தொடர்புகளால் பின்னப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம்

21 மார்ச் 2013 ஸ்லோவேனியா

(தொழில் துறையில் நன்னெறி பற்றிய சர்வதேசத் தலைவர்கள் மாநாட்டில், தொழில் பிரமுகர்கள், மற்றும் தொழில் செய்பவர்களிடையே ஸ்ரீ ஸ்ரீ அவர்கள் பேசினார். இந்த வருடாந்திர நிகழ்வு, தொழில், அரசியல், கல்வித்துறை, சமுதாயம் மற்றும் மத ரீதியான அமைப்புகளின் தலைவர்களை ஒன்றுகூடச் செய்து இடைவிடாத வளர்ச்சி மற்றும் தொழிலில் இலாபத்தை உறுதி செய்வதற்கான நவீன தலைமை பண்புகள் பற்றி உரையாட வைக்கிறது. முனைப்பான மனங்களை ஒன்றிணைத்து, உலகச் சந்தையில் இன்றைய சவால்களை எதிர்கொள்ள நன்னெறியை அடிப்படையாக கொண்ட யுக்தியின் மதிப்பைப் பற்றிய தங்கள் அனுபவங்களையும் திறன்களையும் பகிர்ந்துகொள்ளத் தளம் அமைத்துத் தருகிறது இது.

பொது நன்மை நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்ட நிறுவனமான தொழிலில், நன்னெறிகான உலக அமைப்பின் முன்னெடுப்பு தான் இந்த தொழிலில் நன்னெறி பற்றிய சர்வதேசத் தலைவர்கள் மாநாடு. உலக மயமாக்கப்பட்ட இவ்வுலகில் நன்னெறியை அடிப்படையாகக் கொண்ட தொழில் தவிர்க்க இயலாதது என்பதை நிலை நிறுத்துவதே இதன் நோக்கம்.)



இங்கு கூடியிருக்கும் கனவான்களுக்கும் பெண்மணிகளுக்கும், மேதகு ஸ்லோவேனியத் தலைவர் அவர்களுக்கும், ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும், தொழிலில் நன்னெறி அமைப்பின் உறுப்பினர்களுக்கும் என்னுடை பிற்பகல் வணக்கங்கள். இந்த அழகான நாளில், அழகான இடத்தில், இங்கு உங்களுடன் இருப்பதில் நான் மிகவும் மகிழ்கிறேன்.

கல்லறைகளினூடே நடக்கும்போது, இன்னார் இந்நாளில் பிறந்தார், இந்நாளில் இறந்தார் என்று செதுக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அவர்கள் அந்த நாட்களுக்கிடையே வாழ்ந்தார்கள் என்று யாரும் குறிப்பிடுவதில்லை! வாழ்க்கைக்கு மரியாதை செய்ய வேண்டும். நன்னெறி என்பதை எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள காலத்தை மரியாதை செய்வது. நன்னெறியின் அடிப்படை விதி என்பது – பிறர் நமக்கு என்ன செய்யக் கூடாது என்று விரும்புகிறோமோ அதை நாம் பிறர்க்குச் செயாமலிருப்பது தான்.

நீங்கள் ஒரு வியாபாரம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், உங்கள் தொழிலாளி எந்த நன்னெறியையும் அல்லது ஒழுங்கையும் கடை பிடிக்கவில்லை என்றால் உங்களால் எப்படி தொழில் செய்யமுடியும்? இதற்கான விடை நமக்கு நன்றாகத் தெரியும், ‘நிச்சயமாக முடியாது!’ என்பதே அது.

நம்மை சுற்றி இருப்பவர்கள் நேர்மையாகவும், பண்பாகவும், பொறுப்பானவராகவும் மற்றும் ஒழுங்கான நடவடிக்கைகள் உடையவராகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். வங்கிகள் நியாயமாகவும், பொறுப்பேற்றுக் கொள்ள கூடியவையாகவும் நம்பிக்கைக்கு உகந்ததாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நாம் வியாபாரம் செய்யும் போது, நாம் நன்னெறியை பின்பற்றவில்லை, ஆனால் பிறர் மட்டும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நாம் நல்ல உதாரணமாக இருக்கவில்லை என்பதே ஆகும். மிகச் சரியாக இதுதான் மாற்றப்பட வேண்டும் – பிறரிடம் நாம் எதிர்பார்ப்பது மற்றும் நம்முடைய நடத்தை.

