ஆன்மீகமும் - ஆதாயமும்

வெள்ளிக்கிழமை 16 மே 2014  

பெங்களூர், இந்தியா


(தினை விதைத்தவன் தினை அறுப்பான் : வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்ற உரையாடலின் தொடர்ச்சி)

கேள்வி - பதில்கள்

குருதேவா 1 சுபசிதா (ச்மஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட நல்வாழ்க்கைக்கான சூத்திரங்கள்) என்ற நூலில் “சுகார்த்தி த்யாஜதே வித்யாம் வித்யார்த்தி த்யாஜதே சுகம் சுகார்த்தி நா குதோ வித்யா குதோ வித்யார்த்தி நா சுகம் (213 ம் சூத்திரம்) என்று சொல்லப் பட்டிருக்கிறது. இதன் பொருள் “ஒரு உண்மையான மாணவர் உலக சுகங்களை துறந்து ஞானம் தேடுவார்“. உலக சுகங்களை அனுபவித்துக் கொண்டு ஞானம் தேடக் கூடாதா ?

குருதேவர்: இந்த சூத்திரத்துக்கு உண்மையான அர்த்தம் பின் வருமாறு. “ஞானம் தேடுபவருக்கு உலக விஷயங்களில் திளைப்பதற்கு என்ன அவசியம்? உலக சுகங்களை தேடுபவருக்கு ஞானத்தால் என்ன பயன்?”

நீ ஜுர வேகத்தில் பொருளைத் தேடி ஓடும் போது, ஞானம் தேடுவதில் உன் கவனம் செல்லாது. அப்போது நீ ஞானத்தை அறிய முடியாது. சுபசிதா என்ற நன்னூல் மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்டது. இருந்தாலும் அதில் சொல்லப்பட்டிருக்கும் ஞானம் இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தும். ஒரு மனிதன் பொருள் தேடுவதில் விருப்பமுள்ளவனாக இருந்தால், அவன் கவனம் அவனுடைய மூளையின் பின் பகுதியில் இருக்கும். உலக சுகத்தை அனுபவிக்கும் போது மூளையின் பின்பகுதி அதிகமாக செயல்படும். ஞானத்தை அறியும் போது,கேட்கும் போது மூளையின் முன் பகுதி அதிகமாக செயல்படும்.

எனவே உலக சுகத்தை நாடுபவர்களுக்கு, பொருளாசை கொண்டவர்களுக்கு மூளையின் பின் பகுதி செயல்பட்டு அவர்களுடைய சக்தி முழுதும் பின் பகுதிக்குச் செல்லும். பொருள் தேடி அலையும். அவர்களுடைய மனம் எப்போதும் சஞ்சலமாக இருக்கும். மன அமைதி இருக்காது. மனம் ஒருமைப்படாது. எனவே எப்போதும் பொருளைத் தேடி அலைபவரை ஞானமும் அண்டாது.
ஞானம் தேடி ஒரு மனதாக ஆன்மீகத்தில் ஈடுபடுவருக்கு பொருளாசை இருக்காது. அவர் மனம் எப்போதும் ஞானம் தேடுவதிலேயே ஒரு முகமாக இருக்கும். உன் வீட்டில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடப்பதாக எண்ணிக் கொள். உன் கவனம் முழுதும் அந்நிகழ்ச்சியிலேயே இருக்கும். யாராவது “பார் ! நாம் மிக நல்ல நல்ல இனிப்பு மற்றும் காரப் பதார்த்தங்களை செய்திருக்கிறோம்“ என்று சொல்லும் போது “அது சரி! நல்லது!என்று சொல்லி விட்டு மேலும் ஆக வேண்டிய காரியங்களில் உன் மனம் செல்லும்“ அந்த இனிப்பையோ, காரத்தையோ நீ ருசி பார்த்தால் கூட உன் கவனம் அந்த ருசியில் இருக்காது. ஏனெனில் மற்ற காரியங்களை பற்றி உன் மனம் நினைக்கும்.

