நீங்கள் அனைத்தும் சேர்ந்தவர்….

வியாழன், 15 மே 2014,

பெங்களூரு, இந்தியா


கேள்வி - பதில்கள்

குருதேவ், அபிம்மன்யு, நசிகேதன் மற்றும் ஏகலைவன் ஆகிய மூவரும் இப்போது ஒன்று சேர்ந்து வந்தால் எப்படி இருக்கும்? இன்றைய இளைஞர்கள் இவர்களிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளலாம்?

குருதேவ்: ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும், எப்படி கற்றுக் கொள்வது, எப்படி ஆசானுடன் தொடர்பிலிருப்பது என்பனவற்றை கற்று தருகிறார் ஏகலைவன். ஒரு தலையாய் எப்படி அன்பு கொள்வது, தொடர்பிலிருந்து எப்படி தனக்குள் திறமையை வளர்த்துக் கொள்வது என்பனவற்றை ஏகலைவனிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளலாம்.

நசிகேதன் குலையாத உறுதியைக் கற்றுத் தருகிறார். தான் என்ன தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாரோ அதை விடா முயற்சியால், சற்றும் மனம் தளராமல் இருந்து தெரிந்து கொண்டார். எதனாலும் அவரது முயற்சி குலையவில்லை. அவரது குறிக்கோளிலிருந்து மாறவில்லை.

அபிம்மன்யுவிடமிருந்து வீரத்தையும் நுட்பத்தையும் கற்கலாம். எல்லா திசைகளிலும் இருந்து எதிரிகள் வந்தபோதும், சற்றும் தீரம் குறையாமல் போராடினான். அந்த இடத்தில வேறு யாரேனும் இருந்திருப்பின் அவர்கள் ஓடியே போயிருப்பார்கள். ஆயிரக்கணக்கானவர்களோடு போர் செய்தான். எவர் ஒருவர் தனது மையத்தில் உறுதியாய் இருக்கிறாரோ, அவரால் ஆயிரக்கணக்கானவர்களின் சவால்களை எதிர்கொள்ள முடியும். தன்னந்தனியாக ஆயிரக்கணக்கானவர்களோடு போர் செய்தது அபிம்மன்யுவின் பெருமை. இந்த நூல்களைப் படிக்கும் போது, பெருமைப்பட கூடிய குணாதிசயங்களை காணலாம், நீங்கள் கிரகித்துக் கொள்ள வேண்டும். உண்மையில், உங்களிடம் ஏற்கனவே இருக்கின்றன. இவை உங்களிடம் இல்லை என்று நினைத்து, அவற்றை உங்களிடம் உருவாக்கிக் கொள்ள நினைத்தால், அது கடினமான விஷயம். உங்களிடம் அந்த குணாதிசயங்கள் ஏற்கனவே இருக்கிறது என்று நீங்கள் தெரிந்துகொண்டு, அவற்றை வளர்த்தாலே போதும்.

இறைதன்மையை வளர்த்துக் கொள்வது கடினம் என்று நினைத்து பிரயத்தனம் செய்யாமலிருக்க வேண்டாம். எதையாவது அடைவது கடினம் என்று நீங்கள் நினைத்தால், மனம் அதிலிருந்து விலகிப் போய்விடுகிறது. இது தான் மனதின் இயல்பு. கடினமான ஒன்றை நாம் செய்ய விரும்புவதில்லை. சவால் என்பது ஒன்று, கடினம் என்பது வேறு ஒன்று. இளைஞர்கள் சவாலை விரும்புகிறார்கள். சவாலாக எதையாவது செய்ய விரும்புகிறேன் என்று சொல்லுவார்கள். ஆனால், இளைஞர்களானாலும் கூட சில கடினமான விஷயங்களைப் பார்த்து, ‘ஓ இது கடினமான ஒன்று’, என்று நினைத்தால், அவர்கள் அதிலிருந்து விலகிப் போக விரும்புகிறார்கள் என்று பொருள். ஒரு விஷயம் சவாலாக இருந்தால், ‘ஆம் அந்தச் சவாலை நான் எதிர்கொள்ளப் போகிறேன்’, என்று சொல்கிறீர்கள். நமது அணுகுமுறை சற்றே மாறுகிறது. 

