நீங்கள் எதை உபதேசம் செய்கிறீர்களோ அதை கடைப்பிடிக்க வேண்டும்

ஆகஸ்ட் 30, 2014

டெல்லி, இந்தியா


(ஜாமியா மில்லியா இஸ்லாமியா  பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் ஒரு உரையாடல் ஏற்பாடு செய்திருந்தனர். ஸ்ரீ ஸ்ரீ உலக அமைதி மற்றும் ஒற்றுமை பற்றி பேசினார். அதைத் தொடர்ந்து தியானம் நடைபெற்றது. அதன் பிறகு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அடங்கிய சுமார் 400 பேர் ஸ்ரீ ஸ்ரீ அவர்களுடன் கேள்வி பதில் நேரத்தில் உரையாடினர்)

நீங்கள் அழகான மலர்க் கொத்துடன் என்னை இந்த மேடையில் வரவேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இனிய செயலின் மூலம் நான் உங்களுக்கு சொல்ல விரும்பியதை நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள். இந்த மலர்க் கொத்தை போலவே  நம்முடைய உலக சமுதாயமும் ஒரு மலர்க்கொத்தே. இங்கே சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்கள் உள்ளன. ஆகவே ஒரு மலர்க் கொத்து பல்வேறு மலர்களையும் பல்வேறு நிறங்களையும் கொண்டதாக உள்ளது. நாம் இதை மறந்து அனைத்து மலர்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது தான் பிரச்சினைகள் தொடங்குகின்றன. 

அமைதி உண்டாக வேண்டும் என்றால் தனி மனித அமைதி நிலவ வேண்டும். நான் அமைதியாக இல்லை என்றால் நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னால் அமைதியை பரப்ப இயலாது. தனி மனிதன் எப்போது அமைதியாக இருக்க முடியும்? அவனோ அல்லது அவளோ மன அழுத்தம் இன்றி இருக்கும் போது மட்டுமே அது இயலும். இன்று வீடுகள் எங்கும் இதே காட்சிகள் தான் நிலவுகின்றன. ஒரு வீட்டில் 5 அல்லது 10 பேர் ஒன்றாக வசிக்கிறார்கள் என்றால் ஒவ்வோருவரும் அவரவர்களுக்கான எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளுடன் கூடிய பிரத்தியேக உலகில் வாழுகின்றனர். அவர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றங்களோ அல்லது சாதாரணமாக புரிந்து கொள்ளுதல்களோ இல்லாது போகும் போது தான், சண்டை சச்சரவுகள் உண்டாகின்றன.   

நமக்குள்ளே அமைதியாகவும் ஆனந்தமாகவும் இல்லை என்றால், எப்படி அவற்றை வெளியே பரவச் செய்யலாம் என்று நினைக்க முடியும். நமக்குள்ளே அமைதியை உண்டாக்க நமக்கு என்ன தேவை. முதலாவதாக மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை அவசியம். வாழ்வில் மன மழுத்தம் ஏற்படுவது இயல்பே. மன அழுத்தம் என்றால் என்ன? நாம் அதை எப்போது உணருகின்றோம்? நாம் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாகவும், அதற்கான நேரம் மிக குறைவாகவும் இருக்கும் போதும் அல்லது அதை செய்வதற்கான சக்தி நம்மிடம் இல்லை என்று நினைக்கும் போதும் மன அழுத்தம் ஏற்படுவதை உணருகின்றோம்.  

அநேகமாக, வாழ்க்கையில் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு நீங்கள் உங்களுடைய தேவைகளையும் பொறுப்புகளையும் குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதை சமாளிக்கும் மாற்று வழி உங்கள் சக்தியை அதிகரித்துக் கொள்ளுவதே. நான் சக்தி என்று கூறுவது உடல் வலுவை அல்ல, அது மனதளவிலும் உணர்ச்சிரீதியாகவும் உங்கள் வலுவை குறிக்கின்றது. ஆகவே நாம் நம்முடைய வலிமையையும் சக்தியையும் அதிகரிப்பது என்று சிந்திக்க வேண்டும். நமக்குள்ளே நம்முடைய சக்தியை அதிகரிக்கும் பல நுட்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நுட்பங்களை உபயோகிப்பவர்கள் இந்த நாட்டில் அதிகம் பேர் இல்லை. மேலும் துரதிருஷ்டவசமாக அவர்கள் எல்லோரிடத்திலும் அதை பகிர்ந்து கொள்ளுவதில்ல.  

இந்தியாவில் நாம் பல மதங்களாலும், ஜாதிகளாலும் பிரிக்கப்பட்டிருக்கின்றோம். குடும்பத்திற்கு உள்ளேயே பேராசையினாலும் தனிப்பட்ட நோக்கங்களினாலும் நாம் பிரிக்கப் பட்டிருக்கின்றோம். மக்கள் "நான் இந்த நுட்பங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது"என்று  நினைக்கிறார்கள்.   இது தவறு. ஒருவர் ஏன் அவ்வாறு சொல்ல வேண்டும்? உண்மையில் நீங்கள் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தி மன அழுத்தத்தினை குறைக்க உதவி புரிகின்றதென்றால் நீங்கள் இதே பயிற்சியினை மற்றவர்களுக்கும் கற்பித்து அதன் மூலம்   அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் நாம் இந்த நுட்பங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள விடாமல் அவற்றை இரகசியமாக வைத்து விடுகின்றோம். 

ஆகவே நான் இவை, இவ்வாறு இருக்க வேண்டியவை அல்ல என்று சொன்னேன். ஒருவரது உடல் நலத்தையும்,வாழ்வையும் மேம்படுத்தக்கூடிய மூச்சுப்பயிற்சிகள், உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் போன்ற நுட்பங்கள் அனைவருக்கும் கற்பிக்கப்பட வேண்டும். சாமானிய மனிதன் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழவதற்கும், அவனை சுற்றியுள்ள மக்கள் அனைவருடனும் நல்லிணக்கத்தை நிலவுவதற்கும், உலகிலுள்ள மக்கள் ஒவ்வொருவரும் இவற்றை அறிந்து இந்த நுட்பங்களின்  பயனைப் பெறவேண்டும்.

இந்தியாவில் 'உலகம் முழுவதும் ஒரே குடும்பம்' என்று பொருள்படும் "வாசுதேவ குடும்பகம்" என்ற சொற்றொடரில் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். எப்போது உண்மையிலேயே ஒரே குடும்பமாக முடியும்? ஞானத்தை பரப்புவதன் மூலம் ஒவ்வொருவரும் அமைதி பெற்று அனைவரையும் சொந்தமாக அன்போடு அரவணைத்துக் கொள்ளும் போது தான் அது இயலும். 
நாம் உபதேசம் செய்வதற்கும் வாழ்வில் கடைபிடிப்பதற்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது. ஒருவர் தன்னுள் எதை நம்புகின்றாரோ அதையே வெளியில் கடைபிடிக்க வேண்டும். இந்த அணுகு முறை பெரும் ஆத்ம சக்தியை அளிக்கும். இதுவே மாபெரும் சக்தி.  இதனைப் பயன்படுத்தி நாம் வாழ்வில் வெற்றியை நோக்கி நடை போடலாம்.   

உங்களிடம் சொல்லிக்கொண்டும் நீங்கள் கவனித்து கொண்டும் இருக்கும் இக்கணத்தில் கூட    உங்களுக்குள் இருக்கும் மனம் "ஆம், இது சரி என்றோ அல்லது "இல்லை, இது சரியில்லை"     என்றோ தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆக, உங்களுக்குள்ளும் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது இல்லையா? இது மிகவும் முக்கியமானது. நாம் இதைப் பற்றி அறிந்திருப்பது அவசியம்.  

என்ன சொல்கின்றேனோ, நீங்கள் ஒத்துப் போகின்றீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை.  ஆனால் உங்கள் மனம் என்ன சொல்கின்றதோ அதை நீங்கள் ஒத்துக் கொள்கின்றீர்களா? அதுவே முக்கியம். இதுவே விழிப்புணர்வு என்பதன் அர்த்தம் ஆகும். இதை நாம் விழித்தெழுந்த அறிவாற்றல் என்னும் பொருள் கொண்ட ' ப்ராஜ்னா ' என்றும் சொல்கின்றோம்.  நமக்கு உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் விழிப்புணர்வோடு உற்று நோக்குகின்றோம் என்பதே இதன் பொருள் ஆகும்.

கல்வியினுடைய உண்மையான அர்த்தமும் குறிக்கோளும் இந்த விழிப்புணர்வை அதிகரிப்பதே ஆகும். கல்வி என்பது வெறுமனே தகவல்களை சேகரிப்பது மட்டுமே அல்ல. கல்வி என்பது ஒரு மனிதனை மனிதாபிமானம் உள்ளவராக செய்வது. கல்வி ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக இருக்கும் திறன், இருவருக்குள் ஏற்படும் மோதல்களை வன்முறையற்ற அணுகு முறையில்  தீர்த்தல் மற்றும் அனைவருக்கும் நன்மை தரும் விதமாக பிரச்சினைகளுக்கு பரஸ்பர தீர்வு கொண்டு வருதல் ஆகியவற்றை அளிப்பது.     

சற்று சிந்திக்கவும்! இன்று இந்த உலகமெங்கும் அதிக சச்சரவும் கலவரமும் மிகுந்துள்ளன. காசா, ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் என்ன நடக்கின்றது என்று பாருங்கள்! இங்கெல்லாம் நடக்கும் சம்பவங்கள் பற்றி இந்திய ஊடகங்கள் விரிவான அறிக்கைகள் தராமல் இருப்பது நல்லதே.ஆனால் உலகத்தில் மற்ற ஊடகங்களில் இவைகளை பற்றிய மிக விரிவான அறிக்கைகள் வருகின்றன. அவை மனஅமைதியை கெடுக்கும். என்னைப் பொறுத்தவரை கல்வியினுடைய உண்மையான அர்த்தமும் குறிக்கோளும் இந்த விழிப்புணர்வை அதிகரிப்பதே ஆகும். கல்வி என்பது வெறுமனே தகவல்களை சேகரிப்பது மட்டுமே அல்ல. அதை ஒரு கணினி கூட செய்யக்கூடும்.  

