தீமையிலிருந்து நன்மை பிறக்கும் வாய்ப்பு எப்போதும் உண்டு

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014   

பெங்களூரு, இந்தியா


கேள்வி பதில்

குருதேவ், பந்தத்திலிருந்து எப்படி விடுபடுவது? மக்கள் நம்மை ஏமாற்றும் போது, அதிலிருந்து வெளிவருவது எப்படி?

குருதேவ்: யாராவது உங்களை ஏமாற்றினால், அதன் பலனை அவர்கள் அனுபவிக்க போகிறார்கள். அதன் விளைவுகளை அவர் சந்திப்பார். அதுதான் கர்ம வினைகளின் விதி. எச்சரிக்கையாய் இல்லாததால் நீங்கள் ஏமாந்தீர்கள். நீங்கள் எச்சரிக்கையாய் இருந்திருக்க வேண்டும் அல்லவா? எனவே ஒருவர் உங்களை ஏமாற்றியாதால் நீங்கள் பாடம் கற்றுக்கொண்டீர்கள். நகர்ந்து செல்லுங்கள்!

மக்களிடமிருந்தும், அரசாங்கத்திடமிருந்தும் இன்னும் அதிக உதவி நமக்குத் தேவை என்று நீங்கள் கூறுவதைக் கண்டிருக்கிறேன். நாம் தொண்டு செய்ய வேண்டும் என்று தெரியும், ஆனால் மிகச் சரியாக அதை எப்படி அணுகுவது? தயவு செய்து வழிகாட்டுங்கள்.

குருதேவ்: ஆம், சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவருவது ஒரு கூட்டு முயற்சி. எல்லோரும் அதில் பங்குபெற வேண்டும் என்று கூறினேன். ‘குருதேவ், நீங்கள் செய்யுங்கள். தீவிரவாதிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், நீங்கள் அவர்களை மாற்றுங்கள்’, என்று சொல்ல வேண்டாம். அப்படி இல்லை! இது ஒரு கூட்டு முயற்சி. சமுதாயத்தில் குற்றம்,மனஅழுத்தம், வன்முறை ஆகியவற்றை குறைக்க நாம் ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும்.எனவே நீங்கள் எல்லோரும் யோசனை செய்யுங்கள். மேன்மையான இந்தியாவைக் காண, ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் தொண்டு செய்வதற்கு ஒதுக்கி நீங்கள் ஒரு தொண்டராக வேண்டும், என்ன தொண்டு செய்வது என்று பாருங்கள். 

உதாரணமாக பால் நிரப்பி விற்கப்படும் ஒரு பிளாஸ்டிக் பையை எரிப்பதால் வரும் நச்சுப்புகை ஆயிரம் பேருக்கு புற்று நோய் வரவைக்கும் அளவு நச்சுத்தன்மை கொண்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? யாராவது பிளாஸ்டிக்கை எரிக்கும்போது அவ்வளவு டையாக்சின் வெளிவருகிறது. இதை நாம் எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டாமா? மக்களுக்கு இது தெரிய வேண்டாமா? மாறாக, நாம் செய்வதெல்லாம், நம் வாழ்வில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் சிறு சிறு விஷயங்களை பற்றி கவலைப்படுவது தான். பொருட்கள், மக்கள், கருத்து, எண்ணம் மற்றும் சிறு சிறு விஷயங்களைப் பற்றியே கவலை கொள்கிறோம். இதைப் போன்ற முக்கியமில்லாத விஷயங்களை பற்றி கவலைப்படுவது சரிதானா?

எளிமையாக, இயல்பாக, எல்லோரோடும் ஒத்து இருக்க வேண்டும் என்றே நான் சொல்லுவேன். இதுதான் நாம் செய்ய வேண்டியது. இல்லையென்றால், ஏதாவது சிறிய விஷயம் நடந்து விட்டால், நாம் சண்டைக்கு தயாராகி விடுகிறோம். நாம் அப்படிச் செய்யக்கூடாது. எந்தவித பாரபட்சத்தையும் விடுத்து, செய்ய முடிந்ததை அன்போடும் தொண்டு மனப்பான்மையோடும் செய்யுங்கள்.

