நீங்கள் எதை உபதேசம் செய்கிறீர்களோ அதை கடைப்பிடிக்க வேண்டும்

ஆகஸ்ட் 30, 2014

டெல்லி, இந்தியா


(ஜாமியா மில்லியா இஸ்லாமியா  பூஜ்ய ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களுடன் ஒரு உரையாடல் ஏற்பாடு செய்திருந்தனர். ஸ்ரீ ஸ்ரீ உலக அமைதி மற்றும் ஒற்றுமை பற்றி பேசினார். அதைத் தொடர்ந்து தியானம் நடைபெற்றது. அதன் பிறகு ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அடங்கிய சுமார் 400 பேர் ஸ்ரீ ஸ்ரீ அவர்களுடன் கேள்வி பதில் நேரத்தில் உரையாடினர்)

நீங்கள் அழகான மலர்க் கொத்துடன் என்னை இந்த மேடையில் வரவேற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த இனிய செயலின் மூலம் நான் உங்களுக்கு சொல்ல விரும்பியதை நீங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள். இந்த மலர்க் கொத்தை போலவே  நம்முடைய உலக சமுதாயமும் ஒரு மலர்க்கொத்தே. இங்கே சிவப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்கள் உள்ளன. ஆகவே ஒரு மலர்க் கொத்து பல்வேறு மலர்களையும் பல்வேறு நிறங்களையும் கொண்டதாக உள்ளது. நாம் இதை மறந்து அனைத்து மலர்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது தான் பிரச்சினைகள் தொடங்குகின்றன. 

அமைதி உண்டாக வேண்டும் என்றால் தனி மனித அமைதி நிலவ வேண்டும். நான் அமைதியாக இல்லை என்றால் நான் செல்லும் இடங்களில் எல்லாம் என்னால் அமைதியை பரப்ப இயலாது. தனி மனிதன் எப்போது அமைதியாக இருக்க முடியும்? அவனோ அல்லது அவளோ மன அழுத்தம் இன்றி இருக்கும் போது மட்டுமே அது இயலும். இன்று வீடுகள் எங்கும் இதே காட்சிகள் தான் நிலவுகின்றன. ஒரு வீட்டில் 5 அல்லது 10 பேர் ஒன்றாக வசிக்கிறார்கள் என்றால் ஒவ்வோருவரும் அவரவர்களுக்கான எண்ணங்கள் மற்றும் நம்பிக்கைகளுடன் கூடிய பிரத்தியேக உலகில் வாழுகின்றனர். அவர்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றங்களோ அல்லது சாதாரணமாக புரிந்து கொள்ளுதல்களோ இல்லாது போகும் போது தான், சண்டை சச்சரவுகள் உண்டாகின்றன.   

நமக்குள்ளே அமைதியாகவும் ஆனந்தமாகவும் இல்லை என்றால், எப்படி அவற்றை வெளியே பரவச் செய்யலாம் என்று நினைக்க முடியும். நமக்குள்ளே அமைதியை உண்டாக்க நமக்கு என்ன தேவை. முதலாவதாக மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை அவசியம். வாழ்வில் மன மழுத்தம் ஏற்படுவது இயல்பே. மன அழுத்தம் என்றால் என்ன? நாம் அதை எப்போது உணருகின்றோம்? நாம் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாகவும், அதற்கான நேரம் மிக குறைவாகவும் இருக்கும் போதும் அல்லது அதை செய்வதற்கான சக்தி நம்மிடம் இல்லை என்று நினைக்கும் போதும் மன அழுத்தம் ஏற்படுவதை உணருகின்றோம்.  

அநேகமாக, வாழ்க்கையில் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு நீங்கள் உங்களுடைய தேவைகளையும் பொறுப்புகளையும் குறைத்துக் கொள்ளலாம் அல்லது அதை சமாளிக்கும் மாற்று வழி உங்கள் சக்தியை அதிகரித்துக் கொள்ளுவதே. நான் சக்தி என்று கூறுவது உடல் வலுவை அல்ல, அது மனதளவிலும் உணர்ச்சிரீதியாகவும் உங்கள் வலுவை குறிக்கின்றது. ஆகவே நாம் நம்முடைய வலிமையையும் சக்தியையும் அதிகரிப்பது என்று சிந்திக்க வேண்டும். நமக்குள்ளே நம்முடைய சக்தியை அதிகரிக்கும் பல நுட்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நுட்பங்களை உபயோகிப்பவர்கள் இந்த நாட்டில் அதிகம் பேர் இல்லை. மேலும் துரதிருஷ்டவசமாக அவர்கள் எல்லோரிடத்திலும் அதை பகிர்ந்து கொள்ளுவதில்ல.  

