உண்மையான நம்பிக்கை, நிரந்தரமான மகிழ்ச்சிக்கு வழி வகுக்கிறது.

மே 31, 2014

பெங்களுரு, இந்தியா

கேள்வி - பதில்கள்:


கே: குருதேவ்! வாழ்வின் மகிழ்ச்சிக்கு முக்கியமான மந்திரம் அல்லது திறவுகோல் எது?

ஸ்ரீ ஸ்ரீ: நான்! என்னால்! என்னுடையது! என்பது போன்ற தனிப்பட்ட ஆசைகள் அல்லது பொருள் ஆதாயங்களில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது தான் வாழ்வின் மகிழ்ச்சிக்கு திறவுகோல் ஆகும். உங்களுடைய வாழ்க்கையை ஒரு பெரிய நோக்கத்திற்காகவோ அல்லது உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு சேவை செய்வதற்காகவோ அர்ப்பணிக்கவும். பின்னர் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமே பொங்கி வழிவதை பார்க்கலாம்.

இரண்டாவதாக" என்னை மிகவும் ஆழ்ந்து நேசிக்கும் ஒருவர் இங்கே இருக்கின்றார், அவர் என்னை எல்லா நேரங்களிலும் என்னை பாதுகாக்கின்றார். நான் இல்லாமல் அவர் இருக்க முடியாது.மேலும் என்னிடம் இருக்கும் எந்த குறைபாட்டையும் நீக்கும் திறமை கொண்டவர்" என்பதை நீங்கள் எல்லா நேரத்திலும் ஞாபகம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த உயர்ந்த சக்தியை நீங்கள் குரு சக்தி அல்லது பரமாத்மா அல்லது கடவுள் என எப்படி அழைக்கின்றீர்கள் என்பது முக்கியம் அல்ல. உங்களுடைய திறமைகள் எவ்வாறு இருப்பினும் உங்கள் மீது நம்பிக்கையுடன் இருந்தால். எப்போதுமே மகிழ்ச்சியுடன் இருக்கலாம். மிகவும் வலிமை மிக்க ஒருவர் உங்களை பார்த்துக் கொள்ளவும் உங்களுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார் என்று அறிந்திருப்பதனால், உங்கள் முதுமை பருவத்திலும் நீங்கள் பாதுகாப்பற்றவர் மற்றும் வலுவற்றவர் என்ற எண்ணம் இன்றி வாழலாம்.  

இவை இரண்டையும் அறிந்து  வைத்திருப்பது ஒருவருடைய வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வரும். நீங்கள் வாழ்வில் ஏதாவது செய்ய வேண்டும் என்னும் போது, நீங்கள் வாழ் நாள் முழவதும் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பது அநேகமாக இயலாத ஒன்று. மேலும், உங்களுடைய திறமைக்கு மிஞ்சிய எதையும் உங்களால் செய்ய முடியாது. எனவே உங்களுடைய செயல்கள் அத்தனையும் உங்களுடைய திறமை மற்றும் நேரத்திற்கு உட்பட்டது. 

உதாரணத்திற்கு பிறந்த  குழந்தைக்கு 5 அல்லது 10 வயது ஆகும் வரை பல விஷயங்களை தானாகவே செய்து கொள்ள இயலாது. அதுவரை தன்னுடைய பல தேவைகளுக்கு மற்றவரை சார்ந்து இருக்க வேண்டும். அதைப் போலவே நாம் வயது நிறைந்து 70-80 வயதனவராகும் போதும், மிக குறைந்த செயல்களையே நம்மால் செய்ய முடியும் என்று பார்க்கின்றோம். நாம் மறுபடியும் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டிய நிலையை அடைகின்றோம்.      

நம்முடைய தேவைகளை நாமே நிறைவேற்றிக்கொள்ள கூடிய இந்த இடைப்பட்ட நாட்களில் கூட நாம் நம்முடைய திறமைக்கு உட்பட்டவைகளை மட்டுமே செய்கின்றோம்.ஒரே நபர் ஒரே நேரத்தில் ஒரு மருத்துவராகவும், ஒரு பொறியாளராகவும் மற்றும் ஒரு பெரிய அதிகாரியாகவும் உருவாக முடியாது. இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாகத்தான் வர முடியும். ஆகவே ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட திறமைகள் உள்ளன. மேலும் அவரவர்களுடைய வயதிற்கு ஏற்றவாறு அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்த வரம்புகளும் உள்ளன. ஒவ்வொருவரிடமும் வேறுபட்ட பலங்கள் உள்ளன.  நம்முடைய திறமைகளுக்கும் வரம்புகள்  உள்ளன. நீங்கள் 10 வருடங்களுக்கு முன் இளமையாக இருந்த போது செய்த வேலைகளை இப்போது செய்ய இயலாது அல்லவா? நீங்கள் இப்போது செய்கின்ற வேலைகளை 20 வருடங்கள் கழித்து செய்ய இயலாது. எனவே நாம் காலம் மற்று திறமையை சார்ந்து இருக்கின்றோம்.     

நம்முடைய தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றக் கூடிய உயர்ந்த சக்தி முழுமையாக நமக்கு சொந்தமாக எப்போதும் நம்மிடம் உள்ளது என்பதை நினைவில் வைத்துக் கொண்டிருந்தால், அந்த சக்தி ஒன்றே நம்மை அனைத்து நேரங்களிலும் மகிழ்ச்சியுடன்  வைத்திருக்கும். எனவே இந்த நம்பிக்கை மட்டுமே கூட நம்மை மகிழ்ச்சி உள்ளவராக்கும்.

வயது கூடும்போது நம்முடைய பலமும், திறமைகளும் குறையும். இது இயற்கையே. பலர் முதுமையடையும், அவர்கள் மனத் தளர்வுடனும் பாதுகாப்பற்ற உணர்வுடனும் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களுடைய முகம் துக்கத்தையும், துன்பத்தையும் பிரதிபலிக்கும். ஆனால் ஒரு பக்தனுக்கு அவ்வாறு ஏற்படுவதில்லை. வயது கூடகூட அவர் மிகவும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷமாகவும் இருப்பார். அவர் மேலும் புன்னகையுடனும் ஆனந்தமாகவும் இருப்பார்.

ஒரு பக்தர், "நான் அனைத்தையும் பார்த்து விட்டேன். அனைத்தையும் புரிந்து கொண்டேன். நான் உள்ளுக்குள் மிகவும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் உள்ளேன். என்னுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கடவுள் எப்போதும் என்னுள் இருக்கிறார்" என்று நினைப்பார். நான் ஒரு முறை தென் ஆப்ரிகா சென்றிருந்த போது முதியோர் இல்லத்தில் இருந்து சிலர் என்னை பார்க்க வந்தார்கள். என்னை சந்திக்க ஒரு பெரிய கூட்டம் கூடி இருந்தது. நான் அவர்களுடைய முகங்களைக் கண்டு பெருமளவு ஏமாற்றம் அடைந்தேன். அவர்களுக்கு என்ன ஆகி விட்டது என்று நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் அவ்வளவு பரிதாபமாக இருந்தனர்.

அவர்களுடைய குழந்தைகள் அவர்களை சொந்த வீட்டில் இருந்து வெளியேற்றி ஒரு முதியோர் இல்லத்தில் தங்க வைத்திருந்தனர். அவர்கள் குழந்தைகளை பற்றி நினைத்து நினைத்து மன அழுத்தத்தில் இருந்தது அவர்களுடைய முகங்களில் தெரித்தது. அவர்கள் பல ஆண்டுகளாக சிரிப்பையே பார்க்காதது போல் தெரிந்தது. நான் நம்முடைய வாழும் கலை ஆசிரியர்களை சந்தித்து அந்த முதியவர்களுக்கு ஆனந்தமளிக்கும் பயிற்சியினை அளிக்குமாறும் அதன் மூலம் அவர்கள் பயிற்சிகள் செய்து ஞான மார்க்கத்திற்கு வர வழிகளை செய்யுமாறும் கூறினேன். ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு ஒருவருக்கு புதியதாக எதையும் கற்றுக்கொள்ளுவது சிரமமானதாக இருக்கும். இது எதனால் என்றால், நமக்கு முதுமை அடையும் போது நம்முடைய  பார்வையும் கேட்கும் திறனும் படிப்படியாக குறையத் தொடங்கும்.

நம்மால் நன்றாக பார்க்க முடியும் அல்லது கேட்க முடியும் என்றாலும், நம்முடைய மனம் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் எளிதாக அறிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ செய்யாது. எதையாவது கேட்டாலும் அது வெளி அளவிலேயே நின்று விடும், நம்முடைய மனதிற்குள் ஆழ்ந்து செல்லாது. முதுமை அடையும் ஒருவரின் நிலைமை இதுவே. ஆகவே நான் மற்றவர்களை பார்த்து முதுமையில் என்ன ஆகின்றது என்று பார்த்துக் கொள்ளுமாறும், வாழ்க்கையை ஒரு பெரிய இலக்கிற்கு அர்ப்பணம் செய்வதன் மூலம் நல்ல ஞானத்தில் இருக்கலாம் என்றும் கூறினேன்.

