நமது வாழ்வில் மாற்றம் என்பது எப்படி நடக்கும்?

மார்ச் 26  -  பெட் அண்டோகாஸ்ட் -  ஜெர்மனிகே: குருதேவ்! இந்தியாவில் கற்பழிப்பிற்கு இரையாகி உயிரிழந்தவருக்காக என் மனம் துடித்துத் துகளாகி விட்டது. ஏன் இந்தியாவில் இம்மாதிரியான கொடூரமான கற்பழிப்புக் குற்றங்கள் நடக்கின்றன?

குருதேவ்: கவனியுங்கள்! இது ஒரு இடத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல. இந்த நிகழ்ச்சி அதிகமாக விளம்பர படுத்தப்பட்டு விட்டது. இது போன்று உலகெங்கிலும் நிறையக் குற்றங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. பெண்கள் மீது மட்டுமல்லாமல், குழந்தைகள், முதியவர்கள் அனைவர் மீதிலும் கூட. நமது தொண்டர்களில் ஒருவர் கென்யாவிலுள்ள நைரோபியில் என்ன நடந்தது என்று இப்போது தான் என்னிடம் கூறிக் கொண்டிருந்தார். மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. அவர் கூறியதைக் கேட்டதும், நான், மக்கள் தங்கள் வீடுகளிருந்து வெளியே செல்லவே கூடாது என்றேன். அதற்கு மிகுந்த கொள்ளைகள் நடப்பதால், மக்கள் வீடுகளில் இருக்கவே பயப்படுகின்றார்கள், அதை விட வெளியில் கார்களில் போய் கொண்டிருப்பதையே பாதுகாப்பாக உணருகின்றார்கள் என்றார்.

உங்கள் வீட்டிலேயே உங்களுக்குப் பாதுகாப்பு இல்லை! மும்பையில் கூட இத்தகைய நிலை அதிகமாகிக் கொண்டுவருகின்றது. தனியாக இருக்கும் முதியவர்கள் வீடுகளைப் பார்த்து வைத்துக்கொண்டு அவற்றைக் குறி வைக்கிறார்கள். இத்தகைய குற்றங்கள் அநேகமாக எல்லா இடங்களிலும் நிகழ்கின்றன. இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பல்வேறு குற்றங்கள் அறிவிக்கபடுகின்றன. இங்கு ஜெர்மனியிலும் கூட, அல்லவா

ரஷ்யாவில் தெருக்களில் நடப்பது கூட பாதுகாப்பற்றது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கேள்விப்படும் போது, எதை நோக்கிப் போய் கொண்டிருக்கின்றோம் என்று எனக்கு வியப்பாக இருக்கின்றது. இந்த நிகழ்வு ஒரு பெரும் அலையைக் கிளப்பி விட்டது. இந்நிகழ்வைப் பற்றிய விழிப்பு உணர்வை முதன்முதலாக ஏற்படுத்தியது நமது வாழும் கலை தான். முதல் நாளே, எஸ் பிளஸ் மாணவர்கள் மெழுகுவர்த்தியுடன் இந்தியா கேட் வரை ஊர்வலமாகச் சென்றடைந்தார்கள். பாருங்கள்! நாம் எதை ஆரம்பிக்கிறோமோ அது பெரிய பரிமாணத்தை அடைந்து இப்போது எல்லா இடங்களிலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. எல்லா இடங்களிலும் குற்றங்கள் குறைய இது உதவும் என்று நான் நம்புகிறேன்.

