வாழ்க்கையை மேலும் வளமாக்குங்கள்….


22, மார்ச் – 2013 – ஜெர்மனி,

குருதேவர்: ஆடல், பாடல், தத்துவம், விஞ்ஞானம், சேவை மற்றும் மௌனம் இவை நிறைந்த வாழ்க்கை வளமானதாக இருக்கும். இந்த ஆறும் உங்கள் வாழ்க்கையை வளமானதாக்கும். இந்த ஆறில் ஏதாவது ஒன்று  இல்லையென்றால், வாழ்வு நிறைவு பெறாது. இன்று நாம் நம்முள் இருக்கும் மௌனத்தை அனுபவிக்கலாம்.

நம்முள் இருக்கும் மௌனமே, படைப்பாற்றலுக்கு தாயாகவும், சுய உணர்வின் (இன்ட்யூஷன்) மூலமாகவும், சக்தியின் இருப்பிடமாகவும் விளங்குகிறது. நாம் எல்லோருமே இதை பெற்றிருக்கிறோம். ஆனால் அதைப் பூட்டி வைத்திருக்கிறோம். சாவியைத் தொலைத்துவிட்டு திறக்க முடியாமல் இருக்கிறோம். உன் கம்ப்யூடரை திறக்கும் இரகசிய வார்த்தையை மறந்துவிட்டாற் போல், நம் இதயத்தில் இருக்கும் அளவிட முடியாத மௌனம் என்கிற செல்வத்தை அனுபவிக்காமல் இருக்கிறோம். இதைப் புரிந்து கொள்வது அவசியம். இன்று நாம் ஆடலையும் பாடலையும் அனுபவித்தோம். இப்போது தத்துவத்தைப் பற்றிப் பேசுவோம்.

நம் வாழ்க்கைக்கு மிகவும் நெருக்கமான இதயத்தின் உள்ளே இருக்கும் ஒன்றைப் பற்றிப் பேசுவதற்கு, நாம் ஒரு அமைதியான, உபசாரமில்லாத சூழ்நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டில் இருப்பதைப் போல் உணர்கிறீர்களா? அரை நிமிடம் அருகில் உள்ளவர்களோடு ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். உண்மையாகவே அருகில் உள்ளவர்களுடன் அறிமுகம் செய்து கொண்டீர்களா? இல்லை உபசாரத்துக்காகப் பெயரை சொன்னீர்களா?  வாழ்க்கையில் பல இனிமையான வார்த்தைகளை சொல்கிறோம். ஆனால் அவை மேலோட்டமாக சொல்லப்படுகிறது. உதாரணத்துக்கு, மருத்துவமனையில் இருக்கும் ஒருவரைப் பார்க்கச் சென்று அவரை சந்திக்கும் போது எப்படி இருக்கிறீர்கள்? என்று உபசாரமாகக் கேட்கிறோம். அவரும் அதே போல் “நான் நன்றாக இருக்கிறேன்” என்று உபசாரமாக சொல்கிறார்.

யாராவது குடிப்பதற்காக ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வந்து தரும் போது, “மிக மிக நன்றி” என்று சொல்கிறோம். ஆனால் அதை இதயபூர்வமாகச் சொல்வதில்லை. அதற்காக நீ நன்றி சொல்லக் கூடாது என்று நான் சொல்லவில்லை. நீ அப்படிச் சொல்லும் வார்த்தையில் ஆழம் இல்லை என்பதைக் கவனி. அவ்வார்த்தைகள்,விமான பணிப்பெண் “இன்றைய தினம் உங்களுக்கு நன்றாக அமையட்டும்” என்று சொல்வது போல் இருக்கும்.

அதே சமயம் இவ்வார்த்தைகளை உங்களுக்கு மிகவும் பிரியமாக இருப்பவரிடமிருந்து கேட்கும் போது, அது அலை அதிர்வுகளை உருவாக்குகிறது. இவ்வதிர்வலைகள் வார்த்தைகள் சொல்வதை விட அதிகமான நல்லுணர்ச்சியை ஏற்படுத்தும். இன்பமாக இருக்கும் சமயங்களில் நாம் ஆக்க சக்தி நிறைந்த அதிர் வலைகளை உருவாக்குகிறோம். நாம் மன அழுத்தத்தில் குழப்பமாக இருக்கும் போது தீயசக்தி நிறைந்த எதிர்மறையான அலை அதிர்வுகளை உருவாக்குகிறோம்.

