அருளின் மந்திரம்

5 ஆகஸ்ட், 2014, பெங்களூரு இந்தியா



குருதேவ், நமது ஜாதகம் நாம் பிறந்த நேரத்தை அடிப்படையாக கொண்டது. அந்நேரம் தெரியவில்லையென்றால் நம் ஜாதகம் பொய்யானது என்று பொருள் கொள்ளலாமா?

குருதேவ்: நேரம் சரியாக இருந்தால் பொருள் விளக்கம் சரியாக இருக்கும். நூறு சதவீதம் சரியாக இருக்கும் என்று கூற முடியாது. 80 முதல் 90 சதவீதம் சரியாக இருக்கக் கூடும். அத்ருஷ்யா (கண்ணுக்குப் புலப்படாத) அதாவது என்னவென்று தெரியாத ஒரு இயக்க விளைவு இருக்கின்றது.  அது எப்போது வேண்டுமானாலும் நிகழக் கூடும். அதுதான் அருள் என்று அழைக்கப் படுகின்றது. எதையும், எந்நேரமும் மாற்றக் கூடிய திறன் அருளுக்கு உண்டு. இதன் முக்கியத்துவம் சாஸ்த்திரங்களில் உள்ளது.

ஒரு சிறுவனின் தகப்பன் அவனது ஜாதகத்தை ஒரு ஜோசியரிடம் காண்பித்தார். ஜோசியர், உங்கள் மகன் பெரிய ஆளாக வருவான், அவனைச் சுற்றி எப்போதும் கார்கள் இருக்கும். யாரையும், எந்நேரத்திலும் கட்டுப்படுத்தும் திறன் பெற்றிருப்பான் என்று கூறினார். பெற்றோர் தங்கள் மகன், கார்கள் புடை சூழ ஒரு பெரிய அமைச்சராகவோ அல்லது தலைவராகவோ ஆவான் என்று கருதியிருந்தனர். ஆனால் அந்தப் பையன் ஒரு போக்குவரத்து போலீஸ் ஆனான். இப்போதுள்ளது போன்று இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தானியங்கி விளக்குகள் கிடையாது. சாலைகளில் போக்குவரத்தை போலீஸ் காரர்களே கட்டுப்படுத்தி வந்தனர்.

தந்தை, ஜோசியரிடம் சென்று, என் மகன் கார்கள் புடை சூழ பெரிய ஆளாவான் என்று கூறினீர்கள், ஆனால் அவன் போக்குவரத்துப் போலீஸ்காரன் ஆகிவிட்டானே என்று சண்டையிட்டார். ஜோசியர், எனது முன்கணிப்பு இப்போதும் பலித்து தான் இருக்கின்றது. அவன் போக்குவரத்து போலீஸ் காரனாக கார்கள் புடைசூழவே இருக்கின்றான்" என்று கூறினார்.

மற்றொரு ஜோசியர் ஒருவரிடம், "உன் தலையில் குண்டடிபடும் "என்று கூறினார். ஒரு நாள் என்ன நிகழ்ந்ததென்றால், ஏதோ ஒன்று அவனது தலையைத் தாக்கியது, ஆனால் அவன் தொப்பி அணிந்திருந்ததால், அந்த அடி, அவனது தொப்பியைத் தாக்கிச் சென்றது. தமிழில் "தலைக்கு வந்தது, தலைப் பாகையோடு போயிற்று என்றொரு முதுமொழி உண்டு. எனவே, நிகழ்ந்திருக்க வேண்டிய ஒரு பெரிய ஆபத்து, அருளினால் எளிதாகப் போயிற்று. குறிப்பும் சரியானதாக இருந்திருக்கின்றது, அதே சமயம் சரியான இடத்தில் சரியான நேரத்தில் இருந்திருக்கின்றீர்கள்.

குருதேவ், பற்றின்மையுடன் இருக்கப் பயிற்றுவிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு பற்றுடன் செயல்படுவது?