உங்களுடைய குழந்தைகள், வீடு போன்றவற்றை பற்றியே நினைத்துக் கொண்டு ஆசைகள் மற்றும் பந்தங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் கூறினேன். அவர்களுடைய வாழ்க்கையில் எந்த மாதிரியான சிரமங்களை அடைந்திருப்பார்கள் என்று ஒருவரால் கற்பனை செய்து பார்க்க இயலாது. அவர்கள் எவ்வாறு தங்களுடைய குழந்தைகளை வளர்க்கவும் படிக்க வைக்கவும் பணம் ஈன்றிருப்பார்கள்? அத்தனையும் செய்த பின்னும் அதே குழந்தைகள் அவர்களை முதியோர் இல்லத்திலே சேர்த்து அவர்களை கவனித்துக் கொள்ள பணமும் கொடுக்கிறார்கள். வருடத்தில் ஒருமுறை அன்னையர் தினம் அல்லது தந்தையர் தினம் என்று வரும்போது அவர்கள் பெற்றோரை வந்து பார்த்து செல்லுவார்கள் அல்லது வர இயலவில்லை என்றால் கடிதம் எழுதுவார்கள். வயதான அந்த பெற்றோர்களின் நிலைமை மிகவும் துரதிருஷ்டவசமானது. 

ஆனால் என்னை மிகவும் நேசிக்கும், எனக்கே சொந்தமான எப்போதும் என்னை விட்டு நீங்காத ஒரு உயர்ந்த சக்தி எப்பொழுதும் என்னுடன் இருக்கின்றது என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை நம்மிடம் இருந்தால். அந்த நம்பிக்கையில் இருந்து நாம் பெரும் பலம் நம்மை மகிழ்ச்சியில் ஒளிர வைக்கும். வற்றாத புன்னகை நம்முடைய முகத்தையும் ஒளி பெறச் செய்யும். இதனால் தான் வாழ்க்கையில் ஆன்மிகம் மிகவும்  அத்தியாவசியமாகிறது. ஆன்மீகமே மகிழ்ச்சி, ஆர்வம், உள்ளுணர்வு, சுய உணர்வு மற்றும் அனைத்து விருப்பங்களும் பூர்த்தி அடைதல் ஆகியவற்றை கொண்டு வரும். 

கே: வாழ்க்கையில் ஒருவர் எவ்வளவு பணம் சம்பாதிக்க வேண்டும்? ஒருவருடைய தேவைக்கும் மேலாக சம்பாதிப்பது மற்றொருவருடைய பங்கை பதுக்குவது போல் ஆகுமா? மேலும், தன்னிறைவுடன் இருப்பது, வளமுடன் இருப்பது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஸ்ரீ ஸ்ரீ: உங்களுடைய அனைத்து முயற்சிகளையும் செய்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிக்கவும். ஆனால் சில விதிகளை கடைப்பிடிக்கவும். குற்றம் புரிவதன் மூலமாகவோ அல்லது மற்ற ஏதாவது தவறான வழிகளின் மூலமாகவோ சம்பாதிக்க வேண்டாம். அவ்வாறு நீங்கள் செய்தால் முடிவு துன்பமாகவும் துயரமாகவும் இருக்கும். சம்பாதிப்பதற்காக தவறான வழிகளை பின்பற்றினால், உங்களுடைய உள்ளுணர்வே உங்களை குத்தும். யாரிடமோ இருந்து திருடிவிட்டதை போல உங்களுக்குள்ளயே உறுத்தல் ஏற்படும். அதனால் சம்பாதிக்க தவறான வழிகளை பின்பற்ற வேண்டாம். உங்களிடம் உள்ள நேரத்தை முழுமையாக உபயோகித்து முழு முயற்சியுடன் செயல்பட்டு சம்பாதிக்கவும்.

கே: குருதேவ்! ஆத்மா என்பது என்ன?

ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் இங்கே இருப்பதின் காரணமே ஆத்மா தான். அது இல்லாமல் உங்களால் இருக்க முடியாது. ஆத்மா என்பது உங்கள் காதுகள் மூலமாக கவனிப்பது, கண்கள் மூலமாக உணர்வது, மூக்கின் மூலமாக முகர்வது, நாக்கின் மூலமாக சுவைப்பது மேலும் நடக்கும் அனைத்திற்குமே காரணமாக இருப்பது. 

கே: குருதேவ்! மக்கள் புதிய வீடு அல்லது கட்டிடம் கட்டுவதற்கு முன்னாள் வாஸ்து சாஸ்திர நிபுணரை கலந்து ஆலோசிக்க முனைகின்றனர். இந்த வழக்கம் இன்றைய காலத்திற்கு பொருத்தமானதா?

ஸ்ரீ ஸ்ரீ: இங்கே பல வேறுபட்ட சாஸ்திரங்கள் உள்ளன. வெவ்வேறு வேதங்களில் பல்வேறு வழிகளும் அணுகுமுறைகளும் எழுதப்பட்டும் குறிக்கப்பட்டும் உள்ளன. புதிய வீடு கட்டுவதற்கு முன்னால் வாஸ்து சாஸ்திர நிபுணரை கலந்தாலோசிப்பது சரியானதே. ஆனால் அதில் ஏதாவது தோஷம் (நிலத்தில் அல்லது கட்டிட வகையில் ஏதாவது முரண்பாடு) இருந்தால்  ஓம் நமசிவாயா மந்திரத்தை சொல்லவும். ஓம் நமசிவாயா மந்திரம் சொல்லுவது ஒன்றே எந்த விதமான எதிர்மறைத் தன்மையையும் மற்றும் எதிர்கொள்ளும் எந்த பிரச்சினைகளையும் நீக்கவும் போதுமானது.      

உங்களுக்கு தெரியுமா! ஒரு விதத்தில் பக்தியுடன் இருப்பதே எல்லா தடங்கல்களையும் நீக்கி விடும். சேவை, சாதனா மற்றும் சத்சங்கம் இவைகளில் உண்மையுடன் இருப்பதின் மூலமாகவே அனைத்து பிரச்சினைகளும் நீக்கப்படும், எதிர்மறைகளும் மறைந்து போடும். அதனால் தான் ஓம் நமசிவாயா போன்ற மந்திரங்களும்,மகாமிருதுஞ்சயா மந்திரமும் மிக உயர்ந்தவைகளாக உள்ளன. அவைகள் உங்களுடைய அனைத்து பிரச்சினைகளையும், வழியில் குறுக்கிடும் எதிர்மறைகளையும் நீக்கும் சக்தியை கொண்டவை.

கே: குருதேவ்! நான் உங்களுடன் இணைந்திருப்பதை எப்படி உணர்வது?

ஸ்ரீ ஸ்ரீ: அது மிகவும் எளிமையானது. நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? ஏன் தெரியுமா? ஏனென்றால் இணைப்பு ஏறபட்டு விட்டது என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். என்னுடன் உங்களுக்கு இணைப்பு ஏற்பட்டிருக்கவில்லை என்றால் உங்களுக்கு இம்மாதிரியான கேள்விகள் தோன்றாது. இந்த மாதிரியான ஒரு கேள்வி தோன்றியதன் பொருளே இணைப்பு ஏற்பட்டுள்ளது என்பதாகும். அவ்வளவு தான். இணைப்பு ஏற்பட்டுள்ளது என்றும் வலுவாக உள்ளது என்றும் எடுத்துக் கொள்ளலாம். "குருதேவ் வேறு ஒருவரைப் பார்த்தார்! என்னை பார்க்கவில்லையே!" அல்லது "குருதேவ் அவளை பார்த்து சிரித்தார், ஆனால் என்னைப் பார்த்து அல்ல" போன்ற தவறான எண்ணங்கள் எழவேண்டாம். அந்த மாதிரி எண்ணவே வேண்டாம்.

நீங்கள் காற்றுடன் அல்லது உங்களை சுற்றியுள்ள வெற்றிடத்துடன் உங்களுடைய இணைப்பை எவ்வாறு அனுபவிக்கிறீர்கள்? அனுபவிக்க இதில் என்ன உள்ளது? ஒய்வு எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் இளைப்பாறுங்கள். அனைத்தும் உங்களுடையதே. 