தீர்க்கதரிசி முஹம்மத் ஒரு முறை கோரினார். " குளிர்ந்த காற்று கிழக்கு திசையில் இந்தியா) இருந்து வருவதை என்னால் உணர முடிகிறது. என்னால் அதற்கான காரணத்தை அறிய முடிகிறது. கிழக்கில் இருந்து வரும் காற்று சண்டையும் சச்சரவும் கலந்த சூடான காற்றாக இல்லாமல், எபோதுமே அமைதி ஒற்றுமை ஆகியவற்றால் ஆன குளிர்ந்த காற்று ஆகும்." இதை அவர் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். ஆனால் இன்றைக்கும் இந்த நிலையை பராமரிக்க நான் ஈடுபாடு கொண்டுள்ளேன்.

இந்த உலகமே பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரி நாடாக இந்தியா உருவாக வேண்டும். வேறுபட்ட மதங்களை பின் பற்றுபவர்களை எப்படி நம்மால் ஒன்று சேர்க்க முடியும்? உண்மையில் வேறுபட்ட மதங்களுக்கு இடையே இப்போதைக்கு எந்த மோதலும் இல்லை. தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும்போதோ அல்லது ஒருவருக்குள் மன அழுத்தம் இருக்கும் போதோ, அது வெளியில் நம்மை சுற்றி இருப்பவர்களிடம் மோதலை ஏற்படுத்துகிறது.இது பல குடும்பங்களிலும் நடக்கின்றது. குடும்பத்தில் உள்ள சகோதரர்களுக்குள் கடுமையான சண்டைகள் நடக்கின்றன.எனவே நமக்குள்ளே அமைதியை அடையும் வரை, நம்மால் நமக்கு வெளியே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியாது. மேலும் உலக அமைதியும் ஏற்படாது, நம்முடைய சொந்த வாழ்க்கையிலும்   நாம் முன்னேற முடியாது. இப்போது அமைதியை கொண்டு வருவதற்கு எல்லோருடைய முயற்சிகளும் தேவை. எவ்வளவு குறைந்த அளவில் செய்ய முடியுமோ, அதை செய்தாலே போதும்.

இப்போது நீங்கள் அனைவரும் இங்கேயே செய்யக் கூடிய ஒரு பயிற்சியை கொடுக்க போகிறேன். நீங்கள் அனைவரும் அதில் கலந்து கொள்வீர்களா? சொல்லப் போனால் நான் சேர்ந்தாற் போல் இரண்டு பயிற்சிகள் தரப்போகிறேன். நீண்ட விரிவுரைகளை தருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நடைமுறை அனுபவத்தையே நான் நம்புகிறேன். உங்களை சுற்றி இருப்பவர்களை பார்த்து நான் உங்களை சேர்ந்தவர் என்று சொல்லுங்கள்.எல்லோரும் செய்து விட்டீர்களா? நீண்ட்கள் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் அமர்ந்திருப்பவருக்கு வணக்கம் செய்யவும். பக்கத்தில் இருப்பவரிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். இப்போது நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன்   நீங்கள் மற்றவர்களுக்கு வணக்கம் தெரிவித்த  போது அதை நீங்கள் உண்மையான அர்த்தத்துடன் தான் கூறினீர்களா அல்லது மேலெழுந்தவாரியாக செய்தீர்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். நீங்கள் இதை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. 
   
தெரியுமா! வாழ்க்கையிலும் இப்படித்தான் நடக்கின்றது. பல சமயங்களில் நாம் "மன்னிக்கவும்" அல்லது "நன்றி" என்று சொல்லும்போது மேலெழுந்தவாரியாகவே சொல்லுகின்றோம். அது இதயத்தில் இருந்து வருவதில்லை. நீங்கள் விமானத்தில் இருந்து வெளியே வரும்போது விமான பணிப்பெண் உங்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கட்டும் என்று பிரியாவிடை அளிக்கிறாள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் உங்களுக்கு அன்று நல்ல நாளாக இருக்கப் போகிறதா இல்லையா என்று கவலைப்படுவதில்லை. ஆனால் இதையே நீங்கள் உங்களுடைய தாயிடம் இருந்தோ அல்லது தாத்தா பாட்டியிடம் இருந்தோ கேட்டால் அவர்கள் அதை வெளிப்படுத்தும் முறையில் வித்தியாசம் உணருகிறீர்கள். அவர்கள் அதை உங்களிடம் சொல்லும் நீங்கள் அது வேறுபட்ட அதிர்வு நிலையில் இருப்பதையும் அதில் ஒரு அரவணைப்பு இருப்பதையும் உணருகிறீர்கள். அவர்கள் மேலெழுந்தவாரியாக சொல்வதில்ல. அவர்கள் அதை முழு மனதோடு கூறுகிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அவர்களுடைய ஆசீர்வதங்களில் நல்ல விளைவுகள் தரக்கூடிய ஏதோ இருக்கின்றது.

நீங்கள் அன்பில் ஊறியிருக்கும் போது நீங்கள் அன்பை வெளிப்படுத்துகிறீர்கள், உங்களை சுற்றி இருப்பவர்களும் அதை உங்களுக்கு பிரதியுபகாரமாக அளிப்பார்கள். இது இயற்கையின் விதி.   
நாம் எப்போதும் நம்மை சுற்றி அதிர்வலைகளால் சூழப்பட்டிருக்கிறோம். அமைதி! அமைதி! அமைதி! என்று எப்போதும் சப்தம் போடுவது நம்மை சுற்றியுள்ள சூழலை அமைதிப்படுத்தாது. அந்த மாதிரியானவர்களுக்கு அவர்களுடைய குரலிலும் அமைதி இருக்காது அவர்கள் அங்கு இருப்பதிலும் அமைதி இருக்காது. நாம் நம்முடைய வார்த்தைகளை விட அங்கு இருப்பதிலேயே அதிகம் தெரிவிக்கின்றோம்.

மொழி தெரியாததனால் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய குழந்தை பேச முடியாது.ஆனால் உங்கள் கண்களை பார்ப்பதன் மூலம் அந்த குழந்தை அனைத்து அன்பையும் உணர்ச்சிகளையும் தெரிவிக்கின்றது. உதாரணத்திற்கு வீட்டிலே இருக்கும் நாயின் அனுபவத்தை எடுத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் அலுவலகம் அல்லது பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது அது உங்களை சுற்றி சுற்றி வருகிறது, உற்சாகத்தில் உங்களை நோக்கி குதிக்கிறது. அது அதனுடைய அனைத்து அன்பினையும் தன்னுடைய அதிர்வுகளினால் காட்டுகின்றது. யாராவது ஒருவர் உங்களுக்கு தன்னுடைய அன்பை 100 வார்த்தைகளில் சொன்னாலும், அது அதே அளவான உணர்வையும் பலனையும் தராது. எனவே நம்முடைய அதிர்வுகள் ஆக்கபூர்வமாக இருக்க நமக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன

1. தெளிவான மனம்
2. தூய்மையான இதயம்
3. நேர்மையான  செயல்

உங்கள் மனத்திலும் எண்ணங்களிலும் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். உங்கள் இதயம் தூய்மையாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் செயல்களில் நேர்மை இருக்க வேண்டும். நீங்கள் எதை செய்தாலும் அதை உங்கள் மனதுடனும் இதயத்துடனும் 100% செய்யவேண்டும் சரி, நாம் இன்னொரு பயிற்சி செய்யலாம். உங்களுக்கு அருகில் அமர்ந்திருப்பவரிடம் "எனக்கு உங்கள் மீது நம்பிக்கையே கிடையாது" என்று சொல்லவும். உங்கள் அனைவராலும் அதை செய்யமுடிந்ததா?  உங்களில் பலரால் அதை செய்ய முடியவில்லை அல்லவா? நீங்கள் அதை செய்ய முயற்சி செய்தாலும், நீங்கள் இருவருமே சிரிக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். இபோது நீங்கள் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு இந்த உலகத்தில் உள்ள அனைவருமே உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லுவதாக கற்பனை செய்து பாருங்கள். அனைவரும் உங்களை சந்தேகக்கண்ணோடு பார்ப்பதாக கற்பனை செய்யுங்கள். இதை ஒரு 30 வினாடிகள் செய்து பாருங்கள். இப்போது கண்களை திறக்கவும். உங்களுக்கு எப்படி இருந்தது? உள்ளுக்குள் நீங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தீர்கள் இல்லையா? 

யாரும் நம்மை ஐய உணர்வோடும் சந்தேகத்தோடும் பார்ப்பதை நாம் விரும்புவது இல்லை, ஆனாலும் நாம் பலரை அந்த மாதிரியாக பார்க்கின்றோம். நம்மை சுற்றி அந்த மாதிரியான அதிர்வுகளை உருவாக்குகின்றோம். மற்றவர்களும் அதே அதிர்வுகளை பிடித்துக் கொள்ளுகின்றனர் நாம் சந்தேகத்திலும் ஐய உணர்விலும் பிடிபட்டிருக்கும் போது, நம்மை சுற்றி உள்ளவர்களிடமும் அதே உணர்வை தான் உருவாகுகின்றோம். நீங்கள் அன்பில் நனைந்திருக்கும் போது, நீங்கள் அன்பையே அளிக்கிறீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்களும் அந்த அன்பையே திரும்ப கொடுக்கின்றனர். இது இயற்கையின் விதி. 

மகிழ்ச்சி உடல்நலத்திற்கு நல்லது

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014, 

டெல்லி, இந்தியா

மருத்துவ அறிவியல் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் டெல்லி, மற்றும் உலக தியான டாக்டர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ' உளவியல் துறை மன அழுத்த குறைப்பு திறன்கள்: அறிவியல் மேம்படுத்தல் ' என்னும் மாநாட்டிற்கு பூஜ்ய குருதேவ் தலைமை விருந்தினராக இருந்தார். அரசு மற்றும் தனியார் துறை டாக்டர்கள், நர்சுகள்,விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள், உளத்துறை நிபுணர்கள், மருந்து விற்பனையாளர்கள், உடல்நல நிர்வாகிகள்,மருத்துவ மாணவர்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளில் உள்ள உடல்நல நிபுணர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பூஜ்ய குருதேவின் உரையின் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.


