புத்திசாலித்தனம் என்பது தீயவர்களிடமிருந்து நல்ல குணங்களை வெளிகொணர்வது.....


27
2012...............................
பெங்களூரு ஆசிரமம் 
மே

புத்திசாலிகளின் அடையாளம், தீயவர்களிடமிருந்தும் நல்ல குணங்களை வெளிகொணர்வது. அறிவிலிகளின் அடையாளம் என்பது புனிதர்களைக் கூட குற்றவாளிகளாய்க் காண்பது. அவர்கள் நல்லவர்களிடம் கூட குற்றம் குறை காண்கிறார்கள். ஆனால், புத்திசாலிகள், குற்றவாளிகளில் கூட வால்மீகியை ( இராமாயணத்தை எழுதியவர்) காண்கிறார்கள். உங்களை நீங்களே சோதனை செய்து கொள்ளுங்கள், எவ்வளவு புத்திசாலியாய் இருக்கிறீர்கள்,எவ்வளவு அறிவிலியாய் இருக்கிறீர்கள், எத்தனைமுறை மற்றவர்களிடமிருந்து நற்குணங்களை கொண்டுவந்தீர்கள்,எத்தனை முறை அவர்களிடம் குறை கண்டீர்கள்? 
கேள்வி: கடவுள் எப்படி பிறந்தார்?
ஸ்ரீ ரவிஷங்கர்: பிறந்திருந்தால் அவர் கடவுளே அல்ல. கடவுள் என்பவருக்கு  பிறப்பும், இறப்பும் இல்லை.
கே: என் மகன் பல பயிற்சிகள் எடுத்த பின்னும் கூட மாறவில்லை, பல முறை சொன்னால் கூட கிரியா செய்வதில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: ஆம், பருவ வயதில் குழந்தைகளை மாற்றுவது சற்று கடினமே. பொறுமையாய் இருக்கவேண்டும். மாற்றமே இல்லை என்று சொல்ல முடியாது. இந்த பயிற்சிகள் எல்லாம் எடுத்த பின்னர் நிச்சயமாய் ஏதாவது மாற்றம் இருக்கும்.
கே: ஆர்ட் எக்சல் மற்றும் எஸ் வகுப்புகள் நடத்தி இருக்கிறோம், ஆனாலும் குழந்தைகள் வீட்டில் தினசரி கற்றுத்தரப்பட்ட அந்த பயிற்சிகளை செய்வதில்லை என பெற்றோர்கள் புகார் செய்கிறார்கள். இதை எப்படி சரி செய்வது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: தொடர்ச்சிப்பயிற்சி வகுப்புகள் அடிக்கடி தேவை. அவர்களை விளையாட செய்ய வேண்டும்.  முடிந்த அளவு உங்களளவில் நீங்கள் எல்லா முயற்சிகளையும் செய்து விடுங்கள். நீங்கள் விதைத்த விதை, நன்றாக வளர்கிறதா என்று பார்க்க வேண்டாமா?
கே: இயற்கை விதிகளை மீறி அற்புத அதிசயங்கள் நடக்க இயலுமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: ஆம். ஏராளமாய் நடக்கிறது. பலர் தங்கள் வாழ்க்கையில் இதை அனுபவித்திருக்கிறார்கள்.
கே: பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்து விட்டன. மாணவர்களுக்கு இந்த தேர்வுகள் மிக முக்கியமானவை. மாணவர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை சொல்ல விரும்புகிறீர்கள்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இதில் தேர்வு பெற்றவர்கள், உற்சாகமாய் மேலே செல்லுங்கள். தேர்வு பெறாதவர்கள் உங்கள் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் இழக்காதீர்கள்.நீங்கள் பெரிதாக எதையும் இழந்து விடவில்லை.
ஒரு தேர்வில் தோல்வியடைவதால் மாணவர்கள் மனதளவில் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள். தேர்வில் தோல்வியுற்றதால் மட்டுமே பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு செல்கிறார்கள்.
தேர்வு பெறாதவர்களுக்கு என் அறிவுரை: இது பெரிய விஷயமே அல்ல. ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஒரு தோல்வி ஒளிந்திருக்கும் மற்றும் ஒவ்வொரு தோல்விக்கு பின்னாலும் ஒரு வெற்றி ஒளிந்திருக்கும்.எனவே கவலைவேண்டாம்,மறுபடி படித்து மேலே செல்லுங்கள். ஒரு வருடம் வீணாகிவிட்டதே என்று நினைக்காதீர்கள். அது பெரிய விஷயமே இல்லை. தேர்வில் தோல்வி அடைந்ததாலேயே காலம் வீணாகி விட்டதாக நினைக்க வேண்டாம். வாழ்கையே ஒரு கல்விதான், ஒரு கலை.வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும், நாம் பாடம் கற்றுக்கொள்கிறோம். தோல்வியிலிருந்தும், வெற்றியிலிருந்தும் கற்றுக்கொள்ளுங்கள், மனதை சமனமாய் வைத்துக் கொள்ளுங்கள், உற்சாகம் இழக்காமல் மேலும் முன்னேறி செல்லுங்கள்.
பல பெரிய தொழிலதிபர்கள் முதல் நிலையில் தேர்வு பெற்றவர்கள் அல்ல. இரண்டாம் வகுப்பு கூட  தேர்வு பெறாதவர்கள் மிகப் பெரும் தொழில் செய்கிறார்கள்.நான் சூரத் (இந்தியா) சென்றிருந்த போது, எட்டு தொழிலதிபர்கள்– அனைவரும் சகோதரர்கள்,என்னை பாத பூஜைக்கு அழைத்தார்கள். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் கூட எட்டாம் வகுப்புக்கு மேல் படித்ததில்லை என்று சொன்னார்கள். பெரும்பாலானவர்கள் இரண்டு அல்லது நான்காம் வகுப்புவரை மட்டுமே படித்திருந்தார்கள். உலகில் விற்கப்படும் பத்து வைரங்களில் ஒன்பது வைரங்கள் குஜராத்தில் தயாரிக்கப்பட்டவை என்று அவர்கள் சொன்னார்கள்.அவர்கள் பெரிதாக எதுவும் படிக்க வில்லை, ஆனால் அவர்கள் தொழில் நிறுவனத்தை நடத்திக்கொண்டு, ஆயிரத்துக்கும் மேல் வேலைவாய்ப்பு அளித்துக்கொண்டு ஆனந்தமாய் இருக்கிறார்கள். எனவே தேர்வில் தோல்வியுற்றதால் மட்டுமே எந்த விபரீத முடிவுக்கும் செல்ல வேண்டாம்.கடந்த சில மாதங்களில் இருபது நகரங்கள் மற்றும் பதினான்கு நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். ஜப்பானுக்கு சென்றிருந்த போது, ஜப்பான் பிரதமமந்திரியை சந்தித்தேன். ஒவ்வொரு வருடமும் சுமார் முப்பதாயிரம் இளைஞர்கள் தங்கள் நாட்டில் தற்கொலை கொள்கிறார்கள் என்றார். அவ்வளவு அதிக அளவில் தற்கொலைகள் அங்கு நடக்கிறது.அவர்களிடம் பணம் இல்லாமல் இல்லை. ஏராளமாய் பணம் இருக்கிறது. எல்லோரும் தொலைக்காட்சி, வாகனங்கள் என போதுமான அளவு செல்வம் கொண்டவர்கள். அப்படிப் பட்ட இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.அவர்கள் ஏழைகளாய் இருந்தால் அது வேறு விஷயம். அப்படியும் இல்லை.பணக்காரர்களே தற்கொலை செய்து கொள்கிறார்கள். எனவே, நான்தான் இதில் ஏதாவது செய்ய முடியும் என்று கூறினார்.

இந்தியாவின் ஆன்மீக அறிவு மட்டுமே அங்கு ஒரு மகிழ்ச்சி அலையை ஏற்படுத்த முடியும் என்று  அவரிடம் சொன்னேன். எனவே அந்த நாட்டின் பல பகுதிகளில், வாழும் கலை முதல் நிலை பயிர்ச்சிகளும், நவ சேத்னா ஷிபிர்களும் நடத்திக் கொண்டிருக்கிறோம். பல நாடுகளில் இதே பிரச்சினை இருக்கிறது. நம் நாட்டில் இந்த பிரச்சினை அவ்வளவு பெரிதாக இல்லாததின் காரணம் நம் நாட்டில் உள்ள ஆன்மீக நாட்டத்தின் விதை மற்றும் மனித மதிப்புகளும் தான். ஆனாலும் அதை காப்பதும் அது வளர்வதை உறுதி செய்வதும் நமது கடமையாகும். உங்கள் குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள். தேர்வில் தோல்வியடைந்தால் அது பெரிய விஷயம் இல்லை. நாம் நன்கு படிக்க வேண்டும், படிப்பில் நாட்டம் வேண்டும், வாழ்வில் வளமுடைய வேண்டும்.

