செல்வத்தின் ஆசீர்வாதம்...

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட், 

பெங்களூரு, இந்தியா

பஜன் நடைபெறும் போது கண்களை மூடி சப்தத்தில் கரைந்து விடுங்கள். இங்கும், அங்குமோ, பிறரின் முகங்களையோ பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம். யார் சிரிக்கின்றார்கள், யார் மேலே அல்லது கீழே பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றெல்லாம் நீங்கள் கவனித்துக் கொண்டிருக்க வேண்டாம். அவற்றினால் பயன் இல்லை. கண்களை மூடி, கானத்தின் ஒலியில் மூழ்குங்கள்.  என்ன சப்தம், என்ன மொழி என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. சப்தத்தில் திளைப்பது மனதிற்கு சக்தியூட்டும். நல்ல நீரில் குளிக்கும் போது எவ்வாறு உங்கள் உடல் கிளர்ச்சியுடன் சக்தி பெறுகின்றதோ அது போன்று ஒலியில் நீங்கள் திளைக்கும் போது மனம் சக்தி பெறுகின்றது.

இன்று வரலட்சுமி பூஜை. ஒரு சமயம் நான் விமான நிலையத்தில் மிகவும் கவலையுடன் காணப்பட்ட ஒரு வாலிபனை சந்தித்தேன். என்ன பிரச்சினை என்று கேட்டேன்.அதற்கு அவன், குருதேவ், ஒருவர் அவரது சகோதரியிடம் கொடுக்குமாறு ஒரு தங்க பிஸ்கட்டை கொடுத்திருக்கின்றார்.


நானும் அதை அவரது சகோதரியிடம் எடுத்து சென்று தருவதற்கு ஒப்புக் கொண்டேன். இப்போது அதை விமானப் பயணத்தில் கொண்டு செல்ல பயமாக இருக்கின்றது, ஏனெனில், அதற்குரிய வரியைக் கட்டுவதற்கு என்னிடம் பணம் இல்லை, கட்டவும் விருப்பம் இல்லை. அதைப் பெற்றுக் கொண்ட நேரத்திலிருந்து என் மனம் பதறி இதயத் துடிப்பு அதிகமாகி விட்டது. ரத்த அழுத்தம் கூடி விட்டது, என்னால் உறங்கவே முடியவில்லை என்று கூறினார். ஒரு கிலோ தங்கத்தை சுமப்பதால் ரத்த அழுத்தமே பாதிக்கப்பட்டிருக்கின்றது. எனவே லக்ஷ்மி ஒரு சாபமாகவும் ஆகக் கூடும்.

செல்வந்தர்கள் அளவு ஏழைகள் பாதுகாப்பின்றி உணர்வது இல்லை. அவர்கள் எதைப் பற்றியும் சிந்திப்பது இல்லை. செல்வம் குவியும் போது அதை எவ்வாறு கையாளுவது என்னும் கவலையும் ஏற்படுகின்றது.  பலசமயங்களில் ஒற்றுமையாக இருக்கும் பல குடும்பங்கள், பணத்திற்காகப் பிரிந்து விடுகின்றன. கணவன் மனைவிக்குள் பணத்தின் பொருட்டு மோதல்கள் ஏற்படுகின்றன.

பல சமயங்களில் விவாகரத்து வழக்குகள் பணத்தின் காரணமாகக் குற்றவியல் வழக்குகளாக  மாறுகின்றன. பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இருவர் பணத்தின் பொருட்டு குற்றவியல் வழக்கு பதிவு செய்கின்றனர். இருவருமே மற்றவர் குற்றவாளியல்ல என்று அறிந்தாலும் பணம் கிடைக்கும் என்று அத்தகைய வழக்கைப் பதிவு செய்கின்றனர். சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையே சச்சரவுகள் ஏற்படுகின்றன. ஒன்றாக விளையாடிய அவர்கள் தந்தையின் மரணத்திற்குப் பிறகு சொத்துக்களுக்கும் வாரிசுரிமைக்கும் சண்டையிடுகின்றனர். ஒருவரோடொருவர் பேசுவதைக் கூட நிறுத்தி விடுகின்றனர். இந்தப் பணம் என்பது மகிழ்ச்சியைத் தருகின்றதா அல்லது வேதனையை தருகின்றதா? அது வரமா சாபமா? எந்தப் பணம் மகிழ்ச்சியையும் திருப்தியையும் தர வேண்டுமோ அதுவே வேதனையையும் துக்கத்தையும் தருகின்றது. செல்வம் ஆசீர்வாதமாக அமைய வேண்டும் சாபம் ஆகிவிடக் கூடாது என்று அறிந்து  உணருதல் ஒரு சிறப்பு வாய்ந்த விஷயம் அல்லவா?  செல்வம் பல சண்டைகள், பாதுகாப்பின்மை, பயம், அழுத்தம், துன்பம் ஏற்படுத்தியிருக்கின்றது. 