கடினம்’ என்று நினைத்த அடுத்த கணம் உங்கள் மனம் அதிலிருந்து விடுபட விழைகிறது. கடினமான ஒன்றில் ஈடுபடுவது இயல்பல்லஎனவே, எல்லா நல்ல குணாதிசயங்களும் உங்களிடம் ஏற்கனவே இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை அடைவது கடினம் என்று நினைக்கவே கூடாது. அவை எல்லாம் உங்களிடம் ஒரு விதை போல ஏற்கனவே இருக்கிறது, அதை நீங்கள் வளர்க்க வேண்டும் அவ்வளவே, என்று என்னும்போது உங்களால் அவற்றை வளர்க்க முடியும். அவை உங்களிடம் இல்லை என்று நினைத்தீர்கள் என்றால், அவற்றை வளர்க்கத் தேவையான சிறு முயற்சியைக் கூடச் செய்ய மாட்டீர்கள்.

குருதேவ், பல அவதாரங்கள் இருக்கின்றன, ஒவ்வொன்றும் முழுமையானது. அப்படியென்றால் ஏன் இத்தனை அவதாரங்கள்?

குருதேவ்: ஏன் இருக்கக் கூடாது? உண்மையில், இன்னும் நிறைய இருக்கலாம்! அவதாரம் என்றால் இறங்குவது. ஒரு சமூக நன்மைக்காக இறங்குவது. என் கண்களில் பார்த்தீர்களானால், இந்து முழு பிரபஞ்சமும் ஒரு உருவாக்கம் தான். ஒவ்வொன்றும் அவதாரம்தான், அவதாரமற்றது எதுவும் இல்லை. ஆதி அந்தம் இல்லாத பேருணர்வு சேவை செய்ய உதித்து வருகிறது. அதுதான் அவதாரம்.

இயற்கையோடு ஒன்றிய நிலை தான் நமது இயல்பு என்றால், அதைச் செய்ய நாம் ஏன் முயற்சி எடுக்க வேண்டும்? நம்மை நம் உடலோடும் மனதோடும் அடையாளப்படுத்திக் கொள்வதாலேயே நாம் அவஸ்தைப் படுகிறோம். ஆனால் இதை நாம் வேண்டுமென்றே செய்வதில்லை. நாம் வளரும் போது இது தானாக நிகழ்கிறது.

குருதேவ்:ஆம், அது சரிதான், அது வளர்ச்சியின் ஒரு பகுதி. ஒரு விதையின் மேல்புறம் ஒரு சவ்வு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அது அவசியம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்த சவ்வு கிழிந்து முளைப்பதற்கு வழி விடுகிறது. அதைப் போல, வாழ்க்கையில் முதலில் அடையாளங்கள் கிடைக்கிறது, பிறகு அந்த அடையாளங்களிலிருந்து நாம் வெளியேறி வருகிறோம். இது ஒரு இயற்கையான விஷயம்.

குருதேவ், ஒரு நாளைக்கு எத்தனை முறைகள் பிரார்த்தனை செய்ய வேண்டும்? அதை எப்படி செய்வது?

குருதேவ்: நீங்கள் தூக்கத்திலிருந்து விழிக்கும் போது இறைவனை நினையுங்கள். தூங்குவதற்கு முன்பும். 24 மணிநேரமும் இறைவனை நினைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். இப்போது அது முடியாத விஷயம். எப்போது பிரார்த்தனை செய்யலாம்? நீங்கள் விழித்திருக்கும் போது. நீங்கள் தூங்கும் போது செய்யமுடியாது. எனவே எப்போது பிரார்த்தனை செய்ய வேண்டும்? நீங்கள் விழித்ததிலிருந்து மறுபடி தூங்கச் செல்வதற்கு இடையே எப்போது வேண்டுமானாலும் பிரார்த்தனை செய்யலாம்எத்தனை முறை பிரார்த்தனை செய்வது? சூரிய உதயம், உச்சிப் பகல் மற்றும் சூரிய அஸ்தமனம் என மூன்று வேளைகளில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேதங்களில் கூறப்பட்டிருக்கிறது. எனவே, இந்த மூன்று வேளைகளில் நீங்கள் பிரார்த்தனை, தியானம் அல்லது காயத்ரி மந்திரம் ஜெபிப்பது ஆகியவற்றை செய்ய வேண்டும். இப்படித்தான் சொல்லப் பட்டிருக்கிறது.