கம்யூனிசம் வீழ்வதற்கு பத்து வருடங்கள் ஆனது, ஆனால் முதலாளித்துவம் வீழ்வதற்கு சில மாதங்களே ஆனது. ஏன்? ஒரு சிலரின் பேராசையினால் உலகெங்கும் கோடிக் கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மனிதத்தன்மை, கருணை, பொறுப்புணர்வு இல்லாமல் எந்த தத்துவமும், கம்யூனிசமும், முதலாளித்துவமும் வேலை செய்யாது மற்றும் எந்த தத்துவமும் மனிதத்தன்மை இல்லையென்றால் தோற்றுப் போகும். மனிதத் தன்மையோடு தொழில் செய்வதையே தொழிலில் நன்னெறி என்று நான் சொல்வேன்.

ஊழல் இருக்குமிடத்தில் கருணையை மாற்றி வைக்க வேண்டும்.பொறுப்பையும் நம்பிக்கையையும் மறு நிர்மாணம் செய்யவேண்டும். நம்பிக்கையே தொழிலில் முதுகெலும்பு. நாம் பிறர் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் நாம் நம்பிக்கை வைப்பதில்லை, இதுதான் நன்னெறியின்மை என்பது. எனவே, நாம் எப்படி பிறர் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அதுபோல் நாம் பிறர் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அப்படியானால், எல்லோருக்கும் போதுமானது இவ்வுலகில் உள்ளது.

மகாத்மா காந்தி சொன்னார், “இந்த உலகில் எல்லோருடைய தேவையையும் தீர்த்து வைக்க போதுமானது உள்ளது, ஆனால் எல்லோருடைய பேராசையையும் தீர்த்து வைக்க அல்ல.” பேராசையை விட்டுவிட்டு, சமூக பொறுப்புணர்வோடு சேவை மனப்பான்மையை அங்கே வைக்க வேண்டும்.பொருளை தயாரித்தால் மட்டும் போதாது, மக்களுக்கு அந்த பொருளை வாங்குமளவுக்கு அவர்களுக்கு சக்தியை ஏற்படுத்தி தர வேண்டும். நல்ல அற்புதமான தொலைகாட்சிப் பெட்டியை தயாரித்தால் போதாது, மக்கள் ஏழையாய் இருந்தால் அவர்களால் அதை வாங்க முடியாது, அதனால் உங்கள் தொழிலும் பின்னடையும்.

ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த தொடர்புகள் உள்ள உலகத்தில் நாம் இருக்கிறோம். நம்முடைய ஒவ்வொரு அசைவும் சமுதாயத்திலுள்ள மற்ற ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. நம்முடைய பங்களிப்பு இந்த சமுதாயத்தில் நல்ல அல்லது தீய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்ற இந்த உண்மையை உணர்ந்திருப்பது,இன்றைய வியாபார சமூகத்தில் மிகத் தேவையான பொறுப்புணர்வை நமக்கு அளிக்கிறது.

இந்நாட்களில், நன்னெறியற்ற தொழிளினால் விளையும் கேடான விளைவுகளை மக்கள் பார்த்ததினால் மக்கள் விழிப்புணர்வோடு இருக்கிறார்கள என்பதில் நான் மகிழ்கிறேன். நீங்கள் வெகு வேகமாக உயரலாம், ஆனால் சீக்கிரத்திலோ அல்லது பிறகோ நீங்கள் சிறைக்குப் போகக் கூடும். நான் ஒரு நேர்மையான தொழில் பிரமுகரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கூறினார், “குருதேவ், நான் நெறியற்ற முறையில் தொழில் செய்தேனென்றால் என் தூக்கம் தொலைகிறது. தூக்கத்தை தொலைத்து ஆரோக்கியத்தை இழக்க விரும்பவில்லை. நான் நேர்மையாக தொழில் செய்து நன்கு தூங்கி ஆரோக்கியமாகவே இருக்க விரும்புகிறேன்.” ஒருவரின் தனிப்பட்ட சொந்த நன்மைக்காக, நல்ல தூக்கத்திற்காக மற்றும் குடும்பத்தினருடன் நிம்மதியாக நன்கு விடுமுறை எடுக்க, ஒருவர் நன்னெறியை பின்பற்ற வேண்டும். மற்றும் அது அந்த அளவு மதிப்புகொண்டதும் கூட. வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்றால் என்ன சம்பாதித்து என்ன பயன்?

