நல்ல கோபம் மற்றும் தீய கோபம்......

சனிக்கிழமை, 09 ஆகஸ்ட்டு, 2014,

பெங்களூரு

குருதேவ், கோபம் என்பது ஒரு ஆயுதம் மற்றும் பலவீனமும் கூட. பல சூழல்களில், கோபம் ஒரு கொடும் ஆயுதத்தைப் போலச் சீறி வருகிறது, அதுவே ஒருவரின் பலவீனமாக ஆகிவிடாமல் எப்படித் தடுப்பது?


குருதேவ்:  ஏன் கோபமாய் உணர்கிறீர்கள் என்று உங்களுக்கு தெரியுமா? ஒரு பலவீனத்தால் தான் கோபம் கொள்கிறீர்கள். ஏதோ செய்ய விரும்பி, ஆனால் அதை செய்ய இயலாத போது, அந்த இயலாமையே உங்களிடம் கோபத்தைத் தூண்டி விடுகிறது. 


நீங்கள் எல்லாவற்றையும் செயலாக்கக் கூடியவராகவும், சக்தி வாய்ந்தவராகவும் இருந்தால், ஏன் கோபப்படப் போகிறீர்கள்? ஒரு எறும்பின் மீதோ அல்லது ஒரு ஈயின் மீதோ நீங்கள் கோபம் கொள்வதில்லை. உங்களை விடத் தாழ்ந்த ஒருவரிடமோ அல்லது தாழ்ந்த ஒன்றின் மீதோ உங்களுக்குக் கோபம் வருவதே இல்லை. நம்மை விடப் பெரியவரிடம் அல்லது பலமானவரிடம் மீதே கோபம் கொள்கிறோம். நம் திறனுக்கு அல்லது சக்திக்கு மீறியவரை பார்க்கும் போது கோபப்படுகிறோம். நாம் சொல்வதை யாராவது கேட்கவில்லை என்றால் கோபம் கொள்கிறோம். நம்மை விட நமது வார்த்தைக்கு முக்கியத்துவம் அதிகம் என்று என்னும்போது கோபம் எழுகிறது. எனவே கோபம் வரும் போது வலியையும் ஏற்படுத்துகிறது. ஏதோ பலவீனத்தால் தான் கோபம் வருகிறது. ஏதேனும் செய்ய விரும்பி, அதை செய்ய இயலாமல் போகும் போது, அந்த இயலாமை கோபத்தை ஏற்படுத்துகிறது. அந்தக் கோபம் வலியைத் தருகிறது. சில நேரங்களில் நாம் கோபத்தை காண்பிக்க வேண்டியது அவசியமாகிறது. கோபத்தை வெளிகாட்ட மட்டுமே செய்து, அதையே ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும். எனவே நீங்கள் கோபம் கொண்டாலும், உள்ளே அமைதியாய் நிலையாய் இருங்கள். அத்தகைய கோபத்தால் உங்களுக்கு இரத்தக் கொதிப்பு ஏதும் வராது, உங்கள் உடல் நடுங்காது, சூடு ஏறாது.

ஒரு தாயை எடுத்துக் கொண்டால், ஏதேனும் காரணத்திற்காக குழந்தையிடம் கோபம் காட்டுவாள், அதே சமயம் தன் கணவனிடம் புன்னகை புரிவாள். இன்றைய காலகட்டத்தில் இது தலை கீழாகவும் இருக்கலாம் (சிரிப்பு). ஒருவரைக் கோபமாகத் திட்டிவிட்டு, வேறொருவரைப் பார்த்து புன்முறுவல் பூக்கலாம். இந்தக் கோபம் அவரைத் தொந்தரவு செய்யாது, தலைவலியை தராது. இது அவர் தூக்கத்தைக் கெடுக்காது. எனவே காண்பித்து கொள்வதற்கு மட்டும் வரும் கோபம் சரி தான்.
நாம் ஏன் அதைச் செய்கிறோம்? ஏனென்றால், ஒரு விஷயத்தையே பத்து முறை விளக்கினாலும் சிலருக்குப் புரிவதில்லை. பதினோராவது முறை, அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த நீங்கள் கோபத்தை காண்பிக்கலாம்.