நான் உங்களுக்கு ஒரு சிறிய கதை கூற விரும்புகின்றேன். ஒரு சமயம் பொறுமையற்ற ஒரு நோயாளி டாக்டரை காண வந்திருந்தார். அவருக்கு உடலெங்கும் வலி இருந்தது.முதுகு வலித்தது, தலை வலித்தது, உறக்கம் இல்லை. அதிக அளவு பிரச்சினைகள் இருந்தன. எனவே டாக்டர், தலையில் இருந்து கால் கட்டைவிரல் வரை பரிசோதனை செய்து பாப்போம் என்று கூறினார்.

முழுமையான பரிசோதனை நடத்தப்பட்டது. அனைத்து அறிக்கைகளும் சரியாகவே இருந்தன. அவரது ரத்த பரிசோதனை அறிக்கை, சரியாக இருந்தது,ரத்தஅழுத்தம் சரியாக இருந்தது,கொழுப்பு இல்லை,சிறுநீரகங்கள் சரியாகவே இயங்கின. டாக்டர் அவர் உடல் நலத்துடன் இருப்பதாகவே கூறினார், ஆனால் நோயாளி இல்லை என்றே வலியுறுத்தினார். அந்த நோயாளி எனக்கு உடல் நிலை சயில்லை, மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யுங்கள் என்று டாக்டரை கேட்டுக் கொண்டார்.டாக்டர் அவருக்கு நோய் ஒன்றும் இல்லை என்று மீண்டும் உறுதியளித்து அவரிடம், " பாருங்கள்! நகரத்தில் ஒரு சர்க்கஸ் நடந்து கொண்டிருக்கின்றது. அதில் ஒரு கோமாளி மக்களை சிரிக்கும்படி செய்கின்றான்.அங்கு சென்று சற்று நேரம் அமர்ந்து நன்றாக சிரியுங்கள். நலமாக உணருவீர்கள். உங்களுக்கு நோய் எதுவும் இல்லை" என்று கூறினார்.

இதற்கு நோயாளி,"டாக்டர்! நான் தான் அந்த கோமாளி.. நான் மக்களைச் சிரிக்க வைக்கின்றேன் ஆனால் எனக்கு மிகுந்த அழுத்தம் உள்ளது" என்று கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு மருத்துவர்களின் கூட்டத்திற்கு பேசும்படி அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு நிகழ்ந்திருந்த ஒரு ஆய்வில் 60% டாக்டர்களே உடல்நலம் அற்றவர்கள் என்று கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.அவர்களுக்கு அதிக அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருந்தன. பொதுமக்களின் உடல் நலனைப் பேணுவதால், டாக்டர்கள் நல்ல உடல்நலத்துடனேயே இருப்பார்கள் என்று மக்கள் எண்ணுகின்றார்கள். ஆனால் அவ்வாறு இல்லை. ஏன்? இந்த ஏன் என்னும் கேள்வியில் நமது கவனத்தை செலுத்த வேண்டும். மருத்துவத் தொழில் என்பது மக்களுக்கு மருந்துகளை கொடுக்கும் பணி மட்டுமே அல்ல. ஒருவரது வாழ்வு முறையை பற்றியதாகும். ஒருவர் உள்ளிலிருந்து சிரித்து மகிழ வில்லையென்றால் அவர் உடல்நலமானவர் என்று இந்திய பண்பாட்டில் கருதப்படுவதில்லை.

இந்தியாவில் பண்டைய காலத்தில் ஸ்வஸ்தா  என்று கூறப்படுவதன் பொருள் என்னவென்றால் தன்னில் நிறுவப்பட்டுவிட்ட ஒருவர், மற்றும் சொல்வதும் செய்வதும் ஒத்திருக்கும் ஒருவர் என்பது ஆகும். அப்படிப்பட்ட  ஒருவரே நலமானவர் என்று கருதப்பட்டார். ஒன்றை கூறி வேறொன்றை செய்பவர் உடல் நலமற்றவர் என்றே கருதப்பட்டார், அவரை யாரும் குறை கூறுவதில்லை.

நமது நாட்டில் நாம் குற்றவாளியைக் குறை கூறுவதில்லை. உடல் அல்லது மனநலமற்றவர் என்றே கருதப்பட்டு, யோகா மற்றும் ஆயுர்வேத மருந்துகளால் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த ஏற்பாடுகள் அனைத்தும் ஒருவன் நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப் பட்டு இருந்தன. அர்ப்பணிப்பு மற்றும் நல்ல குணங்களுடன் இருக்கும் ஒருவன் தான் முழுமையாக நலமானவன் என்று கருதப்பட்டான். தனக்கு என்ன வேண்டும் என்று விரும்புகின்றானோ அவையே பிறருக்கும் வேண்டும் என்று கருதுபவனே நலமானவன். இனிமையான மற்றும் ஈடுபாடு கொண்ட மன நிலையே  நலத்தின் அடையாளம் ஆகும். மகிழ்ச்சியே உடல்நலத்திற்கு ஒரு காரணியாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக உலகெங்கும் ஏற்றுக் கொள்கின்றனர். நீங்கள் மகிழ்ச்சியற்று இருந்தால் ஏதோ சரியில்லை. கடந்த  ஆண்டுகளில் அறிவியல் கடினமானது என்று எண்ணியிருக்கின்றோம். ஆனால் அவ்வாறு அல்ல. அறிவியலும் வளர்ந்து வரும் எப்போதும் வளரும் ஒரு பாடப் பொருள். அறிவியல் முடிவடையாது, முடிவடைந்து விட்டால் அது இறந்து விட்டது என்றே கருதலாம். அறிவியல் எப்போதுமே இளமையானது. இளமையின் அடையாளம் வளர்ச்சி. அறிவியலும் எப்போதும் வளர்ந்து வருகின்றது. துரதிர்ஷ்டவசமாக அறிவியல் நீண்ட காலமாக பாரபட்சத்த்தால் தாக்கப்பட்டிருந்தது, ஆனால் இப்போது அந்நிலை மாறி வருகின்றது. இனிமையான ஈடுபாடு கொண்ட மனநிலை நல்ல ஆரோக்கியத்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றது.

1980ஆம் ஆண்டு ஆயுர்வேதிக் வைத்தியர்களின் முதல் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது எனக்கு 24 -25 வயதுதான். ஆயுர்வேத டாக்டர்களைத் தவிர AIIMSலிருந்து அலோபதி முறை டாக்டர்களும் வந்திருந்தார்கள். அந்த மாநாட்டில் ஆயுர்வேதிக் டாக்டர்கள் மஞ்சளை பற்றி விவாதித்தார்கள். அவர்கள் மஞ்சள் ஒரு அயோச்டப்னி அதாவது அது முதுமையை கட்டுப் படுத்துவதன் கூட ஒரு உயிர் வளியேற்ற எதிர்ப்பி (Antioxident) என்றும் கூறினர். ஆயுர்வேதிக் டாக்டர்கள் மஞ்சளின் முக்கியத்துவத்தை கூறியபோது அதை அல்லோபதி டாக்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் அது மூட நம்பிக்கை மற்றும் மஞ்சளுக்கு அவ்வளவு  முக்கியத்துவம் கிடையாது என்றே கூறினர். இன்று ஒரு ஆய்வில் மஞ்சள் மன அழுத்தத்திற்குச் சிறந்த மருந்து என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதில் 19 முக்கிய உயிர்காக்கும் மருந்துகளின் குணம் உள்ளதாக அண்மையில் ஒரு ஆய்வு எடுத்துக் காட்டுகின்றது.

இப்போது ஆயுர்வேத டாக்டர்கள் கூறியது சரி என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. இது போன்றே ஒரு தலைமுறை முழுவதும் வெண்ணை உடல்நலத்திற்குக் கேடானது என்றே எண்ணி வந்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் டைம் பத்திரிகை ஒரு கட்டுரையை வெளியிட்டது. அதில் வெண்ணை இதயத்திற்கு நல்லது என்று கூறப்பட்டுள்ளது.ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு தேக்கரண்டி வெண்ணை எடுத்துக் கொண்டால் இதயநோயை தடுக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

ஐம்பது ஆண்டுகளாக மக்கள் வெண்ணை கெடுதல் என்று கருதி மார்கரினை பயன்படுத்தினர். இப்போது அது கெடுதல், வெண்ணையே நல்லது என்று கூறுகின்றார்கள். உங்கள் கையில் வைத்திருக்கும்போது உருகும் எதுவும் உங்களுக்கு நல்லது, அது ரத்தக் குழாய்களை அடைக்காது.
மார்கரின் உருகாது, வெண்ணை உருகும். அதனால் அறிவியலில் பாரபட்சம் கூடாது, ஏனெனில் அது எப்போதும் வளர்ந்து வருவது. அதே சமயம், ஆன்மீகத்தில் மூட நம்பிக்கைகள் கூடாது.  வெளிப்படையான விவாதங்கள், இருக்க வேண்டும். வேத நூல்களில் கூறப்பட்டுள்ளதால் கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம். தற்காலத்திற்கு பொருந்துமா என்று என்று பார்க்க வேண்டும். அவை எழுதப்பட்டதற்கான காரணக் கூறுகளை ஆராய வேண்டும். வேத நூல்களில் நீர் குடிப்பதற்கு முன்னர் ஒரு துணியில் வடிகட்டப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பல ஜைன சமயத்தைச் சார்ந்தவர்களின் வீடுகளில் குழாயில் ஒரு துணி கட்டப்பட்டிருக்கும். பல பூச்சிகளும் கொசுக்களும் அத்துணியில் வந்து அமருவதால் பல பிரச்சினைகள் எழுகின்றன. ஆகையால் சுத்தமான தண்ணீர் கூட இதன் மூலம் தூய்மையற்றதாக ஆகி  விடுகின்றது. கைகளால் உண்ண வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நாம் கவனிப்பதில்லை. ஆகவே ஏன் வேத நூல்களில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

பழமையான முறைகள், மீளாய்வு மற்றும் அறிவியல் தேர்வுக்கு உட்பட திறந்த நிலையில் வைக்கப்பட வேண்டும்.அவற்றை ஓரவஞ்சனையுடன் ஒதுக்கவும் கூடாது, மூட நம்பிக்கையுடன் கண்மூடித்தனமாகப் பின்பற்றவும் கூடாது. இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நடு நிலையில்,எடுத்துச் செல்லுங்கள். ஒரு மரத்தின் வேர்கள் பழமையானவையாகவும் கிளைகள் புதியனவாகவும் இருக்கின்றதோ அது போன்றதே வாழ்க்கை.

