நேர்மையைப் பற்றிய உண்மை

வியாழன், 6 மே, 2014
கோவா - இந்தியா
கேள்வி -  பதில்
குருதேவ், சிலர் வாய்பேச்சில் வல்லவராக, மிக்க தன்னம்பிக்கையோடு பேசுகிறார்கள், ஆனால் வேலை என்று வரும் போது, ஏதும் நடப்பதில்லை.ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டும், நல்ல பேச்சாளராகவா அல்லது செய்து முடிப்பவராகவா?
குருதேவ்: இரண்டுமே தேவை. நான் கல்லூரியை முடித்த போது, என்னை சந்தித்த ஒருவர் கூறினார், ‘நேர்மையாளராய் இருப்பது போதாது, பார்ப்பதற்கும் நேர்மையாளராய் தெரிய வேண்டும்.’ மதுபானக் கூடத்தில் அமர்ந்து பால் குடித்தால் கூட அதை பால் என்று யாரும் கருதமாட்டார்கள். நீங்கள் பார்ப்பதற்கும் நேர்மையாளராய் தெரிய வேண்டும், அங்கு தான் திறமை தேவை.
குருதேவ், இந்தியாவில் மோசடி, தீமை மற்றும் ஏழ்மை பற்றி என்ன கருதுகிறீர்கள்? இவற்றை எப்படிச் சரிசெய்வது?
குருதேவ்: வாக்காளர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த எல்லோரும் கடுமையாய் உழைத்தனர். அதற்காக இதுவரை இல்லாத அளவு பிராச்சாரம் நடந்தது, அதற்குப் பலனும் கிடைத்தது. மேன்மையான இந்தியாவிற்கான தொண்டர்கள் (VBI - Volunteer for Better India) வீடு வீடாகச் சென்று மக்களை வெளியே வந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்குப் பிறகு என்ன நடந்தது? வலிமையான மற்றும் நிலையான அரசு அமைந்தது. எனவே இந்த உறுதியான நிலையான அரசு, மோசடி மற்றும் ஏழ்மையை நம் நாட்டிலிருந்து விரட்டும் என்று நம்புவோம்.
குருதேவ், நான் எவ்வளவு ஆன்மீகவாதியாக இருந்தாலும், இரக்கம் கொண்டவனாக இருந்தாலும், என் விதி வேறாக இருந்தால், அடுத்தவருக்கு நான் எவ்வளவு நன்மை செய்திருந்தாலும், அவர்கள் எனக்கு எதிராக திரும்பி விடுவார்கள். பிறகு, நான் என்ன செய்வது?
குருதேவ்: கவலைவேண்டாம். மக்கள் உங்களுக்கு எதிராகத் திரும்பினால் பரவாயில்லை. நமது பிரதமர் நரேந்திர மோடியைப் பாருங்கள். அவரை அவ்வளவு ஏசினார்கள். நம் நாட்டில் அவரை விட அதிகமாக யாரும் ஏசப்பட்டதில்லை. சிலர் அவருக்கு என்னென்னவோ பெயரிட்டு அழைத்தார்கள், ஆனால் அவர் அதிலிருந்தெல்லாம் வெளியே வந்துவிட்டார்.
அதைபோன்ற பல உதாரணங்கள் நம்மிடம் இருக்கிறது. நீங்கள் நன்மையே செய்தாலும், எந்தத் தீங்கும் செய்யாமலிருந்தாலும், அதன் பின்னே தீய நோக்கம் கற்பிப்பதற்கு மக்கள் உண்டு. குற்றம் குறை காண விரும்புபவர் யாரிடமும் எங்கும் குற்றம் கண்டுபிடிக்க முடிவது ஆச்சரியமானது. ஆனால் அப்படிப்பட்டவர்கள் கொஞ்சம் தான், எனவே கவலை வேண்டாம், அவர்கள் அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.
நமது வாழும் கலை அமைப்பை கூட நில அபகரிப்புச் செய்ததாக சிலர் சொல்வதுண்டு. நான் கேட்டிருக்கிறேன். அதை சொல்பவர்கள் எந்த நிலத்தை அபகரித்தோம் என்று சொல்வதில்லை. அவர்கள் எங்களிடம் வந்து காண்பிக்கட்டும். மாலத்தீவில் நமது வாழும்கலை நிறுவனத்துக்கு 50 ஏக்கர் நிலம் இருப்பதாக சிலர் கூறுகிறார்கள். அவர்கள் வந்து காண்பிக்கட்டும், அதை எடுத்துக் கொள்ளவாவது செய்யலாம்.
அரசாங்க நிலத்தை அபகரித்துக் கொண்டோம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் உண்மை தலைகீழாக இருக்கிறது. பணம் கொடுத்து வாங்கிய நம்முடைய நிலத்தை அரசுக்கு கொடுக்க வேண்டி இருந்தது. ஆனால், மக்கள் இப்படிக் கூறுகிறார்கள், என்ன செய்வது? அவர்களை புறக்கணித்து விடுங்கள்.
குருதேவ், இந்தியாவைப் பற்றிய உங்கள் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். உங்களைப் பொறுத்த வரையில் இந்தியா எப்படி இருக்க வேண்டும்?
