நீங்கள் அதிகமாக கூர்ந்து ஆராய்கின்றீர்களா?

பெங்களூரு, இந்தியா 13 மார்ச், 2013


பல தருணங்களில் நம்மை நாமே அதிகமாக ஆராய்கின்றோம். எனக்கு இது நிகழ்ந்து விட்டது, அது நடக்கவில்லை அல்லது எனக்கு இது வேண்டும், அது வேண்டும் அல்லது நான் அங்கு செய்தது தவறு, இங்கு செய்தது சரி என்றெல்லாம் எண்ணிக் கொண்டே இருக்கின்றோம். நம்மையே பற்றிய சிந்தனைகளில் சிக்கிக் கொள்கிறோம்.அவ்வாறு செய்யக் கூடாது. காற்றடிக்கும் போது என்ன நிகழ்கின்றது?  எல்லாம் காற்றில் அடித்து செல்லப்படுகின்றன .அல்லவா? காற்றுடனேயே அனைத்தும் பறந்து விடுகின்றன.

எனவே கடந்த காலத்தில் என்ன நிகழ்ந்தாலும் சரி, நல்லதோ, கெட்டதோ, சரியானதோ தவறானதோ, இனிமையானதோ இனிமையற்றதோ அவை நிகழ்ந்து  முடிந்துவிட்டன. எவ்வாறு காற்று அனைத்தையும் அடித்துக் கொண்டு செல்கின்றதோ அது போன்று வாழ்வின் நிகழ்வுகள் வந்து போகின்றன. இதில் முக்கியமானது என்னவென்றால், நீங்கள் எங்கும் தேங்கி நின்று விடாதீர்கள். முன்னேறிச் செல்லுங்கள். காலியாகவும்வெற்றிடமாகவும் உணருங்கள் அப்போது மிக மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

பிரச்சினைகள் இல்லாமல் யாரவது இருக்கின்றார்களா என்று எனக்குக் கூறுங்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் வரும். மகிழ்ச்சியை அனுபவிக்காமல் இருக்கின்றார்களா? ஒவ்வொருவரும் எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மகிழ்ச்சியை அனுபவித்திருப்பார்கள்.யாரேனும் பாராட்டுதலைப் பெறாமல் இருந்திருக்கிறார்களா?  ஏதேனும் ஒரு சமயத்தில் பாராட்டுதலை அடைந்திருப்பார்கள். நாய் கூட பாராட்டப் பெற்றிருக்கும். "எவ்வளவு நல்ல நாய்" என்று கூறியிருப்பார்கள். யாரேனும் விமரிசிக்கப்படாமல் இருந்திருக்கின்றார்களா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் விமரிசனத்தை பெற்றிருப்பார்கள்.அல்லவா?

எனவே, புகழ்ந்தாலும்,  குறை கூறி விமரிசித்தாலும் அது காற்றைப் போல வந்து பறந்து போகும் என்று அறிந்து கொள்ளுங்கள். அவை வந்து கடந்து போகும் சில எண்ணங்கள். உங்களைப் பற்றி மற்றவர்களுக்கு சில எண்ணங்கள் எழுந்து அவை மறைந்து போகின்றன. சில நல்ல எண்ணங்கள், சில கெட்ட எண்ணங்கள். மனிதர்களே நிரந்தரமாக நிலைத்திருக்க முடியாத போது அவர்களது எண்ணங்களுக்கு எந்தவிதத்தில்  நிரந்தரமான பற்றுத் தர முடியும்? அவர்களே நிலைத்திருக்க முடியாத போது, அவர்களது எண்ணங்களை வைத்துக் கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?   இங்கு அங்கு என்றிருக்கும் எண்ணங்களைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்?  வாழ்கையில் முன்னோக்கி நகர்ந்து செல்லுங்கள். என்ன நிகழ்ந்தாலும்  சரி, காற்றைப் போன்று நகர்ந்து செல்லுங்கள். காற்று எங்கும் நிற்பதில்லை. நகர்ந்து கொண்டே இருக்கின்றது. நீரும் பாய்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றது.