கே: 2012ஆம் ஆண்டு எல்லோருக்கும் நல்ல ஒரு ஆண்டாக இருக்கும் என்று கூறினீர்கள்,ஆனால் நான் என் அம்மாவை இழந்து விட்டேன்.இதில் என்ன நல்லது இருக்கிறது? எனக்கு புரியவில்லை.
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: வாழ்வும் இறப்பும் தவிர்க்க முடியாதவை.இறப்பு தவிர்க்க இயலாதது.சில நேரங்களில் அது முன்பாகவே வந்து விடுகிறது.அது நடக்கும் போது நிச்சயமாய் வலி நிறைந்தது. எனவே, நாம் துயரத்தில் இருக்கும் போது அதன் காரணத்தை கண்டுபிடிப்பதை விட்டு விட்டு, பிரார்த்தனையில் ஆழ்ந்து மன அமைதியோடு இருப்பதே சிறந்தது.
‘இது ஏன் நடந்தது? கடவுள் ஏன் எனக்கு இப்படி செய்தார்? கடவுளுக்கு ஏன் கருணை இல்லை?’ இதை போன்ற கேள்விகளுக்கு பதிலும் இல்லை அர்த்தமும் இல்லை. படைப்பில், இதைப் போன்றவை, எல்லா நேரமும் நடந்துகொண்டு தானிருக்கும்.
இதை போன்ற மிகத் தேவையான தருணங்களில், நம் நம்பிக்கையை வலுப்படுத்துவதை விட்டு விட்டு, நம் நம்பிக்கையையே கேள்விக்குள்ளாக்குவதுபயனளிப்பதில்லை. மன அழுத்தம், மனக்கிளர்ச்சி, ஓய்வற்றதன்மை மற்றும் அமைதியின்மைக்கு நம்மை கொண்டு செல்லும். எனவே, அப்படியில்லாமல் இது தவிர்க்க முடியாதது என்று ஏற்றுகொள்ள வேண்டும்.
கே: என்னிடம் உங்களைப்பற்றி ஒரு புகார் இருக்கிறது. நான் என்ன கேட்டாலும் உடனே அருள்கிறீர்கள். இது என்னை பாழாக்குமா என்று கேட்க விரும்புகிறேன்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: நல்லது. நீங்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும் என்று இப்போது தெரிந்து விட்டதால், சிறிய விஷயங்களை கேட்காமல் பெரிதாய் கேளுங்கள். உங்களுக்கென எதையும் கேட்காமல் நாட்டுக்காக கேளுங்கள், எல்லோருக்குமாக கேளுங்கள். தர்மம் வளர்ந்து அதர்மம் குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். நீதி வளர்ந்து அநீதி குறைய வேண்டும், இல்லாமை குறைந்து வளமை பொங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோருடைய நலத்திற்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
கே: முற்பிறவியில் நாம் செய்த கர்ம வினைகள் தான் எல்லாவற்றையும் நிர்ணயிக்குமா? இப்போது செய்பவை நம் வாழ்வில் எந்த விளைவும் ஏற்படுத்தாதா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: யார் அப்படி சொன்னார்கள்? போக்குவரத்து விதிகளை மீறினால் அதன் விளைவை உடனடியாக எதிர்கொண்டாக வேண்டும். நீங்கள் நெருப்பில் கை வைத்தால் உடனேயே சுடும்.
கே: மனிதப்பிறவி எடுத்த பின்னும்,நாம் ஏதேனும் அடைய வேண்டுமா? அதை அடைபவர்களுக்கு என்ன கிடைக்கும் அடையாதவர்களுக்கு என்ன கிடைக்காது? ஒவ்வொரு மனிதருக்கும் இலக்கு தேவையா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இலக்கு இல்லா வாழ்கை மகிழ்ச்சியாக இருக்காது. இலக்கு இல்லாமல், மனமும் புத்தியும் நல்ல திசையில் செல்லாது. எனவே, வாழ்க்கையில் இலக்கு தேவை. இலக்கு என்பது நமக்கு முன்னேற்றம் தருவது மற்றும் பிறருக்கு நன்மை அளிப்பது.
கே: பெங்களூரு ஒரு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு நகரம். ஆனால் இப்போதெல்லாம், கோடைக் காலத்தில் மிக வெம்மையாக இருக்கிறது. இப்படியே போனால், எதிர்காலம் எப்படி இருக்கும்?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: நானும் அதைப் பற்றி கவலை படுகிறேன். நான் படிக்கும் காலத்தில் மின் விசிறிகளே தேவைப் படவில்லை.1980 ஆம் ஆண்டு,வட இந்தியா,வெளி நாடுகளில் இருந்து சிலர் வகுப்புகளில் பங்குபெற வந்திருந்தனர். அவர்களுக்கு குளிர் காற்றுப்பெட்டி தேவைப்பட்டது. நகரமெங்கும் தேடியும் ஒன்று கூட கிடைக்கவில்லை. வாங்குவதற்கு ஆளில்லாமல் இதை விற்பதில்லை என்று சொல்லிவிட்டனர் வியாபாரிகள். குளிர் சாதனப் பெட்டியோ அல்லது குளிர் காற்றுப் பெட்டியோ அப்போது கிடைக்கவில்லை. இது வெகு காலத்திற்கு முன்பு அல்ல.
இப்போதெல்லாம், எல்லோருக்கும் குளிர்சாதனப் பெட்டி தேவைப்படும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. நாம் நிறைய மரங்களை வெட்டிக் கொண்டிருக்கிறோம். ஏரிகள் காய்ந்து கொண்டிருக்கிறது. நம் ஏரிகள் உலராமல் பாதுகாத்திருந்தால், மரங்களை வெட்டாமல் இருந்திருந்தால் இந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்காது. 
கே: தர்மம் என்றால் என்ன?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: தர்மம் என்பது உங்களை தாங்கி நிற்பது, கீழே விழாமல் தடுப்பது மற்றும் மேலே வர உதவுவது.
கே: குருஜி, வாழ்கை நிரந்தரமானது, இங்கு திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஒருவருக்கு குரு இருந்தால் அவருக்கு பிறப்பு இறப்பு என்ற சுழலில் இருந்து விடுதலை கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்களோ நாம் திரும்பத் திரும்ப வந்தாக வேண்டும் என்கிறீர்கள். எனவே நாம், திரும்ப வருவோமா அல்லது விடுதலை அடைவோமா?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இரண்டும் உண்மைதான். நான் வந்து கொண்டிருப்பேன். நீங்கள் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை; இப்போதே விடுதலை பெறுங்கள்.
கே: நேர்மையாய் வேலை செய்பவரை ஏன் இந்த சமூகம் திரும்பத் திரும்ப தொந்திரவு செய்கிறது? தனக்கென எதுவும் வேண்டாமல், சமூகத்திற்காக வேலை செய்பவரை ஏன் இந்த சமூகம் தொந்திரவு செய்கிறது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: இப்போதெல்லாம் அப்படி நடக்கிறது. இப்படித்தான் எதிர்காலத்திலும் நடக்கும் என்று எந்த விதியும் இல்லை. ஒரு பெரிய வேலை செய்வதற்கு நீங்கள் உங்கள் பங்காக சில தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. ‘நான் நல்ல செயலைத் தானே செய்கிறேன், ஆனால் ஏன் என்னை எல்லோரும் விமர்சனம் செய்கிறார்க?’ என்று நினைக்க முடியாது. அது அவர்கள் இயல்பு. ஒரு முள்ளின் இயல்பு குத்துவது, ஒரு மலரின் இயல்பு மணம் வீசுவது. இந்த உலகம் முள்,மலர் இரண்டும் உடையது. ஒரு மலர் முல்லைப் பார்த்து, ‘ஏன் குத்துகிறாய்?’ என்றால் அதன் பதில், ‘அது என் இயல்பு’ என்பதே. 
கே: வியாபாரத்தை நிர்வகிப்பதற்காக என்னை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளார்கள். ஆனாலும் இந்தியா வசதியாயில்லை. நான் என்ன செய்யவது?
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர்: சில நேரங்களில் நமக்கு விஷயங்கள் பிடிப்பதில்லை, ஆனால் அது வேலை சார்ந்ததாய் இருந்தால் செய்தாக வேண்டியிருக்கலாம். மனதை முன்னிறுத்தி செல்லாதீர்கள், ஏனென்றால் மனம் சில நேரம் சில வேலைகளை விரும்பும் அல்லது விரும்பாமலும் போகலாம். உங்கள் பயிற்சிகள், தியானம், சத்சங்கம் மற்றும் சேவை ஆகியவற்றை தொடர்ந்து பயின்று வந்தால் எந்த இடத்திலும் வசதியாய் உணரும்படி உங்களை நீங்களே மாற்றிவிடலாம். எதிலும் தீவிர விருப்போ வெறுப்போ இருக்கக்கூடாது. அதுவே உண்மையான யோகம்.
v

உன் வாழ்க்கையே, ஒரு சாதனை தான்.......


