ஒரு நெருக்கமான பிணைப்பு

திங்கள் கிழமை 18-08-2014


பெங்களூர், இந்தியா

நாம் ஜன்மாஷ்டமியை மௌனமாக கொண்டாடுவோம். உற்சவத்தை ஆனந்தமான மௌனத்தில் கொண்டாடி முடிக்கலாம். வாழ்க்கையை நாம் நான்கு பரிணாமங்களில் நோக்க வேண்டும்.

முதல் பரிமாணம் - ஸாமிப்யா

நம்முடன் நெருக்கமானவர்கள், நமக்குப் பிரியமானவர்கள், எப்போதும் நம்முடன் இருப்பதாக உணர்வு இருக்கும். அது நம் குருவாகவோ, அல்லது கடவுளாகவோ, அல்லது ஞானியாகவோ இருக்கலாம். எனவே பகவான் கிருஷ்ணர் உன்னைச் சேர்ந்தவர். எப்போதும் உன்னுடன் இருக்கிறார் என்பதை நீ அறிய வேண்டும். இதை உறுதியாக நம்ப வேண்டும். குருதேவர் எல்லோரையும் சேர்ந்தவர் என்று நீ சொல்லும் போது, நீ அவருக்கு நெருக்கமாக இல்லை என்று நினைக்கிறாய். குருதேவர் என்னைச் சேர்ந்தவர் என்று நீ சொல்லும் போது, குருதேவருடன் மிக அருகில் நெருக்கமாக இருப்பதாக அனுபவம் ஏற்படுகிறது.

குருதேவருடன் இருக்கும் நெருக்கமான பிணைப்பு, இடம் மற்றும் காலத்தைப் பொறுத்தது அல்ல. நீ எங்கிருந்தாலும், எப்போதும் குருவோடு உனக்கிருக்கும் நெருக்கமான பிணைப்பை அனுபவிக்க முடியும். குருவுக்கு நீ பிரியமானவள், நெருங்கியவள் என்பதை உறுதியாக நம்பு. இது உன் உறவினரோடு உனக்கிருக்கும் நெருக்கம் போன்றது. நீ உன் குரு, ஞானம் அல்லது கடவுளோடு நெருங்கி இருக்கவில்லை என்று எண்ணுவாயானால் அப்படியே நடக்கத் துவங்கும். நீ குருவோடு மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறாய், நீ அவருக்கு மிகவும் பிரியமானவள் என்பதை உறுதியாக அறிந்துகொள். எல்லா தடைகளையும் மீறி, சந்தேகங்களை விட்டு இவ்வாறு உறுதியாக இருக்கும் போது உனக்கு ஸாமிப்ய சித்தி கிடைக்கும். (நீ குருவுடன் / குரு உன்னுடன் நெருக்கமாக இருக்கும் அனுபவம். )

இரண்டாம் பரிமாணம் - ஸாந்நித்யம்

குரு உன்னுடன் நெருக்கமாக பிரியமாக இருக்கிறார் என்பதில் உறுதியோடு இரு. நீ எப்படி உன் நெருங்கியவர்களோடு பிரியமாக இருக்கிறாயோ, எப்படி நடந்து கொள்கிறாயோ, அதே போல் குரு உன்னிடம் அன்பாக இருக்கிறார். இப்படி நீ உறுதியாக இருந்தால் அடுத்து வருவது ஸாந்நித்யம். (நீ குரு, கடவுள் உன்னுடன் இருப்பதை உண்மையில் அனுபவிக்கிறாய்.) எனவே முதல் கட்டத்தில் உனக்கு குருவிடம் / கடவுளிடம் நெருக்கமான பிணைப்பு இருக்கிறது என்று நீ நம்ப வேண்டும். எது வந்தாலும் இந்த நம்பிக்கையைக் கைவிடக் கூடாது. இப்படி நம்புவது ஸாமிப்யம். நம்பிக்கை உறுதியாக இருக்கும் போது ஸாந்நித்யம் கை கூடும். அப்போது உண்மையில் இந்த நெருக்கமான பிணைப்பை அனுபவிக்க முடியும். குருவின் அருகாமையை, அவர் உன் பக்கத்தில் நிற்பதை, உன் பின்னால் வருவதை, உன் ஆழ் மனதில் இருப்பதை, உன் ஆத்மாவோடு கலந்திருப்பதை உணர முடியும். உன் இதயத்தின் ஆழத்தில் அப்படிப்பட்ட உணர்வு பிறக்கும்.

