இங்கே இருக்கிறது உங்கள் கடவுச்சொல்.....


18 மார்ச் 2013 ஜக்ரெப், குரோஷியா

இதயத்தின் மொழி, வார்த்தைகளையும் உணர்ச்சிகளையும் தாண்டியது.

இந்தப் பிரபஞ்சத்தில் நமக்குத் தெரியும் என்று நாம் நினைப்பது நமக்குத் தெரியாததுடன் ஒப்பிட்டுப் பார்கையில் மிக மிகக் குறைவானது மட்டுமே. நமக்குத் தெரியாதது ஏராளம், தியானம் தான் தெரியாததற்கு நுழை வாயில். இந்த புதிய பரிமாணத்துடன் கை குலுக்குங்கள்.

தியானம் நமக்கு பல நன்மைகளை கொணர்கிறது. முதலில் அது நமக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் தருகிறது. இரண்டாவதாக, நமக்கு எல்லோர் மீதுமான மாபெரும் அன்பை தருகிறது. மூன்றாவதாக, படைப்பாற்றல், உள்ளுணர்வை அறியும் திறன், இந்த இயற்பிரபஞ்சத்தை விஞ்சிய ஒன்றைப் பற்றிய அறிவு ஆகியவற்றை அளிக்கிறது.

குழந்தைகளாக, நம் எல்லோருக்கும் கொஞ்சம் சிறப்பான அதிர்வுகள் இருந்தன. குழந்தைகள் உலகில் எங்கிருந்தாலும் உங்களைக் கவர்கிறது. குறிப்பிட்ட தூய்மை, குறிப்பிட்ட அதிர்வுகள் அவர்களிடம் இருக்கிறது. அவர்கள் அவ்வளவு சிறப்பானவர்கள். நமக்கு வயதாக ஆக, நாம் ஆதியில் பிறந்தபோது இருந்த அந்த சக்தியோடு, அந்த உயிர் சாரத்தோடு இருந்த தொடர்பு எங்கோ விடுபட்டுவிட்டது. காரணமேயில்லாமல் சிலர் மீது உங்களுக்கு வெறுப்பு இருக்கும், மற்றும் என்னவென்று சொல்லத் தெரியாத காரணத்தால் சிலர் மீது கவர்ச்சி ஏற்படும், உங்கள் எல்லோருக்கும் இந்த அனுபவம் இருக்கிறதா? இப்படி உங்களுக்கு நடக்கவில்லை? எல்லா நேரமும்; ஒவ்வொரு நாளும் இது உங்களுக்கு நிகழ்கிறது. இது ஏனென்றால் அதிர்வுகளில் இருந்து வருவது தான் நம் முழு வாழ்கை.


நாம் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அதிர்வை கதிர் வீச்சாய் வெளிப்படுத்துகிறோம். 
ஒவ்வொருவரும் சக்தியை கதிர் வீச்சாய் வெளிப்படுத்துகிறோம்.நம் மனம் சிக்கலில் இருக்கும் போது 
அந்த சக்தி எதிர்மறையாய் மாறுகிறது.


மனம் விடுதலையாய் இருக்கும் போது அந்த சக்தி வெகு நேர்மறையாய் இருக்கிறது.

வீட்டிலோ அல்லது பள்ளியிலோ நமக்கு யாரும் எப்படி நம் சக்தியை நேர்மறையாய் மாற்றுவது என்று யாரும் சொல்லித் தரவில்லை, இல்லையா? எதிர்மறை உணர்வு, கோபம், பொறாமை, பேராசை, சலிப்பு, மன அழுத்தம், ஆகியவற்றை நேர்மறை சக்தியாய் எப்படி மாற்றுவது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும், மற்றும் அங்குதான் சுவாசம் உதவுகிறது.

சில சுவாச நுட்பங்கள் மூலமாகவும், தியானம் மூலமாகவும் எதிர்மறை சக்தியை நேர்மறை சக்தியாக மாற்ற முடியும். நாம் நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும் போது, நாம் நம்மைச் சுற்றி மகிழ்ச்சியை பரப்புகிறோம். இது ஒரு தளம், தியானத்தின் சிறந்த அத்தியாவசியமான செய்முறை நன்மை இது.