குருதேவ்: பற்றினை உருவாக்க முடியாது. எதையாவது நீங்கள் விரும்பும் போது அது தானாகவே உங்களை வந்தடைகின்றது. எவ்வாறு ஒன்றை விரும்புவது என்று நீங்கள் என்னைக் கேட்க முடியாது. அதற்கு வழிமுறை கிடையாது.சில சமயங்களில் திரும்பத் திரும்பச் செய்யும் ஏதேனும் ஒன்று பற்றினை ஏற்படுத்தலாம், ஆனால் அதை அன்பு என்று கூற இயலாது.சண்டையிட்டுக் கொண்டே இருக்கும் இருவரில் ஒருவர் அங்கில்லாத போதும், தூர விலகி விட்ட போதும், மற்றவர் வெறுமையாக உணருவதை பார்த்திருக்கின்றேன். தினமும் சண்டையிடும் நபர், திடீரென்று இல்லை, என்ன செய்வது? இது ஒரு வகையான பற்று, ஆனால் பேரார்வம் என்பதை வளர்த்துக் கொள்ள முடியாது, அது தானாகவே வரும். பற்றற்ற நிலையை ஓரளவு வளர்த்துக் கொள்ளலாம், ஆனால் கருணையையும், பேரார்வத்தையும் வளர்த்துக் கொள்ள முடியாது.

குருதேவ், ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது என்று கூறப்படுகின்றது. என்றால், எவ்வாறு ஒருவன் மோக்ஷத்தை அடைய முடியும்? ஜீவன்முக்தி என்றால் என்ன?

குருதேவ்: மோக்ஷம் என்பது ஒரு துளி நீர் பெருங்கடலில் கரைவது போன்றது. பெருங்கடலையும் அது மறையச் செய்ய முடியாது, அத்துளியும் தனதுஇருப்பினைத் தொலைத்து விடாது.அச்சிறு துளியானது பெருங்கடலில் கரைந்து பெருங்கடலாகவே மாறிவிடும்.ஒரு பானையில் உள்ள வெற்றிடம் அழிக்க முடியாதது. பானை உடையும் போது, உள்ளிருக்கும் இடம் வெளியிலிருக்கும் இடம் இரண்டும் ஒன்றாவது போன்றது, மோக்ஷம் என்பது "நான் விடுதலையானவன், நான் வெட்ட வெளி. நான் உடல் அல்ல, உடல் கொள்கலம் ஆகும், ஆயின் நான் ஆத்மா" என்று உணருவதே ஆகும்.எளிமையாகக் கூற வேண்டும் என்றால் அது இறுதியான உள் விடுதலையை குறிக்கும்.

குருதேவ், நம்மிடம் சரியாக நடந்து கொள்ளாதவர்களிடம் எவ்வாறு கருணையுடன் இருப்பது? கோபம் அல்லது எரிச்சல் அடைவதை விட கருணையுடன் இருப்பதை கடினமாக உணருகின்றேன்.

குருதேவ்: உங்களது கண்ணோட்டத்தை விரிவாக்கிக் கொண்டால் இதையே வேறு கோணத்தில் காண்பீர்கள். நீங்கள் கோபப்படும் மனிதரின் மீது இரக்கப்படுவீர்கள். அவர்களது நடத்தை முரட்டுத் தனமாக இருப்பதற்குக் காரணம். அவர்களது உள்ளத்தில் எங்கோ கரடு முரடான உபாதை, மற்றும் சஞ்சலம் இருக்கின்றது. உங்களிடம் இருக்குமளவிற்கு அறிவும் அன்பும் அவர்களிடம் இல்லை. அறிவின்மையால் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். இத்தகைய புரிதல் உங்களுக்கு ஏற்பட்டால், தானாகவே கருணை வரும்.

குருதேவ், அறிவாளிகள், கவன விழிப்புடன் இருப்பதைப் பற்றிப் பேசுகின்றார்கள், எப்போதும் அவ்வாறு இருந்தால் ஒருவன் செயற்கையாகி விட மாட்டானா?

குருதேவ்: கவனத்துடன் இருப்பது என்பதை அவ்வப்போது செய்து வருகின்றீர்கள். ஆரம்பத்தில், அது ஒரு முயற்சி போல் தோன்றும், பின்னர் அது முயற்சியற்ற ஒரு நிகழ்முறை ஆகிவிடும்.

இறப்பிற்குப் பின்னர் மீண்டும் வேறொரு கர்ம உடலுக்குத் திரும்புவானா?


குருதேவ்: உடல் இன்றி கர்மா கரைய முடியாது. ஆகையால் கர்மங்களை தொலைப்பதற்கு வேறொரு உடலுக்குள் திரும்ப வர வேண்டும். ஆனால் மோக்ஷம் என்பதை அடைய கூடும். மோக்ஷம் என்பதன் பொருள், வலி, வேதனைகள், அறியாமை ஆகியவற்றிலிருந்து விடுதலை ஞானம் முழுமையுமே இதை பற்றியது தான். ஆன்மீகப் பாதை இவற்றிலிருந்து ஒருவன் விடுபட உதவுகின்றது.