உங்களில் எத்தனை பேருக்கு இப்படி அனுபவம் இருக்கிறது. (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்) இது உண்மையான ஞானம் தேடுபவரின் அடையாளமாகும். இந்த அனுபவமும் இடம், காலத்தைப் பொறுத்தது அல்ல. ஆசிரமத்துக்கு வரும் போது தான் குருவின் நெருக்கமான பிணைப்பை அனுபவிக்க முடியும் என்று எண்ண வேண்டாம். அப்படி அல்லவே அல்ல. இந்த அனுபவம் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் வரக்கூடும். உன் மனம் அமைதியடைந்து நீ உன் ஆத்மாவுடன் ஒன்றும் போது, நீ குருவின் அருகாமையை உணர முடியும். இங்கு வாழும் கலை ஆசிரியர்கள் உள்ளனர். ஹாப்பினெஸ் பயிற்சி, (ஆனந்தப் பயிற்சி) அளிக்கும் போது நீங்கள் குருவின் அருகாமையை உணர்ந்திருப்பீர்கள். கண்டிப்பாக உணர்ந்திருப்பீர்கள். அதனால் தான் நீங்கள் பயிற்சி வகுப்பு எடுக்க முடிகிறது. பயிற்சியின் போது பயிற்சி பெறுபவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறீர்கள். அந்த பதில் நீங்களே அறியாமல், உங்கள் வாயில் வருகிறது. நீங்கள் வகுப்பு எடுக்கும் போது சரியான பதிலை நீங்கள் சொல்கிறீர்கள். அது தான் குருவின் ஸாந்நித்யம். 

மூன்றாவது பரிமாணம் - ஸாருப்ய

நம் ஆத்மா முழுவதிலும், உடலின் ஒவ்வொரு அணுவிலும் தெய்வத்தின் நெருக்கத்தை உணர்வது. நம் பார்க்கும் நிலை. (பார்க்கும் எல்லாவற்றிலும் கடவுளைக் காணும் நிலை.) இந்தியாவில் ஜன்மாஷ்டமி மற்றும் ஶ்ரீ ராமநவமி உற்சவங்களின் போது குழந்தைகளை பகவான் கிருஷ்ணர் மற்றும் இராமர் போல் அலங்கரிப்பது வழக்கம். இது காணும் அனைத்திலும் கடவுளை காண்பதை குறிக்கிறது. பல மதங்களில் கடவுளைப் போல் வேஷம் தரிப்பதைக் குற்றமாக கருதுகிறார்கள். அவர்கள் கலாசாரப்படி கடவுள் மற்றும் மதகுருமார்கள் போல் வேஷம் தரிப்பது குற்றம். ஆனால் இந்தியாவில் அப்படிக் கருதுவதில்லை. இதை நாம் கடவுளுக்குச் செலுத்தும் மரியாதையாக கருதுகிறோம். அதனால் இப்பண்டிகையின் போது ஒவ்வொரு தெருவிலும் ஒரு சிறுவனுக்கு இராமர் போலவும் ஒரு சிறுமிக்கு சீதையைப் போலவும் மற்ற ஒரு சிறுவனுக்கு அனுமனைப் போலவும் அலங்கரிப்பதைக் காண முடியும். கடவுளின் உருவச் சிலைகளை பார்த்து அதே போல் அலங்காரம் செய்யும் வழக்கம் உள்ளது. யாரையோ பார்த்து பாவனை செய்வதை விட கடவுளைப் பார்த்து பாவனை செய்வது நல்லது என்று எண்ணுகிறோம்.

