இறைவனின் கவசம்

செவ்வாய், 10, அக்டோபர், 2015  



பெங்களூரு, இந்தியா

எல்லாம் ஏராளமாக கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையோடு, இறைவனால் பாதுகாக்கப்படுகிறீர்கள் என்ற நம்பிக்கையோடும் செயல்படுங்கள். உங்களை சுற்றி இறைவனின் கவசம் இருக்கிறது.நீங்கள் கவலைபடுவதற்கு ஏதும் இல்லை.இதை அறிந்து,வாழ்வில் திருப்தியுடனும், உறுதியுடனும், ஆனந்தத்தோடும்,பொறுமையுடனும், நிறைவுடனும் நம்பிக்கையுடனும் மேலே நடந்து செல்லுங்கள்.

நாளை ரிஷி ஹோமம். இதுவென்று கணிக்க இயலாத பன்னெடுங்காலமாய் இருந்து வரும் குருமரபினுக்கு மரியாதை செய்யும் நாள். நாளை ஆயுதபூஜையும் கூட. எல்லா கருவிகளும் தொழில் நுட்பங்களும் இறையின் அங்கமே. எல்லா கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் இறைவனின் பரிசாகக் கருதி நாளை அவற்றுக்கு மரியாதை செய்வோம். ஆன்மீகத்தில், வாழ்க்கை முழுமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆன்மீகம் வாழ்கையின் ஒரு மூலைப்பகுதி அல்ல, வாழ்கையின் முழுமையைப் பார்க்கும் திறன். உணவு, இசை, நடனம், அறிவு, கருவிகள், தொழில்நுட்பம், என எல்லாமே ஆன்மீகத்தின் ஒரு பகுதி. வாழ்கையின் இந்த முழுமையில் ஈடுபடுவதே ஆன்மீகம்.எனவே ஆயுதபூஜையில் அனைத்து கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் இறைவனின் பரிசாகக் கருதி மரியாதை செய்கிறோம். கணினிகள், கைபேசிகள், கருவிகள், தொழில்நுட்பங்கள், திருப்புளி, சுத்தியல், என முடிந்த ஒவ்வொன்றும் இறையின் அங்கமாகக் கருதி மரியாதை செலுத்தப்படுகிறது.

சிறு குழந்தைகள், சிறுவர் சிறுமியர், முதிர்ந்த தம்பதி, பெண்கள், குதிரை, யானை இவை எல்லாமே இறையின் அங்கமாகக் கருதி இன்றைய சண்டி ஹோமத்தில் மரியாதை செய்யப்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளியிலும் அன்னை சக்தியின் அருள் விரவி இருக்கிறது. எனவே அன்னை சக்தியின் இருப்பை ஒவ்வொரு உயிர் வடிவிலும் கண்டு மரியாதை செய்கிறோம்.

கண்களை மூடினால் இருக்கும் வெளியும் ஒளியும் எல்லாமே அன்னை சக்தியே. கண்களைத் திறந்தால் நீங்கள் பார்க்கும் எல்லா வடிவமும் அதன் முழுமையோடும் குறைகளோடும் அன்னை சக்தியின் வடிவங்களே.(குண்டலினி சக்தி, சித்த சக்தி மற்றும் பராசக்தி என்றும் அழைக்கபடுகிறது.) எனவே ஆசையோ அல்லது ஞானமோ எல்லாமே சக்தியின் அங்கமே.