இறைமையின் விளையாட்டு

சனிக்கிழமை, 31 மே 2014, 

பெங்களூரு, இந்தியா


வினாக்களும் - விடைகளும்

குருதேவ், அன்பும் பக்தியும் ஒன்றே தானா? நான் விரும்பும் ஒருவர் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தால், நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: அப்பொழுதும் கடவுளிடம் நன்றியுடன் இருங்கள். நம்பிக்கை ஆட்டம்  கண்டால் அதன் பயன் என்ன?  கடினமான காலத்திலும் உறுதியாக இருப்பது தான் நம்பிக்கை என்பது ஆகும். ஒரு வேளை நீங்கள் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து அவரால் துரோகம் இழைக்கப்பட்டால், அது இறைமையின் விளையாட்டு என்றே நினைவுறுத்திக் கொள்ளுங்கள். கடவுள் நீங்கள் ஒரு முக்கியமான பாடத்தைக் கற்க வேண்டும் என்று விரும்பி, அந்த மனிதரின் உருவில் வந்ததாக எண்ணிக் கொள்ளுங்கள். அச்சூழலை இத்தகைய புரிதலுடன் காணுங்கள். நான் ஏன் இவ்வாறு கூறுகின்றேன்? இறுதியில்,ஒரே விழிப்புணர்வு தான் பல்வேறு உருவங்களில் பல்வேறு வழிகளில் நமக்கு முக்கியமானவற்றை கற்பிக்கின்றது

எனவே புரிந்து கொண்டு, முன்னேறிச் செல்லுங்கள். பிறரிடம் குறை காணாதீர்கள். அவ்வாறு செய்தால் இறைவனின் பல்வேறு அவதாரங்களிடமும் நிறையக் குறைகள் காண்பீர்கள். நரசிம்மாவதாரம்,வாமனாவதாரம் இவற்றிலும் குறைகளைக் காண்பீர்கள். பரசுராம அவதாரத்தில் பல குறைகளைக் காண்பீர்கள். பகவான் ராமனின் அவதாரத்திலும் குறைகளை காண்பீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்! (சிரிப்பு) குறை கண்டுபிடிக்கும் பழக்கத்தில் சிக்கிக் கொண்டால், அனைத்திலும், அனைவரிடமும்  குறைகளையும் தவறுகளையுமே காண்பீர்கள் 
ஒருவரின் புரிதலை அதிகப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, நமது புராணங்கள் குறைகளையும் தவறுகளையும் கூட இறைமையின் ஏதோ ஒரு உருவில் இணைத்திருக்கின்றன.

எனவே, புராணங்களில், இன்பநிறைவுடைய பகவான் சிவன் கோபம் கொள்ளும் கதைகளை காண்பீர்கள். தேவி பார்வதி கோபம் அடைவதையும், எப்போதும் புன்முறுவலுடன் கூடிய பகவான் விஷ்ணு சோர்வும் வருத்தமும் அடைவதாகவும் கதைகள் கூறப்பட்டுள்ளன. ஆகவே புராணங்கள் இக்குறைகளையும்,சிதைவுகளையும் தெய்வங்களிடமே சுட்டிக் காண்பித்து, இறைமை உண்மையில் அனைத்தும் சூழ்ந்துள்ளவையே, குறைகளும் கூட இறைமையின் ஒரு நிலையே என்று உங்களுக்கு புரிய வைக்கின்றன.

முழுநிறைவு அல்லது குறைபாடு எதுவாயினும் இறைமையைத் தாண்டி எதுவும் இல்லை. ஆகவே, தெய்வங்களை குறைபாடுகளுடன் சித்தரித்திருப்பது ஏனென்றால் நீங்கள் அவற்றில் சிக்கிக் கொள்ளாமல், அவற்றைச் சுலபமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். இறைமை எங்கும் நிறைந்திருப்பது, நல்ல மற்றும் தீயகுணங்களுக்கு அப்பாற்ப்பட்டது. அதனால் தான், தெய்வத் தாயை வணங்கும் போது, ப்ரக்ருதம் விக்ருதம் வித்யம் என்று கூறுகின்றோம். அதாவது, நற்பண்புகளும் அவற்றின் சிதைவுகளும் அடங்கிய தெய்வத்தாய் ஆகும். இவ்வாறு தான் நமது தர்மசாஸ்த்திரங்கள் இறைமையை பற்றிக் கூறுகின்றன. இது (இரட்டை தன்மையைப் புரிந்து கொள்ளுதல்) அத்வைத சித்தாந்தத்தைப் (இறைமையின் இரட்டைத் தன்மையற்ற நிலை) புரிந்து கொள்ள முதற் படியாகும்.

