உங்கள் மனதின் மீது ஒரு கட்டுறுதி

திங்கள், 5 மே 2014, பஹ்ரைன்


(பிறரின் கருத்துக்களுக்குக் கால்பந்தாக இருக்காதீர்கள் என்னும் உரையின் தொடர்ச்சி கீழே கொடுக்கப் பட்டுள்ளது)

குருதேவ், நெருக்கடியான  நேரங்களில் உணர்ச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

குருதேவ்: மூச்சு,மூச்சு,மூச்சு. மூச்சு என்பது இயற்கை அளித்துள்ள ரகசிய வரப்ரசாதம். அது உங்கள் உணர்ச்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. மூச்சுப் பயிற்சிகளின் மூலம் உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். இதை உங்களில் பலர் அனுபவித்தறிந்திருப்பீர்கள் அல்லவா? இதை அனுபவிக்காதவர்கள் இன்னும் சற்று மூச்சுப் பயிற்சிகளை முறைப்படி செய்யுங்கள். அப்போது உங்கள் மனதின் மீது உங்களுக்குக் கட்டுறுதி ஏற்படும்.

அண்மையில் உங்களுக்கு யார் மீதாவது கோபம் ஏற்பட்டது?

குருதேவ்: எனக்கு நினைவில்லை! யார் மீதாவது கோபம் கொண்டால் அதை எண்ணி வருந்தத் துவங்காதீர்கள். அத்தகைய வருத்தம் உங்களை மீண்டும் கோபம் கொள்ள செய்யும். என்னை பொருத்த வரையில் நான் கோபம் அடைந்த தருணங்கள் விரல் விட்டு எண்ணி விடலாம். அது என் இயல்பு அல்ல. கோபம் கொள்ளாமல் இருக்க நான் எதுவும் தனிப்பட்ட முறையில் செய்வதில்லை. நான் இவ்வாறு தான் உருவாக்கப்பட்டிருக்கின்றேன். இதற்கு நான் எந்த புகழையும் எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு தீய சொல்லைக் கூட இத்தனை ஆண்டுகளில் நான் கூறியது கிடையாது. அவ்வாறு நிகழவே இல்லை. யாரையும் குறை கூறியோ, சபித்தோ, இகழ்ந்தோ பேசியது கிடையாது.

ஒரே எண்ணம் தொடர்ந்து எழுவதை எவ்வாறு தடுப்பது?

குருதேவ்: அதற்கு ஒரு வழியும் கிடையாது.ஏனெனில், எண்ணங்கள் எழுந்த பின்னர் தான் அவை யாவை என்று அறிகின்றீர்கள்.  அல்லவா? ஆகவே, எண்ணங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதை கண்டறிந்தவுடன் உங்களை எதிலாவது ஈடுபடுத்திக் கொள்வதில் மும்முரமாக இருங்கள். எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தால், அதையே எண்ணிக் கொண்டிருப்பீர்கள். செயல்பாட்டில் இருந்தால் அதில் அடித்து செல்லப்படுவதாக உணருவீர்கள்.

இக்காலத்தில் ஆளுமை அதிகார சக்தியின்  குறியீடாகக் கருதப்படுகின்றது. இதை எவ்வாறு மாற்றுவது?

குருதேவ்: ஆளுமை என்னும் அதிகார சக்தி நேர்மறையான மாற்றங்களை வரக் கூடியதானால் உலகம் இதற்குள் பெரும் மாற்றத்தைக் கண்டிருக்கும். வலிமை, உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்திருக்கின்றது, நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. நாம் காண்பது அதுவல்ல. எங்கெல்லாம் வலுத்தாக்குதல் நிகழ்கின்றதோ அங்கெல்லாம், துன்பம் தான் காணபடுகின்றது. அதிகமான பிரச்சினைகள், அதிகமான கஷ்டங்கள், அதிகமான வறுமை தாம் ஏற்படுகின்றன. வலுத்தாக்குதல் மூலம் நாம் பின் நோக்கி நகருகின்றோம்.கடந்த பதினைந்து இருபது ஆண்டுகளாக எங்கெல்லாம் வலுத்தாக்குதல் நிகழ்ந்தனவோ, அங்கெல்லாம், மக்கள் பின்னடைந்து விட்டார்கள். கூட்டுறவு ஒன்றே திறவுகோல்.