25
2012...............................
பெங்களூர் ஆச்ரமம்
மே


கே: குருஜி! “என் பிறப்பு மற்றும் செயல்கள் இரண்டுமே தெய்வீகமானவை“ என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார். அதை விளக்கிச் சொல்லுங்கள்??

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உனக்கு ஆத்ம ஞானம் கிடைக்கும் போது, உன் பிறப்பு, செயல்கள் இரண்டும் தெய்வீகமானவை என்று உணர்வாய். அப்பொழுது அதைப் புரிந்து கொள்வாய். கட்டுப்பாடும், நற்குணங்களும் உன்னிடம் அமையும் போது, நீ தவறு இழைக்க முடியாது. ஒரு கெட்ட வார்த்தை கூட உன் வாயிலிருந்து வராது. யாரையும் வெறுக்க முடியாது. ஏனென்றால் எல்லோரும் உன்னைச் சேர்ந்திருப்பதாக உணர்வாய். இது அன்பின் சிகரம். இதைப் பற்றி நீ நன்கு அறியும் போது நீ உன் ஆத்மாவை அறிவாய். இதைத் தான் பகவத் கீதையில் “தத் ஸ்வயம் யோக ஸம்ஸித்தஹ காலேன் ஆத்மனி விந்ததி” என்று சொல்லப் படுகிறது.

“நான் செய்வது எல்லாம், இது வரை நான் செய்தது எல்லாம் இறைவனின் சித்தப்படி தான் நடந்திருக்கிறது. இந்தச் செயல்கள் இறைவனுக்கு அர்ப்பணமாகி விட்டன” என்பதை நீ வாழ்க்கையில் புரிந்து கொண்டால் போதும். அதற்காக நீ தவறான காரியம் செய்ய வேண்டும், உன் குறைகளைப் பார்க்கத் தேவை இல்லை என்று அர்த்தம் அல்ல. ஏதோ ஏக்கத்தினாலோ, இச்சையினாலோ ஒரு தவறு செய்திருந்தாலும், அதைத் திருத்துவதற்கு வழி கண்டு பிடிக்க வேண்டும். அப்படியே செய்து வந்தால், ஒரு நாள் அன்பின் சிகரத்தைத் தொட்டு, செய்யும் எல்லாச் செயல்களும் இறைவனின் சித்தப்படி என்று உணரலாம்.

கே: குருஜி! நான் உங்கள் உடலைத் தாண்டி உங்களை எப்படி அறிவது? குருவை எப்படிப் புரிந்து கொள்வது? அதை என் சக்திக்கு மீறிய செயலாக நினைக்கிறேன்.

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உன் சக்தியால் குருவை முழுதும் அறிய முடியாது என்று நினைப்பதே போதும். நன்றாக ஓய்வெடுத்து உன் ஆத்மாவைக் காண முயற்சி செய். இது தான் அன்பு என்பது. அன்பு என்பது என்ன? வித்தியாசம் இல்லாதது. நான் அவரிடமிருந்து வேறு பட்டவன் இல்லை. அவர் என்னிடமிருந்து வேறு பட்டவர் இல்லை என்று அறிந்து கொள்.

யாரோ ஒருவர் குழந்தையைத் திட்டும் போது, குழந்தையின் தந்தை என்ன சொல்வார்? நீ என் குழந்தையைத் திட்டுவது என்னைத் திட்டுவதற்குச் சமமானது. அல்லது நீ யாரோ ஒருவரின் தாயையோ, தந்தையையோ திட்டினால், அவரின் குழந்தை என்ன சொல்லும். என் பெற்றோர்களை இழிவு படுத்துவது என்னை இழிவுபடுத்தியது போலாகும் என்று எதிர்ப்பு தெரிவிப்பார் அல்லவா? அதற்கு அர்த்தம் அவர்களில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிறார்கள். அது தான் அன்பின் அடையாளம்.

கே: குருஜி! கருடபுராணத்தில் மரணத்துக்குப் பின் என்ன நேரும் என்பதற்கு ஒரு பயங்கரமான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்களோ “மரணம் என்பது அழகான ஆழ்ந்த உறக்கம் போன்றது” என்கிறீர்கள்.தயவு செய்து இதை விளக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: ஆம். நாம் மரணத்தைப் பற்றி பின்னால் பேசலாம். இப்போது வாழ்க்கையைப் பற்றிப் பேசலாம். இந்த வாழ்க்கையை நிறைவாக ஆரம்பித்து, திருப்தியாக மரணம் அடைந்தால் எல்லாமே நன்றாக நடக்கும்.ஆனால் நம் கடைசி காலத்தில், வருத்தத்தோடு மற்றவர்களைச் சபித்து, திட்டி, கோபமாக உயிர் துறந்தால் அது ஒரு பிரச்சினை தான். அதனால் நம் கடைசி காலத்தில்– சொல்லப் போனால், கடைசி க்ஷணத்தில் திருப்தியாக, மகிழ்ச்சியுடன் இந்த உடலை விட்டு நீங்க வேண்டும். ஆனால் கடைசி க்ஷணம் எப்போது வரும் என்று எப்படி அறிவது? அதனால் வாழ்க்கை முழுதும் திருப்தியாக மகிழ்ச்சியாக இரு!

கே: ஆத்மா என்பது காலத்தைக் கடந்ததா, இல்லையா? ஏன் நாம் பூமியின் நூறு ஆண்டுகளை, நம் முன்னோர்கள் உலகின் ஒரு நாள் என்று குறிப்பிடுகிறோம்...

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: அது அப்படித்தான். நம்முடைய நூறு ஆண்டுகள் நம் முன்னோர்களின் ஒரு நாளுக்குச் சமம். நம்முடைய பழைய புத்தகங்களில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் முன்னோர்கள் உலகம் சென்று திரும்பியிருக்கிறோம். அதை மறந்து விட்டோம். எவ்வளவு சமயம் நீங்கள் அங்கே கழித்திருப்பீர்கள் என்று உங்களுக்குத் தெரியவில்லை. நம்முடைய பழைய புத்தகங்களில் எழுதியிருப்பதை நம்புகிறோம்.

கே: குருஜி! நீங்கள் சிவனைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறீர்கள்.சிவனை நாம் லிங்க வடிவில் ஏன் வணங்குகிறோம்?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: லிங்கம் ஒரு அடையாளச் சின்னம்.அதன் மூலம் உண்மை என்ன என்று நாம் கண்டு கொள்ளலாம்.எது நம் கண்ணுக்குத் தெரிவதில்லையோ, ஆனால் வடிவில் உருவகப்படுத்த முடிகிறதோ அதைத் தான் நாம் லிங்கம் என்று வழிபடுகிறோம். ஒரு குழந்தை பிறக்கும் போது அது ஆணா பெண்ணா என்று எப்படித் தெரிந்து கொள்கிறாய்? உடலில் உள்ள ஒரு உறுப்பை வைத்துதான், அது ஆண் அல்லது பெண் என்கிறாய்.அந்த ஒரு உறுப்பு பின்னால் வரப் போவதைச் சொல்கிறது. அதனால் தான் பிறப்பு உறுப்பையும் லிங்கம் என்று சொல்கிறார்கள். அதே போல் இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்தவரை எப்படி அடையாளம் காட்டலாம். அவருக்கு ஒரு உருவம் கிடையாது, அடையாளம் கிடையாது. அவரைக் குறிப்பதற்கு ஒரு சின்னம் தேவைப்பட்டது. அதனால் ஆண், பெண் இரண்டு பிறப்பு உறுப்புகளையும் சேர்த்து சிவலிங்க உருவில் இந்த ப்ரம்மாண்டத்தில் பரவி நிற்கும் இறைவனை அடையாளம் காட்டுகிறோம்.

“நமாமி சமிஷான நிர்வாண ரூபம் விபும் வியாபகம் ப்ரம்ம தேவ ஸ்வரூபம், நிர்வாண ரூபம் – அவருக்கு ஒரு உருவமோ, உடலோ இல்லை. விபும் – அவர் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறார். ப்ரம்ம தேவ ஸ்வரூபம் – அவர் உத்தமமான ஞானத்தை அடக்கியவராக இருக்கிறார். எப்படி இண்டர்நெட் வேலை செய்கிறது என்று பார். எப்படி தொலைபேசி வேலை செய்கிறது. இடைவெளியில் எல்லா அணுக்களிலும் ஞானம் அடங்கியிருக்கிறது. இங்கே, தற்சமயம், நாம் உட்கார்ந்திருக்கும் இடத்தில், உலகத்தின் பல சேனல்கள் ஓடுகின்றன. எத்தனையோ அதிர்வலைகள் இருக்கின்றன. எத்தனையோ இ-மெயில்கள் இருக்கின்றன. அதனால் தான் நீங்கள் உங்கள் கம்ப்யூடரைத் திறந்து இ-மெயில் பெட்டியைத் திறந்தால் எல்லா இ-மெயில்களும் உங்கள் கம்ப்யூடரில் வந்து அடைகின்றன.