இந்தியாவில் நாம் பல மதங்களாலும், ஜாதிகளாலும் பிரிக்கப்பட்டிருக்கின்றோம். குடும்பத்திற்கு உள்ளேயே பேராசையினாலும் தனிப்பட்ட நோக்கங்களினாலும் நாம் பிரிக்கப் பட்டிருக்கின்றோம். மக்கள் "நான் இந்த நுட்பங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது"என்று  நினைக்கிறார்கள்.   இது தவறு. ஒருவர் ஏன் அவ்வாறு சொல்ல வேண்டும்? உண்மையில் நீங்கள் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். உங்கள் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தி மன அழுத்தத்தினை குறைக்க உதவி புரிகின்றதென்றால் நீங்கள் இதே பயிற்சியினை மற்றவர்களுக்கும் கற்பித்து அதன் மூலம்   அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால் நாம் இந்த நுட்பங்களை மற்றவர்கள் அறிந்து கொள்ள விடாமல் அவற்றை இரகசியமாக வைத்து விடுகின்றோம். 

ஆகவே நான் இவை, இவ்வாறு இருக்க வேண்டியவை அல்ல என்று சொன்னேன். ஒருவரது உடல் நலத்தையும்,வாழ்வையும் மேம்படுத்தக்கூடிய மூச்சுப்பயிற்சிகள், உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் போன்ற நுட்பங்கள் அனைவருக்கும் கற்பிக்கப்பட வேண்டும். சாமானிய மனிதன் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழவதற்கும், அவனை சுற்றியுள்ள மக்கள் அனைவருடனும் நல்லிணக்கத்தை நிலவுவதற்கும், உலகிலுள்ள மக்கள் ஒவ்வொருவரும் இவற்றை அறிந்து இந்த நுட்பங்களின்  பயனைப் பெறவேண்டும்.

இந்தியாவில் 'உலகம் முழுவதும் ஒரே குடும்பம்' என்று பொருள்படும் "வாசுதேவ குடும்பகம்" என்ற சொற்றொடரில் நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். எப்போது உண்மையிலேயே ஒரே குடும்பமாக முடியும்? ஞானத்தை பரப்புவதன் மூலம் ஒவ்வொருவரும் அமைதி பெற்று அனைவரையும் சொந்தமாக அன்போடு அரவணைத்துக் கொள்ளும் போது தான் அது இயலும். 
நாம் உபதேசம் செய்வதற்கும் வாழ்வில் கடைபிடிப்பதற்கும் இடையே வேறுபாடு இருக்கக் கூடாது. ஒருவர் தன்னுள் எதை நம்புகின்றாரோ அதையே வெளியில் கடைபிடிக்க வேண்டும். இந்த அணுகு முறை பெரும் ஆத்ம சக்தியை அளிக்கும். இதுவே மாபெரும் சக்தி.  இதனைப் பயன்படுத்தி நாம் வாழ்வில் வெற்றியை நோக்கி நடை போடலாம்.   

உங்களிடம் சொல்லிக்கொண்டும் நீங்கள் கவனித்து கொண்டும் இருக்கும் இக்கணத்தில் கூட    உங்களுக்குள் இருக்கும் மனம் "ஆம், இது சரி என்றோ அல்லது "இல்லை, இது சரியில்லை"     என்றோ தொடர்ந்து விவாதம் செய்து கொண்டிருக்கின்றது. ஆக, உங்களுக்குள்ளும் உரையாடல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது இல்லையா? இது மிகவும் முக்கியமானது. நாம் இதைப் பற்றி அறிந்திருப்பது அவசியம்.  