இவ்வுலகம் பல வலுத் தாக்குதல்களை கண்டிருக்கின்றது, அவை எதுவும் பெரும் பயனை அளிக்கவில்லை. சில சமயங்களில், மக்கள் போர் சிறந்தது, ஏனெனில் அது  சட்டங்களை திருத்த வழி வகுக்கும் என்று எண்ணுகின்றார்கள். போரானது, ஏற்கனவே இருப்பவற்றை தகர்த்து, புதுச் சட்டங்களை உருவாக்கும் என்றும் கருதுகின்றார்கள். ஆனால் அவ்வாறு நிகழ பல தலைமுறை மக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றார்கள். தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப காலத்தில், மக்கள் புத்திசாலிகள் என்றே நான் கருதுகின்றேன். அத்தகைய துன்பங்களை நாம்  கடந்து செல்ல வேண்டியதில்லை. அதிகமான மதிநுட்பமும், அறிவுசெறிவும் உள்ள நமக்கு போர் தேவை இல்லை. நமக்குத் தேவையானது விழிப்புணர்வு மட்டுமே.

எவ்வாறு ஒருவர், வாழ்வில் சமூகத் தொண்டு, தொழில் மற்றும் குடும்பப் பொறுப்புக்களை சம நிலைப்படுத்தி நிர்வகிப்பது ?

குருதேவ்: கார் ஓட்டுகின்றீர்கள் அல்லவா? கார் ஓட்டும் போது என்ன செய்கின்றீர்கள்? பக்கக் கண்ணாடிகள், பின் காட்சிக் கண்ணாடிகள், மற்றும் காரின் முன்புறக் கண்ணாடிகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு கார் ஒட்டுகின்றீர்கள். எவ்வாறு மூன்றையும் சமநிலைப்படுத்தி ஓட்டுகின்றீர்கள் ?
பின்காட்சிக் கண்ணாடியை மட்டுமே, அல்லது முன் புறக் கண்ணாடியை மட்டுமே,அல்லது பக்கக் கண்ணாடிகளை மட்டுமே பார்த்து ஓட்டுவேன் என்று கூற முடியாது. இவை மூன்றையும், ஒரே சமயத்தில் கவனித்துக் கொண்டு கார் ஓட்ட வேண்டும் அல்லவாஇதே போன்று தான் ! 

பின் காட்சிக் கண்ணாடி கடந்த காலத்தை போன்றது. சிறிது நினைவு திறன் இருந்தால் போதும். ஏதேனும் தவறு செய்திருந்தால் அதை மீண்டும் செய்யாமல் இருக்க வேண்டும். முன் புறக் கண்ணாடிகள் வாழ்வில் வரும் காலத்தை போன்றது.  அதனால் தான் முன்புறக் கண்ணாடிகள் பெரிதாக இருக்கின்றன, பின் காட்சிக் கண்ணாடி சிறியதாக உள்ளது. பக்கக் கண்ணாடிகள் உங்களைச் சுற்றி நிகழ்வதைப்  பற்றிய விழிப்புணர்வுடன் இருக்க உதவுகின்றன. எவ்வாறு இம் மூன்றையும் சம நிலைப்படுத்தி உபயோகிக்கின்றீர்களோ அதே போன்று தான்  சமூகத் தொண்டு, தொழில் மற்றும் குடும்பப் பொறுப்புக்களை சம நிலைப்படுத்தி நிர்வகிக்க வேண்டும். 

எவ்வாறு நான் உடல், மனம், எண்ணங்கள் இவை ஏற்படுத்தும் வரையறைகளில் சிக்கிக் கொள்ளாமல் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ?


குருதேவ்: இந்த எண்ணத்தை விட்டு விட்டாலே நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சற்று நேரத்திற்கு மகிழ்வின்றி இருந்தாலும் பரவாயில்லை.அதனால் என்ன? நான் எப்போதுமே மகிழ்வின்றி இருக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்தால் அதுவே மகிழ்வின்றி இருப்பதற்கு ஒரு காரணம் ஆகிவிடும்.