இயற்கை எவ்வாறு சில விதிமுறைகளைப் பின்பற்றுகின்றதோ அது போன்று எண்ணங்களும் வகையாக வந்து போகின்றன. சில சமயங்களில் புகழையும், விமரிசனங்களையும் கொண்டு வருகின்றன. எனவே புகழும் இகழும் வாழ்வின் ஒரு பகுதி. நீங்கள் அவற்றில் பிடிபடாமல் முன்னேறி நகர்ந்து செல்லுங்கள். பல சமயங்களில் மனிதர்கள் தங்களைப் பற்றி அதிகமாக கூர்ந்து ஆராய்கிறார்கள். தங்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்." நான் நலம், நலமில்லை, நான் சரி, நான் தவறு, என்னிடம் இந்த குணங்கள் இருக்கின்றன, இந்த குணங்கள் இல்லை

இத்தகைய சிந்தனைகளில் சிக்கிக் கொள்ளுவதால், தங்களைப் பற்றி எதிர்மறை ஆய்வு செய்யத் துவங்குகின்றனர். அதே சமயம், சிலர் தங்களைப் பற்றி சிந்திப்பதே இல்லை. மது அருந்துவதும் சிற்றின்பங்களைத் தேடுவதுமே குறியாக இருக் கின்றனர். ஒரு கணம் கூட திரும்பிப் பார்த்து தங்களைப் பற்றி நினைப்பதில்லை. அதனால் தான் ஞானம் தேடுபவர் முதலில் ஒரு நொடி நிதானித்து தனக்கு என்ன வேண்டும் என்று எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கூறப்படுகிறார்.
வாழும்கலை முதல் நிலைப் பயிற்சியில் முதல் கேள்வியே " உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களது பிரச்சினைகள் யாவை?" என்பதாகும். உள்முகமாக நகருவதற்கு முதற்படி தன் உள ஆய்வு.

பயிற்சியில் பங்கேற்பவர்களிடம் நாங்கள் கூறுவது," வாழ்வில் உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களை நீங்களே கேளுங்கள்.உங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? ஞானம் தேடுபவருக்கு இதுவே முதற் படி. ஆனால் வாழ்நாள் முழுவதும் "எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக்  கொண்டிருந்தால் உங்கள் மனம் அதிலேயே உழன்று அழுகி நீங்கள் மன அழுத்தம் அடைவீர்கள்.

ஒருவன் தினமும் தன்னைப் பற்றியே எண்ணி,  உழன்று கொண்டிருந்தால், அவன் மனம் அழுகித் தான் போவான். .அப்படிப்பட்டவர்களின் முகங்களைப் பாருங்கள். வெளுத்து, கவலைகள் நிரம்பி காணப்படுவார் கள். தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்களின் முகங்களில் கவலைகள் எப்போதும் சொட்டிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்டவர்களை பார்த்தாலே, அவர்களை விட்டு நகர்ந்து எங்காவது ஒடிவிடலாம் என்று விரும்புவீர்கள். அவர்களிடமிருந்து மக்கள் விலகிச் செல்வார்கள். அப்போது அவர்  "நான் என்ன தவறு செய்தேன்? ஏன் எல்லோரும் என்னை விட்டு விலகிச் செல்லுகின்றார்கள் என்று தனக்குள் எண்ணிக் கொள் வார். நாற்றம் அடிப்பது போன்ற எதிர்மறை அதிர்வவலைகள் அவரிடம் தோன்றுவதால் தான் மக்கள் விலகிச் செல்லுகிறார்கள். யாரிடமாவது நாற்றம் அடித்தால் அவரருகில் யாராவது காத்திருப்பார்களா? இல்லை. ஓடி விடுவார்கள். உங்களைப் பற்றியே நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தால், யார் உங்களை நோக்கிக் கவரப் படுவார்கள்?

