள் இதயம் விரும்புவதை உங்கள் அறிவு தவறு என்று தடுக்கிறது. அறிவு  மற்றும் இதயத்திற்கிடையே  இதயம் பெரும்பாலும் வெற்றி பெறுகிறது. இங்குதான் குற்ற உணர்வு தோன்றுகிறது. சிறிதளவு குற்ற உணர்வு மேலும் தடம் புரளாமல் உங்களைத் தடுக்கும், ஆனால் அதுவே அளவிற்கதிகமாக இருக்கக் கூடாது. இதை எவ்வாறு கடந்து வருவது? மிக  எளிதானது. அஷ்டவக்கிரகீதை அல்லது யோகவசிஷ்டா போன்ற ஞான நூல்களைப் படியுங்கள். பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவையும் குற்ற உணர்வைத் தாண்டி வர சிறந்த வழிகளாகும். 

நீங்கள் பிராணாயாமம் செய்யும் போது, அது குற்றங்களை நீக்கி விடுகிறது. ஆற்றலை மேம்படுத்தி உருவுள்ள நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இது எவ்வாறெனில், நீங்கள் பாத்திரங்களைத் துலக்கும் போது, சிறிதளவு  அமிலம் கலந்து துலக்கிக் கழுவினால் பாத்திரங்கள் பளிச்சிடும். ஆனால் அமிலம் அதிகமாகி விட்டால் அது பாத்திரத்தையே அரித்துத் தின்று விடும். ஆகவே சிறிதளவு குற்ற உணர்வு சரி, ஆனால் அதுவே அதிகமானால் உங்களை இருட்டில் தள்ளி விடும்.
கிறிஸ்தவ சமயத்தில், பாவ மன்னிப்பு என்பதற்கு அதிக அளவு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. நீங்கள் பாதிரியாரிடம் உங்கள் குற்றங்களை ஒப்புக் கொள்கிறீர்கள். அவ்வாறு உங்கள் தவறுகள் அனைத்தையும் ஒப்புக் கொடுக்கும்போது, நீங்கள் அவற்றினை இறைமையிடம் சமர்ப்பித்து விடுகிறீர்கள்.

ஹிந்து மற்றும் புத்த பாரம்பரியத்தின்படி, மக்கள் "க்ஷமா பிரார்த்தனா" அதாவது கடவுளிடம் மன்னிப்பு வேண்டுதல் செய்கின்றனர்."தெரிந்தோ தெரியாமலோ நான் தவறு செய்து விட்டேன்.தயவு செய்து மன்னித்து விடுங்கள் என்று கூறுவதேயாகும். மன்னிப்பு வேண்டுதல் உங்களை குற்ற உணர்விலிருந்து வெளியேற்றி விடும். ஜைன பாரம்பரியத்தில், செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள் ஒருவருக்கொருவர் மன்னிப்பு வேண்டுவர். அவர்கள், "தெரிந்தோ தெரியாமலோ நான் உன்னைப் புண்படுத்தியிருக்கலாம். என்னால் ஏதேனும் தீங்கு ஏற்பட்டிருந்தால் தயவு செய்து என்னை மன்னித்து விடு" என்று கேட்டுக் கொள்வார்கள். இது ஓர் மிக அழகான கருத்து.

தான் எனும் அகந்தை உங்களை மன்னிப்புக் கேட்கவிடாது. "நான் செய்தது சரியே. இதையே தான் தொடர்ந்து செய்வேன்"என்று கூறும். உலகில் அனைத்துப் போர்களும் பிரச்சினைகளும் இதனால் தான் துவங்கின.  - தெரிந்தோ தெரியாமலோ புரிந்த பிழைகளுக்கு மன்னிப்புக் கேட்கும் - ஓர் செயலை மக்கள் புரிந்துகொண்டால் உலகில் அற்புதமான நல்லிணக்கம் உருவாகும். அல்லவா? உங்களை எளிய மற்றும் மனிதநேயம் கொண்ட மனிதனாகக்கும். ஒவ்வொருவருடனும் ஓர் தொடர்பு உணர்வினையும் ஏற்படுத்தும். தூர விலகியிருத்தல் தான் எனும் அகந்தையை ஏற்படுத்தும், அகந்தை  தூர விலகலை உருவாக்கும்.

எவ்வாறு நான் சமூக பதட்டத்தை மற்றும் இக்கட்டான நினைவுகளையும் தாண்டி வரமுடியும்?

அந்த நினைவுகளைத் தழுவிக் கொள்ளுங்கள். அவற்றோடு போரிட்டால் அவற்றுக்கு புது உயிர் அளிப்பது ஆகும், அவற்றைத் தழுவிக்கொண்டால் அவை மறைந்து விடும். உங்கள் மனம் நெருப்புப் போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பருவநிலை மாற்றத்தினை எவ்வாறு உணர்கின்றீர்கள்? இந்த பூமியில் வாழ்வது ஆபத்தானதா?

பருவநிலை மாற்றம் ஓர் பெரிய பிரச்சினை ஆகும். பாரிசில் ஜி 20 நாடுகள் பல தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றன. அவற்றை நேர்மையாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்.

தனி மனிதர்கள் என்னும் முறையில் நாம் அனைவரும் நம்மால் எந்த வழியில் முடியுமோ அந்த வழியில் பங்கேற்க வேண்டும். வாழும் கலை இந்த திசையில் பல முயற்சிகளை எடுத்துள்ளது. மில்லியன்கணக்கான மரங்களை நட்டுள்ளோம். நமது ஆஸ்ரமங்களில் பல சூரிய சக்தியை பயன்படுத்தும் வழிக்கு மாறியுள்ளன. நாங்கள் இவ்வாறு எங்கள் பங்களிப்புக்களைச் செய்து வருகிறோம்.