தேர்தல் முடிவுகளை பற்றிய செய்தியை, தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் போது, யாராவது வந்து ஏதாவது கேட்கும் போது “நான் இப்போது தேர்தல் முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்“ என்று சொல்வாய். உன் மனம் எதையோ அறிவதில் முழுவதும் ஈடுபட்டிருக்கும் போது, வேறு எந்த நிகழ்வுகளாலும் பாதிக்கப் படாது. ஒரு மனதாக உனக்குப் பிடித்த அந்த ஞானத்திலேயே மனம் ஈடுபட்டிருக்கும். விஞ்ஞான பூர்வமான உண்மைகளை நம் சான்றோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே நம் நன்னூல்களில் எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

பகவத் கீதையில் அர்ஜுனன் தன் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் போர் செய்து அவர்களை கொல்வதை நினைத்து ஏற்பட்ட துக்கத்தையும் வருத்தத்தையும் பகவானிடம் எடுத்துச் சொன்னான். அவனுடைய துக்கத்தை எடுத்துச் சொல்வதை ஏன் யோகம் என்று அழைக்கிறோம்?

குருதேவர்: “யோகம்” என்றால் என்ன என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். யோகம் என்றால் உடலால் செய்யும் யோக ஆசனப் பயிற்சி, ப்ராணயாமம் மற்றும் தியானம் மட்டுமல்ல. இரண்டு மூலிகைகளை சேர்ப்பதும் ஆயுர்வேதத்தில் யோகமாக கருதப்படுகிறது. விண்வெளியில் உள்ள இரண்டு  கிரகங்களின் (அல்லது அதற்கு மேல்) சேர்க்கையும் யோகம் தான். கிரகங்கள் நட்சத்திர மண்டலத்துடன் ஒரு நேர் கோட்டில் வருவதையும் யோகம் என்றழைக்கிறோம்.

அர்ஜுனன் அதிக துக்கத்தில் இருந்த போது, அந்த துக்கத்திலேயே ஒன்றி விட்டான். அதனால் தான் அது யோகம் என்றழைக்கப்படுகிறது. எனவே ஒருவர் துக்க சாகரத்தில் மூழ்கியிருக்கும் போது அதை விஷாத யோகம் என்று சொல்லலாம். ஒருவர் சாங்கிய ஞானம் பெற்று (மனம், புத்தி, அகங்காரம் அடங்கிய உலக விஷயங்களை மீறி ஆத்ம ஞானம் பெறுவது) அதில் மூழ்கி இருப்பதை சாங்கிய யோகம் என்று சொல்வார்கள். (ப்கவத் கீதையில் இரண்டாம் அத்யாயத்தில் பகவான் கிருஷ்ணர் அருஜுனனுக்கு ஆத்மாவின் இயல்பை விளக்குகிறார்.) அதே போல் ஒருவர் தன் செயலில் ஒன்றியிருக்கும் போது,அதை கர்ம யோகம் என்றழைக்கலாம்.

ஒருவர் ஞானத்தில் முற்றிலும் இணைந்திருக்கும் போது, ஞான யோகம் என்று சொல்வார்கள். யோகம் என்றால் முற்றிலும் இணைந்திருப்பது என்று அர்த்தம். நீ ஞானத்தோடு இணைந்திருக்க முடியும். (ஞான யோகம்.) உன் செயலோடு ஒன்றியிருக்க முடியும். (கர்ம யோகம்.) தியானத்துடன் ஒன்றி விட முடியும். (தியான யோகம்.) அதே போல் நீ துக்கத்துடன் ஒன்றியிருக்க முடியும். அர்ஜுனன் ஞான யோகத்தைப் பற்றிய அறிவு பெறுவதற்கு முன் தன் துக்கத்தில் மூழ்கி வருத்தமடைந்திருந்தான்.

துன்பம் நம் வாழ்க்கையில் ஒரு பகுதி என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் துன்பம் கிடையாது என்று நினைப்பது அறியாமை. (முட்டாள் தனம்.) வாழ்க்கையில் துன்பம் வரக்கூடும் என்பதை நன்றாகத் தெரிந்து கொள். துன்பத்தை சகித்துக் கொண்டு அந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்துப் பார். துன்பம் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கும். துன்பம் ஏற்பட 4 காரணங்கள் உள்ளன.

அவற்றை சமஸ்கிருத மொழியில் ஏஷணா என்று சொல்வார்கள். தமிழில் அதை பற்று (பந்தம்) என்று சொல்லலாம். மனிதனை துக்கத்தில் ஆழ்த்துவது அவன் உலக விஷயங்களின் மேல் கொண்டிருக்கும் பற்று தான்.