எனவே நீங்கள் அடையும் செல்வம் ஒரு ஆசீர்வாதமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பணத்தினால் எத்தனை பேர் இறந்திருக்கின்றார்கள்? வயதானவர்கள் வீட்டில் பணத்தை வைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்க முடிவதில்லை. நகைகளுடன் வெளியே செல்ல பயமாக இருக்கின்றது. யாரையும் நம்ப முடிவதில்லை. வேலையாட்கள் மீது எப்போதும் கவனம் வைக்க வேண்டும். அனைவரையும் சந்தேகத்துடனே பார்க்க வேண்டியதிருக்கின்றது. ஆகவே செல்வம் ஒரு சாபமா அல்லது வரமா? அது சாபமே.

அதனால் தான் இன்றைய தினம் (வர மகாலக்ஷ்மிபூஜை தினம்) நாம் செல்வம்  சாபம் ஆகி விடக் கூடாது,  ஒரு ஆசீர்வாதம் ஆகவேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றோம்.

கடவுளே! செல்வத்தை அருளுங்கள், ஆயின் அது எங்கள் வாழ்க்கையில் ஒரு ஆசீர்வாதமாக வேண்டும். சாபம் ஆகிவிடக் கூடாது. இச்செல்வம் எங்கள் வாழ்வில் எச்சண்டையும் இன்றி சந்தோஷம், அமைதி, வளம் ஆகியவற்றை ஏற்படுத்தட்டும் என்று  வேண்டிக் கொள்கின்றோம். நமது முன்னோர்கள் நன்கு சிந்தித்து இவற்றை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்கள். செல்வம் இருந்தால் மட்டும் போதாது, அது ஒரு ஆசீர்வாதமாகவும் இருக்க வேண்டும். அத்தகைய செல்வத்துடன் தான் வாழ்வில் அமைதி உண்டாகும். இந்த உணர்வுடன் பெண்கள் ஷரவன மாத பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை பூஜை செய்கின்றார்கள்.

இந்த நாளில் ஒரு கலசத்தின் மீது அரிசியை வைத்துப் பூஜையைத் துவங்குகின்றார்கள். இந்த மரபு வெகு காலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த நாளில், சமூகத்தில், சச்சரவுகள் , சண்டைகள், அல்லது ரத்தம் சிந்துதல் ஆகியவை நிகழக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்கின்றனர். செல்வம் நிறைந்திருக்கட்டும். ஆனால் அது சண்டைகள், பேராசை, மற்றும் பொறாமையை ஏற்படுத்தக் கூடாது. ஒருங்கிணைவு அமைதி, சௌகர்யம் ஆகியவை ஏற்படட்டும். பெண்கள் மட்டுமன்றி அனைவருமே இந்தப் பூஜையை செய்யலாம். ஆனால் பெண்கள் கையில் கயிறு கட்டி "இந்த வீட்டில் சேரும் செல்வம் அனைத்தும் நல்ல காரணங்களுக்கே பயன்படுத்தபடும், சமூகத்திற்கு, வாழ்விற்கு அழிவை ஏற்படுத்தக் கூடிய போதைப் பொருட்கள் போன்றவற்றுக்கு பயன் படுத்தப்படாது என்று உறுதி எடுத்துக் கொள்கின்றேன்" என்று கூறி பூஜை செய்கின்றனர்.

நமது நாட்டில் எல்லாமே புனிதமாக கருதப்படுகின்றது. செல்வம் கூடப் புனிதமானதாக கருதப் படுகின்றது. அது ஆசீயாகும் போது மேலும் புனிதமாகின்றது. இன்று பல நாடுகளிலும் ஏராளமான செல்வம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் தவறான வழியில் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆசீர்வாதம் அல்ல.சாபமே ஆகும்.பல நாடுகள் சமுதாயத்தை மற்றும் மனித நாகரீகத்தை அழிக்கக் கூடிய பல கருவிகளை உருவாக்கியுள்ளன. எனவே செல்வத்தை கௌரவிப்பது என்பது  மனித சமுதாயத்தின் பரிணாம வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் அதைப் பயன்படுத்துவதே ஆகும். மக்களிடையே பூசலை உருவாக்குவது அல்ல. செல்வம் வரமாக வேண்டும், சாபமாகக் கூடாது என்பதை அறிந்து உணருவதே ஒரு ஆச்சரியமான விஷயம் ஆகும். அல்லவா?