நீங்கள் அனுப்பும் எல்லா எழுத்துக்களும், அனுப்பும் எஸ்.எம்.எஸ் களும் இந்த அண்ட வெளியில் தங்கும். நீ யார் மீதாவது கோபப்பட்டால், அதுவும் இந்த அண்ட வெளியில் தங்கும். நீ யாரையாவது வாழ்த்தினால்,அது இந்த அண்ட வெளியில் தங்குகிறது. அவை அப்படித்தான் மற்றொரு கை பேசியை சென்றடைகிறது. ஆகவே இந்த ஆகாய தத்துவத்தில் ஞானம் இயற்கையாகவே இருக்கிறது. இன்றைய ஞானம் மட்டுமல்லாமல் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஞானமும் இருக்கிறது. அடுத்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் வரப்போகும் நிகழ்ச்சிகளையும் பார்க்கலாம். எல்லாம் அண்டவெளியில் எழுதி, பதிவாகியிருப்பதால் நீ அதைப் பார்க்க்கலாம்.

ஆகாய தத்துவத்தை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? பழங்கால மனிதர்கள் ப்ரபஞ்சத்தை இந்த அண்டவெளியைப் படைத்தவரை ஒரு வட்டமான கல்லை வைத்து நினைவு கூர்ந்தார்கள்.
கே: குருதேவ்! அறிவுக்கும், பக்திக்கும் என்ன உறவு. அறிவில்லாத பக்தி பலன் கொடுக்குமா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உனக்கு ரசகுல்லா பிடிக்கும் என்று வைத்துக்கொள். அப்போது தான் அதை உண்ண உனக்கு ஆசை வரும். நீ அறியாத பொருளை அடைய ஆசை எப்படி வரும்? அதன் மேல் எப்படி ஆசைப் படுவாய்? பக்தி என்பது ஆசைப் படுவது. நீ எதை விரும்புவாய்? அதைப் பற்றி சிறிது முன்பே தெரிந்திருக்கும். அதைப் பற்றி தெரிந்திருப்பது அதைப் பற்றிய அறிவு.ஒரு பொருளின் மீதோ, ஒருவர் மீதோ நீ ஆசைப்பட்டால் அதைப்பற்றி, அவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள முயற்சி செய்வாய்.

ஒரு கணவன் மனைவியிடம் இது பொதுவாகக் காணப்படும். திருமணத்துக்கு முன்னே ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். திருமணத்துக்குப் பின் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து கொள்ள முயல்கிறார்கள். ஒருவர் எங்கு செல்கிறார். என்ன செய்கிறார் என்று தெரிந்து கொள்வார்கள். இரண்டு பேரும் வேறு வேறு நகரத்தில் இருந்தாலும் டெலிபோன் மூலம் என்ன செய்கிறாய்? என்ன சாப்பிட்டாய்? என்று விசாரித்துக் கொள்வார்கள்.

ஒரு தாயும் தன் குழந்தைகள் வேறு ஊருக்குப் போன பின் இவ்வாறு விசாரித்துத் தெரிந்து கொள்கிறாள். என்ன சாப்பிட்டாய். எங்கு போனாய். என்ன உடை உடுத்தினாய்? நீ அன்பு செலுத்துபவர் தூரத்தில் இருந்தால், அவர் என்ன செய்கிறார், என்ன உடை உடுத்தியிருக்கிறார் என்று அறிய ஆவல் உண்டாகிறது. அவர் மீது அன்பிருக்கும் காரணத்தால் அவரை பற்றி எல்லாவற்றையும் அறிய முயல்வாய். சில சமயம் கணவனோ அல்லது மனைவியோ மற்றவர் தன் மீது சந்தேகப்பட்டு உளவு பார்க்கிறாரோ என்று நினைப்பார்கள். இது இயல்பாக நடப்பது தான்.அறிவு இருக்கும் இடத்தில் அன்பு மலர்ந்து மேலும் மேலும் கூடும். ஒரு வான் வெளி விஞ்ஞானி இந்தப் ப்ரபஞ்சத்தைப் பற்றிப் படிக்கப் படிக்க அவருடைய விருப்பம் அதிகமாகி அவருடைய ஆராய்ச்சியில் மூழ்கி விடுவார். எனவே அறிவையும் பக்தியையும் பிரிக்க முடியாது. முதலில் அறிவு இருக்கும்போது அன்பும் (பக்தியும்) தொடர்ந்து வரும். எனவே அறிவையும் பக்தியையும் இரண்டு வேறு பாதைகள் என்று என்றுமே நினைக்க வேண்டாம்.

கே: குருதேவ், நிறைய தடவை திருமணம் வெற்றி பெற கணவன் மனைவியின் பங்கைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். தயவு செய்து இன்று ஒரு திருமணம் வெற்றி பெற மாமனார், மாமியார் பங்கைப் பற்றிச் சொல்லுங்கள்.

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உன் அம்மாவும் அப்பாவும் உன்னைப் பலமுறை திட்டியிருப்பார்கள். உன் அம்மா திட்டியதை நீ சுலபமாக எடுத்துக் கொள்கிறாய். அதே உன் மாமியார் சொல்லும் போது, அது ஏதோ உன் தொண்டையில் மாட்டிக் கொண்டது போல் உன்னைத் துன்புறுத்துகிறது. உண்மையில் பார்த்தால், உன் மாமியாரோ, உன் மாமனாரோ ஏதோ சொல்வதற்கு முன் தயங்குவார்கள். உன் பெற்றோர்கள் திட்டுமளவுக்குத் திட்டவும் மாட்டார்கள். மிகவும் குறைவாகத் தான் திட்டுவார்கள். அவர்களின் பிள்ளைகளைத் திட்டும் அளவுக்கு அதிகாரத்தை மருமகள், மருமகனிடம் காட்ட மாட்டார்கள்.

ஒருவர் அதிகாரத்தோடு நடக்கும் போது ஒருவர் மேல் திட்டவோ அல்லது தகாத வார்த்தைகள் சொல்லக் கூடும். நீ அவர்களை உன்னுடையவளாகப் பார்க்காத போது உனக்கு அதிக வருத்தத்தைக் கொடுக்கும். உன் மாமியாரை உன் அம்மாவைப் போலப் பார்த்தால் நீ வாக்கு வாதத்துக்குப் பிறகு கூட அவரை அணைத்துக் கொள்ளலாம். வேற்று மனிதராக நினைத்தால், சண்டைக்குப் பின் அவர் வந்து உன்னை அணைத்துக் கொள்ள வேண்டும், உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எதிர் பார்ப்பாய்.

உண்மையில் உன் மாமியாரோ, மாமனாரோ உன்னைத் திட்டினால் அது நல்லது. அவர்கள் தன் குழந்தைகளையும் உன்னையும் வேறாக நினைக்காமல் உரிமையுடன் கடிந்து கொள்கிறார்கள். நீ உன் அம்மாவிடம் ஒரு முறை கூட சண்டை போட்டதில்லையா?  ஒப்பிட்டுப் பார். இரண்டு பக்கத்தையும் பார். நீ உன் அம்மாவிடம் பலமுறை சண்டை போட்டிருக்கிறாய். பலமுறை அவள் உன்னைத் திட்டியதுண்டு. ஆனால் அது உன் இதயம் வரை சென்றதில்லை. சிறிதளவு கூட துன்புறுத்தியது இல்லை. நீ அதை உதறி விடுவாய். இன்றும் நீ உன் அம்மாவிடம் சண்டை போட்டு விட்டு சமாதானமாகி விடுவாய். ஒன்றுமே நடக்காதது மாதிரி உட்கார்ந்து பேசுவாய். மாமியாரிடமும் அப்படியே நடந்து கொள். சண்டை நடந்தால் (ஒன்’றுமே நடக்காதது போல்) உன் அம்மாவிடம் சென்று பேசுவது போல் போய்ப் பேசி சமாதானம் செய்து கொள்.மெதுவாக அவர்களும் மாறி உன் பக்கம் வருவார்கள். அவர்கள் மனமும் மாறும். அன்பினால் நீ எல்லோரையும் வெல்லலாம். உன் சங்கல்பத்தினால் அவர்கள் அன்பைப் பெறலாம். அன்பும் சங்கல்பமும் தோல்வி அடைந்தால் பிரார்த்தனை செய். கடவுள் அருளால் எல்லாம் சரியாகிவிடும்.