நாம் அனைவரும், வன்முறையற்ற, அழுத்தமில்லாத சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும். மக்கள் அனைவரும் குற்றவாளிகள் தூக்கிலடபட வேண்டும் என்று கோரிக்கை இடுகிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் இன்னுமொரு பத்துப் பேர் இது போன்று தங்கள் காமத்தையும், உணர்ச்சிகளையும் அடக்க முடியாமல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள், என்றால் அப்போது எத்தனை பேரை தூக்கிலிடுவீர்கள்? தண்டனை கொடுப்பீர்கள்? நாம் திருந்த வேண்டும்.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வன்முறையான திரைப்படங்களைப் பார்க்கிறார்கள். வன்முறையான வீடியோ விளையாட்டுக்களை விளையாடுகிறார்கள். உலகில் வளர்ந்து வரும் குற்றங்களுக்கு அவர்களும்  காரணம். வீடியோ விளையாட்டுக்களில் குழந்தைகள் துப்பாக்கி கொடுக்கும் போது, மாய உலகிற்கும், நிஜ உலகிற்கும் உள்ள வேறுபாட்டைக் காணத்தவறி விடுகிறார்கள். அவர்கள் மனதில் இரண்டிற்குமிடையே மெல்லிய இழையே ஓடுகின்றது. மாய உலகில் மக்களை சுட முடியும் என்றால் நிஜ உலகில் அதுபோல் சுடுவதை பெரிய விஷயமாக கருதுவதில்லை.

அமெரிக்காவிலுள்ள கனெக்டிகட்டில் அவ்வாறு தான் நிகழ்ந்தது. சமயப்பணி ஆர்வமுள்ள ஒரு சிறுவன் தன தாயைச் சுட்டுவிட்டு, பல குழந்தைகளையும் சுட்டு விட்டு தன்னையும் சுட்டுக்கொண்டான். கடந்த வருடம் நார்வேயில் என்ன நடந்தது பாருங்கள். உலகெங்கும் இத்தகைய குற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

மெக்சிகோவில் இரு டாக்ஸி ஓட்டுனர்கள் சிக்னலில் ஒரு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் தங்கள் டாக்சிகளிலுள்ள பயணிகள் அப்படியே அமர்ந்திருக்க தாங்கள் மட்டும்  இறங்கி  ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டனர்! ஒரு வாக்குவாதம்! சகிப்புத் தன்மை என்பது அவ்வளவு கீழே இறங்கிவிட்டது.

பாகிஸ்தானில் இன்று மீண்டும் கார் குண்டு வெடித்து பலர் இறந்துவிட்டார்கள், பலர் காயமடைந்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.இராக்கில் இத்தகைய இழப்பு எண்ணிக்கை என்பதற்கே மக்கள் மனம் மரத்துப் போய் விட்டார்கள். நாற்பது பேர் இராக்கில் இறந்து விட்டார்கள்.ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டிருந்தாலும் யாரும் அதை பொருட்படுத்துவதில்லை. சிரியாவில், எகிப்தில் என்ன நடக்கின்றது பாருங்கள்! பாதி மக்கட்தொகை அழிந்து விட்டது.

இம்மாதிரியான தருணங்களில் தான் நாம் செய்வது எவ்வளவு முக்கியமானது என்று உணர வேண்டும். வன்முறையற்ற, அழுத்தமில்லாத சமுதாயத்தை உருவாக்குவது என்பது மிக முக்கியமானது. நிறைய இடங்களில் அதிக அளவிலான ஆசிரியர்கள் நமக்கு அவசியம். எல்லா இடங்களிலும் பரவி மக்களின் மனப்போக்கை மாற்ற வேண்டும்.

நமது ஆசிரியர்கள் சிறைச்சாலைகளில் பணிபுரிவது எனக்கு மகிழ்ச்சி. அண்மையில் அர்ஜென்டீனாவில் ஒரு சிறைக்குச் சென்றிருந்தேன். சிறை அறைகளுக்குள்ளேயே கூட  ஏராளமான வன்முறைகளும் குற்றங்களும் காணப்பட்டன. நமது வாழும்கலை பயிற்சி அளிக்கப்பட்ட பின்னர், எல்லாக் கைதிகளும் இனி வன்முறை செயலிலும் ஈடுபட மாட்டோம் என்றெழுதிய பட்டையை அணிந்து கொண்டார்கள். 5200 முரட்டுக் கைதிகளின் கண்களில் கண்ணீர்! அவர்கள், "எங்கள் வாழ்கை மாறி விட்டது! இந்த அறிவை ஏன் நாங்கள் முன்னரே அடையவில்லை?" என்றார்கள்.

