அனைத்துச் சமயங்களும் ஒன்றே

சனிக்கிழமை ,30 ஆகஸ்ட், 2014. 

டெல்லி, இந்தியா


(அமைதி என் உள்ளத்தில்  துவங்குகின்றது என்னும் இடுகையின் தொடர்ச்சி)

நேற்று கணேச உத்சவம் நிறைவடைந்தது. ஏன் கணேச பகவானை வழிபாடு செய்து பின்னர் நீரில் மூழ்கடித்து விடுகின்றார்கள் என்று பலர் கேட்கின்றனர். இந்த வழக்கத்திற்கு பின், பண்டைய ரிஷிகள் திறமிக்க ஒரு கருத்தினை கொண்டிருந்தார்கள். கருத்துப்படி பூஜை என்பது இறைவன் நமக்கு என்னவெல்லாம் அளித்திருக்கின்றாரோ, அவற்றையெல்லாம் அவருக்கே அன்புடனும் நன்றியுடனும் திருப்பி அளித்துவிடுவது தான். இது இறை விளையாட்டு. கணேச விக்ரகத்துடன்   இந்த "விளையாட்டு" முடிந்தவுடன் அந்த களிமண் சிலையை நீரில் மூழ்கடித்து விடுகின்றோம். "பகவானே! தாம் என்னுள் உறையும் ஆத்மாவில் குடி கொண்டிருக்கின்றீர்கள். சிறிது நேரத்திற்கு இந்த சிலையில் குடி கொண்டு விடுங்கள், அப்போது தான் தாங்கள் என்னுடன் விளையாடுவது போன்று நான் உங்களுடன் விளையாட முடியும். நான் தங்களைக் கொண்டாட விரும்புகின்றேன்! என்று இறைவனிடம் கூறுவது போன்றதே இந்த வழிபாடு. வழிபாடு நிறைவடைந்தவுடன், நாம் இறைமையை மீண்டும் நமதுள்ளே நம் இதய ஆழத்திற்கு திரும்பச் சென்றடையுமாறு வேண்டுவது போன்று நீரின் ஆழத்தில் சிலையை மூழ்கடித்து விடுகின்றோம்.

ஆதிசங்கரர் கணேச பகவானை குறித்து விவரித்திருப்பதை கேட்டால் நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். அவர்," அஜம் நிர்விகல்பம் நிராகாரம் ஏகம்" என்று பாடுகின்றார். அதாவது, கணேச பகவான் நிராகாரா (உருவமற்றவர்) "கணேச பகவானே! நீ நிரந்தரமான உருவற்ற எங்கும் வியாபித்திருக்கும் இறைமை" என்பதாகும். இதே விளக்கத்தை குரானின் ஆரம்ப வரிகளில் காணலாம். துரதிர்ஷ்ட வசமாக நமது சமயங்களையும், வேதநூல்களையும் மிகக் குறைவாகவே அறிந்திருக்கின்றோம்.
உலகின் எந்த சமயமும் நீங்கள் பிறரை துன்புறுத்தி காயப்படுத்த வேண்டும் என்று கூற வில்லை. அவ்வாறாயின் ஏன் இந் நிகழ்வுகள் ஏற்படுகின்றன? ஏனெனில், சமயக் கல்வி சரியான முறையில் கற்பிக்கப்படவில்லை. இன்று ஆன்மீகக் கல்வி மிக அவசியம். ஆன்மீகக் கல்வியே அனைவரையும் ஒன்றிணைக்கும். பல துறவிகள் இருந்திருக்கின்றார்கள், அனைவரும் ஒரே கருத்தினை கொண்டிருந்திருக்கின்றார்கள். அது அனைத்தும் ஒன்றே என்பதாகும்.

இராக்கிய தலைவர்கள் மூன்று விஷயங்களை நம்மிடம் கேட்டார்கள். முதலாவது இந்திய ஆன்மீகம். ஏனெனில் அன்பு மற்றும் நல்லிணக்கம் இவற்றின் வழியாக அனைவரையும் அரவணைத்துப் பிணைக்கும் தனித்துவம் வாய்ந்தது.

இரண்டாவதாக கல்வியுதவி. இந்தியாவில் ஐஐடியில் படிக்கும் மாணவர்கள் மிகுந்த புத்திக் கூர்மையும் அறிவுத்திறனும் கொண்டவர்களாக விளங்குகின்றனர். தங்களது இளைஞர்களும் இவ்வாறே பொறியியல் கல்வித் திறனை அடைய உதவி வேண்டினர்.

