கடவுளை புரிந்து கொள்வதற்கு முன் உங்களை அறிந்து கொள்ளுங்கள்..


4 மே 2014.



வாழும் வழி என்னும் இடுகையின் தொடர்ச்சி

வினாக்களும் - விடைகளும்

இந்தியாவில் நாம் கடவுள் மையமாக இருப்பதாக தோன்றுகின்றது.  அதிலும் சிலர் கண்மூடித்தனமான பற்றுடன் இருக்கின்றனர். கடவுள் நம்பிக்கையின்றி மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? சில சமயங்களில் கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது பிரச்சினைகள் எழுகின்றனவே?

குருதேவ்: இந்தியா நாட்டில் தான் கடவுள் என்னும் கோட்பாடின்றி ஆன்மீகம் கௌரவம் பெற்றிருக்கின்றது. ஜைனக் கோட்பாட்டின் படி கடவுள் எங்கேயோ அமர்ந்திருப்பவர் அன்று. புத்த மதத்திலும் அதுவே தான். கடவுள் எங்கே என்பது தெரியாவிட்டாலும், பரவாயில்லை. கடவுளை  நம்ப தேவையில்லை, உங்கள் மீதாவது  நம்பிக்கை வையுங்கள். அப்போது நீங்கள் யார் என்று அறிந்து கொள்வீர்கள். நீங்கள் யார்? உங்கள் உடல் நீங்களா? மனம் நீங்களா? எண்ணங்கள் தாம் நீங்களா? யார் நீங்கள்? அதைக் கண்டறிந்து கொள்ளுங்கள். அது போதும். 

நீங்கள் யார் என்று கண்டறிந்து கொள்ளும் தேடுதல் பாதையில்உங்களது நேர்மைவாய்மை, கருணை, அனைவரின் மீது உங்களது அன்புமென்மையான கூருணர்வு இவையனைத்தும் கிளர்ந்தெழும். இது தான் இறைமை. இந்தியாவில், உபநிஷதங்களில் கடவுளை நம்பு என்று கூறவில்லை. உபநிஷதங்கள் "உன்னை அறிந்து கொள் " இதுதான் வலியுறுத்திக் கூறப்பட்டுள்ளது. நீங்கள் எதையும் நான் நம்பவில்லை, நான் நாஸ்திகன் என்றெல்லாம் கூறினால், அப்போது நாஸ்திகர்களுக்கு பெரிய பிரச்சினை இருக்கின்றது என்று பொருள். அவர்களுக்குள் பயம் இருக்கின்றது.

மக்களில் இருவகை உண்டு. கடவுளை நம்புகிறவர்கள், நம்பாதவர்கள், வருங்காலத்தில் தங்களுக்கு என்ன நிகழும் என்று தெரியாததால், கடும் பயம் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கையின்மை, கருணையின்மை இவை அனைத்தும் எழும். நீங்கள் கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது ஒரு பொருட்டில்லை. நீங்கள் யார் என்று அறிந்து கொள்வதே தேவையானது. உங்களுக்கு ஏதேனும் ஆன்மீகப் பயிற்சி மிகத் தேவையானது. நீங்கள் யார் என்பதை அறிந்துகொள்ள வழி வகுக்கும். நீங்கள் எதையும் நம்பாவிடினும், நீங்கள் கூறுவதையாவது நம்புங்கள் சரியா? நீங்கள் என்ன கூற வேண்டுமென்றால், "என்னைத் தவிர வேறெதையும் நான் நம்புவதில்லை" என்று தான். நான் எதையும் நம்புவதில்லை என்று கூறினால் நீங்கள் கூறும் வார்த்தைகளை கூட நம்பவில்லை என்று தான் பொருள். சமயம் அல்லது கடவுள் எனும் கோட்பாடு அதற்கே உரிய மதிப்புடன் தான் இருக்கின்றது. 

இன்னல்கள் ஏற்படும்போது மக்களுக்கு உதவுகின்றது. ஆன்மாவை மேம்படுத்துகின்றது. ஒழுக்கம் மற்றும் நெறிமுறைகளை பின்பற்றும் பொறுப்பினை ஏற்படுத்துகின்றது. ஆனால் ஆன்மீகத்தில் முன்னேறி செல்ல, கட்டாயம் ஒரு நல்ல மனிதனாக இருப்பது தேவை என்று நான் கருதவில்லை. அந்த நிலை தானாகவே வரும்.