தொடரும் ..............

அனைத்துச் சமயங்களும் ஒன்றே

சனிக்கிழமை ,30 ஆகஸ்ட், 2014. 

டெல்லி, இந்தியா


(அமைதி என் உள்ளத்தில்  துவங்குகின்றது என்னும் இடுகையின் தொடர்ச்சி)

நேற்று கணேச உத்சவம் நிறைவடைந்தது. ஏன் கணேச பகவானை வழிபாடு செய்து பின்னர் நீரில் மூழ்கடித்து விடுகின்றார்கள் என்று பலர் கேட்கின்றனர். இந்த வழக்கத்திற்கு பின், பண்டைய ரிஷிகள் திறமிக்க ஒரு கருத்தினை கொண்டிருந்தார்கள். கருத்துப்படி பூஜை என்பது இறைவன் நமக்கு என்னவெல்லாம் அளித்திருக்கின்றாரோ, அவற்றையெல்லாம் அவருக்கே அன்புடனும் நன்றியுடனும் திருப்பி அளித்துவிடுவது தான். இது இறை விளையாட்டு. கணேச விக்ரகத்துடன்   இந்த "விளையாட்டு" முடிந்தவுடன் அந்த களிமண் சிலையை நீரில் மூழ்கடித்து விடுகின்றோம். "பகவானே! தாம் என்னுள் உறையும் ஆத்மாவில் குடி கொண்டிருக்கின்றீர்கள். சிறிது நேரத்திற்கு இந்த சிலையில் குடி கொண்டு விடுங்கள், அப்போது தான் தாங்கள் என்னுடன் விளையாடுவது போன்று நான் உங்களுடன் விளையாட முடியும். நான் தங்களைக் கொண்டாட விரும்புகின்றேன்! என்று இறைவனிடம் கூறுவது போன்றதே இந்த வழிபாடு. வழிபாடு நிறைவடைந்தவுடன், நாம் இறைமையை மீண்டும் நமதுள்ளே நம் இதய ஆழத்திற்கு திரும்பச் சென்றடையுமாறு வேண்டுவது போன்று நீரின் ஆழத்தில் சிலையை மூழ்கடித்து விடுகின்றோம்.

ஆதிசங்கரர் கணேச பகவானை குறித்து விவரித்திருப்பதை கேட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அவர்," அஜம் நிர்விகல்பம் நிராகாரம் ஏகம்" என்று பாடுகின்றார். அதாவது, கணேச பகவான் நிராகாரா (உருவமற்றவர்) "கணேச பகவானே! நீ நிரந்தரமான உருவற்ற எங்கும் வியாபித்திருக்கும் இறைமை" என்பதாகும். இதே விளக்கத்தை குரானின் ஆரம்ப வரிகளில் காணலாம். துரதிர்ஷ்ட வசமாக நமது சமயங்களையும், வேதநூல்களையும் மிகக் குறைவாகவே அறிந்திருக்கின்றோம்.
உலகின் எந்த சமயமும் நீங்கள் பிறரை துன்புறுத்தி காயப்படுத்த வேண்டும் என்று கூற வில்லை. அவ்வாறாயின் ஏன் இந் நிகழ்வுகள் ஏற்படுகின்றன? ஏனெனில், சமயக் கல்வி சரியான முறையில் கற்பிக்கப்படவில்லை. இன்று ஆன்மீகக் கல்வி மிக அவசியம். ஆன்மீகக் கல்வியே அனைவரையும் ஒன்றிணைக்கும். பல துறவிகள் இருந்திருக்கின்றார்கள், அனைவரும் ஒரே கருத்தினை கொண்டிருந்திருக்கின்றார்கள். அது அனைத்தும் ஒன்றே என்பதாகும்.

இராக்கிய தலைவர்கள் மூன்று விஷயங்களை நம்மிடம் கேட்டார்கள். முதலாவது இந்திய ஆன்மீகம். ஏனெனில் அன்பு மற்றும் நல்லிணக்கம் இவற்றின் வழியாக அனைவரையும் அரவணைத்துப் பிணைக்கும் தனித்துவம் வாய்ந்தது.

இரண்டாவதாக கல்வியுதவி. இந்தியாவில் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த புத்திக் கூர்மையும் அறிவுத்திறனும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். தங்களது இளைஞர்களும் இவ்வாறே பொறியியல் கல்வித் திறனை அடைய உதவி வேண்டினர்.

மூன்றாவதாக  இந்தியக் குழு இராக்கிற்கு வந்து எண்ணெய் கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் பணியினைச் செய்யவேண்டும் என்று கேட்டனர். பல மேல்நாட்டினர் வெகு காலமாக இதைச் செய்து வருகின்றனர், இப்போது இந்தியர்களும் அங்கு சென்று அப்பயனை அடையலாம் என்று கூறினர். அனைத்து நாடுகளும் தங்களது பாதுகாப்பிற்கு செலவிடும் தொகையில் 0.1% அமைதியையும் நல்லிணக்கத்தையும் பரப்புவத்ற்கு செலவிட்டால் இவ்வுலகமே மாறிவிடும். யாருக்குமே வெறுப்பு என்பதில் விருப்பம் இருக்காது. ஆனால் தெரியாமலேயே அது நிகழ்ந்து விடுகின்றது. அல்லது பயம் பிறரின் பாதுகாப்பற்ற நிலை இவற்றின் காரணமாக நிகழ்கின்றது.
உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இங்கு வருவதற்கு முன்னர், நான் சொற்பொழிவாற்றிய வேறொரு இஸ்லாமியப் பல்கலைக்கழகம், பாகிஸ்தானிலுள்ள லாகூர் பல்கலைக்கழகம் ஆகும். 2012 இல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஏற்பாடுகள் செய்து அதில் கலந்து கொண்டார்கள்.

அங்கும் ஏன் பல்வேறு விதமான கடவுளர்களை வணங்குகின்றோம் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இதை விளக்கிக் கூற ஒரு எளிய உதாரணத்தை நான் எடுத்துக் கொண்டேன். ஒரே கோதுமை மாவிலிருந்து ஹல்வா, பூரி, சமோசா அனைத்தும் செய்யப்படுகின்றன. அதே மாவில் பீட்சாவும், நூடுல்சும் செய்யப்படுகின்றது அல்லவா? ஏன்? ஏனெனில் நமக்குப் பல வகை உணவு பொருட்கள் மீது  விருப்பம்  இருக்கின்றது. அது போன்றே இந்தியாவில் நாம் அனைவரும் ஒரே கடவுள் என்று நம்புகின்றோம். ஒரே இறைவனை பலவகை உடையுடுத்திக் காண்கின்றோம். வெவ்வேறு வகையான ஆடை அணிவித்து வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றோம். ஹிந்து மதத்தில் இறைவனுக்கு 1008 வெவ்வேறு  பெயர்கள் உள்ளன, ஒவ்வொரு பெயருக்கும் ஒரு உருவம் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.

இவ்வாறு நான் கூறியதை மக்கள் புரிந்துகொண்டு பாராட்டினர்.சிலர் ,"குருதேவ், மிக அழகாக விளக்கம் கூறினீர்கள். இது வரையில் கடவுள் ஒன்றே என்றிருக்கும் போது ஏன் இந்தியர்கள் பல கடவுளர்களை வணங்குகின்றார்கள் என்று புரிந்துகொள்ள முடியாமல் இருந்தோம்"  என்று கூறினார்கள். உலக அமைதி நமக்குத் தேவையானால் அதை நம்மிலிருந்து துவங்க வேண்டும். தெய்வீக ஒளியை உங்களில் நீங்கள் கொண்டால் யாரையும் வேற்று மனிதராக நீங்கள் காண மாட்டீர்கள். அனைவருமே உங்களை சார்ந்தவர் என்றே கருதுவீர்கள். ஆனால் யாரும் அணைக்க முடியாத நம்முள் இருக்கும் ஒளியினை நாம் அறிந்துணர்ந்து கொண்டால் மட்டுமே இந்தப் புரிதல் ஏற்படும். பிராணாயாமம் மற்றும் தியானம் இவற்றின் நோக்கமே உங்களுள் இருக்கும் ஒளியினை  நீங்களே உணர்ந்தறிந்து கொள்ள செய்வது தான்.

தலைமுறை இடைவெளியையும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும்  எவ்வாறு சமாளிப்பது? நமக்கு மூத்தவர்களுடன் ஏற்படும் வேறுபாடுகளை எவ்வாறு சமாளிப்பது?

குருதேவ்: அதை மிகுந்த திறனுடன் செயல்படுத்த வேண்டும்.உங்களது வாதத்தை அவர்களிடம் விவரித்து முன் நிற்க வேண்டும். அதே சமயம் அவர்கள் என்ன கூற விரும்புகின்றார்களோ அதை மரியாதையுடன் கவனிக்க வேண்டும். நமது மூத்தவர்கள் எப்போதுமே நம் மீது அன்பு கொண்டு நமது நலன்களையே மனதில் கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் அவ்வப்போது புத்திமதி கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.தங்களது தலைமுறை வழிமுறைகளைக கொண்டிருக்கலாம். நவீன வாழ்க்கை முறைகளை முற்றிலுமாக அறியாமலும் இருக்கலாம்.ஆனால் அவர்களது உள் நோக்கம் நம்முடைய நன்மை என்பதே ஆகும். ஒரு வேளை நாம் எதிர்பார்ப்பதை போன்று அவர்களால் விஷயங்களை விவரித்துக் கூற முடியாமல் இருக்கலாம். சற்று விட்டுக்கொடுத்து போவதன் மூலம் எளிதாக இதை சமாளிக்கலாம்.

ஆரம்பத்தில் நான் அனைவரிடமும் உள்ள சிறப்பினையே பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆனால் காலப்போக்கில் நெருங்கிப் பழகும்போது அவர்களிடமுள்ள மோசமானவற்றைக் காணத் துவங்கியிருக்கின்றேன். அவர்களிடம் என் உணர்ச்சிகள் மாறிவிட்டன. ஏன் இவ்வாறு நிகழ்கின்றது? இதை நான் எவ்வாறு கையாள்வது?