தன்னைப் பற்றியே எண்ணிப் பார்க்காமல் இருப்பவர்கள் ஒரு புறமும், எப்போதும் தன்னைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பவர்கள் மறு புறமும் இருக்கின்றார்கள்.இரண்டுமே நல்லதல்ல இரண்டுக்குமிடையே யான  நடுவழியைப் பின் பற்ற வேண்டும்.சிறிதளவு உங்களைப் பற்றிக் கூர்ந்து ஆராய்ந்து, எதிரொலித்து விட்டு பின்னர், அதை விட்டுவிட்டு முன்னேறி நகர்ந்து செல்லுங்கள்.  சிக்கிக் கொள்ளாதீர்கள். என்ன நடந்தாலும் அதை விட்டு விலகி, முன்னால் நகர்ந்து செல்லுங்கள்.என்ன  நடந்திருந்தாலும் நீங்கள்  செய்ததோ அல்லது  பிறர் உங்களுக்குச்  செய்ததோ எதுவானாலும் அதைப் பற்றி அமர்ந்து சிந்தித்து வருந்திக் கொண்டிராதீர்கள்.நீங்கள் செய்ததைப் பற்றி எண்ணினால் வருத்தமும், பிறர் உங்களுக்கு செய்ததை எண்ணினால் கோபமும் கவலையும் அடைவீர்கள்.

எதுவானாலும் யாரையும் உங்களால் கட்டுப்படுத்த முடியாது. இவ்வுலகில் யாரும் யாரையும் அடக்கி யாள முடியாது. நீங்கள் யாரையாவது கட்டுப்படுத்திக் கொண்டிருப்பதாகவோ அல்லது நீங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருப்பதாகவோ எண்ணினால் அது தவறான கருத்து. இயற்கை விதி முறைகளின்படியே இவ்வுலகில் ஒவ்வொன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே, கடந்த காலத்தில் எது நிகழ்ந்திருந்தா லும் ,  அதை அசட்டை செய்து,முன்னால் நகர்ந்து செல்லுங்கள். உங்களுள் சேர்ந்து குவிந்திருக்கும் அழுக்கை  (கடந்த கால நிகழ்வுகள்) அகற்றி விட்டால்,  நீங்கள் ஒளி பெறத் துவங்குவீர்கள்.அதிக பலம் சேரும், விழிப்புணர்வு மலரும், மகிழ்ச்சி பெருகும். அப்போது நீங்கள் உயிர்த்துடிப்புடன் உள்ளதாகக் கூற முடியும். அதுதான் வாழ்கை என்பது.

ஒரு நாளின் 24 மணி நேரமும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். 24 மணி நேரமும் முடியாவிட்டாலும் ஓரிரு மணி நேரங்களாவது மகிழ்ச்சியாக இருக்கலாமே! நீங்கள் மீன் நீரில் மிதந்து கொண்டிருப்பது (மகிழ்ச்சியைக் குறிப்பிட்டு) போன்று இருக்க முடியாமல் போகலாம், ஆனால் சிறிது நேரம் நீர்த்தாரையில் இருக்கலாமே! இதுதான் ஞானத்தின் முதல் நோக்கம்.

பகவத் கீதையில், ந ஹி ஞானேனசத்ருஷம்ப வித்ரமிஹா வித்யதே  தத் ஸ்வயம் யோக சம்சிதா கலேனத்மநிவின்ததி (4.38) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பொருள் என்னவென்றால், ஞானத்தை விட தூய்மையாக்கக் கூடியது எதுவுமில்லை. ஒவ்வொன்றும் தாற்காலிகமானது , ஒன்றுமில்லாதது. எல்லாமே ஒன்றுமில்லாதது. நடக்கும் போது உங்களை   சுற்றி இருப்பவர்களைப் பாருங்கள். அவர்கள் அனைவரும், பஞ்ச பூதங்களினால் ஆன கிழிந்த பொம்மைகளைப் போன்றவர்கள். அவர்களின் நடவடிக்கைகள் எல்லாமே, அவர்களது கர்மாக்கள், மற்றும் எண்ணப் பதிவுகளின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. வாழ்வில் சிலர் தங்கள் நட்சத்திர பலன்களினால் உயர்கிறார்கள், வேறு சிலர் சில கிரகக்கோளாறுகளினால் வீழ்கிறார்கள் (ஜோதிட சாஸ்திரத்தைக் குறிப்பிட்டு).