தொழிலின் நோக்கம் வசதியும் ஆனந்தமும் அடைவது. எனவே ஒரு தொழில் உங்களுக்கு வசதியும் மகிழ்ச்சியும் தரவில்லை என்றால் நீங்கள் ஏழையாகவே இருக்கலாம். பணத்தின் தேவை நமக்கு வசதியை அளிக்கத்தான். இந்த அதிமுக்கியமான, நம் வாழ்வின் மையக் குவியத்தை புரிந்து கொள்ளவில்லை என்றால் நாம் நம்முடைய வாழ்கையை தொலைத்து விட்டோம் என்றே பொருள். வியாபாரத்தின் நோக்கம் வியாபார நோக்கல்ல!

பொதுவாக, நாம் நம் ஆரோக்கியத்தில் பாதியை செல்வம் சேர்ப்பதற்காக இழக்கிறோம், பின்னர் இழந்த பாதி ஆரோக்கியத்தை பாதி செல்வதை செலவழித்து மீண்டும் பெற முயற்சிக்கிறோம். ஆனால் அது அப்படி நடப்பதில்லை. இது ஒரு மோசமான பொருளாதார கணக்கு என்று நான் நினைக்கிறேன்.

நம் ஆரோக்கியம் முக்கியம். துடிப்பான ஆரோக்கியத்திற்கு, நம் ஆத்மா மற்றும் நம் மனம் ஆகியவை அதி முக்கியம். மனதை சரியான இடத்தில வைக்க, நேர்மையான தொழில் தவிர்க்க இயலாதது. நம்மைச் சுற்றிப் பார்ப்போம். நேர்மையான முறையில் தொழில் செய்து, இலாபமும் நன்றாக அடைந்து வருபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

பொதுவாக இளைஞர்கள் கூறுகிறார்கள், “பார், அவர் நேர்மையற்ற முறையில் தொழில் செய்து கோடிகளை எடுத்து விட்டார். நான் நேர்மையாக இருக்கிறேன் என்னால் வளர முடியவில்லை.” அப்படிப்பட்டவருக்கு ஏற்படும் அமைதியின்மைக்கும் தொந்திரவுக்கும் அது தகுதியே இல்லை. மற்றும் ஒரு நாள், நிச்சயமாக, அந்தச் செயல்களின் விளைவை அவர் அடைவார். பாதுகாப்பான பக்கம் இருப்பது மேலானது. நேர்மையாய் தொழில் செய்து, நல்ல தூக்கத்தை கொள்ளுங்கள், விடுமுறைகளை குடும்பத்தோடு ஆனந்தமாய் கழியுங்கள்.

நேர்மையான தொழில் செய்து வெற்றிகரமாய் இருக்கும் தொழில் பிரமுகர்கள் ஏராளம். நேர்மையற்ற முறையில் தொழில் செய்தால் மட்டுமே பணம் பண்ண முடியும் என்பதில்லை. அது ஒரு மாயை. அப்படி செய்தவர்கள் வெகு விரைவில் அவர்களின் தவறை உணர்ந்திருக்கிறார்கள். டாட் காம், வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சி, வீழ்ந்த பல தொழில் பிரமுகர்கள் போன்ற ஏராளமான வீழ்ச்சிக் கதைகளை கேட்டிருப்பீர்கள். நன்னெறிப் பாதையில் எப்படி முன்னேறுவது, தனக்குள்ளேயே எப்படி நோக்குவது என இது ஒரு விழிப்புக்கான அழைப்பு.

