பக்தன் தோல்வி அடைய முடியாது

சனிக்கிழமை, 31 அக்டோபர், 2015,

பெங்களூரு இந்தியா


 நாம் தோல்வி அடையும் போது செயல்படுபவர் யார்? நான் வெற்றியடையும் போது, அது கடவுள் அருள், குருதேவ் அதை நிறைவேற்றினார் என்றெல்லாம் கூறுகிறேன். ஆனால் நான் தோல்வியுறும் போது, பொறுப்பேற்று கொள்ள கடவுள் என்னைச் சுற்றி எங்குமில்லையே?

தோல்வியுற்ற நேரங்களை பின்னோக்கிப் பாருங்கள். அந்த தோல்விகள் அனைத்தும் உங்களுக்கு நன்மையாகியிருப்பதை எத்தனை பேர் உணருகின்றீர்கள்? (பலர் கையுயர்த்துகின்றனர்) உங்கள் தோல்விகளை பின்னோக்கி பார்க்கும் போது, அவற்றிலிருந்து கற்றுக் கொண்டிருந்திருப்பீர்கள், முன்னோக்கிச் செல்ல உங்களுக்குப் படிக்கற்களாக அமைந்திருக்கும். நீங்கள் இந்தப் பாதையில் இருக்கும் போது,மனத் தூய்மையுடன் தியானம் செய்து கொண்டு இருக்கும் போது ஒரு போதும் தோல்வி அடையவோ,கீழே இறங்கவோ மாட்டீர்கள். தோல்வி அடைவது போன்று தோன்றினாலும், அந்த சிறு தோல்வியும் உங்களுக்கு பெரிய வெற்றியினை ஈட்டித் தருவதற்காகவே ஆகும். இது நிச்சயம். பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் "என் பக்தர் ஓர்நாளும் அழியமாட்டார்" என்று உலகிற்கு உறுதியளித்திருக்கின்றார். பக்தன் அழியும் வாய்ப்பே இல்லை. தூய்மையான மனம் கொண்டவனே பக்தன். நீங்கள் கபடமானவராக இருந்தால் அதனால் தான் தோல்வி ஏற்படும். கபடத்தின் பலனை நீங்கள் அனுபவித்தேயாக வேண்டும். நல்லனவற்றையே செய்து தோல்வி அடைந்தால் கவலைப் படாதீர்கள். நீங்கள் முன்னேறுவது உறுதி.

இயேசு நாதர் சென்னையிலுள்ள மயிலாப்பூரில் வாழ்ந்திருக்கின்றார் என்று முன்னர் தாங்கள் கூறியிருக்கின்றீர்கள். அதைப் பற்றி மேலும் கூற முடியுமா?

இயேசு மயிலாப்பூரில் வாழ்ந்து அங்கு தான் வேதாந்தத்தினை கற்றார். அவர் திரும்பி சென்றவுடன், புனித தாமஸ் அவரை சந்தேகித்தார். இயேசு அவரை, “என்னை நம்பவில்லையெனில் நீயே சென்று பார்“ என்று கூறினார். அதனால் தான், புனித தாமஸ் இந்தியாவிற்கு வந்தார். அவர் முதலில் கேரளாவில் வந்திறங்கி, பின்னர் மயிலாப்பூருக்கு வந்தார். அவர் தம் வாழ்நாளின் இறுதிப் பகுதியினை இங்கேயே கழித்தார். புனித தாமஸ் குன்று மீது அமர்ந்து தியானம் செய்து வேதாந்தம் முழுவதையும் மற்றும் யோகா தியானம் ஆகியவற்றையும் கற்றார். இன்றும் நீங்கள் செயின்ட் தாமஸ் மவுண்ட் இருப்பதை காணலாம். அவரது சமாதியும் அங்குள்ளது. வாட்டிகன் சர்ச் இதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாது. ஆனால் அவர்கள் செயின்ட் தாமஸ் இங்கு வந்ததை ஒப்பு கொள்கின்றனர். தாமஸின் வழி வந்தவர்கள் இப்போதும் சன்யாசிகளை போன்று சிவப்பு ஆடையும் ருத்ராக்ஷமும் அணிகின்றனர். பல சான்றுகள் உள்ளன. நீங்கள் ஆழ்ந்து தியானம் செய்தால், கடந்த கால பல விஷயங்களை அறிந்து கொள்ளலாம். ஆனால் அதற்கு நீண்ட காலமாக  தியானம் செய்ய வேண்டும்.

