வாழ்வின் பாதை......

ரோம், இத்தாலி

மே 5, 2014

நீங்கள் எப்போதாவது ஒரு அமைப்பை மாற்ற வேண்டும் என விரும்பினால், உங்களுக்கு அதற்கான உற்சாகம் தேவை. ஆனால் நீங்கள் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றால், அதற்கான விழிப்புணர்வு தேவை. எந்த அமைப்பிலும், இரண்டும் சேர்ந்த கலவை வாழ்க்கையில் மிகவும் தேவைப்படுகிறது. எது உங்களுக்குள்ளே ஒரு உற்சாகத்தை உண்டாக்கி உங்களை சுற்றி சுமுகமான சூழ்நிலையை உருவாக்குகிறதோ அதுவே மகிழ்ச்சியான நிலை. நமது உயிர்  பயணம் செய்ய தேவைப்படும் ஒரு வாகனம் தானே நமது உடல் என்பதை கவனத்தில் கொள்ளவும். நமது காருக்கு அவ்வப்போது பழுதுபார்த்தல் அல்லது பராமரிப்பு தேவைப்படுவது போல் நமது உடல் மற்றும் மனதிற்கும் அவ்வாறான பழுதுபார்த்தல் அவசியமாகிறது.

காருக்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைத்து விடும், ஆனால் இந்த உடலுக்கு தேவையான உதிரி பாகங்கள் கிடைப்பது மிகவும் கடினம், உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளவும். உங்களுடைய பணியாளர்கள், தொழிற்சாலை மற்றும் வர்த்தக  ஊழியர்கள் உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ளவும். நான் உடல் நலனை பற்றி மட்டும் அல்லாது மன நலன் பற்றியும் கூறுகிறேன். இன்பகரமான, படைப்பாற்றல் மிக்க, உற்பத்தி திறன் உள்ள  ஒரு சூழ்நிலையை உருவாக்க மனநலம் மிகவும் முக்கியம். உங்களுக்கு மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பது அவசியம். மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது தான் அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். வெற்றிகள் அவர்களை தேடி வரும். மக்கள் மகிழ்ச்சியாக இல்லாத போது, அவர்களுக்கு வேலையிலும் மற்றும் எதிலுமே சந்தோஷம் இருக்காது. எவ்வளவு பேர் ஒப்புக்கொள்ளுகிறீர்கள்?. 

சந்தோஷமான ஒரு சூழ்நிலையை உண்டாக்குவது தான் ஆன்மிகம். பொதுவாக மூன்று அல்லது நான்கு சுற்று பீர் அல்லது ரம் குடித்துவிட்டு மயக்க நிலையில் இருப்பது தான் சந்தோஷம் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது சந்தோஷம் அல்ல. உங்களை உள்ளுக்குள் உற்சாகமானவராகவாகவும், உங்களை சுற்றி ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்குபவராகவும் வைத்திருப்பதே சந்தோஷம் ஆகும். நம் அனைவருக்கும் அத்தகைய ஒரு சூழலை உருவாக்ககூடிய திறமை உள்ளது. நம்மை சுற்றி ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்குவதையே நல்ல ஆரோக்கியம் என்று நான் கூறுவேன். நம்மை சுற்றி சந்தோஷமான மற்றும் நம்பகத்தன்மையுள்ள ஒரு சூழ்நிலை.

