எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்

வெள்ளிக்கிழமை, 16 மே,2014,

பெங்களூரு, இந்தியா.



மிகத் தேவையான மாற்றம், நமது நாட்டிற்கு நிகழ்ந்திருப்பதை காண மகிழ்ச்சியாக இருக்கின்றது  மக்களாட்சி என்பதே மாற்றம் பற்றியதாகும். மக்களாட்சியில் அனைத்துமே மாறிக் கொண்டே இருக்கும். 



சில காலத்திற்கு ஒரு கட்சி பதவியில் இருக்கும்,  பின்னர் வேறொரு கட்சி பதவியை அடையும்.  அது உங்களது வாகனத்தை அவ்வப்போது பழுது பார்ப்பதற்கு அனுப்புவதை போன்றது. யார் வெற்றி பெற வேண்டுமோ அவர்கள் வென்றார்கள்.  ஆனால் இத்தேர்தலில் தோற்றவர்கள் மனந்தளர்ந்து வருந்த வேண்டாம்.  அவர்கள் தங்களை பற்றிய சுய ஆய்வுக்கு சற்று நேரம் கிடைத்ததாக எண்ணிக் கொள்ள வேண்டும்.  அவர்கள் நீண்ட காலமாக ஆட்சியில் பணி செய்து களைத்திருக்கின்றார்கள். இதுதான் தளர்த்திக் கொண்டு தியானம் செய்து சுய ஆய்வு செய்யும் காலம்.   பலர் இத்தேர்தலில் போட்டியிட்டு தோற்றிருக்கின்றார்கள். அவர்கள் அனைவரையும் நான் ஆஸ்ரமத்திற்கு வரவேற்று, மௌனம் அனுஷ்டித்து,  தியானம் செய்து, தளர்த்தி கொள்ளுமாறு வேண்டுகின்றேன். இது மிக முக்கியமானதும் கூட.

வினாக்களும் விடைகளும்

குருதேவ், நரேந்தர மோடியைக் காணும் போது பெருமையால் பூரிப்படைகின்றேன். அவரை போன்று, சிந்தித்து நாட்டிற்கு பணி செய்யும் திறன் பெற்ற தலைவர்கள் இருக்கின்றார்களா? ஒரு நாட்டின் தலைவர் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: ஒவ்வொருவரிடமும் தலைமை என்பது உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், விழித்தெழுந்து உங்களுக்குள் இருக்கும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது மட்டுமே.
இத்திறனை ஒவ்வொருவரும் அறிய வேண்டும்.   ஒவ்வொருவரிடமும் இது உள்ளது, ஆனால் அது சிலரிடம் செயலற்று மந்தமாக உறங்கிக் கிடக்கின்றது, சிலரிடம் விழித்து வெளிப்படுகின்றது. 
இந்தத் தேர்தலின் போது, தனது திறனை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் கிடைத்து, அதை நாடு முழுவதிலும் முழுமையாகப் பயன்படுத்தி கொண்டார்.

இத்தேர்தலில் வாக்களிப்பு நேர்மறையாக நிகழ்ந்தது. வேட்பாளர்கள் தங்கள் போட்டியாளர்களை   வெல்ல சில்லறை அரசியலில் ஈடுபடாமல் இருந்தனர். எனினும், ஒரு வேட்பாளர் (என் நண்பரும் கூட) இதைச் செய்தார். தனது போட்டியாளரை வீழ்த்த வேண்டும் என்னும் ஒரே நோக்கத்துடன் காசிக்குச் சென்றார். ஆனால் அந்தத் தொகுதியில் அவர் தோற்று விட்டார். எந்த உணர்வுடன் நமது செயல்களுக்கான விதைகளை விதைக்கின்றோமோ அவற்றின் பலன்களையே நாம் அறுவடை செய்வோம்.

நாட்டின் நலனுக்காக  உழைப்பவர்களுக்கு அதற்கான பலன் கிடைக்கும்.  நாட்டின் நலத்தினை புறந்தள்ளி, ஒருவரை வீழ்த்த வேண்டும் என்னும் அற்ப சுயநல நோக்குடன் செயல்பட்டால், இறுதியில்,தோல்வியே கிட்டும். உங்கள் நலனை மட்டுமே கருதிஉங்களைச் சுற்றி இருப்பவர்களை பற்றி இகழ்ந்து பேசுவதோ, சாபமிடுவதோ சரியான நடத்தை அல்ல. அத்தகைய நடத்தை அறிவுத் திறன் மற்றும் முதிர்ச்சிக் குறைவைக் காண்பிக்கின்றது. அவர்கள் தீயவர்கள் என்று நான் கூற வில்லை. முதிர்ச்சியும் அனுபவமும் குறைவானவர்கள். மேலும், இது மக்களுக்குத் தெரிய வந்தது நன்மையே.   தங்கள் வாக்குகளை அளிப்பதற்கு முன்னர் தெரிந்தெடுத்த முடிவை கடைப்பிடிக்க முடிந்தது. நமது பார்வையை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும்.  இது மிகவும் முக்கியமானது.

குருதேவ், அரசு எந்த அமைச்சகத்தை அல்லது துறையை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்கின்றீர்கள்?