ஆழ்ந்து நோக்கினால் செல்வம் எத்தனை சண்டைகளை ஏற்படுத்தி இருக்கின்றது என்பது தெரியும். பல சமயங்களில் செல்வம் இருந்தாலும் அது ஒத்திசைவையோ அமைதியையோ நலனையோ ஏற்படுத்துவது இல்லை. அதிக அளவில் பாதுகாப்பின்மை,பயம், அழுத்தம், துன்பம் இவற்றையே உருவாக்குகின்றது. எனவே, நீங்கள் அடையும் செல்வம் ஆசியாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வரம் என்றால் ஆசீர்வாதம். நமது வாழ்வில் கிடைக்கும் செல்வம் நமக்கு ஆசியாகட்டும்.  சண்டைக்கும் போட்டிக்கும் காரணமாக வேண்டாம்.

குருதேவ், சரணாகதி மற்றும் தீர்வு இவையிரண்டில் எது பலம் வாய்ந்தது?  நாம் செய்யும் தீர்வு நமக்கு நல்லதா இல்லையா என்று எவ்வாறு நம்புவது?

குருதேவ்: ஏன் இவ்வளவெல்லாம் சிந்தித்து கவலைப்படுகின்றீர்கள்? அனைத்தையும் விடுத்து இளைப்பாறுங்கள். சரண் கொடுக்க உங்களிடம் எதுவும் இல்லை. இந்த உடல் உங்களுக்கு சொந்தமானதா? இதை எத்தனை காலம் உங்களால் காக்க முடிந்தது? இளமையில் யாரோ கவனித்தார்கள். சுத்தப்படுத்தி, உணவளித்து, உறங்க வைத்து கவனித்து கொண்டார்கள். முதுமையில் யாருடைய உதவியாவது தேவைப்படும். நடக்க தேவை, உங்களது பெட்டியைத் தூக்க உங்களுக்கு யாருடைய உதவியாவது  தேவைப்படும். இந்த உடல் இயற்கையைச் சேர்ந்தது. இயற்கை கவனித்துக் கொள்கின்றது. உங்களது மனம் இறைமையை சேர்ந்தது. அது எப்படி இருந்தாலும் இறைமை கவனித்துக் கொள்ளும்.

ஞான கண்ணோட்டத்தில், வாழ்வினைப் பார்த்தால், சரண் அடையவதற்கு முதலாவதாக நம்மிடம் எதுவுமே இல்லை. கவலைப்படாதீர்கள், இளைப்பாறுங்கள். எதை செய்ய இயலவில்லையோ அதைச் செய்யாதீர்கள்.இதைப் புரிந்து கொள்ளுங்கள். எதைச் செய்ய இயலவில்லையோ அதை செய்வது அழுத்தத்தை ஏற்படுத்தும். சரணடைய முடியவில்லையென்றால் மௌனமாக அமருங்கள். இந்த ஞான செய்தியை தவறாக பயன்படுத்தாதீர்கள். மது அருந்துவதற்கு பழகி இருந்தால் அதை விட இயலாததால், குடித்துக் கொண்டே இருப்பேன் என்று கூறாதீர்கள். எவ்வாறு அதை நிறுத்துவது என்று எனக்குத் தெரியும். உங்களது பணப்பையை இங்கு வையுங்கள். பணம் இல்லாமல் எவ்வாறு குடிப்பீர்கள்? பழக்கத்தை விட முடியாததால் தொடருவேன் என்று மட்டும் கூறாதீர்கள். நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். நிச்சயமாக அப்பழக்கத்தை விட முடியும். விட வேண்டும் என்னும் உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஓரிரு முறை அதை மீறி விட்டால் பரவாயில்லை, ஆனால் உடனடியாக திரும்பவும் உறுதி எடுக்க வேண்டும். அப்போது அது நிச்சயம் நடந்தேறும்.

குருதேவ், பற்றற்ற நிலையை எவ்வாறு அடைவது? எதையானும் அடைய வேண்டும் என்னும் ஆசையை எவ்வாறு துறப்பது?

குருதேவ்: தியானம் மற்றும் ஞானத்தின் மூலம் நீங்கள் பேரின்பத்தை அடைவீர்கள். அப்போது பற்றற்ற நிலை தோன்றும். பற்றற்று இருப்பதற்கு அனைத்தும் தாற்காலிகமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பேரின்பத்தை அடைய உள்மனதை மௌனமாக்க வேண்டும். மனம் பரபரப்பான நிலையிலிருந்து விடுபட வேண்டும். இது பிரணாயாமா மற்றும் தியானத்தின் மூலமே நிகழ முடியும். இன்று இங்கு வந்து அமர்ந்திருப்பது பேரின்பம் அல்லவா? உங்களில் எத்தனை பேர் மனம் பேரின்பத்தில் திளைத்திருப்பதை உணருகின்றீர்கள்?