கருணையும், கடமையும் வாழ்கையின் இரு அத்தியாவசியமான மூலப் பொருட்கள். இவை இல்லாமல்,வாழ்வில் கவர்ச்சி இல்லை. நீங்கள் எடுத்துக்கொண்ட தொழிலில் முன்னேற்றமோ அல்லது தொடர்ந்த வளர்ச்சியோ இல்லை. மொத்த உள்நாட்டு தயாரிப்பு குறியீடு முக்கியமல்ல – மொத்த உள்நாட்டு மகிழ்ச்சிக் குறியீடு தான் முக்கியம் என்பதை இன்று ஐக்கிய நாடுகள் கூட அங்கீகரித்திருகிறது. இதை நாம் புறக்கணிக்க முடியாது; மகிழ்ச்சி என்பது ஒரு முக்கியமான காரணி.  பூடான் போன்ற சிறிய நாடுகள் மகிழ்ச்சிக் குறியீட்டில் முன்னணியில் இருக்கிறது. அந்த இடத்தைச் சுற்றி வந்தால், பெரிய புன்னகையோடு அவ்வளவு மகிழ்ச்சியாய், நிறைவாய் முன்னேற்ற பாதையில் மக்கள் சென்றுகொண்டு இருப்பதைக் காணலாம்.

ஸ்லோவேனியாவிலும் அது நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது; இரண்டு மில்லியன் மக்களே உள்ள சிறிய நாடு. எனவே இதை நடத்திக் காண்பது எளிது. (ஏனென்றால் நான் 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட நாட்டிலிருந்து வருகிறேன்.) மேதகு தலைவர் இதை ஒத்துக் கொள்ளாமலிருக்கலாம். நன்னெறியை மக்களுக்கு போதிப்பது எளிது என்று வேறு ஒரு பார்வையிலிருந்து நான் சொல்கிறேன். மகிழ்ச்சியைப் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவது, இந்த நாட்டில் ஒரு ஆனந்த அலையை ஏற்படுத்துவது எளிது. இது முடியும்.

ஜப்பானைப் பற்றி சில விஷயங்கள் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது மிகவும் முன்னேறிய நாடு. ஆனால், ஒவ்வொரு வருடமும், சுமார் 30,000 இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது ஒரு பெரிய எண்ணிக்கை. சென்று மே மாதம் ஜப்பானிய பிரதமரைச் சந்திதேன், அவர் கூறினார், ‘குருதேவ், பொருளாதார ரீதியாக நாங்கள் மிக வளமாக உள்ளோம். இளைஞர்கள் ஒவ்வொருவரும் இரண்டு கார்கள் வைத்திருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என்றாலும் நாங்கள் தரத் தயாராக இருக்கிறோம். ஆனாலும், பணத்தால் தர இயலாத ஏதோ ஒன்று இருக்கிறது. ஏகப்பட்ட வளம் இருந்தாலும், எங்கள் இளைஞர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் இருபது இலட்சம் இளைஞர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், அவர்களில் 30,000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதற்கு எங்களிடம் பதிலில்லை. நாங்கள் என்ன செய்ய முடியும்?’

ஆனந்த அலையை ஏற்படுத்த, மக்களை ஒன்று கூட்ட, ஒரு திட்டம் எடுத்துக் கொண்டோம். ‘வாருங்கள், ஒன்றாக சுவாசிப்போம், ஒன்றாகப் பாடுவோம், ஒன்றாக ஆடுவோம்.’ சில மணித் துளிகளே மனதை அமைதியாகி, தனக்குள் மூழ்கி ஆழமாய்ச் செல்லும் போது; நமக்குள்ளே ஆழத்தில் ஒரு அழகிய வெளி அல்லது இடம் இருப்பதை உணரும்போது; அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு தற்கொலையின் விளிம்பில் நிற்கும் பலரை அது காப்பாற்றும்.

ஜெர்மனியில், சுமார் 40 சதவிகிதப் பள்ளி ஆசிரியர்கள் மன அழுத்தம் கொண்டு இருக்கிறார்கள்; இது எச்சரிக்கை கொள்ள வேண்டிய விஷயம். சற்று கற்பனை செய்து பாருங்கள், ஆனந்தமாய் பள்ளிக்குச் செல்லும் குழந்தை அங்கே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியரை பார்க்கிறது; பள்ளியிலிருந்து வெளிவரும் அந்தக் குழந்தையிடம் என்ன எதிர்பார்க்க முடியும்? இது துரதிருஷ்டவசமானது.