குருதேவ்: என் பார்வையில், எல்லா மதங்களையும் சமூகங்களையும் சேர்ந்தவர்கள் நாட்டுக்காக ஒன்றிணைந்து இருப்பது தான் இந்தியா. இந்தியாவில் பல மதங்களும் பல சமூகங்களும் இருக்கின்றன. குடிசைப் பகுதிகளே இல்லாத இந்தியாவைப் பார்க்க விரும்புகிறேன். எல்லா குடிசைப்பகுதிகளும் ஒழிய வேண்டும். அமைதியான இளைஞர்கள், மகிழ்ச்சியான விவசாயிகள் மற்றும் வெளி தேசங்களிலும் வர்த்தகம் செய்யும் தொழில் முனைவோர்கள், ஊழலற்ற, வன்முறையற்ற, மோசடி அற்ற, வெறுப்புகளற்ற இந்தியாவில் வாழ்வதை நான் பார்க்க வேண்டும். இந்தியா ஒரு காலத்தில் அப்படி இருந்தது. அந்த நாட்களில் கை பேசிகள் இல்லை. இந்தியாவின் புகழ் உலகெங்கும் தெரிந்திருந்தது.
கொலம்பஸ் இந்தியாவைத் தான் தேடிச் சென்றார், ஆனால் அமெரிக்காவைக் கண்டார். இந்தியாவின் புகழ் எப்படித் தெரிந்திருக்கிறது பாருங்கள். ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டுச் செல்லும்போது தங்களுடன் 900 கப்பல்கள் நிறைய தங்கத்தை எடுத்து சென்றனர். அந்த இந்தியாவில், செல்வத்துக்கு எப்போதும் குறைவிருந்ததில்லை. நாம் எங்கே இருக்கிறோம் என்று பாருங்கள்? நாம் ஆன்மீகத்திலும் மதத்திலும் திளைத்திருந்தோம்.
மெக்காலே பிரபு, இலண்டனுக்கு திரும்பிச் சென்று, எலிசபெத் இராணிக்கு எழுதினார், ‘நான் இந்தியாவின் நீல அகலங்களில் பிரயாணம் செய்துவிட்டேன், எங்குமே ஒரு திருடனையோ அல்லது பிச்சைக்காரனையோ சந்திக்கவில்லை. அப்படி ஒரு வளத்தை அந்த நாட்டில் கண்டேன், அப்படிப்பட்ட ஒரு நீதி நேர்மை நிறைந்த மக்கள், அப்படி ஒரு திறமை பெற்ற மக்கள். இந்த நாட்டின் முதுகெலும்பான அதன் ஆன்மிகம் மற்றும் பாரம்பரிய கலாசாரத்தை உடைத்தால் ஒழிய இந்த நாட்டை நம்மால் எப்போதும் வெல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
குருதேவ், தியானம் செய்யும் போது தோலினால் ஆன பொருட்களை விலக்கி வைத்துவிடச் சொல்கிறார்கள். சிவபெருமான் புலித் தோலின் மீது வஜ்ராசனத்தில் அமர்ந்திருக்கிறார் என்று கூறுகிறார்கள், அப்படியா?
குருதேவ்: யாரோ என்னிடம் கேட்டார்கள், ‘சிவபெருமான் மது அருந்துவராமே?’ நான் கூறினேன், ‘சிவபெருமான் முதலில் ஆலகால விஷத்தை உண்டார், உங்களால் அது முடியுமா? பிறகு பேசுவோம்’. இப்படியெல்லாம் உங்கள் எண்ணம் போகக் கூடாது. அந்த காலத்தில் அந்த ஒரு ஆசனம் தான். கீதையில் மான் தோலில் அமரும்படி சொல்லி இருக்கிறது. அதன் பொருள் மானைப் போல இயற்கையோடு இசைந்து இருக்க வேண்டும் என்பதே. ஏற்கனவே வெகு சில விலங்குகளே உள்ளன. அதையும் கொன்று அதன் தோலின் மீது அமர்ந்து தியானம் செய்வது சரியல்ல. தோல் பொருட்களைத் தள்ளி வைப்பதன் காரணம், அது சக்தி ஓட்டத்தைத் தடை செய்யக்கூடும் என்பதால் தான்.
குருதேவ், தேர்தலில் வேட்பாளராக நிற்க ஆவலாய் இருக்கிறேன், ஆனால் எனக்கு மேடைப் பேச்சென்றால் பயம். இதை எப்படி விலக்குவது?
குருதேவ்: DSN பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் ஆனந்தம் பற்றிய கணக்கெடுப்பு செய்யுங்கள் (Happiness Survey Program). இவை இரண்டும் ஆகச் சிறந்தது. உங்களில் எத்தனை பேர் இந்த கணக்கெடுப்பில் கலந்துகொண்டீர்கள்? பயிற்சி வகுப்புகளை நிறைவு செய்தவர்கள், இந்த படிவங்களை எடுத்துக்கொண்டு இரண்டு அல்லது மூன்று பேர் குழுவாக வீடு வீடாகச் செல்லுங்கள். சிலர் கதவை சாத்தி விடுவார்கள். கவலை வேண்டாம், அடுத்த வீட்டிற்கு புன்னகையோடு செல்லுங்கள். ‘மக்கள் உங்களை விமர்சனம் செய்யும் போதும் புன்னகை செய்யுங்கள், உங்கள் மேடைப் பேச்சுத் தயக்கம் எல்லாம் ஓடிப் போய்விடும். உங்கள் ஆளுமை மலரும். எனவே நிச்சயம் இந்த கணக்கெடுப்பில் ஈடுபடுங்கள்.
மது அருந்தும் பழக்கம் பரவிக் கொண்டே இருக்கிறது. நமது ஆரோக்கியத்தையும் மனதையும் மதுவிலிருந்து காப்பது எப்படி?

குருதேவ்: பாருங்கள், குஜராத் மாநிலம் தான் முதலில் மாட்டு இறைச்சியையும் மதுவையும் தடை செய்தது. மெதுவாக மற்ற மாநிலங்களும் மது விலக்கை அமலாக்க வேண்டும். மற்றும் அதே நேரத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு குடிசைப் பகுதிகளிலும் நமது ஆனந்தப் பயிற்சியை நாம் சொல்லித்தர வேண்டும். இது நிச்சயம் உதவும்.