மற்றவருடைய நன்மைக்காக கோபம் கொள்ளலாம், ஆனால் உங்களுடைய சுயநலத்திற்காக அல்ல. அது உங்களை பாதிக்கும். மற்றவர்கள் உங்களை இழிவுபடுத்தினார்கள் என்று நீங்கள் கோபம் கொண்டால் அது உங்களை அல்லாமல் வேறு யாரையும் பாதிக்கப்போவதில்லை. ஒருவர் தீய வழியில் இறங்குவதை தடுக்க கோபம் கொள்ளலாம் – அந்தக் கோபம் நன்மையே பயக்கும்.
நான்’, ‘எனது’ அல்லது ‘எனக்கு’ ஆகியவற்றினால் பிறக்கும் கோபம் வலியையும் விரக்தியையும் உண்டாக்கும்ஒருவர் அறிவில்லாமல் ஏதோ ஒரு தீய வழியில் செல்கிறார் என்பதை உணர்ந்து, அவரைத் திருந்தச் செய்ய வரும் கோபம் நன்மையானதே. 

மகாபாரதத்தில், ஸ்ரீ கிருஷ்ண பகவான் பீஷ்மர் மீது கோபம் கொண்டார். ஏன் கோபம் கொண்டார்? ஏனென்றால் அவரால் போரை முடிக்க முடியும் என்றாலும் நாளுக்கு நாள் நீட்டித்துக் கொண்டே சென்றார். போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என்ற தன் சபதத்தை மீறி சுதர்சன சக்கரத்தை எடுத்தார். அந்தக் கணத்தில் பீஷ்மர் ஸ்ரீ கிருஷ்ண பகவான் முன் கரங்குவித்து, ‘பகவானே! இதற்காகத் தான் காத்திருந்தேன். நீங்கள் என்மேல் கோபம் கொண்டால் என் வாழ்க்கை மாசு
நீங்கிப் புனிதம் அடையும். என் மரணம் உங்களால் ஏற்பட்டால் என் வாழ்கை முழுமையடையும். எனவே உங்கள் கோபம் கூட நீங்கள் எனக்கு வழங்கும் ஆசீர்வாதமே.’

முழு உலகிற்கும் குருவாக, ஜகத்குருவாகக் கருதப்படுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர். கௌரவர்கள் பாண்டவர்கள் இருவருமே அவரை குருவாகக் கருதினார்கள். பீஷ்மருக்கு இந்த உண்மை நிச்சயம் தெரியும். ஸ்ரீ கிருஷ்ண பகவானை விடப் பெரியவர் யாரும் இல்லை என்பது அவருக்கு நன்கு தெரியும். எனவே அவர் தெரிந்தே வேண்டுமென்றே எல்லாவற்றையும் செய்கிறார். அதனால் ஸ்ரீ கிருஷ்ண பகவான் தன் மீது கோபம் கொண்டு, அப்படி அந்தக் கோபத்தின் மூலமாவது பகவானோடு தனக்கு ஒரு தொடர்பு ஏற்படாதா என்பதே பீஷ்மரின் எண்ணம். இந்த நிகழ்வுக்குப் பிறகு, பீஷ்மரே தன்னை வெல்ல பாண்டவர்களுக்கு யோசனை சொல்கிறார். அவர் கூறினார், ‘போரில் என் முன் சிகண்டியை நிறுத்தினால், நான் ஆயுதம் ஏந்தாமல் போரில் தோற்றுவிடுவேன்.’ போரின் முடிவில் துரியோதனனும் அவனுடைய உடன் பிறந்தவர்கள் அனைவரும் மாண்டனர். வெள்ளமாகப் பாய்ந்த உதிரத்தைக் கண்டு கோபம் கொண்ட காந்தாரி (கௌரவர்களின் தாய்), இப்படி ஒரு கோரமான யுத்தம் நடக்க அனுமதித்த ஸ்ரீ கிருஷ்ண பகவானை திட்டினார்.

