மக்களும் அவர்களுடைய கருத்துக்களும்

மே 25, 2014

பெங்களுரு,


கேள்வி - பதில்

கே: குருதேவ்! இந்த அழகான உலகத்தில் உங்களை போன்ற ஒரு குருவுடன் வாழ்வது அல்லது முக்தி அடைந்து இறுதியில் தைவீகத்துடன் ஐக்கியமாவது. இவை இரண்டில் நான் எதை தேர்வு செய்வது.

ஸ்ரீ ஸ்ரீ: நீங்கள் இரண்டையும் பெறலாம். இதில் தேர்ந்தெடுப்பது இல்லை. இந்த அழகிய உலகத்தில் ஆனந்தமாகவும் வாழலாம் முக்தியும் பெறலாம். முதன்மையான விஷயம் என்னவென்றால், நீங்கள் மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்கு கைப்பாவையாக இருக்க வேண்டாம். பல நேரங்களில் நீங்கள் மற்றவர்களின் எண்ணப்படியே நடந்து கொள்ளுகிறீர்கள். அது அவசியமல்ல. நீங்கள் உங்களுக்குள் உறுதியாக இருந்து வாழ்க்கையை ஒரு பெரிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்.

உங்களுடைய உண்மையான நண்பன் யாரென்று உங்களுக்கு தெரியாது. அது தான் சிரமம். இந்த உலகத்தில் என்ன நடக்கின்றது, நீங்கள் ஒருவரை நண்பர் என்று நினக்கின்றீர்கள் அவரிடம் உங்களுக்கு கிடைத்தவைகள் எல்லாம் காட்டுகிறீர்கள் என்றால் அவர் அது பற்றி மகிழ்ச்சி அடையாமல் உங்கள் மேல் பொறாமை கொள்ளுகிறார். நீங்கள் நல்லவர் என்று காட்டிக்கொண்டால் அவர்கள் மகிழ்ச்சி அடைவதில்லை அல்லது நீங்கள் நல்லவர் அல்ல என்று காட்டிக்கொண்டால், அப்போதும் அவர்கள் உங்களை பற்றி அக்கறை கொள்ள மாட்டார்கள். பெரும்பாலானவர்கள்   இம்மாதிரியான குழப்பத்தை எதிர்கொள்ளுகிறார்கள்.    

நீங்கள் சிலவற்றில் உண்மையிலேயே திறமை கொண்டவர்கள் என்று நிரூபிக்கும் போது அவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை. ஆனால் உங்கள் மேல் பொறாமை கொள்ளுகிறார்கள். அதே சமயம், நீங்கள் அதை நிரூபிக்காத போது அவர்கள் உங்களை தேவையான தேர்ச்சி பெறாதவர் என்று எண்ணி உங்களை பார்ப்பது கூட கிடையாது. ஆகவே எந்த சந்தர்ப்பத்திலும்,மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பது உங்கள் நேரத்தை வீணாக்குவது ஆகும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொண்டு போகட்டும். அவர்கள் உங்களை ஒரு தேவதை என்று நினைத்துக் கொள்ளுகிறார்களா! நல்லது. உங்களை ஒரு பிசாசு என்று நினைத்து கொள்ளுகிறார்களா!! நல்லது. நீங்கள் ஊமை, முட்டாள் அல்லது மற்ற ஏதேனும் ஒன்று என்று நினைத்துக் கொள்ளுகிறார்களா!! நீங்கள் என்ன செய்ய  வேண்டும் என்றால் "சரி, நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள்.எனக்கு அக்கறை இல்லை" என்று இருக்க வேண்டும். இந்த எண்ணத்துடன் நீங்கள் இருந்தால், சற்று மதிப்புள்ளவராவீர்கள்.

மற்றவர்கள் உங்களை தோல்வியடைபவர் என்று நினைத்தால், பரவாயில்லை, அவர்கள் நினைத்துக் கொள்ளட்டும். அவரகளிடம் என்ன பெரிய வெற்றி உள்ளது. வெற்றியடையும் மக்கள் பலரை பார்த்தால் தெரியும், அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது இல்லை. அவர்கள் நிலை பரிதாபமானது. எல்லோரும் எல்லாவற்றிலும் வெற்றி அடைவதில்லை. சில விஷயங்களில் மற்றுமே வெற்றி அடைகிறார்கள்.வெற்றியோ,தோல்வியோ,கவலைவேண்டாம். நடுநிலைமையுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கவும. நீங்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியின் உறைவிடங்களாகவும், மகிழ்ச்சியை பரப்புபவர்களாக இருக்க வேண்டும். மற்றவர்கள் உங்களிடம் வரும் போது நீங்கள் அவர்களுக்கு அன்பு கருணை மகிழ்ச்சி ஆகியவற்றை அளிக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் நாம் இந்த   உலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 