இது போல, பிரேசில், ரியோ நகரில் இருந்த போது ஒரு சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன். அந்த சிறைச்சாலைக்குள் ஒரு வாழும் கலை மையம் வைத்திருந்தார்கள். ஒரு அறையில், என்னுடைய படமும், நிறைய புத்தகங்களும் வைத்திருந்தார்கள். காலணியுடன் யாரும் அவ்வறைக்குள் செல்ல அனுமதியில்லை. யோகா பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன. அவர்கள் அவ்வறையில் யோகா, தியானம், மற்றும் படம் வரைதல் இவைகளை செய்து கொண்டிருந்தார்கள். அவர் தம் வாழ்வில் இது நெகிழ்வான நிலை.

வருங்கால சந்ததியினருக்கு மேன்மையான இடமாக நாம் இவ்வுலகிற்காக நிறைய உழைக்க வேண்டும், இல்லையெனில் நமது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் நம்மை மன்னிக்க மாட்டார்கள். என்ன மாதிரியான உலகை எங்களுக்கு விட்டு சென்றீர்கள்?" என்றுதான் கேட்பார்கள். வன்முறையற்ற அன்பு நிறைந்த உலகை அவர்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள்.

சிறிய தேவைகள், நண்பர்கள் மற்றும் பிறருடன் தகராறுகள் இவற்றிலே சிக்கி இருக்காதீர்கள். பெரிய அளவில் எண்ணங்கள், வன்முறையற்ற உலகை உருவாக்கும் வழிகள் என்று யோசியுங்கள். அதுதான் நாம் கவனிக்க வேண்டியது. அதிக காம உணர்வுள்ளவர்கள், மற்றவர்களின் நலனில் குருடாக இருப்பவர்கள் ஆகியவர்கள் பாடம் கற்க வேண்டும். நாளச் சுரப்புக் கோளாறு, அழுத்தம் ஆகியவையே ஒருவனைக் கொடிய குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது. மனம், கண், புத்தி அனைத்தும் மங்கி விடுகின்றன. பலர் சேர்ந்து பஸ்ஸில் கற்பழிப்பு! மனித உணர்வு நிலையில் இத்தகைய விஷயங்களை நாம் யோசிக்க வேண்டும்.

சமுதாயத்தில் மனிதப்பண்புகளை திரும்பக் கொண்டு வரவேண்டும். மக்களுக்கு ஆன்மீகத்தைக் கற்றுத் தரவேண்டும். அப்போது மனப்போக்கு மாறும். ஆன்மீக அறிவு உள்ளவர்கள் ஒரு போதும் வன்முறையான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இந்த தலைமுறையில் முழுவதும் வன்முறையற்ற சமூகத்தை நம்மால் அடைய முடியாமல் போகலாம், அதற்காக உழைக்க வேண்டும். உலகில் வன்முறையை குறைக்க முடியும் என்று உறுதியாகக் கருதுகிறேன்.

அண்மையில் டெல்லியின் ஒரு பகுதியில், காவல்துறையினர் 756 கைதிகளை ஒருங்கிணைத்து வாழும் கலையின் ஐந்து நாள் பயிற்சியை எடுத்துக் கொள்ளுமாறு செய்தனர். கைதிகள் பிராணாயாமம், மற்றும் சுத்ர்சனக் க்ரியா ஆகியவற்றைச் செய்தனர். நீங்கள் அவர்களது அனுபவங்களைக் கேட்டிருக்க வேண்டும் ! நெஞ்சை தொடும் வகையில் இருந்தன. போதைப் பொருட்களை உபயோகித்து வந்தவர்கள் எல்லாம்,அந்த ஐந்து நாட்களில் அவற்றை வெறுக்கத் தொடங்கி விட்டனர்.

நகைகள் பறிப்பு போன்ற திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எல்லாம், முழுவதும் திருந்தி, குடிசைப் பகுதிகளில் சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தனர். நமது ஆசிரியர்கள் அவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சியின் இறுதி நாளன்று, அவர்களை சந்தித்தேன். அவர்களது அனுபவங்கள் எல்லாம், நம்மால் இனியும் ஒரு புது உலகை, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க முடியும் என்னும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தன.