இறைமையின் விளையாட்டு

சனிக்கிழமை, 31 மே 2014, 

பெங்களூரு, இந்தியா


வினாக்களும் - விடைகளும்

குருதேவ், அன்பும் பக்தியும் ஒன்றே தானா? நான் விரும்பும் ஒருவர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தால், நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: அப்பொழுதும் கடவுளிடம் நன்றியுடன் இருங்கள். நம்பிக்கை ஆட்டம்  கண்டால் அதன் பயன் என்ன?  கடினமான காலத்திலும் உறுதியாக இருப்பது தான் நம்பிக்கை என்பது ஆகும். ஒரு வேளை நீங்கள் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து அவரால் துரோகம் இழைக்கப்பட்டால், அது இறைமையின் விளையாட்டு என்றே நினைவுறுத்திக் கொள்ளுங்கள். கடவுள் நீங்கள் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்க வேண்டும் என்று விரும்பி, அந்த மனிதரின் உருவில் வந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள். அச்சூழலை இத்தகைய புரிதலுடன் காணுங்கள். நான் ஏன் இவ்வாறு கூறுகின்றேன்? இறுதியில்,ஒரே விழிப்புணர்வு தான் பல்வேறு உருவங்களில் பல்வேறு வழிகளில் நமக்கு முக்கியமானவற்றை கற்பிக்கின்றது

எனவே புரிந்து கொண்டு, முன்னேறிச் செல்லுங்கள். பிறரிடம் குறை காணாதீர்கள். அவ்வாறு செய்தால் இறைவனின் பல்வேறு அவதாரங்களிடமும் நிறையக் குறைகள் காண்பீர்கள். நரசிம்மாவதாரம்,வாமனாவதாரம் இவற்றிலும் குறைகளைக் காண்பீர்கள். பரசுராம அவதாரத்தில் பல குறைகளைக் காண்பீர்கள். பகவான் ராமனின் அவதாரத்திலும் குறைகளை காண்பீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! (சிரிப்பு) குறை கண்டுபிடிக்கும் பழக்கத்தில் சிக்கிக் கொண்டால், அனைத்திலும், அனைவரிடமும்  குறைகளையும் தவறுகளையுமே காண்பீர்கள் 
ஒருவரின் புரிதலை அதிகப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, நமது புராணங்கள் குறைகளையும் தவறுகளையும் கூட இறைமையின் ஏதோ ஒரு உருவில் இணைத்திருக்கின்றன.

எனவே, புராணங்களில், இன்பநிறைவுடைய பகவான் சிவன் கோபம் கொள்ளும் கதைகளை காண்பீர்கள். தேவி பார்வதி கோபம் அடைவதையும், எப்போதும் புன்முறுவலுடன் கூடிய பகவான் விஷ்ணு சோர்வும் வருத்தமும் அடைவதாகவும் கதைகள் கூறப்பட்டுள்ளன. ஆகவே புராணங்கள் இக்குறைகளையும்,சிதைவுகளையும் தெய்வங்களிடமே சுட்டிக் காண்பித்து, இறைமை உண்மையில் அனைத்தும் சூழ்ந்துள்ளவையே, குறைகளும் கூட இறைமையின் ஒரு நிலையே என்று உங்களுக்கு புரிய வைக்கின்றன.

முழுநிறைவு அல்லது குறைபாடு எதுவாயினும் இறைமையைத் தாண்டி எதுவும் இல்லை. ஆகவே, தெய்வங்களை குறைபாடுகளுடன் சித்தரித்திருப்பது ஏனென்றால் நீங்கள் அவற்றில் சிக்கிக் கொள்ளாமல், அவற்றைச் சுலபமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். இறைமை எங்கும் நிறைந்திருப்பது, நல்ல மற்றும் தீயகுணங்களுக்கு அப்பாற்ப்பட்டது. அதனால் தான், தெய்வத் தாயை வணங்கும் போது, ப்ரக்ருதம் விக்ருதம் வித்யம் என்று கூறுகின்றோம். அதாவது, நற்பண்புகளும் அவற்றின் சிதைவுகளும் அடங்கிய தெய்வத்தாய் ஆகும். இவ்வாறு தான் நமது தர்மசாஸ்த்திரங்கள் இறைமையை பற்றிக் கூறுகின்றன. இது (இரட்டை தன்மையைப் புரிந்து கொள்ளுதல்) அத்வைத சித்தாந்தத்தைப் (இறைமையின் இரட்டைத் தன்மையற்ற நிலை) புரிந்து கொள்ள முதற் படியாகும்.

அத்வைதம் அனைத்திலும் உயர்வானது உயிர்மையின் சாரமும் ஆகும். அனைத்தும் ஒன்றே ஒவ்வொன்றும் ஒரே இறைமையிலிருந்து உதயமானதுவே ஆகும் என்று கூறுகின்றது. எனவே இறைமையின் முழுமையை மறந்து விடாதீர்கள், தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நமது மதிநுட்பம் மிகுந்த ஞானிகள் இறைமையின் தன்மைகளை மிக அழகான முறையில் சித்தரித்திருக்கின்றார்கள். குறைகளுக்கு கூட இறை தன்மையுடையவை என்று சுட்டிக் காட்டியுள்ளனர். உங்கள் தெய்வ நம்பிக்கையை பலப் படுத்தும் பொருட்டு, நமக்குத் தெரிந்த ஆறு சிதைவுகள்- கோபம், பேராசை, காமம், பொறாமை, பந்தம்,கர்வம், ஏமாற்றம் ஆகியவை பல தெய்வங்களிடம் உருப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. இறைமையை நோக்கி உங்களை வழிநடத்தும் பொருட்டு ஞானிகள் இதைச் செய்திருக்கின்றார்கள்.

குருதேவ், எனது முற்பிறவி கர்மங்களை எண்ணி வருந்துகின்றேன். தயவு செய்து எனக்கு ஆலோசனை கூறி வழிநடத்துங்கள்.

குருதேவ்: முற்பிறவி வினைகளின் விதைகள் அனைத்தும் நீங்கள் இங்கு வந்தவுடன் எரிக்கப் பட்டுவிட்டன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இளைப்பாறி மகிழ்வுடன் இருங்கள். ஒரு வேளை, உங்கள் வீடு நூறு ஆண்டுகளுக்குப் பூட்டப்பட்டு இருந்தால், எவ்வாறு நூறு ஆண்டு இருட்டை ஒரு நாளில் அகற்றுவது என்று கேட்பீர்கள். ஞான விளக்கு ஏற்றப்பட்டவுடனேயே அனைத்து இருளும் (அறியாமை மற்றும் எதிர்மறை) ஒரு நொடியில் அகன்று விடும். அது போன்றே முற்பிறவி வினைகளின் விதைகள் அனைத்தும், நீங்கள் ஆத்ம ஞானத்தில் மேலும் மேலும் ஆழமாக செல்லும் போது எரிந்து விடும். ‘நான் இந்த உடல் அல்ல’‘நான் நிலை பெற்றிருக்கும் ஆத்மா’ என்று உணரும்போது உங்கள் முற்பிறவி வினைகளின் அனைத்து எதிர்மறை விளைவுகளும் உங்களைப் பாதிக்காமல் சட்டென்று மறைந்து விடும்.

குருதேவ், தயவு செய்து சாம, தான, தண்ட, பேதம் (இணங்க வைத்தலில் அல்லது மனிதர்களைக் கையாளும் நான்கு வழிகளைக் குறிப்பிட்டு ) இவற்றைப் பற்றி விளக்கிக் கூறுங்கள்.

குருதேவ்:  இவை நான்கும் இணங்க வைத்தலின் நான்கு வழிகள் ஆகும்.ஒருவர் தவறு செய்தால், அல்லது நம்மிடம் தவறாக நடந்து கொண்டால் நாம் என்ன செய்கின்றோம்? மென்மையாக அத்தவறை புரிந்து கொள்ள வைக்கின்றோம். பலர் தெரியாமல் தவறு செய்து விடுகின்றார்கள். தாங்கள் செய்த தவறினைப் புரிந்து கொண்டவுடன் அதைத் திரும்பவும் செய்வதில்லை. இது தான் சாம வழி அறியாமல் செய்த தவறுக்கு அவர்களைக் குறை கூறக் கூடாது. ஆகவே சாம என்பது ஒருவரது தவறி மென்மையாக எடுத்துக் கூறி அவரை அதை உணரவைப்பது ஆகும்.

இவ்வாறு எடுத்துக் கூறிய பின்னரும் அவர்கள் அதே தவறை மீண்டும் செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது? அப்போது நீங்கள் " இது தவறு என்று ஏற்றுக் கொள்கின்றீர்கள் அல்லவா? நான் இப்போது மன்னித்து விடுகின்றேன், மீண்டும் செய்யாதீர்கள் என்று கூறி மன்னித்து விடுங்கள். இது தான் தான  ஆகும். ஆகவே முதலில் அவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்காமல் மென்மையாக தவறினை உணரச் செய்கின்றீர்கள். அத்தவறை அவர்கள் மீண்டும் செய்து கொண்டிருந்தால், அவர்களை அத்தவறுக்குப் பொறுப்பாக்கி மன்னிக்கின்றீர்கள் முதல் முறையாக தவறு நிகழும் போது தெரியாமல் செய்த தவறுக்கு யாரையும் பொறுப்பாக்க முடியாது. அவ்வாறு முதல் முறையாக நிகழும் தவறுக்கு  நீங்கள் ஒருவரைப் பொறுப்பாக்கி அவர் மீது குற்றம் சுமத்தினால் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்படுத்திக் கொள்ள இயலாது. தங்கள் தவறுகளை உணர்ந்து கொண்டு தங்கள் தவறான வழிகளை திருத்திக் கொள்ளமாட்டார்கள்.