நான் ஒரு நல்ல தொழிலதிபராக விளங்குவதற்கு எவ்வாறு ஆன்மீகம் உதவ முடியும்? ஆன்மீகம் தொழிலிலிருந்து  வேறுபட்டதா?

குருதேவ்: உங்களிலிருந்து உங்கள் தொழில் வேறுபட்டதா? நீங்கள் தான் இணைப்பு. நீங்கள் நலமுடனும், மகிழ்வுடனும் புத்திசாலியாகவும் உள்ளுணர்வு உள்ளவராகவும் இருந்தால் நீங்கள் நன்கு தொழில் செய்யலாம். தொழில் செய்ய உங்களுக்கு என்ன தேவை என்று கூறுங்கள். உள்ளுணர்வு, புதுமை புகுத்துதல், உத்வேகம் உங்களுக்குத் தேவை. போட்டி இல்லையென்றால் எவ்வாறு முன்னேறுவீர்கள்? போட்டி தான் உங்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றது. எனவே, உள்ளுணர்வு, புதுமை புகுத்துதல், உத்வேகம்  இவை மூன்றும் ஆன்மீகத்திலிருந்து கிடைக்கின்றது.
ஆன்மீகம் என்பதன் பொருள் என்ன? உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுதல், மையப்படுத்தி கொள்ளுதல், வாழ்வினை பரந்த கண்ணோட்டத்தில் காணுதல் இவையாகும். இவை தாம் 

உங்களை சுற்றி ஒரு இனிய சூழலை உருவாக்குகின்றன. ஆன்மீகத்தின் மூலம் உங்கள் கருத்துப் பரிமாற்ற திறனின் தரமும் மேம்படுகின்றது. மக்களுடன் உங்களது தொடர்பு நன்றாக இருக்கவேண்டும் அல்லவா? கருத்து தகவல் தொடர்பு, கருணை, நற்பண்புகள், சமநிலை இவையனைத்தும் ஆன்மீகத்தின் பரிசுகள் ஆகும். நேரிடையாக அன்றி மறைமுகமாக இவையனைத்தும் வாழ்வினை வளப்படுத்துகின்றன. உங்கள் வாழ்வு வளம் பெறும் போது, நீங்கள் ஒரு தேர்ந்த மக்கள் தொடர்பாளராகவும், நல்ல பேரம் பேசுபவராகவும் நல்ல உள்ளுணர்வுத்  திறன் உடையவராகவும், அதிக புதுமை புகுத்துபவராகவும் பிறருக்கு உத்வேகம் அளிப்பவராக விளங்குவீர்கள். இவ்வழிகளில் ஆன்மீகம் உதவுகின்றது. 

மற்றொரு விஷயம், ஆன்மீகம் தொழில்துறையில் நெறிமுறையை உருவாக்குகின்றது. உங்களது வாடிக்கையாளர் உங்களிடம் நெறியற்று நடந்து கொள்வதை விரும்புவீர்களா? இல்லையல்லவா? உங்களுக்குப் பிறர் என்ன செய்யக் கூடாது என்று எண்ணுகின்றீர்களோ அதை நீங்கள் பிறருக்கு செய்யாமல் இருப்பது தான் நெறிமுறை என்பதாகும். ஆன்மீகம் தான் தொழில்துறையில் நெறிமுறைக்கு ஜீவாதாரமாக விளங்குவது ஆகும். தொழில் என்பது எப்போதும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். கீழிறங்கும் நேரத்தில், அதை தாங்கிக்கொள்ள ஆன்மீகம் தான் உங்களுக்கு அபரிமிதமான பலத்தை அளித்து முன்னேற வழி வகுக்கின்றது. எவ்வாறு அழுத்தத்தினை வெளியேற்றுவது? உண்மையான ஆனந்தம் என்பதை எவ்வாறு வரையறுத்துக் கூறுவீர்கள்?
குருதேவ்: அழுத்ததிலிருந்து வெளியேற தியானம்,சில மூச்சுப் பயிற்சிகள். பிரணாயாமம் இவற்றைச் செய்யுங்கள் இதுதான் முதன்மையானது. 