சில சமயங்களில், காரணம் புரியாமல் சிலரைப் பிடிக்காமல் நாம் ஒதுங்கிச் செல்கிறோம். இதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?அதே போல், ஒரு காரணமுமில்லாமல் சிலரை நமக்கு மிகவும் பிடிக்கும். இவை யெல்லாம் அலை அதிர்வுகளால் நிகழ்கின்றன. பள்ளியிலோ, வீட்டிலோ யாருமே நமக்கு ஆக்க சக்தி நிறைந்த அலை அதிர்வுகளை உருவாக்குவது எப்படி என்று கற்பிக்கவில்லை.

நீ எதிர்மறை உணர்ச்சிகளால் பாதிக்கப்படும் போது, எதிர்மறை அலை அதிர்வுகளோடு வாழ்கிறாய். நீ மனச் சிதைவால் வாடும் போது, கோபத்தில் இருக்கும் போது, குழப்பத்தில் இருக்கும் போது இப்படிப்பட்ட தீயசக்தியுடைய அலை அதிர்வுகளைத் தாங்கிச் செல்கிறாய். ஏனென்றால் யாருமே இப்படிப்பட்ட நிலையில் உன் மனதில் இருக்கும் எதிர்மறைச் சக்தியை ஆக்க சக்தியாக மாற்றுவது எப்படி என்று சொல்லிக் கொடுக்கவில்லை. 

இங்கு தான் “வாழும் கலைப் பயிற்சி” தேவையாகிறது. எதிர் மறைச் சக்தியை ஆக்க சக்தியாக மாற்றுவது எப்படி என்று வாழும் கலைப் பயிற்சி அனுபவ பூர்வமாகக் கற்பிக்கிறது. நம் மூச்சு, மனம், விழிப்புணர்வு, அறிவு சம்பந்தமான சில பயிற்சிகள் மூலம், எதிர்மறை அலை அதிர்வுகளை, ஆக்க பூர்வமான 
அதிர்வலைகளாக மாற்றுவது சாத்தியமாகிறது.

குருதேவர்: சரி! இப்போது எது பற்றி நாம் மேலும் பேசலாம்?

குருதேவர்: உண்மையாகவே நீங்கள் மேற் சொன்னவைகளைப் பற்றி அறிய விரும்புகிறீர்களா?ஒரு புத்தகசாலைக்கு சென்றாலோ,அல்லது கூகுள் தேடுதல் மூலம்,மேற்சொன்ன எல்லாவற்றையும் பற்றி நிறைய தெரிந்து கொள்ளலாம். எனக்கு மேற்சொன்ன விஷயங்களைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். என்ன ஆகி விடும்? எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பது அவ்வளவு அவசியமா? 

கருத்துப் பரிமாற்றத்தில் நான்கு நிலைகள் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா?

முதல்: தலையிலிருந்து தலைக்குக் கருத்துப் பரிமாற்றம். இரண்டாவது: தலையிலிருந்து இதயத்துக்குக் கருத்துப் பரிமாற்றம். மூன்றாவது: இதயத்திலிருந்து இதயத்துக்குக் கருத்துப் பரிமாற்றம். நான்காவது: ஆத்மாவிலிருந்து ஆத்மாவுக்குக் கருத்துப் பரிமாற்றம்.

நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இரண்டு பேர்கள் ஒரே கருத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேசும் போது ஏதோ வாக்குவாதம் நடப்பது போல் தோன்றும். இப்படி நடப்பதற்குக் காரணம் இதயத்திலிருந்து உணர்ச்சி பூர்வமாக வார்த்தைகள் வரவில்லை. அல்லது ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது.

வார்த்தைகள் மூலம் ஏற்படும் கருத்துப் பரிமாற்றத்தை விட இதய பூர்வமாக ஏற்படும் கருத்துப் பரிமாற்றம் சிறந்தது. அன்பு பற்றி ஒரு மணி நேரம் பேசுவதை விட, ஒரு அன்பான பார்வையில் ஏற்படும் கருத்துப் பரிமாற்றம் சிறந்தது. இல்லையா? 