கே: குருதேவ், பயிற்சியின் போதும், பயிற்சிக்கு பின்னரும் அற்புதமான சக்தி உண்டாகின்றது. அது குண்டு வெடிப்பின் போது வெளிப்படும் சக்தி போன்றுள்ளதுஆனால் அடுத்த இரண்டு அல்லது மூன்று  தினங்களில் நான் என் சக்தியை  குறைக்கக்கூடிய செயல்களை செய்து விடுகின்றேன். இந்த முறை அவ்வாறு நிகழாமல் தடுக்க நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: சக்தி அதிகமாகவும், குறைந்தும் மாறிக் கொண்டே இருக்கும். அதை பற்றி  கவலைப்பட வேண்டாம். உங்கள் சக்தி  ஏறுகின்றதா அல்லது இறங்குகின்றதா என்று கவனித்துக் கொண்டிருக்கும் அளவிற்கு உங்களுக்கு அதிக ஓய்வு நேரம் இருக்கின்றதென்று நினைக்கின்றேன். உங்களை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் அனைத்தும் அதன் இடத்தில் சரியாக இருக்கும்

நீங்கள் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தால் கவலைப்பட உங்களுக்கு நேரம் எப்படி கிடைக்கும்? விழித்தெழுந்த உடனே எதோ ஒன்றை செய்ய வேண்டியிருக்கும். வேலை முடிந்து திரும்பி வரும் போது நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து விடுவீர்கள். உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டிருந்தால்உங்களுக்கு கவலைப்படவும் நேரமிருக்காதுபுகார் சொல்லவும் நேரமிருக்காது. வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மன அழுத்தம் அல்லது மனச்சோர்வு கொள்ளவும் நேரமிருக்காது. வேலையின்றி சும்மா இருப்பவர்கள் தான் மன அழுத்தத்தை உணர்வார்கள்

யோக வஷிஷ்டம் போன்ற அரிய ஞானம் நிறைந்த புத்தகங்களைப் படிப்பதில் உங்கள் நேரத்தை செலவிடுங்கள். நாரத பக்தி சூத்திரம் அல்லது அஷ்டவக்கிர கீதை போன்ற ஒலிப்பதிவுகளை கேளுங்கள். இந்த ஞானம் உங்கள் ஆற்றலை எப்போதும் அதிக அளவில் வைத்திருக்கும். நீங்கள் தனியாக இருக்கும்போதோ அல்லது குளிக்கும் போதோ ஒரு ஐந்து நிமிடம் பாடுங்கள். நீங்கள் குளிக்கும் போது பாடுவதை யாராலும் தடுக்க முடியாது.  
நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இத்தனை வழிகள் கொடுத்திருக்கின்றேன். இவ்வளவு இருந்தும் நான் கவலையாக தான் இருப்பேன் என்று நீங்கள் தீர்மானமாக இருந்தால் நான் என்ன சொல்வது?   

எதிர்மறையானவை ஒன்றை ஒன்று சார்ந்திருப்பவை. நீங்கள் இப்படி இருப்பதன் மூலம் உலகிற்கு புது நிறம் சேர்க்கின்றீர்கள். நீங்கள் உங்கள் பாதையிலே இருங்கள்நான் உங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளுகின்றேன்நீங்கள் நல்ல ஞானம் உள்ளடங்கியவராக இருந்தால், நீங்கள் கவலையாக இருக்க வழியே இல்லை. மகிழ்ச்சியான நாட்களும் வரும்  மகிழ்ச்சியற்ற நாட்களும் வரும்நல்லவர்களும் இருப்பார்கள், அதே சமயம் தீயவர்களும் இருப்பார்கள்; என்பதனை ஞானம் உங்களை அறிய வைக்கும். உங்கள் நண்பர்களே சில சமயம் பகைவர் போல் நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் பகைவர்கள் கூட சிறந்த நண்பர்களாகி விடுவார்கள். வாழ்க்கையில் இது போன்ற அனைத்தும் நிகழக்கூடும். அவை உங்களை திடமாகவும் நடு நிலையிலும் வைத்திருக்க உதவும். பிறகு எத்தகைய புயலும் உங்களை அசைக்க முடியாது.