ஆனால் இப்படிச் செய்யும் போது, உன் சொந்த மகிழ்ச்சிக்காக செய். யாரையும் ஏமாற்ற வேஷம் போடாதே. கடவுள் போல் வேஷம் போட்டு பொருளை நாடி மக்களை ஏமாற்றக் கூடாது. கிராமப்புறங்களில் காளியம்மனை முழுமனதோடு வணங்குபவர்கள் மேல் தேவியின் சக்தி புகுந்ததாக நம்புகிறார்கள். அவருள் இருக்கும் தேவியின் சக்தியை நம்மால் உணர முடியும். அந்த சமயத்தில் அவருடைய இயல்பான நிலையை நீ பார்க்கமாட்டாய். அதே போல் சிலர் பகவான் கிருஷ்ணரின் குணங்களில் லயித்து, ஆழ்ந்த நிலையில் அவரை நினைத்திருக்கும் போது, நீயும் அவர்களை பகவான் கிருஷ்ணராகப் பார்க்க முடியும். ராதாவுக்கும் மீராவுக்கும் இந்த அனுபவம் இருந்தது. எல்லா பக்தர்களின் நிலையும் இதுவே. தங்கள் இஷ்ட தெய்வத்தை அன்போடும், பக்தியோடும் வணங்கும் போது தங்களுக்கும் தெய்வத்துக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை உண்மையான பக்தர்களால் உணரமுடியும். நீயும் உணர முடியும்.அப்போது பார்க்கும் அனைத்திலும் அந்த கடவுளை மட்டுமே காண்பாய். எந்த உருவமும் உனக்குக் கடவுளாகக் காட்சி அளிக்கும்.

நான்காவது பரிமாணம் – ஸாயுஜ்ய

ஸாயுஜ்ய என்றால் கடவுளோடு ஒன்றாக இணைந்து விடுவது. ஸாருப்ய நிலையில் கடவுளோடு ஒன்றாக இணைவதற்கான தாபம் (அதி தீவிரமான ஏக்கம்) இருக்கும். பக்தர் கடவுளின் உருவத்தில் லயித்திருப்பார். அதிதீவிரமான பக்தியில் இருப்பார். இறைவனிடம் ஒன்றாக இணைவதற்கான ஏக்கமும் சஞ்சலமும் இருக்கும். மீராபாய் சொன்னார் இறை பக்தியினால் வரும் தாபத்தினால் வரும் வலி எப்படிப்பட்டது என்பதை நான் முன்னரே அறிந்திருந்தால், நான் தெருத்தெருவாக சென்று மக்களிடம் இறைவனிடம் அன்பு வைக்க வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். அந்த தாபம் மிக மிகக் கொடிது. ஒன்றாக இணைய வேண்டுமென்ற தாபத்தினால் வரும் வலி மிக மிகக் கொடியது. இந்நிலையில் உள்ள பக்தருக்கு குரு தேவைப்படுகிறார். பக்தருக்கும் இறைவனுக்கும் உள்ள வேறு பாட்டை குரு நீக்கி விடுவார். எனவே மீராபாய் தன் குருவை சந்தித்து ஞானம் பெற்ற பின் இவ்வாறு பாடினார்

“பாயோஜி மைனே ராம் ரத்தன் தன் பாயோ“ இதன் பொருள் ஆஹா! என்ன ஆனந்தம்! கிடைப்பதற்கரிதான ரத்தினம் போன்ற ராமமந்திரம் எனக்குக் கிடைத்து விட்டது. பாருங்கள்! குரு எவ்வளவு அறிவுள்ளவர். அவர் மீராபாய் கிருஷ்ண பகவானிடம் வைத்திருந்த தீவிர பக்தியையும் அந்த தாபத்தினால் ஏற்பட்ட வலியையும் அறிந்திருந்தார். ஆனால் மிகவும் வித்தியாசமான ஒன்றை அவருக்கு மந்திரமாக உபதேசித்தார். மீரா பாய்க்கு பகவான் கிருஷ்ணரிடம் இருந்த பக்தியை அறிந்திருந்தும் பகவான் ராமருடைய பெயரை மந்திரமாக உபதேசித்தார். 