·         வித்தேஷணா – பொருட்கள், செல்வத்தின் மீது பற்று வைப்பது.
·         புத்ரேஷணா – தான் பெற்ற குழந்தைகளின் மேல் பற்று வைப்பது.
·         ஜீவேஷ்ணா – தன் உடல் மேல் பற்று, உயிர் மேல் பற்று.
·         லோகேஷ்ணா – தன் புகழ் மேல் பற்று, மற்றவர்கள் நம்மை பாராட்ட வேண்டும் என்று நினைப்பது.
ஏஷணா என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? எதையோ நினைத்து ஏங்குவது. எதையோ நினைத்து பேராசைப் படுவது. உதாரணமாக பொருளையும், புகழையும் சேர்ப்பதற்காக ஜுர வேகத்தில் பேராசையுடன் செயல்படுவது. விரும்பியது கிடைக்கா விட்டால் மிகவும் துக்கத்தில் வாட வேண்டி வரும். ஒருவன் தன் மகன், மகள் மற்றும் பேரக் குழந்தைகளின் மேல் வைக்கும் பற்றுக்கு புத்ரேஷணா என்று பெயர். சிலர் சமுதாயத்தில் பெயரும் புகழும் பெற வேண்டும் என்று நினைப்பது லோகேஷ்ணா எனப்படும். மேலும் மேலும் வாழ்க்கை / உயிர் தொடர வேண்டும் என்று நினைப்பது மற்றும் உடல் மேல் பற்று வைப்பது ஜீவேஷ்ணா எனப்படும்.

குருதேவா ! முக்தி என்றால் என்ன? அதை நாம் இறந்த பின் தான் அடைய முடியுமா? அல்லது உயிரோடு இருக்கும் போது முக்தி கிடைக்குமா? தயவு செய்து விளக்குங்கள்.

குருதேவர்: இப்போதே நீ முக்தி அடைய முடியும். உதாரணத்துக்கு இன்று நம் நாட்டில் பொது தேர்தல் முடிந்திருக்கிறது. நாட்டின் பிரதான தேர்தல் அதிகாரியை பார்த்து “அவர் உணர்ச்சி தற்போது எப்படி இருக்கிறது? “ என்று கேளுங்கள். அவர் தற்போது இருக்கும் நிலை தான் முக்தி எனப்படும். அவர் நிம்மதியாக 6 மாத காலத்துக்கு விடுமுறையில் செல்ல முடியும். அவர் ஏற்றுக் கொண்ட பொறுப்பு நல்ல விதமாக நிறைவேற்றப்பட்டது என்ற நிம்மதியான மன நிலையில் அவர் இருக்கிறார். அதையே முக்தி என்று சொல்கிறோம்.

தேர்தலில் தோற்றவர்களை கேளுங்கள். கட்சி ஆட்சிக்கு வரவில்லை. இருந்தாலும் அவர்களும் மிகவும் ஓய்வாக, மகிழ்ச்சியாக, நிம்மதியாக இருப்பார்கள். ஏனெறால் அவர்களும் தங்கள் பொறுப்பிலிருந்து விடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் உலகில் எந்த நாட்டுக்கும் விடுமுறையில் சென்று வரமுடியும். ஐந்து ஆண்டுகளில் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் எல்லா நாட்களும் சில உறுப்பினர்கள் கலந்து கொள்வதில்லை.ஐந்து ஆண்டுகளில் மொத்தத்தில் 100 நாட்கள் மட்டுமே கலந்து கொண்டிருப்பார்கள்..

முக்தி என்றால் முடிவில் உனக்கு ஓய்வு கிடைத்துவிட்டது என்று அர்த்தம். உன் ஆசைகள் மற்றும் ஏக்கங்களிலிருந்து நீ விடுபடுவதே முக்தி. ஆழ் மனதில் நீ விரும்பியது எல்லாம் கிடைத்து விட்டது. வேறு ஒன்றும் தேவை இல்லை, என் கடமை மற்றும் பொறுப்புகள் எல்லாம் நிறைவேறி விட்டன என்று நீ திருப்தி அடைவதே முக்தியாகும். ஆசைகளிலிருந்து விடுபடுவது முக்தி. முக்தி என்றால் பரிபூரண திருப்தி. உன் கடமைகளை நிறைவேற்றி முடிந்த பின் கிடைப்பது முக்தி.

