வாழ்க்கை எனும் வாகனத்தின் எரிபொருள், நம்பிக்கை.


24
2012............................... பெங்களூர்,
மே



கே: குருஜி, நான் பெருமளவிற்கு பொருட்கள், ஆசைகள், படபடப்பு ஆகியவைகளிருந்து விடுபட்டு விட்டேன். ஆயினும், தங்கள் விஷயத்தில் என் தாகம் அதிகரித்துக்கொண்டே போகிறதே. இதற்குத் தீர்வு என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: பரவாயில்லை. பொருள்கூறு உலகியலிலிருந்து விடுபட்டு, தன்னுள் நோக்கும் நிலையில் இது நிகழக் கூடியது தான். இது வாழ்கையில், மந்த நிலையை அகற்றி சாரமுள்ளதாக ஆக்குகிறது. இல்லையெனில் வறண்ட துறவு நிலையாகி விடும். நாம் யாரையாவது  மிக அதிகமாக விரும்பினோமேயானால்தான் வாழ்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். யாரிடமுமே பற்று இல்லையெனில் அன்பும் மலராது, வாழ்வும் ரசமற்று இருக்கும்.  படிப்படியாக, நீங்கள் என்னிடம் காணும் தெய்வீக உணர்வை, ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு இடத்திலும் காண்பீர்கள்.

கே: குருஜி! நாம் எவ்வாறு  விழிப்புணர்வுக்கு சாட்சி நிலையில் இருப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். அது தானாகவே நிகழும்.மிக அமைதியாகவும் உங்களுக்குள்ளேயே நீங்கள் ஓய்வெடுக்கும் போது, அது தானாகவே நிகழும். இப்போதெல்லாம், பயிற்சி செய்பவர்கள் " என்ன செய்யவேண்டும்? என்ன செய்யவேண்டும்? என்று கேட்டு கொண்டிருக்கிறார்கள். குருமார்களும்இதைச் செய், அதைச் செய் "என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இரு சாராரும் களைப்படைந்து விடுகிறார்கள். ஆகவே நான் சொல்வது நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்! இளைப்பாறுங்கள்! ஓய்வேடுத்தாலே, செயல் திறனும் அமைதியும், முழுநிறைவடைதலும் ஏற்படும்.விஷ்ராம் (ஓய்வெடுத்தல்) என்பதிலேயே ராம் உள்ளது. ஞானத்தை அடையும்போது துக்கம் மறைகிறது. யோகப் பயிற்சியிலும் தியானத்திலும் துக்கம் மறையும்..வாழ்கை ஆனந்தமயமானது அநாவசியமாகக் கவலைப்பட்டு விட்டோம் என்று உணர்வீர்கள்.

கே: குருஜி! வாழ்கை சுலபமானதா? கடினமானதா? புத்த மதத்தில், " வாழ்கை கடினமானது என்பது முதல்  உண்மை " என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தாங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானது என்கிறீர்கள். எது சரி? இரண்டுமே சரி என்று கூறிவிடாதீர்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: ஏன்? அதைத்தான் கூற விரும்புகிறேன். இரண்டுமே சரி. துன்பத்தில் இருப்பவனிடம் கேட்டால் அவன் வாழ்கை கடினமானது என்றுதான் கூறுவான். அவனிடம் வாழ்கை மகிழ்ச்சிகரமானது என்றால் துன்பத்தை அனுபவிக்கும் அவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அவன் ஞான வழியில் சென்று அதை அடையும்போது எது துக்கம் என்று உணர்ந்து கொள்வான். துக்கம் மறைந்து விடும்.யோகாவும் தியானமும் உங்கள் வாழ்வின் துக்கத்தை நீக்கி விடும். வாழ்கை மகிழ்ச்சிகரமானது; அநாவசியமாகக் கவலைப்பட்டு விட்டோம் என்று உணர்வீர்கள்.