இராமருக்கும் கிருஷ்ணருக்குமிடையே, பூமிக்கும் வானத்துக்குமிடையே உள்ள வேறுபாடு போல் பல வேறுபாடுகளைப் பார்க்கலாம். ராமர் தன் வாழ்நாளில் செய்த காரியங்களுக்கும் பகவான் கிருஷ்ணர் தன் வாழ்நாளில் செய்த காரியங்களுக்கும் பல வேறுபாடுகள் இருக்கின்றன. ராமர் பகல் 12 மணிக்கு அரண்மனையில் பிறந்தார். கிருஷ்ணர் நள்ளிரவு 12 மணிக்கு சிறைச்சாலையில் பிறந்தார். ராமர் பிறந்த போது எல்லா இடங்களிலும் கொண்டாட்டமாக இருந்தது. கிருஷ்ணர் பிறந்த போது அவருடைய தந்தை குழந்தையின் உயிரைக் கம்சனிடமிருந்து காப்பாற்றுவதற்காக நள்ளிரவில் அவரை கோகுலத்துக்கு அழைத்துச் சென்றார்.

இருவருக்குமிடையே பல வித்தியாசங்களை பார்க்கலாம். ராமர் எப்போதும் ஒரு சிஷ்யராகவே இருந்தார். அவர் யாருக்கும் குருவாக இருந்ததில்லை. ஆனால் கிருஷ்ணர் அவரை சுற்றியிருந்த அனைவருக்கும் குருவாக இருந்தார். முதல்முதலாக யசோதைக்கு தன் உண்மையான ரூபத்தைக் காட்டினார். தான் யார் என்பதை யசோதைக்கு அறிவுறுத்தினார். தன் தந்தைக்கும் குருவானார். கல்வி பெற தன் குருவான சாந்திபனி முனிவரிடம் சென்ற போதிலும், அவருக்கும் குருவாக விளங்கினார். சில நாட்கள் அவருடைய குருகுலத்தில் அவருக்கு சிஷ்யராக இருந்தார்.

“குரு பினா கதி நஹி “ என்று சொல்வார்கள். ஆன்மீகத்தில் முன்னேற்றமடைய குரு அவசியம். குரு இல்லாமல் ஆன்மீக வளர்ச்சியடைய முடியாது என்று நம் நன்னூல்களில் சொல்லப்படுகிறது. தானே ஒரு குருவாக இருந்தாலும் கிருஷ்ணர் இந்த வாக்கியத்தை உறுதி செய்வதற்காகவே தன் குருவான சாந்திபனி முனிவரை நாடிச் சென்றார். சாந்திபனி முனிவர் கிருஷ்ணரை சிஷ்யராக அடைந்ததற்காக மிக்க மகிழ்ச்சியடைந்தார். “பகவானே! உனக்கு ஞானமளிக்கும் பெரும் பேற்றை எனக்குத் தந்திருக்கிறீர்கள். நீங்களே இந்த உலகத்துக்கு குரு என்பதை நான் அறிவேன். உங்களுக்கு குருவாகவும் சேவகனாகவும் இருக்கும் இந்த அரிய வாய்ப்பை எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். “ சாந்திபனி முனிவர் மேற் சொன்னவற்றை சொல்லாவிட்டாலும், அவருடைய இதயத்தில் பகவான் கிருஷ்ணரைப் பற்றிய உணர்வு இவ்வாறு இருந்தது.

ஒரு சிஷ்யரின் வாழ்வில் சமநிலையை உருவாக்க என்ன செய்வதென்பதை குரு மட்டுமே அறிவார். “குரு பினா கதி நஹி“ – குரு இல்லாமல் ஆன்மிக வளர்ச்சி பெற முடியாது. ராமர் ஒரு மனைவியுடன் வாழ்ந்தார்.எது நடந்தாலும் தர்மத்தைக் கடைப்பிடித்தார். நன்னூல்கள் சொல்லியதை பின்பற்றினார். தந்தை சொல்லை மந்திரமாக ஏற்று அதன்படி நடந்தார். பகவான் கிருஷ்ணர் விஷமக்காரராக இருந்தார். பலமுறை தன் தந்தை சொல்வதைக் கேட்கமாட்டார். தந்தை இடது புறம் செல்லச் சொன்னால் அவர் வலதுபுறம் செல்வார். தந்தை மதுராபுரிக்குப் போகாதே என்று சொல்வதைக் கேட்காமல், இல்லை அப்பா நான் மதுராபுரிக்குப் போவது அவசியம் என்று சொல்லி அங்கு சென்றார்.

