நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

02 – மே - 2014

ரோம், இத்தாலி



இந்தியாவில் இன்று “அக்ஷய த்ருதியை” மங்களகரமான தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா பல கதைகளோடு தொடர்பு கொண்டது. ஒரு கதையின்படி இன்றைய தினத்தில் புனித நதியான கங்கை மனித சமுதாயத்தை தூய்மையாக்க பூமிக்கு வந்ததாக சொல்கிறார்கள்.இன்றைய தினம் பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையில் நடந்த இரண்டு நிகழ்ச்சிக்ளோடும் தொடர்புடையது.
ஒரு முறை பஞ்ச பாண்டவர்களும், அவர்களுடைய மனைவியும் வெளி நாட்டில் வசிக்க நேர்ந்தது. அப்போது ஒரு துறவி அவர்கள் இருந்த இடத்துக்கு வந்து நான் “உங்களோடு உணவு உண்ண போகிறேன்” என்று சொன்னார். அச்சமயம் அவர்கள் இல்லத்தில் உணவு இல்லை. ஏற்கனவே உண்டு முடித்து விட்டு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்காக எடுத்து வைத்திருந்தார்கள். பஞ்ச பாண்டவர்களின் மனைவியான திரௌபதி பகவான் கிருஷணரை நினைத்து பிரார்த்தனை செய்தாள். அதே சமயத்தில் பகவான் கிருஷ்ணர் அவர்கள் இல்லத்துக்கு வந்தார். “எனக்கு மிகவும் பசிக்கிறது” என்று சொல்லி அந்த பாத்திரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஒரு பருக்கையையும் (வெந்த தானியம்) உண்டு விட்டு அந்த பாத்திரத்தை அக்ஷய பாத்திரமாக மாற்றி விட்டார். அக்ஷய பாத்திரத்தின் குணப் படி, அதில் உள்ள உணவு எடுக்க எடுக்க குறையாமல் எப்போதும் காலியாகாமல் இருக்கும்.

அந்த துறவி 400 பேர்களை தன்னோடு உணவு உண்ண அழைத்து வந்த போது திரௌபதி அக்ஷய பாத்திரத்திலிருந்து அனைவருக்கும் உணவு படைத்தாள். அப்பாத்திரம் எல்லோருக்கும் தேவையான உணவை அளித்தது. எவ்வளவு அதிகமாக எடுத்த போதிலும் அதில் உள்ள உணவு குறையாமல் இருந்தது.எனவே இந்தியாவில் அக்ஷய பாத்திரம் என்றால் எடுக்க எடுக்க குறையாது அளிக்கும் பாத்திரம் என்று அர்த்தம். தாராள மனம் படைத்தவர்கள் மற்றவர்களுக்கு வேண்டியவைகளைக் கொடுத்து சேவை செய்யும் போது, இவர் ஒரு அக்ஷய பாத்திரம் என்று சொல்வார்கள். அப்படிப் பட்டவர்கள் எடுக்க எடுக்க குறையாத அக்ஷய பாத்திரம் போல் மற்றவர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நம் ஆசிரமத்திலும் (பெங்களூர்) ஒரு அக்ஷய பாத்திரம் உள்ளது. லட்சக் கணக்கானவர்களுக்கு உணவு அளிக்கிறது. அப்பாத்திரத்தில் ஒரு ஆண்டில் 385டன் அரிசியை சமைக்கிறோம். மற்றொரு கதை. பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் ஏழையான ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் சுதாமா. சுதாமா என்றால் ஒரு நல்ல இடம் என்று பொருள். இரக்கமுள்ள இடம். ஒரு நாள் சுதாமாவின் மனைவி அவரிடம் சொன்னாள். “நாம் இவ்வளவு ஏழ்மையில் வாடுகிறோம். கிருஷ்ணர் மிகவும் செல்வந்தராக இருக்கிறார். அவர் உங்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். நீங்கள் ஏன் அவரிடம் சென்று ஏதாவது வாங்கி வரக்கூடாது?” என்று கேட்டாள்.

“சரி. நான் போகிறேன். ஆனால் ஒரு நண்பனைப் பார்க்கச் செல்லும் போது வெறும் கையோடு போகக்கூடாது. ஏதாவது எடுத்துச் செல்ல வேண்டும்.” என்று சுதாமா அவளிடம் சொன்னார்.
எனவே அவர் மனைவி 3 பிடி அவலை ஒரு துணியில் கட்டி அவரிடம் கொடுத்தாள். அவல் என்பது அரிசியில் செய்த மிருதுவான உணவு. சுதாமா கிருஷ்ணரிடம் சென்றவுடன்,கிருஷ்ணர் சுதாமாவின் கால்களை நீரால் சுத்தம் செய்து வரவேற்றார். கதைப்படி இருவரும் மிக நெருக்கமான நண்பர்கள். மிகவும் அன்பு கொண்டவர்கள். சுதாமா, தான் கொண்டு வந்த அவலை கிருஷ்ணருக்கு கொடுக்க மறந்துவிட்டார். அவரிடம் உதவி கேட்க வந்ததையும் மறந்து விட்டார். அவர் வந்ததோ பொருள் உதவி கேட்பதற்காக. ஆனால் அன்பின் அனுபவத்தில் அதையும் மறந்து விட்டார்.அவரால் கேட்க முடிய வில்லை. பேசக் கூட முடிய வில்லை.