என்ன சொல்கின்றேனோ, நீங்கள் ஒத்துப் போகின்றீர்களா இல்லையா என்பது முக்கியமில்லை.  ஆனால் உங்கள் மனம் என்ன சொல்கின்றதோ அதை நீங்கள் ஒத்துக் கொள்கின்றீர்களா? அதுவே முக்கியம். இதுவே விழிப்புணர்வு என்பதன் அர்த்தம் ஆகும். இதை நாம் விழித்தெழுந்த அறிவாற்றல் என்னும் பொருள் கொண்ட ' ப்ராஜ்னா ' என்றும் சொல்கின்றோம்.  நமக்கு உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் விழிப்புணர்வோடு உற்று நோக்குகின்றோம் என்பதே இதன் பொருள் ஆகும்.

கல்வியினுடைய உண்மையான அர்த்தமும் குறிக்கோளும் இந்த விழிப்புணர்வை அதிகரிப்பதே ஆகும். கல்வி என்பது வெறுமனே தகவல்களை சேகரிப்பது மட்டுமே அல்ல. கல்வி என்பது ஒரு மனிதனை மனிதாபிமானம் உள்ளவராக செய்வது. கல்வி ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக இருக்கும் திறன், இருவருக்குள் ஏற்படும் மோதல்களை வன்முறையற்ற அணுகு முறையில்  தீர்த்தல் மற்றும் அனைவருக்கும் நன்மை தரும் விதமாக பிரச்சினைகளுக்கு பரஸ்பர தீர்வு கொண்டு வருதல் ஆகியவற்றை அளிப்பது.     

சற்று சிந்திக்கவும்! இன்று இந்த உலகமெங்கும் அதிக சச்சரவும் கலவரமும் மிகுந்துள்ளன. காசா, ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் என்ன நடக்கின்றது என்று பாருங்கள்! இங்கெல்லாம் நடக்கும் சம்பவங்கள் பற்றி இந்திய ஊடகங்கள் விரிவான அறிக்கைகள் தராமல் இருப்பது நல்லதே.ஆனால் உலகத்தில் மற்ற ஊடகங்களில் இவைகளை பற்றிய மிக விரிவான அறிக்கைகள் வருகின்றன. அவை மனஅமைதியை கெடுக்கும். என்னைப் பொறுத்தவரை கல்வியினுடைய உண்மையான அர்த்தமும் குறிக்கோளும் இந்த விழிப்புணர்வை அதிகரிப்பதே ஆகும். கல்வி என்பது வெறுமனே தகவல்களை சேகரிப்பது மட்டுமே அல்ல. அதை ஒரு கணினி கூட செய்யக்கூடும்.  

தீர்க்கதரிசி முஹம்மத் ஒரு முறை கோரினார். " குளிர்ந்த காற்று கிழக்கு திசையில் இந்தியா) இருந்து வருவதை என்னால் உணர முடிகிறது. என்னால் அதற்கான காரணத்தை அறிய முடிகிறது. கிழக்கில் இருந்து வரும் காற்று சண்டையும் சச்சரவும் கலந்த சூடான காற்றாக இல்லாமல், எபோதுமே அமைதி ஒற்றுமை ஆகியவற்றால் ஆன குளிர்ந்த காற்று ஆகும்." இதை அவர் 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். ஆனால் இன்றைக்கும் இந்த நிலையை பராமரிக்க நான் ஈடுபாடு கொண்டுள்ளேன்.

இந்த உலகமே பின்பற்றக்கூடிய ஒரு முன்மாதிரி நாடாக இந்தியா உருவாக வேண்டும். வேறுபட்ட மதங்களை பின் பற்றுபவர்களை எப்படி நம்மால் ஒன்று சேர்க்க முடியும்? உண்மையில் வேறுபட்ட மதங்களுக்கு இடையே இப்போதைக்கு எந்த மோதலும் இல்லை. தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படும்போதோ அல்லது ஒருவருக்குள் மன அழுத்தம் இருக்கும் போதோ, அது வெளியில் நம்மை சுற்றி இருப்பவர்களிடம் மோதலை ஏற்படுத்துகிறது.இது பல குடும்பங்களிலும் நடக்கின்றது. குடும்பத்தில் உள்ள சகோதரர்களுக்குள் கடுமையான சண்டைகள் நடக்கின்றன.எனவே நமக்குள்ளே அமைதியை அடையும் வரை, நம்மால் நமக்கு வெளியே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியாது. மேலும் உலக அமைதியும் ஏற்படாது, நம்முடைய சொந்த வாழ்க்கையிலும்   நாம் முன்னேற முடியாது. இப்போது அமைதியை கொண்டு வருவதற்கு எல்லோருடைய முயற்சிகளும் தேவை. எவ்வளவு குறைந்த அளவில் செய்ய முடியுமோ, அதை செய்தாலே போதும்.