குழந்தைகளின் கண்களைப் பாருங்கள். அதில் தெரியும் அன்பைப் பாருங்கள். உங்கள் வீட்டிலிருக்கும் நாய்க்குட்டியோ, நாயோ நீங்கள் வீடு திரும்பியதும் உங்களைச் சுற்றிச் சுற்றி வந்து தன் அன்பைத் தெரிவிக்கிறது. அதற்குப் பேச வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குழந்தை தன் தாயிடம், “நான் உன் மீது மிக மிக அன்பாயிருக்கிறேன்” என்று சொல்வதில்லை. சொல்லப்போனால், அன்பை வார்த்தையில் தெரிவிக்கும் போது அது சிறப்பாக இருப்பதில்லை. ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? என்று மூன்று மணி நேரம் உரையாற்றினார். அவர் பேச்சு முடிந்தபின் அனைவரும் துக்கத்தில் இருந்தார்கள். ஏனென்றால் அவர் மிக மிக அதிகமான சமயம் எடுத்துக்கொண்டார். ஒரு மணி நேரம் பேச வேண்டியவர் 3 மணி நேரம் பேசிவிட்டார்.

நம் ஆழ் நிலையில் ஏதோ ஒன்று இருக்கிறது. இதைத் தொடும்போது நாம் உண்மையான மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைகிறோம்.நமக்குப் பூரண த்ருப்தி ஏற்படுகிறது. இந்த ஆழ்நிலையில் இருக்கும் ஆத்மாவை தொடுவது தான் தியானம் எனப்படும். வாழ்க்கை மிகக் குறைந்த காலமே இருக்கிறது. 70 – 80 ஆண்டுகள் மிக விரைவாகச் செல்கிறது. இதில் பாதி நேரம் நாம் தூக்கத்தில் இருக்கிறோம். மீதி இருக்கும் நேரத்தை குளியல் அறைகள், உணவு விடுதிகள், பயணம் செய்வது, போக்குவரத்து நெரிசலில் சிக்குவது, குறை சொல்வது, கவலைப்படுவது இவைகளில் செலவு செய்கிறோம். வாழ்க்கையும் முடிந்து விடுகிறது. ஆகவே, வாழ்க்கை வளத்தை மேம்படுத்தும் 6 முக்கிய விஷயங்களை மறக்கக்கூடாது. அறிவைத் தூண்டும் தத்துவங்களைப் பற்றிய பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும். இசை, ஆடல், விஞ்ஞானம் மற்றும் சேவையில் நேரத்தைச் செலவு செய்ய வேண்டும்.

நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்து விட்டேன். இல்லையா? ஏதாவது விட்டுப் போயிற்றா?

பார்வையாளர்கள்: மரணம்?

குருதேவர்: மரணம் தவிர்க்க முடியாதது. மரணம் என்பது நம் மனம் உடலை விட்டுப் பிரிவது. உடலையும் மனத்தையும் இணைக்கும் பாலமான நம் மூச்சு நின்று விடுவது தான் மரணம்.வெப்ப ஓட்ட விஞ்ஞான விதிப்படி, சடப் பொருளையும் சக்தியையும் அழிக்க முடியாது என்று நீங்கள் அறிவீர்கள். மனம் என்பது சக்தியாகும். அதை அழிக்க முடியாது. அது உடலை விட்டுப் பிரிந்த பின்னரும் நீங்கள் இருக்கிறீர்கள். தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போது நீங்கள் இதை அறிய முடியும். உங்களுக்கு மரணமே கிடையாது என்று அப்போது அறிந்து கொள்வீர்கள். நீங்கள் ஒரு உடலிலிருந்து மற்றொரு உடலுக்குச் செல்கிறீர்கள். அப்போது மரணத்தைப் பற்றிய பயம் மறைந்து விடும்.

பார்வையாளர்கள்:  பற்று?

குருதேவர்: ஏன் பற்றை நீக்க விரும்புகிறீர்கள்? ஏனென்றால் பற்று உங்களுக்கு வலியைக் கொடுக்கிறது. சரியா? ஏன் உங்கள் பற்றைப் பெரியதாக்கக் கூடாது?

உங்கள் குழந்தைகள், பெற்றோர்கள், கணவன் (மனைவி) மற்றும் நண்பர்களுடன் பற்றோடு இருப்பது இயற்கை. ஆனால் அவர்களை நீங்கள் அடக்கி ஆளக்கூடாது. உங்கள் பற்று தீவிரமாகி, நீங்கள் அவர்களை அடக்க விரும்பினால், நீங்கள் விரும்புபவரைத் துன்புறுத்துகிறீர்கள். நீங்களும் துன்பப்பட நேரும். எனவே உங்கள் பற்றை விரிவாக்குங்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் விரும்புவது போல், மற்றவர்களுடைய குழந்தைகளின் மீதும் பற்றோடு இருங்கள். உங்கள் குழந்தைகளை விரும்பும் அளவு இல்லாவிட்டாலும், அதில் 50% அல்லது அதை விட அதிகமாக பற்று வைக்க வேண்டும்.