எனவே சாம வழிக்குப் பிறகே தான வழி வருகின்றது. ஒரு வேளை இவற்றையெல்லாம் தாண்டி, மீண்டும் மீண்டும் தவறிழைத்துக் கொண்டிருப்பவர்களை தண்ட (தண்டனை) முறையில் அணுக வேண்டும். தண்டனை முறையும் பயனளிக்கவில்லை என்றால், அப்போது பேத முறையைத்தான் கையாள வேண்டும். அவரிடம் நமது நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும். அவரிடம், "சரி, எத்தனையோ முறைகள் எடுத்துக் கூறிய பின்னரும் .அதே தவறை தொடர்ந்து நீ செய்து கொண்டிருப்பதால், நான் இனி இதுவரை பழகிக் கொண்டிருந்தது போன்று இனி நடந்துகொள்ள மாட்டேன்." என்று கூறுங்கள். இது சிறிது குற்ற உணர்வைத் தூண்டி தங்களது தவறின் வலியைப் புரிந்து கொள்ளச் செய்யும்.

தண்டா என்பது கடைசி வழியாக இருக்கட்டும். மற்ற வழிகளிலெல்லாம் முயற்சித்தும் ஒருவர் செவிசாய்க்க வில்லையென்றால், அப்போதுதான்   புரிந்து கொள்ள வைப்பதற்கு குச்சியை எடுக்க வேண்டும்.  இடைவிடாது விவரித்துக் கூறிய பின்னரும், புரிந்து கொள்ளாமல் , மற்றும் தனது வழியைச் செம்மைப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், அவர் தண்டா (தண்டனை)  மூலமே புரிந்து கொள்வார்.

எவ்வாறு நமது திறமைகளை அறிந்து கொண்டு அவற்றை மிகுதிப் படுத்திக் கொள்வது?

குருதேவ்: சில சமயங்களில் நமது திறமைகளை நாமே உணர்ந்தறிகின்றோம். சில சமயங்களில் பிறர் அவற்றைப் பற்றி பேசும் போது அறிந்து கொள்கின்றோம் அல்லது மூன்றாவது மனிதர் வாயிலாகக் கேட்டறிகின்றோம்.

பகவான் அனுமன் தன்னுடைய பலத்தினை பற்றி அறியாமலேயே இருந்தார். அதிக பலமும் திறமைகளும் அளிக்கப்பட்டிருந்ததை பிறர் கூற வேண்டியதாக இருந்தது. சில சமயங்களில் நமது திறமைகளை பிறர் வாயிலாக அறிகின்றோம். இப்போது அவை பற்றி மேலும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? " என்னால் செய்ய முடியும்" என்று நீங்கள் அறியும் போது, மேலும் ஒரு அடி எடுத்து வைத்து எவ்வாறு அச்செயலை நிகழ்த்துகின்றீர்கள் என்று கவனியுங்கள்." என்னால் இதை செய்ய முடியாது" என்று எண்ணி நிறுத்தாதீர்கள். இன்னும் என்னால் எவ்வளவு செய்ய முடியும் என்று கருதி, ஒரு அடி முன்னால் எடுத்து வையுங்கள்.

ஒருவர் தம்முடைய  திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு யோகா பெரிதும் உதவுகின்றது. யோகா என்பது யோகாசனங்கள் மற்றும் பிராணாயாமம் மட்டுமே அல்ல. நீங்கள் செய்வதனைத்தையும் முழுமைப்படுத்தி, இறைமையுடன் ஒன்றுவதே யோகா என்பதன் பொருள் ஆகும். அனைத்து யோகப் பயிற்சிகளும் உங்களது திறமைகளையும், செய்நேர்த்தியையும் மேம்படுத்துகின்றன.

உங்களில் எத்தனை பேர் இந்த பயிற்சி வழியில் வந்தபின்னர் உங்களது பண்புகளும்,திறமைகளும் நன்கு அதிகரித்திருப்பதை காண்கின்றீர்கள்?(பார்வையாளர்களில் பலர் கை உயர்த்துகின்றனர்) முன்னர் செய்ததையும் இப்போது செய்வதிலும் உள்ள வித்தியாசத்தைக் காண்கின்றீர்களா? இந்த ஞான மார்க்கத்திற்கு வந்த பின்னர் உங்களது திறமைகள் அதிகரித்திருக்கின்றன, அல்லவா? அதுதான் விஷயம்.

த்ரிதிகளின் மூன்று வகைகள்

வியாழன் - 29 மே - 2014.

பெங்களூரு, இந்தியாகுருதேவ், பாகவத கீதையில் பகவான் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ள மூன்று வகையான த்ரித்திகளின் (பலங்கள் அல்லது மனோதிடத்தின்) யாவை?குருதேவ்: அவை மூன்று வகைகள்: ஞானம் (அறிவு) ,கர்மா,(செயல்) கர்த்தா (செய்பவர்). அது போன்று புத்தி, த்ரிதி (பலம்) மற்றும் தானம் இவை பகவத் கீதையில் விளக்கி கூறப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார்,"த்ர்த்ய யாய தரயதெ மன - ப்ரானேந்த்ரிய - க்ரியாஹ். யோகேநவ்யாபிசரின்ய  த்ரித் ஸ பார்த்த சத்விக் (18.33). அதாவது,“ ஒருவன் சலனமில்லாத முயற்சியுடன் யோகா தியானத்தின் மூலம் மனதின் செயல்பாடுகள், ஐந்து வாயுக்கள், ஐம்புலன்கள் இவற்றைக் கட்டுப்படுத்தும் போது ஏற்படும் திடநிலை சத்விக் ஆகும் அர்ஜுனா" என்று கூறுகின்றார். எது உயிர்நிலையை காத்து நிலைத்திருக்கச் செய்கின்றதோ அதுவே த்ரிதி என்பது ஆகும். மூன்று வகையான த்ரிதிக்கள் உள்ளன. அவை, சத்விக் த்ரிதி, ரஜசிக் த்ரிதி, மற்றும் தமசிக் த்ரிதி ஆகும். சிலருக்கு சிறு விஷயங்களில் கூட மனதிடம் பாதிக்கப்படும். மனம் அலை பாய்ந்து, ஒரு சிறு அவமானத்தை கூடத் தாங்க முடியாமல் இருப்பர். சிறு குறைபாட்டினை கூடத் தாங்கிகொள்ள முடியாது. இது மன திடக் குறைவைக் காட்டுகின்றது.

சத்விக் த்ரிதிதான் (சத்வ அல்லது நேர்மறையில் இருந்து உருவாகும் மனநிலை) மனதை நிலைநிறுத்தி உயிர்நிலையும்,  புலன்களின் அனைத்து செயல்பாடுகளையும்  தாங்குகின்றது.

உதாரணமாக உங்கள் நாக்கிற்கு பல்வகை உணவுகளைச் சுவைக்க விருப்பம் இருந்தாலும், உங்கள் மனம் அதைக் கட்டுப்படுத்தி அதிக அன்பவித்தலைத் தடுக்கின்றது. நீங்கள், மூன்று நாட்களுக்கு அல்லது பத்து நாட்களுக்கு விரதம் இருக்க முடிவெடுக்கின்றீர்கள். இடையில், உங்கள் மனம் அமைதியிழந்து,"ஒ! பரவாயில்லை,விரதத்தை சற்று நிறுத்தி, ஏதேனும் நல்ல உணவு உண்ணலாம், என்ற  எண்ணம் தோன்றுகின்றது. ஆனால் ஏதோ ஒரு ஆழ் மனபலம் நீங்கள் விரதத்தை நிறுத்தி விடாமல் உங்களைக் காக்கின்றது. தடைகளையும் சபலங்களையும் மீறி, தடுமாற்றமற்ற நிலையுறுதி கொள்ள செய்வதே சத்விக் த்ரிதி ஆகும்.அது உங்களது மனதை அலைபாயாமல், ஒழுங்குபடுத்தி, நிலை நிறுத்த உதவுகின்றது. அத்தகைய திடநிலை, (மனத்துணிவு அல்லது விடாமுயற்சி ) உங்களை," நான் என்ன செய்யத் துணிந்தேனோ, அதை விடாமல் செய்து முடிப்பேன்" என்று எண்ண வைக்கின்றது, அதுவே சத்விக் த்ரிதி ஆகும். இங்கு ஸ்ரீ கிருஷ்ணர்," யோகத்தில் எது உன்னை நிலை நிறுத்த உதவுகின்றதோ அதுவே சத்விக் த்ரிதி. ஒரு நாள் யோகத்தில் இருந்து, அடுத்த நாளே போகத்தில் (புலன்களின் சுகம்) திளைப்பது அல்ல அது என்று கூறுகின்றார்.   