குருதேவ்: பாருங்கள், இதன் எதிர்மறையும் உண்மையாகும். பல சமயங்களில் ஆரம்பத்தில் ஒருவருடன் சரியாக பழக முடியாமல். பின்னர் காலப் போக்கில் பொறுமையாக இருந்தால் அவர்களை நேசிக்கத் துவங்குவீர்கள்.எனவே இரண்டுமே உண்மை தாம். இது போன்ற சுழற்சிநிலை எல்லோருடைய வாழ்விலும் நிகழக் கூடியதுதான். ஒருவரை சந்திக்கின்றீர்கள், விரும்பிப் பழகுகின்றீர்கள், சில காலத்திற்கு பின் அவர்களை விரும்புவதில்லை, மீண்டும் சிறிது காலத்திற்குப் பின்னர், திரும்பவும் நேசிக்கத் துவங்குகின்றீர்கள். இதைப் பற்றி உங்கள் தாய் தந்தையைக் கேளுங்கள் (சிரிப்பு) மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டாலும் சிறு சிறு சண்டைகள் கருத்து வேறுபாடு இவை ஏற்பட்டிருக்கும்.

ஒரு அமைதியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையின்  ரகசியம் என்ன?

குருதேவ்: அதைத் தான் உங்களனைவருக்கும் இத்தனை நேரம் கூறிக் கொண்டிருந்தேன். மக்கள் மற்றும் சூழ்நிலைகள் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்தது  அல்லது  எதிர்காலத்தில் நிகழப் போவது பற்றி எண்ணிக் கொண்டிருக்காதீர்கள்.

உலக அமைதியையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த சமயத்தின் பங்கு என்ன? அது  ஒரு சொத்து ஆகுமா அல்லது தடையாகுமா  ?


குருதேவ்: புத்திசாலிகளுக்கு சமயம் ஒரு சொத்து ஆகும். ஆனால் முட்டாள்களுக்கு அது தடை ஆகும். ஒவ்வொரு சமயத்திலும் சில தனிச் சிறப்புக்கள் உள்ளன. அவை நமது வாழ்வினை மேம்படுத்தவும் நாம் மலரவும் துணை செய்யும். நாம் முட்டாள்தனமாக இருந்தால், அதே பண்புகள் வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் மக்களிடையே உருவாக்கும்.எனவே அனைத்தும் நம்மை பொறுத்துதான். உலகின் எந்த சமயத்திலும் எந்தத் தவறும் இல்லை. அதை பின்பற்றுவோரின் புரிதல் தான் முக்கியம். கத்தியை பயன்படுத்தி காய்களையும் வெட்டலாம், வெண்ணையையும் துண்டாக்கலாம், உங்களையும் காயப்படுத்திக் கொள்ளலாம். இது அப்படித்தான்.

வெற்றியின் உண்மையான அறிகுறி..

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014,

டெல்லி, இந்தியா


மகிழ்ச்சி மற்றும் வெற்றி குறித்து உங்களுக்கு உரை நிகழ்த்த வேண்டிய தேவை உள்ளதாக நான் கருதவில்லை. நீங்கள் ஏற்கனவே மகிழ்ச்சியாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் மிகுந்த வருத்தம் உள்ள ஒரு கூட்டமாக  இருந்தால் மகிழ்ச்சியை பற்றிப் பேசிப் பயன் இல்லை. ஏனெனில் நான் என்ன கூறினாலும் அது உங்கள் மூளையில் ஏறாது. நீங்கள் ஏற்கனவே மகிழ்ச்சியுடன் இருந்தால் அதைப் பற்றிப் பேசவேண்டிய அவசியமே இல்லை. ஆனால் வெற்றியைப் பற்றி நாம் பேசலாம்.
வெற்றியான ஒரு மனிதன் எப்போதும் திருட விரும்பமாட்டான், ஏனெனில் எங்கு சென்றாலும் செல்வம் ஈட்டலாம் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருக்கும், அப்போது  நெறியற்ற முறையில் எதையும் ஏன் செய்ய வேண்டும்?

ஒரு சமயம், நான் உலகிலேயே மிகுந்த வெற்றி பெற்ற மக்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டேன். அங்கு வந்திருந்த அனைவருக்கும் அறிமுகப் படுத்தப்பட்டேன்.அவர்களில் ஒருவரை எனக்கு அறிமுகப்படுத்தும் போது, மிக வெற்றிகரமான தொழில் அதிபர் என்று கூறப் பட்டது. ஆனால் அவர் மிகுந்த எரிச்சலுடன் காணப்பட்டார். வேறொருவர் மிகுந்த சிடுசிடுப்பானவர் என்று அறிமுகப்படுத்தப் பட்டார். அவரது மனைவி என்னிடம், என் கணவரின் மனப்பாங்கை உங்களால் சரிப்படுத்த முடியுமா என்று கேட்டார். அவர்களையெல்லாம் பார்த்தால் அவர்கள் சிரித்துப் பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும் என்று தோன்றியது. ஒருவர் முகத்தில் கூடப் புன்முறுவல் இல்லை. சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், மனஅழுத்தம், சிலருக்கு வயிறு பிரச்சினை என்றெல்லாம் இருந்தன. இவர்களெல்லாம் வெற்றியாளர்களா? பலர் மயானத்திற்கு செல்லத் தயாராக இருப்பது போலத் தோன்றினார்கள்.

வெற்றி என்பதன் விளக்கம் என்ன? பல சமயங்களில் டாக்டர், அறுவை சிகிச்சை வெற்றி ஆனால் நோயாளி இறந்து விட்டார், என்று கூறுவது போன்றது இந்நிலை. வெற்றியை நோக்கி தேடி ஓடி, வாழ்வில் களைப்பு மேலிடுகின்றது. சக்தி இல்லை, உற்சாகம் இல்லை நம்பிக்கை இல்லை. இந்நிலையில் எவ்வாறு அவர் வெற்றி அடைந்தவர் ஆவார்?
 
ஒரு உயர்ந்த பதவியை அடைவதற்கு ஒருவர் கடினமாக உழைக்கின்றார். அதை அடைந்தவுடன் அதை இழந்து விடுவோமோ என்று பயம் கொள்கின்றார். பெருமளவு காலத்தைப் பிறரை பழித்துக் கொண்டோ, சந்தேகித்துக் கொண்டோ கழிக்கின்றார். வெற்றியை குறித்து எனது வழியலகு வேறுபட்டது ஆகும்.  மறையாத புன்முறுவலே வெற்றியின் அடையாளம். அசைக்க முடியாத நம்பிக்கையே வெற்றியின் அறிகுறி. இம்மனிதர்கள் அனைவரும் சிறு விஷயங்களுக்காகக் கூட நிலைகுலைந்து விடுகின்றார்கள். இதுவா வெற்றியின் அடையாளம்? பயமின்மையே வெற்றியின் அடையாளம். பயமற்ற மனப்போக்கே வெற்றியின் அறிகுறி. 

வெற்றியான ஒரு மனிதன் எப்போதும் திருட விரும்பமாட்டான் ஏனெனில் எங்கு சென்றாலும் செல்வம் ஈட்டலாம் என்னும் நம்பிக்கை அவனுக்கு இருக்கும், அப்போது ஏன் நெறியற்ற முறையில் எதையும்  செய்ய வேண்டும்?

செல்வத்தை குவிக்க நெறியற்ற முறையை யார் உபயோகிப்பார்கள் தெரியுமா? தான் சம்பாதிக்க முடியும் என்று தன் மீது நம்பிக்கை அற்றவன் தான். எங்கு சென்றாலும் செல்வம் ஈட்டலாம் என்னும் நம்பிக்கை உள்ளவன், திருடவோ நெறியற்ற முறையில் பொருள் தேடி அதனால் சிறை செல்லும் நிலை ஏற்படவோ விடமாட்டான். அத்தகைய மனிதர்கள் குறுகிய காலத்திற்கே வெற்றியுள்ளவர்களாக இருப்பார்கள். பின்னர் சிறை செல்ல நேரிடும். இது ஒரு சமுதாயத்தின், ஒரு குடும்பம் அல்லது தனி மனிதனின் வெற்றியாகாது. முன்னேறும் சமுதாயத்தின் மதிப்பீட்டு அளவு என்னவென்றால், எப்போதும் ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்கும் நிலையிலும், சிறைச்சாலைகள் காலியாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் அது முற்போக்கான சமுதாயம்.
இன்று, ஒவ்வொரு நாளும் புதிய ஆஸ்பத்திரிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. சிறை சாலைகள் நிரம்பி இருக்கின்றன. இது ஒரு வெற்றிகரமான சமுதாயம் அல்ல. வெற்றிகரமான வாழ்கையும் அல்ல. எங்கோ தவறு செய்கின்றோம். வெற்றி என்பதன் அளவுகோலை நாம் மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும்.

செல்வத்தை அடைய பாதி ஆரோக்கியத்தை செலவு செய்து விட்டு அந்த ஆரோக்கியத்தைத்  திரும்பப் பெற பாதி செல்வத்தைச் செலவு செய்கின்றோம். இது செல்வம் ஈட்டுவதற்கு புத்திசாலித்தனமான வழி அல்ல. இது நம்மை மகிழ்ச்சியாக ஆக்காது. மகிழ்ச்சியும் வெற்றியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவை இணைந்தே இருக்க வேண்டும். நம்பிக்கை, கருணை, பெருந்தன்மை, ஆகியவையும் இருக்க வேண்டும். ஏற்றமும் இறக்கமும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும், நீங்கள் விரும்பாத ஏதேனும் நிகழ்ந்தால் அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும், இல்லையெனில் மகிழ்ச்சியாக இருக்க முடியாது.

பழைய இனிமையற்ற நினைவுகளிலேயே திளைத்திருந்தால் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? நிகழ்காலத்தில் நிலைபெற, பெரும் தடையாக இருப்பது பழைய இனிமையற்ற நினைவுகளே ஆகும். அனைத்து இனிமையானவற்றையும் விட்டுவிட்டு சில இனிமையற்ற நினைவுகளைப் பிடித்து வைத்து அசைபோட்டு கொண்டிருப்பதே மனதின் இயல்பு ஆகும். நாம் தொழில்நுட்பத்தில் எவ்வளவோ முன்னேறிய போதும் அந்த தொழில் நுட்பத்தை மனதிற்கு பயன் படுத்த வில்லை. மனம் பல முறைகள் நழுவி விடுகின்றது. வர்த்தகம், தொழில்நுட்பம், உண்மை, பாரம்பர்யம் இவை நான்கையும் மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொண்டே இருக்கவேண்டும் இல்லையெனில் அவை காலம் கடந்ததாக ஆகி விடும்.