புரிந்தவரையில், நான் கற்றுக்கொண்ட வரையில், அனைத்தும் பிரம்மன், பிரம்மனுக்கு வெளியே எதுவுமேயில்லை. எங்கும் நிறைந்த அதிவிவேக பிரம்மனில் ஓர் பகுதியாக இருக்கும் போது எவ்வாறு நாம் அறியாமையுடன் இருப்பது நிகழ்கின்றது? இந்த அறியாமை எவ்வாறு எழுகின்றது?

அறியாமையும் பிரம்மனில் ஓர் பகுதியே. பிரம்மன் முழுமையானது அனைத்தின் கூடுதலானது..

சில சமயங்களில் மாயையின்றி ஏதேனும் இருக்கிறதா என்று அதிசயிக்கின்றேன். நான் பார்க்கும், உணரும் அல்லது அனுபவிக்கும் அனைத்தும் ஏதோ ஓர் விதத்தில் மாயை என்றே தோன்றுகிறது. உலகத்தில் எதன் பின்னாலும் ஓடுவதில் பயனில்லை என்று தோன்றுகிறது, ஆயினும் உங்கள் பின்னால் ஓடிகொண்டிருக்கின்றேன்! மாயை மற்றும் மாயையற்றது இவற்றினை வேறுபடுத்திக் காண உதவுங்கள்.

உங்கள் இதயம் கூறுவதைக் கேளுங்கள். எதை அளவிட முடியுமோ அது மாயை. மாயை என்னும் சொல்லிலிருந்து அளவிடுதல் எனும் சொல் ஏற்பட்டது.இந்தப் பூமியில் அளவிடக் கூடியதனைத்தும் மாயை தான். காண்பதையெல்லாம் அளவிட முடியும். கண் பரிசோதனைக்கு மருத்துவரிடம் சென்றால்,அவர் உங்கள் பார்வை 0.5 அல்லது அது போன்ற ஓர் அளவினை குறிப்பிடுவார். ஆகவே பார்வை அளவிடக் கூடியது. அது போன்று ஓசை, சுவை, தொடுதல் அளவிடக் கூடியவை.. பஞ்ச பூதங்களால் ஆன இவ்வுலகில் உள்ளவை அனைத்தும் அளவிடக் கூடியவை.

அளவிட முடியாதது கருணை என்னிடம் 10 லிட்டர் அல்லது 2 டிகிரி கருணை உள்ளது அல்லது 5 டிகிரி அன்பு உள்ளது என்று கூறமுடியாது. அன்பினை அளக்க முடியாது. உண்மையை அளவிட முடியாது. பேரின்பத்தினை அளவிட முடியாது. இவையெல்லாம் பிரம்மனின் ஓர் பகுதியாகும். மெய்யுணர்வின் பகுதி , மெய்யுணர்வு என்பது அளவிற்கு அப்பாற்பட்டது, எனவே மாயைக்கு அப்பாற்பட்டது. விழிப்புணர்வின் இயல்பு, உயர்ந்த மெய்யுணர்வினை நோக்கி நகர்வதேயாகும். சிறு மனம் பெரிய மனதினை நோக்கி நகருதல் போன்றது. ஓர் சிறு குழந்தை தன் தாயை நோக்கி ஓடுவதை போன்று சிறு விழிப்புணர்வு அல்லது சிறு மனம் பெரிய மெய்யுணர்வை அல்லது பெரிய மனதினை நோக்கி ஓடுகின்றது.

தோல்வியைப் பற்றிய பயம் சில சமயங்களில் முயற்சி எடுப்பதைத் தடை செய்கின்றது. இதை நான் எவ்வாறு தடுப்பது?