வெற்றியின் அறிகுறி தன்னம்பிக்கையுடன் கூடிய மிகப் பெரிய புன்னகை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தச் சவாலையும் என்னால் எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை! என்னைப் பொறுத்த வரை, இந்த தன்னம்பிக்கையும் புன்னகையுமே வெற்றியைக் குறிக்கும். 

உங்கள் வங்கிக கணக்கில் பெரும் தொகை இருந்தும், உங்கள் முகம் வாடி, முழுதுமாய் வடிந்துபோய், மன அழுத்தத்துடன் நீங்கள் இருந்தால், அந்தப் பணத்தால் என்ன நன்மை? மக்கள் நிறைய பணம் சம்பாதித்து வங்கியில் போட்டுவிட்டு இறந்து விடுகிறார்கள். இரவெல்லாம் படுக்கை தயாரித்துவிட்டு தூங்க நேரமில்லாதது போல இருக்கிறது இது. நீங்கள் தூங்கப் போகும் நேரம் எல்லாம் போய்விடுகிறது. மிகச் சரியாக இதுதான் இப்போது நடக்கிறது. வங்கியில் பணத்தை போடுவதற்காக மக்கள் தன் வாழ்நாளெல்லாம் கடுமையாய் வேலை செய்கிறார்கள், பின்னர் அவர்கள் இறக்கிறார்கள், அவர்கள் குழந்தைகள் அந்தப் பணத்திற்காக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலும் இன்னும் பல இடங்களிலும், சுமார் 90 சதிவிகிதம் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் சொத்துரிமைப் பற்றிய வழக்குகள்தான். ஸ்லோவனியாவில் எப்படி என்று தெரியாது.

தாம் கடினாமாய் உழைத்துச் சம்பாதித்த பணத்தைப் பற்றியோ அல்லது தன்னுடைய பணத்தைப் பற்றியோ நீதிமன்றத்தில் வழக்குகள் இல்லை. வழக்கமாக அது வாரிசு உரிமை பற்றிய பிரச்சினைகள்தான். இதுவா வாழும் முறை? இதையா நாம் தொழிலில் வெற்றி என்கிறோம்? வெற்றி இல்லையென்றால், நாம் எதற்காக தொழில் செய்ய வேண்டும்? நம்பிக்கைதான் தொழிலின் முதுகெலும்பு. வெற்றியே தொழிலின் குறிக்கோள். இந்த இரண்டும் இல்லையென்றால், வெற்றி மற்றும் நம்பிக்கை, பின்னர் அந்த தொழில் எதற்கும் உதவாத முடமான தொழில்தான் அது, உங்களுக்கு அது மேலும் வியாதியைத்தான் கொண்டுவரும்.

இறுதியாக இதன் சாரம் என்னவென்றால், நாணயம், கடமை, பொறுப்புணர்வு, விசுவாசம், நேர்மை அல்லது நன்னெறி இல்லாமல் தொழில் நடத்த முடியாது. அது முடியவே முடியாது. நம்மைப் பொறுத்த வரை நாம் தொடங்கும்போது, நம்முடன் வேலை செய்பவர்கள் நம்மைப் பார்த்து பின்பற்றும்படி ஒரு உதாரணமாய் இருப்போம்.

நம்பிக்கை அத்தியாவசியமானது. இன்று, வங்கியில் பணத்தை போடுவதற்குக் கூட நம்பிக்கை இழந்து இருக்கிறார்கள். முன்பெல்லாம், மக்கள் வியாபாரத்தில் நம்பிக்கை இல்லாமலிந்தார்கள், மெதுவாக வங்கிகள் மேலும் அந்த அவநம்பிக்கை படர்ந்து விட்டது. அப்படி ஒரு பயமும் உறுதியின்மையும் நம் சமுதாயத்தை ஆட்கொண்டுவிட்டது. இது தொடர்ந்தால், குற்றங்களும் வன்முறையும் பெருகும். தொழிலில் நேர்மையும் நன்னெறியும் இருந்தால் சமுதாயத்தில் குற்றங்களையும் வன்முறையையும் தடுக்கும்.