அனைவரும் விரும்பக்கூடிய சுமுகமான சூழலை உருவாக்கிக்கொள்ளுவதா அல்லது யாருமே வேலை செய்ய விரும்பாமல் ஓடிவிட வேண்டும் என்று எண்ணக்கூடிய சூழலை உருவாக்கிக் கொள்ளுவதா என்பதை நீங்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இன்றைக்கு மிகவும் அவசியமான சுமுகமான சூழ்நிலையை உருவாக்கி மக்களை ஊக்குவிப்பது உங்களுடைய தேர்வு. நீங்கள் ஊதிய உயர்வோ அல்லது வெகுமதியோ கொடுக்கலாம். ஆனால் அது ஒரு சில நாட்கள் அல்லது அதிகபட்சமாக ஒரு வாரம் வரை தான் நிலைத்திருக்கும், அதற்கு மேல் அல்ல. ஆனால் ஒரு சுமுகமான மகிழ்ச்சிகரமான சூழ்நிலையை உண்டாக்கினால் அவர்கள் சற்றே குறைந்த ஊதியம் கிடைத்தாலும் அங்கிருந்து செல்ல மாட்டார்கள். அவர்கள் விசுவாசத்துடன் வேலை செய்வார்கள்.

தவறான வழிகளில் பணம் சம்பாதிப்பதன் மூலம் ஒருவன் சில நாட்களை தள்ளலாம், ஆனால் பின்னால் அவன் மிகுந்த துயரத்திற்கு உள்ளாக நேரிடும். அதனால் நிலையான வாழ்வில் வளர்ச்சிக்கு நாம் இம்மாதிரியாக ஆழ்ந்து ஆராய வேண்டும். விசுவாசத்துடன் இருக்க இன்னொரு விஷயமும் தேவைப்படுகிறது. அது  பரந்த நோக்கம் அல்லது விரிவான பார்வை. ஒரு தலைவர் என்ற முறையில் மக்களுக்கு வாழ்வின் ஒரு பெரிய நோக்கத்தை குறித்து சொல்ல வேண்டிய தேவை உள்ளது.  மன அழுத்தமில்லாத நல்ல ஒரு சூழ்நிலையை உருவாக்க நாம் என்ன செய்யலாம் என்று நீங்கள் சிந்தித்து பார்க்கவும்.

நாம் பல விஷயங்களை செய்யலாம். அவைகளில் ஒன்று மக்களை எதாவது ஒரு சமூக வளர்ச்சி திட்டத்தில் தொடர்பு கொள்ள செய்வது. தற்போது ஒவ்வொரு நிறுவனத்திலும் " நிறுவன சமூக பொறுப்பு" என்ற அமைப்பு உள்ளது. அவ்வப்போது ஒன்றாக அமர்ந்து ஏதாவது விளையாட்டில் ஈடுபடுவது அல்லது இப்போது நீங்கள் செய்வது போல வித்தியாசமாக ஏதாவது செய்வது போன்றவையும் உதவி செய்யும். உங்கள்  அலுவலகத்தில் உள்ள அனைவரையும் ஒன்றாக அமரச்செய்து பேசவும். அவ்வப்போது பணியாளர்கள், காவலாளி, ஓட்டுனர் ஆகியோருடனும்  பேசவும். அவர்களுடம் மனித நேயத்தை உருவாக்கவும். பல நேரங்களில் நாம் இதை செய்வது கிடையாது.      

உங்களில் எவ்வளவு பேர் பாதுகாப்பு காவலரை  கண்டுகொள்வது கூட கிடையாது? நிறைய பேர் அந்த பாதுகாப்பு காவலர் செய்யும் வணக்கத்தை கூட கண்டு கொள்ளாமல் வேகமாக சென்று விடுகிறார்கள். எங்கயோ பார்த்துக்கொண்டு நடந்து சென்று விடுவார்கள். நமக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு மனிதரை  நாம் ஒரு யந்திரத்தை போல பார்க்கின்றோம். நாம் இதை செய்யக் கூடாது. சமயங்களிலாவதுஅவரிடம் நாம் பேச வேண்டும். ஒரு சில வார்த்தைகள் போறும் அதுவே ஒரு பெரிய மாற்றத்தை  ஏற்படுத்தும். இம்மாதிரியாக, நீங்கள் ஒரு சந்தோஷமான சூழ்நிலையை உருவாக்க முடியும் மற்றும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். உங்களுக்கு தெரியுமா? ஐரோப்பாவில் 38 சதவிகித மக்கள் மனஅழுத்தத்தில் இருக்கிறார்கள். இது நம்முடைய நாட்டில் ஏற்படக்கூடாது. நாம் இதை உடனே கவனிக்க வேண்டும்.