முன்பு சொன்னது போல,வேறு சில நன்மைகளும் இருக்கிறது.அதிக படைப்பாற்றலுடன் இருக்க விரும்பும் போது, அதிக உள்ளுணர்வு தேவைப்படும் போது, அடுத்த ஐந்திலிருந்து பத்தாண்டுகளில் என்ன நடக்கப் போகிறது என்று அறிய விரும்பும் போது, அதற்கு தியானம் தான் விடை. வாழ்க்கையை ஒரு விசாலமான பார்வையில் பார்க்க சற்று அதிக முயற்சி தேவை, அதாவது முயற்சியற்ற முயற்சி (தியானம்). உண்மையில் இது ஒரு முயற்சி இல்லை, சற்று அதிக நேரத்தைப் பற்றிய ஒரு விஷயம். ஒரு வாரமோ அல்லது பத்து நாட்களோ நேரம் எடுத்துக் கொண்டு நம் வாழ்கையின் சூட்சுமமான பகுதிகளுக்கு ஆழமாய் செல்ல வேண்டியது நமக்குத் அவசியம். நான் சொல்கிறேன், அது உங்களை அவ்வளவு உறுதியாய், சக்தி உள்ளவராய், அமைதியானவராய், மற்றும் திருப்தியுள்ளவராய் ஆக்குகிறது.

பண்டைய நாட்களில், தியானத்தைப் பற்றிய இந்த அறிவை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். இதை மிக இரகசியமாய் வைத்திருப்பார்கள், அதிர்ஷ்டம் கொண்ட வெகு சிலரே இதை அறிந்திருப்பார்கள். பொதுவாக இதை அரச பரம்பரையினருக்கும் அதி புத்திசாலிகளுக்கும் மட்டுமே இதை வெளிப்பபடுத்துவார்கள். நான் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தேன். இது முழு மனித குலத்துக்கே சொந்தம், இதை ஒவ்வொரு மாந்தரும் கற்றுக் கொண்டாக வேண்டும் என்று நினைத்தேன்.இது ஒரு கலாச்சாரத்திற்கோ,ஒரு நாகரீகத்திற்கோ, ஒரு மதத்துக்கோ அல்லது ஒரு நாட்டிற்கோ சொந்தமானது அல்ல, இது முழு மனித குலத்திற்கே சொந்தமானது. பிறகு இதை நாம் உலகிற்கு அளிக்க ஆரம்பித்தோம், இன்று, இந்த அழகான ஞானத்தை உலகெங்கிலும் உள்ள மக்கள் கற்று பயனடைந்து வருகிறார்கள்.

இருபது வருடத்திற்கு முன், நான் இங்கு இருந்தபோது, அவ்வளவு நிச்சயமின்மை இருந்தது. “என்ன நடக்கும்?, நாங்கள் புதிதாய் பிறந்த நாட்டில் இருக்கிறோம்,” என்று கேட்டார்கள். நான் “கவலை வேண்டாம். இந்த நாடு முன்னேறி, ஒரு மிக நிலையான நாடாக மாறும்.” என்றேன்.உலகெங்கும் இப்போது பிரச்சினை இருப்பது எனக்குத் தெரியும். நான் மறுபடியும் சொல்கிறேன், “கவலை வேண்டாம்! இந்த கடின காலகட்டத்தை நாம் கடப்போம். பிரகாசமான வாழ்வு இருக்கிறது.” எங்கெல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அங்கு சென்று, கவலை வேண்டாம்,பிரச்சினை தீர்ந்து எல்லாம் நன்றாக மாறும் என்று கூறுவது எனக்கு ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது என்று நினைக்கிறேன்.அப்படி நடக்கவும் செய்கிறது. விஷயங்கள் நன்றாக தொடங்குகிறது.

அமெரிக்காவில்,1999ல்,உலகம் 2000த்தோடு உலகம் முடியப்போகிறது என்று நினைத்தார்கள். தங்கள் வீட்டு நிலவறையில்,பாலும் மளிகைப் பொருட்களும் வாங்கி சேகரித்து வைத்தார்கள். அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையோரம் இருந்த பலர் தங்கள் வீடுகளை விற்று விட்டு கொலராடோவிற்கு சென்றனர். நான் பல நகரங்களுக்குச் சென்று, “கவலை வேண்டாம், எதுவும் நடக்காது, எப்போதும் போல இருக்கும்.” என்றேன். இப்போது அப்படி நன்றாகவே இருக்கிறது.
நம் எல்லோருடைய இதயத்தின் ஆழத்தில் அவ்வளவு செல்வதை இயற்கை பொதித்து வைத்திருக்கிறது. நமக்கு அதற்கான கடவுச் சொல் மட்டுமே வேண்டும். நான் சொல்லப் போகும் அந்த வார்த்தையைத் தான் நீங்கள் உங்களைச் சுற்றி உள்ள எல்லோருக்கும் பரப்ப வேண்டும், அந்த வார்த்தை, ‘கவலை வேண்டாம்