தொழில் நுட்பத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றீர்கள் அல்லவா? ஒரு சாதனத்தை வாங்கி அதை பயன்படுத்தக் கற்றுக் கொண்டிருக்கும் போதே ஒரு புதிய மாதிரி சாதனம் சந்தைக்கு வந்து விடுகின்றது.அல்லவா? இங்குள்ள முதியோர் அதை நன்கு அறிவர். இந்த புதிய கைபேசியை பயன்படுத்த நான் கற்றுக் கொண்டு வருகின்றேன். ஆனால் இதை விடப் புதிய மாதிரியில் பல்வேறு புதிய சிறப்புக் கூறுகளுடன் வேறொன்று வந்து விட்டது. தொழில்நுட்பம் வேகமாக வளருவதால் நாமும் நம்மை காலத்திற்கேற்றாற் போல் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

மரபும் அது போன்றதே ஆகும். சிலர் மரபுகளைப் புறக்கணித்து விடுகின்றார்கள். சிலர் புதுப்பித்துக் கொள்ளாமல் பழைய மரபுகளையே பற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இரு சாராருமே முக்கியமான விஷயத்தை தவற விட்டுவிட்டார்கள். இந்தியாவில் மிக அழகான பல மரபுகள் உள்ளன.அவற்றை புதிப்பிக்க வேண்டும்.அப்போதுதான் அதன் சாரத்தை வெளிக் கொண்டு வர முடியும். பழமையான எல்லாமே மோசமானவை அல்ல. புதியன அனைத்தும் சிறப்பானவையும் அல்ல. இதை வேறு கோணத்திலிருந்து காண வேண்டும்.

தொழில்நுட்பம் நமக்கு வசதியை அளிக்கின்றது.அது போன்றே ஆன்மிகம் நமது ஆத்மாவிற்கும் மனதிற்கும் சுகத்தை அளிக்கின்றது.ஆன்மீகமும் தியானமும் போன்றது என்றே கூறுவேன்.என்பதன் பொருள் தெரியுமா? Absolute Comfort முற்றிலும் சுகம். உள்ளில் நீங்கள் சுகமாக உணரவில்லை என்றால் எவ்வாறு வாழ்க்கையில் வெற்றி பெறுவது? நீங்கள் உள்ளில் துன்பத்துடன் இருந்தால் எவ்வாறு நீங்கள் வெற்றி பெற்றவராகவோ மகிழ்ச்சியானவராகவோ கருதப்படுவீர்கள்? நாம் இந்த கட்டளைப்படிவ வாய்ப்பாட்டினை திரும்பவும் பார்த்து ஆராய வேண்டும். உலகில் எவ்வாறு வெற்றியுடன் இருப்பது? வெற்றி என்பதை ஆய்ந்து விளக்கம் அளிக்க வேண்டும். முக்கியமானது என்னவென்றால் உங்களுக்கென்று சற்று நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அவசரம் ஓன்றும் இல்லை.  

வெற்றியை நோக்கி ஓடுவது தான் உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. மனஅழுத்தம் தான் இன்று உலகில் பெரிய கொலையாளி. அதை இரண்டாவது என்று கூறுகின்றார்கள் ஆனால் முதன்மையாது என்றே கூறுவேன். 40% ஐரோப்பிய மக்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள். அதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அவ்வளவு இல்லை ஆனால் மெதுவாக அந்த அளவை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம். டெல்லியும் அவ்வாறே டெல்லியில் தற்கொலை மனப்போக்கு அதிகமாகிக் கொண்டே வருகின்றது. ஏனெனில் பெற்றோர் குழந்தைகளின் மீது வெற்றி பெறவேண்டும் என்னும் மன அழுத்தத்தை உருவாக்குகின்றனர். வெற்றி பெற பெற்றோரின் மற்றும் சமமானவரின் நெருக்கடி அழுத்தம் அதிகமாக உள்ளது. இது மற்றுமொரு பிரச்சினை. எனவே நான் ஏற்கனவே கூறியபடி நமக்கென்று சிறிது நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். யதார்த்த நிலை மற்றும் உண்மை என்ன என்று அறிய வேண்டும். நான் எதற்காக இங்கு இருக்கின்றேன்? வாழ்க்கை என்பது என்ன? என்னும் இக்கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அதுதான் உருமாற்றத்தை ஏற்படுத்தும்.

அமைதி எனக்குள் துவங்குகின்றது

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட், 

டெல்லி, இந்தியா

(நீங்கள் போதிப்பதை பயிற்சி செய்யுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

மூன்று விதமான சந்தேகங்கள் உள்ளன.
1. நம்மை நாமே சந்தேகிப்பது
2. நம்மைச் சுற்றி இருப்பவர்களை சந்தேகிப்பது
3. இறைவனையே சந்தேகிப்பது

நாம் கடவுளை கண்டதில்லை. ஆகவே, எப்போதும் மனதின் ஓரத்தில், கடவுள் இருக்கின்றாரா இல்லையா என்னும் சந்தேகம் எழுகின்றது.முதலில் நாம் செய்ய வேண்டியது, மக்களை எவ்வாறு இருகின்றார்களோ அவ்வாறே ஏற்றுக்கொள்வது. நாம் சமுதாயத்தில் எல்லோரையும் ஒரு சந்தேகக் கண்ணோடேயே காண்கின்றோம். எப்போது நம்மைப் பிறர் சந்தேகமின்றிக் காண வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்போது, நாமும் பிறரை அவ்வாறே காண வேண்டும்.

இவ்வாறு நான் கூறுவதால், சுற்றியிருக்கும் அனைவரையும் கண்மூடித்தனமாக எல்லாவற்றிற்கும் நம்பவேண்டும் என்னும் பொருள் அல்ல. ஏதோ ஒரு தெரியாத நபரிடம், உங்கள் பணப்பையைக் கொடுக்கலாம் என்றோ அவன் அதனுடன் ஓடி விட்டால் பரவாயில்லை என்றோ பொருளல்ல.இது அல்ல நான் கூறுவது, நம்முடைய மனதில் என்ன எண்ணம் ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை விழித்துணர வேண்டும். இதற்குத்தான் கவனம் செலுத்த வேண்டும். நம்மை முன்னேற்றிக் கொள்ளாத வரையில், நம்முள்ளிலிருந்து மகிழ்வும், அன்பும் தூண்டப்படாத வரையில், எவ்வாறு அமைதியும் மகிழ்ச்சியும் சமுதாயத்திலும் உலகெங்கிலும் ஏற்படும்? ஆகவே முதலில் செய்ய வேண்டியது, பிறரை எவ்வாறு இருக்கின்றார்களோ அவ்வாறே ஏற்றுக் கொள்வது ஆகும்.

வாழ்வில் உங்களைப் போன்றே இருக்கும் இருப்பவர்களை எத்தனை பேர் சந்தித்திருக்கின்றீர்கள்? அனைவரும் உங்களை போன்றே சிந்தித்து செயல்பட வேண்டும் என்று விரும்புகின்றீர்கள். உங்களை போன்றே ஒருவரை சந்தித்தால், ஐந்து நிமிடங்கள் கூட நீங்கள் அவரை சகித்துக் கொள்ளமாட்டீர்கள். உண்மை என்னவென்றால், உங்களை போன்றே சிந்தித்துச் செயல்படும் ஒருவரை ஏற்றுகொள்வது மிகக் கடினமான விஷயம். இதுதான் வாழும் கலையின் அடிப்படைத் தத்துவம்.

உலகில் ஒரு ஏசுதான், ஆயினும் எத்தனை  விதமான கிறிஸ்தவ பிரிவுகள் உள்ளன தெரியுமா? இன்று உலகில் 72 விதமான கிறிஸ்தவப் பிரிவுகள் உள்ளன. எத்தனை இஸ்லாமியப் பிரிவுகள் உள்ளன? ஐந்து பிரசித்தி பெற்ற பிரிவுகள்,ஷியா சுன்னி,அஹ்மெதயா,சுபி போன்றவை. ஒரே ஒரு புத்தர் தாம் ஆயினும் 32 புத்தமதப் பிரிவுகள் உள்ளன. ஹிந்துமதப் பிரிவுகள் எண்ணிக்கையிலேயே அடங்காது.(சிரிப்பு) ஒவ்வொரு சிறப்பு மிக்க துறவிக்கும் ஒரு பாரம்பர்யமும் அதைப் பின்பற்றும் பிரிவினரும் உள்ளனர். சீக்கியமதத்திலும் பல பிரிவினர் உள்ளனர். காலப் போக்கில் பல்வேறு துறவிகள், பல்வேறு சமயக் கொள்கைகள் தோன்றின. நாம் அனைத்து வேறுபட்ட பாரம்பர்யங்களும் பிரிவுகளும் வளர்ந்து செழிக்கச் செய்ய வேண்டும்.

ஒருவர் அனைவரும் ஒரே விதமாக சிந்தித்து செயல்பட செய்ய வேண்டும் என்று முயற்சித்தால், அதன் விளைவு இன்று நாம் சிரியா எகிப்து ஆகிய நாடுகளில் காண்பதைப் போன்று ஆகிவிடும். அந்நாடுகளின் நிலை மிக துரதிர்ஷ்டமானது. அங்கு வர்த்தகம் செய்யும் ஒரு சர்தார்ஜி நம்மிடையே இன்று இருக்கின்றார். அவருடன் இரண்டு மருத்துவர்களை அந்நாட்டு மக்களுடன் பேசுமாறு நான் அனுப்பி வைத்து வைத்தேன். சதாம் ஹுசைனின் காபினட் அமைச்சர்களுடன் பேசுமாறு கூறினேன். அவர்கள் நிதித்துறை அமைச்சரிடம் பேசினார்கள். அவரை சதாம் ஹுசைனிடம் ரத்தம் சிந்தும் துன்பமிகு போரினைத் தவிர்த்து விடுமாறு தெரிவிக்கக் கோரினோம். அதற்குப் பின் நடந்தவை பெரிய கதை. ஆயினும் துரதிர்ஷ்டவசமாகப் போர் நிகழ்ந்தது. அங்கு செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அருகில் ஒரு மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்தினோம். போரின் போது செஞ்சிலுவைச் சங்கக் கட்டிடம் தாக்கப்பட்டு அங்குள்ளோர் இடம் பெயர்ந்தனர். நானும் நமது மையதொண்டர்களை அவ்விடம் விட்டுச் சென்று விடுமாறு கூறினேன்.