நான் எப்போதுமே சொல்லுவேன், குழந்தைகளாகிய நீங்கள் பல போட்டிகளில் கலந்து கொள்ளுகிறீர்கள். நீங்கள் சில சமயங்கள் வெற்றி அடையலாம். சில சமயங்களில் தோல்வி அடையலாம். ஆனால் நீங்கள் வாழும் கலை பயிற்சி செய்திருந்தால் நீங்கள் எப்போதுமே   தோல்வி அடைவதில்லை. என் தெரியுமா? ஏனென்றால் ஒன்று நீங்கள் வெற்றி அடைகிறீர்கள் அல்லது மற்றவைகளை வெற்றி பெற செய்கிறீர்கள். உங்கள் தாயோ அல்லது தந்தையோ உங்களுடன் விளையாடும் போது அவர்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களால் அனைத்து நேரங்களிலும் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற முடியும் இருந்தாலும் உங்களை வெற்றி பெற செய்வதையே விரும்புகிறார்கள், இல்லையா? அது போலவே தான், நீங்களும் வெற்றி பெறுகிறீர்கள் அல்லது மற்றவரை வெற்றி பெற செய்கிறீர்கள். நீங்கள் முதிர்ச்சி அடைந்தவராக இருந்தாலும் மற்றவர்களை வெற்றி பெற செய்வீர்கள்  .

கே: குருதேவ்! அனைவருமே கடினமாக உழைக்கும் போது ஏன் ஒரு சிலர் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி அடைகின்றனர்?

ஸ்ரீ ஸ்ரீ: இல்லை, அந்த மாதிரி நினைக்க வேண்டாம். நான் கூறியது போல, ஒன்று நீங்கள் வெற்றி பெறலாம் அல்லது மற்றவர்களை வெற்றி பெற செய்யலாம் என்று இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளன. மனம் தளர வேண்டாம். பிரபஞ்சத்தில் நாம் ஒவ்வொருவருமே தனித்துவமானவர்கள், ஆகையால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம். உங்களிடம் எவ்வளவு ஆற்றல் அல்லது திறன் உள்ளது என்று உங்களுக்கு தெரியாது. அது வெளிப்படுத்தப்படும் போது அது மற்றவர்களுக்கு தெரியாது.

உங்களுக்கு சுவாமி பிரபு பாதாவைத் தெரியுமா? ஹரே கிருஷ்ணா இயக்கத்தை ஸ்தாபித்தவர்.அவர் ஒரு ஆடைகள் அணிகலன்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சாதாரண வேலையாளாக இருந்தவர். அவர் 60 வயதில் ஒய்வு பெற்ற பின் ஆன்மிக வழியில் சென்றவர். அவர் ஒரு குருவை சந்தித்த போது குரு அவரிடம் "நீங்கள் சென்று கிருஷ்ணரின் உரைகளை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்" என்று கூறினார். 75 வயதில் அவர் ஒரு படகில் நியூயார்க் நகரம் சென்றார். யாரோ ஒருவருடைய கட்டிடத்தின் அடித்தளத்தில் தங்கியிருந்து ஒரு இயக்கத்தை துவங்கினார். அவருக்கு 75 வயது ஆகும் வரை யாருக்குமே பிரபுபாதா என்பவர் யார் என்பதே தெரியாது. அந்த வயதில், அவர் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பாகவதத்தை பிரபலமாக்கினார்.

உங்களுக்குள்ளே இருந்து என்ன வெளிப்படக்கூடும் என்று யாருக்கும் தெரியாது. உங்களை நீங்கள் குறைவாக மதிப்பிட வேண்டாம். நீங்கள் தனித்துவமானவர். நீங்கள் சத்சங்களுக்கு வருகிறீர்கள். தியானம் செய்கிறீர்கள். அதவே பலவற்றை தெரிவிக்கிறது. அது ஆக்கபூர்வமான அதிர்வலைகளை உங்களுக்குள் மட்டுமன்றி இந்த உலகுக்கும் உருவாக்கும்.           

கே: அன்புள்ள குருதேவ்! நம்முடைய இதயம் ஏதோ மிக அவசியமான ஒன்றை விரும்பும் போது, நம்முடைய அறிவானது அது இயலாத ஒன்று என்ற முடிவுக்கு வருகின்றது. நாம் எதை நம்புவது?