உங்கள் பெற்றோர்களைவிட, உங்கள் நண்பர்களைவிட, உங்கள் துணைவரைவிட உங்கள் மீது அன்பு செலுத்தக் கூடிய ஒரு சக்தி, ஒரு விசை இந்த பிரபஞ்சத்தில் உள்ளது. ஒரு புலம், ஒரு சக்தி உங்களை பார்த்துக் கொள்ள இருக்கிறது. நீங்கள் தளர்ந்து இருந்தால் மட்டும் போதும். நம் மெய்யுணர்வு மிக பழமையானது, மிகத் தொன்மையானது. வெப்ப இயக்கவியலின் விதிகளின்படி சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது என்பது நமக்குத் தெரியும். மனம் அப்படிப்பட்ட ஒரு சக்தி தான்.அது பன்னெடுங்காலமாய் இருந்து வருகிறது, நம் மெய்யுணர்வோ பலபல பதிவுகளை தன்னிடம் கொண்டது.

நான் உலகம் முழுதும் பயணிக்கும் போது, நான் புதியவர்களை சந்திப்பது போல எனக்குத் தோன்றுவதில்லை,அவர்கள் என்னில் ஒரு பகுதி அவர்களை எனக்குத் தெரியும் என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் பெயர்கள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம்; ஆனால் அவருடைய ஆத்மாவைத் தெரியும். அந்தத் தொடர்பை உணர்கிறோம். நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாம் எல்லோரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள்.

மேலும் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கூற விரும்புகிறேன், அதுதான் ‘சந்தேகம்’. சந்தேகம் எப்போதும் ஏதாவது நேர்மறை விஷயத்தைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். யாராவது உங்களிடம், “நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்.” என்றால் என்ன பதில் சொல்வீர்கள்? “உண்மையாகவா?” யாராவது உங்களிடம் “நான் உன்னை வெறுக்கிறேன்.” என்று சொன்னால், “உண்மையாகவா?” என்று நாம் கேட்பதில்லை.

ஒருவரின் நேர்மையை சந்தேகப்படும் நாம், அவரின் நேர்மையின்மையை  சந்தேகப் படுவதே இல்லை. நம் திறன்களை சந்தேகிக்கும் நாம், நம் பலவீனத்தை சந்தேகிப்பதே இல்லை, அல்லவா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் போது, ‘இது உண்மையா? நான் கனவு காண்கிறேனா?’ என்பீர்கள். ஆனால் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் போது, ’இது உண்மை தானா?’ என்று கேட்பதில்லை. உங்கள் மனத்தாழ்வு பற்றி நீங்கள் நிச்சயமாய் இருக்கிறீர்கள். நம்முடைய மனத் தாழ்வை சந்தேகிப்பதேயில்லை! எனவே சந்தேகம் என்பது எப்போதும் எதிர்மறையான விஷயத்தை பற்றி மட்டுமே ஏற்படுகிறது. எதிர்மறையான விஷயங்களை சந்தேகிப்பதே இல்லை. புத்திசாலியான ஒருவர் இதை தலைகீழாக மாற்றி எதிர்மறை விஷயங்களை சந்தேகப்படத் தொடங்குகிறார்.
உதாரணமாக, இன்னார் உங்களைப் பற்றி தவறாகச் சொன்னார் என்று யாராவது சொன்னால் உடனே அதை நம்பி விடுகிறீர்கள். அப்படிச் செய்யாதீர்கள். ‘இல்லை, நான் நம்ப மாட்டேன்’ என்று சொல்லுங்கள். மேலும், உடனே சம்பந்தப்பட்டவரை அழைத்து, ‘நீங்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசியதாகக் கூறினார்கள். ஆனால் அதை நான் நம்பவில்லை.’ என்று சொல்லி விடுங்கள். இதைச் சொல்வதால், அவர் உண்மையில் உங்களைப் பற்றி தவறாகப் பேசியிருந்தாலும் கூட மனம் மாறிவிடுவார்.

தனி ஒருவர் சரியானபடி அமையவில்லை என்றால், அவர் குடும்பம் பாதிக்கப்படும். அப்படி பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் இருந்தால் சமுதாயமும், நாடும் பாதிக்கப்படும். ஞானம் தனி ஒருவருக்கு வலிமை அளித்து, என்ன வந்தாலும் அதை எதிர்கொண்டு புன்னகைக்க உதவும்! எனவே, புன்னகையை புதிதாக உயிர்ப்பாக வைத்துக் கொண்டு நம் சமூகத்திற்கு தொண்டாற்றுவதைப் பற்றியதே வாழும் கலை. புன்னகைப்போம் தொண்டாற்றுவோம்!