கே: குருஜி! “பகவான் கிருஷ்ணரே உத்தமமான ஆத்மா. அவரே தான் எல்லா பொருளிலும் இருப்பவர்” என்று பகவத் கீதை குறிப்பிடுகிறது. “சிவன் தான் எல்லாப் பொருளிலும் இருப்பவர்” என்று சிவதத்துவம் சொல்கிறது. இரண்டிலும் எது உண்மை?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: இரண்டுமே உண்மை தான். இரண்டுக்கும் வித்தியாசம் கிடையாது. எது சிவமோ அதுவே கிருஷ்ணர். அதுவே இறைவன். எங்கும் இருப்பவர். அவை இரண்டல்ல. ஒன்றே தான். ஒரு ரிஷி கிருஷ்ணரும் (ஹரி) சிவனும் (ஹரன்) வேறு என்று நம்பினார். சிலர் ஹரி என்றும் சிலர் ஹரன் என்றும் மட்டும் ஜபித்தார்கள். அதனால் இறைவனே அந்த ரிஷிக்கு பாதி ஹரியாகவும், பாதி ஹரனாகவும் காட்சியளித்து இரண்டுக்கும் வித்தியாசமே இல்லை என்று உணர்த்தினார். அதே போல் சிலர் சக்தியும், சிவனும் வேறு வேறு என்று நினைக்கிறார்கள். மகான் பிருங்கரும் இப்படித் தான் நம்பினார். ஆண் உருவம் பெண் உருவத்தை விடச் சிறந்தது என்று எண்ணினார். பல மதங்களில் பெண்களுக்கு அவர்களுக்குரிய இடத்தை அளிக்கவில்லை. அவர்களை இரண்டாம் தர மக்களாகக் கருதுகிறார்கள். ஆண்கள் மேலானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

அதனால் பிருங்க ரிஷி ஆண் உருவத்தை மட்டும் வணங்கி வந்தார். பெண் உருவத்தை மதிக்க வில்லை. சக்தியை வணங்க மாட்டார். கடவுள் அவருக்கு உணர்த்த நினைத்தார். சில சமயம் நன்கு கற்றறிந்தவர்கள் கூட தவறான பாதையில் செல்கிறார்கள்.அவர்கள் நல்லவர்கள் தான். இருந்தாலும் அவர்களின் அறிவு கரிய மேகங்களால் சூழப்பட்டு தவறான ஒன்றை சரியானதாக நினைக்கிறார்கள்.

ரிஷி பிருங்கருக்கு உண்மையை உணர்த்த இறைவன் பாதி ஆணும், பாதி பெண்ணுமாக, அர்த்தநாரீஸ்வரராக அவருக்குக் காட்சி அளித்தார். ரிஷி சிவசக்தி உருவத்தைச் சுற்றி வந்து வணங்கும்படியானது. சிவனை மட்டும் தனியாகச் சுற்ற முடியவில்லை.

பெண்ணுக்கும் ஆணுக்குக் கொடுக்கும் மரியாதையைத் தரவேண்டும். ஆணையும் பெண்ணையும் வித்தியாசமாகப் பார்க்கக்கூடாது. இன்று நாம் பெண்ணுரிமையைப் பற்றிப் பேசுகிறோம். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே அது நம் நாட்டில் இருந்து வந்தது. எனவே கடவுள் அர்த்தநாரீஸ்வரர் உருவில் பிருங்க ரிஷிக்கு ஞானம் தந்து அருளினார்.

பிருங்கி என்றால் பொன்வண்டு. இறைவனிடம் இருந்த பக்தியின் காரணமாக பிருங்க மகரிஷியின் இதயம் பொன்வண்டின் ரீங்காரம் போல் துடித்தது. வண்டு ஒவ்வொரு மலராகப் போய் அதில் இருக்கும் தேனைச் சேகரிப்பது போல் பிருங்கமகரிஷி ஒவ்வொரு மனிதரிடம் இருக்கும் சிவதத்துவத்தை எடுத்துக் கொள்வார். இந்த உலகின் எல்லாவற்றிலும் சிவதத்துவத்தையே தேடிச் சேகரிப்பார். அவர் அப்படிப் பட்ட பக்திமான். ஆனால் அவர் பெண்களுக்கு மரியாதை அளிக்காததால் கடவுள் தன் ஆண் பெண் உருவைக் காட்டி அவரைத் திருத்தினார். இது புராணக் கதை அல்லது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இதன் மூலம் அவர் ஹரியும் ஹரனும் வேறல்ல என்று அறியலாம்.

கிருஷ்ணர் சரித்திரப் படி பெரிய மகான். ஆனால் சிவன் எப்பொழுதும் பிறக்கவே இல்லை. அதனால் தான் அவர் சுயம்பு என்று அழைக்கப்படுகிறார். அவர் பிறக்கவே இல்லை. முகம்மதிய மதத்திலும் அல்லா எப்பொழுதும் பிறக்கவே இல்லை என்று சொல்கிறார்கள். அதே தான் சிவனுக்கும் சொல்லப்படுகிறது. அவர் தானாகவே தோன்றினார். அவரே காலத்துக்கும் அதிபதி. காலன் அவரைத் தொட முடியாது. சீக்கிய மதத்திலும் கடவுள் காலத்துக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. –“ஏக் ஓம்கார் சத்நாம் கர்த்தா பூரக் நிர்பவ் நிர்வைர் அகால் மூரத்”. எல்லா மதங்களும் இதே தத்துவத்தைச் சொல்கின்றன. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் சொல்வதும் இதே தான். “அவ ஜானதி மம முத மனுசிம் தனும் அஸ்ரிதம், பரம் பவம் அஜநந்தோ மம புத மகேஷ்வரம்”

என்னுடைய வியாபகமான எல்லாம் கடந்த தன்மையை அறியாத மூடர்கள் என்னை ஒரு உருவமாகப் பார்க்கிறார்கள். மக்கள் என்னை ஒரு உருவமும், மனதுமாக எண்ணுகிறார்கள். மூடர்களால் என்னை அறிய முடியாது. நான் மனித உருவில் இருந்தாலும் என் ஆத்மா தான் பரமாத்மா. ஓ அர்ஜுனா என்னில் உள்ள தெய்வீகத்தை மட்டும் பார். அதனால் தான் கடவுளிடம் மனித குணத்தையோ அறிவையோ பார்க்க வேண்டாம் என்கிறார்கள். ஏனென்றால் நீ எப்படிப் பார்க்கிறாயோ, அதே போல் உனக்குக் காட்சியளிக்கும். ஒரு சிலையை நீ கல்லாகப் பார்த்தால் அது உனக்குக் கல்லாகத் தான் தெரியும். ஆனால் அந்தச் சிலையில் தெய்வீகத்தைப் பார்த்தால் அது உனக்குக் கடவுளாகக் காட்சி தரும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரிடமும் தெய்வீகத் தன்மையையும் அன்பையும் பார்க்கலாம். நம்மைச் சுற்றியிருக்கும் அனைவரிடமும் ஒரு ஒற்றுமையைக் காணலாம். ஏனென்றால் எல்லோருமே அதே கடவுளிடமிருந்து தான் வந்திருக்கிறோம். மனித அறிவு என்பது வரையரைக்குள்ள வெளித் தோற்றத்தை மட்டும் பார்க்கும். ஆனால் நாம் எங்கும் எல்லோரிடமும் வியாபித்திருக்கும் தெய்வீகத்தை உணர வேண்டும்.

கே: குருதேவ்! எப்படி ஞானத்தை அடைவது போல, அதை இழக்கவும் முடியுமா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: ஞானத்தை முழுவதும் இழக்க முடியாது. பூரண ஞானம் அடைந்த பின் அதை இழப்பதென்பது முடியாது. அரை குறை ஞானம் அடைந்த ஒருவர் அதை முழுவதும் அறிந்து கொள்ளாமல் முன்னும் பின்னும் போகலாம்.

கே: நான் தியானத்தில் (யோக பயிற்சி) அமரும் போது மனம் இங்கு மங்கும் அலைகிறது. மனதை அடக்க என்ன செய்யலாம்?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: உன் வாழ்க்கையையே யோகப் பயிற்சியாக நினைத்துக் கொள்.உன் வாழ்க்கையே ஒரு யோகப் பயிற்சி தான். உன் மனம் எங்கு அலைகிறது? எங்கு திருப்தி கிடைக்கிறதோ அங்கு செல்கிறது. அடுத்த முறை இப்படி நடக்கும் போது உன் மனதைக் கவனி. உன் மனம் திருப்திக்காக அலைகிறதா? நீ அப்படிக் கவனித்து அதற்கான காரணத்தைப் பார்த்தால் உன் மனம் அங்கில்லை. பிறகு உன் மனம் சாந்தி அடையும். அலைவதை விட்டு அடங்கி விடும். மனம் ஆத்மாவில் லயித்து விடும். அதனால் தான் பல தியான பயிற்சிக்கான முறைகள் சி.டி. யில் பதிவு செய்து கொடுக்கப் பட்டிருக்கின்றன. தியானம் செய்து கொண்டே இரு. ஆனால் தியானம் மட்டும் போதாது. ஞானத்தோடு கூடிய தியானம் மனதை அடக்க உதவும்.