உங்கள் முந்தைய நாட்களில் நீங்கள் கவலைப்பட்டதெல்லாம் அனாவசியம் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறீர்கள்? நேற்று பரீட்ச்சை முடிவுகள்  வெளியாயிருக்கின்றன. சிலதினங்களுக்கு முன்னர் தேர்சியடைவதைப் பற்றி  கவலைப்பட்டுக்கொண்டிருந்தீர்கள். இப்போது அனாவசியமாகக் கவலைப்பட்டு விட்டோம் என்று தோன்ற வில்லையா? ஆஷ்ரமத்தில் எல்லா மாணவர்களும் கீர்த்தியுடன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

கவலைப்படும் போது காலம் வீணாகிறது, மனம் தளர்வடைகிறது. காரியம் முடிவடையும் போது தான் அனாவசியமாக கவலைப்பட்டதை உணருகிறோம். ஆகவே மகிழ்ச்சி என்பதுதான் உண்மை. அது நமது ஒரு அங்கம்,  நமது இயல்பு. கவலைகள் என்பது ஒரு மேகக்கூட்டத்தை போல் கடந்து மறைந்து போகிறது.எது மாற்றம் இல்லாததோ அதுவே உண்மை.

கே: கடந்த பதினைந்து வருடங்களாக வரவு செலவை கட்டுக்குள் அடக்கி வாழ்கை நடத்த சிரமப்படுகிறேன். ஜோசியர் ஒரு பூஜை செய்தால் என் அதிர்ஷ்டம் மாறும் என்கிறார். ஆலோசனை கூறுங்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வரவை விட அதிகமாக செலவு செய்து வருகிறீர்கள். அதை குறைக்க ஒரு சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். பூஜைகள் சிறந்தவை தாம்.ஆனால் மிக அதிக அளவு வேண்டாம். தியானம் செய்யுங்கள். சத்சங்கத்தில் ஈடுபடுங்கள். ருத்ராபிஷேகம் மற்றும் அக்னி பூஜை செய்யுங்கள் அதன் மூலம் மனமும் சூழலும் சுத்தப்படும். சில சமயங்களில் அதிக அளவிலான பூஜைகள் செய்யுமாறு கூறுகிறார்கள். அவை தேவை இல்லை.

கே: நான் வேறு ஜாதியை சேர்ந்த ஒருவரைக் காதலிக்கிறேன். என் பெற்றோர்கள் வைதீகமானவர்கள். அவர்கள் மனமேற்கும்படி என்னால் முடிந்தவரை முயற்சி  செய்துவிட்டேன். ஆயினும் பயனில்லை. என்னுடைய தர்மம் என்ன? நான் எனக்காக வாழ்வதா? அவர்களுக்காக வாழ்வதா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: சூட்ச்சமமாக செயல்படுங்கள். பலன்களைப் பற்றி ஆராயுங்கள். அவர்கள் பிடிவாதமாக இருந்தால், மீறும் போது அவர்களை துன்பப்படுத்துகிறீர்கள். உங்களாலும் சந்தோஷமாக இருக்க முடியாது. இரு பக்கத்திலும் கஷ்டமே. அவர்களை புரிய வைக்க பாருங்கள். பலன்களை ஆராய்ந்து கொள்ளுங்கள்.

கே: ஆனால் தர்மம் என்ன கூறுகிறது. மகளான நான் அவர்களை துன்பப்படுத்தக்கூடாது. அதே சமயம் என் வாழ்கையையும் நான் பார்க்க வேண்டும்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் கூறுவது சரி. ஒரே மகளான நீங்கள் உங்கள் பெற்றோரை கவனிக்க வேண்டும். பல மகள்களில் ஒருத்தியானாலும் இதில் சிரமம் உள்ளது. ஆகவே, உங்கள் திறமை அனைத்தையும் பயன் படுத்தி உங்கள் பெற்றோர் மனதை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதில் பயனில்லை என்றால், மற்றவர் சந்தோஷத்திற்க்காக நாம் சில தியாகங்களை செய்ய வேண்டியது தான்.