உங்களிடம் உள்ள மன அழுத்தம் அல்லது அசௌகரியத்தை எடுத்துச் செல்லவே நான் வந்திருக்கிறேன். உங்கள் முகத்தில் பெரிய புன்னகையை எதிர்பார்த்து வந்திருக்கிறேன். பெரிய புன்னகையோடு திரும்பச் செல்லுங்கள்! உங்களுடைய எல்லா கவலைகளையும் பதட்டங்களையும் என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் உங்களுடன் இருக்கிறேன்.உங்கள் வாழ்க்கையில் பிரச்சினை இருப்பதாக உணரும்போது, மற்றும் நீங்கள் தன்னந்தனியாக உணரும் போது, நீங்கள் தனியாக இல்லை நான் உங்களுடன் இருக்கிறேன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.பிரச்சினைய என்னிடம் கொடுத்துவிடுங்கள், நீங்கள் புன்னகையுடன் தொண்டாற்றுவதை நான் பார்க்க விரும்புகிறேன்.

கே: இப்போது பூமியில் நடந்து கொண்டிருக்கும் மாற்றங்களைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்.

குருதேவ்: ஆம், பூமி தவறாமல் மாறி கொண்டேயிருக்கிறது. ஆனால் மனிதகுலம் நம் சுற்றுபுற சூழலுக்குச் செய்தது துரதிருஷ்டவசமானது.சுரங்கங்களை தோண்டவும்,பூமியின் அடி ஆழதிலிருந்து எடுக்கவும் ஏராளமான டைனமைட்களை வைத்திருக்கிறோம். இதனால் பூகம்பங்கள், சுனாமி போன்ற பேரிடர்கள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. எனவே சுற்றுச் சூழலை நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். சுற்றுச் சூழலை புறக்கணித்து விட்டு பூமியை நாம் பார்த்துக் கொள்ளவில்லை என்றால், அது நமக்கு மேலும் மேலும் சவால்களைத் தரும். பாருங்கள், நாம் எல்லோரும் பொறுப்பேற்றுக் கொள்ளக் கூடிய சில பிரச்சினைகள் இருக்கின்றன.

1.   சுற்றுச் சூழல்: நாம் பயிரிட்டு வளர்க்கும் உணவுப் பொருட்களை உண்ண முடியாத அளவுக்கு நாம் அதிக அளவு இரசாயனப் பொருட்களை நாம் விவசாய நிலத்தில் இடுகிறோம். உங்களில் எத்தனை பேருக்கு உடம்பில் வலியும் உபாதைகளும் உள்ளன? ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? நாம் உண்ணும் உணவில் ஏராளமாக பூச்சிக் கொல்லிகளும் இரசாயனங்களும் இருக்கின்றன. காய்கறிகளை பெரிதாக வளர்க்க நம் உடம்பிற்கு கேடு விளைவிக்கும் வகை வகையான இரசாயன உரங்களை நிலத்தில் இடுகிறோம். நம் பூமி நச்சு இரசாயனங்கள் இல்லாத இயற்கை விவசாய முறைக்கு மாற வேண்டும் என விரும்புகிறேன்.

உங்களுக்குத் தெரியுமா, மிகப் புராதனமான விவசாய நுட்பங்கள் இந்தியாவில் உண்டு. இந்தியாவில் அதை நான் தீவிரமாக பரப்பிக் கொண்டிருக்கிறேன். அது நிறைய மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. செலவே இல்லாமல் மூன்றரை மடங்கு விளைச்சல் அதிகரித்திருக்கிறது.அதை நாங்கள் செலவில்லா விவசாயம் என்கிறோம். விவசாயி பணத்தை கடன் வாங்கி இரசாயன உரம் மற்றும் பூச்சிகொல்லிகளை பயன்படுத்தத் தேவையில்லை. இயற்கையாய் கிடைக்கும் பொருட்களிலிருந்தும், இயற்கையாய் கிடைக்கும் தாவரங்கள் மற்றும் இயற்கை உரங்கள் கொண்டு மட்டுமே தானியங்களையும் காய்கறிகளையும் குறைந்த விலையில், அதிக தரத்தில், அதிக அளவில் விளைவிக்க முடியும்.