ஸ்ரீ ஸ்ரீ: உங்களுடைய கேள்வியிலேயே, பதிலையும் சொல்லி விட்டீர்கள். உங்கள் மனம் விரும்பும் ஒன்று சரியானதல்ல என்று உங்கள் அறிவு சொல்லுகிறது. இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? ஏன் என்றால் உங்கள் மனம் இதனால் நமக்கு ஏதோ ஒரு இன்பம் கிடைக்கும் என நினைக்கிறது.  இது ஒரு சிறிய சலனம். சமயங்களில் உங்கள் அறிவு சொல்வதியே நீங்கள் செய்ய வேண்டும்.

கே: அன்புள்ள குருதேவ்! என்னுடைய  தாய் தந்தை இருவருக்கும் மனஅமைதி இல்லை.  அவர்கள் தோழமையுடன் இருக்க நான் எப்படி உதவ முடியும்?

ஸ்ரீ ஸ்ரீ: இது ஒரு மிகப் பெரிய வேலை. நீங்கள் ஒன்று செய்யுங்கள். அவர்களை நம்முடைய ஆனந்த பயிற்சியினை செய்ய சொல்லுங்கள். அவர்கள் இருவரையும் தனித் தனியாக சமாதானப்படுத்தவும். ஆனால் தீவிரமாக   இருக்க வேண்டாம்.  சில சமயங்களில் அவர்கள் சண்டை போடுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். ஒன்றுமே இல்லை என்றால் அவர்களுக்குள் ஒரு வெறுமை ஏற்படும். எனவே அவர்கள் அவ்வப்போது சண்டையிடுவதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம். உங்களுக்கே தெரியும் ஏற்கனவே பல குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களை ஒன்றாக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஏன் என்றால் குழந்தைகளை காரணம் காட்டியே பல பெற்றோர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்.  இது அதிக அளவில் நடை பெறுகின்றது. அதனால் நீங்கள் அவர்களுடன் இருப்பதே  அவர்களை அவர்களுடைய இடங்களில் வைத்திருகின்றது. எனவே கவலை வேண்டாம்.

கே: குருதேவ்! எங்கள் வகுப்பறையில் உள்ள ஒருவர் எங்களை அதிகமாக கேலி செய்யும்போது நாங்கள் என்ன செய்வது? நாங்கள் அவர்களை திட்டுவதா! சப்தம் போடுவதா! அல்லது திரும்ப கேலி செய்வதா?  நாங்கள் அமைதியாக இருந்தாலும் அவர்கள் எங்களை கேலி செய்து கொண்டே இருக்கிறார்கள்.

ஸ்ரீ ஸ்ரீ: உங்களுக்கு தெரியுமா! ஒருவர் உங்களை கேலி செய்து சிரிக்கும் போது நீங்கள் அவர்களை விட சப்தமாக சிரிக்க வேண்டும். அப்போது அவர்கள் தினறிப்போவதை நீங்கள் பார்க்கலாம். நான் உங்களை கேலி செய்கிறேன் ஆனால் நீங்கள் சிரிக்கின்றீர்களே என்று அவர் கூறுவார். நீங்கள் கை தட்டி" ஆமாம், நீங்கள் நகைச்சுவையாக இருக்கிறீர்கள். நீங்கள் என் இதை தினமும் செய்யக் கூடாது?" என்று சொல்லுங்கள். ஒரு முறை இவ்வாறு செய்து அவர்களுடைய எதிர்செயல் எவ்வாறு உள்ளது என்று பாருங்கள். அவர்கள் அதே விமர்சனங்களை வேறு ஒருவரை பார்த்து செய்கிறார்கள் என்றால் நீங்கள் சிரிப்பீர்களா மாட்டீர்களா? ஆகையால் அவர்கள் மற்ற யாரோ ஒருவரை விமர்சிக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களை விட சப்தமாக சிரியுங்கள். புரிந்ததா? 

கே: குருதேவ்! நான் செய்வது அதர்மம் என்று எப்படி நான் அடையாளம் தெரிந்து கொள்வது?

ஸ்ரீ ஸ்ரீ: ஏதோ ஒன்று " இல்லை! இல்லை! நான் இதை செய்து கொண்டிருக்கக் கூடாது" என்று  உங்களை குத்திக்கொண்டு இருக்குமானால் அது அதர்மமான செயல் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

கே: மாணவர்களாகிய நாங்கள் மகன், நண்பன், மகள் போன்ற பாத்திரங்களை ஏற்கின்றோம்.  இவற்றில் எதற்கு மிக அதிக முன்னுரிமை தருவது?

ஸ்ரீ ஸ்ரீ: தேர்வு நேரங்களில் நல்ல மாணவனாக இருக்க வேண்டும். பெற்றோர்களுக்கு   தேவைப் படும் நேரங்களில் ஒரு நல்ல மகன் அல்லது மகளாக இருக்க வேண்டும்.. வெவ்வேறு நேரங்களில் வெவேறு பாத்திரங்கள் என்று நீங்கள் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.