இறைவனிடம் பரிபூரண அன்பு கொண்டு பக்தியில் மூழ்குவதே முக்தி. நான் இந்த உடல் அல்ல. நான் பரிபூரணமான ஆத்மா என்றும் இவ்வுடல் அழியக் கூடியது. ஆத்மா அழிவில்லாதது என்று அறிவதே முக்தி.

லலிதா சகஸ்ர நாமத்தில் “ ரக்த வர்ணா, மாம்ஸ நிஷ்டா குடான்ன ப்ரீத மானஸா, ஸமஸ்த பக்தா சுகதா லாகிண்யம்பா ஸ்வரூபிணி “ என்ற ஸ்லோகம் இருக்கிறது. அதன் படி தேவி ரக்த வர்ணத்தில் உள்ள புடவை அணிந்து மாமிசத்தை விரும்புபவள் என்று குறிப்பிட்டுள்ளது. (தேவி அசைவ உணவை விரும்புபவள் என்ற குறிப்பு உள்ளது.) நான் தேவி சைவ உணவை மட்டும் விரும்புபவள் என்று நினைத்திருந்தேன். தேவியின் துதியில் ஏன் அசைவம் பற்றிய குறிப்பு வருகிறது ?

குருதேவர்: இல்லை! உடலில் உள்ள பல்வேறு தாதுப் பொருட்களை அது குறிக்கிறது. (தாது என்றால் மிக நுண்மையான துகள் எனப்படும். நம் ஸ்தூல உடல் நுண்மையான தாதுப் பொருட்களால் ஆக்கப்பட்டது. ஏழு விதமான தாதுப் பொருட்கள் நம் உடலில் உள்ளன. ஒவ்வொரு தாதுப் பொருளுக்கும் ஒரு தேவதை உள்ளது. ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு தெய்வ சக்தி இருக்கிறது. அவை லாகினி, டாகினி……….. என்பவை.

அந்த சூத்திரத்தில் அசைவ உணவு படைப்பது பற்றி குறிப்பிடவில்லை. இந்த தேவதைகள் உன் உடலில் வெவ்வேறு பாகங்கலில் இருக்கின்றன என்பதே அதன் அர்த்தம். மாம்ஸ நிஷ்டா என்றால் அது உடலின் தசைப் பகுதியில் இருக்க்றது. ஒரு தேவதை இரத்தத்தில் இருக்கிறது. இந்த சூத்திரம் உடலின் வெவ்வேறு பாகங்களில் வசிக்கும் தேவதைகளைக் குறிப்பிடுகிறது.


“குடான்ன ப்ரீத மானஸா” என்றால், ஒரு தேவதையின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் போது உனக்கு இனிப்பு அதிகமாக பிடிக்கும். மற்றொரு தேவதையின் ஆதிக்கம் அதிகமானால் உனக்கு புளிப்பான உணவில் விருப்பம் இருக்கும். உண்மையில் இந்த வார்த்தைகள் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைக் குறிக்கிறது. இந்த சக்கரங்கள் இருக்கும் இடங்களில் சக்தியின் ஓட்டம் உச்ச நிலையில் இருக்கும். எனவே ஒரு சக்கரம் திறந்து சக்தி வெளிப்படும் போது குறிப்பிட்ட சுவையுள்ள உணவு வகைகள் உனக்குப் பிடிக்கும். ஒரு குறிப்பிட்ட சக்கரம் திறந்தாலோ, அல்லது நீ அந்த சக்கரத்தை இயக்க விரும்பினாலோ, நீ தயிர் சாதம் உண்பது நல்லது. ஏனென்றால் அது உன் உடல் சூட்டை தணிக்க வல்லது. அதே போல் பல்வேறு உணவுகள், பல்வேறு நிறங்களில் கிடைக்கின்றன. உடலின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு சக்கரங்கள் உள்ளன. இவையனைத்திலும் ஒரு ஆழ்ந்த விஞ்ஞானம் உள்ளது. அதற்காக உடலின் பாகங்களில் அந்த தேவதைகளைத் தேட வேண்டாம். இவை விஞ்ஞான பூர்வமான உடலியலுடன் (ஃபிஸியாலஜி) தொடர்புள்ள உண்மைகள்.