ஒரு கணம் தியானத்திலும் மறுகணம் உங்கள் போகத்தை நோக்கித் திரும்புவதும் கூடாது. இது சத்விக் த்ரிதி அல்ல. எது உங்கள் மனதினை நிலைநிறுத்தி, வாழ்வில் ஒருமுனைப்பான குவியத்தை ஏற்படுத்துகின்றதோ, உங்கள் மனதை நிலைநிறுத்தி, உயிர்நிலையும், ஐம்புலன்களின் செயல்பாடுகளையும் உயர்த்தித் தாங்குகின்றதோ, அதுவே சத்விக் த்ரிதி ஆகும்.அடுத்த செய்யுளில், ஸ்ரீ கிருஷ்ணர், தொடர்ந்து, "யயா து தர்ம காமார்த்தம் த்ர்த்ய தரயேத அர்ஜுனா , பிரசன்கேன ப்ஹலகன்க்ஷி த்ரித் ஸ பார்த்த ரஜசி " (18.34) என்று கூறுகின்றார். மனதை உற்சாகம் கொள்ள செய்கின்றதோ, நடத்தையும் செயலும் ஒரு பலனை எதிர்நோக்கி இணைக்கபட்டிருக்கின்றனவோ அதுவே ரஜசிக் த்ரிதி ஆகும். அத்தகைய ஒருவன் "எனக்கு என்ன தரப் போகின்றாய்? இதன் மூலம் எனக்கு என்ன கிடைக்கும்? நல்ல பலன் கிடைத்தாலே நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்." என்று கூறுவான்.

ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார், ஒரு சூழ்நிலை, அல்லது ஆசை அல்லது பொருள் லாபம் இவற்றினால் நமது செயல்கள் செலுத்தப்பட்டால், அந்த நிலையுறுதி, ரஜசிக் த்ரிதி. அத்தகைய செயல்கள் தர்மத்தின்படி சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம், மனஎழுச்சியின் காரணமாக ஒருவர் எடுத்துக் கொள்ளும் சபதம் அல்லது உறுதி மொழி அனைத்தும் ரஜசிக் உறுதிமொழிகளே ஆகும். (அதாவது நேர்மை வழியில் தடுமாற்றமற்ற  நிலையுறுதி கொண்ட மனநிலையில் பிறந்தவை அல்ல) சிலர் "நான் இந்த பணியை செய்து முடிக்கும் வரை ஆஸ்ரமத்திற்குச் செல்ல மாட்டேன் என்று கூறுவதை கேள்வியுற்றிருப்பீர்கள்.உணர்ச்சி வேகத்திலும், மன எழுச்சியிலும், பரிசுகள் போன்ற பலனை எதிர்பார்த்தும் இத்தகைய உறுதிமொழிகளை எடுத்து கொள்பவர்கள் ரஜசிக் த்ரிதியின் பாதிப்பில் இருக்கின்றார்கள். 

உதாரணமாக, பலர் இறைமையிடமிருந்து சில நன்கொடைகளைப் பெறுவதற்காக சடங்குகளை செய்கின்றார்கள். சில பெண்கள் திருமணம் ஆவதற்கு, மற்றும் நல்ல கணவன் கிடைப்பதற்கு அல்லது நல்ல ஊதியமுள்ள வேலை கிடைக்கும் பொருட்டு சோலா சோமவார் விரதம்  மேற் கொள்கின்றார்கள். சில சமய அல்லது ஆன்மீக வழக்கங்களை மிகச் சாதரணமான பொருள் சார்ந்த பலன்களுக்கோ அல்லது சுய ஆசைகளுக்காகவோ பிரயோகித்தால் அது ரஜசிக் த்ரிதி ஆகும்.
இறைமையின் மீதுள்ள அன்பினால் செய்யப்படுவதில்லை. இத்தகைய உண்ணா நோன்புகளும் சடங்குகளும் சுய லாபத்திற்காகவே இறைமையை ஆற்றுபடுத்தும் நோக்கத்தோடு செய்யப் படுபவை. கடவுள் உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றுவார் என்று எண்ணியே பட்டினி கிடக்கின்றீர்கள். கடவுளுக்காக அந்தப் பட்டினி இல்லை. நீங்கள் பட்டினி கிடந்தால் கடவுளுக்கு என்ன லாபம்?

நன்கொடைகளையும், பலன்களையும் கருதி, விடாமுயற்சியுடனும் தீர்மானத்துடனும் செயல்படுவது ரஜசிக் த்ரிதி ஆகும்.  ரஜசிக் த்ரிதி என்பது பலனை எதிர்பார்த்து, ஏற்படும் மன நிலை,உற்சாகம், நடத்தை மற்றும் செயல்பாடு ஆகும். அடுத்து, தமசிக் த்ரிதி என்பது என்ன? ஸ்ரீ கிருஷ்ணர் அடுத்த செய்யுளில் "யய ஸ்வப்னம் பயம் சோகம் விஷாதம் மதம் ஏவ ச. ந விமுஞ்சதி துர்மேத த்ரிதி ச பார்த்த தமசி " (18.35) என்று கூறுகின்றார். ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகின்றார்: எந்த திடம் அல்லது விடா முயற்சியினால் ஒரு தீய மனமுடையவன் தன்னுடைய தூக்கம், பயம், பதட்டம், துக்கம் மற்றும் கர்வம் இவற்றை ழக்காமல் அது தமசிக் த்ரிதி ஆகும்.
தமசிக் த்ரிதியின் குறியீடுகள் யாவை?ஒருவன் மிகச் சோம்பேறியாக, தூங்குகின்றானோ வனுக்கு உறக்கமே முக்கியமானது. வேறெதுவும் ஒரு பொருட்டில்லை. எங்கு வேண்டுமானாலும் அவர்களால் உறங்க முடியும்.  டுத்தோ அல்லது பேசிக்கொண்டோ கூட உறங்குவார்கள்.

கேரளாவில் இவ்வாறு துன்புறும் ஒருவரை பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். காலையில் 8 மணிக்கு காலையுணவு உண்ணும் போது கூட உறங்குவாராம். ஒரு தோசை உண்ட பின்னர் இரண்டாவதற்க்காகக் காத்திருக்கும் இடைவெளியில் மேஜையிலேயே உறங்கி விடுவாராம். ஒரு சமயம் இது போன்ற ஒருவரின் வீட்டில் தாங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் என்னை மீண்டும் வற்புறுத்தி வரவேற்றதால் நான் அதனை ஏற்றுக் கொண்டு தங்கினேன். அவர் வீட்டிலிருந்த ஒரு பணியாளர் என்னிடம் " குருதேவ் அவர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உறங்கிவிடுவார். காலையில் தேநீர் அருந்தும் போதும் யாருடனாவது பேசிக் கொண்டிருக்கும் போதும் திடீரென்று உறக்கத்தில் ஆழ்ந்து விடுவார்." என்று கூறினார்.

இந்நிலைக்கு வைத்தியம் செய்து கொள்ள ஒரு மருத்துவரை நாடிச் சென்றார். டாக்டர்கள் இந்நிலையை கண்டு மிகுந்த ஆச்சர்யம் அடைந்து, மூளையை ஊடுகதிர் படம் மூலம் நுட்பமாக ஆராய முடிவு செய்தனர். தற்காலத்தில் புது வகையான ஊடுகதிர் படங்கள் மூளையை ஆராய்கின்றன. இவருக்கும் செய்யப்பட்டது. அவரைப் படுக்கவைத்து  ஊடுகதிர் படகருவியின் வழியாக நகரும் படிச் செய்தார்கள். கருவி இயக்கப்பட்ட சிறிது நேரத்தில், அந்த அறையிலிருந்து விசித்திரமான சப்தம் வெளிப்பட்டது. என்ன நிகழ்கின்றது என்று யாருக்கும் புரியவில்லை. எது அத்தகைய சப்தங்களை எழுப்புகின்றது என்றும் அறிய முடியவில்லை. அப்போது அவரது சமையல்காரன் மற்றும் கார் ஓட்டுனர் " “இது ஒன்றும் இல்லை. பயப்படாதீர்கள். எஜமான் தூங்கி விட்டார் அவரது குறட்டை ஒலிதான் அது" என்று கூறினர்.

நான் இவரது வீட்டிற்குச் சென்றிருந்த போது என்னுடன் வந்தவர்களுக்கு இத்தகைய தூக்க சீர்குலைவு பற்றித் தெரியாது. அவர்களில் சிலர் அவரிடம் சுதர்சன்க்ரியா மற்றும் தியானம் செய்யுமாறு ஆலோசனை கூறிக் கொண்டிருந்தனர். பல தொழிலதிபர்களும்,அரசியல்வாதிகளும் உறக்கமின்மையை பற்றி குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவரோ," ஒ எனக்கு அந்தப் பிரச்சினையே கிடையாது" என்றார் (சிரிப்பு).