குருதேவ், பிராணன், உடல் மற்றும் ஆத்மாவிற்கு இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு விபத்து நடந்தால் பிராணன் பாதிக்கப்படுகிறது. உடலை விட்டு பிராணன் சென்ற பிறகு ஆத்மாவும் போய் விடுகிறது. எனவே ஆத்மா உடலோடு ஒன்றியும், உடல் பிராணனோடு ஒன்றியம் இருக்கிறதா?

குருதேவ்: சரியாகச் சொன்னீர்கள். பிராணன் ஆத்மாவை உடலோடு பிணைக்கிறது. ஆத்மாவோடு பிராணனும் சென்று விடுகிறது. நெருப்பிருந்தால் புகை வரும், புகை வந்தால் நெருப்பிருக்கும். ஆத்மாவுக்கும் பிராணனுக்கும் உள்ள தொடர்பு நெருப்பிற்கும் புகைக்கும் உள்ள தொடர்பைப் போல.

குருதேவ், சுயமாய் ஊக்கம் கொண்டு அதைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி?

குருதேவ்:உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்? இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சியாய் இருந்தாலே போதும். நீங்கள் மகிழ்ச்சியாய் இருந்தால், நீங்கள் ஏற்கனவே ஊக்கத்தோடு இருக்கிறீர்கள் என்று பொருள். உங்களால் மற்றவர்கள் மகிழ்ச்சியடைந்தால் நீங்கள் மகிழ்கிறீர்களா இல்லையா? உடனேயே நீங்கள் மகிழ்ச்சி கொள்கிறீர்கள்! இதைவிட உங்களுக்கு என்ன ஊக்கம் வேண்டும்.

நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமென்றால், உங்கள் குடும்பத்தினரும் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும், சரிதானே? உங்களைச் சுற்றி உள்ளவர்கள் மகிழ்ச்சியாய் இருந்தால் உங்களாலும் மகிழ்வோடு இருக்க முடியும். எல்லோரும் சோகமயமாய் துன்பத்தில் இருக்கும் போது, உங்களால் மட்டும் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது. உங்கள் வீட்டில் யாராவது காய்ச்சலால் அவதிப்படும் போது, நீங்கள், ‘நான் ஒரு திரைப்படம் பார்த்து மகிழ்ச்சியாய் இருக்கப் போகிறேன்,’ என்று சொல்ல மாட்டீர்கள். ஏன்? ஏனென்றால் நம்முடைய மகிழ்ச்சி நம்மைச் சுற்றி உள்ளவர்களின் மகிழ்ச்சியைச் சார்ந்து இருக்கிறது. இப்போது, நம்முடைய குடும்பமும் நண்பர்களும் மகிழ்ச்சியாய் இருந்தால் போதுமா?

உங்கள் அருகில் வசிப்பவர்கள் துக்கத்தில் இருக்கும் போது, உங்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியுமா? இல்லை! திருடர்களும், குடிகாரர்களும், அதைப் போன்றவர்களும் உங்கள் தேர்வில் நிறைந்திருந்தால் உங்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியுமா? நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது என்ன நடக்கும் என்று தெரியாது. உங்கள் அருகில் வசிப்பவர்கள் குடிகாரராகவோ, திருடராகவோ அல்லது அப்படி மோசமானவராகவோ இருந்தால் இருந்தால் உங்களால் ஏதேனும் செய்ய முடியுமா? இல்லை. உங்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியுமா? படபடப்பு, வெறுப்பு, குற்றம் போன்றவை இல்லாதபோது, நம்மால் மகிழ்ச்சியாய் இருக்க முடியும் இல்லையா? சமூகத்தில் எல்லோரும் மகிழ்ச்சியாய் இருக்கும் போது நாமும் மகிழ்ச்சியாய் இருக்கலாம்.
நாம் மேன்மையான சமூகத்தைக் காண உழைக்க வேண்டும். நாம் நன்றாக இருக்கும் போது, மற்ற எல்லோருக்கும் மகிழ்ச்சி கிடைக்க, அதற்கு வாய்ப்பு அளிக்க நாம் உழைக்க வேண்டும். எனவே இந்த ஞானத்தை எல்லோருக்கும் பரப்புவோம்.

