ஒவ்வொரு நாளும் ஒரு புதிய நட்பை பெற வேண்டும்....


25 மார்ச் – 2013, குருதேவர் சான்டியாகோவில்,(கலிஃபோர்னியா,அமெரிக்கா)அஹிம்சையின் முக்கியத்துவத்தை பற்றிய விசேஷ நிகழ்ச்சியின் துவக்கத்தில், பேசியது பின் வருமாறு.

நாம் ஒருவருக்கொருவர் தோழமையோடு வாழ வேண்டும்




ஒரு பள்ளிக்குச் சென்று வகுப்பறைக்குள் நுழைந்து, மாணவ மாணவிகளிடம் “உனக்கு எவ்வளவு நண்பர்கள் (தோழிகள்) இருக்கிறார்கள்?” என்று கேளுங்கள். நம் குழந்தைகளுக்கு மற்றவர்களிடம் தோழமையோடு இருக்கக் கற்றுக் கொடுப்பது அவசியம். இப்போது சமூகத்தில் நிலவும் சண்டை சச்சரவுகளுக்கு முடிவு கட்ட அது தான் வழி. மாணவ மாணவிகளை ஒவ்வொரு நாளும் ஒரு புதிய தோழனை (தோழியை) அடைய சங்கல்பம் எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். அவர்களின் நடத்தையில் மாற்றம் ஏற்படுவதைக் காணலாம்.

அஹிம்சை (மற்றவர்களைத் துன்புறுத்தாமல் இருப்பது) என்பது வளர்க்கப்பட வேண்டிய குணம் அல்ல. ஆனால் இயல்பாக வாழ வேண்டிய நாம், வாழ்க்கை நெறிகளிலிருந்து தவறி வெகுதூரம் சென்றுவிட்ட இன்றைய சூழ்நிலையில் அஹிம்சையைப் பேணி வளர்க்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது. சண்டை சச்சரவுகளோடு கடுமையாக நடந்து கொண்டால் தான் ஒரு கதாநாயகன் ஆகலாம் என்று நம் குழந்தைகள் நினைக்கிறார்கள். அவர்களின் இந்தத் தவறான எண்ணத்தை மாற்றுவது அவசியம்.

அஹிம்சைக்கு உரிய மகத்துவத்தையும், பெருமையையும் திரும்பக் கொண்டு வர வேண்டும். பிற மதத்தினரோடு கலந்து பழகினால், ஒருவருக்கொருவர் அன்போடு, ஆதரவாக இருக்கமுடியும். அப்படி இருக்கும்போது சமுதாயத்தில், பயம், கவலை போன்ற எதிர்மறை சக்திகள் தானாகவே விலகி விடும். அன்பும் கருணையும் முதலிடம் வகிக்கும். அன்புக்கும் கருணைக்கும் ப்ரகாசிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. அன்பும் கருணையும் மனிதனின் இயல்பான குணங்களாகும்.
நாம் நம் சமூகத்தைப் பாதிக்கும் கொடிய, விலங்கு குணங்களைக் கைவிட்டு விலக வேண்டியது அவசியம். கருணை இல்லாத மனிதனே கிடையாது. அது அவனுள் மறைந்திருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவது அவசியம்.