மீராபாயின் குரு அவருக்கு ராம மந்திரத்தை உபதேசித்தது ஏன்? ஏனென்றால் சிஷ்யருடைய தேவையை குரு மட்டுமே அறிவார். மீராவுக்கு அதி தீவிரமான பக்தியால் மன அமைதி இல்லாமல் இருந்தது. ஏனென்றால் அவளுடைய தாபம் எப்போதும் உடன் இருந்தது. ஆகவே அவளுடைய குரு ராமமந்திரத்தை உபதேசித்து அவளுடைய பக்தியை மேம்படுத்தினார்.அவளை பக்தியில் திளைக்கச் செய்தார். எனவே ஒரு கிருஷ்ணபக்தை “நான் கிடைத்தற்கரிய ரத்தினமான ராமமந்திரத்தை பெற்றேன்“ என்று பாடினாள்.

“பாயோஜி மை னே ராம் ரத்தன் தன் பாயோ! வஸ்து அன்மோல் தியே மேரே சத்குரு “ஓஹோ ! என்ன ஆனந்தம்.  இரத்தினங்களில் சிறந்த ரத்தினமான ராமமந்திரம் கிடைத்திருக்கிறது. என் சத்குரு விலை மதிப்பற்ற இந்த இரத்தினத்தை எனக்கு அளித்திருக்கிறார்) அப்போது மீரா பாய் “ஸாயுஜ்ய “ நிலையை அடைந்தார். கடவுளிடம் ஒன்றாகக் கலந்தார். அவரே கடவுளானார். இது பக்தியின் இறுதி நிலை. தியானம் செய்து சமாதி நிலையை அடைவது. நிலையான ஒன்றான ஆத்மாவுடன் ஒன்றாகப் பிணைவது. ஸாயுஜ்ய நிலையின் அடையாளமாகும். கேட்டறிந்த ஞானத்தை மேலும் மேலும் சிந்தித்து ஆழ் மனதில் தியானிக்க வேண்டும். “அன்ன கூட்“ என்ற உற்சவத்துக்கு சிறப்பான அர்த்தம் உண்டு. நமக்குள் இருக்கும் பெரும் செல்வத்தை உணர்ந்து, இறையருளுக்கு நன்றி சொல்வது. திருப்தியோடு வாழ்வது. எந்த வித குறையும் இல்லை என்று நினைப்பது. வாழ்க்கையை பூரணமாக அனுபவித்து கொண்டாடுவது. நம்மை மிகுந்த அதிர்ஷ்ட சாலியாக நினைக்க வேண்டும். இந்த உலகத்தைப் படைத்தவர் நம்முடன் இருக்கிறார். நமக்கு என்ன குறை இருக்கமுடியும்? எந்தக் குறை வந்தாலும் கடவுள் அதை உடனுக்குடன் தீர்த்து வைப்பார் என்ற உணர்வுடன் வாழ வேண்டும்.

குறை என்பது முதலில் மனதில் வருகிறது என்று அறிந்து கொள். அதனால் தான் ஜன்மாஷ்டமி அன்று “அன்ன கூட்” என்ற உற்சவத்தையும் கொண்டாடுகிறோம். நம்மிடம் இருக்கும் பெரும் செல்வத்தை உணர்ந்து குறைகளை மறந்து கொண்டாடுகிறோம். இந்த உற்சவம் எல்லோரையும் ஒன்று சேர்க்கிறது. சாதிமத பேதமில்லாமல் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆடிப்பாடி கொண்டாடும் உற்சவம் “அன்ன கூட்“ “அன்னம் ப்ரம்மா“ – நாம் உண்ணும் உணவு இறைவன் தந்தது என்ற எண்ணம் நமக்கு இருக்க வேண்டும். இறைவனின் அருளை நினைத்து மகிழ்வது “அன்ன கூட் ” என்ற உற்சவத்தின் சிறப்பாகும்.


நம் கலாசாரத்தில் வாழ்வில் எல்லா பகுதிகளையும் இறை பக்தியுடன் இணைத்திருக்கிறோம். உணவு உண்ணும் போது இறைவனை நினைக்கிறோம். நமக்குக் கிடைத்திருக்கும் ஞானத்தை மதிக்கிறோம். கௌரவிக்கிறோம். இது ஒரு சிறப்பான அழகான தத்துவமாகும். இது நம் கலாசாரத்தின் கௌரவம்.