கே: தொழில் முறையில் கர்வம் பிடித்தவர்களை எவ்வாறு சமாளிப்பது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இரண்டு வழிகளில் செயல்படுத்தலாம். ஒன்று அவர்களை முழுவதுமாக தவிர்த்துவிடுவது. இரண்டாவது அவர்கள் கர்வத்தை மேலும் ஏற்றிவிடுவது." ! நீங்கள் மிக நல்லவர். திறமையானவர். எவ்வாறு இவ்வளவு  நன்றாக செயல்படுகிறீர்கள்! எனக்கும் கற்றுத்தாருங்கள் " என்றெல்லாம் அவர்களைப் புகழுங்கள். இப்புகழுரயினால் நீங்கள் எதையும் இழக்கப்போவதில்லை. ஆனால் கர்விகள் இதனால் மகிழ்ச்சியடைந்து நன்கு பணி புரிவார்கள். நல்லவர்களுக்குப் பாராட்டு தேவையில்லை. தாமாகவே நன்கு வேலை செய்வார்கள் . ஆனால் கர்வமான முட்டாள்களைப் புகழ்ந்துதான் வேலை வாங்க வேண்டும். இத்தகைய கர்விகள் பின்னர் கஷ்டப்படுவார். அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? முற்காலத்தில் உள்ளது போல் கர்வமானவர்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்துவது என்பது இப்போது இயலாத செயல். அகந்தை அதிகமாகிவிட்டது. ஆகவே புகழுங்கள்! ஏதோ ஒரு சமயம் அவர்கள் உணருவார்கள்.

கே: குழந்தைகளை நல்லொழுக்கத்துடன் வளர்ப்பது எப்படி?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் அது போல் வாழ்ந்து காட்டுவதன் மூலம்.

கே: நான் ஆஸ்ரமத்தில் வந்து தங்க விரும்புகிறேன். நான் என்னுடைய கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றை நிறைவேற்றி விட்டேன். ஆஸ்ரமத்தில் தங்கி, பயிற்சி, தொண்டு, மற்றும் சத்சங்கத்தில் ஈடுபட விரும்புகிறேன். ஆனால் என்னுடைய உறவினரும், மாமனார் மாமியார் வீட்டினரும் அதை மறுக்கிறார்கள்.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இந்த உலகமே என் ஆஸ்ரமம் என்பது உங்களுக்குத் தெரியுமா?நீங்கள் எங்கிருந்தாலும் அது என் ஆஸ்ரமம். மேலும் நான் எப்போதும் இங்கு தங்கி இருப்பது இல்லை. நிறைய சுற்றுப்பயணம் செல்கிறேன். இரண்டு மாதங்களுக்குப் பிறகு இங்கு வந்திருக்கிறேன். இரண்டு வாரங்களே இருப்பேன். பின்னர் மீண்டும் பயணம் முடித்து திரும்புவேன்.அன்பினால் உங்கள் உறவினரையும் புகுந்த வீட்டினரையும் வெற்றி காணுங்கள். உங்கள் பயிற்சியையும், சேவையும் தொடருங்கள். உங்கள் வீட்டையே ஆஸ்ரமம் ஆக்குங்கள்.. ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறைகளோ இங்கு வாருங்கள். ஆஸ்ரமத்திற்கே போய் இருக்கிறேன் என்றால், உங்கள் புகுந்த வீட்டினர் " இவள் எங்கள் மருமகள்; வீட்டை விட்டு செல்ல விரும்புகிறாள் என்று மனம் வருந்துவார்கள். ஆகவே அவ்வாறு செய்யாதீர்கள்.சரியா?