ஒருவன் வேளாவேளைக்கு நல்ல உணவு, சுகமான வாழ்க்கை, எந்த விதமான பணியோ அல்லது குறிக்கோளோ இல்லாமை என்றிருந்தால், பகல் கனவு, சோம்பல், தூக்கம் இவையனைத்தும் ஏற்படும். தூக்கத்தைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? சாதரணமாக வேலை குறைவாக இருந்தால் ஒருவன் சோர்வாகவும், சோம்பலாகவும் ஆவான். இங்கு ஆஸ்ரமத்தில் யாருக்கும் அவ்வாறு நிகழ விட மாட்டோம். அனைவரையும் சுறுசுறுப்பாகவே வைத்திருப்போம். (சிரிப்பு).
சாதரணமாக ஆஸ்ரமங்களின் தலைவர்கள் எவ்வாறு அங்குள்ள அனைவரையும் சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்திருப்பது என்னும் பிரச்சினையை அடைகின்றார்கள். சில இடங்களில், ஒரு இடத்திலிருக்கும் மண்ணைத் தோண்டி எடுத்து, வேறொரு இடத்தில் கொண்டு அடைக்கும் பணியினை செய்யச் சொல்வார்கள். ஏதோ ஒன்றைச் செய்ய வைத்து, சோம்பல் என்னும் வலையில் விழுந்து விடாமல் தடுப்பர்.

தமசிக் த்ரிதியில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய எந்த முக்கியப் பணியானாலும் அதைத் தவிர்த்து விட்டு தூங்க முற்படுவார்கள். அவர்களுக்கு பயம் அதிகம் இருக்கும். ஒரு சோம்பேறி எப்போதும் எதைப் பற்றியாவது பயந்து கொண்டிருப்பான். தன்னை சுறுசுறுப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொண்டிருப்பவன் எதைக் கண்டும் பயப்பட மாட்டான். செயல் விருப்பமின்றி எதுவும் செய்யாமல் இருப்பவன் விரைவில் பயத்திற்கு ஆளாவான். இந்த பயமானது துன்பம் மன அழுத்தம் இவற்றுக்குக் கொண்டு செல்லும். இத்தகைய மனிதர்களின் முகங்கள் எப்பொதும் சோர்வாகவும் மகிழ்ச்சியற்றும் இருக்கும். அவர்கள்," எனக்கு என்ன ஆகும்? யார் என்னை எனது வயது முதிர்ந்த காலத்தில் கவனித்துக் கொள்வார்கள்? இறுதிக் கடன்களை யார் செய்வார்கள்?" என்றெல்லாம் எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பர். ஒருவன் இறந்த பின்னர் எரித்தால் என்ன புதைத்தால் என்ன? அவர் தம்முடைய உடலின் மீது இறந்த பின்னரும் கூட பற்றுக் கொண்டிருக்கின்றார்! தனது  மரணத்திற்குப் பின்னர் விட்டுச் செல்லப்படும் உடலின் மீது அத்தனை கவலை!

ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணம்

வியாழன், 29 மே,2014,

பெங்களூரு, இந்தியா


(மூன்று வகையான த்ரிதி என்னும் இடுகையின் தொடர்ச்சி )

ஒரு சமயம் நான் கலிபோர்னியாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த போது, வீதியில் ஒரு இடுகாடு பற்றிய விளம்பரத்தைக் கண்டேன். அந்த விளம்பரம் என்ன தெரியுமா?" கருத்தை கவரும் மிக அழகான காட்சியமைப்புள்ள பரந்த இடுகாடு, உங்கள் இடத்தை முன்பதிவு செய்யுங்கள்" என்பதே விளம்பரம்! இறந்த பின்னர் உயிரற்ற அந்த உடல் கருத்தை கவரும் மிக அழகான காட்சியமைப்பை காண முடியுமா என்ன?

வெளிநாடுகளில் எரியூட்டுவதற்கும், புதைப்பதற்கும் கூட வர்த்தக விளம்பரம் செய்யப்படுகின்றது. மிக ஆச்சர்யமானது. இறுதியில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ என்று மக்கள் தங்களுக்கான இடத்தை முன் பதிவு செய்து கொள்கின்றார்கள்,தவிர என்ன நிறமான ஆடைகள் அணிவிக்கப்பட்டுப் புதைக்கப்பட வேண்டும் என்பவற்றை கூட முன்னரே அறிவுறுத்தி விடுகின்றார்கள். அனைத்தையும் தங்கள் உயிலில் எழுதி விடுகின்றார்கள். துரதிர்ஷ்டவசமாக இதுதான் மிக அதிகபட்சமான ஜடப் பொருளான உடலுடன் இணைப்பு. அதை போகவிடுங்கள்.

நீங்கள் இறந்தபின்னர் நிச்சயம் யாரவது அந்த உடலை எரித்து விடுவார்கள். அதை பற்றி ஏன் இந்த அளவு எண்ண வேண்டும்? இது பைத்தியக்காரத்தனம் தான். இத்தகைய எதிர்மறையை ஒருவனிடம் காக்கும் த்ரிதி தமசிக் த்ரிதி ஆகும். நாம் அனைவரும் சத்விக், ரஜசிக் அல்லது தமசிக் இவற்றில் எந்த வகையான த்ரிதி தம்மிடம் உள்ளது என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். கண்டிப்பாக எதன் மீதாவது பித்துப்பிடித்தே ஆக வேண்டும் என்றால், கடவுள் படைத்த பொருட்களை விட்டு விட்டு, அனைத்தையும் படைத்த அந்த இறைமையிடமே பித்துக் கொண்டு பிணைத்துக் கொள்ளுங்கள். இவ்வுலக பந்தம் பயத்தை மட்டுமே உருவாக்கும். இந்த பயம் வருத்தத்தையும், துன்பத்தையும்  உருவாக்கும். இவையிரண்டும் மனத் தளர்ச்சியையும் ஏமாற்றத்தையும் உருவாக்கும். இவற்றின் விளைவாக முடிவின்றி கடந்த காலத்தையே எண்ணி வருந்திக் கொண்டிருப்பார்.

"நான் வேலையை விட்டிருக்கக் கூடாது", அல்லது சந்தர்ப்பம் அமைந்த போது நான் வேறொரு பெண்ணை மணந்திருக்க வேண்டும்" என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பார். பணி ஓய்வின் விளம்பில் ஒரு பொறியாளர், "நான் மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்து, அமெரிக்காவில் பணியாற்றி இருந்திருக்க வேண்டும். முட்டாள்தனமான முடிவை எடுத்து விட்டேன்." என்று எண்ணினார்! இத்தகைய மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். கடந்த காலத்தில் நிகழ்ந்து முடிந்தவற்றையே எண்ணி வருந்திக் கொண்டிருப்பார்கள்.

சிலர் அத்தகைய ஏமாற்ற உணர்ச்சிகளிலும் வருத்தத்திலும் ஆழ்ந்து எப்போதும் தங்களை சுற்றி நடப்பவற்றில் எதுவாயினும் அதைப் பற்றி துக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக சிலர் மும்பையிலிருந்து பெங்களூருக்கு பயணம் செய்து பெங்களூரை அடைந்த பின்னர்,'ஒ நான் குளிரூட்டப் பட்ட பிரிவில் முன் பதிவு செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் குறைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். பயணம் முடிந்து விட்டது. பயணத்தின் போது ஏற்பட்ட சிரமங்கள் அனைத்தும் முடிந்து விட்டன. ஆயினும் குறையும் வருந்துதலும் உள்ளன. சில சமயங்களில் சிலர் வீட்டைச் சென்றடைந்த பின்னர் கூட, மற்றொரு சாலையைத் தேர்ந்தெடுத்து அலுவலகத்திற்குச் சென்றிருக்க வேண்டும், அப்போது இன்னும் அரை மணி நேரம் முன்னதாகச் சென்றிருக்கலாம் என்றெல்லாம் வருந்துவர். அந்த அரை மணி நேரத்தில் என்ன பெரிதாகச் சாதித்து விட்டிருக்கப் போகின்றீர்கள்? அந்த அரை மணி நேரம் இழக்கப்பட்டதால் உலகம் அழிந்து விட்டதா என்ன?

வருந்துதல் என்பது இத்தகைய மனிதர்களுக்கு ஒரு பழக்கமாகி விட்டது. இவர்கள் யாரிடம் பேசினாலும் சரி எதையாவது எண்ணி வருந்துவார்கள். இந்த வருந்துதல் என்னும் பழக்கம், சோர்வையும் செயலின்மையும் ஏற்படுத்தும். மகிழ்ச்சியும், உற்சாகமும் நிரம்பிய ஒருவன் ஒருபோதும் வருந்த மாட்டான். அவனது விழிப்புணர்வு எழுச்சியுடன் இருக்கும், செயல் திறனுள்ளவனாக இருப்பான். எவன் ஒருவனுடைய விழிப்புணர்வு எழுச்சி பெற வில்லையோ, அவன் கடந்த காலத்தையே எண்ணி வருந்திக் கொண்டிருப்பான். அத்தகைய த்ரிதி பிராண சக்தியை காத்து நிலை நிறுத்தாது, அதுவே தமஸ் த்ரிதி ஆகும்.