குழந்தைகளுடன் விளையாடுங்கள். அவர்களிடம் தோற்பதற்குத் தயாராகுங்கள். அது நல்ல பயிற்சி. குழந்தைகளுடன் விளையாடும் போது எப்போதும் வெற்றியடைய விரும்புவீர்களா என்ன? நீங்கள் பெரியவர், குழந்தைகளுடன் விளையாடுகிறீர்கள். வெற்றியையா விரும்புவீர்கள்? அவர்களை வெற்றியடைய செய்வதிலேயே உங்கள் சந்தோஷம் அடங்கியுள்ளது. எனவே நீங்கள் தோல்வி அடைகின்றீர்கள். ஆயினும் விளையாட்டினை மிகவும் விரும்புகிறீர்கள். அதே போன்று, சில தோல்விகள் வாழ்வில் வரும்.அதனால் என்ன? பரவாயில்லை. உங்கள் ஆழத்திலிருக்கும் ஒன்று எப்போதுமே தோல்வி அடையாது.

கலை மற்றும் கலைஞனின் நோக்கம் மற்றும் பங்கு யாவை? ஆன்மீகத்திற்கும் கலை வெளிப்பாட்டிற்கும் இடையே உள்ள உறவு என்ன?


வாழ்க்கையே ஓர் கலை.எது இருக்கிறதோ அதைப் பாராட்டுவது கலை. மலர்க் குவியல் இருந்தால் அதை நீங்கள் மலர்குவியலாகவே காண்பீர்கள். அதையே பகுதிகளாகப் பிரித்து அலங்கரித்தால் அதைக் கலை என்று கூறுகின்றீர்கள். கலை என்பது உங்களுக்கு எதையோ தெரிவிக்கும் ஒன்று. அது உங்கள் இதயத்தை, உணர்வுகளைத் எழுப்பி, உங்கள் மனதை வசீகரிக்கின்றது.

வார்த்தைகளில்லாத ஒரு குரல்

வியாழக்கிழமை, 29 அக்டோபர், 2015        

பெங்களூர், இந்தியா


(தமிழ்நாட்டிலிருந்து வந்த பாடகர்களின் குழுவினர், இன்றைய சத்சங்கத்தில் சேர்ந்து கொண்டார்கள். புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்களைப் பாடினார்கள்)

இன்று தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கும் குழுவினர், பிரசித்தி பெற்ற 63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்கவாசகரை சேர்ந்தவர்கள்.தமிழகத்தில் 63 சிவஅடியார்கள் இருந்தனர். அதில் மூன்றாவதாக வந்தவர் மாணிக்கவாசகர். வார்த்தைகள் ஞானத்தின் முத்துகள் போன்றவை என்பதால் அவரை மாணிக்கவாசகர் என்றழைத்தனர். அவருடைய வார்த்தைகள் வைரம் மற்றும் சிவப்பு இரத்தினக் கற்கள் போன்றவை. அவர் பேசுவது போல் தெளிவாக அப்பழுக்கில்லாமல் இருக்கும். இவர்கள் பாடிய இப்பாடலில், மாணிக்கவாசகர் மனித வாழ்க்கையை பற்றிய அழகான விளக்கத்தை அளிக்கிறார். பின் வருமாறு. இறைவன் ஒரு சிறுமி கயிற்றைத் தாண்டி விளையாடுவது போல் ஆடுகிறார். தாண்டி விளையாடும் போது கால் கயிற்றில் சிக்காமல் குதித்து விளையாடுகிறீர்கள். அதே போல், வாழ்வில் வரும் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ளாமல், தாண்டி சென்று இறைவனை சென்றடையுங்கள் என்று அழகாக சொல்கிறார். எல்லாத் தடைகளையும் தாண்டி இறைவனை சென்றடையுங்கள். அவர் மேலும் சொன்னது; சிவபெருமான் மூன்றாவது கண்ணைத் திறந்து மூன்று மாநகரங்களை எரித்தார். அந் நகரங்கள் யாவை?