காந்தாரி கூறினார், ‘என்னுடைய குழந்தைகள் அனைவருக்கும் உன்னுடைய தந்திரத்தினால் அதர்ம முறையில் மரணத்தை அளித்துவிட்டாய்.’ அப்போது காந்தாரிக்கு பகவான் நினைவூட்டினார், ‘அன்புத் தாயே, உங்கள் மகன் துரியோதனன் தங்கள் பாதம் பணிந்து வெற்றிக்கு ஆசி கேட்ட போது உங்கள் வாயிலிருந்து வந்ததென்ன? ‘எதோ தர்மஹ ததோ ஜெயஹ’, அதாவது எங்கு தர்மம் உள்ளதோ அங்கு வெற்றி நிச்சயம் என்றுதானே கூறினீர்கள். தர்மம் வெல்லட்டும் என்றே நீங்கள் அவனுக்கு ஆசீர்வதித்தீர்கள்.’

ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறினார், ‘தாயே! இதில் என் தவறு என்ன? என் மீது பழி ஏன்? நீங்கள் உங்கள் சொந்த மகனுக்கு வழங்கிய ஆசீர்வாதம் நிறைவேற நான் உதவினேன், அவ்வளவு தான்.’
இதைக் கேட்டபின் காந்தாரி அமைதியாய் நின்றுவிட்டாள். தன்னுடைய மகனுக்கு தான் கொடுத்த ஆசிகளை நினைத்துப் பார்த்து தவறு தன்னுடையது என்பதை அவள் உணர்ந்தாள். தன் மகனுக்கு வெற்றி கிட்டட்டும் என்று நேரிடையாய் ஆசீர்வதித்திருந்தால், அந்த ஆசீர்வாதமே போரில் கண்ணுக்குத் தெரியாத கவசமாய் நின்று துரியோதனனை பாதுகாத்திருக்கும். போரிலே துரியோதனனை யாராலும் வென்றிருக்க முடியாது.

காந்தாரி ஒரு பெரிய தபஸ்வி, அவர் வரம் கொடுத்திருந்தால் அது நிச்சயம் பலித்திருக்கும். ஆனாலும் அவர் வாயிலிருந்து தர்மம் மட்டுமே வெல்லும் என்ற வார்த்தை வந்தது. எனவே முடிவில் தர்மமே வென்றது. கோபத்தை கட்டுப்படுத்தத் தியானத்தைத் தவிர வேறு எதனாலும் முடியாது. உங்களுள் கோபம் எழுவதற்கு கொஞ்சம் முன், உங்கள் உடலில் சில உணர்சிகளை நீங்கள் உணரலாம். உடலில் ஏற்படும் அந்த உணர்சிகளை எல்லாம் அந்தக் கணத்தில் கவனிப்பதன் மூலம் கோபத்தை மிக எளிதாக வெல்லலாம். இந்தத் தன்மைகளும் தர்மத்தைப் பற்றிய புரிதலும் மிக அழகானது மற்றும் ஆழமானது. இயற்கை புதிரான மற்றும் எதிர்பாராத வழிகளில் வேலை செய்கிறது.

முழு விழிப்புணர்ச்சியோடு வெளிப்படுத்தப் படும் கோபம் ஒரு வகை. விழிப்புணர்ச்சி இல்லாத நிலையில் வரும் கோபம் மற்ற வகை. எனவே கோபம் எழ எத்தனிக்கும் போது, கொஞ்சம் முன் உங்கள் உடலில் சில உணர்சிகள் ஏற்படும், உச்சந்தலையில், அல்லது நெற்றியில், அல்லது தலைக்குப் பின்புறம் ஏற்படும் குறுகுறுப்பு; கழுத்திலோ அல்லது தோள்பட்டையில் ஏற்படும் இறுக்கம் போன்றவை. இந்த உணர்சிகளை அது ஏற்படும் அந்தக் கணத்திலேயே கவனிப்பது ஒரு திறன். இப்படி இந்த உணர்சிகளை கவனிப்பது உங்களுக்கு பழக்கமாகி விட்டால், நீங்கள் கோபத்தை வெகு எளிதாக வெல்லலாம். இதனால் தான் தியானம் மிக முக்கியம். கோபத்தை கட்டுப்படுத்தத் தியானத்தைத் தவிர வேறு எதனாலும் முடியாது.