என்னுடைய பேச்சுக்கள் அனைத்தையும்  நீங்கள் மறந்து விட்டாலும், இப்பொழுது நான் சொன்ன இந்த ஐந்து வரிகள் உங்களிடம் நிலைத்திருக்குமானால், அதுவே  போதும். நீங்கள் சாதித்து விட்டீர்கள். நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள்.  

ஆகவே தான் எல்லாம் மாயை எனப்படுகின்றது. நாம் உண்மை என்று நினைத்துக் கொண்டிருக்கும் நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள் அனைத்தும் பொய்யானவை, வெறும் மாயை. நம்மை பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் நாம் கொண்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவை அல்ல. அவை அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு விழித்தெழுங்கள். நீங்கள் பொங்கி வரும் சக்தி, உற்சாகத்தின் நீர்க்குமிழ்கள் என்பதை காண்பீர்கள். நீங்கள் அன்பின் நீரூற்று

கே: குருதேவ், eternity  process  என்பதைப் பற்றியும்  அதன் பயன்கள் பற்றியும் தயவு செய்து சொல்லுங்கள்

குருதேவ்: அது உங்கள் நினைவுத்திறனை பின்னோக்கி எடுத்துச் செல்வது. அங்கிருக்கும் பதிவுகளை உணர்ந்து மீண்டும் அனுபவித்து அவற்றிலிருந்து விடுதலை பெறுவது

கே: குருதேவ், உடல் உறுப்புகள் மாற்றம் செய்ய தேவைப்படுவோர்களுக்காக,  மக்கள் தங்கள் உடலை தானம் செய்வதை தாங்கள் ஆமோதிக்கின்றீர்களா

குருதேவ்: நிச்சயமாக. நீங்கள் உங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம்அதில் தவறொன்றும் இல்லை.

கே: குருதேவ், முழு நேர வாழும் கலை ஆசிரியர் என்பதன் பொருள் என்ன? அதை செய்ய தகுதியானவர்கள் யார்

குருதேவ்: நீங்கள் முழு நேர ஆசிரியராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லைநீங்கள் பகுதி நேர ஆசிரியர் ஆகலாம். ஆசிரியப் பணிக்கு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரமே போதும். பயிற்சிகள் பொதுவாக மக்கள் தங்கள் வேலைகளை எல்லாம் முடித்து விட்டிருக்கும் மாலை நேரங்களில் தான் நடைபெறுகின்றன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பயிற்சி திட்டத்திற்கேற்ப மூன்று அல்லது  நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு பயிற்சியை நடத்தலாம். மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பயிற்சிகள் நடத்தலாம்

சிரமம் தெரியாமலிருக்க இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து பயிற்சிகள் நடத்தலாம். அது உங்கள் வேலைப் பளுவைக் குறைக்கும். ஒருவேளை நீங்கள் உங்கள் குழந்தையை கடைத்தெருவுக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தால், "பயிற்சி நடத்த வேண்டுமே. நான் எப்படிச் செல்வது?" என்று நினைத்துக் கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுடனிருக்கும் அந்த மற்றொரு ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொள்வார். ஆகவே இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து பயிற்சி  நடத்த வேண்டுமென்று நான் விரும்புகின்றேன். அப்படிச் செய்தால் நீங்கள் உங்கள் தொழில் சம்பத்தப்பட்ட வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே வாழும் கலைப் பயிற்சிகளை உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு கற்பித்து அவர்களுக்கு உதவி செய்யலாம்


உங்களுக்கென்று தனிப்பட்ட தேவைகளும், வேலைப் பளுவும் இல்லையென்றால் நீங்கள் உங்கள் வாழ்வை சேவைக்கென அர்ப்பணம் செய்யலாம். என் தேவைகள் மிகவும் குறைவு; நான் முழு நேர ஆசிரியராகவே விரும்புகின்றேன் என்று நீங்கள் நினைத்தால் அப்படியும் செய்யலாம். முதலில் பகுதி நேர ஆசிரியராக, சிறிது  சேவை செய்வதே சிறந்ததென்று நான் நினைக்கின்றேன்.