கே: நான் ஒவ்வொரு முறை ஆஸ்ரமதிற்கு வரும்போதும் என் வீட்டினருக்கு தெரிவிப்பதில்லை. கல்லூரியிலும் பொய்கள் கூறிவிட்டு வருகிறேன். இதை சாமர்த்தியமாக செய்து வருகிறேன். ஆனால் சில சமயங்களில் இவ்வாறு பொய் சொல்வது சலிப்பாக இருக்கிறது

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை! நீங்கள் பொய்கள் சொல்லக்கூடாது. நீங்கள் அடிக்கடி இங்கு வர வேண்டியது இல்லை. எங்கிருந்தாலும், தினமும் தியானம் செய்யுங்கள். இப்போது கூட இந்த சத்சங்கத்தை வலைத்தள ஒளிபரப்பு மூலம் உலகின் பல பகுதிகளில் உள்ள லட்சக்கணக்கானோர் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஓரிரு முறை வந்தால் பரவாயில்லை. தினமும் வருவதென்றால் நிச்சயம் மறுப்பார்கள். நான் அவர்கள் நிலையில் இருந்தால் மறுப்புத் தெரிவிப்பேன். எனவே இவ்வாறு செய்யாதீர்கள். படிப்பிலும், பின்னர் உங்கள் பணியிலும் கவனம் செலுத்துங்கள். சரியா? என்னை இங்கு வந்து பார்ப்பதை விட, நான் கூறுபவைகளை பின்பற்றுவது முக்கியமானது.

உங்கள் குறைகளை எல்லாம் நீக்குவதற்கென ஒருவர் இருக்கின்றார் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். இந்த நம்பிக்கை கொண்டிருந்தாலே எல்லாம் நன்மையாக முன்னேறிச் செல்லும்உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை நம்பிக்கையுடன் சமர்ப்பணம் செய்யுங்கள்

கே: நீ எங்களிடம் பொய் சொல்லி எங்களை வருத்தப்படுத்தி விட்டு வாழும் கலை நிகழ்ச்சிகளுக்குச் சென்றால் அதன் பலன் உனக்குக் கிடைக்காது என்று என் அம்மா சொல்கிறார்கள். அது உண்மையா?

ஸ்ரீ  ஸ்ரீ  ரவிசங்கர்: ஆம். ஒரு வகையில் அது சரியே.

கே: ஆனால் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. கிரியாவும் செய்வதில்லை. நான் கட்டாயப் படுத்தினாலும் கிரியா செய்வதில்லை. குருஜி, தயவு செய்து என் அப்பா அம்மா இருவரையும்  பார்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்ரீ  ஸ்ரீ ரவிசங்கர்: இப்பொழுது உங்கள் வேலையை என்னிடம் கொடுத்து விட்டீர்கள் இல்லையா? நீங்கள் தானே அவர்களை பார்த்து கொள்ள வேண்டும்? எப்படியோ, நான் என் வேலையை செய்கிறேன். இது தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் என்னிடம்"குருஜி இதை செய்யுங்கள்", குருஜி, அதை செய்யுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்நான் எல்லா இடங்களிலிருந்தும் உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறேன்

கே: மற்றவர்களுடைய தவறுகளைப் பார்க்கும்போது, நான்  கர்வம் படைத்தவனாகிறேன்  என்னுடைய தவறுகளை பார்க்கும்போது என்னுடைய ஈகோ (தான் என்னும் முனைப்பு)  காயமடைகிறது. நான் என்ன செய்வது?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்கள் குறைகளை கவனித்த பின் அவற்றை நீக்குவதற்காக யாரோ ஒருவர் இருக்கின்றார் என்று புரிந்து கொள்ளுங்கள். இந்த நம்பிக்கை  கொண்டிருந்தாலே எல்லாம் நன்மையாக முன்னேறிச் செல்லும். உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை நம்பிக்கையுடன் "இவையெல்லாம் என் குறைகள். நான் இவைகளை உங்களிடம் அர்ப்பணம் செய்கிறேன்." என்று சமர்ப்பணம் செய்யுங்கள்