கே: நமக்கு மிகவும் விருப்பமானவர்கள் நம்மை விட்டுப் பிரியும் போது (இறக்கும் போது), அவர்களை நாம் எவ்வாறு திருப்பி நம் வாழ்வில் கொண்டு வர முடியும்.?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: பிரிந்தவர் சரியான இடத்துக்குச் சென்றிருக்கிறார். நமக்கு மிகவும் பிரியமானவர் நம்மை விட்டு விலகுவது, “வாழ்வு ஒரு நாள் முடியக் கூடியது, எதுவும் நிரந்தரமானது அல்ல” என்பதை நமக்கு உணர்த்துவதற்காகத் தான்.

நானும் ஒரு நாள் பிரிய வேண்டியது தான். நீயும் எல்லாவற்றையும் விட்டு விட்டுச் செல்லப் போகிறாய். இந்தச் சமயங்களில் வருத்தமடைவது சகஜம். அதனால் தான் தியானம், யோக சாதனைகள், சத்சங்கம் இருக்கின்றன. அதில் ஈடுபடுவது உன்னுடைய துக்கத்திலிருந்து மீள வழி செய்யும்.

கே: குருஜி! நான் ஆச்ரமத்தில் இருக்க விரும்புகிறேன்...

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: சரி. ஆச்ரம நிர்வாகத்தினரோடு பேசு. நான் சொன்ன மாதிரி இந்த உலகம் முழுவதுமே ஆச்ரமம் தான். நீ எங்கிருந்தாலும் மக்களிடம் அன்போடு இரு. உதவி செய். ஞானம் சம்பந்தமானவற்றைக் கற்றுக் கொடு. அது தான் ஆச்ரமம். ஒவ்வொரு வீடும் ஆச்ரமம் தான். ஆச்ரமம் என்றால் என்ன? ஆச்ரமத்தில் ஒரு முயற்சியும் இல்லாமல் உன் மனம் ஆழ்ந்த ஓய்வு பெறுகிறது. ஞானம் கிடைக்கிறது. ஆத்மா அமைதி அடைகிறது. வாழ்க்கை ஒரு கொண்டாட்டமாகிறது. 

கே: ஆத்மா இறப்பதில்லை என்றால் உலகத்தில் ஜனத்தொகை ஏன் அதிகரிக்கிறது?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: எத்தனையோ விலங்குகள் இப்போது இந்த பூமியிலிருந்து மறைந்து விட்டன. பாம்புகள், பூச்சிகள், சிங்கங்கள்… பூமியிலிருந்து மறைகின்றன. கழுதைகளின் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. முன்பு பார்த்த அளவு குரங்குகள் இப்போது காண்பதில்லை. எல்லா இடங்களிலும் காடுகள் அழிந்து நகரங்களாகின்றன. குரங்குகள் எங்கே போகும்? அதனால் அவை வீடுகளிலும், அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் புகுந்து விட்டன.

கே: வெடிகுண்டு விபத்திலோ, விமான விபத்திலோ சிறு குழந்தைகள் இறப்பதைக் கண்டு நான் மிகவும் துக்கத்தில் ஆழ்கிறேன். இறப்புக்குப் பின் அவர்கள் நன்றாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். நீங்கள் அவர்களையும் பார்த்துக் கொள்கிறீர்களா?

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர்: ஆம் கவலைப் படாதே. துக்கப் படுவது இயற்கை தான். மற்றவர்களின் வலியை உணர்வது நீ ஒரு மனிதாபிமானி என்பதை நிரூபிக்கிறது. மற்றவர்களின் வலியை உணராத இதயம் இருந்து என்ன பயன்? ஆனால் நீ ஒரு வேலையும் செய்யாமல் துக்கத்தில் ஆழ்ந்தால் பயனில்லை. இந்த துக்கத்தை மறந்து, சேவை செய்வதில் ஈடுபடு.

வாழ்க்கை எனும் வாகனத்தின் எரிபொருள், நம்பிக்கை.


24
2012............................... பெங்களூர்,
மேகே: குருஜி, நான் பெருமளவிற்கு பொருட்கள், ஆசைகள், படபடப்பு ஆகியவைகளிருந்து விடுபட்டு விட்டேன். ஆயினும், தங்கள் விஷயத்தில் என் தாகம் அதிகரித்துக்கொண்டே போகிறதே. இதற்குத் தீர்வு என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பரவாயில்லை. பொருள்கூறு உலகியலிலிருந்து விடுபட்டு, தன்னுள் நோக்கும் நிலையில் இது நிகழக் கூடியது தான். இது வாழ்கையில், மந்த நிலையை அகற்றி சாரமுள்ளதாக ஆக்குகிறது. இல்லையெனில் வறண்ட துறவு நிலையாகி விடும். நாம் யாரையாவது  மிக அதிகமாக விரும்பினோமேயானால்தான் வாழ்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். யாரிடமுமே பற்று இல்லையெனில் அன்பும் மலராது, வாழ்வும் ரசமற்று இருக்கும்.  படிப்படியாக, நீங்கள் என்னிடம் காணும் தெய்வீக உணர்வை, ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு இடத்திலும் காண்பீர்கள்.

கே: குருஜி! நாம் எவ்வாறு  விழிப்புணர்வுக்கு சாட்சி நிலையில் இருப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். அது தானாகவே நிகழும்.மிக அமைதியாகவும் உங்களுக்குள்ளேயே நீங்கள் ஓய்வெடுக்கும் போது, அது தானாகவே நிகழும். இப்போதெல்லாம், பயிற்சி செய்பவர்கள் " என்ன செய்யவேண்டும்? என்ன செய்யவேண்டும்? என்று கேட்டு கொண்டிருக்கிறார்கள். குருமார்களும்இதைச் செய், அதைச் செய் "என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இரு சாராரும் களைப்படைந்து விடுகிறார்கள். ஆகவே நான் சொல்வது நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்! இளைப்பாறுங்கள்! ஓய்வேடுத்தாலே, செயல் திறனும் அமைதியும், முழுநிறைவடைதலும் ஏற்படும்.விஷ்ராம் (ஓய்வெடுத்தல்) என்பதிலேயே ராம் உள்ளது. ஞானத்தை அடையும்போது துக்கம் மறைகிறது. யோகப் பயிற்சியிலும் தியானத்திலும் துக்கம் மறையும்..வாழ்கை ஆனந்தமயமானது அநாவசியமாகக் கவலைப்பட்டு விட்டோம் என்று உணர்வீர்கள்.

கே: குருஜி! வாழ்கை சுலபமானதா? கடினமானதா? புத்த மதத்தில், " வாழ்கை கடினமானது என்பது முதல்  உண்மை " என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது என்கிறீர்கள். எது சரி? இரண்டுமே சரி என்று கூறிவிடாதீர்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஏன்? அதைத்தான் கூற விரும்புகிறேன். இரண்டுமே சரி. துன்பத்தில் இருப்பவனிடம் கேட்டால் அவன் வாழ்கை கடினமானது என்றுதான் கூறுவான். அவனிடம் வாழ்கை மகிழ்ச்சிகரமானது என்றால் துன்பத்தை அனுபவிக்கும் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவன் ஞான வழியில் சென்று அதை அடையும்போது எது துக்கம் என்று உணர்ந்து கொள்வான். துக்கம் மறைந்து விடும்.யோகாவும் தியானமும் உங்கள் வாழ்வின் துக்கத்தை நீக்கி விடும். வாழ்கை மகிழ்ச்சிகரமானது; அநாவசியமாகக் கவலைப்பட்டு விட்டோம் என்று உணர்வீர்கள்.

உங்கள் முந்தைய நாட்களில் நீங்கள் கவலைப்பட்டதெல்லாம் அனாவசியம் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீர்கள்? நேற்று பரீட்ச்சை முடிவுகள்  வெளியாயிருக்கின்றன. சிலதினங்களுக்கு முன்னர் தேர்சியடைவதைப் பற்றி  கவலைப்பட்டுக்கொண்டிருந்தீர்கள். இப்போது அனாவசியமாகக் கவலைப்பட்டு விட்டோம் என்று தோன்ற வில்லையா? ஆஷ்ரமத்தில் எல்லா மாணவர்களும் கீர்த்தியுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

கவலைப்படும் போது காலம் வீணாகிறது, மனம் தளர்வடைகிறது. காரியம் முடிவடையும் போது தான் அனாவசியமாக கவலைப்பட்டதை உணருகிறோம். ஆகவே மகிழ்ச்சி என்பதுதான் உண்மை. அது நமது ஒரு அங்கம்,  நமது இயல்பு. கவலைகள் என்பது ஒரு மேகக்கூட்டத்தை போல் கடந்து மறைந்து போகிறது.எது மாற்றம் இல்லாததோ அதுவே உண்மை.