இப்போது நீங்கள் அனைவரும் இங்கேயே செய்யக் கூடிய ஒரு பயிற்சியை கொடுக்க போகிறேன். நீங்கள் அனைவரும் அதில் கலந்து கொள்வீர்களா? சொல்லப் போனால் நான் சேர்ந்தாற் போல் இரண்டு பயிற்சிகள் தரப்போகிறேன். நீண்ட விரிவுரைகளை தருவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நடைமுறை அனுபவத்தையே நான் நம்புகிறேன். உங்களை சுற்றி இருப்பவர்களை பார்த்து நான் உங்களை சேர்ந்தவர் என்று சொல்லுங்கள்.எல்லோரும் செய்து விட்டீர்களா? நீண்ட்கள் உங்களுக்கு முன்னாலும் பின்னாலும் அமர்ந்திருப்பவருக்கு வணக்கம் செய்யவும். பக்கத்தில் இருப்பவரிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்க வேண்டாம். இப்போது நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன்   நீங்கள் மற்றவர்களுக்கு வணக்கம் தெரிவித்த  போது அதை நீங்கள் உண்மையான அர்த்தத்துடன் தான் கூறினீர்களா அல்லது மேலெழுந்தவாரியாக செய்தீர்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள். நீங்கள் இதை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. 
   
தெரியுமா! வாழ்க்கையிலும் இப்படித்தான் நடக்கின்றது. பல சமயங்களில் நாம் "மன்னிக்கவும்" அல்லது "நன்றி" என்று சொல்லும்போது மேலெழுந்தவாரியாகவே சொல்லுகின்றோம். அது இதயத்தில் இருந்து வருவதில்லை. நீங்கள் விமானத்தில் இருந்து வெளியே வரும்போது விமான பணிப்பெண் உங்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கட்டும் என்று பிரியாவிடை அளிக்கிறாள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் உங்களுக்கு அன்று நல்ல நாளாக இருக்கப் போகிறதா இல்லையா என்று கவலைப்படுவதில்லை. ஆனால் இதையே நீங்கள் உங்களுடைய தாயிடம் இருந்தோ அல்லது தாத்தா பாட்டியிடம் இருந்தோ கேட்டால் அவர்கள் அதை வெளிப்படுத்தும் முறையில் வித்தியாசம் உணருகிறீர்கள். அவர்கள் அதை உங்களிடம் சொல்லும் நீங்கள் அது வேறுபட்ட அதிர்வு நிலையில் இருப்பதையும் அதில் ஒரு அரவணைப்பு இருப்பதையும் உணருகிறீர்கள். அவர்கள் மேலெழுந்தவாரியாக சொல்வதில்ல. அவர்கள் அதை முழு மனதோடு கூறுகிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அவர்களுடைய ஆசீர்வதங்களில் நல்ல விளைவுகள் தரக்கூடிய ஏதோ இருக்கின்றது.

நீங்கள் அன்பில் ஊறியிருக்கும் போது நீங்கள் அன்பை வெளிப்படுத்துகிறீர்கள், உங்களை சுற்றி இருப்பவர்களும் அதை உங்களுக்கு பிரதியுபகாரமாக அளிப்பார்கள். இது இயற்கையின் விதி.   
நாம் எப்போதும் நம்மை சுற்றி அதிர்வலைகளால் சூழப்பட்டிருக்கிறோம். அமைதி! அமைதி! அமைதி! என்று எப்போதும் சப்தம் போடுவது நம்மை சுற்றியுள்ள சூழலை அமைதிப்படுத்தாது. அந்த மாதிரியானவர்களுக்கு அவர்களுடைய குரலிலும் அமைதி இருக்காது அவர்கள் அங்கு இருப்பதிலும் அமைதி இருக்காது. நாம் நம்முடைய வார்த்தைகளை விட அங்கு இருப்பதிலேயே அதிகம் தெரிவிக்கின்றோம்.