அதற்கு அவர்கள் என்ன பதிலுறுத்தார்கள் தெரியுமா? "குருதேவ், நாங்களும் எங்கள் கடமையைப் புறக்கணித்து ஓடி விட்டால் காயமுற்று இருக்கும் இம்மக்களை யார் கவனித்துக் கொள்வார்கள்? ஒவ்வொரு நாளும் 700 பேருக்கு மருத்துவ வசதி தேவைப்படுகின்றது. நாங்கள் இங்கேயே இருந்து  இவர்களைக் கவனித்துக் கொள்கின்றோம். தாங்கள் எங்களை நேசிக்கின்றீர்கள். எங்களைக் காக்க இறைவன் இருக்கின்றான்." என்று கூறினார்கள். 

போரினால் ஏழுலட்சம் பெண்கள் விதவையர் ஆனார்கள்.அங்குள்ள நிலவரத்தை காண நான் மூன்று முறை இராக் சென்றேன். அங்குள்ள மக்கள் தங்கள் பகுதிகளில் பெரிய தடித்த சுவர்களை எழுப்பியுள்ளனர். ஷியா பகுதி தனியாகவும்,சுன்னி பகுதி தனியாகவும் உள்ளன. எங்களுடன் ஒரு சுன்னி இமாமை (மதத்தலைவர்) அழைத்துக்கொண்டு ஒரு கிராமத்திற்குச் சென்றோம் அங்கு 8000 மக்கள் போரின் காரணமாக தப்பி வந்தவர்கள். அங்குள்ள மக்களிடமும், தலைவர்களிடமும் ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் பேசினோம். அவர்கள் புரிந்து கொண்டு எங்களை வரவேற்றனர். மெதுவாக ஒரு அமைதியான சூழல் உருவாக்கப்பட்டது. இராக்கிய அரசு 50 இளைஞர்களை பயிற்சிக்காக நமது பெங்களூரு ஆஸ்ரமத்திற்கு அனுப்பி வைத்தது. அவர்கள் அனைவருக்கும் குடும்பமும்,பணியும் இருந்தன, ஆயினும் அவர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்தின் பொருட்டு பயிற்சிக்காக வந்தனர்.

இன்று பல போர்கள் ஏற்படுவதற்குக் அமெரிக்க போர் தளவாடங்கள் செய்யும் தொழிற்சாலைகள் காரணமாக இருக்கின்றன. அவர்கள் தங்களது பொருட்களை விற்றாக வேண்டும் இல்லையெனில் அத்தொழிற்சாலைகள் மூடப் பட்டுவிடும். அத்தொழில்சாலைகளில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் இவை தயாரிக்கப்பட்டு போரின் இருதரப்பினர்க்கும் விற்கப்பட்டு, போர் செய்ய ஊக்குவிக்கப் படுகின்றன. இந்தியாவும் அதை செய்யலாம். ஹிந்துக்களும்,இஸ்லாமியரும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிடச் செய்ய முடியும். அவ்வாறு செய்வதில்லை. எல்லா தொழிற்ச்சாலைகளையும் பற்றிக் கூறவில்லை. உலகெங்கும் உள்ள துப்பாக்கி வெடிகுண்டு பிரச்சாரத்தைப் பற்றி மட்டுமே கூறுகின்றேன். இது ஒரு நாட்டில் மட்டுமல்ல. எங்கிலும் இது பரவிக் கொண்டிருக்கின்றது. ஏன் இவ்வாறு நிகழ்கின்றது? ஏனெனில் மனித நேயப் பண்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை.மேலும் மேலும் பணம் ஈட்டுவதை மட்டுமே பார்க்கின்றார்கள். சிரியா, இரான் போன்ற நாடுகளில் இதுவே நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது. இதைக் காண மிகவும் வருத்தமாக உள்ளது. நமது நாட்டில் அஸ்ஸாம், நாகாலாந்து ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களிலும் இவ்வாறே நிகழ்ந்து வருகின்றது.

வாழ்க்கை மிகவும் குறுகியது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.அன்பு செலுத்தப் போதிய காலம் இல்லாத போது ஏன் வெறுப்பையும், ரத்தம் சிந்துதலையும் எல்லா இடங்களிலும் பரப்பவேண்டும்? எங்கு அனைவரும் சுதந்திரமாக தங்களது சமயத்தை பின்பற்றி பிறருடன் ஒத்திசைந்து வாழ்கின்றனரோ, அங்கே ஓர் புதிய உலகம் தோன்றுகின்றது. இந்தியாவில் அவ்வாறே உள்ளது.ஏன் இந்தியர்கள் ஆண்,பெண் தெய்வங்களை வழிபடுகின்றார்கள் என்று சிலர் கேட்கலாம். இது தவறான புரிதல் ஆகும். ஒரே இறை, தனிப்பட்ட இணைப்பையும், ஆழ்ந்த ஒருமையையும், அடைவதற்காக தங்களுடைய சொந்த வழியில் மக்கள் வழிபடுகின்றார்கள், அதனாலேயே பல இறை உருவங்களும்,பல பெயர்களும் இருக்கின்றன.உருவ வழிபாட்டின் போது அக்கற்சிலையை வழிபடுவதில்லை,பின்புலத்தில் உள்ள இறைமையையே வழிபடுகின்றார்கள். இது எவ்வாறெனில், நமது அன்புக்குரியவர்களின் புகைப்படத்தை நாம் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்கின்றோமே அதைப் போன்றது ஆகும். நமது குழந்தைகளின் படத்தை வைத்துக் கொண்டிருக்கின்றோம். அவர்கள் அங்கில்லாவிடினும் ஒரு தீவிர தொடர்பு ஏற்படுகின்றது. அது போன்றே தெய்வ சிலைகளும் ஆகும். தெய்வச் சிலையானது இறைமையுடன் ஒரு இணைப்பை உருவாக்கவே ஏற்படுத்தப்பட்டதாகும்.

தாராள மனப்பான்மை : வெற்றிக்கு ஒரு திறவுகோல்

செவ்வாய்க்கிழமை, 

30 ஆகஸ்ட் 2014.

(வெற்றின் உண்மையான அடையாளம் என்னும் பதிவின் தொடர்ச்சி)

உளவியலாளர்கள் என்ன கூறுகிறார்கள் தெரியுமா? பத்து நிமிடங்களுக்கு மேல் ஒரு பேச்சாளர் பேசினால் கேட்பவர்கள் மூன்று முறை இடைவெளி எடுத்துக் கொள்கின்றார்கள். கவன பற்றாக்குறை ,இக்காலத்தில் நமது இளைஞர்களுக்கு பெருமளவில் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல்வேறு விதமான பதிவுகள் மூளையில் ஆக்கிரமித்து கொண்டிருக்கின்றன. அதனால் தான் கவனப்பற்றாக்குறை, மனச் சிதைவு ஆகியவை அதிகரித்துக் கொண்டு வருகின்றன.நமது மன நலத்தினை காப்பது மிகவும் முக்கியமானது ஆகும். பல் சுத்தம் மாதிரி மன சுகாதாரம் முக்கியம் ஆனால் அதற்குப் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை.

இரு நூற்றாண்டுகளுக்கு முன்பு சில பகுதிகளில் பற்கள் அனைத்தும் உடைய மனிதர்களைக் காண்பது அரிது ஏனெனில் அவர்கள் தினமும் பல் துலக்க மாட்டார்கள், இது உலகெங்கிலும் அல்ல, சில பகுதிகளில் மட்டும். இன்று அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடைந்திருப்பவை பல் பசையும் பல்துலக்கும் பிரஷும் ஆகும். இது போன்றே நாம் மக்கள் அனைவருக்கும் எவ்வாறு மனதை சுகாதாரமாக வைத்திருப்பது என்னும் கல்வியினை அளிக்க வேண்டும்.இது மன சுகாதாரம் என்று அழைப்படும். தியானம் ஒரு வகையில் மன சுகாதார வழி. அது உங்களை விவேகத்துடன் வைத்திருக்கும். அந்நிலையில் நீங்கள் மகிழ்வுடன் இருக்கின்றீர்கள், உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றது.

சூழ்நிலை மகிழ்ச்சியற்று இருக்கும் போது ஒருவன் தான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? ஒரு குடும்பத்தில் ஒருவர் மகிழ்ச்சியற்று இருந்தால் கூட மற்ற அனைவரும் மகிழ்ச்சியற்றே இருக்கின்றார்கள். மகிழ்ச்சி என்பது பரவ வேண்டும். அவ்வாறு பரவ வில்லையெனில் விரைவில் அது இறந்துவிடும். அடுத்து, மகிழ்ச்சியின் இயல்பு பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். நீங்கள் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்தால், என்ன செய்கின்றீர்கள்? " ஒ ! யாரும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்! நான் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்து விட்டு வந்திருக்கின்றேன்" என்று கூறமாட்டீர்கள்.  அவ்வாறு கூறுவீர்களா? (அவையோர் இல்லை என்று கூறுகிறார்கள்) நல்ல எதையும் பார்த்தால், உடனே என்ன செய்கின்றீர்கள்? அனைவரிடமும் அது மிக நன்றாக இருக்கின்றது அவர்களும் அதைப் பார்க்க வேண்டும் என்று கூற விரும்புவீர்கள். மகிழ்ச்சியின் இயல்பே பகிர்ந்து கொள்ளுதலும் தருவதும் தான்.

இரண்டு விதமான மகிழ்ச்சிகள் இருக்கின்றன.முதலாவது பற்றிக் கொள்ளுதல் அல்லது எடுத்துக் கொள்ளுதல். இந்த வகையுடன் தான் நாம் அனைவரும் பிறந்தோம்.ஒரு குழந்தை அனைத்தையும் எடுத்துக்கொண்டு மகிழ்கின்றது. இது குழந்தைப் பருவ மகிழ்ச்சி நிலை. உடைமையின் தேவை.ஒரு குழந்தையை பொம்மைக் கடைக்கு அழைத்துச் சென்றால், அக்கடை முழுவதையுமே வீட்டிற்குக் கொண்டு வர விரும்பும். இது குழந்தையின் ஆனந்தம்.