கே: கடந்த பதினைந்து வருடங்களாக வரவு செலவை கட்டுக்குள் அடக்கி வாழ்கை நடத்த சிரமப்படுகிறேன். ஜோசியர் ஒரு பூஜை செய்தால் என் அதிர்ஷ்டம் மாறும் என்கிறார். ஆலோசனை கூறுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வரவை விட அதிகமாக செலவு செய்து வருகிறீர்கள். அதை குறைக்க ஒரு சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். பூஜைகள் சிறந்தவை தாம்.ஆனால் மிக அதிக அளவு வேண்டாம். தியானம் செய்யுங்கள். சத்சங்கத்தில் ஈடுபடுங்கள். ருத்ராபிஷேகம் மற்றும் அக்னி பூஜை செய்யுங்கள் அதன் மூலம் மனமும் சூழலும் சுத்தப்படும். சில சமயங்களில் அதிக அளவிலான பூஜைகள் செய்யுமாறு கூறுகிறார்கள். அவை தேவை இல்லை.

கே: நான் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவரைக் காதலிக்கிறேன். என் பெற்றோர்கள் வைதீகமானவர்கள். அவர்கள் மனமேற்கும்படி என்னால் முடிந்தவரை முயற்சி  செய்துவிட்டேன். ஆயினும் பயனில்லை. என்னுடைய தர்மம் என்ன? நான் எனக்காக வாழ்வதா? அவர்களுக்காக வாழ்வதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சூட்ச்சமமாக செயல்படுங்கள். பலன்களைப் பற்றி ஆராயுங்கள். அவர்கள் பிடிவாதமாக இருந்தால், மீறும் போது அவர்களை துன்பப்படுத்துகிறீர்கள். உங்களாலும் சந்தோஷமாக இருக்க முடியாது. இரு பக்கத்திலும் கஷ்டமே. அவர்களை புரிய வைக்க பாருங்கள். பலன்களை ஆராய்ந்து கொள்ளுங்கள்.

கே: ஆனால் தர்மம் என்ன கூறுகிறது. மகளான நான் அவர்களை துன்பப்படுத்தக்கூடாது. அதே சமயம் என் வாழ்கையையும் நான் பார்க்க வேண்டும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் கூறுவது சரி. ஒரே மகளான நீங்கள் உங்கள் பெற்றோரை கவனிக்க வேண்டும். பல மகள்களில் ஒருத்தியானாலும் இதில் சிரமம் உள்ளது. ஆகவே, உங்கள் திறமை அனைத்தையும் பயன் படுத்தி உங்கள் பெற்றோர் மனதை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதில் பயனில்லை என்றால், மற்றவர் சந்தோஷத்திற்க்காக நாம் சில தியாகங்களை செய்ய வேண்டியது தான்.

கே: தொழில் முறையில் கர்வம் பிடித்தவர்களை எவ்வாறு சமாளிப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இரண்டு வழிகளில் செயல்படுத்தலாம். ஒன்று அவர்களை முழுவதுமாக தவிர்த்துவிடுவது. இரண்டாவது அவர்கள் கர்வத்தை மேலும் ஏற்றிவிடுவது." ! நீங்கள் மிக நல்லவர். திறமையானவர். எவ்வாறு இவ்வளவு  நன்றாக செயல்படுகிறீர்கள்! எனக்கும் கற்றுத்தாருங்கள் " என்றெல்லாம் அவர்களைப் புகழுங்கள். இப்புகழுரயினால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை. ஆனால் கர்விகள் இதனால் மகிழ்ச்சியடைந்து நன்கு பணி புரிவார்கள். நல்லவர்களுக்குப் பாராட்டு தேவையில்லை. தாமாகவே நன்கு வேலை செய்வார்கள் . ஆனால் கர்வமான முட்டாள்களைப் புகழ்ந்துதான் வேலை வாங்க வேண்டும். இத்தகைய கர்விகள் பின்னர் கஷ்டப்படுவார். அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? முற்காலத்தில் உள்ளது போல் கர்வமானவர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவது என்பது இப்போது இயலாத செயல். அகந்தை அதிகமாகிவிட்டது. ஆகவே புகழுங்கள்! ஏதோ ஒரு சமயம் அவர்கள் உணருவார்கள்.

கே: குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் அது போல் வாழ்ந்து காட்டுவதன் மூலம்.

கே: நான் ஆஸ்ரமத்தில் வந்து தங்க விரும்புகிறேன். நான் என்னுடைய கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றை நிறைவேற்றி விட்டேன். ஆஸ்ரமத்தில் தங்கி, பயிற்சி, தொண்டு, மற்றும் சத்சங்கத்தில் ஈடுபட விரும்புகிறேன். ஆனால் என்னுடைய உறவினரும், மாமனார் மாமியார் வீட்டினரும் அதை மறுக்கிறார்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த உலகமே என் ஆஸ்ரமம் என்பது உங்களுக்குத் தெரியுமா?நீங்கள் எங்கிருந்தாலும் அது என் ஆஸ்ரமம். மேலும் நான் எப்போதும் இங்கு தங்கி இருப்பது இல்லை. நிறைய சுற்றுப்பயணம் செல்கிறேன். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இங்கு வந்திருக்கிறேன். இரண்டு வாரங்களே இருப்பேன். பின்னர் மீண்டும் பயணம் முடித்து திரும்புவேன்.அன்பினால் உங்கள் உறவினரையும் புகுந்த வீட்டினரையும் வெற்றி காணுங்கள். உங்கள் பயிற்சியையும், சேவையும் தொடருங்கள். உங்கள் வீட்டையே ஆஸ்ரமம் ஆக்குங்கள்.. ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறைகளோ இங்கு வாருங்கள். ஆஸ்ரமத்திற்கே போய் இருக்கிறேன் என்றால், உங்கள் புகுந்த வீட்டினர் " இவள் எங்கள் மருமகள்; வீட்டை விட்டு செல்ல விரும்புகிறாள் என்று மனம் வருந்துவார்கள். ஆகவே அவ்வாறு செய்யாதீர்கள்.சரியா?

கே: நான் ஒவ்வொரு முறை ஆஸ்ரமதிற்கு வரும்போதும் என் வீட்டினருக்கு தெரிவிப்பதில்லை. கல்லூரியிலும் பொய்கள் கூறிவிட்டு வருகிறேன். இதை சாமர்த்தியமாக செய்து வருகிறேன். ஆனால் சில சமயங்களில் இவ்வாறு பொய் சொல்வது சலிப்பாக இருக்கிறது

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை! நீங்கள் பொய்கள் சொல்லக்கூடாது. நீங்கள் அடிக்கடி இங்கு வர வேண்டியது இல்லை. எங்கிருந்தாலும், தினமும் தியானம் செய்யுங்கள். இப்போது கூட இந்த சத்சங்கத்தை வலைத்தள ஒளிபரப்பு மூலம் உலகின் பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கானோர் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஓரிரு முறை வந்தால் பரவாயில்லை. தினமும் வருவதென்றால் நிச்சயம் மறுப்பார்கள். நான் அவர்கள் நிலையில் இருந்தால் மறுப்புத் தெரிவிப்பேன். எனவே இவ்வாறு செய்யாதீர்கள். படிப்பிலும், பின்னர் உங்கள் பணியிலும் கவனம் செலுத்துங்கள். சரியா? என்னை இங்கு வந்து பார்ப்பதை விட, நான் கூறுபவைகளை பின்பற்றுவது முக்கியமானது.

உங்கள் குறைகளை எல்லாம் நீக்குவதற்கென ஒருவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். இந்த நம்பிக்கை கொண்டிருந்தாலே எல்லாம் நன்மையாக முன்னேறிச் செல்லும்உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை நம்பிக்கையுடன் சமர்ப்பணம் செய்யுங்கள்

கே: நீ எங்களிடம் பொய் சொல்லி எங்களை வருத்தப்படுத்தி விட்டு வாழும் கலை நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் அதன் பலன் உனக்குக் கிடைக்காது என்று என் அம்மா சொல்கிறார்கள். அது உண்மையா?

ஸ்ரீ  ஸ்ரீ  ரவிசங்கர்: ஆம். ஒரு வகையில் அது சரியே.