மொழி தெரியாததனால் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய குழந்தை பேச முடியாது.ஆனால் உங்கள் கண்களை பார்ப்பதன் மூலம் அந்த குழந்தை அனைத்து அன்பையும் உணர்ச்சிகளையும் தெரிவிக்கின்றது. உதாரணத்திற்கு வீட்டிலே இருக்கும் நாயின் அனுபவத்தை எடுத்துக் கொள்வோம். நீங்கள் உங்கள் அலுவலகம் அல்லது பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது அது உங்களை சுற்றி சுற்றி வருகிறது, உற்சாகத்தில் உங்களை நோக்கி குதிக்கிறது. அது அதனுடைய அனைத்து அன்பினையும் தன்னுடைய அதிர்வுகளினால் காட்டுகின்றது. யாராவது ஒருவர் உங்களுக்கு தன்னுடைய அன்பை 100 வார்த்தைகளில் சொன்னாலும், அது அதே அளவான உணர்வையும் பலனையும் தராது. எனவே நம்முடைய அதிர்வுகள் ஆக்கபூர்வமாக இருக்க நமக்கு மூன்று விஷயங்கள் தேவைப்படுகின்றன

1. தெளிவான மனம்
2. தூய்மையான இதயம்
3. நேர்மையான  செயல்

உங்கள் மனத்திலும் எண்ணங்களிலும் நீங்கள் தெளிவாக இருக்கவேண்டும். உங்கள் இதயம் தூய்மையாக இருக்க வேண்டும். மேலும் உங்கள் செயல்களில் நேர்மை இருக்க வேண்டும். நீங்கள் எதை செய்தாலும் அதை உங்கள் மனதுடனும் இதயத்துடனும் 100% செய்யவேண்டும் சரி, நாம் இன்னொரு பயிற்சி செய்யலாம். உங்களுக்கு அருகில் அமர்ந்திருப்பவரிடம் "எனக்கு உங்கள் மீது நம்பிக்கையே கிடையாது" என்று சொல்லவும். உங்கள் அனைவராலும் அதை செய்யமுடிந்ததா?  உங்களில் பலரால் அதை செய்ய முடியவில்லை அல்லவா? நீங்கள் அதை செய்ய முயற்சி செய்தாலும், நீங்கள் இருவருமே சிரிக்க ஆரம்பித்து விடுகிறீர்கள். இபோது நீங்கள் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு இந்த உலகத்தில் உள்ள அனைவருமே உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லுவதாக கற்பனை செய்து பாருங்கள். அனைவரும் உங்களை சந்தேகக்கண்ணோடு பார்ப்பதாக கற்பனை செய்யுங்கள். இதை ஒரு 30 வினாடிகள் செய்து பாருங்கள். இப்போது கண்களை திறக்கவும். உங்களுக்கு எப்படி இருந்தது? உள்ளுக்குள் நீங்கள் மிகவும் மோசமாக உணர்ந்தீர்கள் இல்லையா? 

யாரும் நம்மை ஐய உணர்வோடும் சந்தேகத்தோடும் பார்ப்பதை நாம் விரும்புவது இல்லை, ஆனாலும் நாம் பலரை அந்த மாதிரியாக பார்க்கின்றோம். நம்மை சுற்றி அந்த மாதிரியான அதிர்வுகளை உருவாக்குகின்றோம். மற்றவர்களும் அதே அதிர்வுகளை பிடித்துக் கொள்ளுகின்றனர் நாம் சந்தேகத்திலும் ஐய உணர்விலும் பிடிபட்டிருக்கும் போது, நம்மை சுற்றி உள்ளவர்களிடமும் அதே உணர்வை தான் உருவாகுகின்றோம். நீங்கள் அன்பில் நனைந்திருக்கும் போது, நீங்கள் அன்பையே அளிக்கிறீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்களும் அந்த அன்பையே திரும்ப கொடுக்கின்றனர். இது இயற்கையின் விதி.