மூன்றாவதாக  இந்தியக் குழு இராக்கிற்கு வந்து எண்ணெய் கிணறுகளிலிருந்து எண்ணெய் எடுக்கும் பணியினைச் செய்யவேண்டும் என்று கேட்டனர். பல மேல்நாட்டினர் வெகு காலமாக இதைச் செய்து வருகின்றனர், இப்போது இந்தியர்களும் அங்கு சென்று அப்பயனை அடையலாம் என்று கூறினர். அனைத்து நாடுகளும் தங்களது பாதுகாப்பிற்கு செலவிடும் தொகையில் 0.1% அமைதியையும் நல்லிணக்கத்தையும் பரப்புவத்ற்கு செலவிட்டால் இவ்வுலகமே மாறிவிடும். யாருக்குமே வெறுப்பு என்பதில் விருப்பம் இருக்காது. ஆனால் தெரியாமலேயே அது நிகழ்ந்து விடுகின்றது. அல்லது பயம் பிறரின் பாதுகாப்பற்ற நிலை இவற்றின் காரணமாக நிகழ்கின்றது.
உங்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இங்கு வருவதற்கு முன்னர், நான் சொற்பொழிவாற்றிய வேறொரு இஸ்லாமியப் பல்கலைக்கழகம், பாகிஸ்தானிலுள்ள லாகூர் பல்கலைக்கழகம் ஆகும். 2012 இல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஏற்பாடுகள் செய்து அதில் கலந்து கொண்டார்கள்.

அங்கும் ஏன் பல்வேறு விதமான கடவுளர்களை வணங்குகின்றோம் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. இதை விளக்கிக் கூற ஒரு எளிய உதாரணத்தை நான் எடுத்துக் கொண்டேன். ஒரே கோதுமை மாவிலிருந்து ஹல்வா, பூரி, சமோசா அனைத்தும் செய்யப்படுகின்றன. அதே மாவில் பீட்சாவும், நூடுல்சும் செய்யப்படுகின்றது அல்லவா? ஏன்? ஏனெனில் நமக்குப் பல வகை உணவு பொருட்கள் மீது  விருப்பம்  இருக்கின்றது. அது போன்றே இந்தியாவில் நாம் அனைவரும் ஒரே கடவுள் என்று நம்புகின்றோம். ஒரே இறைவனை பலவகை உடையுடுத்திக் காண்கின்றோம். வெவ்வேறு வகையான ஆடை அணிவித்து வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றோம். ஹிந்து மதத்தில் இறைவனுக்கு 1008 வெவ்வேறு  பெயர்கள் உள்ளன, ஒவ்வொரு பெயருக்கும் ஒரு உருவம் இணைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு தான்.

இவ்வாறு நான் கூறியதை மக்கள் புரிந்துகொண்டு பாராட்டினர்.சிலர் ,"குருதேவ், மிக அழகாக விளக்கம் கூறினீர்கள். இது வரையில் கடவுள் ஒன்றே என்றிருக்கும் போது ஏன் இந்தியர்கள் பல கடவுளர்களை வணங்குகின்றார்கள் என்று புரிந்துகொள்ள முடியாமல் இருந்தோம்"  என்று கூறினார்கள். உலக அமைதி நமக்குத் தேவையானால் அதை நம்மிலிருந்து துவங்க வேண்டும். தெய்வீக ஒளியை உங்களில் நீங்கள் கொண்டால் யாரையும் வேற்று மனிதராக நீங்கள் காண மாட்டீர்கள். அனைவருமே உங்களை சார்ந்தவர் என்றே கருதுவீர்கள். ஆனால் யாரும் அணைக்க முடியாத நம்முள் இருக்கும் ஒளியினை நாம் அறிந்துணர்ந்து கொண்டால் மட்டுமே இந்தப் புரிதல் ஏற்படும். பிராணாயாமம் மற்றும் தியானம் இவற்றின் நோக்கமே உங்களுள் இருக்கும் ஒளியினை  நீங்களே உணர்ந்தறிந்து கொள்ள செய்வது தான்.

தலைமுறை இடைவெளியையும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும்  எவ்வாறு சமாளிப்பது? நமக்கு மூத்தவர்களுடன் ஏற்படும் வேறுபாடுகளை எவ்வாறு சமாளிப்பது?