எல்லோரும் இங்கும் அங்கும் நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒரு நாள் எல்லாமே முடிந்து விடும்.அவர்கள் செய்வதை செய்யட்டும் என்று விடுங்கள். அது உங்களை எவ் வகையில் பாதிக்கிறது? நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியாக இருங்கள். இதை நாம் மீண்டும் மீண்டும் நமக்கு நாமே நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.சமுதாயத்தில் சுற்றி நகரும்போது, எத்தனை முறைகள் இந்த தூசி உங்கள் மீது படிந்தாலும், அதை துடைத்து விட்டு, முன்னேறி நகர்ந்து செல்லுங்கள். எவையெல்லாம் உங்களுடையதோ, அவை நிச்சயம் உங்களை வந்தடையும்.

இதை அறிந்து கொண்டதால்,   நீங்கள்  எந்த முயற்சியும் எடுக்காமல் எதுவுமே செய்யாமல், வீட்டில் இருக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. நீங்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு, "குருதேவ்! எனக்குத் திருமணம் செய்து வையுங்கள். எனக்குத் தகுதியான மணமகனை  அல்லது மணமகளைத்  தேடித் தாருங்கள் என்றால் அது சரி அல்ல. நீங்களும் முயற்சி எடுக்க வேண்டும். நீங்கள் சோகமான முகத்துடன் இருந்தால் யார் உங்களை மணந்து கொள்ளுவார்கள்? குறைந்த பட்சம் ஒரு புன்முறுவலுடன் உற்சாகமாக இருங்கள். அதற்குத்தான் இங்கு திருமணத் துறையை அமைத்திருக்கின்றேன். (சிரிப்பு) அதன் முன்னேற்றம் மெதுவாக தான் இருக்கின்றது. நீங்கள் அனைவரும் வந்து அதன் செயல்பாட்டை முன்னே நகர்த்துங்கள்.

திருமணத்துறை  அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள பணியாளர்களை  விரைவில்  உங்களுக்கு ஒரு தகுந்த துணையைத் தேடிக் கொடுக்கும்படி கேளுங்கள். மிக முனைப்பாக தேர்வு செய்யாதீர்கள். யார் கிடைக்கிறார்களோ, அவரை ஏற்றுக் கொள்ளுங்கள். பின்னர் எல்லாமே சரியாக இருக்கும்.

இனிமையானதோ, அல்லவோ, எதுவானாலும் அது சிறிது காலத்திற்குத் தான். விரைவில் வாழ்கை முடிந்து விடும்.ஒரு நாள் நாம் அனைவருமே இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக் கொண்டேயாக வேண்டும் .யாரும் என்றும் நிலைத்திருக்கப் போவதில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க 60 ஆண்டுகள் எடுத்துக் கொண்டு என்ன பயன்?


ஒரு அறுபது வயது பெருமகன்,  என்னிடம் வந்து, "குருதேவ்! எனக்கு யாரையாவது தேடித் தாருங்கள். என்னுடைய வாழ்க்கைத் துணை அங்கு எங்காவது இருக்கின்றார்களா?" என்று கேட்டார்.நான் அவரிடம்," இத்தனை ஆண்டுகள் தேடியும் கிடைக்கவில்லை என்றால், இன்னும் சில காலம் நீங்கள் பொறுத்திருக்க வேண்டும். அதிக காலம் அல்ல,  ஒரு இருபது ஆண்டுகள் மட்டுமே. உங்களிடம், வாழ்க்கைத் துணை அடையாளம் காணக் கூடிய அளவு முழுமை உங்களிடம் இன்னும் தெரியவில்லை " என்றேன்! (சிரிப்பு) நாம் பிறரிடம் ஒவ்வொன்றிலும் முழு நிறைவு காண வேண்டும் என்று விரும்புகிறோமேயன்றி, நம்மை நாமே பார்க்கத் தவறி விடுகிறோம்.நாம் நம்மை சரியாக பிரதிபலிப்பதில்லை. நம்மை நாம் பிரதிபலிக்க வேண்டுமேயன்றி ஆழ்ந்து ஆராயக் கூடாது.எதையும் அதிகப்படியாக செய்யக் கூடாது. உங்களிடம் சில நல்ல குணங்களும் சில நல்லவையற்ற குணங்களும் இருக்கலாம். சரி. பரவாயில்லை. முன்னேறி நகருங்கள்.சில நல்லவை, சில நல்லவையல்ல. பரவாயில்லை. நீங்கள் முன்னேறி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.