இந்த முறையான இயற்கை விவசாயத்தை இங்கு குரோஷியாவில் உள்ளவர்கள் கடை பிடிக்க விரும்பினால் வாழும் கலை நிறுவனம் மகிழ்ச்சியோடு அதை சொல்லித்தர தயாராக இருக்கிறது. ஒரு மாதிரிப் பண்ணையை அமைத்து எப்படி குறைந்த செலவில்அதிக உற்பத்தி செய்வது என்பதை கற்றுத்தர விரும்புகிறோம்.

ரூபாய் 40,000 சம்பாதித்த விவசாயிகள் ஒரு வருடத்தில் ரூபாய் 400,000 சம்பாதிக்க ஆரம்பித்து விட்ட குறிப்புகள் எங்களிடம் உள்ளது. இந்த இயற்கை முறை விவசாயத்தில் பத்து மடங்கு அதிக வருமானம் சம்பாதிக்க முடிந்தது, அதுவும் குறைந்த செலவில்.

2.   ஊழல்: இது ஒரு பெரும் பிரச்சினை. ஊழல் உலகம் முழுவதும் உள்ளது. இங்கு குரோஷியாவில் எப்படி என்று தெரியவில்லை,ஆனால் இந்தியாவில் இது பெரும் பிரச்சினை. ஆசிய கண்டத்திலும் கூட. நம்மைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு இல்லாத போது தான் ஊழல் தொடங்குகிறது. நம் மக்கள் என்று நினைக்கும் மக்களிடம் யாரும் ஊழல் செய்வதில்லை.தம்மைச் சேராதவர்கள் என்பவர்களிடம் மட்டுமே லஞ்சம் கேட்பார்கள், இல்லையா? இதை நாம் மாற்ற வேண்டும். தம் மக்கள் என்ற உணர்வை அதிகமாக்க வேண்டும்.

குரோஷியாவில் உள்ள ஒவ்வொருவரும், ‘லஞ்சம் கொடுக்கவும் மாட்டேன் வாங்கவும் மாட்டேன்,’என்ற இந்த உறுதி எடுத்துக் கொண்டால், குறைந்த பட்சம் ஒரு வருடமாவது, இந்த நாட்டின் முகமே மாறிவிடுவதைப் பார்ப்பீர்கள். இதைச் செய்யலாமா? இங்கு இருக்கும் அனைவரும், இந்த நாட்டிலுள்ள மற்ற அணைத்து மக்களிடமும் பேச வேண்டும். இங்கே நான்கு மில்லியன் மக்கள் உள்ளனர். இந்தியாவோடு ஒப்பிடுகையில் இது மிகப் பெரியது அல்ல. நான் வசிக்கும் நகரமான பெங்களூரில் இப்போது சுமார் எட்டு மில்லியன் மக்கள் உள்ளனர், அதாவது குரோஷியாவைப் போல இரண்டு மடங்கு. மக்கள் பங்கு பெற்றால், குரோஷியாவை ஒரு மாதிரி நாடாக மாற்ற முடியும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு.

யாருக்காவது வாங்க வேண்டும் என்ற வேட்கை இருந்தால் கூட ஒரு வருடம் பொறுத்திருங்கள், பிறகு செய்யலாம். நீங்கள் எல்லோரும், இன்னும் ஒரு வருடத்திற்கு இலஞ்சம் வாங்கவும் மாட்டோம் கொடுக்கவும் மாட்டோம் என்ற உறுதி எடுத்துக் கொண்டால், ஒரு மிகப் பெரும் மாற்றம் ஏற்படும். சட்டமோ அல்லது அதை அமலாக்குவதோ ஊழலை ஒழிக்காது. அது இதயத்திலிருந்து வரவேண்டும். மனித மதிப்புகள் சமுதாயத்தில் மலரும்போது, தீயசக்திகள் ஓடிவிடும்.

3.   தீய பழக்கத்திற்கு அடிமையாவது: மதுவிற்கு, ஆபாசப் படம் பார்ப்பதில், போதை மருந்துகளுக்கு அடிமையாவது, என்று மக்கள் பல பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். அதிலிருந்து மீண்டு வர நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். இந்த பழக்கங்களால் தான் இங்குள்ள சிறைகளும், ஏன் உலகெங்கும் உள்ள சிறைகளும் நிரம்புகின்றன. நாம் ஏற்கனவே இங்குள்ள சிறைகளில் இதை ஆரம்பித்து விட்டோம், ஆனால் நாம் அவர்கள் சிறைக்கு வராதிருக்க உதவ வேண்டும். எனவே நாம் குற்றமில்லாத வன்முறையில்லாத சமூகத்தை காண கனவுகானலாம், அதை நோக்கிய நம் வேலைகளைச் செய்யலாம்.