·         கர்ம வினை (செயல்களின் பதிவுகள்)
·         அகம்பாவம்
·         மாயை (உண்மையற்றதை உண்மையென்று நினைப்பது)

இந்த மூன்று நகரங்களில் மனிதன் சிக்கிக் கொண்டு சுற்றிச் சுற்றி வருகிறான். (மீண்டும் 
மீண்டும் பிறவி எடுக்கிறான்).இப்பிறவித் தளையிலிருந்து விடுபட, முக்தியடைய இறைவனின்
அருள் தேவை. எனவே ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கயிறு தாண்டுவது போல், அதில் சிக்கிக் 
கொள்ளாமல் தாண்டிச் செல். பிரச்சினைகள் கயிறு போன்றவை. நீ கவனமாக அதைத் தாண்ட
வேண்டும். பிரச்சினைகளைத் தாண்டி மேலே சென்றால் இறைவனின் அருளை உணரலாம்.
பிரச்சினைகளைத் தாண்ட உதவும் இறைவன் எப்போதும் உன்னுடனிருப்பதை நீ உணரலாம். 
இப்பாடலின் கருத்து இது தான்.

பாடலுக்கு மற்றொரு பொருளுண்டு. 3 நகரங்கள் விழிப்பு, கனவு மற்றும் தூக்க நிலைகளை குறிக்கிறது. இறைவனின் அருளை நீ உணரும் போது, உன் வாழ்வில் இறைவனின் பங்கை நீ புரிந்து கொள்ளும் போது, நான்காவது நிலையை, ஞான நிலையை அடைய முடியும். அதை சிவ தத்துவமென்று சொல்லலாம்.  தியான நிலை அல்லது துரிய நிலை என்றும் அழைக்கப்படுகிறது. நீ தியானத்தில் அமரும் போது நான்காவது நிலையை அடைய முடியும். தியானத்தின் போது விழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் தூக்க நிலைகளைக் கடந்து செல்கிறாய்.

மாணிக்கவாசகரின் பாடல் 2000 ஆண்டுகளுக்கு முன்பானது. ஒரு சில பக்தர்கள் இப்பாடல்களை போற்றி அழியாமல் காத்து காத்து நமக்குத் தருகிறார்கள். அப்படிப்பட்ட சிறந்த மனிதர்களை நான் இங்கு அழைத்திருந்தேன். எல்லாவற்றையும் மறந்து இப்பாடல்களைப் பாடி, அதன் கருத்துகளைச் சிந்திக்க முடியும். இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல பக்தர்கள் வாழ்கிறார்கள். பல அறிஞர்கள் பல அழகான பாடல்களை பாடியிருக்கிறார்கள். குருவாயூர் கிருஷ்ணரிடம் மிகவும் பக்தியுள்ள கேரளாவில் வாழ்ந்த பூந்தானம் என்பவர் இயற்றிய ஞானப்பானா என்ற பக்திப் பாடல் இன்றும் பாடப்பட்டு வருகிறது. 12 ம் நூற்றாண்டில் கர்நாடக மாநிலத்தில் வாழ்ந்த பசவண்ணா இயற்றிய வசனங்கள் இன்றும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. 12ம் நூற்றாண்டில் கர்நாடகத்தில் வாழ்ந்து வந்த அல்லாம பிரபு எழுதிய வசனங்களும் போற்றப்படுகின்றன. அக்கா மாதேவி என்ற பெண் புலவர் இயற்றிய “மந்த்ர கோப்யா” மற்றும் ‘யோகாங்கத்ரிவிதியாரே” கன்னட இலக்கியத்தில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.13ம் நூற்றாண்டில் மகாராஷ்டிரத்தில் வாழ்ந்து வந்த, நாத் பரம்பரையில் வந்த தத்துவ ஞானி மற்றும் யோகி, சந்த் க்யானேஷ்வர் பகவத்கீதைக்கு விளக்கம் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய த்யானேஷ்வரி மற்றும் அம்ருத அனுபவ மராட்டி இலக்கியத்தில் சிறப்பாகப் போற்றப்படுகின்றன. இந்தியாவின் எல்லா பகுதிகளிலுமே ஆன்மீக விழிப்புணர்வு இருந்து வந்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பல ஞானிகள், புலவர்கள் பல சிறந்த இலக்கியங்களை படைத்திருக்கிறார்கள்.
எனவே இந்திய நாடு ஞானிகள், தத்துவ அறிஞர்கள் வாழ்ந்து வந்த நாடாகும். கன்னட மொழியில் “வசன சாகித்யம்” என்ற தாள கதியில் எழுதப்பட்ட பாடல்கள் பிரசித்தி பெற்றவை. ‘வசனம்” என்றால் சொல்லப்பட்டது என்று அர்த்தம்.