கே: ஆனால் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. கிரியாவும் செய்வதில்லை. நான் கட்டாயப் படுத்தினாலும் கிரியா செய்வதில்லை. குருஜி, தயவு செய்து என் அப்பா அம்மா இருவரையும்  பார்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்ரீ  ஸ்ரீ ரவிசங்கர்: இப்பொழுது உங்கள் வேலையை என்னிடம் கொடுத்து விட்டீர்கள் இல்லையா? நீங்கள் தானே அவர்களை பார்த்து கொள்ள வேண்டும்? எப்படியோ, நான் என் வேலையை செய்கிறேன். இது தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் என்னிடம்"குருஜி இதை செய்யுங்கள்", குருஜி, அதை செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்நான் எல்லா இடங்களிலிருந்தும் உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்

கே: மற்றவர்களுடைய தவறுகளைப் பார்க்கும்போது, நான்  கர்வம் படைத்தவனாகிறேன்  என்னுடைய தவறுகளை பார்க்கும்போது என்னுடைய ஈகோ (தான் என்னும் முனைப்பு)  காயமடைகிறது. நான் என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்கள் குறைகளை கவனித்த பின் அவற்றை நீக்குவதற்காக யாரோ ஒருவர் இருக்கின்றார் என்று புரிந்து கொள்ளுங்கள். இந்த நம்பிக்கை  கொண்டிருந்தாலே எல்லாம் நன்மையாக முன்னேறிச் செல்லும். உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை நம்பிக்கையுடன் "இவையெல்லாம் என் குறைகள். நான் இவைகளை உங்களிடம் அர்ப்பணம் செய்கிறேன்." என்று சமர்ப்பணம் செய்யுங்கள்

சமர்ப்பணம் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், நம் குறைகளை நீக்க ஒருவர் இருக்கின்றார் என்பதை வெறுமனே உணருங்கள் போதும். பள்ளி செல்லும் ஒரு மாணவன் தனக்கு எண்களை கூட்டத்தெரியாது  என்பதை உணர்ந்திருந்தாலும் தன் ஆசிரியர் தனக்குச் சொல்லி தருவார் என்று நம்புவதை போல் நம்பிக்கை கொள்ளுங்கள். முதல் பக்கத்தை திறக்கும் போது அதில் எழுதி இருப்பது எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும்ஆசிரியர் என்று ஒருவர் இருப்பதனால் அவனால் அந்த புத்தகத்தை புரிந்துகொண்டு விட முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றான்

நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கை என்னும் வண்டி மேலே செல்லாது. வாழ்க்கை என்னும் ஊர்திக்கு நம்பிக்கை என்பதுதான் எரிபொருள் போன்றது. அதுவும் இப்பொழுது மிகவும் விலை உயர்ந்ததாகி விட்டது. அப்படி விலை உயர்ந்ததாக மாறி விடாமல் நீங்கள் பார்த்துக்கொண்டால், வாழ்க்கை என்னும் ஊர்தி மேலே முன்னேறி சென்று தன் இலக்கை அடைய முடியும்.

கே: அனைத்துமே இறைவனால் படைக்கப்பட்டவை என்றால் இறைவனைப் படைத்தது யார்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை என்று உங்களுக்கு யார் 
சொன்னது? படைத்தல், அழித்தல் என்னும் கருத்துக்களில் ஏன் முடங்கி விடுகிறீர்கள்என்ன இருக்கின்றதோ அது இருக்கின்றது. இறைவனை விவரிப்பதற்கு "சுயம்பு" என்னும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை உள்ளது. அதற்கு தானாகவே உருவானது என்று பொருள். அது எப்போதுமே இருப்பது. அது இருக்கின்றது. அவ்வளவுதான்

நாம் சூரியன் உதித்தது என்று சொல்கிறோம். நாம் சூரியன் எழுவதையும் மறைவதையும் பார்க்கின்றோம். ஆனால் உண்மையில் சூரியன் எழுவதுமில்லை; மறைவதுமில்லை. சூரியன் எப்போதும் அங்கே இருக்கின்றது. ஆனால் சில நேரங்களில் அது நமக்குத் தெரிவதில்லை  என்பதனால் அது அங்கே இல்லை என்று ஆகிவிடாது. ஆகவே பிறப்பு அல்லது தோற்றம் என்று ஒன்று இல்லாமல் எப்போதும் இருக்கும் ஒன்றே இறைவன் ஆகும்.

கே: கோவிலில் இருக்கும் கலசத்தின் முக்கியத்துவம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வாஸ்து சாஸ்திரத்தின் படியும், கட்டடக்கலை நுணுக்கங்களின் படியும் கலசம் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மின் ஓட்டத்தினையும் மற்றும் பிற அதிர்வுகளையும் சமன்படுத்துகின்றது. அது மேலும் தெய்வீக ஆற்றலின் குறியீடாகவும் அமைகின்றது. அது பிரபஞ்சத்தின் சக்தியை பூமிக்கு ஈர்க்கும் ஒரு மார்க்கமாகவும் உள்ளது.

கே: நான் இருபத்து ஐந்து வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் இன்னும் எனக்கு சுய மரியாதை என்பதற்கும் தான் என்னும் எண்ணத்திற்கும் வித்தியாசம் புரியவில்லை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்கள் சுய மரியாதை என்பதை யாரும் உங்களிடமிருந்து பறிக்க முடியாது. ஆனால் தான் என்னும் அகங்காரம் என்பது மற்றவர்களைச் சார்ந்தது. தான் என்னும் எண்ணம் இருக்கும் போதெல்லாம்,அது உங்களை பாதித்து கவலையை உண்டாக்கும். ஆனால் சுய மரியாதை என்பது எப்போதும் அமைதியையே உண்டாக்கும். புரிந்ததா? அறியாமை யிலிருக்கும் முட்டாள்கள் பலர் சமுதாயத்தில் மக்களை தூற்றுவார்கள். நீங்கள் எவ்வளவு தான் நல்லது செய்தாலும் உங்களை பாராட்டாமல் தூற்றிப் பேசும் மக்கள் எப்போதும் இருப்பார்கள். நாம் அவர்களை பற்றி கவலைப் படக்கூடாது

கே: நான் என்னுடைய பதற்றம் அல்லது இறுக்கம் காரணமாக என் வேலையை தொடர்ந்து செய்ய முடியவில்லை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் எப்போதும் ஒரு புன்சிரிப்புடன் உங்கள் வேலையை செய்யுங்கள்.மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. யாராவது ஏதாவது சொன்னார்கள் என்பதற்காக உங்கள் வேலையை விட்டு விலக வேண்டாம். ஒரு அரசனைப்போல் நடந்து கொள்ளுங்கள்யாராவது உங்களை ஏதேனும் தவறு செய்யும்படி சொன்னால் நீங்கள் அதை செய்யமுடியாது  என்று பணிவாகச் சொல்லுங்கள்."தவறு செய்து விட்டு சிறைக்குச் செல்ல நான் விரும்பவில்லை" என்று சொல்லிவிட்டு நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள்பின்னால் உங்களை சங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய எந்த ஒரு தவறையும் செய்ய மாட்டேன்  என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நாம் இவ்வாறு நம்மை நாமே மதித்து நடப்பது தான் சுய மரியாதை.

கே: உலகெங்கிலும் கோடிக்கணக்கான ஹிந்துக்கள் இருக்கின்றனர். ஹிந்துக் கடவுள்களும் பெண் தெய்வங்களும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். கடவுளுக்கு நம் மீது கோபமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை. கடவுள் கோபமாக இல்லை. சிலர் இது போன்ற செயல்களை செய்கிறார்கள். இதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஹிந்து மதத்தினை யாரும் இழிவுபடுத்த முடியாது. அப்படி செய்பவர்கள் தங்கள் அறியாமையை தான் வெளிப்படுத்துகிறார்கள்.  திரைப்படங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ யாராவது ஹிந்து மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால் நாம் அதைப் பற்றி கவலை கொள்ளக்கூடாது. ஹிந்து மதம் என்பது பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றது. அது தொடர்ந்து இருக்கும். எனவே  யாராவது ஹிந்து மதத்திற்கு எதிராக ஏதாவது சொன்னால் அதை அவர்களது அறியாமை அல்லது முட்டாள்தனம் என்று  எடுத்துக்  கொள்ளுங்கள். 

அப்படி இல்லாமல் நாம் கோபப்பட்டு  வாகனங்களை எரிப்பது, கல்லெறிவது, ஹிந்து மதத்திற்கு எதிராக பேசுபவர்களைத் தாக்குவது  போன்று  தவறான முறையில் பதிலடி கொடுத்தால், அது சமுதாயத்தில் ஹிந்து மதத்தின் மரியாதையை உயர்த்தாது. ஹிந்து மதத்தின் மரியாதை,  நம்முடைய நன்னடத்தை, நம் இளகிய மனம், நம் சேவை, பிறருக்கு அறிவு புகட்டுதல்  போன்றவற்றின் மூலம்தான் உயர்வடையும்.