தமஸ் த்ரிதியின் மற்றொரு குறியீடு திமிர் ஆகும். அகந்தையில் சிக்கிக் கொண்டிருப்பவன் அதிலிருந்து தன்னை வெளிக்கொணர முடியாமல் இருக்கின்றான். அதுவே தமஸ் த்ரிதி ஆகும்.
வருந்திக் கொண்டே இருக்கும் பழக்கம் உள்ளவர்கள் இறுக்கமாகவும் கர்வமாகவுமே நடந்து கொள்வார்கள். நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அண்மையில் நடந்த தேர்தலில் தோற்றவர்கள், தங்கள் இறுக்கத்தையும் போலி கர்வத்தையும் இழக்கவில்லை. தங்களுடைய தோல்விக்கு பல்வேறு காரணங்களை கூறிக் கொண்டு இருந்தார்கள். கன்னடத்தில் ஒரு நல்மொழி உண்டு." கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை (தோல்வியை ஏற்றுக் கொள்ளவில்லை என்பது பொருள்)

என்னுடைய கேள்வி என்னவென்றால், உங்கள் மனதில் அத்தனை அழுக்கு இருக்கும்போது எவ்வாறு மீசையில் எந்த அழுக்கு மண்ணும் ஒட்ட வில்லை? இதுதான் அகம்பாவம்.அல்லது துராங்காரம் (போலி கர்வம் மற்றும் ‘தான்’ என்னும் அகந்தையான நடத்தை) இத்தகைய போலிகர்வத்தில் சிக்கிக் கொண்டவனுக்கு அதிலிருந்து வெளியேற இயலாது. அதுதான் தமஸ் த்ரிதி ஆகும்.

முல்லா நஸ்ருதீன் கதை ஒன்று உண்டு. ஆறு ஆண்டுகளாக மழையின்றி பஞ்சம் மிகுந்திருந்த ஒரு நகரில் முல்லா வசித்துக் கொண்டிருந்தார். இதை பற்றிக் குறை கூறிக்கொண்டே இருந்த முல்லா நஸ்ருதினுக்கு அதுவே பழக்கம் ஆகிவிட்டது. மேலும் குறைப்பட்டு கொண்டே இருந்தார். இவ்வாறிருக்கையில் ஒரு ஆண்டு நல்ல மழை பெய்து பயிர்கள் நன்கு விளைந்தன.  அப்போதும் முல்லா நஸ்ருதீன் முகமலர்ச்சியின்றி குறை கூறிக் கொண்டே இருந்தார். ஆகவே அவரது நண்பர்கள் "முல்லா ! ஏன் வருத்தப் படுகின்றீர்கள்? இந்த ஆண்டு நீங்கள் புகார் கூற எதுவுமே இல்லையே? ஏனெனில் நிறைவான விளைச்சல் அறுவடை உள்ளதே?" என்று கேட்டார்கள். அதற்கு முல்லா, "இப்போது எனக்கு அதிக வேலையாகிவிட்டது.இவ்வளவு கஷ்டப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக நான் வேலை செய்ததில்லை. இந்த ஆண்டு பணி மிகுதியாக இருக்கின்றது, என்னால் உழைக்க முடியவில்லை" என்று புகார் கூறினார்.

இது எவ்வாறு உள்ளது என்றால், திருமணம் ஆகாத போது சரியான துணை அமைய வில்லையே என்று வருத்தம், திருமணமான பின்னரும் அதே வருத்தம்! (சிரிப்பு ) இதுதான் தமசிக் த்ரிதி.
இத்தகைய மனிதர்கள் எதையாவது எண்ணி வருந்திக் கொண்டே இருப்பார்கள்." ஒ! இவ்வாறு நிகழ்ந்திருக்க வேண்டும், எனக்கு அந்த வசதி கிடைத்திருக்க வேண்டும்" என்றெல்லாம் கூறிக் கொண்டிருப்பார்கள். அது விஷாதா அதாவது கடந்து சென்ற காலத்தை பற்றி வருந்திக் கொண்டிருப்பது.

இத்தகைய தமசிக் த்ரிதியின் பாதிப்பில் உள்ளவர்கள்,எதிர்மறை மன நிலையிலிருந்து வெளிவர இயலாமல் இருக்கின்றார்கள். சிலர் முயற்சிக்கின்றார்கள், ஆயினும் அவர்களால் இயலவில்லை. தமசிக் த்ரிதியின் பிடி அவ்வளவு பலமாக உள்ளதால், அவர்களால், எதையாவது எதிர்மறையாக எண்ணிக்கொண்டோ, செய்துகொண்டோ இருக்க வேண்டியாதாகின்றது. பிறரை பார்த்து முகத்தைச் சுளித்துக் கொண்டு இருப்பார்கள், அல்லது முகத்தை மகிழ்வின்றித் தூக்கி வைத்திருப்பார்கள்.
இத்தகைய எதிர்மறையை ஒருவனிடம் காக்கும் த்ரிதி தமசிக் த்ரிதி ஆகும். நாம் அனைவரும் சத்விக், ரஜசிக் அல்லது தமசிக் இவற்றில் எந்த வகையான த்ரிதி தம்மிடம் உள்ளது  என்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். இது போன்று, பகவத் கீதையில் கர்த்தா (செயல்படுபவன்) மற்றும் கர்மா (செயல்) இவை வகைப் படுத்தப்பட்டுள்ளன.

முதலாவது சத்விக் கர்த்தா. தனக்குத் தேவையானது நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்துடன் இருப்பவன். இரண்டாவது, ரஜசிக் கர்த்தா தன்னுடைய பணி நிகழ்ந்தால் மிக மகிழ்ச்சி, இல்லையெனில் மிக அதிக வருத்தம் அடைபவன். மூன்றாவது தமசிக் கர்த்தா, தான் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றியே அறியாதவன். எப்போதும் வருந்திக் கொண்டு எப்போது எதைச் செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க முடியாதவன். செயல்படக் காலம் தாழ்த்துபவன். எதைச் செய்யவும் முயற்சி எடுக்காதவன். அவன்," கடவுள் விருப்பமானால் பின்னர் செய்யலாம்" என்றே அனைத்தையும் இறைவிருப்பத்திற்கு விட்டு  விடுபவன். இதைப் போன்றே, மூன்று வகை புத்தியும் (அறிவு) குணங்களும் (பண்பு அல்லது சுபாவம்) த்ரிதியும் (மன திடம்) உள்ளன. 

மகிழ்ச்சியின் உச்சநிலை

ஞாயிற்றுக்கிழமை, 25-05-2014

இந்தியா


(மக்களும் அவர்களுடைய கருத்துக்களும் என்ற கட்டுரையின் தொடர்ச்சி)

கேள்வி பதில்கள்

“ரஜோ குணமுள்ளவர்கள் கடினமான உழைப்பின் மூலம் மகிழ்ச்சியை தேடுவார்கள், ஆனால் உண்மையான மகிழ்ச்சி தியானத்தில் உள்ளது“ என்று பகவத் கீதையில் சொல்லப் பட்டிருக்கிறது. நான் படிப்பை நிறுத்தி விட்டு எப்போதும் தியானம் செய்யலாமா?

குருதேவர்: இது தவறான அர்த்தம். எந்த மொழிபெயர்ப்பில் நீ அப்படி படித்தாய்? அப்படி அல்லவே அல்ல. ரஜோ குணத்தால் அடையும் மகிழ்ச்சி திடீரென்று உச்ச நிலைக்கு செல்லும். திடீரென்று கீழே இறங்கும். சிலர் பரிசு பெறும்போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பார்கள். அடுத்த நொடியில் கீழே விழுவார்கள். சத்வ குணத்தால் அடையும் மகிழ்ச்சி சமநிலையில் இருக்கும். நீ வெற்றி பெறும் போது தலைகால் புரியாமல் குதிக்க மாட்டாய். தோல்வி அடைந்தாலும் மிக வருந்த மாட்டாய். இதயத்தை (மனதை) சமநிலையில் வைத்திருப்பாய்.முடிவு எதுவானாலும் மகிழ்ச்சியாக இருப்பாய். துவக்கத்தில் அப்படிச் செய்வது கடினமாக இருக்கக்கூடும். யோகா, ப்ராணயாமம் மற்றும் தியானம் செய் என்று சொல்லும் போது, துவக்கத்தில் கடினமாக இருக்கும். மிகவும் சலிப்பாக இருப்பதாக நீ எண்ணக் கூடும். இப்படிச் செய்வதை விட்டு வெளியே சென்று ஏதாவது விருந்தில் கலந்து கொள்ள உன் மனம் விரும்பும்.