இருப்பவர் இல்லாதவர் இடையே உள்ள இடைவெளியை நிரப்ப, அதன் மூலம் சமுதாயத்தில் குற்றங்களையும் வன்முறைகளையும் தடுக்க, தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு பேருதவி செய்யும். இல்லையென்றால் ஒருவர் வெடிபொருட்களின் மீது அமர்ந்திருப்பதாகவே கொள்ளவேண்டும். எப்போது வேண்டுமானாலும், இந்த சமுதாயத்தின் ஒரு பகுதி தெருவுக்கு வந்து பெரும் குழப்பத்தை உண்டு செய்ய முடியும்; அதில் தொழில் செய்பவர்கள்தான் பெருமளவில் பாதிக்கப்படுவர். (பாரிசில் நாட்கணக்கில், ஏன் சில வாரங்களுக்கு இது நிகழ்ந்ததைப் பார்த்திருக்கிறோம். சமுதாயத்தின் ஒரு பகுதி கலகத்தில் ஈடுபட்டு தொழில்கள் மூடப்பட்டன, அந்த இரண்டு வாரத்தில் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது.)

நாம் ஒரு தனி உலகத்தில் வாழவில்லை. ஒரு முழுமையின் அங்கம் தான் நாம், அதில் அரசியல்வாதிகள், மத அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், என எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும். எல்லோரும் சேர்ந்து ஒரு மேன்மையடைந்த சமூகத்தை, மேன்மையடைந்த நாட்டை கட்டமைக்க வேலை செய்ய வேண்டும். நாமாகவே இதற்கான உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கிரகத்தில் நம் வாழ்கை குறுகியது. உங்கள் வாழ்கையின் பொருளாதாரத்தை பாருங்கள்; 

நீங்கள் 80 வருடங்கள் வாழ்வதாக வைத்துக் கொள்வோம், இந்த 80 வருடங்களை எப்படி கழிக்கிறீர்கள்? இந்த 80 வருட வாழ்க்கையில் சுமார் 40 வருடங்கள் தூங்கியே கழிக்கிறீர்கள், அதாவது பாதி வாழ்கை. நீங்கள் உடல் நலமின்றி இருந்தால் அதில் சில வருடங்கள் சேர்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் உணவு உண்பதில் – காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என உண்ணுவதில் இரண்டு மணி நேரம் செலவழிக்கிறீர்கள்; சுமார் எட்டு வருடங்கள் உண்பதற்காக. அதைப்போல, எட்டு முதல் பத்து வருடங்கள் குளியல் மற்றும் கழிவறையில் செலவழிக்கிறோம்.

நியுயார்க், பிரான்க்பர்ட் போன்ற பெரு நகரங்களில் வசிப்பவரானால், போக்குவரத்து சிக்கலில் பத்து முதல் பதினைந்து வருடங்கள் செலவழிக்கிறீர்கள், பின்னர் வேலை. நம் வாழ்வை முழுமையாக ஆராய்ந்து பார்த்தால், சுமார் இரண்டு அல்லது மூன்று வருடங்களே மகிழ்ச்சியாய் இருக்கிறோம். இந்த நேரம் மட்டும் தான் உண்மையாக நம் வாழ்கையை வாழும் நேரம். மற்ற எல்லாம் வாழ்கை வாழ நம்மை தயார் செய்யும் நேரம் மட்டுமே.

தொண்டு செய்ய உறுதி பூண்டால் வாழ்க்கையில் ஒரு துடிப்பு வருகிறது. நாம் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை மற்றவர்களுக்கு உதவ கொடுக்கலாம், அதாவது நிறுவனகளின் சமூகப் பொறுப்பிற்காக. (CSR). சமூகத்திலிருந்து எப்படி எதையாவது பெறுவது என்று யோசிப்பதற்கு பதில் நாம் அதற்கு எப்படி பங்களிப்பது என்று யோசிக்க வேண்டும். அதிக புன்னகைகள் கொண்ட ஒத்திசைவான சமுதாயத்தை எப்படி வளர்ப்பது என்று ஒவ்வொரு தொழில் நிறுவனமும் ஒவ்வொரு தொழில் முனைவோரும் சிந்தித்தால், ஆரோக்கியமான மகிழ்வான ஒரு கால கட்டத்திற்கு நம்மால் செல்ல முடியும்.