அத்வைதம் அனைத்திலும் உயர்வானது உயிர்மையின் சாரமும் ஆகும். அனைத்தும் ஒன்றே ஒவ்வொன்றும் ஒரே இறைமையிலிருந்து உதயமானதுவே ஆகும் என்று கூறுகின்றது. எனவே இறைமையின் முழுமையை மறந்து விடாதீர்கள், தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நமது மதிநுட்பம் மிகுந்த ஞானிகள் இறைமையின் தன்மைகளை மிக அழகான முறையில் சித்தரித்திருக்கின்றார்கள். குறைகளுக்கு கூட இறை தன்மையுடையவை என்று சுட்டிக் காட்டியுள்ளனர். உங்கள் தெய்வ நம்பிக்கையை பலப் படுத்தும் பொருட்டு, நமக்குத் தெரிந்த ஆறு சிதைவுகள்- கோபம், பேராசை, காமம், பொறாமை, பந்தம்,கர்வம், ஏமாற்றம் ஆகியவை பல தெய்வங்களிடம் உருப்படுத்திக் காட்டப்பட்டுள்ளன. இறைமையை நோக்கி உங்களை வழிநடத்தும் பொருட்டு ஞானிகள் இதைச் செய்திருக்கின்றார்கள்.

குருதேவ், எனது முற்பிறவி கர்மங்களை எண்ணி வருந்துகின்றேன். தயவு செய்து எனக்கு ஆலோசனை கூறி வழிநடத்துங்கள்.

குருதேவ்: முற்பிறவி வினைகளின் விதைகள் அனைத்தும் நீங்கள் இங்கு வந்தவுடன் எரிக்கப் பட்டுவிட்டன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இளைப்பாறி மகிழ்வுடன் இருங்கள். ஒரு வேளை, உங்கள் வீடு நூறு ஆண்டுகளுக்குப் பூட்டப்பட்டு இருந்தால், எவ்வாறு நூறு ஆண்டு இருட்டை ஒரு நாளில் அகற்றுவது என்று கேட்பீர்கள். ஞான விளக்கு ஏற்றப்பட்டவுடனேயே அனைத்து இருளும் (அறியாமை மற்றும் எதிர்மறை) ஒரு நொடியில் அகன்று விடும். அது போன்றே முற்பிறவி வினைகளின் விதைகள் அனைத்தும், நீங்கள் ஆத்ம ஞானத்தில் மேலும் மேலும் ஆழமாக செல்லும் போது எரிந்து விடும். ‘நான் இந்த உடல் அல்ல’‘நான் நிலை பெற்றிருக்கும் ஆத்மா’ என்று உணரும்போது உங்கள் முற்பிறவி வினைகளின் அனைத்து எதிர்மறை விளைவுகளும் உங்களைப் பாதிக்காமல் சட்டென்று மறைந்து விடும்.

குருதேவ், தயவு செய்து சாம, தான, தண்ட, பேதம் (இணங்க வைத்தலில் அல்லது மனிதர்களைக் கையாளும் நான்கு வழிகளைக் குறிப்பிட்டு ) இவற்றைப் பற்றி விளக்கிக் கூறுங்கள்.

குருதேவ்:  இவை நான்கும் இணங்க வைத்தலின் நான்கு வழிகள் ஆகும்.ஒருவர் தவறு செய்தால், அல்லது நம்மிடம் தவறாக நடந்து கொண்டால் நாம் என்ன செய்கின்றோம்? மென்மையாக அத்தவறை புரிந்து கொள்ள வைக்கின்றோம். பலர் தெரியாமல் தவறு செய்து விடுகின்றார்கள். தாங்கள் செய்த தவறினைப் புரிந்து கொண்டவுடன் அதைத் திரும்பவும் செய்வதில்லை. இது தான் சாம வழி அறியாமல் செய்த தவறுக்கு அவர்களைக் குறை கூறக் கூடாது. ஆகவே சாம என்பது ஒருவரது தவறி மென்மையாக எடுத்துக் கூறி அவரை அதை உணரவைப்பது ஆகும்.

இவ்வாறு எடுத்துக் கூறிய பின்னரும் அவர்கள் அதே தவறை மீண்டும் செய்து கொண்டிருந்தால் என்ன செய்வது? அப்போது நீங்கள் " இது தவறு என்று ஏற்றுக் கொள்கின்றீர்கள் அல்லவா? நான் இப்போது மன்னித்து விடுகின்றேன், மீண்டும் செய்யாதீர்கள் என்று கூறி மன்னித்து விடுங்கள். இது தான் தான  ஆகும். ஆகவே முதலில் அவர்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்காமல் மென்மையாக தவறினை உணரச் செய்கின்றீர்கள். அத்தவறை அவர்கள் மீண்டும் செய்து கொண்டிருந்தால், அவர்களை அத்தவறுக்குப் பொறுப்பாக்கி மன்னிக்கின்றீர்கள் முதல் முறையாக தவறு நிகழும் போது தெரியாமல் செய்த தவறுக்கு யாரையும் பொறுப்பாக்க முடியாது. அவ்வாறு முதல் முறையாக நிகழும் தவறுக்கு  நீங்கள் ஒருவரைப் பொறுப்பாக்கி அவர் மீது குற்றம் சுமத்தினால் அவர்கள் தங்கள் வழிகளைச் சீர்படுத்திக் கொள்ள இயலாது. தங்கள் தவறுகளை உணர்ந்து கொண்டு தங்கள் தவறான வழிகளை திருத்திக் கொள்ளமாட்டார்கள்.