அவர் கிருஷ்ணரிடமிருந்து விடை பெறும் சமயம் வந்தது. அப்போது கிருஷ்ணர் “நீ எனக்காக ஏதாவது எடுத்து வந்திருக்கிறாயா? அதை என்னிடம் கொடு.” என்று சொன்னார். “ஏன் அதை எனக்கு கொடுக்கவில்லை? அதைக் கொடு“ என்று சொன்னார். கிருஷ்ணர் ஒரு பிடி அவலை எடுத்து உண்டார். மற்றொரு பிடியை எடுத்து உண்டார். அப்போது கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி வந்து “நான் மூன்றாவது பிடியை உண்ண விரும்புகிறேன்“ என்றாள். இப்படி நடக்கும் போது சுதாமா கிருஷ்ணரை எதுவும் கேட்காமலே விடை பெற்றுச் சென்றார். அவர் தன் வீட்டை அடைந்த போது அவர் வீடு பெரிய மாளிகையாக பொன்னும் பொருளும் நிறைந்திருப்பதைக் கண்டார். இது ஒரு கதை.

எனவே இன்று அக்ஷய திருதியை தினத்தில் மக்கள் ஆபரணங்களை வாங்கி மற்றவர்களுக்கு பரிசாக அளிக்கிறார்கள். இன்று உங்களுக்கு எது கிடைத்தாலும் அது மிகவும் பெருகும் என்று நம்புகிறார்கள். இது போல் பல கதைகள் உண்டு. இப்போதைக்கு இரண்டு கதைகள் போதும். நாம் ஒவ்வொரு தினத்தையும் கொண்டாடலாம். நாம் வாழும் இவ்வுலகம், இந்தப்; பொருட்கள் எல்லாமே அழியக் கூடியவை என்பதை நாம் அறிந்தால் ஒவ்வொரு நாளையும் கொண்டாட முடியும். ஒரு நாள் இந்தச் செல்வம் நம்மை விட்டுச் சென்று விடும். நம் உடல் இந்த பூமிக்குள் சென்று விடும். நீ (ஆத்மா) மட்டும் அழியாமல் இருப்பாய். நீ என்றும் அழியாத ஆத்மா என்பதை அறிய வேண்டும்.

முடியாது என்று ஒன்றும் கிடையாது. பக்தி வலிமையாக இருந்தால் ஆத்மா மேம்பாடு அடையும். செல்வம் பெருகும். இந்தக் கதையின் கருத்து இது தான். பக்தி என்றால் என்ன? பக்தி என்பது இறைவன் என்னிடம் அன்பாக இருக்கிறார் என்ற திடமான நம்பிக்கை. நான் இறைவனிடம் அன்பாக இருக்கிறேன் என்ற நம்பிக்கை. இறைவன் எங்கிருக்கிறார் என்று உனக்குத் தெரிய வில்லை. ஆனால் அவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை உனக்கு இருக்கிறது. கோடிக்கணக்கான ஆண்டுகளாக இவ்வுலகை இயக்கி வரும் சக்தியைத் தான் இறைவன் / கடவுள் என்று அழைக்கிறோம்.

நாம் இங்கு சில காலமே வாழ்கிறோம். ஆனால் இவ்வுலகம் கோடிக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. மரங்கள் உள்ளன. பறவைகள் உள்ளன. மேகம் உருவாகிறது. மழை வருகிறது. சூரியன் ப்ரகாசிக்கிறது. இவை கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்கிறது. இங்கிருக்கும் அனைவரும் 40 – 50 ஆண்டுகளில் இறந்து விடுவோம். ஆனாலும் உலகம் தொடரும். அது தான் இறைமை.நாம் ஒவ்வொருவரும் ஒரு சக்தியின் கோளம். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் எவ்வளவு மின் சக்தி உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? நம் உடலில் இருக்கும் சக்தியால் ரோம் நகரை 100 ஆண்டுகளுக்கு ஒளியூட்ட முடியும். ஒரு மனிதனிடம் அவ்வளவு சக்தி உள்ளது. ஒரு மனிதனின் உடலில் இருக்கும் சக்தியால் ரோம் நகரம் முழுதும் ஒளி பெற முடியும். அத்தனை சக்தியிருந்தும் நாம் அதை உபயோகிப்பதில்லை. உணரவில்லை.

இங்கு இவ்வளவு விளக்குகள் உள்ளன. மின்சாரமும் இருக்கிறது. அறையில் விளக்கின் ஸ்விட்ச் போடாவிட்டால் இருள் நிலவும். ஸ்விட்ச் போட்டு மின் இணைப்பை கொடுத்தால் தான் விளக்கு எரியும். அதே போல் நம் உடலில் இருக்கும் சக்தியை வெளிப்படுத்த முடியும். அதை தான் யோக சாதனை, சத்சங்கம் மற்றும் சேவை என்று அழைக்கிறோம்.

கேள்வி பதில்கள் :

கே: இந்த நாள் (அக்ஷய திருதியை) ஒவ்வொரு ஆண்டும் வருமா ?

குருதேவர்: ஆம் ஒவ்வொரு ஆண்டும் வரும். அக்ஷய திருதியை அமாவாசைக்கு மூன்றாம் நாள் வரும். ஆதி சங்கரர் பிறந்த தினம் அமாவாசைக்கு ஐந்தாம் நாள். நானும் அதே தினத்தில் பிறந்ததால், என் பெற்றோர் எனக்கு சங்கர் என்று பெயர் வைத்தார்கள். ஆதிசங்கரர் அளித்த அரிய ஞானம் ஒன்று தான். அது பின் வருமாறு.

“எல்லாமே அழியக் கூடியது. எண்ணங்கள் வந்து போகும். உணர்ச்சிகள் வந்து போகும். ஒரு நாள் எல்லாம் மறைந்து விடும். ஆனால் நீ ஒரு ஒளிப் பிழம்பாக என்றும் ஒளிர்வாய். நிலைத்திருப்பாய். “