நரகத்திற்கு மூன்ற வாசல்கள் இருப்பதாக ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். அவை க்ரோதம் (கோபம்), காமம் (சுர வேகத்தோடு கூடிய அதீத ஆசை) மற்றும் லோபம் (பேராசை). மேலும், இவை இன்று சிறைக்குப் போகவும் வாசல்கள். இன்று மக்கள் காமத்தின் பிடியில் பயங்கரமாக சிக்கியிருக்கிறார்கள். 60 அல்லது 80 வயதில் வக்கிரமான செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைவீர்கள். காமத்தால் அவர்கள் செய்யும் செயல்களினால் சிறையில் துன்பப்படும் நிலை ஏற்படுகிறது. 65  வயது முதியவர் கள்ளமில்லா குழந்தைகளிடம் வக்கிரமாக நடந்து கொள்வதை கேள்விப்பட்டு மிக அதிர்ச்சியாய் இருக்கிறது. பெரியவர்களிடம் வக்கிர செயல்களை செய்து சலிப்பாகி குழந்தைகள் பக்கம் திரும்பியிருக்கிறார். இது சீர்கெட்ட நோய்பட்ட சமூகத்திற்கான அடையாளம். இத்தகையவர்களின் புத்தி திரிந்து மாயையில் மூழ்கி இருக்கிறது.

ஒருவருக்கு காமம் அதிகமாக இருந்தால், அவர் முறையாகத் திருமணம் செய்துகொண்டு தன் வாழ்கைத் துணையுடன் தன்னுடைய ஆசைகளை தீர்த்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் திருமணம் செய்துகொண்ட ஒன்றிரண்டு வருடங்களில், தன் துணையுடன் ஏதேனும் வசதிப்படவில்லை என்றால் உடனேயே விவாகரத்து செய்து விட்டு இரண்டாம் முறை திருமணம் செய்து கொள்கிறார்கள். தன் மீதும் தன் செயல்கள் மீதும் சுயக்கட்டுப்பாடு இருக்க வேண்டும். உங்களிடம் சுயக்கட்டுப்பாடு இல்லையென்றால் நீங்கள் சிறையில் தான் துன்பப்பட வேண்டும்.
இரண்டாவது கோபம். திருட்டு கொலை ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் கோபத்தின் பிடியிலேயே அதைச் செய்கிறார்கள். சில கணங்களே ஆனாலும் கோபம் எழுகையில், அதன் ஆதிக்கத்தில் ஏதாவது செய்யக்கூடாத செயலைச் செய்துவிட்டு சிறைக்குச் செல்கிறார்கள். கோபம் உறவை முறிக்கிறது. எனவே கோபத்தைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை என்றாலும் கூட நீங்கள் சிறைக்குப் போய்த் துன்பத்தை அனுபவிக்க நேரிடும்.

துயரத்தையும் அவதியையும் தரும் மூன்று வாயில்கள் நரகத்திற்கு உண்டு. அவை:
1.        குரோதம் (கோபம்)
2.        காமம் (சுர வேகத்தோடு கூடிய அதீத ஆசை)
3.        லோபம் (பேராசை)

மூன்றாவது பேராசை. நாட்டில் நடந்த பெரும் நிதி நிறுவன மோசடிகள் உங்களுக்கு ஏற்கனவே தெரியும். நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் பரவலாக ஊழலும் இருந்துவருகிறது. இவை எல்லாம் கட்டுக்குள் இல்லாத பேராசையினால் விளைந்தவையே. நம் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டும், நியாயமான முறையிலும் ஒருவர் செய்யும் தொழிலிலும் என்ன தவறு நேர்ந்துவிட முடியும்? ஆனாலும் மக்கள் பணம் சம்பாதிக்க நேர்மையற்ற வழிகளை நாடுகிறார்கள். எதனால்? இது முற்றிலும் பேராசையினால் விளைவதே.