சமர்ப்பணம் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால், நம் குறைகளை நீக்க ஒருவர் இருக்கின்றார் என்பதை வெறுமனே உணருங்கள் போதும். பள்ளி செல்லும் ஒரு மாணவன் தனக்கு எண்களை கூட்டத்தெரியாது  என்பதை உணர்ந்திருந்தாலும் தன் ஆசிரியர் தனக்குச் சொல்லி தருவார் என்று நம்புவதை போல் நம்பிக்கை கொள்ளுங்கள். முதல் பக்கத்தை திறக்கும் போது அதில் எழுதி இருப்பது எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும்ஆசிரியர் என்று ஒருவர் இருப்பதனால் அவனால் அந்த புத்தகத்தை புரிந்துகொண்டு விட முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கின்றான்

நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கை என்னும் வண்டி மேலே செல்லாது. வாழ்க்கை என்னும் ஊர்திக்கு நம்பிக்கை என்பதுதான் எரிபொருள் போன்றது. அதுவும் இப்பொழுது மிகவும் விலை உயர்ந்ததாகி விட்டது. அப்படி விலை உயர்ந்ததாக மாறி விடாமல் நீங்கள் பார்த்துக்கொண்டால், வாழ்க்கை என்னும் ஊர்தி மேலே முன்னேறி சென்று தன் இலக்கை அடைய முடியும்.

கே: அனைத்துமே இறைவனால் படைக்கப்பட்டவை என்றால் இறைவனைப் படைத்தது யார்?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை என்று உங்களுக்கு யார் 
சொன்னது? படைத்தல், அழித்தல் என்னும் கருத்துக்களில் ஏன் முடங்கி விடுகிறீர்கள்என்ன இருக்கின்றதோ அது இருக்கின்றது. இறைவனை விவரிப்பதற்கு "சுயம்பு" என்னும் ஒரு குறிப்பிட்ட வார்த்தை உள்ளது. அதற்கு தானாகவே உருவானது என்று பொருள். அது எப்போதுமே இருப்பது. அது இருக்கின்றது. அவ்வளவுதான்

நாம் சூரியன் உதித்தது என்று சொல்கிறோம். நாம் சூரியன் எழுவதையும் மறைவதையும் பார்க்கின்றோம். ஆனால் உண்மையில் சூரியன் எழுவதுமில்லை; மறைவதுமில்லை. சூரியன் எப்போதும் அங்கே இருக்கின்றது. ஆனால் சில நேரங்களில் அது நமக்குத் தெரிவதில்லை  என்பதனால் அது அங்கே இல்லை என்று ஆகிவிடாது. ஆகவே பிறப்பு அல்லது தோற்றம் என்று ஒன்று இல்லாமல் எப்போதும் இருக்கும் ஒன்றே இறைவன் ஆகும்.

கே: கோவிலில் இருக்கும் கலசத்தின் முக்கியத்துவம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: வாஸ்து சாஸ்திரத்தின் படியும், கட்டடக்கலை நுணுக்கங்களின் படியும் கலசம் முக்கியத்துவம் வாய்ந்தது. அது மின் ஓட்டத்தினையும் மற்றும் பிற அதிர்வுகளையும் சமன்படுத்துகின்றது. அது மேலும் தெய்வீக ஆற்றலின் குறியீடாகவும் அமைகின்றது. அது பிரபஞ்சத்தின் சக்தியை பூமிக்கு ஈர்க்கும் ஒரு மார்க்கமாகவும் உள்ளது.