கேள்வி - பதில்கள்

நாங்கள் ‘வைசேஷிக தர்ஷணம்’ (இந்தியாவில், இந்து மதத்தின் பழமை வாய்ந்த 6 பிரிவுகளில் ஒன்று) பற்றி படித்தோம். மைக்ராஸ்கோப் போன்ற நுண்ணிய கருவிகள் இல்லாத பழங் காலத்தில், இந்து மத ஞானிகள் எப்படி விஞ்ஞான அறிவில் சிறந்து விளங்கினார்கள் என்பதை பற்றிச் சொல்வீர்களா?

நம் மனதுக்கு எட்டாத புதிர் என்று நினைக்கிறேன். இன்று காலை தற்கால விஞ்ஞானி ஒருவர் “வைசேஷிக தர்ஷணத்தில் பௌதீகம்’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு புத்தகத்தை படித்தேன். இரண்டு மூன்று சூத்திரங்களைப் படித்த உடனே மனதுக்கு எட்டாத ஆச்சரியமாக இருந்தது.
10000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகள் அணுவைப் பற்றி விவரமாக சொல்லியிருக்கிறார்கள். ஒரு அணுவை அழிக்கும் போது, அது எப்படி மற்ற பல அணுக்களை அழிக்க வல்லது என்பதை விவரித்திருக்கிறார்கள். அணுத் துகள்களின் ஓட்டப் பாதையைப் பற்றியும், அவை எப்படி மற்ற அணுத்துகள்களுடன் எப்படித் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது பற்றியும் நுணுக்கமாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஒரு அணுவை நாம் நன்றாக அறிந்து கொண்டால், அது மற்ற அணுக்களை பற்றிய அறிவுக்கு வழி வகுக்கும்.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இதுதான். ஐந்து புலன்கள் மூலம் அறிவதற்கப்பால், வேறுவழி ஒன்று உள்ளது. ஆறாவது அறிவு என்று சொல்கிறோம். 6வது அறிவை உபயோகப்படுத்தி, கடந்தகால மற்றும் எதிர்கால நிகழ்வுகளை பற்றி நீ அறியமுடியும். வாழும் கலையில், குழந்தைகளுக்கான ஒரு விசேஷ பயிற்சித் திட்டத்தை வகுத்திருக்கிறோம். இது அவர்களுடைய ஆறாவது அறிவைத் தூண்டுவதற்கான பயிற்சி. பெரியவர்களும் இப் பயிற்சியில் சேரலாம். ஆனால் அவர்களுக்கு அதிக காலம் தேவை. குழந்தைகளின் இந்த சக்தியைத் திறக்க சில மணி நேரம் அல்லது சில வாரங்களே தேவை. அவர்கள் தங்கள் கண்களை மூடிய படியே புத்தகத்திலிருப்பதை படிக்க முடியும். உங்களுக்குத் தெரியுமா? சில குழந்தைகள் இப்பயிற்சிக்கு,  மாலை சத்சங்கத்தில் பேசப் போவதை முன் கூட்டியே அறிந்து என்னிடம் சொன்னார்கள். அவர்களுடைய ஆறாவது அறிவை பயன்படுத்தும் திறமை வேகமாக வளர்கிறது. பண்டைய காலத்து ரிஷிகளுக்கும் இந்த ஆறாவது அறிவுத் திறமை (உள்ளுணர்வு) மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