பார்வையாளர்கள்: சேவை?

குருதேவர்: சேவை செய்வது அவசியம். நாம் அனைவரும் வாழ்க்கையில் சிறிதளவு சேவை செய்ய வேண்டும். நம்மால் இயன்ற அளவு,மற்றவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், புன்முறுவலையும் கொண்டுவர உதவ வேண்டும். சேவை செய்யும் போது உனக்கு பரி பூரண த்ருப்தி கிடைக்கும். நீ சேவையில் ஈடுபடும் போது உன்னுடைய பற்று உனக்குத் துன்பத்தைத் தராது. பெற்றோராக இருக்கும் போது உன் குழந்தைகளுக்கு சேவை செய்ய வேண்டும். குழந்தைகள் தங்கள் பெற்றோருக்கு சேவை செய்யவேண்டும். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த உணர்ச்சியோடு, இந்த மன நிறைவோடு நீ சேவை செய்யும் போது வாழ்க்கை ஒரு வித்தியாசமான பரிமாணத்தை அடையும்.

பார்வையாளர்கள்: தியானம்?

குருதேவர்: தியானம் உன் உடலுக்கு வலிமை தரும். உன் உடலில் நோய் தடுப்பு சக்தி அதிகரிக்கும். 
உனக்கு அதிக சக்தி கிடைக்கும். உன் மனம் ஒரு நிலைப்படும். அறிவு கூர்மையாகும். உன் உணர்ச்சிகள் மிகவும் நுண்மையாகும். உனக்கு நல்ல உணர்ச்சிகளின் அனுபவம் கிடைக்கும். ஆக்க சக்தியுள்ள அதிர் வலைகள் உன்னைச் சுற்றி இருக்கும். மேல் சொன்னவை தியானத்தால் கிடைக்கும் பலன்கள். இதைத் தவிர பல பலன்கள் இருக்கின்றன. தியானத்தால் நல்லதிர்ஷ்ட்டமும் வரும்.

கே: குருதேவ! மன்னிப்பைப் பற்றி தயவு செய்து சொல்லுங்கள். மன்னிப்பது எப்படி?

குருதேவர்: மன்னிக்காதே. அதை அப்படியே பிடித்துக் கொள். யாருக்கு நஷ்டம்? ஒரு நிகழ்ச்சி நடந்து விட்டது. அது நடந்து முடிந்துவிட்டது. உன்னுடைய தவறோ, அல்லது மற்றவருடைய தவறோ, அது முடிந்து விட்டது. அதையே நினைத்துக் கொண்டிருந்தால், உனக்குத் தான் வருத்தம் ஏற்படும். உன்னுடைய தவறினால் அந்த தவறு நிகழ்ந்தது என்று வைத்துக் கொள். வேறு ஒருவர் நீ செய்த தவறை மன்னிக்க வில்லை. உன்னைப் புரிந்து கொள்ள வில்லை. உன் வாழ்நாள் முழுதும் அந்தத் தவறுக்கு நீ தான் பொறுப்பு என்று சொல்லிக் கொண்டிருந்தால் உனக்கு எப்படி இருக்கும்? நீ மிகவும் வருத்தப் படுவாய். இல்லையா?

நீ ஒருவரை மன்னிப்பது அவருடைய நன்மைக்காக அல்ல. உன் மன அமைதிக்காகத் தான். மன்னிப்பதால் நீ உன் மனதைக் காக்க முடியும். வாழ்க்கையில் சில நல்லவைகள் நடக்கும். சில கெட்டவைகளும் நடக்கக் கூடும். நாம் விரும்புபவைகள் நடக்கும். விருப்பாதவைகளும் நடக்கலாம். எதுவானாலும் அது நடந்து முடிந்து விட்டது. அதை ஒதுக்கிவிட்டு மேலே செல்வது மிகமிக அவசியம். அப்படிச் செய்வதால் நீ உன் மன அமைதியைக் காக்கலாம்.