நூறு ரூபாய் சம்பாதிக்கக் கூடிய ஒரு பரிவர்த்தனையில் இருநூறு ரூபாய் வேண்டும் என்று பேராசையினால் அலைகிறார்கள். இருநூறு ரூபாய் கிடைத்தால் நானூறு ரூபாய் வேண்டும் என்று அலைகிறார்கள். அதன் பிறகும் கூட நிறைவு வருவதில்லை, ஐநூறு, அதற்கும் மேலே என்று ஆசைப்படுகிறார்கள். இவையெல்லாம் பேராசையினால் தான். ஆசைப்படுவதோ அல்லது இன்னும் வேண்டும் என்று நினைப்பதோ தவறு என்று நான் சொல்லவில்லை. பற்றின்மை தொழிலில் உதவாது. வர்த்தகம் அல்லது தொழில் பேரார்வத்தினால் தான் உந்தப்படுகிறது. பற்றில்லாமல் அல்லது பேரார்வம் இல்லாமல் தொழில் செய்வது முட்டாள்தனமானது. முழு ஆர்வத்துடனும், அதிக உற்சாகத்தோடும் தொழில் செய்யுங்கள், ஆனால் பணம் சம்பாதிக்க மோசடி அல்லது நேர்மையற்ற முறைகளை நாட வேண்டாம். நியாயமற்ற முறையில் செய்யும் தொழிலினால், ஒரு நாளில்லை ஒரு நாள் நீங்கள் நிச்சயம் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும். திவாலாகி பெரும் நஷ்டத்தைச் சந்தித்த சத்யம் (உண்மை என்ற பொருள் உடைய வார்த்தை) என்ற தகவல் தொழில்துறை நிறுவனத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அது பெயரளவில் மட்டுமே சத்யம் என்று அழைக்கப்பட்டது. அதன் மேலதிகாரிகள் பணம் சம்பாதிக்க நீதியற்ற அநியாயமான வழிகளை நாடியிருந்தனர். இறுதியில் அவர்கள் அனைவரும் சிறைக்குச் சென்றனர்.

அமெரிக்காவில் பெரும் வியாபாரி இருந்தார். எல்லா அமெரிக்க அரசியல்வாதிகளும் அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் அளவுக்கு பணக்காரராய் இருந்தார். ஒரு நல்ல நாளில், அவர் மகனே அவர் பணம் சம்பாதிக்கச் செய்யும் குறுக்கு வழிகளை மோசடிகளை உலகுக்கு வெளிப்படுத்திவிட்டார். தன் தந்தை மேற்கொள்ளும் வழிகள் தவறானவை என்று அவர் கூறினார். பணம் பண்ண தன் தந்தை செய்யும் தகிடுதத்தங்களை மகனே பகிரங்கப்படுத்திவிட்டார்.

தன் தவறான செயல்களுக்காக 80 வயது நிறைந்த தந்தை சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. த மகனின் தீரத்தையும் உறுதியையும் பாருங்கள். தந்தை கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தும், அது அநியாய வழியில் சம்பாதிக்கப்பட்டது என்று தந்தைக்கு எதிராக நின்று, வெளி உலகுக்குக் கூறும் தீரமும் உறுதியும் அந்த மகனிடம் இருந்தது. மகன் வெளிப்படுத்தும் வரை யாருக்கும் அவர் செய்த அநியாயங்கள் தெரியவில்லை. இந்தச் செய்தி வெளியான பின்னர், அவருடன் புகைப்படம் எடுத்தவர்களெல்லாம், வெட்கி அந்தப் படங்களை அழிக்கவோ மறைக்கவோ ஆரம்பித்தனர். அவர் பெயரைக் கேட்டாலே மக்கள் ஓடி ஒளிந்தனர்.  மகனின் தீரத்தையும் நடத்தையையும் பாருங்கள். அந்த மகன் கூறினார், ‘அவ்வளவு பணத்திற்கு தேவையே இல்லை. ஏன் மக்களை ஏமாற்றி இந்த வழியில் பணம் பண்ண வேண்டும்?’ அந்த வியாபாரி இன்னும் சிறையில் இருந்து வருகிறார். பேராசையினால் ஒருவருக்குத் துன்பம் வரும் என்று அதனால்தான் கூறப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ண பகவான் பகவத் கீதையில் கூறுகிறார், ‘த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாஷனம் ஆத்மனாஹ். காமஹ் க்ரோதஸ் ததா லோபாஸ் தஸ்மாத் தேதத் த்ரயம் த்யஜேத்.’  (16.21)


ஆத்மாவுக்கு துயரமும் அவதியும் தரக்கூடிய மூன்று வாயில்கள் உள்ளன: கோபம், காமம் மற்றும் லோபம்.அதனாலேயே, ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனரிடம் இந்த மூன்றையும் விட்டுவிட அறிவுறுத்தினார்.