முடியும்போதெல்லாம் இறைவனை நினைத்துக் கொள்ளுங்கள் என்றே சொல்லுவேன். பூக்களைப் பார்க்கும் போதும், மரங்களை பார்க்கும் போதும், நதியைப் பார்க்கும் போதும், எதைப் பார்த்தாலும் இறைவனை நினைவு கொள்ளுங்கள். உங்களுள் ஆனந்தம் நிறையும் போது, நீங்கள் நன்றியை உணரும் போது, இந்தத் தருணங்களில் இறைவனை நினைவு கொள்ளுங்கள். பிரார்த்தனையும் இறைவனை நினைவு கொள்வதும் காலத்தை ஒற்றியது அல்ல. எத்தனை முறை உங்களுக்கு விருப்பமோ அத்தனை முறை இறை நினைவு கொள்ளுங்கள்.

நீங்கள் யாரையாவது காதலித்தால், ஒரு நாளைக்கு ஐந்து முறை தான் நினைத்துக் கொள்வேன் என்றா சொல்வீர்கள்? நீங்கள் யாரை விரும்புகிறீர்களோ அவர்கள் உங்கள் மனதில் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம்! பொதுவாக, காதலர்கள் இடைவேளையே விடுவதில்லை, தங்கள் காதலை எல்லா நேரமும் நினைத்தாவாறு இருக்கிறார்கள். நடக்கும்போது,சாப்பிடும் போது, வேலை செய்யும் போது, என எல்லா நேரமும் அவர்கள் மனதில் அந்தக் காதல் இருக்கிறது. பிரார்த்தனை என்பது இரண்டு நேரங்களில் ஏற்படுகிறது. ஒன்று, நீங்கள் நன்றியுணர்வால் நிறைந்திருக்கும் போது, அல்லது, உதவியேதும் இல்லாமல் நீங்கள் கையறு நிலையில் இருக்கும் போது, இந்த இரண்டிலும் பிரார்த்தனை நிகழ்கிறது.

இந்த இரண்டு சூழ்நிலையிலும் பிரார்த்தனை தானாக நிகழ்கிறது. ஆனால், பிரார்த்தனையை உங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக்கிக் கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், நீங்கள் கண் விழித்த உடனே பிரார்த்தனை செய்யுங்கள். உட்கார்ந்து தியானம் செய்யுங்கள். தியானத்திற்கு முன்னும் பின்னும் சில நிமிடங்களுக்கு ஏதேனும் மந்திர உச்சாடனங்களைச் செய்யலாம். பிறகு, சாப்பிடுவதற்கு முன் சில நிமிடங்கள். தூங்கச் செல்வதற்கு முன் சில நிமிடங்கள். இப்படி, உங்கள் வாழ்க்கை முழுவதும் பிரார்த்தனை மயமாக்கிக் கொள்ளுங்கள்.

குருதேவ், ‘திருதி’ என்பதன் பொருள் என்ன? திருதராட்டிரனுக்கு என்ன ‘திருதி’ இருந்தது?

குருதேவ்திருதி என்றால் தாங்கி பிடிப்பது என்று பொருள். திருதராட்டிரன் என்றால் நாட்டைத் தாங்கிப் பிடிப்பவன் என்று பொருள். நாட்டைத் தாங்கிப் பிடிப்பவன் கண்ணில்லாமல் இருந்தால், போர் தவிர்க்க முடியாதது. நாட்டைத் தாங்கிப் பிடிபவனும் அவன் மனைவியும் கண்ணில்லாமல் இருந்தால் (திருதராட்டிரன் பிறவியிலேயே கண்ணில்லாமல் இருந்தான், அவன் மனைவி தன் விருப்பத்தினால் கண்ணைக் கட்டிக் கொண்டு இருந்தாள்), நாட்டிற்கு என்ன ஆகும்? போரைத் தவிர வேறு இல்லை.


அந்த நாட்களில், பெயர்கள் கூட அந்த அளவு பொருள் நிறைந்ததாய் இருந்தது; மிக அழகானது. திருதி என்றால் தாங்கக் கூடிய ஒன்று, தர்மம் என்றாலும் அதே பொருள் தான். தர்மம் என்றால் வாழ்க்கையைத் தாங்கிப் பிடிப்பது. தர்மம் வாழ்கையை கீழே விழாமல் தாங்கிப் பிடிக்கிறது.