எனவே துவக்கத்தில் மகிழ்ச்சி தருவது போல் தோன்றாது. ஆனால் பழகப்பழக உடலில் மனதில் நல்ல மாற்றங்களை அனுபவத்தில் பார்க்க முடியும். உன் மகிழ்ச்சி உச்சநிலையை அடையும்.
எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கிறது? பலர் கைகளை உயர்த்துகிறார்கள். ப்ராணயாமம், யோக சாதனை மற்றும் தியானம் பழக்கத்தில் வந்த பின் உனக்குப் புரியும். “ ஓ ! எவ்வளவு நன்றாக இருக்கிறது நான் திரும்பத் திரும்ப இதைச் செய்ய விரும்புகிறேன் “ என்று நீ சொல்வாய். இது ஒரு விருந்தில் கலந்து கொள்வதை விட சிறந்தது. இல்லையா? துவக்கத்தில் மகிழ்ச்சி அளிக்காமல், நன்கு பழகிய பின் மகிழ்ச்சி கொடுப்பது சாத்வீக மகிழ்ச்சியாகும்.

ராஜசீக மகிழ்ச்சி துவக்கத்தில் மகிழ்ச்சி கொடுப்பது போல் தோன்றும். ஆனால் சில காலத்துக்குப் பின்பு உன்னை அழிவில் கொண்டு விடும். துவக்கத்தில் நீ மகிழ்ச்சியின் உச்ச நிலையை அடைந்ததாகத் தோன்றும். ஆனால் சிறிது காலத்துக்குப் பின்னால் உன் உடல் மனம் மற்றும் ஆத்மாவை அழித்து விடும்.

தாமச மகிழ்ச்சி என்பது மகிழ்ச்சிக்கான வாக்குறுதி போன்றது. ஆனால் துவக்கத்திலும் சரி. முடிவிலும் சரி. மகிழ்ச்சியே இருக்காது. நீ அதன் வலையில் சிக்கி விடுவாய். உதாரணத்துக்கு புகை பிடிக்கும் பழக்கத்தை சொல்லலாம். புகை பிடிப்பதால் உனக்கு பரமானந்தம் கிடைக்காது. ஆனால் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையானவர்களால், அப்பழக்கத்திலிருந்து விடுபடுவது மிகவும் கடினம். அப்பழக்கத்தை அவர்கள் நிறுத்தினால் அது அவர்களுக்கு வலியைக் கொடுக்கும். ஆனால் அப்பழக்கம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதில்லை, இருந்தாலும் அப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார்கள்.

சிறு புத்தி படைத்தவர்களை பொறுத்துக் கொள்வது எப்படி ?

குருதேவர்: உலகில் பல விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒரு காரணமுமில்லாமல் எத்தனை பேர் உனக்கு எதிரியாக இருக்கிறார்கள்? எத்தனை நல்ல நண்பர்கள் உனக்கு எதிரியாக மாறியிருக்கிறார்கள்? அதே போல் வாழ்வில் பல முறை நம்மை முன் பின் அறியாதவர்கள் நமக்கு உதவி செய்திருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு எந்த உதவியும் செய்திருக்க மாட்டோம். ஆனாலும் அவர்கள் நமக்கு உதவி செய்தார்கள். நம் நண்பர்களோ, எதிரிகளோ இப்படி நடந்து கொள்ள காரணம், நம்முடைய கர்ம வினை தான். நம் நேரம் சரியில்லாத போது நண்பர்கள் எதிரியாகி விடுவார்கள். நேரம் நன்றாக இருக்கும் போது எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

“உன் வேலையைச் செய். பலனை எதிர் பார்க்காதே“ என்று பகவத் கீதை சொல்கிறது. ஆனால் இதை செயல்படுத்துவது எப்படி ?

குருதேவர்: உன் வேலையைச் செய்வது, விதை விதைப்பது போன்றது. அந்த விதை வளர்ந்து 
செடியாகி, பூத்து, காய்த்து, அந்தக் காய் கனியாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் அந்த விதையை நீ அவ்வப்போது தோண்டிப் பார்த்து வேர் விட்டிருக்கிறதா? முளை விட்டிருக்கிறதா? என்று பார்க்க நினைத்தால், அது எப்படி வளர முடியும் ? தோண்டிப் பார்த்துக் கொண்டிருந்தால் அது வளராது.
அதனால் தான் பலனைப் பற்றி இப்போது நினைக்க வேண்டாம். காலம் வரும் போது அதன் முடிவு தெரியும்.

தற்சமயம் நீ செய்ய வேண்டியது விதை விதைப்பது மட்டுமே. அதற்கு நீர் ஊற்றி அது வளர்ந்து, பூத்து, காய்த்து கனிவதற்காக பொறுமையாக காத்திரு. நீ ஒரு மாங்கொட்டையை இன்று விதைத்தால், அது நாளைக்கே மாம்பழத்தைக் கொடுக்குமா ? காலம் வரும் போது உனக்கு மாம்பழம் கிடைக்கும். அதனால் தான் “ உன் கடமையைச் செய். பலனைப் பற்றி சிந்திக்க வேண்டாம் “ என்று பகவத் கீதை சொல்கிறது.

குருதேவா மதங்களின் பெயரில் மக்கள் சண்டை போடுகிறார்கள். மதங்களை உருவாக்கியவர் கடவுள். எனவே மக்களின் சண்டைக்கான பழியை கடவுள் ஏற்றுக் கொள்கிறாரா?

குருதேவர்: முட்டாள்கள் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி சண்டை போடுவார்கள். மதம் மட்டும் அவர்களுடைய சண்டைக்கு காரணமல்ல. ஜாதியின் பெயரில் சண்டை. மொழியின் பெயரில் சண்டை. நாட்டின் பெயரில் சண்டை, எந்த விஷயமானாலும் சண்டை. புத்திசாலியாக இரு. இந்த சண்டைகளை மறந்து உயர்வடைய வேண்டும்.

“நாம் செல்லும் பாதை இலக்கை விட முக்கியமானது “ என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார். எனவே நாம் கவனம் வைக்க வேண்டியது எது என்று தயவு செய்து சொல்லுங்கள். நாம் செல்லும் பாதையா ? அல்லது அடைய வேண்டிய இலக்கா ?

குருதேவர்: இலக்கை நிர்ணயிக்கும் போது வழி தானாகவே கிடைக்கும். தற்சமயத்தில் வாழ்ந்து சுயேச்சையான முடிவை நிச்சயம் செய். “தூய்மையான இதயம்; தெளிவான மனம்; நேர்மையான செயல்;” என்ற விதி நினைவிருக்கிறதா ?

நீங்கள் இங்கு ஆசிரமத்தில் இருக்கும் போது எல்லாமே உயிர் துடிப்போடு இருக்கிறது. நீங்கள் ஆசிரமத்தில் இல்லாத போது வெறிச்சோடி இருக்கிறது.

குருதேவர்: இரண்டு சூழ்நிலைகளிலும் நீ மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நான் இங்கு இல்லாத போது இங்கு வந்து அமைதியாக அமர்ந்து தியானம் செய். நான் இங்கு இருக்கும் போது பல மக்கள் வந்து போவதால் அமைதி இருக்காது. ஒரே சத்தமாக இருக்கும். பல நிகழ்ச்சிகள் நடப்பதால் மக்கள் அதிகமாக இருப்பார்கள். இரண்டு சூழ்நிலையிலும் நீ நடுநிலையில் இருக்க வேண்டும். உன் மனம் பாதிக்கப்படக் கூடாது.

பசு வதையை நிறுத்துவது எப்படி ?

குருதேவர்: சட்டப்படி இதை நிறுத்த வேண்டும். சில நாடுகளில் இதற்கான சட்டம் இல்லை. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். இந்தியா சுதந்திரம் அடைந்த போது 120 கோடி பசுக்கள் இருந்தன. 30 கோடி மக்கள் இருந்தார்கள். இன்று நம் நாட்டில் 20 கோடி பசுக்களே இருக்கின்றன. மக்கள் தொகை 120 கோடியாகி விட்டது. விகிதம் 1:6. எப்படி 1 அல்லது 2 லிட்டர் பால் 6 மனிதர்களுக்கு போதுமானதாக இருக்கும்? இதே நிலை தொடர்ந்தால், வரும் சந்ததிகள் பால் என்பதை புத்தகங்கள் மூலம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும். குடிப்பதற்குப் பாலே கிடைக்காமல் போய் விடும். மக்கள் பால் என்ற வெள்ளை நிற திரவத்தை குடித்து வந்ததாக கதையில் படிப்பார்கள். பால் குடிப்பதற்குக் கிடைக்காது. ஆகவே பசு வதையைத் தடுப்பது மிக மிக அவசியம். நம் நாட்டின் முன்னேற்றத்தை விரும்பினால் இது மிகவும் முக்கியம். நீங்கள் எல்லோரும் இதற்காக உழைக்க வேண்டும். உங்கள் கிராமத்தில் உள்ளவர்களோடு கலந்து பேசி பசு வதையை நிறுத்துங்கள். பசுக்களின் எண்ணிக்கையை அதிகமாக்குவது மிக மிக அவசியம்.
நம் நாட்டின் புதிய பிரதமமந்திரி கண்டிப்பாக இதற்கான நடவடிக்கை எடுப்பார்.