தமிழ் நாட்டில் தஞ்சாவூர் கோவிலுக்குச் சென்றால், (கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்டது.) தொப்பி அணிந்த,துப்பாக்கி ஏந்திய ஆங்கிலேயப்படை வீரனின் சிலையை காணலாம். 1000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வந்திருக்கவில்லை. துப்பாக்கிகளும் கிடையாது. அப்போது வாழ்ந்தவர்கள், பிற்காலத்தில் இப்படி நடக்குமென்பதை, ஆங்கிலேயர்கள் வந்து நம்மை ஆள்வார்கள் என்பதை தங்கள் உள்ளுணர்வால் அறிந்திருந்தார்கள். எனவே தொப்பி அணிந்த, துப்பாக்கி ஏந்திய ஆங்கிலேய படை வீரனின் உருவத்தை கல்லில் வடித்தார்கள். இது அவர்களுடைய ஆறாவது அறிவால் சாத்தியமாகும். நாமும் நம் ஆறாவது அறிவை எப்போதாவது பயன் படுத்தியிருப்போம். அதை தியானம் மூலம் முறையாக தொடர்பு கொள்ளலாம்.

இறைவனின் கவசம்

செவ்வாய், 10, அக்டோபர், 2015  பெங்களூரு, இந்தியா

எல்லாம் ஏராளமாக கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையோடு, இறைவனால் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்ற நம்பிக்கையோடும் செயல்படுங்கள். உங்களை சுற்றி இறைவனின் கவசம் இருக்கிறது.நீங்கள் கவலைபடுவதற்கு ஏதும் இல்லை.இதை அறிந்து,வாழ்வில் திருப்தியுடனும், உறுதியுடனும், ஆனந்தத்தோடும்,பொறுமையுடனும், நிறைவுடனும் நம்பிக்கையுடனும் மேலே நடந்து செல்லுங்கள்.

நாளை ரிஷி ஹோமம். இதுவென்று கணிக்க இயலாத பன்னெடுங்காலமாய் இருந்து வரும் குருமரபினுக்கு மரியாதை செய்யும் நாள். நாளை ஆயுதபூஜையும் கூட. எல்லா கருவிகளும் தொழில் நுட்பங்களும் இறையின் அங்கமே. எல்லா கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் இறைவனின் பரிசாகக் கருதி நாளை அவற்றுக்கு மரியாதை செய்வோம். ஆன்மீகத்தில், வாழ்க்கை முழுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆன்மீகம் வாழ்கையின் ஒரு மூலைப்பகுதி அல்ல, வாழ்கையின் முழுமையைப் பார்க்கும் திறன். உணவு, இசை, நடனம், அறிவு, கருவிகள், தொழில்நுட்பம், என எல்லாமே ஆன்மீகத்தின் ஒரு பகுதி. வாழ்கையின் இந்த முழுமையில் ஈடுபடுவதே ஆன்மீகம்.எனவே ஆயுதபூஜையில் அனைத்து கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் இறைவனின் பரிசாகக் கருதி மரியாதை செய்கிறோம். கணினிகள், கைபேசிகள், கருவிகள், தொழில்நுட்பங்கள், திருப்புளி, சுத்தியல், என முடிந்த ஒவ்வொன்றும் இறையின் அங்கமாகக் கருதி மரியாதை செலுத்தப்படுகிறது.

சிறு குழந்தைகள், சிறுவர் சிறுமியர், முதிர்ந்த தம்பதி, பெண்கள், குதிரை, யானை இவை எல்லாமே இறையின் அங்கமாகக் கருதி இன்றைய சண்டி ஹோமத்தில் மரியாதை செய்யப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியிலும் அன்னை சக்தியின் அருள் விரவி இருக்கிறது. எனவே அன்னை சக்தியின் இருப்பை ஒவ்வொரு உயிர் வடிவிலும் கண்டு மரியாதை செய்கிறோம்.

கண்களை மூடினால் இருக்கும் வெளியும் ஒளியும் எல்லாமே அன்னை சக்தியே. கண்களைத் திறந்தால் நீங்கள் பார்க்கும் எல்லா வடிவமும் அதன் முழுமையோடும் குறைகளோடும் அன்னை சக்தியின் வடிவங்களே.(குண்டலினி சக்தி, சித்த சக்தி மற்றும் பராசக்தி என்றும் அழைக்கபடுகிறது.) எனவே ஆசையோ அல்லது ஞானமோ எல்லாமே சக்தியின் அங்கமே.