கே: நான் இருபத்து ஐந்து வருடங்களாக வேலை செய்து கொண்டிருக்கின்றேன். ஆனால் இன்னும் எனக்கு சுய மரியாதை என்பதற்கும் தான் என்னும் எண்ணத்திற்கும் வித்தியாசம் புரியவில்லை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: உங்கள் சுய மரியாதை என்பதை யாரும் உங்களிடமிருந்து பறிக்க முடியாது. ஆனால் தான் என்னும் அகங்காரம் என்பது மற்றவர்களைச் சார்ந்தது. தான் என்னும் எண்ணம் இருக்கும் போதெல்லாம்,அது உங்களை பாதித்து கவலையை உண்டாக்கும். ஆனால் சுய மரியாதை என்பது எப்போதும் அமைதியையே உண்டாக்கும். புரிந்ததா? அறியாமை யிலிருக்கும் முட்டாள்கள் பலர் சமுதாயத்தில் மக்களை தூற்றுவார்கள். நீங்கள் எவ்வளவு தான் நல்லது செய்தாலும் உங்களை பாராட்டாமல் தூற்றிப் பேசும் மக்கள் எப்போதும் இருப்பார்கள். நாம் அவர்களை பற்றி கவலைப் படக்கூடாது

கே: நான் என்னுடைய பதற்றம் அல்லது இறுக்கம் காரணமாக என் வேலையை தொடர்ந்து செய்ய முடியவில்லை

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நீங்கள் எப்போதும் ஒரு புன்சிரிப்புடன் உங்கள் வேலையை செய்யுங்கள்.மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. யாராவது ஏதாவது சொன்னார்கள் என்பதற்காக உங்கள் வேலையை விட்டு விலக வேண்டாம். ஒரு அரசனைப்போல் நடந்து கொள்ளுங்கள்யாராவது உங்களை ஏதேனும் தவறு செய்யும்படி சொன்னால் நீங்கள் அதை செய்யமுடியாது  என்று பணிவாகச் சொல்லுங்கள்."தவறு செய்து விட்டு சிறைக்குச் செல்ல நான் விரும்பவில்லை" என்று சொல்லிவிட்டு நீங்கள் உங்கள் வேலையை தொடர்ந்து செய்யுங்கள்பின்னால் உங்களை சங்கடத்தில் ஆழ்த்தக்கூடிய எந்த ஒரு தவறையும் செய்ய மாட்டேன்  என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். நாம் இவ்வாறு நம்மை நாமே மதித்து நடப்பது தான் சுய மரியாதை.

கே: உலகெங்கிலும் கோடிக்கணக்கான ஹிந்துக்கள் இருக்கின்றனர். ஹிந்துக் கடவுள்களும் பெண் தெய்வங்களும் இழிவுபடுத்தப்படுகிறார்கள். கடவுளுக்கு நம் மீது கோபமா?

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: இல்லை. கடவுள் கோபமாக இல்லை. சிலர் இது போன்ற செயல்களை செய்கிறார்கள். இதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஹிந்து மதத்தினை யாரும் இழிவுபடுத்த முடியாது. அப்படி செய்பவர்கள் தங்கள் அறியாமையை தான் வெளிப்படுத்துகிறார்கள்.  திரைப்படங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ யாராவது ஹிந்து மதத்திற்கு எதிராக நடந்து கொண்டால் நாம் அதைப் பற்றி கவலை கொள்ளக்கூடாது. ஹிந்து மதம் என்பது பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றது. அது தொடர்ந்து இருக்கும். எனவே  யாராவது ஹிந்து மதத்திற்கு எதிராக ஏதாவது சொன்னால் அதை அவர்களது அறியாமை அல்லது முட்டாள்தனம் என்று  எடுத்துக்  கொள்ளுங்கள். 

அப்படி இல்லாமல் நாம் கோபப்பட்டு  வாகனங்களை எரிப்பது, கல்லெறிவது, ஹிந்து மதத்திற்கு எதிராக பேசுபவர்களைத் தாக்குவது  போன்று  தவறான முறையில் பதிலடி கொடுத்தால், அது சமுதாயத்தில் ஹிந்து மதத்தின் மரியாதையை உயர்த்தாது. ஹிந்து மதத்தின் மரியாதை,  நம்முடைய நன்னடத்தை, நம் இளகிய மனம், நம் சேவை, பிறருக்கு அறிவு புகட்டுதல்  போன்றவற்றின் மூலம்தான் உயர்வடையும்.