இரண்டாவதாக, கடந்த காலத்தை திரும்பிப் பாருங்கள். பல சவால்களைச் சந்தித்திருக்க வில்லையா? இன்று ஏதோ ஒரு காரணத்தினால் நீங்கள் கவலையுற்று இருந்தால், இதே போன்ற நிலைகளை கடந்த காலத்திலும் சந்தித்திருக்கின்றீர்கள் அல்லவாஇது முதல் முறையல்ல. அந்தக் கஷ்டத்தையும் தாண்டி வந்திருக்கின்றீர்கள். ஆகவே, கடந்து சென்ற சிரம காலத்தை நினைவுபடுத்திக் கொள்வது, தற்போதுள்ள அழுத்ததிலிருந்து வெளிவர தைரியத்தை அளிக்கும்.
மூன்றாவது நம்பிக்கை  ஆகும். நான் தனியானவன் அல்ல; எனக்கு மேலுள்ள ஒரு சக்தி என்னைக் காக்கும் என்னும் நம்பிக்கை.

நான்காவது, உங்களைச் சுற்றியுள்ள, உங்களை விட மிக அதிகமாக கஷ்டப்படும் மக்களைக் காணுங்கள். உங்கள் இழப்பை விட மிக அதிகமான இழப்பினை அடைந்தவர்களை காணும் போது ஒரு விதமான ஆறுதல் ஏற்படும்! இதுதான் கடைசியாக நீங்கள் தேர்ந்தெடுக்கக்  கூடியது என்று கூறுவேன். உங்களது பிரதேசத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் எகிப்தில் நிகழ்ந்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போது அதை விட உங்களது இடத்திலுள்ள பிரச்சினை பரவாயில்லை என்பதை உணருவீர்கள். 

வீட்டில் ஏராளமான தோல்விகள், பிறரால் மிகுந்த தொல்லைகள் இவற்றை அனுபவிப்பவர்கள் சாதரணமாக இவ்வாறு செய்வார்கள். பிறரின் தோல்விகளைக் கணக்கிட்டுத் தங்களுடைய நிலை பரவாயில்லை என்று முடிவெடுத்துக் கொள்வார்கள். ஆகவே இந்த வழிகளிலெல்லாம் நீங்கள் அழுத்தத்திலிருந்து வெளிவரலாம். யோக சூத்ரத்தில் பதஞ்சலி கூறுகின்றார், "சந்தோஷ அனுத்தமாஹ்  சுக லாபஹ"  என்ன நடந்தாலும் சரி என் புன்முறுவலை இழக்கமாட்டேன் என்னும் தீர்மானம் உங்களுக்கு உதவும். இப்போது இழந்தாலும், ஒரு காலகட்டத்தில், நீங்கள் நிச்சயம் இழக்க மாட்டீர்கள்.

தினந்தோறும்  ஒரே செயலை செய்து வர நான் எவ்வாறு என்னுடைய கவனத்தைக் குவித்து ஊக்குவித்துக் கொள்வது என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்?

குருதேவ்: எதில் உங்கள் கவனத்தைக் குவித்துக் கொள்ள விரும்புகின்றீர்கள்?

(விடை: என்னுடைய பணியிலும்பிழைப்பிலும்)

மிக்க நல்லது. அதாவது உங்கள் பிழைப்பு பணியைப் பற்றியது என்னும் இந்த விழிப்புணர்வு மட்டுமே உங்கள் கவனத்தைக் குவிப்பதற்கு போதுமானது ஆகும். அன்பும் தீவிர விருப்பமும் இல்லாத போது தான் கவனக் குவிப்பு என்பது தேவையானது ஆகும். ஏதோ ஒன்றின் மீது உங்களுக்கு விருப்பம் இருக்குமாயின் நீங்கள் அதன் மீது உங்கள் கவனத்தைக் குவிக்கத் தேவை இல்லை. இது முதலாவது. இரண்டாவதாக இது என்னுடைய தொழில், என்று சொந்தப்படுத்திக் கொள்வதன் மூலம், கவனம் தானாகவே குவிகின்றது. உங்கள் மாமனின் தொழில், அல்லது தகப்பனின் தொழில் என்றால் கவனக்குவிப்பு  குறையும். ஆனால் அதுவே உங்களுக்குச் சொந்தமானால்  நீங்கள் கவனக் குவிப்புக்கு முயலத் தேவையே இல்லை. அக்கவனக் குவிப்பு  தானாகவே வரும்.