குருதேவ்: அதை மிகுந்த திறனுடன் செயல்படுத்த வேண்டும்.உங்களது வாதத்தை அவர்களிடம் விவரித்து முன் நிற்க வேண்டும். அதே சமயம் அவர்கள் என்ன கூற விரும்புகின்றார்களோ அதை மரியாதையுடன் கவனிக்க வேண்டும். நமது மூத்தவர்கள் எப்போதுமே நம் மீது அன்பு கொண்டு நமது நலன்களையே மனதில் கொண்டிருக்கின்றார்கள். அதனால் தான் அவ்வப்போது புத்திமதி கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.தங்களது தலைமுறை வழிமுறைகளைக கொண்டிருக்கலாம். நவீன வாழ்க்கை முறைகளை முற்றிலுமாக அறியாமலும் இருக்கலாம்.ஆனால் அவர்களது உள் நோக்கம் நம்முடைய நன்மை என்பதே ஆகும். ஒரு வேளை நாம் எதிர்பார்ப்பதை போன்று அவர்களால் விஷயங்களை விவரித்துக் கூற முடியாமல் இருக்கலாம். சற்று விட்டுக்கொடுத்து போவதன் மூலம் எளிதாக இதை சமாளிக்கலாம்.

ஆரம்பத்தில் நான் அனைவரிடமும் உள்ள சிறப்பினையே பார்த்துக் கொண்டிருந்தேன்.ஆனால் காலப்போக்கில் நெருங்கிப் பழகும்போது அவர்களிடமுள்ள மோசமானவற்றைக் காணத் துவங்கியிருக்கின்றேன். அவர்களிடம் என் உணர்ச்சிகள் மாறிவிட்டன. ஏன் இவ்வாறு நிகழ்கின்றது? இதை நான் எவ்வாறு கையாள்வது?

குருதேவ்: பாருங்கள், இதன் எதிர்மறையும் உண்மையாகும். பல சமயங்களில் ஆரம்பத்தில் ஒருவருடன் சரியாக பழக முடியாமல். பின்னர் காலப் போக்கில் பொறுமையாக இருந்தால் அவர்களை நேசிக்கத் துவங்குவீர்கள்.எனவே இரண்டுமே உண்மை தாம். இது போன்ற சுழற்சிநிலை எல்லோருடைய வாழ்விலும் நிகழக் கூடியதுதான். ஒருவரை சந்திக்கின்றீர்கள், விரும்பிப் பழகுகின்றீர்கள், சில காலத்திற்கு பின் அவர்களை விரும்புவதில்லை, மீண்டும் சிறிது காலத்திற்குப் பின்னர், திரும்பவும் நேசிக்கத் துவங்குகின்றீர்கள். இதைப் பற்றி உங்கள் தாய் தந்தையைக் கேளுங்கள் (சிரிப்பு) மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமணம் செய்து கொண்டாலும் சிறு சிறு சண்டைகள் கருத்து வேறுபாடு இவை ஏற்பட்டிருக்கும்.

ஒரு அமைதியான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையின்  ரகசியம் என்ன?

குருதேவ்: அதைத் தான் உங்களனைவருக்கும் இத்தனை நேரம் கூறிக் கொண்டிருந்தேன். மக்கள் மற்றும் சூழ்நிலைகள் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள். எப்போதும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நடந்தது  அல்லது  எதிர்காலத்தில் நிகழப் போவது பற்றி எண்ணிக் கொண்டிருக்காதீர்கள்.

உலக அமைதியையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த சமயத்தின் பங்கு என்ன? அது  ஒரு சொத்து ஆகுமா அல்லது தடையாகுமா  ?


குருதேவ்: புத்திசாலிகளுக்கு சமயம் ஒரு சொத்து ஆகும். ஆனால் முட்டாள்களுக்கு அது தடை ஆகும். ஒவ்வொரு சமயத்திலும் சில தனிச் சிறப்புக்கள் உள்ளன. அவை நமது வாழ்வினை மேம்படுத்தவும் நாம் மலரவும் துணை செய்யும். நாம் முட்டாள்தனமாக இருந்தால், அதே பண்புகள் வேறுபாடுகளையும், பிரச்சினைகளையும் மக்களிடையே உருவாக்கும்.எனவே அனைத்தும் நம்மை பொறுத்துதான். உலகின் எந்த சமயத்திலும் எந்தத் தவறும் இல்லை. அதை பின்பற்றுவோரின் புரிதல் தான் முக்கியம். கத்தியை பயன்படுத்தி காய்களையும் வெட்டலாம், வெண்ணையையும் துண்டாக்கலாம், உங்களையும் காயப்படுத்திக் கொள்ளலாம். இது அப்படித்தான்.