பின்னர் சற்றே முதிர்ந்த மகிழ்வு நிலை. இது உங்கள் தாத்தா பாட்டியின் மகிழ்வு நிலை. பாட்டி தனியாக இருக்கும் போது அதிகமாக சமைக்க மாட்டார்கள். ஆனால் பேரன் பேத்திகள் வந்தால் பாட்டியின் உற்சாகத்தை பாருங்கள்! பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்களை செய்து பேரன் பேத்திகளுக்கு ஊட்டுவதில் ஆனந்தம் அடைவார்கள். இது முதிர்ந்த இன்ப நிலை. தருவதில் அடையும் ஆனந்தம். மகிழ்ச்சியும் வெற்றியும் உங்களது கொடுக்கும் திறனில் அடங்கியுள்ளது. இத்தகைய கொடுக்கும் திறன் உங்களது விழிப்புணர்வு நிலையில் உங்கள் மனதில் இருக்கின்றது.  நீங்கள் கொடுக்கும் பொருள் முக்கியம் அல்ல, பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மைதான் முக்கியம். 
உலகெங்கிலும் பல தொழில் அதிபர்கள் கொடுப்பதில் மகிழ்ச்சியுருவதை பார்த்திருப்பீர்கள். ஏன் கொடுக்கின்றார்கள்? கொடுப்பது அவர்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது.  ஒப்பற்ற திருப்தியினை அளிக்கின்றது. கொடுத்தல் உங்களுக்குக் கொடுக்கும் மகிழ்ச்சி ஒப்பற்றது. எவன் கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை ருசிக்கின்றானோ வெற்றி பெற்ற மனிதன் ஆவான். அவ்வாறு ருசித்தவன் அந்த மகிழ்ச்சியைப் புரிந்து கொண்டு கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். அதுவே வெற்றியின் அடையாளம்.

வெற்றி அடைந்த பின்னரே கொடுக்க வேண்டும் என்பது அல்ல. அதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக கொடுப்பதில் சிறப்புப் பெற்ற இந்நாட்டில், அரசாங்கம் பெரு நிறுவன சமூகப் பொறுப்பு என்பதை சட்டமாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து தொழில் முனைவோரும் அவர்களது லாபத்தில் 2 முதல் 3 சதவீதம் வரை கட்டாயமாக கொடுக்க வேண்டும். இது சட்டம். பாருங்கள் எவ்வாறு நற்பண்புகள் மறைந்து விட்டன? இது நமது மரபணுக்களிலேயே உள்ள ஒன்று. நாம் எப்போதுமே சமுதாயத்திற்கு கொடுத்து வந்தோம். எனவே, மகிழ்ச்சியும் வெற்றியும் நமது கொடுக்கும் திறனிலே அடங்கியுள்ளது. இத்தகைய கொடுக்கும் திறன் உங்களது விழிப்புணர்வு நிலையில் உங்கள் மனதில் இருக்கின்றது. நீங்கள் கொடுக்கும் பொருள் முக்கியம் அல்ல, பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மைதான் முக்கியம்.

வினாக்களும் விடைகளும்

குருதேவ்,  கேலிவதை என்பது இப்போது கல்லூரிகளில் ஒரு பெரிய பிரச்சினை ஆகி விட்டது. நமது மகிழ்ச்சி திட்டப்பயிற்சியில் இளைஞர்களை தயவு செய்து அதற்கெதிராக கூருணர்ச்சிப்  படுத்துங்கள்.

குருதேவ்: ஆம் நிச்சயமாக. ஏன் கேலி வதை செய்கின்றார்கள் தெரியுமா? ஒரு வேடிக்கைக்காக. பல விதங்களில் வேடிக்கை செய்யலாம்,ஆனால் மற்றவர்களைக் கஷ்டப்படுத்துவதன் மூலம்  அல்ல. நீங்கள் தொழில்நுட்ப மாணவர்கள். புதுமையாக எதுவும் செய்யுங்கள்,ஆனால் மற்றவரின் வாழ்க்கையையோ , மனதையோ பாதிக்கும் வகையில் அல்ல.

குருதேவ் என்னுடைய வாழ்க்கை மிகுந்த நிச்சயமற்றதாக இருக்கின்றது. என் வாழ்வின்   குறிக்கோள் என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை. என்னுடைய சுற்றுச் சூழலினால் நான் எளிதாக வசியப்படுத்தப் படுகின்றேன். எனக்கு சரியான பாதையைக் காட்டுங்கள்.

குருதேவ்: ஒரு மாணவனின் முதல் குறிக்கோள் படிப்பில் சிறப்புற்று, ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொள்வதே. அதே சமயத்தில் பல அம்சங்களிலும் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு இதுவே சிறந்த பருவம். படிப்பு மட்டுமே உங்களுக்கு முழு திருப்தியை அளிக்காது. கூடுதல் கல்விசார் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள், ஆனால் உங்களது முக்கிய கவனத்தை அவை திசைதிருப்பி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

படிப்பிலேயே உங்கள் முக்கிய கவனம் இருக்கட்டும்.“ஒ! எனக்கு இது பிடிக்கவில்லை இதை விட்டுவிட வேண்டும்” என்றெல்லாம் எண்ணாதீர்கள். அது ஒரு போதும் வேண்டாம். மாணவர்கள் என்னிடம் வந்து இவ்வாறு கூறும் போது நான் எப்போதுமே அவர்களிடம், முதலில் படிப்பை முடியுங்கள். என்ன எடுத்துக் கொண்டீர்களோ அதைப் படித்து முடித்துப் பட்டம் வாங்குங்கள்.   பின்னர் தான் அனைத்தும் என்றுதான் கூறுவேன்.

ஒரு சிறு தோல்வி கூட என்னுடைய நம்பிக்கைக்கு இடையூறு  உண்டாக்குகின்றது.  நான் என் வாழ்வில் பல தோல்விகளைச் சந்தித்திருக்கின்றேன். எவ்வாறு என்னை ஊக்கம் குறையாமல் காத்துக் கொள்வது?

குருதேவ்: உங்கள் மீது மிகக் கடுமையாக இருக்காதீர்கள். ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி வைக்கு ஒரு அடியாகும்.இன்று உலகில் உள்ள எத்தனையோ வெற்றியாளர்கள், தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தில் எவ்வளவு தோல்வி அடைந்திருக்கின்றார்கள் தெரியுமா? உலகெங்கிலும் அதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

ஒரு போட்டியில் நீங்கள் தோல்வி அடைந்தால் நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் தெரியுமா? வேறொருவர் வெற்றி பெற நீங்கள் வழி வகுத்திருக்கின்றீர்கள் என்று எண்ண வேண்டும். வாழும் கலையில் நான் எப்போதுமே கூறுவேன்," நாம் வெற்றியை பெற அல்லது வேறொருவர் வெற்றி பெற விழைகிறோம்" தோல்வி என்பதே கிடையாது.வேறொருவரை வெற்றி பெறச் செய்வதும் ஆனந்தம் தான். நீங்கள் பரிசு பெற்று உங்கள் நண்பர்கள் பெறவில்லையெனில் அதைப் பற்றி நீங்கள் மகிழ்வீர்களா? இல்லை.வெற்றி பெறும்போது பிறரும் அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றே நீங்கள் விரும்புகின்றீர்கள். எனவே இவ்வாறு எண்ணுங்கள். ஒரு போட்டியில் யாரேனும் வெற்றி பெற்றால் அவர்களுடன் மகிழ்வினைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொழிலை ஆர்வமாக கொள்ளுவது என்பது எவ்வளவு முக்கியம்?

குருதேவ்: தொழிலில் நீங்கள் அதிக வெற்றிகாணும் போது அதுவே உங்களது ஆர்வமானதாக ஆகி விடுகின்றது. எதில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கின்றதோ அதுவே உங்கள் தொழில் ஆகி விடுகின்றது. நீங்கள் ஒரு எஞ்சினியராக இருந்து சங்கீதத்தில் ஆர்வம் இருந்தால், அதை நீங்கள் தொடரும் போது ஒரு சங்கீத வித்வான் ஆகி விடுவீர்கள். ஆர்வமும் செய்யும் தொழிலும் ஒன்றாக இருந்தால் அதுதான் வெற்றிக்கான சூத்திரம்.

நான் வெற்றியாகவும் மகிழ்ச்சியாகவும் உணரும் போது ஏற்படும் கர்வத்தை எவ்வாறு கட்டுப் படுத்துவது? தியானம் தவிர மனதை அமைதியாகவும் மகிழ்வாகவும் வைத்திருக்கும் பிற வழி முறைகள் யாவை?

குருதேவ்: கர்வம் உள்ளவர்கள் பாதுகாப்பின்றி உணருவார்கள்.போதுமான அளவு அறிவு இருக்காது. ஆனால் உங்கள் வாழ்க்கை விரியும் போது,மாறும் போது, கர்வம் ஏற்பட இடம் ஏது? வாழ்க்கையை முழுமையான கண்ணோட்டத்தில் காணும் போது கர்வம் ஏற்படாது. பல கோடிக்கணக்கான மக்கள் பிறந்து இறந்து விட்டார்கள். இன்னும் பிறந்து வருவார்கள். கர்வம் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக என்ன செய்து விட்டீர்கள்? அனைவரையும் போன்று,நீங்களும் மண்ணுக்குள் போகின்றீர்கள். நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்பதை பற்றி விழிப்புணர்வு அடையவில்லை என்றே எண்ணுகின்றேன். மயானத்தில் ஒரு முறை நடந்து சென்று அங்கு தான் நீங்களும் ஒரு நாள் போகப் போகின்றீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எந்த அகந்தையும் நிலைத்திருக்காது. பணிவு, சார்பு உணர்வு ஒரு தானியங்கி நிகழ்வு ஆகும். இது நமது வாழ்க்கையின் ஒரு எளிய விழிப்புணர்வு ஆகிறது.இது நிகழ நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்.