உண்மையில், பரந்த நோக்கத்தோடு பார்த்தால்,ஒவ்வொரு குற்றவாளியும்,ஒரு சூழ்நிலையில் அறியாமைக்கு இரையானவர் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நோக்கில் குற்றவாளியைப் பார்த்தால், தானாகவே கருணை வெளிப்படும். சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்களுக்கு வாழும் கலைப் பயிற்சி அளிக்கும் பொது இப்படிப் பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. சிறையில் அடை பட்டிருப்பவர்களும் நல்ல மனிதர்களே. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, அறியாமையால், விழிப்புணர்வு இல்லாததால் தவறு செய்திருக்கிறார்கள். உங்கள் வாழ்வு மேலும் மேலும் வளம் பெற 5 நாட்கள் தினமும் ஒரு இடத்துக்குச் சென்று அங்குள்ளவர்களோடு நேரத்தை செலவிடுங்கள்.

1) பள்ளிக்கூடம்: ஒரு பள்ளிக்குச் சென்று சிறுவர்களுடன் பேசிப் பழகுங்கள். ஒரு ஆசிரியரைப் போல் பாடம் நடத்திப் பாருங்கள். பாடம் கற்பிப்பது எப்படி? ஒரு ஆசிரியரின் பொறுப்பு என்ன என்று அறிந்து கொள்ளலாம்.

2) மனநோய் மருத்துவ நிலையம்: மனநோய் மருத்துவ நிலையத்துக்குச் சென்று, மனநோயால் பாதிக்கப் பட்டவர்களைப் பாருங்கள். வெளியில் உள்ளவர்களுக்கும் அவர்களுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என்று அறியலாம். அங்கிருப்பவர்கள் தங்கள் விருப்பம் போல் ஏதாவது பேசுவார்கள். அங்கு ஒரு நாள் அனுபவத்துக்குப் பின் உங்களை யாரும் மனக் குழப்பத்தில் ஆழ்த்த முடியாது.

3) சிறைச்சாலை: சிறைக் காவலில் இருப்பவர்களைச் சந்தித்துப் பேசும் போது, அவர்களின் இதய வலியையும், வருத்தத்தையும் அறியலாம்.

4) விவசாய நிலம்: விவசாயிகளுடன் பழகும்போது, நிலத்தை உழுவது, விதை விதைப்பது, சேற்றில் இறங்கி வேலை செய்வதைப் பார்க்கும் போது, உங்களுக்கே தெரியாத புத்துணர்ச்சி ஏற்படும். வாழ்வில் வளம் பெறுவீர்கள்.

5) இயற்கையுடன் இயைந்து இருப்பது: இதன்பின் ஒரு நாள் முழுவதும் நீங்கள் தனியாக இயற்கையுடன் இயைந்து (மௌனமாக!!!) நேரத்தை செலவிட வேண்டும்.

கே: குருதேவா! நான் சிக்கிக் கொண்ட மாதிரி உணர்கிறேன். வாழும் கலை ஞானத்தைப் பரப்ப முடிய வில்லை. நான் என்ன செய்யலாம்?

குருதேவர்: உன்னால் செய்ய முடியாததைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உன்னால் செய்ய முடியாததை, நீ செய்ய வேண்டும் என்று யாரும் எதிர் பார்க்க மாட்டார்கள். ஆனால் எதைச் செய்ய முடியுமோ, அதைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும். ஏனென்றால் மற்றவர்களுக்கு உதவும் போது, அவர்களுக்கு நல்லது நடக்கும். நமக்கும் த்ருப்தி கிடைக்கும்.

குருதேவர்: சரி! எல்லோரும் இங்கிருந்து செல்லுவதற்கு முன், உங்கள் கவலைகளை இங்கேயே என்னிடம் கொடுத்து விட்டுச் செல்லுங்கள். பெரிய புன்னகையோடு நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எப்போது மனச் சோர்வு அடைகிறீர்களோ, குழப்பமடைகிறீர்களோ, மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறதோ, நீங்கள் தனியாக இல்லை என்பது நினைவுக்கு வரட்டும். நான் உங்களோடு இருக்கிறேன். வாழும் கலையின் மொத்த உறுப்பினர்களும், குடும்பத்தினரும் உங்களோடு இருக்கிறார்கள்.
உலகில் உள்ள எல்லா மாந்தரும் ஒரே குடும்பமாக இருப்பதும், உலகில் உள்ள எல்லோருடைய முகத்திலும் பெரிய புன்னகையைக் காண்பதும் என் கனவு. நீங்கள் அனைவரும் என்னுடைய கனவில் சேர வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு வன்முறையற்ற, மன அழுத்தமில்லாத, மகிழ்ச்சியான சமுதாயத்தை உருவாக்குவோம்.