குருதேவ்: எந்தப் பரிந்துரையும் செய்ய விரும்பவில்லை. அது தற்சார்புடையது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான கவனத்திற்கெடுத்துக் கொள்ள வேண்டிய   பிரச்சினை இருக்கலாம். ஒரு மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருந்தால் நீர் வழங்குதல் அங்கு முக்கியமானதாக இருக்கலாம். சாலைகள் இன்றி இருந்தால் சாலைகள் அமைப்பது முன்னுரிமை பெறலாம். கிராமப்புறங்களில் பள்ளிகள் இன்றி இருந்தால் ஆரம்பக் கலவி அங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எனவே இடத்திற்கு இடம் தேவைகள் வேறுபடும் போது,  நாடு முழுமைக்கும் ஒன்றிற்கே முன்னுரிமை அளிப்பது நியாயமாகாது.

குருதேவ், அண்மையில் பதவிக்கு வந்த அரசு நாட்டின் எந்தப் பிரச்சினையை முதன் முதலாக கவனித்து தீர்வு அளிக்க வேண்டும்?

குருதேவ்: அவர்கள் அரசாங்கத்தையும் அமைச்சர்களையும் அமைத்துக் கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொள்ளட்டும்.  அவர்கள் தங்களது சுய விருப்பங்கள், லாபங்கள் அனைத்தையும் சற்று ஒதுக்கி வைத்து, பிரதமர் பதவிக்கான ஆசையையும் விடட்டும். மேலும்,  இந்தத் துறையின் அமைச்சராகதான் ஆகவேண்டும் என்று  பிரதமரின் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல் இருக்கட்டும்.தலைவர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டு விட்ட பின்னர் அவர் மீது நம்பிக்கையையும் பொறுப்பையும் வைக்க வேண்டும். எந்தத் துறையின் பொறுப்பு அளிக்கப் படுகின்றதோ அதைக் கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அனைவரும் இது போன்று ஒற்றுமையாக செயல்பட்டால், நம் நாட்டில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் நிறைந்த வாய்ப்பு உண்டு. 

குருதேவ், புதிய அரசினால் ஊழல் பிரச்சினையை அகற்ற இயலுமா?

குருதேவ்: பாருங்கள் ஒரு வாகனம் நான்கு சக்கரங்களினால் ஓடுகின்றது. ஒரு சக்கரம் விலகி விட்டால் கூட அக்காரினால் ஓட முடியாது. அது நின்று விடும்.  இது நடைபெற வேண்டும், அது நிகழ வேண்டும், என்றெல்லாம் நீங்கள் சுமையேற்ற முடியாது. எல்லாப் பிரச்சினைகளும், முன்னுரிமைகளும் ஒருங்கிணைந்து கவனிக்கப்பட வேண்டும். ஒரு ரயில் நகரும் போது அது அனைத்துப் பெட்டிகளையும் சக்கரங்களையும் ஒன்றென இணைத்து இழுத்துக் கொண்டு போகின்றது.

எனவே, ஒரு பெட்டிக்கோ அல்லது ஒரு சக்கரத்திற்கோ நீங்கள் முன்னுரிமை தர முடியாதல்லவா?   நமது நாட்டில் கறுப்புப் பணம் அதற்கே உரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்துவது என்பதும் மற்றொரு முன்னுரிமை பெற்ற விஷயம். நம் நாட்டின் பாதுகாப்புத் துறையும் மோசமான நிலையிலேயே உள்ளது, அதற்கும் முன்னுரிமை தேவை. எனவே ஒவ்வொரு பிரச்சினையும் முன்னுரிமை உள்ளவைதாம்ஒன்று மற்றொன்றை ஒதுக்கித் தள்ள முடியாது. பசியோடு இருப்பவனுக்கு உணவு முதல் தேவை, நோயுற்று இருப்பவனுக்கு உடல் நலம் முன்னுரிமை பெரும். உடல் நலமற்று இருப்பவனுக்கு முன்னுரிமை அளித்து பசியோடு இருப்பவனுக்கு உணவு அளிக்காவிட்டால், அவனும் விரைவில் நோய்வாய்ப் படுவான். எனவே எல்லாப் பிரச்சினைகளையும் ஒரே நேரத்தில் ஒருங்கிணைத்து கவனிக்க வேண்டும். 

பலர் பொதுவாக அதிகாரம் பெற்றதும் மாறி விடுகின்றனர். அதிகாரம் மனத்தை கெடுக்காமல் இருக்க ஒருவன் என்ன செய்ய வேண்டும்?


குருதேவ்: ஆன்மீக வழியின் ஆதரவை ஒருவர் இடைவிடாமல் பெறவேண்டும். வாழ்க்கையை ஆன்மீகக் கண்ணோட்டத்தில் காணுங்கள். எப்போதும் நல்லவர்களைக் கலந்து ஆலோசித்து அவர்களது அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பதவிக்கு வந்தவுடன் எல்லாமே தங்களுக்கு தெரியும் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். சான்றோர்களின் ஆலோசனையை கேட்டு, இறைமையிடம் நிலையுறுதியான பக்தியுடன் இருத்தல் வேண்டும். அப்போது பதவியை அடைந்த பின்னரும், எவ்விதமான அகந்தையிலும் சிக்கிக் கொள்ளமாட்டீர்கள்.