நாம் மக்களுடைய உடல் நலம், மன நலம் மற்றும் தகவல் தொடர்பு திறமை ஆகியவற்றை கவனிக்க வேண்டிய தேவை உள்ளது. இதில் என்னுடன் உடன்படுவீர்கள் என்று உறுதியாக உள்ளேன். மனஅழுத்தம் இல்லாத வாழ்க்கை மிகவும் முக்கியமானது. எனவே நீங்கள் தினமும்   உங்களுக்காக 20ல் இருந்து 30 நிமிடங்களை ஒதுக்கி ஓய்வாக அமர்ந்து தியானத்தில்  ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்தால் நாள் முழவதும் நீங்கள் அதிக சக்தியுடனும் உற்சாகத்துடனும் இருப்பதைக் காணலாம். உங்களுடைய தொழிற்சாலைகளில் "உணவும் தியானமும்" என்கின்ற அமைப்பை ஏற்படுத்துமாறு நான் ஆலோசனை கூறுகின்றேன். உண்பதற்கு முன் அனைவரும் சில நிமிடங்கள் ஒன்றாக அமர்ந்து தியானம் செய்த பின் உணவை பகிர்ந்து உண்ணலாம். உங்களுக்கு பலன் அளிக்கும். நீங்கள் இந்தியாவில் ஒரு கிராமத்திற்கு சென்றால், அவர்களிடம் ஒரே ஒரு குவளை பால் இருந்தால் கூட அதை அவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுவார்கள். அவர்கள் உங்களிடம் நீங்கள் யார், எங்கிருந்து வருகிறீர்கள், எந்த நாட்டவர், எந்த மதத்தவர் போன்றவற்றை கேட்க மாட்டார்கள். இது இந்தியாவில் வேருன்றி உள்ளது.
 
பூலோகமயமாக்கப்பட்ட இவ்வுலகில் நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.நாம் வெறுமனே இந்தியரோ, ஜப்பானியரோ, இத்தாலியரோ அல்லது அமெரிக்கவரோ அல்ல நாம் இந்த உலக குடிமக்கள். இந்த உலக குடிமக்களாக நாம் என்ன கற்க வேண்டும்? நாம் ஜப்பானியர்களிடம் இருந்து குழுவாக வேலை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு குழுவாக வேலை செய்வதில் ஜப்பானியர்கள் தான் இந்த உலகத்திலேயே மிக சிறந்தவர்கள். ஜெர்மானியர்களிடம் இருந்து நாம் துல்லியமாக வேலை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் துல்லியமாக  வேலை செய்வதிலும் காலம் தவறாமையிலும் சிறந்தவர்கள். நாம், உறுதியுடன் செயல்படுவதை சுவிஸ் மக்களிடம் இருந்தும், நல்ல பழக்கவழக்கங்களை பிரிட்டிஷ் மக்களிடம் இருந்தும், விற்பனை திறனை அமெரிக்கர்களிடம் இருந்தும் மனிதநேயத்தை இந்தியர்களிடம் இருந்தும் கற்றுக் கொள்ள வேண்டும் 