நமக்குக் கிடைத்தவற்றிற்காக நன்றியோடு இருக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். எதற்காக நன்றியுணர்வு கொள்கிறோமோ அப்போது கிடைத்தவையும் இல்லாமல் போகிறது என்று நான் நினைக்கிறேன். எனவே நான் என்ன செய்வது?

குருதேவ்: அப்படி நினைக்காதீர்கள், அது உங்கள் மனத்தளவில் தான். எவ்வளவு அதிகமாக நன்றியுணர்வு கொள்கிறீர்களோ அவ்வளவு அதிகமாக உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் தாகமாக இருக்கும்போது, யாராவது தண்ணீர் கொடுத்தால் நன்றி கூறுகிறீர்கள். அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? திரும்பவும் தாகம் எடுக்கிறது. தாகம் மறையாது.

குருதேவ், இறந்த பிறகு நமது உறுப்புகளைத் தானம் செய்யலாமா?

குருதேவ்: ஆம், இறந்தபிறகு நமது உறுப்புகளைத் தானம் செய்யலாம்.அதில் தவறு ஏதும் இல்லை. மக்கள் சொல்கிறார்கள், ‘இறந்த பிறகு கண் தானம் செய்தால், உன் ஆத்மா சொர்கத்திற்குப் போகாது,’ அதெல்லாம் உண்மையல்ல. கண்ணப்ப நாயனார், தன் கண்களை சிவபெருமானுக்கு ஆழ்ந்த பக்தியினால் அளிக்கவில்லையா? மேலும், தான் உயிரோடு இருக்கும் போதே அதைப் பிடுங்கி சிவபெருமானுக்கு அளித்தார். தாதிச்சி தன் முதுகெலும்பை இந்திரனுக்கு அளித்தார். ஒரு நற்பயனுக்காக நம் உறுப்புகளைத் தானம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. அதைப் பற்றி கவலை வேண்டாம். 

ஆட்டிசம் வியாதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகமாவது ஏன்?

குருதேவ்: பெற்றோர்களின் மன அழுத்தத்தினால். பெற்றோர்களின் மன அழுத்தம் குழந்தைகளை பாதிக்கிறது. முதல் காரணம் மன அழுத்தம். இரண்டாவது காரணம் உணவு, அதனாலும் பாதிப்பு ஏற்படலாம்.

குருதேவ், மேற்கல்விப் பயில இனம், குலம் சார்ந்த ஒதுக்கீடுகள் உள்ளது. வாழும்கலை பின்பற்றுவோர், இந்த ஒதுக்கீடுகளை உபயோகப் படுத்திக் கொள்ளலாமா?

குருதேவ்: அது உங்கள் முடிவு. உங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால், பயன் படுத்திக் கொள்ளுங்கள். இல்லை, அது எனக்கு வேண்டாமென்று நீங்கள் முடிவெடுத்தாலும் சரியே. எனக்கு வேண்டியதெல்லாம் நீங்கள் மகிழ்ச்சியாய் இருந்து உங்களை சுற்றி உள்ளோர்களும் மகிழ்ச்சியாய் இருப்பது மட்டுமே. எல்லோரும் சமம் என்று இருப்பது தான் சிறந்த ஒன்று. இந்த ஒதுக்கீடுகளை அரசியல் காரணங்களுக்காகச் சிலர் செய்கிறார்கள். இதை ஆரம்பிக்கும் போது, பத்து வருட காலத்திற்கு என்றே ஆரம்பித்தார்கள், அதற்குப் பிறகு நாம் அதை தொடர்ந்திருக்கக் கூடாது. மாறாக, ஒதுக்கீட்டுக்கு மேல் ஒதுக்கீடு என்று நம் நாட்டையே இது பிரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இப்போது மக்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். நாம் அனைவரும் சேர்ந்து முன்னேற வேண்டும்.