எனவே சாம வழிக்குப் பிறகே தான வழி வருகின்றது. ஒரு வேளை இவற்றையெல்லாம் தாண்டி, மீண்டும் மீண்டும் தவறிழைத்துக் கொண்டிருப்பவர்களை தண்ட (தண்டனை) முறையில் அணுக வேண்டும். தண்டனை முறையும் பயனளிக்கவில்லை என்றால், அப்போது பேத முறையைத்தான் கையாள வேண்டும். அவரிடம் நமது நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும். அவரிடம், "சரி, எத்தனையோ முறைகள் எடுத்துக் கூறிய பின்னரும் .அதே தவறை தொடர்ந்து நீ செய்து கொண்டிருப்பதால், நான் இனி இதுவரை பழகிக் கொண்டிருந்தது போன்று இனி நடந்துகொள்ள மாட்டேன்." என்று கூறுங்கள். இது சிறிது குற்ற உணர்வைத் தூண்டி தங்களது தவறின் வலியைப் புரிந்து கொள்ளச் செய்யும்.

தண்டா என்பது கடைசி வழியாக இருக்கட்டும். மற்ற வழிகளிலெல்லாம் முயற்சித்தும் ஒருவர் செவிசாய்க்க வில்லையென்றால், அப்போதுதான்   புரிந்து கொள்ள வைப்பதற்கு குச்சியை எடுக்க வேண்டும்.  இடைவிடாது விவரித்துக் கூறிய பின்னரும், புரிந்து கொள்ளாமல் , மற்றும் தனது வழியைச் செம்மைப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், அவர் தண்டா (தண்டனை)  மூலமே புரிந்து கொள்வார்.

எவ்வாறு நமது திறமைகளை அறிந்து கொண்டு அவற்றை மிகுதிப் படுத்திக் கொள்வது?

குருதேவ்: சில சமயங்களில் நமது திறமைகளை நாமே உணர்ந்தறிகின்றோம். சில சமயங்களில் பிறர் அவற்றைப் பற்றி பேசும் போது அறிந்து கொள்கின்றோம் அல்லது மூன்றாவது மனிதர் வாயிலாகக் கேட்டறிகின்றோம்.

பகவான் அனுமன் தன்னுடைய பலத்தினை பற்றி அறியாமலேயே இருந்தார். அதிக பலமும் திறமைகளும் அளிக்கப்பட்டிருந்ததை பிறர் கூற வேண்டியதாக இருந்தது. சில சமயங்களில் நமது திறமைகளை பிறர் வாயிலாக அறிகின்றோம். இப்போது அவை பற்றி மேலும் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்? " என்னால் செய்ய முடியும்" என்று நீங்கள் அறியும் போது, மேலும் ஒரு அடி எடுத்து வைத்து எவ்வாறு அச்செயலை நிகழ்த்துகின்றீர்கள் என்று கவனியுங்கள்." என்னால் இதை செய்ய முடியாது" என்று எண்ணி நிறுத்தாதீர்கள். இன்னும் என்னால் எவ்வளவு செய்ய முடியும் என்று கருதி, ஒரு அடி முன்னால் எடுத்து வையுங்கள்.

ஒருவர் தம்முடைய  திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு யோகா பெரிதும் உதவுகின்றது. யோகா என்பது யோகாசனங்கள் மற்றும் பிராணாயாமம் மட்டுமே அல்ல. நீங்கள் செய்வதனைத்தையும் முழுமைப்படுத்தி, இறைமையுடன் ஒன்றுவதே யோகா என்பதன் பொருள் ஆகும். அனைத்து யோகப் பயிற்சிகளும் உங்களது திறமைகளையும், செய்நேர்த்தியையும் மேம்படுத்துகின்றன.

உங்களில் எத்தனை பேர் இந்த பயிற்சி வழியில் வந்தபின்னர் உங்களது பண்புகளும்,திறமைகளும் நன்கு அதிகரித்திருப்பதை காண்கின்றீர்கள்?(பார்வையாளர்களில் பலர் கை உயர்த்துகின்றனர்) முன்னர் செய்ததையும் இப்போது செய்வதிலும் உள்ள வித்தியாசத்தைக் காண்கின்றீர்களா? இந்த ஞான மார்க்கத்திற்கு வந்த பின்னர் உங்களது திறமைகள் அதிகரித்திருக்கின்றன, அல்லவா? அதுதான் விஷயம்.