இந்தியர்கள் மனித நேயத்தில் மிக சிறந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இது அரிக்கப்பட்டு வருகிறது. அதை நாம் மீண்டும் நிலை நிறுத்த வேண்டும். நம்முடைய மதிப்புகளை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். ஆனந்தத்தை நாம் பூட்டானிடம் இருந்து கற்க வேண்டும். அது ஒரு சிறிய நாடு ஆனாலும் அந்த நாட்டின் சந்தோஷத்தின் குறியீடு மிகவும் அதிகம். GDP  எனப்படும் " மொத்த உள்நாட்டு பெருக்குத்தொகை" அல்ல GDH எனப்படும் "மொத்த உள்நாட்டு மகிழ்ச்சி" ஆகும். இது தான்  முக்கியமானது. இது பூரணமான ஒரு உணவை ஏற்படுத்தும். பூட்டான் இந்த மகிழ்ச்சி குறியை கொண்டுள்ளது. மக்கள் சந்தோஷமாகவும், புன்னகையுடன் இருக்கிறார்கள். அவர்கள் ஏழ்மையான நிலையில் இருந்தாலும் முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் உள்ளார்கள். இதைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.

எனவே நீங்கள் உங்கள் அலுவலகத்திற்குள் நுழையும் போதே அனைவருக்கும் ஒரு மிகப் பெரிய புன்னகையை கொடுங்கள். பிறகு தேவைப்படும் போது சிடுசிடுவென இருக்கலாம். நீங்கள் முகச் சுளிப்புடனோ கோபத்துடனோ இருக்கவே கூடாது என்றும் எப்போதுமே இனிமையாகவுமே இருக்க வேண்டும் என்றும் கூறவில்லை. அம்மாதிரியாக இருப்பதும் சிரமமே. எந்த ஒரு தொழிலிலுமே  சில சமயங்களில் நீங்கள் சப்தம் போடவோ கண்டிப்புடன் இருக்கவோ, சில நடவடிக்கைகளை எடுக்கவோ வேண்டியிருக்கும் என்பதை நான் அறிவேன். 

நான் உங்களுக்கு நடைமுறைக்கு ஏற்ற யோசனைகளை கூறுகிறேன். நீங்கள் நான் மேலே கூறிய அனைத்தையும்  செய்யலாம் ஆனால் கூடவே ஒரு புன்னகையையும் கொடுக்க மறந்து விட வேண்டாம். அது மற்றவர்களை உங்களுடன் இருக்க வைக்கும். அதிக விழுப்புணர்வையும் ஆர்வத்தையும் உண்டாக்கி உங்களுக்கு வெற்றிகளை பெற்றுத் தரும்.

கேள்விகள் - பதில்கள்:

கே: பாதுகாப்பு காவலர்களிடம், ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளீர்கள். ஆனால் நிறுவனம் பெரிய அளவில் வளரும் போது அந்த அளவிற்கு பணியாட்களின் எண்ணிக்கையும் அதிகமாகி அவர்கள் அனைவரிடமும நாம் ஈடுபாடு கொள்ளுவது என்பது மிகவும் கடினமாகிறது. இதற்கு என்ன தீர்வு என்று கூறவும்.

ஸ்ரீ ஸ்ரீ: முதலாவதாக, எதுவுமே செய்ய முடியாது என்று நினைக்க வேண்டாம். எப்போதாவது எங்கேயாவது யாரையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக அதை உங்களால் செய்ய முடியும். தொடர்ந்து உங்களால் எல்லோருடனும் தொடர்பு வைத்துக் கொண்டிருக்க   முடியாது என்பதை நான் புரிந்து கொள்ளுகிறேன், ஆனால் சில சமயங்களில் சில இடங்களில் உங்களால் அதை செய்ய முடியும். உங்களால் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. நான் இந்த உலகம் முழுவதிலும் பல லட்சக்கணக்கான மக்களை சந்திக்கிறேன். நான் எங்கு  இருந்தாலும் அங்குள்ள மக்களை சந்திப்பதை ஒரு குறிக்கோளாக கொண்டுள்ளேன். மக்கள் அதிகமாக இருப்பதால் என்னால் அனைவரையும் சந்திக்க முடியாது என்று நீங்கள் கூறுவது சரி என்றாலும், நான் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது என்னிடம் வருபவர்கள் அனைவரையும் சந்திக்கிறேன். எனவே இம்மாதிரியாக நாம் அதற்கான நேரத்தை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.